தேடும் கண் பார்வை தவிக்க-14
அத்தியாயம்-14
ஒரு நாள் முகம்
பார்த்து தலை வாரி கொண்டிருக்க, அப்பொழுது தான் அவன் முகத்தை உற்று
பார்த்தான்..
மூக்குக்கு கீழ
முடி வளர ஆரம்பித்து கோடாக வளர்ந்திருந்தது... அதை கண்டதும் தான் அவனுக்கு மீசை
வந்திருப்பது புரிய அவனுக்கு வெட்கமாகவும் பெருமையாக இருந்தது..
அவன் அப்பாவை
போல மீசையை நீவி விட்டு கொண்டு கண்ணாடியில் பார்த்து சிரித்தான்...
தன் மீசையை
பார்த்து வெட்கபட்டு கொண்டு அடுத்த ஒரு வாரம் தன் அத்தை மகளை பார்க்க செல்லவில்லை
நளன்..
தமயந்தியோ அவனை
காணாமல் அதுவும் தினமும் அவன் வாங்கி வரும் சாக்லெட் கிடைக்காமல் போக அவன் வரும்
வழியையே பார்த்து கொண்டு ஏமாந்து போனாள்..
அந்த வார
இறுதியில் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவளாகவே தன் அன்னையிடம் சென்று
“அம்மா... நான்
மாமா வூட்டுக்கு போய்ட்டு வரவா? “ என்று ரகசியமாக கேட்க அதை கேட்டு
தங்கத்திற்கு மனம் குளிர்ந்து போனது...
உடனே தன் அண்ணன்
மகனுக்கு பிடித்த பக்கோடா மற்றும் இனிப்பு போண்டா என்று செய்து டப்பாவில் போட்டு
கொடுத்து
“தமா...
அப்பத்தா தூங்கி எழுந்துக்கறதுக்கு முன்னாடி போய்ட்டு வந்துடு டீ...” என்று
ரகசியமாக சொல்லி தன் மகளை அனுப்பி வைத்தாள்..
அவளும்
சரியென்று தலையசைத்து குதித்தபடி பையை கையில் பிடித்து ஆட்டியபடி சென்றாள்..
தன் மாமா வீட்டை
அடைந்ததும் கேட்டை திறந்து கொண்டு அந்த காரை போட்டிருந்த நடைபாதையில் ஒற்றை காலில் நொண்டி அடித்த படி அத்த.....
என்று ராகமாக இழுத்தவாறு உள்ளே சென்றாள்..
அங்கிருந்த
செடிகளுக்கு நீர் பாய்ச்சி கொண்டிருந்த நளன் அவளை கண்டதும் அந்த பைப் ஐ அப்படியே
போட்டுவிட்டு வீட்டுக்குள் ஓடிவிட்டான்..
அவன் உள்ளே
ஓடுவதை கண்டு கொண்டவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது..
“எப்பவும் அவள்
வந்த உடனே எங்கிருந்தாலும் ஓடி வந்து அவள் ஜடையை பிடித்து இழுத்து வம்பு
செய்வான்.. இன்று என்னை கண்டதும் விழுந்தடித்து ஓடறானே...!! ”
என்று யோசித்தவாறு
வீட்டுக்குள் சென்றவள் தன் அத்தை மற்றும் ஆயாவிடம் கொஞ்சி விட்டு அவள் கொண்டு
வந்ததை எல்லாம் கொடுத்தவள் கண்கள் அந்த வீட்டை சுற்றி வட்டமிட்டன...
“என்னடி
மருமவளே... யாரை தேடற? “ என்று சிரித்தாள் கண்ணம்மா...
“நான் யாரையும்
தேடலையே....!! “ என்று கையை விரித்தவள்
ஒவ்வொரு அறையாக சென்று எட்டி எட்டி பார்த்து விட்டு வந்தாள்..
கண்ணம்மாவும்
அவள் யாரை தேடுகிறாள் என்று புரிந்து கொண்டு உள்ளுக்குள் சிரித்து கொண்டே அவளுக்கு
பிடித்த அல்வாவை கிண்ட ஆரம்பித்தார்..
வீடெல்லாம் தேடி
முடித்தவள் அதற்கு மேல் தேட முடியாமல் நேராக தன் அத்தையிடன் சென்றவள்
“அத்த....
வந்து.... எங்க மாமா வ காணோம்..? “ என்றாள் இழுத்தவாறு..
அவள் யாரை
கேட்கிறாள் என்று தெரிந்தாலும்
உள்ளுக்குள் சிரித்து கொண்டு
“மாமா...
வயலுக்கு போய்ருக்கார் டா.... “ என்று நமட்டு சிரிப்பை சிரித்தார்...
“நான் பெரிய
மாமா வ கேட்கல... நீ பெத்து வச்சிருக்கியே ஒரு ஒட்டட குச்சி... அந்த நல்லி எலும்பு
நளன் மாமா... அவன கேட்கறேன்...” என்று இடுப்பில் கை வைத்து முறைத்தாள்...
“அடிங்க... என் மவன்
ஒட்டட குச்சியா? நல்லி எலும்பா?
இப்ப பார் டீ அவன் எம்புட்டு கம்பீரமா திடகாத்திரமா இருக்கானு..சினிமா ஆக்டரு
கணக்கா இல்ல இருக்கான்...
நீதான் வளராம
குட்ட வாத்தா நின்னுகிட்டிருக்க... “ என்று தன் மருமகளின் காதை பிடித்து செல்லமாக
திருகினார் கண்ணம்மா...
“ஐயோ வலிக்குது
விடுத்த.. எப்ப பார் உனக்கு என் காதும் உன் மவனுக்கு என் ஜடையும் தான் சிக்குது..
“ என்று முறைத்து சிரித்தாள்..
கண்ணம்மாவும்
சிரித்த படி அவள் காதில் இருந்து கையை எடுத்தவள்
“சரி... உன்
நளன் மாமனுக்கு என்ன வச்சிருக்க? நானும் பார்த்துகிட்டிருக்கேன்..
வந்ததில் இருந்து அவனையே தேடி கிட்டிருக்க? “ என்று
சிரித்தார்..
“ஹ்ம்ம்ம்
அவனுக்கெல்லாம் ஒன்னும் ஸ்பெஷல் எல்லாம் இல்லத்த.. அவன் தான் எனக்கு
கொடுக்கணும்... ஒரு வாரமா என்ன பார்க்கவே வரல.. சாக்லெட்ம் வாங்கி தரல..
அதான் நேர்ல பார்த்து
நல்லா திட்டிட்டு போலாம்னு வந்தேன்.. என்ன பார்த்த உடனே ஓடிப் போய்
ஒளிஞ்சுகிட்டான்..பயந்தாங்கொள்ளி... எங்க அத்த ஒளிஞ்சிருக்கான்? “ என்று ரகசியமாக தன் அத்தையிடம் கேட்டாள்..
“சரி... நான்
அவன காட்டி கொடுத்தா நீ எனக்கு என்ன தருவ? “ என்று குனிந்து ரகசியமாக கேட்டார் கண்ணம்மா...
அவளும் எக்கி
தன் அத்தையின் கன்னத்தில் முத்தமிட்டவள்
“இப்படி முத்தம்
தருவேன்... இப்ப சொல்லு த்த.. “ என்று கிளுக்கி சிரிக்க,
கண்ணம்மாவும் அந்த பெண் புள்ளையின் எச்சில் முத்தத்தில் உருகி போனவள் குனிந்து
நளன் ஒளிந்து இருக்கும் இடத்தை ரகசியமாக சொன்னாள்...
“ஓ... அங்க போய் ஒளிஞ்சுகிட்டானா? அதான் என்னால கண்டுபுடிக்க முடிய.. தேங்க்ஸ் அத்த.... “ என்று
மீண்டும் கண்ணம்மாவை குனிய வைத்து அவள்
கன்னத்தில் முத்தமிட்டு சிட்டாக வீட்டின் பின்பக்கம் ஓடினாள்...
வீட்டின்
பின்புறம் ஒரு பெரிய வேப்ப மரம் இருந்தது..
அதன் அடியில் ஒரு
பசு மாடு கட்டி இருக்க அது அங்கு
போட்டிருந்த புல்லை ரசித்து சாப்பிட்டு கொண்டிருந்தது...
தமயந்தியும்
பயப்படாமல் அந்த மரத்தின் அடியில் சென்று நிற்க, அந்த மாடு அவளை பார்த்து சந்தோஷத்தில் தன் தலையை இருபக்கமும்
ஆட்டியது..
அதன் கழுத்தில்
மாட்டியிருந்த மணி குலுங்கி ஒலிக்க, அதன் சந்தோஷத்தை கண்டதும் அவளும்
சிரித்தவாறு
“ஹே பொன்னி..
நல்லா இருக்கியா? என் அத்த உன்ன நல்லா பாத்துக்கிடுதா? “ என்று கொஞ்சியவள் அதன் தலையை தடவி கொடுத்து அதன் நெற்றியில்
முத்தமிட்டவள் பின் மேல அண்ணாந்து பார்த்து
"டேய்..
பயந்தாங்கொள்ளி மாமா...நான் உன்ன கண்டுபுடிச்சிட்டேன்... கீழ இறங்கி வாடா ...
" என்று சிரித்தபடி கத்த, அடுத்த நிமிடம் ஒரு மரத்தின் கிளையின்
பின்னால் ஒளிந்திருந்த நளன் மேலிருந்து
அவன் முன்னால் குதித்து நின்றான் அசட்டு சிரிப்புடன்..
அவளும்
இடிப்பில் கை வைத்து முறைத்தவள்
"டேய்
ஒட்டடகுச்சி மாமா... எதுக்கு என்ன பார்த்து பயந்து ஓடுன? " என்று முறைக்க
"ஹோய்
பொண்டாட்டி.. நான் ஒன்னும் உன்ன பார்த்து ஓடி ஒளியல... நீ என்ன, இந்த மாமன தேடி எப்படி
எல்லாம் அலயறனு பார்க்கலாம்னுதான் ஒளிஞ்சுகிட்டேன்..
சும்மா சொல்லகூடாது..
என்னை காணாம தேடும் கண் பார்வை தவிக்க னு ரொம்பவும் தேடித்தான் அலஞ்ச டீ...அம்புட்டு
பாசமா உனக்கு என் மேல ? " என்று தன் டீசர்ட் ல் இருந்த காலரை
தூக்கிவிட்டு சிரித்து சமாளித்தான்..
“ஐய... ரொம்ப
உருகிடாத... பாசமும் இல்ல ஒரு மண்ணும் இல்ல.. ஆமா நீ ஏன் ஒரு வாரமா என்ன பார்க்க
வரல..? நீ
வராதனால எனக்கு திங்க சாக்லெட் ஏ இல்ல..
ஏன் டா மாமா
என்ன பார்க்க வரல...? " என்றவள் அவன் முகம் நோக்க உடனே தன் கையை
எடுத்து மூக்கின் கீழ வைத்து தன் அரும்பு மீசையை மறைத்து கொண்டான் நளன்..
அவன் எதையோ மறைக்கிறான் என்ற கண்டுகொண்ட தமயந்தி
“என்னடா மாமா மறைக்கிற? “ என்று எக்கி அவன் கையை விளக்க முயல அவனும் விடாமல் மீண்டும் தன் கையை வைத்து
மறைத்துக் கொண்டான்..
அவளோ அவன்
இடுப்பில் கிச் கிச் மூட்ட அவனும் சிரித்தபடி பின்புறம் திரும்பி நின்று கொண்டு
அவளுக்கு போக்கு காட்ட சிறிது நேரம் இருவரும் சீண்டி விளையாட இறுதியில் நளன் தனது
முகத்தில் இருந்த கையை எடுத்து இருக்க அங்க முளைத்திருந்த அரும்பு மீசையை கண்டதும்
தன் வாயில் கை வைத்த படி கெக்க பெக்க என்று சிரித்தாள் தமயந்தி..
அவள்
சிரிக்கவும் அவளை பார்த்து முறைத்தவன்
"ஹோய் ..
என்ன குட்டவாத்து.. எதுக்குடி சிரிக்கிற? " என்றான்
அவள் ஜடையை பிடித்து இழுத்து...
"ஹா ஹா ஹா
.. டேய் ஒட்டடகுச்சி மாமா... உனக்கெல்லாம் போய் மீச வந்திருச்சுடா..அவ்வளவு பெரிய
மனுஷன் ஆய்ட்டியா? நீ இன்னும் என் அத்த முந்தானைக்குள்ள ஒளிஞ்சுக்கற சின்ன பப்பா..
என்ன பார்த்து
பயந்து ஓடி ஒளியற பயந்தாங்கொள்ளி.. நீயெல்லாம் பெரிய மனுஷன் னு அந்த முட்டாள் மீசைக்கு
தெரியாம உனக்கு போய் முளச்சிருக்கே....
ஷேம் ஷேம்....
" என்று கிண்டல் அடித்து சிரித்தாள்...
“ஹோய் அரப்படி...
நானும் பெரிய மனுஷன் ஆய்ட்டேன் டீ.. உன்
அப்பன மாதிரி எனக்கும் பெரிய மீசை வரப் போகுது
பார்.. “ என்று அரும்பு மீசையை நீவி விட்டு கொண்டான்..
அதைக் கண்டவள் மீண்டும் வாயை பொத்திக் கொண்டு சிரித்தவள்
"டேய்
மாமா.. இந்த மீச வந்தனாலதான் என்ன பார்க்க வெட்கப்பட்டு என்ன பாக்காம மறஞ்சுக்கிட்டியா
?? “ என்று மீண்டும் கிளுக்கி சிரித்தாள்...
“ஐய.... அதெல்லாம்
ஒன்னும் இல்ல டி.. எனக்கு பரிச்சைக்கு படிக்கிறதுக்கு நிறைய இருந்துச்சு.. அதான் வரல...”
என்று எதையோ சொல்லி சமாளித்தான்..
“ஹ்ம்ம்ம் நம்பிட்டேன்....
நம்பிட்டேன்.... சரி எங்க ஒவ்வொரு நாளும் எனக்கு கொடுக்க வேண்டிய
சாக்லேட்? எல்லாத்தையும் சேர்த்து உன்கிட்ட இருந்து வசூல்
பண்ணிகிட்டு போகத்தான் வந்தேன்... “ என்று
இடுப்பில் கை வைத்து முறைத்தாள்..
“அதான
பார்த்தேன்... கன்னியம்மா பேத்தி னு
கரெக்டா காமிச்சிட்ட டீ.. வசூல் பண்றதெலலம் உன் அப்பத்தாவுக்கு கை வந்த
கலையாச்சே..
நான் கூட என்ன
பார்க்கத்தான் ஓடோடி வந்தியோனு நினச்சிட்டேன்.. சரி சரி வா.. எல்லாம் வாங்கி
வச்சிருக்கேன்..” என்று வீட்டை நோக்கி நடக்க, எட்டி
அவன் கை பிடித்து நிறுத்தியவள்
"டேய்
மாமா... இந்த மீசை உனக்கு அழகா இருக்கு... ஒரே ஒரு முடி மட்டும் புடுங்கிக்கவா?
" என்றாள் ஆர்வமாக...
அவள் கண்களில்
மின்னிய பளபளப்பையும் ஆர்வத்தையும்
கண்டவன் மறுத்து சொல்லாமல் அவள் முன்னே குனிந்து நிற்க, அவளோ எக்கி அவன் மீசையில் இருந்த சிறு முடியை பிடித்து இழுத்து அது
கையில் வந்தவுடன் குழந்தையாக ஆர்பரித்தாள்..
அவளின் அந்த
மலர்ந்த சிரிப்பையே ரசித்து தனக்குள் பத்திரபடுத்தி கொண்டான் நளன்...
அவன் வளர்ந்த
பிறகும் தன் மீசையை பார்க்கும் பொழுதெல்லாம் அவள் அன்று பிடித்து இழுத்தது நினைவு
வர, அவன் உதட்டில் தானாக புன்னகை அரும்பும்...
தமயந்தி ஆறாம்
வகுப்புக்கு அவன் படிக்கும் பள்ளிக்கே
வரப் போகிறாள் என்றதும் துள்ளி குதித்தான் நளன்...
அவன் ஆறாம்
வகுப்பில் சேரும் பொழுது அவன் தந்தை சொல்லியது நினைவு வந்தது..
தமயந்தியும்
அவன் உடன் சைக்கிளில் வருவாள் என்று சொல்லி இருக்க அது அப்படியே மனதில் பதிந்து
விட,
“இனிமேல் அவள்
தினமும் என்னுடன் சைக்கிளில் வரப் போகிறாள்.. “
என்று துள்ளி குதித்தான்..
அவன் ஆசைக்கு
ஆப்பு வைத்தார் கன்னியம்மா...
தன் பேத்தியை
நளன் உடன் அனுப்ப மறுத்துவிட்டார்...
“இப்ப இரண்டு
பேரும் சின்ன புள்ளைவ கிடையாது..அந்த நளன்
பய கொட்டகுச்சி மாதிரி யம்மா வளத்தி வளர்ந்துபுட்டான்.. என்னதான் அத்த மவ மாமன்
மவன் னு ஒன்னா சுத்தினாலும் ஊர்ல நாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க..
அதெல்லாம் அவ
தனியாவே சைக்கிள் ல போய்ட்டு வரட்டும்.. அதான் அவ கூட்டாளி புள்ளைவளும் சைக்கிள் ல
வராளுங்க இல்ல.. அவளுங்க கூடவே என்ற பேத்தியும் போய்ட்டு வரட்டும்.. “ என்று தன் மகனிடம் சொல்லி அவளுக்கு தனியாக
சைக்கிளை வாங்கி கொடுக்க சொல்லிவிட்டார் கன்னியம்மா...
அதை கேட்டு
தங்கத்திற்கு பத்தி கொண்டு வந்தது.. வழக்கம் போல சிங்காரம் பார்வையால் கெஞ்சி அவளை
அடக்கி விட்டான்..
முதல் ஒரு வாரம்
சிங்காரம் தன் மகளை பள்ளியில் கொண்டு வந்து விட்டுவிட்டு மாலை வந்து கூட்டி
சென்றான்...
நளன் தன்
மாமனிடம் அவளை தானே அழைத்து வருவதாக சொல்ல,
"இல்லடா
மாப்ள.. அது வசதிப்படாது.. நானும் சாயந்தரம் வேலை இல்லாம வெட்டியாதான் இருக்கேன்..
இந்த ஒரு வாரம் மட்டும்தான்.. அடுத்த வாரத்துல இருந்து தமாகுட்டி அவ கூட்டாளி
புள்ளைங்க கூட சைக்கிள் லயே போய்க்கிறேன் னு சொல்லிடுச்சு..
இந்த வருஷம்
உனக்கு முக்கியமான வருசம்.. நீ கவனமா படி... " என்று அவன் தலையில் கை வைத்து ஆட்டி சென்றான்...
அதை
கேட்டவனுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது...
வீட்டில் வந்து
தன் அன்னையிடம் புலம்பி தீர்த்தான்... அதை கேட்ட கண்ணம்மாவுக்கும் கஷ்டமாக
இருந்தது.. இதெல்லாம் அந்த பெரியவர்தான் தடுத்திருப்பார் என புரிய,
"கண்ணு...
நீ இப்ப பத்து படிக்கிற.. உனக்கு ஸ்பெஷல் க்ளாஸ் எல்லாம் வப்பாங்க... அதனால நீ
எப்படி தமா குட்டிய இருந்து கூட்டிகிட்டு வரமுடியும்.?
சில நேரம் நீ
காத்தால முன்னாடியே போக வேண்டி இருக்கும்.. அவளையும் நீ கூட்டிகிட்டு போனா அவ
ஒவ்வொன்னுக்கும் உன்னை எதிர்பார்த்து இருக்கோணும்..
அவளும் நல்லாதான
சைக்கிள் ஓட்டறா... அதனால அவ சைக்கிள் லயே போய்ட்டு வரட்டும்... அதான் நீ
பள்ளிகூடத்துல அவள பார்க்கற இல்ல.. பொறவு என்ன?” என்று தன் மகனுக்கு ஆறுதல் சொல்ல அதில் கொஞ்சம்
சமாதானம் அடைந்தான் நளன்...
பள்ளியில் உணவு
இடைவேளையின் பொழுது அவளை பார்க்க வந்து விடுவான்...மரத்தடியில் இருவரும்
ஒன்றாக சேர்ந்து அமர்ந்து சாப்பிடுவர்..
அந்த ஒரு மணி
நேரமே போதுமானதாக இருந்தது அவனுக்கு அவளை பார்த்து பேச அவளுடன் வம்பு இழுத்து
சிரிக்க..
அவர்கள்
இருவரும் அத்தை மகள் மாமன் மகன் என்றும் ஒருவர் மீது மற்றவர் பாசமாக இருப்பதும் அந்த
பள்ளியிலும் தெரிந்ததால் அவர்களை போல தங்களுக்கு இல்லையே என்று பொறாமையுடன்
பார்த்தனர் பலர்..
சிறுவயதில்
இருந்தே தன் மாமன் மகனுடன் வாயடித்து சுதந்திரமாக பழகும் தமயந்தி உயர்நிலை பள்ளிக்கு வந்ததும் இன்னும் நெருங்கி
பழக ஆரம்பித்தாள்..
இடைவேளை
நேரங்களில் எல்லாம் அவன் வகுப்புக்கு ஓடி வந்து பின் அவனுடனே சுற்றி
கொண்டிருப்பாள்...
அவள் படிப்பில்
ஏதாவது சந்தேகம் என்றாலும் அவனிடம் தான் வந்து
நின்றாள்..
மதிய உணவு
இடைவேளையின் பொழுது மரத்தடியில் அமர்ந்து கொண்டு இருவரும் தங்கள் கொண்டு வந்த
சாப்பாட்டை மாற்றி சாப்பிடுவர்..
தன் மருமகளுக்கு
பிடிக்கும் என்று கண்ணம்மா பார்த்து பார்த்து சமைத்து தருவார். தன் மருமகனுக்கு
பிடித்ததை தங்கம் செய்து கொடுக்க, இரண்டு பேரும் டிபன் பாக்சை மாற்றி
கொண்டு சாப்பிட்டு முடிப்பர்..
பின் அவளுக்கு
இருக்கும் சந்தேகங்களை விளக்குவான்... அதில் இருந்து மற்ற புது தோழிகளுடன்
ஒட்டாமல் கொஞ்சம் கொஞ்சமாக நளன் ஐ சார்ந்து இருக்க ஆரம்பித்தாள் தமயந்தி..
அந்த பள்ளியில்
படிப்புடன் சேர்த்து எக்ஸ்ட்ரா கர்ரிகுலர் ஆக்டிவிட்டிஸ் என்று ஒவ்வொரு மாணவனும்
தங்கள் திறமையை அவர்களுக்கு பிடித்த துறையில் வளர்த்து கொள்ள என்று சிறப்பு
பயிற்சிகள் இருந்தன..
பள்ளி
நேரத்திலயே வாரம் ஒரு நாள் அந்த வகுப்பு இருக்கும்..
தமயந்தி தோழிகள்
விளையாட்டு, நீச்சல் , ஓவியம்
வரைதல் என்று சேர்ந்திருக்க, அவளுக்கோ எல்லாவற்றிலும் ஆர்வமாக
இருந்தாள்.. எல்லாமே அவளுக்கு நன்றாக வரும். அதனால் எதில் சேர்ந்து கொள்வது என்று
குழப்பமாக இருக்க, நேராக நளன் இடம் வந்து நின்றாள்..
மதியம்
சாப்பிட்டு முடித்ததும் அவன் தோளில் உரிமையாக சாய்ந்து கொண்டு
“டேய் மாமா...
நான் என்ன கோர்ஸ் எடுக்கறது? “ என்று அவன் முகம் பார்த்தாள்..
அவனோ சற்று
யோசித்து விட்டு
“தயா... நீ வேணா
பரதநாட்டியம் கத்துக்கோயேன்... நான் டிவில பார்த்தேன்.. ஒரு அக்கா ஆடறப்போ அவ்வளவு
சூப்பரா இருந்தது.. உனக்கு அது நல்லாவே வரும்...
கூடவே மனசுக்கு
அமைதியும் கொடுக்குமாம்...
அதாவது
பின்னாளில் உனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கிறப்பயும் சந்தோஷமா இருக்கிறப்பயும் அந்த
மாதிரி பரதநாட்டியம் ஆடினா மனசு லேசாகிடுமாம்... அதனால அதையே கத்துக்க... “
என்று சிரித்தான்..
அவளும் அடுத்து
எதுவும் யோசிக்காமல்
“ஹ்ம்ம் சரிடா
மாமா... நீ சொன்னா சரியாதான் இருக்கும்.. “ என்று சிரித்தவாறு நாட்டிய வகுப்பில்
சேர்ந்து கொண்டு பயிற்சி பெற ஆரம்பித்தாள்..
அவள் எப்படி
ஆடுகிறாள் என்று பார்க்க ஆர்வமான நளன் ஒருநாள் மறைந்திருந்து அவள் பயிற்சி பெறும்பொழுது பார்க்க, அவள் அழகாக அபிநயம் பிடித்து பேசிக் ஸ்டெப்ஸ் ஆடுவதை கண்டதுமே
கிறங்கி போனான்..
அந்த சின்ன வயதில் அவளின் ஒவ்வொரு அசைவும் அவன்
இளமனசில் அப்படியே பதிந்து விட்டது..
எப்பயாவது தன்
வீட்டிற்கு வரும் நேரங்களில் அவளை ஆடச் சொல்லி அடம்பிடித்து ஆட வைத்து ரசித்து
பார்ப்பான்..
கண்ணம்மா, பாப்பாத்தி மற்றும்
தங்கராசுக்குமே அவளின் அந்த சிறு அடவுகளும் கண்டு பூரித்து போவர்.. அவர்களின்
பாராட்டு அவளுக்கு மேலும் உற்சாகத்தை கொடுக்க,
அந்த நாட்டியத்தை விருப்பத்தோடு கற்றுகொள்ள ஆரம்பித்தாள்..
ஆனால் அவள்
வீட்டில் அதை ஆடமாட்டாள்..
ஒரு நாள்
தங்கத்திற்கு ஆடி காமிக்க, அங்கு வந்து கன்னியம்மா
“இது என்ன
கூத்தாடிங்க ஆடறதையெல்லாம் என்ற பேத்தி ஆடறா... இதெல்லாம் நமக்கு ஒத்து வராது..
நம்ம வூட்ல இப்படி எல்லாம் ஆடப்படாது..
மத்தவங்க ஆடறதை
பார்த்து கை தட்டிட்டு காசை தூக்கி போடற பரம்பரை நம்ம பரம்பரை... “ என்று அவர் அந்த காலத்து தெருக்கூத்து என்று
எண்ணி அவள் ஆட தடா போட்டுவிட்டார்..
அதை கண்டு
தமயந்தி முகம் வாடிவிட்டது..
தங்கம் தான்
அவளை தேற்றி அவள் அப்பத்தாவுக்கு தெரியாமல்
அந்த நாட்டியத்தை தொடர்ந்து
கற்றுக் கொள்ள வைத்தாள்..
அவளுக்கு பிடித்த
பொழுது சலங்கையை எடுத்து கொண்டு அவள் மாமா வீட்டிற்கு சென்று அங்கு ஆடி
காட்டுவாள்..
கண்ணம்மாவும் அவளின் நாட்டியத்திற்கு மயங்கி போனார்.. அதை கண்டு தமயந்திக்கு பெருமையாக இருக்க துள்ளளுடன் வளைய வருவாள்..!
Comments
Post a Comment