என்னுயிர் கருவாச்சி!!-55

 


அத்தியாயம்-55

 

மூன்று மாதத்திற்கு பிறகு:  

டந்தது போதும் மாமா...  புள்ள எப்பவோ  தூங்கிட்டா. இப்படி  கொடுங்க. அவளை  தொட்டில்ல போடறேன்...”  என்றபடி அவன் கழுத்தை கட்டிக்கொண்டு தோளில் முகம் புதைத்து உறங்கிக் கொண்டிருந்த தன் மகளை தன் கணவனிடம் இருந்து பிரித்து எடுத்தாள் பூங்கொடி.

“ஹே பாத்துடி... புள்ள முழிச்சுக்க போறா...” என்று பதற்றத்துடன் தன் தோளில் கிடந்த மூன்று மாத மகளை,  அவளிடம் கொடுக்க முயலோ, அந்த குட்டியோ தூக்கத்திலும் அவளிடம் வராமல் அவன் கழுத்தை இறுக்கி கட்டிக்கொண்டாள்.

அதை பார்த்த பூங்கொடி தன் கணவனை முறைத்தாள்.

“எல்லாம்   நீங்க கொடுக்கிற செல்லம் மாமா... ஊர் உலகத்துல இல்லாத புள்ளைய பெத்துட்ட மாதிரி, ரொம்பத்தான் அவள கொஞ்சறீங்க...” என்று கழுத்தை நொடித்தாள் பூங்கொடி.

“நீ சொன்னாலும் சொல்லாட்டியும் என் பொண்ணு ஊர் உலகத்துல இல்லாத பொக்கிஷம் தான் டி... “ என்று பெருமையாக சிரித்தபடி தன் மீசையை நீவி விட்டுக் கொண்டான் ராசய்யா.

“ரொம்பத்தான்.. எல்லா புள்ளையும் தொட்டில்ல தூங்கறப்ப , உன் இளவரசி மட்டும் உன் தோள்லயே தூங்க பழக்கி வச்சிருக்கிங்க...

இந்த குட்டி கேடியும் இப்பல்லாம் தொட்டில்ல தூங்க மாட்டேங்குது. உன் தோள்தான் வேணுங்கிறா...

ராத்திரி நீ தூங்க வச்சிடற... மத்தியானம் இவள தூங்க வைக்கிறதுக்கு நான் படற பாடு எனக்குத்தான் தெரியும்...நாலு ஏக்கர் நாத்து நட்டா கூட இம்புட்டு அலுப்பு இருக்காது...இந்த கருவாச்சிய மேய்க்க...”   என்று தன் கணவனை முறைத்தபடி புலம்பி தள்ளினாள்.

பேசியபடி, அவன் தோளில் பல்லி போல ஒட்டியிருந்த மூன்று  மாதம் குழந்தையை வலுக்கட்டாயமாக பிரித்து எடுத்தாள்  பூங்கொடி

“ஹே பாத்துடி... “ என்று அவளிடம் தராமல் பிடுங்க வந்தவனை   முறைத்தபடி,  குழந்தையை கொண்டு தொட்டிலில் போட்டு லேசாக ஆட்டி விட்டாள்.  

அவனும் கசங்கி இருந்த தன் சட்டையை நீவி விட்டுக் கொண்டே,  தொட்டிலை ஒரு முறை திறந்து பார்த்து,  தன் மகள் உறங்குகிறாள், என்று உறுதியான பிறகே , அணிந்திருந்த சட்டையை கழட்டி ஹேங்கரில் மாட்டி விட்டு,  அருகிலிருந்த கட்டிலில் சென்று படுத்தான்.

அப்பொழுதும் அவன் பார்வை தொட்டிலையே சுற்றி வந்தது.

அதைக்கண்டு சிரித்தவள்  

“ஏன் மாமா... இப்ப இப்படி உசுரா இருக்கிற புள்ளையத் தானே அன்னைக்கு கலைக்க சொன்ன... இந்த வாய்தானே புள்ளையே வேண்டாம் னு என்னை திட்டி தீர்த்துச்சு... இப்ப புரியுதா...புள்ளையோட அருமை.... ”  

என்று  தன் கணவனை பார்த்து கேலியாக சிரித்தவாறு அவன் படுத்திருந்த கட்டிலின் அருகில் வந்தவள், கட்டிலில் ஏறி அவனை ஒட்டி படுத்துக்கொண்டு  அவன் மஞ்சத்தில் தலை வைத்துக் கொண்டாள்.  

அவனும் அவளின் தலையை ஆசையாக வருடியவாறு அசட்டு சிரிப்பை சிரித்தான்.  

ஆனாலும்  உங்க புள்ள இருக்காளே  பயங்கரமான கேடிதான்.

அவ கருப்பையில் உருவாகறப்பயே இடி மின்னல் மழைனு  எல்லாத்தையும் கூட்டிகிட்டு வந்தவ...  கர்ப்பம் உறுதி ஆகிறப்பயும் ஊரையே கூட்டிட்டா...  

அவ பொறக்கிறதுக்குள்ள நம்ம ரெண்டு பேரையும் படுத்தி எடுத்துவிட்டாள்...”  என்று செல்லமாக தன் மகளை வாய்விட்டு திட்ட, அவனோ மலர்ந்து சிரித்தான்.

“இந்த கருவாச்சி சொல்வதைப்போல ரொம்பவும் தான் படுத்திவிட்டாள் என் இளவரசி...” என்று உள்ளுக்குள் சிரித்துக்கொண்டவனின் நினைவுகள், மீண்டும் அந்த நாளை தொட்டு நின்றது.

*****

ன்று பிரசவ வலியால் துடித்தவளை லேபர் வார்டுக்கு அனுப்பிவிட்டு,  மயங்கி சரிந்தவன் தான்.  

உடனே அங்கிருந்த நர்ஸ் ஓடி வந்து பார்த்து, பின் அருகில் இருந்த அறையில் அவனையும் அட்மிட் பண்ணி ட்ரிப்ஸ் ஐ போட்டனர்.

ஆனாலும் மயக்கத்தில் இருந்தவன் அதன் பின் மருத்துவர் வந்து என்னென்னவோ பண்ணியும் அவன் மயக்கம் தெளிந்து எழுந்திருக்கவே இல்லை

“மாமா....  என்னை பாரேன்.... “  என்று பூங்கொடியின் சத்தம் காதில்  கேட்டதும் தான் மெல்ல கண் விழித்தான்.  

அந்தளவுக்கு அவன் உடைந்து இருந்தான்.

உடலளவில் பலசாலியாக இருந்தாலும்,  மனதளவில் அவன் ரொம்பவும் மென்மையானவன் என்று அவன்  மயங்கி விழுந்ததிலேயே தெரிந்து போனது.

இப்பொழுதும் உடம்பில் அவனுக்கு எந்த குறையும் இல்லை. திடகாத்திரமாகத்தான் இருந்தான். ஆனால் அவனின் ஆழ்மனம் விழித்துக் கொள்ள பிடிக்காமல் உறங்கி கொண்டே இருந்தது.

அதனாலயே எத்தனை பாட்டில் சலைன் அவன் உடம்பில் இறக்கினாலும் , ஒரு பயனும் இல்லை. அவன் மயக்கத்தை விட்டு வெளியில் வரவே இல்லை.

*****

பூங்கொடிக்கு நார்மல் டெலிவரி ஆவது கஷ்டம் என்று சிசேரியன் பண்ண எல்லா பார்மாலிட்டிஸ்ம் முடித்து,   ஆப்பரேசன் தியேட்டருக்கு கொண்டு செல்ல இருக்க, அப்பொழுது லேபர் வார்டுக்குள் வந்த வயதான, அனுபவசாலியான  மூத்த மருத்துவர் கடைசி முயற்சியாக அவளின் வயிற்றை பிடித்து லேக்காக உருட்ட,  சில முயற்சிகளில்  கழுத்தை சுற்றியிருந்த கொடி விலகி,  குழந்தை நார்மலாகவே வெளி வந்து விட்டாள்.  

அப்பொழுதுதான் போன உயிர் திரும்பி வந்தது எல்லாருக்கும்

சற்று நேரத்தில் கண்விழித்த பூங்கொடி குழந்தையை பார்க்க வேண்டும் என்க,  அப்பொழுதுதான் குழந்தையை சுத்தம் செய்து  எடுத்து வந்த செவிலியர், அதை பூங்கொடியிடம் காட்ட, ஆர்வத்துடன் தன் குழந்தையை பார்த்தவள் கண்கள் பெரிதாக விரிந்தன.  

அவள் சாபம்  விட்டபடியே, அச்சு அசல் அவள்  கணவனைப்போன்று,   கருகருவென்று நிறத்தில் பொட்ட புள்ள பொறந்திருந்தாள்.  

“ஆஹான்... டேய் கருவாயா... நான் சாபம் விட்ட மாதிரியே தான் உனக்கு குட்டி கருவாச்சி பொறந்திருக்கா... “  என்று சிரித்துக் கொண்டாள் பூங்கொடி.  

குழந்தையைப் பார்த்ததும், வாஞ்சையுடன்  தூக்கி கொஞ்சும் தாயை போல் இல்லாமல், இப்படி சிரித்து வைக்கும் அவளை எல்லாரும் வித்தியாசமாக பார்த்து வைத்தனர்.  

அதற்குள்  குழந்தையை  வெளியே நின்று இருந்தவர்களிடம் காட்டுவதற்காக எடுத்துச் செல்ல,  அவள் கண்களோ அடுத்து  தன் கணவனைத்தான் தேடின.

அவள் விழித்துவிட்டால் என்றதும் முதல் ஆளாக தன்னை பார்க்க வந்து நிப்பான் என்று தன் கணவனை  ஆவலாக எதிர்பார்த்திருந்தாள்.  

ஆனால் அவனோ கொஞ்ச  நேரம் ஆகியும் உள்ளே வரவில்லை.  

அவளின் அப்பா அம்மா மட்டும் வேகமாக அறைக்கு உள்ளே ஓடி வந்தவர்கள், செத்து பிழைத்த தன் மகளின்  தலைகோதி அவளின் நலம் விசாரிக்க அவளுக்கோ திக்கென்றது.  

“அப்பா....  எங்கே அவர்...? ” என்று தவிப்புடன் கேட்க,  தன் மகளின் அப்பா என்ற விளிப்பை கேட்டதும் அப்படியே குளிர்ந்து போனார் தணிகாசலம்.  

ஒரு வருடமாக தன்னை அப்பா என்று அழைத்திராத தன் மகள்அப்பா என்று அழைக்கவும் அவர் உடலில் ஒவ்வொரு அணுவும் சிலிர்த்தது.

கண்களில் ஆனந்த கண்ணீர் வடிய,  அவளோ   அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.

தன் தந்தையிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போக, அருகில் நின்றிருந்த தன்  அம்மா வை பார்த்தவள்

“மா... நீயாவது சொல்லேன்... உங்க மாப்பிள்ளை எங்க? “  என்று தன் அம்மாவை பார்த்து கேட்க, சிலம்பாய்க்கும் உடல் சிலிர்த்ததுதான்.

ஆனாலும் தன் கணவனைப்போல கண்ணீர் வடிக்காமல்,  சுதாரித்துக்கொண்டு மெல்ல புன்னகைத்தவர்,

“பாப்பாவுக்கு ட்ரெஸ் எல்லாம் வாங்கி  வர, வெளியில கடைக்கு போயிருக்கார் டி....” .என்று சமாளிக்கும்பொழுதே தன் மாப்பிள்ளையின் நிலை கண் முன்னே வர, அவர் கண்கள் கலங்கியது.  

தன் அன்னையின் கண்கள் கலங்குவதை கண்டு,  ஏதோ விஷயம் பெருசு என்று கண்டு கொண்டாள் பெண்.

“மா... இப்ப உண்மையை சொல்லப் போறியா இல்லையா?  அப்பா நீயாவது சொல்லேன்...  எங்க என் புருஷன்? “  என்று அந்த மருத்துவமனையே  அதிரும்படி கத்தினாள் பூங்கொடி.

இதற்கு மேல் அவளை சமாளிக்க முடியாமல் தடுமாறியவர்கள்

“வந்து....  மாப்பிள்ளைக்கு... மாப்பிள்ளை  கொஞ்சம் மயக்கம் ஆயிட்டார் டி.  பக்கத்துலதான் குளுக்கோஸ் இறங்கி கிட்டு இருக்கு... “  என்று சொல்ல, அதைக்கேட்டு  அதிர்ந்து போனாள் பூங்கொடி.  

“மா...மா... “  என்று மீண்டும் மருத்துவமனை அதிர கத்தியவள் , அடுத்த கணம், இப்பொழுதே  அவனை பார்க்க வேண்டும் என்று அடம்பிடித்தாள்.

“பாப்பா.... நீ பச்ச உடம்புக்காரி... இப்பதான் செத்துப் பிழைச்சு  வந்திருக்க.  அதுக்குள்ள உடம்பை வருத்திக்காத... மாப்பிள்ளைக்கு ஒன்னுமில்ல டா...  லேசான மயக்கம் தான்.  சீக்கிரம் சரியாய்டுவார்... உன்னை பார்க்க ஓடி வந்து விடுவார்...”  என்று  சமாதானம் சொல்ல,  அவளோ எதையும் கேட்க மறுத்துவிட்டாள்.  

“என் புருஷனை நான் இப்பவே பார்க்கணும்... என்னை அங்க கூட்டிகிட்டு போங்க... “ என்று  அடம்பிடிக்க,  அதற்குமேல் அவளை  சமாளிக்க முடியாமல்,  ஸ்ட்ரெச்சரில் வைத்தபடியே ராசய்யா இருந்த அறைக்குள் அழைத்து வந்தனர் செவிலியர்.  

அவனின் ஆறடி உயரத்திற்கும்,  கட்டுமஸ்தான தேகத்திற்கும்,  அந்த சிறிய படுக்கையில், கால் வெளியில் நீட்டியபடி,  கண்மூடி அசைவற்று கிடந்தவனை  கண்டு பூங்கொடியின்   இதயம் ஒரு கணம் நின்று துடித்தது.  

அவனின் அருகில் சென்றவள்,

“மாமா...... “  என்று  வெளிவராத குரலில் அழைக்க,  அவனிடம் எந்த அசைவும் இல்லை.  

அவ்வளவுதான்....  பயந்து போனவள் அடுத்த நொடி, இடம் பொருள் மறந்து

“மாமா.......... “  என்று சத்தமாக கத்திவிட,  அவளின் அந்த மாமா என்ற அழைப்பு, அவனின்  ஆழ்மனம் வரை சென்று,  தீண்ட அப்பொழுதுதான் தன் மயக்கத்தில் இருந்து திடுக்கிட்டு விழித்தது அவன் மனம்.

அடுத்து அவன் மனையாளை லேபர் வார்டுக்குள் விட்டது நினைவு வர, வேகமாக கண் விழித்தான் ராசய்யா.  

கண் விழித்தவன்  முதலில் தேடியது தன்னவளைத்தான்.  

ஆனால் எதிரில் கண்ணீரோடு சிலம்பாயி நின்று  இருக்க,  அவன் இதயமும் ஒரு நொடி நின்று துடித்தது.  

தன்னவளுக்கு என்னவோ ஆகிவிட்டது என்று பதறியவன் வேகமாக எழ முயல,  உடனே நார்ஸ் ஓடிவந்து அவனை தடுத்து நிறுத்தியவள், அவனின் தவிப்பை புரிந்தவளாய்,  

“உங்க பொண்டாட்டிக்கு ஒன்னும் ஆகல சார்...  பக்கத்துல தான் இருக்காங்க. அங்க பாருங்க...”  என்று பக்கவாட்டில் கண் காட்ட,  அப்பொழுதுதான் பக்கவாட்டில் திரும்பி பார்த்தான் ராசய்யா.  

அங்கே கண்ணீரோடு ஸ்ட்ரெச்சரில் படுத்தவாறு அவனையே காதலோடு பார்த்துக் கொண்டிருந்தவளைக்  கண்டதும் தான் போன உயிர் திரும்பி வந்தது அவனுக்கு.

தன் கையிலிருந்த ட்ரிப்ஸ் இறங்கிக் கொண்டிருந்த ட்யூப் ஐ    எல்லாம் பிடுங்கி எறிந்தவன், வேகமாக படுக்கையில் இருந்து எழுந்து பாய்ந்து  சென்று, ஸ்ட்ரெச்சரில் படுத்து இருந்தவளின் தலையை  தூக்கி தன் மார்போடு சேர்த்து அணைத்து கொண்டவன்,  

அடுத்த நொடி அவள்  முகமெங்கும் முத்த மழை பொழிந்தான்.  

காமம் இல்லாத அன்பும், காதலும், தவிப்புமான அவன் முத்தம் மற்றவர்களுக்கு ருவருப்பை கூட்டவில்லை.

மாறாக  அவர்களின் அன்பை, காதலை அன்னியோன்யத்தை  கண்டு ஆச்சரியம் கலந்த ஆனந்த கண்ணீர் வழிந்தது.

அவளின் உடல் நலனை மட்டும் தான் அவன் அக்கறையோடு விசாரித்தான்.

மறந்தும் தன் குழந்தையை பற்றி அவன் கேட்கவேயில்லை.    

******

தன் பிறகு எல்லாரும் சகஜ நிலைக்கு திரும்பி இருக்க, பூங்கொடியை இப்பொழுது தனி அறைக்கு அழைத்து வந்திருந்தனர்.

அவனுக்கும்  முழுவதுமாக தெளிந்து விட  அவளை அறைக்கு அழைத்துச் செல்ல அவனும் அவள் கூடவே சென்றான்.

பெட்டில் படுக்க வைத்து,  அவளுக்கு ட்ரிப்ஸ் போட்டு விட, அந்த படுக்கையின் ஓரமாக அமர்ந்து கொண்டு,  அவள் தலையை ஆதரவாக வருடி கொடுத்துக்  கொண்டிருந்தான்.  

இன்னொரு கரமோ அவள் கையை அழுத்தி பிடித்துக் கொண்டே இருக்க, தன்   வேதனையை உள்வாங்கிக் கொண்டிருந்தான்.

என்னதான் தனக்கு புள்ள வேண்டாம் என்று சொல்லி விட்டாலும், அது அவனின் உயிரில் ஜனித்த உயிரல்லவா? அதுவும் அவன் அம்மாவே வந்து பிறப்பாள் என்று பூங்கொடியின் ஆயா சொன்னதில் இருந்து அவனையும் அறியாமல் அவன் உள்ளே சின்ன ஆர்வம்..!

பூங்கொடியிடம் நேரடியாக குழந்தை மீது பற்றில்லை என்று காட்டிக் கொண்டாலும், அவள் உறங்கியதும் அவள் வயிற்றை தொட்டு பார்த்து தன் குழந்தையின் அசைவில் பூரித்து சிலாகித்து போவான்.

அப்படிப்பட்ட குழந்தை இப்பொழுது இல்லை எனும்பொழுது அவன் நெஞ்சை அடைத்தது.

வேதனையோடு கண்களை அழுந்த மூடிக்கொண்டான் ராசய்யா.   

தன் மனைவி நன்றாக இருக்கிறாள்,  என்றதும் இப்பொழுது தன் குழந்தையை நினைத்து வேதனை கொள்கிறான்  என்று புரிந்தது பூங்கொடிக்கு.  

அவன் தோளை மெல்ல பற்றியவள்,  அவனை பார்த்து புன்னகைத்து  கண்ணால் ஜாடை காட்டினாள்.

தலையை குனிந்து இருந்தவன்  நிமிர்ந்து அவளை  பார்க்கவும்,  அவள் ஜாடை காட்டிய  பக்கம் பார்க்க, அங்கே பூத்துண்டால்  சுற்றபட்டு இருந்த குட்டி தேவதையை அவன் முன்னே நீட்டினார் சிலம்பாயி .

அதைக் கண்டதும் அவன் கண்கள் சந்தோசத்தில் பெரிதாக விரிந்தன.

தன் கண்ணை கசக்கி கொண்டு மீண்டும் உற்றுப் பார்த்தான்.  

அந்த குட்டி தேவதையும் பிறந்ததில் இருந்து அதுவரை கண் முழிக்காமல் இருந்தவள், தன் தந்தையின் அருகில்  வந்ததும், மெல்ல கண் விழித்தாள். 

தன் நாக்கை சுழற்றியபடி,  கை கால்களை அசைத்து, உடம்பை வளைத்து பசியாற தன் தாயை தேடிக் கொண்டிருந்தாள்.  

அதை கண்டவனுக்கு நம்பவே முடியவில்லை.  

கை நடுக்கத்துடன் அவளை வாங்கி,  கேள்வியோடு பூங்கொடியை பார்க்க, அவளும் பெரிதாக புன்னகைத்து

“நான்தான் சென்னேன் இல்ல மாமா...என்னால  குழந்தை பெத்துக்க முடியும்னு. இப்ப பாத்திங்களா...  எந்த சேதாரமும் இல்லாமல் உன் புள்ளைய பெத்துக் கொடுத்துட்டேன்... “ என்று  மலர்ந்து சிரித்தாள்

“அப்புறம் சொல்ல மறந்துட்டனே... நான் சவால் விட்டமாதிரி நான் ஜெயிச்சுட்டேன்.  நல்லா உத்துப் பாருங்க. அச்சு அசல் உங்கள மாதிரியே  குட்டி கருவாச்சிதான் வந்து பிறந்து இருக்கா...” என்று  கண்சிமிட்டி சிரிக்க,  அவனுக்கோ கண்களில்  ஆனந்த கண்ணீர் பொழிந்தது.

இதுவரை தொட்டு கூட பார்த்திராத தன் மகளை  முதன்முறையாக தொட்டு தடவி பார்த்தவன்,  ஆசையோடு அவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.  

அவளுக்கு வலிக்காமல் மிருதுவாய் அந்த பட்டு குட்டியின் நெற்றியில் மெல்ல முத்தமிட்டான்.

அவன் முகத்திலோ அப்படி ஒரு பெருமை...பூரிப்பு... கர்வம்... என அத்தனை உணர்வுகளும் பொங்கி பெருகின...

“என் மகள்... என் இளவரசி... என் தேவதை... என் மகாலட்சுமி.... என் ஆத்தா... “என்று உள்ளுக்குள் சொல்லி பூரித்து கொண்டான்...

****

ந்த  குழந்தையை வேண்டாம் என்று சொல்லி கலைத்துவிட சொன்னானோ,   அந்த குழந்தை பூமிக்கு வந்த பிறகு,  அவன் கால் தரையில்  நிக்கவில்லை.  

எப்பொழுதும் தன் மகளை அவனே தான் தூக்கி வைத்துக் கொண்டான்.  

பத்து புள்ளைகளை  பெற்றவன் போல,  மிக இயல்பாக அந்த குட்டியை  தூக்கி கொள்வதும், கவனமாக கையாள்வதும், அவளுக்கு வேண்டியதை பார்த்தும் பார்த்தும் செய்தான்.

பூங்கொடிக்கு கூட சில நேரம் தூக்க தெரியாமல் அழுத்தி பிடித்து விட்டால், அந்த குட்டியோ வீல் என்று கத்தி வைப்பாள்.

அவ்வளவுதான்...ராசய்யா ஓடி வந்து தன் மனைவி கையில் இருக்கும் புள்ளையை புடுங்கி கொண்டு அவளை திட்டுவான்.

குழந்தையை பெற்றவளோ இரவில் நன்றாக குறட்டை விட்டுத் தூங்க,  ராசய்யாதான்  பொட்டு    தூக்கமில்லாமல் தன் மகளை பார்த்துக் கொண்டான்.

தன் மகள் லேசாக சிணுங்கினால் கூட, உடனே விலுக்கென்று எழுந்து பிள்ளையை தொட்டு பார்ப்பான்.

கிராமங்களில் டைப்பர் எல்லாம் புழக்கத்தில் இல்லாத காலம் அது.

ஒன்னுக்கு போய்,  துணி நனைந்திருந்தால்,  கொஞ்சமும் முகம் சுளிக்காமல் குழந்தையை அள்ளிக்கொண்டு,  அதன் உடலில் இருந்த ஈரத்தை துடைத்து விட்டு வேற ஒரு காட்டன் துணியை சுற்றி   நனைந்திருந்த தொட்டிலை சுற்றி நனையாத பாகத்தை  கீழ கொண்டு வந்து, பிள்ளையை போட்டு லேசாக ஆட்டி விடுவான்.

சிலநேரம் உறங்காமல் அடம் பிடித்தால்,  தலை கூட நிக்காத நிலையிலும் தன் கையை அவளின் தலைக்கு முட்டு கொடுத்து,  தன் தோள் மீது போட்டு பிடித்துக் கொண்டு, காலாற நடந்தவாறு தூங்க வைப்பான்.

இப்படியாக எந்த மகளை வேண்டாம் என்று மறுத்தானோ,  அந்த மகள் மீது உயிராகி போனான் அந்த தாயுமானவன்.

(இன்னும் இரண்டு அத்தியாயத்துடன் இந்த நாவல் முடிவடையும்..!) 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!