என்னுயிர் கருவாச்சி-52

 




அத்தியாயம்-52

கொஞ்ச நேரத்தில் திருமண சடங்குகள் முடிந்து திருமணமும் சிறப்பாக நடந்து முடிந்தது.

மதியம் மாப்பிள்ளையும் பெண்ணையும் அழைத்துக்கொண்டு வந்து பெண் வீட்டில் விட்டுவிட்டு, தங்கள்  வீட்டிற்கு  திரும்பியிருந்தனர் பூங்கொடியும் ராசய்யாவும்.

அவனுக்கு ரொம்பவுமே களைப்பாகத்தான் இருந்தது.

கடந்த ஒரு வாரமாகவே திருமண வேலைக்காக ஓடியாடி அலைந்தவன்.. இன்றும் வேலை பின்னி எடுத்திருக்க, எப்படா வீட்டுக்கு போய் படுப்போம் என்று அசந்து போய் வந்திருந்தான்.

பூங்கொடியுமே கலைத்து போய் வந்திருக்க, முன்னால் வந்தவள், கேட்டை திறந்து கொண்டு வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தவள், தலை  சுற்றுவதை போல் இருக்க, அவளின் நடை தள்ளாடியது.  

அவளின் பின்னே வந்தவன், அவள் தள்ளாடுவது கண்டு பதறி, அவளின்  இடையோடு பற்றி நிறுத்தியவன்

“என்ன ஆச்சுடி?  என்று பதற்றத்தோடு விசாரித்தவன், அப்பொழுதுதான் ஏதோ நினைவு வர, உடனே அவள் இடையில் இருந்த தன் கையை  விலக்கி கொண்டவன், அவளை முறைத்து பார்த்து  

“போதும் டி... உன் ட்ராமா...  நீ இப்படி தள்ளாடுவ. உடனே  நான் அப்படியே உன்னை தூக்கிகிட்டு போய் கட்டில்ல போட்டா, என் கழுத்தை வளச்சி புடுச்சிகிட்டு என் உதட்டுல  கிஸ் பண்ணுவ.  

போனமுறை மாதிரி இந்த முறை நான் ஏமாற மாட்டேன் டி... பிராடு...” என்று செல்லமாக முறைத்தபடி,  சிரித்தவாறு அவளை விட்டு விலகி, கேட்டை திறந்து கொண்டு  அவளுக்கு முன்னால் வீட்டிற்குள்  நடந்தான்.

முன்பு ஒருமுறை இப்படித்தான்  அவள் நடந்து கொள்ள, இப்பொழுதும்  தன்னை ஏமாற்றுகிறாள் என்று எண்ணியவன் அவளை செல்லமாக முறைத்துவிட்டு முன்னே செல்ல,

“இல்ல மாமா...ட்ராமா இல்ல...நிஜம்தான்...”  என்று கைநீட்டி அவனை எட்டி பிடிக்க முயன்றாள்.  

அவனோ அவள் கைக்கு கிடைக்காமல் வளைந்து குனிந்து முன்னே ஓடிச் செல்ல,  அவளோ இன்னுமாய்  தலை சுற்றுவது என்னவோ போல இருக்க,  காம்பவுண்ட் கேட்டை  பிடித்தபடி அதன் மீது கவிந்து அப்படியே நின்று விட்டாள்.

சற்று தூரம் சென்றவன், திரும்பிப் பார்க்க, அவளோ  தளர்ந்து போய் கேட்டின் மீது சாய்ந்திருக்க, இப்பொழுதும்  நம்பவில்லை அவன்.

அவள் எந்த அளவுக்கு வேண்டுமென்றாலும் இறங்கி செல்வாள் என்று அறிந்து இருந்ததால்,  தன்னை மயக்கத்தான் அப்படி நடிக்கிறாள் என்று எண்ணியவன்

“போதும்... டி.  ரொம்ப நடிக்காத. உன் நடிப்பை  நம்பிட்டேன் வா...அடுத்த செவாலியர் விருது உனக்குத்தான்... ” என்று கேலியாக சொல்ல,   அவளோ பதில் எதுவும் சொல்லவில்லை.  

சற்று நேரம் அவள் தானாக வரட்டும்  என்று காத்திருந்தவன், அவளிடம் அசைவு எதுவும் இல்லாமல் போக,  கொஞ்சம் பயம் வந்து ஒட்டிக்கொள்ள, பூங்கொடி...  என்று அங்கிருந்தே அழைத்தான்.

அப்பொழுதும் அவள் இடத்தில் எந்த அசைவும் இல்லாமல் போக இரண்டே எட்டில் காம்பவுண்டை  அடைந்து பூவு என்று தவிப்புடன் அழைத்து அவளின் தோளைத் தொட்டான்

அடுத்த கணம் தலை தொங்கிப்போய்  அவனின் மார்பில் சரிந்தாள் அவன் மனையாள்.

அதைக் கண்டதும் அவன் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது.  அவன் மூச்சே நின்று போனது.

“பூ ங் கொ டி..... “  இன்று அலறியவன், அப்படியே அவளை தன் கையில் அள்ளிக் கொண்டான்.

*****  

டுத்த ஐந்தாவது நிமிடம் அங்கிருந்த சிறிய ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தான் ராசய்யா.

அந்த ஊரில் மருத்துவமனை இல்லை.  கிராம பஞ்சாயத்தில் மக்களின் அடிப்படை வசதிக்காக,  அந்த சுகாதார நிலையம் திறக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் பெரும்பாலும் அது மூடியே கிடக்கும்.  

அதில் வேலை செய்யும் செவிலி சாந்தா அருகிலயே தங்கி இருந்தாள்.

தன்னவளை அங்கு தூக்கிச் சென்றவன், அங்கிருந்த  மேஜையில் படுக்க வைத்துவிட்டு அவசரமாக ஓடிச்சென்று அருகில்  இருந்த செவிலி சாந்தாவை அழைத்து வந்தான்.  

ராசய்யாவின் கதறலும், பூங்கொடியை அள்ளிக்கொண்டு ஓடி வந்ததையும் கண்டு எல்லாரும் பயந்து போய் அவன் பின்னே ஓடி வந்திருந்தனர்.

அங்கே பூங்கொடி மயக்கமாக கிடக்க, எல்லாரும் இன்னுமே அதிர்ந்து போயினர்.

ஓடி வந்த சாந்தா, பூங்கொடியின்  நாடிபிடித்து பார்த்தாள்... நாடியில் துடிப்பு இருக்க, மூக்குக்கு  நேராக கை வைத்து பார்க்க, மூச்சு சீராகத்தான் இருந்தது.

அப்பொழுதுதான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

பின் அவளின்  கண்ணையும் பிரித்து பார்த்து பரிசோதித்தவர்  மீண்டும் நாடி பிடித்து பார்த்தவர் முகத்தில் மெல்ல புன்னகை அரும்பியது.

எல்லாரும் சாந்தாவின் முகத்தையே  அச்சத்தோடு பார்த்துக்கொண்டிருக்க, ராசய்யாவின் அருகில் நின்ற முத்துபாண்டியோ

“என்னாச்சு சாந்தாக்கா... பூங்கொடி நல்லதானே இருக்கு? ஏன் இப்படி பேச்சு மூச்சில்லாம கிடக்கு? “ என்று பதற்றத்தோடு விசாரிக்க, எல்லாருக்குமே அதே கேள்விதான்.

எல்லாரையும் ஒரு முறை நிமிர்ந்து பார்த்த சாந்தா, பின் ராசய்யாவை பார்த்தவள்

“எல்லாம் நல்ல விஷயம் தான் ராசு... உன் பொண்டாட்டி முழுகாம இருக்கா ..அதுதான் தலை சுத்தி மயக்கம் வந்திருக்கு...அதுக்கு போய் எல்லாரையும் பயமுறுத்தி இப்படி ஊரையே  கூட்டிட்டியே...” என்று சிரிக்க

அதைக்கேட்ட ராசய்யாவுக்கோ  ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழித்தான்.

அவன் அருகில் நின்றிருந்த முத்துபாண்டி, ராசய்யாவின் முதுகில் ஓங்கி அடித்தவன்

“என்னடா மச்சான்...  ஒன்னும் தெரியாதவன் மாதிரி இந்த முழி முழிக்கிற.?  நாலு சுவத்துக்குள்ள விளையாடறது பத்தலைனு, பட்டப்பகல்ல  தோப்போரம்,  வாய்க்கால் ஓரம் னு  ஒதுங்கினிங்களே...  அதுக்கான பரிசு தான் இது.  

என்னவோ ஒன்னுமே செய்யாதவன் மாதிரி இப்படி முழிக்கிற...”  என்று மீண்டும் அவன் முதுகில் அடி கொடுக்க, சுற்றி இருந்த  எல்லாரும் அச்சம் துறந்து கொல்லென்று சிரித்தனர்.

“நம்ம பூங்கொடி வேகத்துக்கு ராத்திரி மட்டும் போதாதே மாப்ள.. அதான் புருஷனை கூட்டிகிட்டு அங்கங்க ஒதுங்கி இருக்கும். அதை எல்லாம் நீ கண்டுக்க கூடாது.

கல்யாண மண்டபத்துல நம்ம ராசு மாப்ள கன்னத்துல அரை விட்டு தாலி வாங்கின புள்ள வேகத்துக்கு அடுத்த மாசமே மசக்கை ஆகி இருக்கோணும். இதுவே லேட்டுதான். ஆனாலும் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரப்போறான் ராசய்யாவின்  சிங்கக்குட்டி. நீ  கலக்கு மாப்ள...” என்று ராசய்யாவின் கைப்பிடித்து குலுக்கிச் சென்றான்  இன்னொரு பங்காளி.  

இப்படி அவனை ஒருவர் பாக்கி இல்லாமல் எல்லாரும் கலாய்த்து வைக்க, அவனோ அதை எல்லாம் கண்டு கொள்ளும் மனநிலையில் இல்லை.

இது எப்படி சாத்தியம்? என்று  யோசித்தவனுக்கு அந்த  மழை நாளின் ஞாபகம் இப்பொழுது வர,

“சே...இப்படி கவுத்திட்டியேடி கருவாச்சி...  எது நடக்கக்கூடாது என்று தள்ளி தள்ளி போனேனோ அதை நடக்க வச்சிட்டியேடி  ராட்சசி...”  என்று உள்ளுக்குள் பல்லை கடித்துக் கொண்டாலும், அவன்  கரம்,  துவண்ட கொடி போல தளர்ந்து அந்த மரப்பெஞ்சில்  கிடந்தவளின் தலையை ஆதுரமாக வருடிக் கொடுத்தது.

பூங்கொடிக்கு என்னாச்சோ என்று ஓடிவந்திருந்த எல்லாருக்கும் அந்த நல்ல செய்தி மகிழ்ச்சி ஆகிப்போனது. 

ராசய்யா , பூங்கொடி ஜோடி அந்த ஊரிலயே செல்ல பிள்ளை போல என்பதால் அந்தக் குழந்தையின்  வரவை எல்லோரும் மகிழ்ச்சியோடு கொண்டாடினர். .  

சற்று நேரம் கழித்து மெல்ல கண் விழித்தவள் பார்வை , அவள் கால்மாட்டில் கண்ணீரோடு அமர்ந்து  இருந்த தன் கணவனின் மீது படிந்தது.

அதைக்கண்டு அதிர்ந்தவள்,

“ஏன் இவ்வளவு சோகமா இருக்கிறான்?.. எனக்கு என்னாச்சு? “ என்று அதிர்ந்தவள், கண்களைச் சுழற்ற, ஊரே அங்கே திரண்டு சுற்றி  நின்று கொண்டிருப்பதை கண்டவள்  மலங்க மலங்க விழித்தாள்.  

“யப்பா.... முழிக்கிறதில் கூட புருஷனும் பொண்டாட்டியும் சொல்லி வச்ச மாதிரி ஒரே மாதிரி முழிக்கிறாங்க யா...” என்று  முத்துபாண்டி கலாய்க்க, விலுக் என்று தலையை நிமிர்த்திய ராசய்யா,  அவனை  வெட்டவா குத்தவா என்று முறைத்துப் பார்த்தான்

அதற்குள் விஷயம் கேள்வி பட்டு அங்கே ஓடி வந்த சிலம்பாயி,  ஓடிவந்து அப்பொழுதுதான் எழுந்து அமர்ந்திருந்த தன் மகளின் முகத்தை தன்  மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு,  அவளின் தலையை வருடிக் கொடுத்தார்.

தன் மருமகன் பூங்கொடியை தூக்கிக் கொண்டு அழுதபடி ஓடுகிறான் என்று கேட்டதும், அதிர்ந்து போனவர், கையில் இருந்ததை அப்படியே போட்டுவிட்டு  

என்னாச்சோ..ஏதாச்சோ என்று பதறியடித்து தன் கணவனையும் அழைத்துக் கொண்டு ஓடி வந்திருந்தார். 

அச்சத்தோடு ஓடி வந்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்க, அதில் நிம்மதி மூச்சு விட்டவர்,  கண்ணீருடன் தன் மகளை கட்டி அணைத்துக் கொண்டார் சிலம்பாயி.  

பூங்கொடிக்கு ஒன்றுமே  புரியவில்லை.  

“எதற்காக இத்தனை கூட்டம்? ஏன் இந்த மாமா இப்படி கண்ணீர் விட்டுட்டு  இருக்கிறான். பத்தாததுக்கு இந்த அம்மா வேற எதுக்கு இப்படி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி சீன் போடுது...”   

என்று எண்ணியவள்,  தன் அருகில் அமர்ந்து இருந்தவனை  பார்த்து  என்னவென்று புருவத்தை உயர்த்தி ஜாடையில் விசாரிக்க,  அவனோ தன் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு அவளை கொலை வெறியுடன் து பார்த்து வைத்தான்.

“யோவ்...  மச்சான்...  தங்கச்சியை எதுக்குயா முறைக்கிற?  பண்றதெல்லாம் நீ பண்ணிட்டு,  முழுகாம இருக்கிற இந்தப் புள்ளைய எதுக்கு முறைக்கிற?  என்று முத்துபாண்டி சந்தடி சாக்கில் ராசய்யாவை கலாய்க்க,  அதைக்கேட்ட பூங்கொடிக்கு இப்பொழுது தான் மெல்ல விஷயம்  புரிந்தது

அதோடு அவள் தன்  நாள் கணக்கை எண்ணி  பார்த்தவளுக்கு விஷயம் முழுவதுமாக புரிந்துவிட,  கன்னங்கள் அந்திவானமாய் சிவந்து போனது.

தன் கணவனை வெட்கத்துடன் பார்த்து வைத்தவள்,  

“யோவ் மாமா...  நீ பெரிய ஆளுதான்.  ஒரே ஒரு நாள் ஆட்டத்திலயே சிக்ஸரா  அடிச்சு, ஆட்டத்தை ஜெயிச்சிட்டியே...”  என்று அவன் காதில்  கிசுகிசுக்க,  அவனோ அவளை  காட்டமாக முறைத்து வைத்தான்.

*****

கொஞ்ச நேரம் கழித்து அவள் சரியானதும், தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான்.

வீட்டிற்கு திரும்பி வந்ததும் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டாள்  பூங்கொடி.

“இதுக்குத் தாண்டி படிச்சு படிச்சு சொன்னேன்...  தள்ளி நில்லு.  நாம இப்ப ஒன்னு சேர  வேண்டாம் என்று எத்தனை தரம் எடுத்துச் சொன்னேன்.  கொஞ்சமாச்சும் கேட்டியா? “ என்று  பொரிந்து தள்ளினான்.  

அவளோ தன்  புடவையின் முந்தானையை திருகிக்கொண்டே

“நான் என்ன பண்ணினேன்?  அன்னைக்கு கூட உங்களை மழையில் நனையாமல் கூட்டிக்கிட்டு வரத்தான் அன்னைக்கு குடை எடுத்துகிட்டு வந்தேன் மாமா... “  என்று பாவமாக பார்த்து வைக்க, அவளின் பாவமான முகத்தை கண்டு இன்னும் எகிறினான்.

“குடை எடுத்துகிட்டு வந்தவ என்ன பண்ணின டி ? “ என்று முறைக்க,

“என்ன பண்ணினேன்? உங்களை குடையில் கூட்டிக்கிட்டு தானே வந்தேன்...”  என்று மீண்டும் பாவமாக சொல்ல,

“குடையில கூட்டிகிட்டு மட்டுமா வந்த? என் மேல ஒட்டி உரசிகிட்டு வரல... “

“ஐயோ மாமா... வரப்பு சின்னதா இருந்துச்சு... அதுல ரெண்டு பேரும் ஒன்னா வந்தா ஒட்டிகிட்டு வரத்தானே முடியும்? அதுக்காக எல்லாம் நான் உங்களை சீண்டல... “ என்று மீண்டும் உதட்டை பிதுக்கியபடி பாவமாக சொல்ல,

“சும்மா நடிக்காதடி... சரி வரப்புல வந்தவன்  காலை  தட்டி விட்டது நீதானே... தட்டி விட்டு என்னை  சேத்துல விழ வச்சதும் நீதான... என்னை விழ வச்சுட்டு,  நீயும் என்கூட சேர்ந்து விழுந்து வச்ச.

“சரி..வுழுந்தது வுழுந்தாச்சு... அப்படியாவது என்னை எந்திரிக்க விட்டியா? என் மேல ஏறி படுத்துகிட்டு இச் இச் இச்னு முத்தமா கொடுத்து வச்சு என்னை சீண்டி விட்டுட்ட...  

நீ அன்னைக்கு சொன்ன மாதிரி,  நீதான் டி என்னை ரேப் பண்ணின... “ என்று எரிச்சலுடன் பொரிந்து தள்ள, அதுவரை அவன் திட்டியதுக்கெல்லாம் அப்பாவியாய்,  பாவமான லுக்குடன் நின்று இருந்தவள்,  கடைசியாக சொன்ன  நீதான் டி என்னை ரேப் பண்ணின என்றதில் தன் அப்பாவி வேஷம் கலைந்து  கலகலவென்று வாய்விட்டு சிரித்தாள்.

அவன் சொன்னதின் அர்த்தம் அவனுக்குமே தாமதமாக   புரிய,    அவனுக்குமே தன் கோபம் மறந்து  சிரிப்பு வந்தது.  

ஆனாலும் அவள் முன்னால்  சிரித்து வைத்தால்,  தன் தலையில் ஏறிக் கொள்வாள் என்று உசாரானவன், சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு மீண்டும் பொரிய ஆரம்பித்தான்.

“எல்லாம் உன்னால தான் டி... நீ மட்டும் அன்னைக்கு அப்படி என்னை சீண்டலைனா இப்ப இந்த பிரச்சனையே வந்திருக்காது...”  என்று மீண்டும் பொரிய ஆரம்பித்தான்.  

அவளோ  அதையெல்லாம் காதில் வாங்கவே  இல்லை.  

தன்னவனின்  உயிர் அவள் வயிற்றில் என்று  பூரித்துப்போக, அவளின் முகம் மகிழ்ச்சியில் விகாசித்தது.

அவளின் இதழ் ஓரம் மெல்ல புன்னகை அரும்பியது.  

“ஏன் டி.. நான் இவ்வளவு தூரம் திட்டிகிட்டு இருக்கேன்.  எரும மாட்டுல மழை பேஞ்ச மாதிரி அப்படியே நிக்கிற. பத்தாததுக்கு அது என்ன ரகசிய இளிப்பு...” என்று அவளின் ரகசிய சிரிப்பை கூட கண்டு பிடித்து திட்டினான்.

“மாமா... மழை பெய்யறதும்..  குழந்தை உருவாவதும் அந்த ஆண்டவனோட சித்தம்.  இதையெல்லாம் யாரும் திட்டமிட்டு வர வைக்கவும்  முடியாது. அதே போல வருவதை  தடுக்கவும் முடியாது...

நாம அன்னைக்கு ஒன்னு சேரணும்னு முன்னாடியே எழுதி வச்சுட்டான்...அதுதான் நடந்திருக்கு..நீ என்னதான் புள்ள வேண்டாம்னு தள்ளி போட்டாலும் தானா நடந்ததா... ” என்று தத்துவத்தை சொல்ல

தன் நெற்றிப்பொட்டில் கட்டைவிரலை வைத்து அழுத்தியவாறு ஏதோ யோசித்தவன்,  பின் நிமிர்ந்து அவளைப் பார்த்தவன்  

“நமக்கு இந்த குழந்தை வேண்டாம் பூங்கொடி...”  என்றான் வெறித்த பார்வையுடன்.  

அதைக்கேட்டு தூக்கிவாரிப் போட,  அதிர்ந்து போனாள் பூங்கொடி.

தான் சரியாகத்தான் கேட்டோமா என்ற சந்தேகத்துடன்

“என்ன மாமா சொன்ன? “ என்ற  அதிர்ச்சியோடு கேட்க,  அவனோ தொலைவிலிருந்த ரோஜா செடியை வெறித்தபடி

“நமக்கு இந்த குழந்தை வேண்டாம்... இ...இதை ... க.. கலை... கலைச்சிடலாம்...”  என்று இறுகிய முகத்துடன் தடுமாற்றத்துடன் சொல்லி வைக்க,  காலுக்கு கீழ பூமி நழுவியது.

மீண்டும் தலை கிர்ர்ர்ர்ர்ர் என்று சுற்ற, எட்டி அருகில் இருந்த தூணை பிடித்துக்கொண்டாள். 

மெல்ல சுதாரித்தவள்,  

“உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு?  ஏன் இந்த குழந்தை வேண்டாம்?  உன்னால இதை வச்சு காப்பாற்ற முடியாதா?  அதுக்கு ஒரு வயிறு கஞ்சி ஊத்த முடியாதா?  உன்னால முடியலன்னா நான் சம்பாரிச்சு என் புள்ளையை காப்பாத்திக்கிறேன்...”   என்று படபடவென்று பொரிந்தாள்  பூங்கொடி.  

அவளால் இன்னுமே நம்ப முடியவில்லை.

அன்று ஒரு நாள், பிறக்காத,  கருவில் கூட உருவாகாத குழந்தைக்காக அப்படியெல்லாம் யோசித்து வைத்திருந்தான்.

தன் குழந்தையை...அதுவும்  பெண் குழந்தையை எப்படியெல்லாம்  தாங்குவான் என்று சொல்லி இருக்கிறானே...

இந்த ஊரில், இந்த ஜில்லாவிலயே இளவரசியாக வலம் வருவாள்... என்று பெருமை அடித்துக் கொண்டது நினைவு வந்தது.

இப்பொழுது அதே குழந்தை...அதே இளவரசி  வரப் போகிறாள்  என்றதும், அவன்  முகத்தில் கொஞ்சம் கூட சந்தோசம் இல்லாமல் அவளை முறைத்து  பார்த்ததும்,  இப்பொழுது அந்த குழந்தையை கலைத்து விடலாம் என்று சொல்லியதை  கேட்டு அவளால் முடியவில்லை.  

அன்னைக்கு அப்படி வீராப்பாய்  பேசியவனா  இன்று இப்படி பேசுகிறான் என்று வெறித்தபடி அவனைப் பார்க்க, அவனோ அவள் கத்தியதில் இன்னும் கோபமானவன், முதன்முறையாக கடினமாக திட்டினான்.

“வாயை மூடு டி. என் புள்ளைக்கு சம்பாதிச்சு  கூட முடியாத கையாலாகாதவன் இல்லை உன் புருஷன். நீ பத்து புள்ளைகள பெத்து கொடுத்தாலும் அதை என்னால காப்பாத்த முடியும்...”  என்று எரிந்து விழுந்தான்.

“ஓஹோ.. அப்ப  உனக்கு என்னய்யா பிரச்சனை? ஏன் இந்த புள்ளைய கலைக்க சொல்ற? “  என்று  கொஞ்சம் குரல் இறங்கி கேட்டாள்.  

அவனோ வேதனையோடு தன்  கண்களை அழுந்த மூடிக்  கொண்டவன்

“நாளைக்கு பொறக்கப் போகும் புள்ளய விட,  இன்னைக்கி எனக்கு தாய்க்குத் தாயாகவும், ஏற்கனவே எனக்கு முதல் புள்ளையாகவும்  இருக்கிற நீ வேணும் டி...” என்று தழுதழுத்தான்.

அவன் சொன்னதை கேட்டவளுக்கு  குழப்பமானது.  

“நான் இல்லாமல் எங்க போகப்போகிறேன்? என்ன சொல்ற மாமா..?”  
என்று  குழப்பத்துடன் கேட்க
, ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவன்,  

“இங்க பாரு டி... நீ இன்னும் சின்ன பொண்ணு.  பத்தொன்பது வயது தான் ஆகுது. இந்த சின்ன  வயசுல, உன்னால  ஒரு புள்ளைய சுமந்து பெத்து எடுக்க முடியாது.  

நம்ம பக்கத்து தெரு நமச்சிவாயம் பொண்டாட்டி வள்ளிய பாத்த இல்ல.  இருபத்தி மூனு  வயசுலயே புள்ளையை பெத்து முடியாமல் இறந்து போயிடுச்சு.  

இதுக்கும் உன்னைவிட நல்ல பலசாலியாகவும், ஆரோக்கியமாகவும் தான் இருந்துச்சு அந்த புள்ள.

குழந்தை பிறப்பதில் சிக்கலாகி, பெரிய உயிர், சின்ன உயிர் ரெண்டையுமே காப்பாத்த  முடியாமல் போயிடுச்சு.  

இப்ப பரமசிவம், பொண்டாட்டி, புள்ளை ரெண்டு பேரையும் தொலச்சிட்டு பித்து புடிச்ச மாதிரி சுத்திக்கிட்டு இருக்கான்.  எனக்கு அப்படி ஒரு நிலை வேண்டவே வேண்டாம்.  நீ மட்டும் எனக்கு போதும்.  

ஏற்கனவே நான் ரொம்பவும் துரதிஷ்டக்காரன்...  பொறந்த கொஞ்ச நாள்லயே என் அப்பனையும் ஆத்தாவையும் முழுங்கிட்டவன். எனக்கு இப்ப  உறவுனு இருக்கிறது நீ மட்டும்தான். உன்னையும் நான் இழக்க விரும்பலை டி.  எனக்கு புள்ள வேண்டாம்.  நீ மட்டும் என் கூட இரு டி... அது போதும்.  

கடைசி வரைக்கும் உன்கூட  வாழ்ந்து, உன்னை பாத்துக்கிட்டே  சந்தோசமா போய்டுவேன்.  அதனால்தான் சொல்றேன்.  இந்த குழந்தை நமக்கு வேண்டாம்...”  என்று  வேதனையோடு சொல்ல, அதைக்கேட்ட பெண்ணவளோ    அப்படியே உறைந்து போனாள்.

இதுவரை அவன் தள்ளி தள்ளி சென்றதற்கான காரணம் இப்பொழுது புரிந்தது.

அவனுடைய அடிமனதில் குழந்தை வந்தால் அவளுக்கு ஏதாவது ஆகிவிடும் என்ற பயம்தான்...அவனை அவளிடம் நெருங்க விடாமல் தடுத்து இருக்கிறது.

ஆனால் அவள் படிக்கட்டும்... அவன் நல்ல நிலைக்கு வரட்டும் என்று சொன்னது எல்லாம் சும்மா சமாளிப்பு...

தனக்காகத்தான் அவன் இந்த அளவு தயங்கி நின்றிருக்கிறான். தன் உணர்ச்சிகளை, தன் சுகத்தை எல்லாம் கட்டுபடுத்தி வைத்திருக்கிறான்...   

என்னை இந்த அளவுக்கா நேசிக்கிறான்?  என்று அதிர்ந்து போனாள்

அவனுடைய உயிர்... அவன் வாரிசு...  அதைக்கூட துச்சமாக மதித்து,  அவள்  உயிரை பெருசாக  நினைக்கும் தன் கணவனை நினைத்து பூரித்து போனாள் பெண்ணவள்.

அடுத்த கணம், ஓடிவந்து அவனை இறுக்க கட்டிக்கொண்டு,  அவர் மார்பில் முகம் புதைத்து குலுங்கினாள்.  

அவன் கண்களிலும்  கண்ணீர் வழிந்தது.

அவனின் கை உயர்ந்து அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டான்.  

சற்று நேரம் இருவரும் அந்த இறுகிய அணைப்பிலயே ...அது தந்த சுகத்தில்...அது தந்த நிம்மதியில் அப்படியே கண் மூடி நின்றிருந்தனர்.

தன்னவனின் அன்பில் உருகி போனவள், பின் சற்று நேரத்தில்  மெல்ல தெளிந்தவள், அவனை விட்டு விலகி, தன் முந்தானையால் அவள் கண்ணை துடைத்துக் கொண்டாள்.

அவன் கண்களையும் முந்தானையால் துடைத்து விட்டாள்.  

இருவரும் ஓரளவுக்கு ஆசுவாசம் அடைந்து, இயல்பு நிலைக்கு திரும்பி இருக்க, தன் தொண்டையை செருமிக்கொண்டு மெல்ல ஆரம்பித்தாள் பூங்கொடி.  

“இங்க பாரு மாமா...பிரசவம் என்பது ஒவ்வொரு பொம்பளைக்கும் மறுபிறவிதான். பத்து மாதம் ஒரு உயிரை தன் வயிற்றில் சுமந்து, அதை வளர்த்து, வெளி உலகுக்கு கொண்டு வருவது என்பது அவ்வளவு சுலபம் இல்லைதான்.

நாம வயல்ல நெல்லை போட்டு,  ஒவ்வொரு ஸ்டேஜ்லயும் அதை கண்ணும் கருத்துமா பாத்து பாத்து வளர்க்கறோமே..அது மாதிரிதான்.

சில நேரம் அறுவடைக்கு முன்னால, பலத்த மழை பேஞ்சு, எல்லாமே நாசமாகி போய்டும். அதுக்காக அடுத்த போகம் வெள்ளாமை வைக்காமயா விட்டுடறோம்.?

அது மாதிரி ஒரு புள்ளையை பெத்து எடுக்கறதிலயும் ரிஸ்க் இருக்குதான். ஆனா அதுக்காக எல்லாரும் புள்ளையே வேண்டாம் என்று  மறுத்துவிட முடியுமா? அப்புறம் எதிர்கால சந்ததி உருவாறது எப்படி?

ஒருத்தருக்கு பிரசவத்துல சிக்கல் ஆச்சுனா, அதுக்காக  எல்லாருக்கும் அதே மாதிரி ஆகும்னு  இல்ல.  

உன் மாமியாரையே எடுத்துக்கோ.  அவங்க உடம்புக்கு நாலு புள்ளைகள பெத்து  எடுக்கலையா?  

என் அக்கா பொற்கொடி...  அவளும் ஒரு பையன நல்ல படியா பெத்து எடுத்திருக்காதானே... அதனால புள்ளைய பெத்துக்கறதுல எனக்கு ஒன்னும் ஆகாது மாமா...

என்னால இந்த புள்ளைய சுமக்க முடியும். எந்த குறையும் இல்லாம உன் இளவரசிய...குட்டி கருவாச்சிய  பெத்து கொடுப்பது  என் பொறுப்பு... “ என்று அவனுக்கு சமாதானம் சொன்னாள்.  

“இல்லடி...அதெல்லாம் வேண்டாம். நீயே சொன்ன இல்ல. புள்ளைய பெத்து எடுப்பது பெரும் ரிஸ்க் னு.

நீ சொன்ன மாதிரி வெள்ளாமை ஒரு போகம் பொய்த்து போனாலும் அடுத்த போகம் அதை மீட்டெடுத்திடலாம். ஆனால் ஒரு உசுரு அப்படியா? அது போனா திரும்ப கொண்டு வர முடியுமா? “ என்று சொல்லும்பொழுதே அவன் உடல் சிலிர்த்தது.

கற்பனையில் கூட தன்னவளுக்கு ஏதும் நேர்ந்து விடுவதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவன் முகம் இறுக, பிடிவாதமாக மறுத்தான்.

அவளோ மீண்டும் விளக்கம் சொல்ல,

“வேணாம் டி... நீ ஏதாவது சொல்லி என் மனச மாத்த பாக்காத.  அதோட உன் படிப்பு வேற இருக்கு...அதை நீ நல்ல படியா படிச்சு முடிச்சு, நீ ஒரு டிகிரி வாங்கணும்...” என்று அடுத்த காரணத்தை எடுத்துச்சொல்ல, அதில் இன்னுமாய் கடுப்பானாள் பெண்.

ஆனாலும் தன் பொறுமையை இழுத்து பிடித்துக்கொண்டவள்,

ஐயோஇந்தப் பொல்லாத படிப்ப  விட மாட்டேங்கறானே... நான் என்னவோ கலெக்டருக்கு படிக்கிற மாதிரி ரொம்ப பில்டப் கொடுக்கறான்.

நான் படிக்கிறது சாதாரண  பி.ஏ டிகிரி. இதுக்குப்போய் இம்புட்டு அக்கறை தேவையா? சொன்னாலும் புரிஞ்சு தொலைக்க மாட்டேங்கிறான்...

எல்லாத்துலயும் புத்திசாலியா இருக்கிறவன்...இந்த படிப்பு விஷயத்தில் ஏன் அடி முட்டாளா இருந்து தொலையறானோ? “ என்று உள்ளுக்குள் பொரிந்து தள்ளியவள், ஆனாலும் அதை மறைத்துக்கொண்டு, முகத்தை இயல்பாக வைத்துக்கொண்டு,  

“அது வந்து... என் படிப்புக்கு ஒரு குறையும் வராது மாமா... நான் ஒன்பது மாசம் வரைக்குமே காலேஜ்க்கு போகலாம் மாமா... குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் ஒரு மூனு மாசம் கழிச்சு, மீண்டும் படிப்பை தொடரலாம்.   அது ஒன்னும் பிரச்சனை இல்லை… “  என்று விளக்க, அவளை முறைத்தான்.  

“இவ்வளவு தலைவலி தேவையா?  நான்தான் கொஞ்ச நாள் பொறுத்து இருக்கலாம் னு சொன்னேன்...  கேட்டியா...” என்று  மீண்டும் அவளை அர்ச்சனை பண்ண ஆரம்பித்தான்.

அவளோ மானசீகமாக ஒரு பஞ்சை எடுத்து காதில் வைத்துக்கொண்டு பாவமாக நின்றாள். அவளின் அப்பாவியான, பாவமான லுக்கில் கொஞ்சம் கோபம் தணிந்தவன்,

“சரி...சரி... நாளைக்கு பேசிக்கலாம்.. இப்ப போய் படுத்து கொஞ்சம் ரெஸ்ட் எடு... நான் கொஞ்சம் காலாற நடந்துட்டு வர்றேன்...” என்றவாறு செருப்பை மாட்டிக்கொண்டு  வெளியில் சென்றான் ராசய்யா..! 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!