என்னுயிர் கருவாச்சி!!-54
அத்தியாயம்-54
இரண்டு வாரத்திலயே ஓரளவுக்கு நன்றாக தேறிவிட்டாள்.
அவள் தேறியதும், அவளை தன் வீட்டிற்கு அழைத்து சென்று
விட்டான் ராசய்யா.
சிலம்பாயி, அவள் இங்கயே இருக்கட்டும்..இன்னும்
கொஞ்சம் உடம்பு தேறட்டும் என்று சொல்ல, ராசய்யா மறுத்து விட்டான்.
அத்தை... அவ என்
பொண்டாட்டி... அதனால நான்தான் அவளை பாத்துக்கணும். என்று பிடிவாதமாக அழைத்து
சென்றான்.
சுடுதண்ணி வைக்க
கூட அடுப்படி பக்கம் போகாதவன், இப்பொழுது காபி போடுவதில் இருந்து, நாட்டுக்கோழி சூப் வைப்பது வரை சமையலில்
கற்று தேறி இருந்தான் ராசய்யா.
தன் கணவனின்
கவனிப்பில் , அவளுமே சீக்கிரம் உடல் தேறி எழுந்து விட்டாள்.
எழுந்துமே தன்
கீரை வியாபாரத்தை ஆரம்பிக்கிறேன் என்று குதிக்க, ராசய்யாவோ உனக்கு பதிலா நான் போய் முசிறியில் போட்டுட்டு வருகிறேன் என்று
சொல்லி அவளை தடுத்து நிறுத்தி வைத்தான்.
அவளை தரையில்
நடக்க கூட விடாமல் உள்ளங்கையில் வைத்து தாங்கினான்.
தினமும் இரவு
அவளுக்கு வெந்நீர் வைத்து கொடுத்து, குளிக்க வைப்பதும், பின் வீங்கி இருக்கும் அவள் பாதத்தை எடுத்து தன்
மடியில் வைத்து அழுத்தி கொடுத்தான்.
இரவில் ஒன்
பாத்ரூம் செல்ல வேண்டும் என்று எழுந்தால்
உடனே அடுத்த நொடி அவனும் எழுந்து அவள் உடனேயே அவள் கையை பிடித்தபடி பாத்ரூமிற்கு
அழைத்து செல்வான்.
ஏழாவது மாதம் ஊரையே
திரட்டி அவளுக்கு வளைகாப்பு விழா நடத்தி அசத்தினான்.
இப்படியாக தன்
மனவியை தன் இறக்கைக்குள் வைத்து காப்பதை போல
அடைக்காத்தான் ராசய்யா .
*****
அதுவரை இருந்த திடம் தைர்யம் எல்லாம் ஒன்பதாவது
மாதம் நெருங்க நெருங்க கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது.
அதுவும் அவளின்
ஒல்லியான தேகத்திற்கு, நன்றாக மேடிட்டிருக்கும் வயிற்றை
தள்ளிக்கொண்டு அவள் கஷ்டப்பட்டு நடப்பதை கண்டு அவன் மனம் பதைக்கும்.
வயிறு
முன்புறமாக தள்ளிக்கொண்டு இருப்பதால் அவளின் முதுகுத்தண்டு லேசாக வளைந்து முதுகு
வலி பின்னி எடுக்கும்.
கட்டிலில்
அமர்ந்து அவன் மீது சாய்ந்து, இப்படியும் அப்படியும் உராய்ந்து தன் வலியை குறைக்க முயல்வாள். வாய்விட்டு
அவனிடம் சொல்ல முடியாது. உடனே இது உனக்கு தேவையா என்று தன் பிரசங்கத்தை ஆரம்பித்து
விடுவான்.
அதனால்
முடிந்தவரை தன் உபாதைகளை தனக்குள்ளே போட்டுக்கொள்வாள்.
ஆனாலும் அவளின்
லேசான முக சுளிப்பில் இருந்தே அவன் மனதை, வலியை, உபாதையை கண்டு கொள்வான்.
அவனுக்கோ இதெல்லாம்
தேவையா என்று அவளை வாய் விட்டு திட்டக்கூட
முடியாத நிலை.
அதனால் தன்
வேதனை ...கோபம்..பயம் எல்லாம் தன்னுள்ளே போட்டு புதைத்து கொண்டு, மனைவியை காக்கும் கடமையை செய்தான்.
*****
ஒன்பதாவது மாதம் ஆரம்பித்ததும் அவனுக்குள்ளே பயம் சூழ்ந்து கொண்டது.
அவளின் படிப்பு
படிப்பு என்று பாட்டு பாடியவன், அவளின் வளைகாப்பு முடிந்த நாளுக்கு பிறகு
கல்லூரிக்கு செல்ல வேண்டாம் என்று தடா போட்டு விட்டான்.
அவளோ
“மாமா...
படிப்பு...” என்று இழுக்க,
“அதை தூக்கி
உடப்புல போடு... “ என்று சிடுசிடுத்தான்.
“அப்ப என்
டிகிரி.. ? “ என்று உள்ளுக்குள் சிரித்தபடி சொல்ல,
“நம்ம அண்ணாச்சி
கடையிலதான் டிகிரி காப்பி விக்குதே.. அத வாங்கித்தர்றேன்.. நீ காலெஜ் போய் எல்லாம்
டிகிரி வாங்கி கிழிக்க வேண்டாம்..” என்று தடாலடியாக மறுத்து விட்டான்.
இதற்காகவே
காத்திருந்தவள்,
“இப்பதான் நீ
என் செல்ல மாமா.. என் புஜ்ஜு மாமு.. என் செல்ல புருஷா.... “ என்று அவன் கழுத்தை
கட்டிக்கொண்டு அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.
“போதும் டி..
ரொம்ப கொஞ்சாத.. “ என்று வெட்கப்பட்டு அவளை செல்லமாக முறைத்தான்.
வெளியில்
சிரித்தாலும், உள்ளுக்குள் சிறு கலக்கம் இருந்து
கொண்டேதான் இருந்தது.
அதுவும் பரமசிவத்தின்
மனைவி வள்ளியின் இறப்பு வேறு அடிக்கடி அவன் கண் முன்னே வர, ரொம்பவும் தவித்துப் போனான்.
தன் பயத்தை
தன்னவளிடம் சொன்னாள், அவளோ கலகலவென்று சிரித்து,
“எனக்கு அப்படி
எல்லாம் ஒன்னும் ஆகாது மாமு... உன்னை
அவ்வளவு சீக்கிரம் விட்டுட்டு போய்டுவேனா...
இன்னும்
என்னவெல்லாம் உன்னை டார்ச்சர் பண்ண லிஸ்ட் போட்டு வச்சிருக்கேன். அந்த லிஸ்டில்
முதலாவதா இருப்பது நான் போட்ட பழிவாங்கும்
திட்டம்.
கண்டிப்பா ஒரு
குட்டி கருவாச்சியை பெத்து கொடுத்து, அதை பார்த்து உன் முகம் போற போக்கை
நான் பார்த்து ரசிக்கணும்.
அதுக்கு
முன்னால் இந்த உசுரு இந்த உடம்பை விட்டு போகாது..” என்று அவன் கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளி இரு
பக்கமும் ஆட்டி அவன் தலை முட்டி சிரித்தாள்.
அவன் கண்களோ
கலங்கி போனது.
அவள் வாயை
பொத்தியவன்
“அப்படி எல்லாம்
சொல்லாதடி...” என்று தலையை மட்டும் ஆட்டி
சைகையால் சொன்னான்.
வாயை திறந்தால்
எங்கே அழுது விடுவோமோ என்ற பயம் அவனுக்கு....
தன் கணவனின்
நிலை புரிந்து, அவன் முகத்தை இழுத்து தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு அவன் தலை கோதினாள்.
அதே நேரம் அவள்
வயிற்றில் பிள்ளையின் அசைவு தெரிய, அதில் சிலிர்த்தவள்
“மாமா ... உன்
இளவரசி உன்னை பாக்கணும்னு குதிக்கிறா... என்னானு கேளு... “ என்றவாறு தன் கணவனின் கையை எடுத்து, அவளின்
மேடிட்ட அடி வயிற்றில் வைத்து காட்ட, பிள்ளையின் அசைவை அவன் கை உணர்ந்ததும் அப்படியே சிலிர்த்து போனான்.
உள்ளுக்குள்
புதுவெள்ளம் பாய்ந்தோடுவதை போல கிளர்ச்சியாக இருந்தது.
ஆனால் அடுத்த
நொடி தன்னவளின் மலர்ந்த சிரிப்பை கண்டவன் வெடுக்கென்று தன் கையை அவள் வயிற்றில் இருந்து எடுத்துக் கொண்டான்.
“என்னாச்சு
மாமா...? “ என்று அதிர்ச்சியோடு கேட்க,
“இல்ல... உன்னை
கஷ்டபடுத்தி வெளிவர இந்த புள்ள எனக்கு வேண்டாம். முதல்ல உனக்கு எதுவும் ஆகாம நல்லபடியா
இந்தப் புள்ளையை பெத்து எடு... அதற்கு பொறவு நான் தொட்டு பாக்கறேன்...”
என்று சொல்லி பிடிவாதமாக தன் குழந்தையை தொட்டு பார்க்க மறுத்துவிட்டான்.
ஆனால் அவளை கவனித்துக்
கொள்வதில் எந்த குறையும் வைக்கவில்லை.
*****
மருத்துவர் கொடுத்திருந்த பிரசவ தேதிக்கு இரண்டு வாரம் இருக்க, ராசய்யாவுக்கு இன்னும் பயம் கூடிக்கொண்டே
இருந்தது.
ஒவ்வொரு
நாளையும் கடத்த அவன் படாத பாடு பட்டான். இரவெல்லாம் ஏதேதோ கெட்ட கனவு வந்து அவன்
தூக்கத்தை கெடுத்தது.
அதற்குமேல் பொறுமை இல்லாமல்,
“இரண்டு வாரம் இருக்கும் பொழுதே மருத்துவமனைக்கு சென்று விடலாம்...இப்பயே பெட்ல அட்மிட் ஆகிடலாம்.
திடீர்னு பிரசவ
வலி வந்துச்சுனா, இங்க இருந்து முசிறிக்கு செல்ல நேரம்
ஆகும். அதுக்குள்ள அவளுக்கு ஏதாவது ஆகிடும்...”
என்று பூங்கொடியை
கட்டாயப்படுத்தி அவள் அன்னையுடன் அழைத்துச் செல்ல, அங்கிருந்த மருத்துவரோ மீண்டும் அவனை நன்றாக திட்டி வீட்டிற்கு திருப்பி அனுப்பி வைத்தார்.
“ஏப்பா...நீ உன்
பொண்டாட்டி மேல வச்சிருக்கிற பாசத்தை கண்டு சந்தோஷமாதான் இருக்கு. அதுக்காக எல்லாரும்
இப்படி 15 நாள் முன்னாடியே வந்து ஹாஸ்பிட்டல்ல டேரா
போட்டா, நாங்க பெட்டுக்கு எங்க போறது?
உன்கிட்ட 15
நாளைக்கு ரூம் வாடகை கட்டுவதற்கு பணம் இருக்கலாம். ஆனால் பெட்டுக் கொடுக்க எங்ககிட்ட வசதியில்லை.
உன்
பொண்டாட்டிக்கு ஒன்னும் ஆகாது. போய்ட்டு நான் சொன்ன தேதிக்கு வா...” என்று அவனை திட்டி, பூங்கொடியை பரிசோதித்துவிட்டு வீட்டிற்கு திருப்பி
அனுப்பி வைத்துவிட்டார்
அதற்கு மேல் அவனுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.
பூங்கொடி வீட்டிலோ
எல்லாரும் அவனுக்கு அட்வைஸ் பண்ண, பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டிருந்தான்.
இரண்டு நாள் கழிந்தது.
அப்பொழுது
சென்னையில் இருந்து திருச்சிக்கு வரும் பண்ணையாரை அழைத்து வர வேண்டும் என்ற வேலை ராசய்யாவுக்கு
வந்து இருந்தது.
வேற ஏதாவது வேலை
என்றால், தன் மனைவியை விட்டு நகர்ந்து இருக்க
மாட்டான்.
அது லட்ச ரூபாய்
வருமானம் வரும் வேலையாக இருந்தாலும் கால் தூசுக்கு சமம் என்று தட்டிவிட்டு அவளை
விட்டு அசையாமல் சட்டமாக இருந்து இருப்பான்.
இதுவோ அவனுக்கு
பாசம் காட்டி ஆதரவு அளித்த பண்ணையார் அம்மாவின் வேண்டுகோள்.
கார் ஓட்டும்
அளவுக்கு பண்ணையில் அப்பொழுது யாரும் இல்லை என்பதால், ராசய்யாவை சென்று அழைத்து வரச்சொல்லி ஆள்
அனுப்பி விட்டிருந்தார்.
தகவல்
கிடைத்ததும் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்தான்.
பூங்கொடிதான்
அவனுக்கு சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தாள்.
அதன்படி
பண்ணையார் வீட்டிற்கு சென்றவன், அங்கு இருந்த ஆடி காரை தூசி தட்டி
துடைத்து எடுத்துக் கொண்டு கிளம்ப, திடீரென்று அவன் இதயம் வேகமாக
துடித்தது.
அவனுடைய இடது கண்
வேறு வேகமாக விட்டு விட்டு துடிக்க, ஏதோ நடக்க கூடாதது நடக்கப்போவதை போல
அவன் உள் மனம் எச்சரித்தது.
அடுத்த கணம்
அவன் மனையாளும், அவளின் மேடிட்ட வயிறும், பின் பரசமசிவத்தின் மனைவி வள்ளி என மாறி
மாறி கண் முன்னே வந்து போக,
அவ்வளவுதான்...காரை
எடுத்தவன் பண்ணையாரை மறந்தான்..
அவனுக்கு ஆதரவு
அளித்த பத்மினி அமாவை பமறந்தான். பண்ணையாரை கூட்டி வருவதற்கு செல்ல வேண்டும்
என்பதை மறந்தான்.
காரை தன்
மாமனார் வீட்டை நோக்கி விரட்டினான்.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் கார் அவள் வீட்டின் முன்னே நின்றது.
அதே நேரம் தன்
வீட்டு வாசலில் கிரீச்சிட்டு நின்ற கார் சத்தம் கேட்டு, ஆவலாக அறைக்கு உள்ளே இருந்து, வேகமாக வெளியில் வந்தாள் பூங்கொடி.
அப்பொழுதுதான்
அன்பரசன் அங்கே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தவன், சொம்பில் இருந்த தண்ணியை கொட்டி விட, அதை துடைக்க துணி எடுத்து வர சமையல் அறைக்கு சென்றிருந்தான்.
அதை கவனிக்காமல்
வேகமாக வெளியில் வந்தவள் கொட்டியிருந்த
நீரில் கால் பட்டு, அப்படியே வழுக்கி விழுந்தாள்.
விழும் பொழுது மா...
மா என்று கத்தியபடி கீழ சரிய, அப்பொழுது தான் காரை நிறுத்தி விட்டு, கீழ இறங்கியவன்,
அவளின் அலறலைக் கேட்டு பூங்கொடி...
என்று கத்தியவாறு புயலென பாய்ந்து உள்ளே ஓடி வந்தான்.
அதற்குள் கீழ
விழுந்திருந்தாள் அவன் மனையாள்.
கீழே
விழுந்ததில் பனிக்குடம் உடைந்து விட, அவளுக்கு பிரசவ வலி ஆரம்பமாகி இருந்தது.
கீழ விழுந்தவள்
தன் வயிற்றை பிடித்துக்கொண்டு வலியால் துடிக்க, பூங்கொடியின் சத்தம் கேட்டு அப்பொழுதுதான் பக்கத்து வீட்டிற்கு உரமோர் வாங்க சென்றிருந்த சிலம்பாயும் பக்கத்து வீட்டு பெண்மணி சரோஜாவும் ஓடி வந்தனர்.
பனிக்குடம்
உடைந்து விட்டதால் வீட்டிலேயே பிரசவம்
பாக்கலாம் என்று சரோஜா யோசனை சொல்ல அவ்வளவுதான்.
அவரை கொலை வெறியோடு
பார்த்தவன்
“அதெல்லாம் ஒரு
மயிரும் வேண்டாம். அவளை நான் பெரிய ஆஸ்பத்திரிக்கே கூட்டிட்டு போறேன்... “ என்று கத்தியவன்
“என்ன அத்தை..
இவ கூடவே இருனுதான சொன்னேன்.. இவளை கூட இருந்து
பாக்காம, எங்க போனீங்க? “ என்று கோபத்தில் தன் மாமியாரை திட்டி தீர்த்தவன், அடுத்த நொடி அவளை அப்படியே கைகளில்
அள்ளிக்கொண்டு காருக்கு விரைந்தான்.
காரின் பின்சீட்டில் படுக்க வைத்தான்.
சிலம்பாயிம் சரோஜாவும் ஓடி வந்து காரில் ஏறிக் கொள்ள, அடுத்த நொடி கார் கதவை அறைந்து சாத்தியவன், ட்ரைவர் இருக்கைக்கு வந்து காரைக் கிளப்பி அதி
வேகத்தில் பறந்தான்.
அந்த கிராமத்து
மண் ரோட்டில் அவ்வளவு வேகத்தில் ஓட்டிய முதள் ஆள் இவனாகத்தான் இருக்கும்.
கார் பறந்த வேகத்தில்
சாலையில் இரு பக்கமும் இருந்த வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் எல்லாரும்
அதிர்ந்து நிமிர்து பார்த்தனர்.
அவர்கள்
பார்க்கும் முன்னே புள்ளியாக மறைந்து போனது அந்த ஆடி கார். அந்த அளவுக்கு வேகமாக
பறந்து கொண்டிருந்தான்.
நல்லவேளை...
அன்று எதிரில் எந்த வாகனமும் வந்திருக்கவில்லை. அப்படி வந்திருந்தால் என்ன கதி ஆகி
இருக்குமோ..அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
*****
பின் இருக்கையில் இருந்த பூங்கொடியோ வலியால் துடித்துக் கொண்டிருந்தாள்.
பிரசவ வலி என்பது
எப்படியிருக்கும் என்று அறிந்திராதவளுக்கு
இப்பொழுது புரிந்தது.
அதோடு தன் கணவன்
ஏன் இந்த குழந்தை வேண்டாம் என்று மன்றாடினான் என்று இப்பொழுது மண்டையில் உறைத்தது.
இந்த குழந்தை
உருவாக காரணமாக இருந்த முதல் கூடலின் பொழுது , அவளை எப்படியெல்லாம் ஆராதித்தான்.
அவளுக்கு
வலித்து விடுமே என்று பார்த்து பார்த்து அவன் உயிரை அவள் உள்ளே செலுத்தினான் என்பது இப்பொழுது நினைவு வர, கண்ணோரம்
கரித்துக் கொண்டு வந்தது.
கூடலின் வலியையே
அவளால் தாங்க முடியாது என்று தயங்கியவன், அவளுக்கு இந்த பிரசவ வலியை
தரக்கூடாது என்று தானே அவ்வளவு தூரம் மன்றாடினான்.
அதில் இருந்த
உண்மை இப்பொழுது புரிந்தது.
எங்கே தான்
அழுதால் அவன் வேதனைப்படுவானோ என்று தன் அழுகையை அடக்கிக் கொண்டு பல்லை இறுக்க கடித்து
வலியை பொறுத்து கொண்டாள்.
முன்னால்
இருந்தவனோ அவளை திரும்பி திரும்பி பார்த்தவாறு அசுர வேகத்தில் காரை
ஓட்டிக்கொண்டிருந்தான்.
அவனுக்கோ அன்று
அவன் தந்தை பாம்பு கடித்து உயிருக்காக போராடி கொண்டு இருந்ததும், அவரை காப்பாற்ற பெரிய ஆஸ்பத்திருக்கு கொண்டு
செல்ல, எந்த வாகனமும் இல்லாமல் அலைந்து திரிந்து தாமதமாக
மருத்துவமனைக்கு சென்றதும் கண் முன்னே வந்தது.
அன்று
தாமதிக்காமல் மருத்துவமனையில் சேர்த்து இருந்தால்... அந்த மருத்துவருஅம்
தாமதபடுத்தாமல் ஓடி வந்து பார்த்திருந்தால் அவர் உயிரை காப்பாற்றி இருக்க
முடியும்/.
அவன் தந்தை பிழைத்து இருந்திருந்தால், அவன் தாயும் உயிரோடு இருந்திருப்பாள்.
அவன் வாழ்க்கை எப்படியெல்லாமோ வசந்தமாகி இருக்கும்.
எல்லாம் சரியான
நேரத்தில் மருத்துவமனைக்கு செல்லாததே காரணம் என்று ஆழ பதிந்து விட, இப்பொழுது தன் உயிரானவளையும் அந்த
நிலைக்கு விட்டுவிடக்கூடாது என்று அந்த காரில் எவ்வளவு மேக்சிமம் வேகம் செல்ல முடியுமோ அந்த வேகத்தில் பறந்தான்.
கூடவே பின்னால்
திரும்பி பார்த்து
“உனக்கு எதுவும்
ஆகாது டி.. உன்னை நான் விட மாட்டேன். உன்னை அப்படியெல்லாம் விட்டுவிட மாட்டேன். எனக்கு
நீ வேணும் டி... “ என்று அவளை தேற்றியவாறு
காரை விரட்டிக் கொண்டிருந்தான்.
சிலம்பாயி, சரோஜாவும் அவள் வயிற்றை நீவி விட்டும், காலை தேய்த்து விட்டும் வலியை குறைக்க முயன்றனர்.
****
அடுத்த முப்பதாவது நிமிடத்தில் அந்த மருத்துவமனை உள்ளே காரை
நிறுத்தி இருந்தான் ராசய்யா.
நிறுத்திய வேகத்தில்
காரை விட்டு இறங்கியவன், வேகமாக பின்னால் ஓடி வந்தவன் டாக்டர்... என்று கத்தியவாறு பின் கதவைத் திறந்து, தன்னவளை
அள்ளிக்கொண்டு மருத்துவமனையின் நுழை வாயிலுக்கு ஓடினான்.
அவனின் அலறலைக் கேட்டு
அவசரம் என்று புரிந்துகொண்டு அவசரமாக ஸ்ட்ரெக்சரை
உருட்டிக் கொண்டு ஓடி வந்தான் அங்கிருந்த வார்ட்பாய்.
ஸ்ட்ரெக்சர் வரும்வரை
பொறுமை இல்லாதவன், பாதி தூரம் தூக்கிக்கொண்டு வந்து ஸ்ட்ரெக்சரில்
கிடத்தியவன் வார்ட் பாயை தள்ளி விட்டு, அவனாகவே வேகமாக லேபர் வார்டுக்கு தள்ளிச் சென்றான்.
அவளோ வலியால்
துடித்தாலும் , தன்னவன் முகத்தில் தெரிந்த தவிப்பும், அவன் கண்களில் வழிந்த கண்ணீரையும் கண்டு
பதறியவள், ஸ்ட்ரெக்சரின்
விளிம்பில் இருந்த அவன் கையை எட்டிப் பிடித்துக் கொண்டாள் பூங்கொடி.
தன் தலையை
இருபக்கமும் அசைத்து அவனை கவலைப்படவேண்டாம் என்று ஆறுதல் சொல்ல, அதற்குள் லேபர் வார்ட் வந்திருக்க, ஸ்ட்ரெக்சர் உள்ளே செல்லும் முன்னே அவன்
கையை பற்றியிருந்த அவள் கையை எடுத்து தன் கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டு
கண்ணீர் வடித்தான்.
அவன் வடித்த ஒவ்வொரு சொட்டு கண்ணீரும் அவள் மீதான
அவனின் எல்லையில்லா காதலை வெளிச்சம்
போட்டு காட்ட, அதை உணர்ந்தவளுக்கோ தன் வலியையும் மறந்து
மனம் பூரித்தது.
அதுவரை தன்
பிரசவம் பற்றி பயம் இல்லாமல் இருந்தவளுக்கு முதன் முதலாக பயம் தட்டியது.
இப்படி தன் மீது
உயிரையே வைத்திருக்கும் தன் கணவன் உடன் சந்தோஷமாக வாழமுடியாமல் தன் வாழ்க்கை
பாதியில் முடிந்து விடுமோ என்ற பயம் முதன் முதலாக எட்டி பார்த்தது.
“இல்லை... என்
புருஷனை விட்டு நான் பாதியில் போக மாட்டேன். எனக்கு எதுவும் ஆகாது. நான் அவனோட
இன்னும் பல ஜென்மம் சந்தோஷமா வாழணும். என் கருவாயன் கூட ஒவ்வொரு நிமிசமும் ரசிச்சு, அனுபவித்து வாழணும்.
கருப்பணாரே...
என்னை என் புருஷன் கிட்ட இருந்து பிரிச்சிடாத... உனக்கு கெடா வெட்டி பொங்க
வச்சிடறேன்...” என்று அவசரமாக வேண்டிக் கொண்டவள்,
“மாமா... எனக்கு
ஒரு முத்தம் கொடேன்....” என்று கன்னத்தில் மற்றொரு கையை வைத்து சைகையால் கேட்க, இன்னுமே உடைந்து போனான் ராசய்யா.
“உனக்கு எதுவும்
ஆகாது டி... ஆக விடமாட்டான் இந்த ராசய்யா... நீ ஜம்முனு திரும்பி வருவ...” என்று
அவள் தலையை வருட,
அவளோ வலியோடு
புன்னகைத்து
“ஒரு முத்தம்
கொடு மாமு.... “ என்று கண் சிமிட்ட, அடுத்த நொடி இடம் பொருள் ஏவல் எல்லாம் மறந்து ஸ்ட்ரெக்சரில் கிடந்தவளின்
தலையை தூக்கி அவள் முகத்தில் முத்த மழை பொழிந்தான் அவளவன்.
“அடடா... என்ன
நடக்குது இங்க...வலி வந்த புள்ளைய உள்ள கொண்டு வராம இது என்ன கூத்து...
கோவிந்தா...
நீயும் இதை வேடிக்கை பாத்துகிட்டு நிக்கற... வலி வந்த கேசை தாமதிக்காமல் உள்ள கொண்டு வரணும்னு உனக்கு
தெரியாது..” என்று கையை பிசைந்தபடி நின்றிருந்த வார்ட் பாயை அதட்டியவாறு அங்கே
வந்தார் அந்த கைனிக்.
பூங்கொடி பக்கம்
பார்த்தவர்,
“ஏம்மா
பொண்ணே... அதெல்லாம் உனக்கு ஒன்னும் ஆகாது.. புள்ளைய பெத்து எடுத்துட்டு அப்புறம்
உன் புருஷனை கொஞ்சலாம்.. இப்ப வா உள்ள போகலாம்... “ என்று அதட்டியவாறு மருத்துவர் உள்ளே
செல்ல,
அவரைக்கண்டு பதறிய வார்ட்பாய்
“அண்ணே...
அதுக்குத்தான் நானே தள்ளிகிட்டு வர்றேன் னு சொன்னேன்... போச்சு.. இந்த சிடுமூஞ்சி
டாக்டர் அம்மாகிட்ட மாட்டிகிட்டேன்... இன்னைக்கு என் சோலிய முடிச்சிடுவாங்க...
தள்ளுண்ணே...” என்றவாறு ராசய்யாவை தள்ளிவிட்டு ஸ்ட்ரெக்சரை உள்ளே தள்ளி சென்றான்.
அவளோ எட்டி அவன்
கையை பிடித்துக்கொள்ள, கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்திருந்த இரண்டு கரங்களும் பிரிய ஆரம்பிக்க, இறுதியாக ஒற்றை விரல் மட்டும் தொட்டு
விலகியது.
அவளின் முகம்
உள்ளே சென்று மறையும் வரை அப்படியே நின்றிருந்தவன், அவள் உள்ளே சென்றதும், கதவு மூடிக்கொண்டாலும் அவனோ கொஞ்சமும் அசையாமல் அப்படியே சிலைபோல சென்று விட்டான்.
அவன் உடல் இறுகிப்போய், முகம் வெளிறி, தாடை விடைத்து, கை முஷ்டியை இறுக்கி கொண்டு அப்படியே
நின்றிருந்தான்.
யாருக்கும் அவனை
நெருங்க பயமாக இருந்தது.
சிலம்பாயிம், சரோஜாவும் கையை பிசைந்தபடி ஓரமாக
நின்றிருந்தனர்.
*****
பிரசவ அறையிலோ பூங்கொடி வலியால் துடித்துக் கொண்டிருந்தாள்.
அங்கு இன்னும்
சில பெண்களும் அவளைப் போலவே துடித்துக் கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு
முறையும், இடுப்பு எலும்பு முறிந்து விடும்
அளவுக்கு விட்டு விட்டு வலி எடுக்கும்பொழுதெல்லாம் எல்லாரும் அம்மா... அம்மா என்று கத்த, பூங்கொடி மட்டும் மாமா.. மாமா.. என்று கத்திக் கொண்டிருந்தாள்.
வெளியில் சிலை
போல நின்றவனுக்கோ அவளின் மாமா என்ற வலியுடனான தீனமான குரலைக்கேட்டதும் கை முஷ்டி இறுகியது.
அவன் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது.
சற்று நேரம்
போராடிய மருத்துவர், அவசரமாக வெளியில் வந்தவர், அங்கு இருந்தவர்களை பொதுவாக பார்த்து,
“குழந்தைக்கு
தொப்புள் கொடி சுற்றி இருக்கிறதால் குழந்தையை வெளியில் எடுப்பது கஷ்டமாக இருக்குது.
உடனே சிசேரியன்
பண்ணனும். அப்படியே பண்ணினாலும் தாய், சேய் இருவரில் யாராவது ஒருவரைத்தான் காப்பாற்ற முடியும்... “ என்று மருத்துவர் சொல்லி முடிக்கும் முன்னே
சிலைக்கு உயிர் வந்ததை போல வாயை மட்டும் திறந்தவன் கொஞ்சமும் யோசிக்காமல்
“என் பூங்கொடியை காப்பாத்துங்க டாக்டர்... என் கருவாச்சி எனக்கு வேணும். என் உயிரை எடுத்துக்கங்க டாக்டர்... அவ உயிரை காப்பாத்துங்க... “ என்று கத்தியவாறு அப்படியே மயங்கி சரிந்தான் ராசய்யா.
Comments
Post a Comment