தேடும் கண் பார்வை தவிக்க-2
அத்தியாயம்-2
பதினைந்து வருடங்களுக்கு முன்பு:
பொள்ளாச்சி
அருகில் உள்ள சிறிய கிராமம் அது.
பாரதிராஜா
படத்தில் காண்பிப்பதை போல எங்கு திரும்பினாலும் பச்சைப் பசேலென்று கண்ணுக்கு
குளிர்ச்சி தரும் நெல் வயல்கள்.. அந்த வயல்களில் ஓரத்தில் ஓங்கி வளர்ந்திருக்கும்
தென்னை மரங்கள்..
அதன் வழியாக
சென்றாலே அந்த வயல்களில் கொஞ்சி விளையாடிய தென்றல் ஆவலுடன் அங்கு வருபவர்களை நாடி
முத்தமிட்டுச் செல்லும் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் கிராமம்..
அந்த
கிராமத்தின் ஓரமாக இருந்தது அந்த பள்ளிக்கூடம்.. அந்த கிராமத்து பிள்ளைகளின்
அறியாமையை நீக்கி அறிவுக் கண்ணை திறந்து அவர்களையும் நாளைய வல்லுனர்களாக மாற்றி தர
காத்துக் கொண்டிருந்த இடம் அது..
எத்தனையோ பேர்
இந்த பள்ளிக்கூடத்தில் படித்து இன்று உலகின் பல மூலைகளிலும் வெவ்வேறு பணிகளிலும்
இந்தியாவின் பல இடங்களிலும் பணியாற்றி இந்த பள்ளியின் பெருமையையும் ஊரின்
பெருமையையும் நிலை நாட்டி வருகிறார்கள்..
அன்று மாலை மணி 3.30
ஐ தொட்டிருக்க அந்தப் பள்ளிக்கூடம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது..அந்த
பள்ளிக்கூடத்தின் நுழைவாயில் அருகிலிருந்த முதல் வகுப்பு அறையிலிருந்து மாணவர்கள்
நின்று கொண்டு அன்றைய பாடத்தை படித்து இல்லை
பாடிக் கொண்டிருந்தனர்..
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்…
என்று
உலகநாதரின் உலகநீதியை கோரசாக சொல்லிக் கொண்டிருந்தனர் அந்தச் சின்னஞ் சிறார்கள்..
எல்லாரும்
பாட்டை ராகமாக இழுத்து சொல்லி கொண்டு இருக்கும்பொழுதே சில வாண்டுகள் அருகில்
நின்றிருந்த பசங்களை காலால் நிமிண்டியும் கண் ஜாடை காட்டியும், முன்னால் நின்றிருந்த மாணவியின் ஜடையை பிடித்து இழுத்தும் குறும்பு செய்து தங்கள் சிரிப்பை அடக்கி கொண்டே
ஆசிரியரை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டே பாடத்தை பாடிக் கொண்டிருந்தனர்..
அதனை அடுத்த
அறையிலிருந்து மூன்றாம் வகுப்பு மாணவர்கள்
ஓரெண்டு ரெண்டு
ஈரெண்டு நாளு..
மூரெண்டு ஆறு
நால்ரெண்டு எட்டு..
என்று பெறுக்கல்
வாய்ப்பாட்டை பாட்டாக சொல்லிக் கொண்டிருந்தனர்..
அந்த வகுப்பு
மாணவர்கள் அனைவரையும் எழுந்து வரிசையாக நிற்க சொல்லி ஒரு மாணவன் அங்கு நின்றிருந்த
மாணவர்களுக்கு முன்னால் வந்து நின்று கொண்டு
அந்த வாய்ப்பாட்டை சொல்ல மற்ற
மாணவர்கள் அதை திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தனர்..
அருகில் இருந்த நாற்காலியில்
அமர்ந்து கொண்டு அதன் பக்கத்தில் இருந்த மேஜையில் கையை மடக்கி வைத்து அதன் மீது
தன் தலையை வைத்து அந்த வகுப்பு ஆசிரியர் உண்ட களைப்பில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்..
அவ்வபொழுது கண்
விழித்து மாணவர்கள் சரியாக வாய்ப்பாட்டை பாடுகிறார்களா என்று நோட்டம் விட்டவாறு மீண்டும்
தன் தூங்கற வேலையை கவனித்துக் கொண்டிருந்தார்..
அந்த வகுப்பை தாண்டி
கொஞ்சம் தொலைவு வர, அங்கே கடைசியாக இருந்த அறையில் ஐந்தாம்
வகுப்பு நடந்து கொண்டிருந்தது..
அந்த அறையின் உள்ளே
பள்ளியின் தலைமையாசிரியர் பாடம் நடத்திக்
கொண்டிருந்தார்.. வாழ்வியல் நெறி முறைகளையும்
ஒழுக்கத்தையும் பற்றி கதை சொல்லி விளக்கிக் கொண்டிருந்தார்..அதே போல ஒவ்வொரு
மாணவனுக்கும் தன்னம்பிக்கையும் வாழ்வில் குறிக்கோளையும் வகுத்து கொண்டு அதற்காக
பாடுபடவேண்டும் என்று வலியுறுத்தினார்...
அடுத்து
மாணவர்களைப் பார்த்து நீங்கள் பெரியவர்களாகி என்னவாக வேண்டும் என்று
எண்ணுகிறீர்கள் என்று கேள்வியை தொடுத்தார்..
வரிசையாக அமர்ந்திருந்த
ஒவ்வொரு மாணவனையும் எழுப்பி தனித்தனியாக நிற்க வைத்து அவர்களின் குறிக்கோள்
மற்றும் பெரியவன் ஆனால் என்னவாக வேண்டும் என்று மீண்டும் கேட்க, ஒவ்வொரு மாணவனும் எழுந்து இன்ஜினியராகவோ, டாக்டராகவோ, ஆசிரியராகவோ, வக்கீலாகவோ வேண்டும் என்று சொல்லிக் கொண்டே
வந்தனர்..
அடுத்ததாக
அமர்ந்திருந்த ஒல்லியான தேகத்தை கொண்ட அந்த சிறுவன் அவனது முறை வரவும் எழுந்து
நின்று கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு ஆசிரியருக்கு பணிந்த மாணவனாக தலைகுனிந்து நின்றான்..
உடனே அவனைப்
பார்த்தவர்
“டேய்.. நளா..நீ
சொல்லு.. நீ பெரியவன் ஆனதும் என்னவாகணும்னு
நினைக்கிற?" என்றார்..
அவனும்
யோசிக்காமல்
“நான் என் அத்தை
பொண்ணுக்கு புருஷன் ஆகணும் சார்..” என்றான் அவரை நேராக பார்த்து எந்த தயக்கமும் இல்லாமல்..
அதைக் கேட்டு
மற்ற மாணவர்கள் களுக் என்று கிளுக்கி சிரிக்க
உடனே அந்த ஆசிரியரும் தன் காதில் சரியாகத்தான் விழுந்ததா என்று சந்தேகமாக மீண்டும்
ஒரு முறை கேட்க அவனும் மீண்டும் அதே பதிலை சொன்னான்..
அதை கேட்டு அதிர்ந்து
போன தலைமையாசிரியர் அவர் கையிலிருந்த பிரம்பால் அவன் கால் முட்டிக்கு கீழே அடிக்க
ஆரம்பித்தார்..
“ஏன் டா !! முளைச்சு மூணு இலை விடல..அதுக்குள்ள உனக்கு
கல்யாணம் கேக்குதா கல்யாணம்.. “ என்று
விளாச ஆரம்பித்தார்..
உடனே தன்
கால்களை வேகமாக நகர்த்திகொண்டு அடி அவன் மீது
படாமல் துள்ளி குதித்து சமாளித்துக் கொண்டு அவர் அடிக்கும் பிரம்பு குச்சியை
கையில் பிடித்துக் கொண்டு
“சார் சார் சார்
இப்ப எதுக்கு சார் என்னை அடிக்கிறீங்க? “ என்றான் லேசாக முறைத்தவாறு..
“ஏன் டா.. நான்
கேட்ட கேள்விக்கு மற்றவர்கள் எல்லாம் எப்படி மணி மணியாட்டம் பதில் சொன்னானுங்க.. ஆனால் நீ மட்டும் என்ன உளறின? இனிமேல் அப்படி சொல்வியா? “ என்று மீண்டும் அடிக்க
ஆரம்பித்தார்..
உடனே அவருடைய பிரம்பை
திரும்பவும் பிடித்துக் கொண்டவன்
“சார்.. எங்க அப்பத்தா தான் சொல்லுச்சு நான் பெரியவன் ஆனதும் என் அத்த பொண்ண
கல்யாணம் பண்ணிக்கணும் அப்படின்னு.. நீங்கதான சொன்னீங்க பெரியவங்க சொல்ற பேச்சை
தட்டாமல் கேட்கணும்னு..
அதனாலதான்
எங்கப்பத்தா சொன்னத தட்டக்கூடாதுனு மனசுல பதிச்சு வச்சுகிட்டேன்.. நீங்க கேட்டதும்
என் மனசுல இருந்தத உங்க கிட்ட சொன்னேன்.. இதுல என்ன தப்பு இருக்கு சார்? “ என்று லேசாக முறைத்தான்..
அதை கேட்டு
அதிர்ந்து போன அந்த ஆசிரியர் அவனுக்கு
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சில நொடி முழித்து கொண்டிருந்தார். உடனே தன்னை சமாளித்துக் கொண்டவர்
“சரி சரி.. நாளைக்கு உன் அப்பனையும் உன் அப்பனை பெத்த
ஆத்தாவையும் என்னை வந்து பார்க்கச் சொல்.. “ என்று கோபமாக அவனை பார்த்து சொல்லி விட்டு அவனை
விட்டு நகர்ந்து சென்றார்..
“அவங்க எதுக்கு
சார்? அவங்களுக்கு பாடம் எடுக்க போறீங்களா? இந்த வயசுல அவங்க படிச்சு என்னத்த பண்ண போறாங்க? “ என்று தலை சரித்து குறும்பாக
சிரிக்க
“டேய்... பெரிய மனுஷா.. அதெல்லாம் உன்கிட்ட சொல்ல
முடியாது.. நீ ஒழுங்கா நாளைக்கு ரெண்டு பேரையும் கூட்டிட்டு பள்ளிக்கூடத்துக்கு
வா.. இல்லனா இன்னைக்கு விட்ட பாக்கி அடியும்
நாளைக்கு தொடர்வேணாக்கும்.. என்ன
புரிஞ்சுதா? “ என்று தன் கையில் இருந்த பிரம்பை ஆட்டி காட்டி மிரட்டினார்..
அவனும் உடனே
பயந்தவனாக
“ஹ்ம்ம்ம் புரிஞ்சுது
சார்... “ என்று வேகமாக இரண்டு பக்கமும் தன்
தலையை உருட்டினான்..
அப்பொழுது
பள்ளிக்கூடம் முடிந்ததற்கான அறிகுறியாக
வெளியில் மணியடிக்க உடனே அனைத்து மாணவர் முகத்திலும் 1000 வாட்ஸ் பல்பு எரிய, அவரவர் பாடப்புத்தகத்தையும் நோட்டையும் எடுத்து பைக்குள் திணித்துக் கொண்டு வாயிலையே
பார்த்தும் பின் ஆசிரியரின் முகத்தையும் மாறி மாறி பார்த்தனர்...
அவரிடம் இருந்து
வீட்டுக்கு செல்லுமாறு வரும் தலை அசைப்புக்காக
அவரையே ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருக்க, அந்த தலைமை
ஆசிரியரும் போனால் போகட்டும் என்று தலையசைக்க உடனே வில்லிலிருந்து பாய்ந்த
அம்புகளை போல அனைத்து மாணவர்களும் ஹோ... என்று
கத்தியவாறு வகுப்பறையை விட்டு பாய்ந்து வெளியே வேகமாக ஓடினர்..
அந்த ஒல்லிகுச்சி
பையனும் தன் மஞ்சள் பையை எடுத்து அவனுக்குப் பின்னால் தோளில் தொங்க விட்டு கொண்டு
வேகமாக அந்த அறையில் இருந்து வெளி வந்தவன் முதல் வகுப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தான்..அவனுக்கு
பின்னால் வந்த அவன் வகுப்பு மாணவன் ஒருவன் பின்னாலிருந்து அவனுடைய சட்டையை பிடித்து
இழுத்து அவனை நிறுத்தியவன்
"டேய்..
நல்லி எலும்பு.. வரியா… மாங்கா திருடிட்டு அப்படியே
புளியங்கா அடிக்க போலாம்.. " என்று
கண் சிமிட்டி சிரித்தான்...
அதைக் கண்டு
கடுப்பான அந்த பையன்
“டேய் குண்டா...என்
பேரு ஒன்னும் நல்லி எலும்பு இல்ல.. என்
பேரு நளன்..நள மஹாராஜா..” என்று மிடுக்காக
சொல்லி காலரை தூக்கி விட்டுக் கொண்டான்..
அதைக் கேட்டு
வாயில் கை வைத்து சிரித்தவன்
“நள மஹாராஜா
அவர்களே.. உன்ற பெயர் நீளமாக இருப்பதால் என்ற வாயில் வரமாட்டேங்குது.. அதனால் நான் மட்டும்
தங்களை நல்லி எலும்பு என்று அழைத்துக் கொள்கிறேன்.. அனுமதி தரவேண்டும்.. “
என்று வாயில்
கைவைத்து அடி பணிந்தவனாய் அவன் தலை
குனிந்து நின்று அவனை பார்த்து கிண்டலாக சிரிக்க அவனும் தன் வகுப்பு தோழனை பார்த்து
முறைத்து அவன் தலையில் ஒரு கொட்டு வைக்க வர இவன் அடிக்க வருவதை முன்கூட்டியே கண்டு
கொண்டவன் அவன் கைக்கு கிடைக்காமல் நழுவி
பின்னால் ஓடி விட்டான்...
அந்த
ஒல்லிகுச்சி மாணவனும் சிறிது தூரம் அவனை துரத்தி சென்றவன் பின் ஏதோ ஞாபகம் வந்தவனாக
தன் நண்பனை துரத்துவதை விட்டுவிட்டு
“டேய்
குண்டா...இன்னைக்கு நீ என்கிட்ட இருந்து தப்பிச்சுகிட்ட.. நாளைக்கு என் கிட்ட
மாட்டுவ இல்ல.. உனக்கு இருக்குடா... “ என்று சத்தமாக கத்திவிட்டு மீண்டும் எதிர் திசையில் திரும்பி முதல் வகுப்பை
நோக்கி ஓட ஆரம்பித்தான்..
அவன் முதல் வகுப்பை அடைந்ததும் ஆர்வமாக உள்ளே எட்டி பார்க்க அந்த அறை காலியாக இருக்க உடனே அவன்
முகம் வாடிப்போனது..
“சே.. எல்லாம்
அந்த குண்டனால் வந்தது.. அவன் மட்டும் என்
சட்டையை பிடித்து இழுத்து நிறுத்தாமல் இருந்திருந்தால் முன்னாடியே வந்திருப்பேன்..
“ என்று தன் தோழனை மனதுக்குள் திட்டிக் கொண்டே
அவசரமாக கண்களை சுழல விட்டான்..
நாலா பக்கமும்
சுற்றி திரிந்த அவன் பார்வையில் இருந்து
எதையோ தேடுகிறான் என்று புரிந்தது.. நாலா பக்கமும் ஆர்வத்துடன் தேடி பார்த்தவன்
பள்ளியின் வாயிலை தாண்டி சற்று தொலைவில் நடந்து கொண்டிருந்த இரண்டு சிறுமிகளை கண்டதும்
அவன் முகம் மலர்ந்தது...
ரெட்டை ஜடை
போட்டு அதை ரிப்பன் வைத்து பின்னி மடித்து கட்டிக்கொண்டு முழங்காலுக்கு சற்று
கீழாக இருந்த பாவாடையும் அதற்கு மேலாக அணிந்திருந்த சட்டையும் அதை பாவாடைக்கு உள்ளே விட்டு இடுப்பில் போட்டிருந்த பெல்ட் ம்
என கண்டதும் அவன் முகம் சூரியனை கண்ட தாமரையாக மலர்ந்தது...
அந்த இரண்டு
சிறுமிகளும் ஒருவர் தோளில் மற்றவர் கை போட்டு கொண்டு மஞ்சள் பையை பின்னால் தொங்க
விட்டு கொண்டு நடக்கும்பொழுது ஒருவர் இடுப்பை மற்றவர் இடித்து கொண்டே ஏதோ கதை
அடித்து கொண்டே வெளியில் சென்று கொண்டிருந்தனர்...
பின்னால்
இருந்து பார்க்க, கிட்டதட்ட மற்ற மாணவிகளும் அவர்களை
போலவேதான் ஆடி ஆடி தங்கள் தோழிகளுடன் சென்று கொண்டிருந்தனர்.. அத்தனை பேரும் ஒரே
மாதிரியாக இருந்தாலும் பின்னாலிருந்து அவன் தேடுபவளை மட்டும் தனியாக கண்டு கொண்டான்
நளன்..
உடனே வேகமாக
ஒலிம்பிக்கில் ஓடும் வேகத்தை விட இரண்டு கால் பாய்ச்சலில் தாவிச் சென்று இந்த
சிறுமிகளின் பின்னால் நின்றவன் முதலாவதாக நின்றிருந்த சிறுமியின் ஜடையை பிடித்து
இழுத்தான்..
உடனே அவள் ஆ என்று அலறி வலிக்காமல் இருக்க அவள் ஜடையை ஒரு
கையால் பிடித்துக் கொண்டு சற்று லேசாக பின்னால் திரும்பி பார்க்க அங்கு நின்றிருந்தவனைக்
கண்டதும் முறைத்தாள்...
உடனே அவனும்
லேசாக சிரித்தவாறு
“ஹோய்
பொண்டாட்டி.. உன் புருஷன் வர்ற வரைக்கும் வெயிட் பண்ண மாட்டியா? பெல் அடிச்சதும் நீ
பாட்டுக்கு பைய தூக்கிகிட்டு கிளம்பிட்ட.. உன் புருஷன் உன்னை காணாம தேடுவான் னு கொஞ்சமாவது உனக்கு அக்கறை இருக்கா?” என்று புருவத்தை உயர்த்தி
செல்லமாக மிரட்டினான்..
“ஐய....போடா
டுபுக்கு.. நீ ஒன்னும் என் புருஷன்
கிடையாது.. என் அப்பத்தா சொல்லுச்சு.. என் புருஷன் பெரிய கோடீஸ்வரனாக்கும்.. அவனுக்கு
பெரிய பங்களா, பெருசு பெருசா அஞ்சாறு கார்.. வீட்டில வேலை
செய்ய சுத்திலும் ஆளுங்க எல்லாம் வச்சு என்னைய கீழ நடக்க விடாம ராணி மாதிரி பார்த்துக்குவானாம்..
அப்படிப்பட்டவன்
தான் எனக்கு புருஷனா வருவான்னு எங்க அப்பத்தா
சொல்லுச்சு.. இந்த கிராமத்துலயே சுத்திக்கிட்டு இருக்கிற நீ எல்லாம் ஒன்னும்
எனக்கு புருஷனாக மாட்ட.. “ என்று கழுத்தை நொடித்து
நக்கலாக சிரித்தாள் அந்த சிறுமி...
“ஏய்.. அந்த
கிழவிக்கு வேற வேலையே இல்லையா? உன்கிட்ட தப்பு தப்பா சொல்லி உன்னை குழப்பி
வச்சிருக்கு.. அது கிட்ட சொல்லி வை.. ஒரு நேரம்
போல இன்னொரு நேரம் இருக்கமாட்டான் இந்த நளன்..
அது பாட்டுக்கு ஏதாவது
ஏடாகூடமா செஞ்சது அந்த ப்ரித்விராஜ் மஹாராஜா வந்து அவன் பொண்டாட்டியை குதிரையில
வச்சு தூக்கிட்டு போன மாதிரி இந்த நள மஹாராஜா
வும் குதிரையில் வந்து அந்த கிழவியை போட்டு தள்ளிட்டு உன்னை தூக்கிட்டு போய் தாலி
கட்டிடுவேன்.. சொல்லிவை எதுக்கும்..” என்று விரல் நீட்டி மிரட்டினான்..
அதைக்கேட்டு
களுக்கென்று கிளுக்கி சிரித்த அந்த சிறுமி
“டேய் டுபுக்கு
மாமா... உன் ஓட்ட சைக்கிளை முதல்ல ஓட்டறதுக்கு கத்துக்கோ.. நீயும் ரெண்டு வருஷமா
அந்த சைக்கிளை ஓட்ட முடியாமல் குரங்குபெடல் லயே ஓட்டிகிட்டு இருக்க..
நீ எல்லாம்
குதிரையில் வந்து என்னை தூக்கிட்டு போறியாக்கும்.. “ என்று நக்கலாக சிரித்தாள்..
அதைக்கேட்டு
அருகிலிருந்த பெண்ணும் களுக்கென்று கிளுக்கி சிரிக்க அதைக்கண்டு கடுப்பான நள
மகாராஜா உடனே அருகில் இருந்த சிறுமியை பார்த்து முறைத்தவன்
“ஹோய் கருவாச்சி..
உனக்கு என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு? என் அத்த மவ அவ என்னை எப்படி வேணாலும் கிண்டல் அடிச்சு சிரிக்கலாம்.. அதுல தப்பு இல்ல.. நீ எதுக்கு என்னை பார்த்து சிரிச்ச? “ என்று ஓங்கி அவன் தலையில் கொட்டினான்..
அதில் வலி தாங்க
முடியாமல் அலறி கண்ணில் திரண்ட நீருடன் அவனை பார்த்தவள்
“மன்னிச்சுக்கங்க
அண்ணா.. தெரியாம சிரிச்சுட்டேன்.. இனிமேல்
சிரிக்க மாட்டேன்.. “ என்று வாயில் கை வைத்து பொத்திகொண்டு மன்னிப்பு கேட்டாள்..
“ஹ்ம்ம்ம் அது..
அந்த பயம் இருக்கட்டும்..ஆமா.. தினைக்கும்
நான் தானே என் பொண்டாட்டிய அவ க்ளாஸ்ல இருந்து கூட்டிட்டு போயி என் அத்த வீட்டில
விட்டுட்டு போவேன்..
இன்னைக்கு என்ன? நீ புதுசா அவ கூட ஜோடி
போட்டு சேர்ந்துக்கிட்டு சுத்திகிட்டு இருக்க? “ என்று முறைத்தான்..
“ஐயயோ... இல்லண்ணா..நான் இவ கூட வரமாட்டேன் னு தான்
சொன்னேன்.. தமாதான் நீ வாடி.. என் மாமன் உன்ன ஒன்னும் பண்ண மாட்டான் னு சொல்லி என் கைய புடிச்சு இழுத்துகிட்டு வந்தா..
இல்லன்னா நான் அவகூட
சேர்ந்து வந்திருக்கவே மாட்டேன்.. நீ போன வாரம் என் தலையில் கொட்டினது எனக்கு
இன்னும் வலிக்குது.. “ என்று தன் தலையை
தடவியவாறு பாவமாக பார்த்தாள்..
உடனே அதில்
கொஞ்சம் மனம் இலகியவன்
“சரி சரி
பொழைச்சு போ.. இனிமேல் அவ கூப்பிட்டா கூட
அவ கூட சேர்ந்து நீ சுத்த கூடாது.. அவ எப்பவும் என் கூட மட்டும் தான் வரணும்.. என்ன புரிஞ்சுதா? என்று சொல்லி மிரட்டியவன்
“நீ இப்போ தனியா
போ..நான் என் பொண்டாட்டியை கூட்டிகிட்டு போறேன்.. “ என்று மிரட்டி அந்த சிறுமியை கழட்டிவிட்டு முதலில்
நின்றிருந்தவளின் தோளின் மீது கை போட்டு அவளை அழைத்து கொண்டு முன்னால் நடக்க ஆரம்பித்தான்..
அவளும் அவனை
முறைத்தவாறு
“டேய் டுபுக்கு
மாமா.. இப்ப எதுக்கு என் ஃப்ரண்ட கழட்டி விட்ட? “ என்று முறைத்தாள்..
“ஏன் டி.. நான்தான் தினமும் சொல்றேன் ல..நீ எப்பவும் என்
கூடத்தான் வரணும்..நீ எங்க போனாலும் உன்னை பத்திரமா பார்த்துக்கறது உன் புருஷனோட கடமை.. அதே மாதிரி
புருஷன் சொல்ற பேச்சை பொண்டாட்டியும் கேட்கணும்னு தெரியாது.. “ என்று லேசாக முறைத்தான்..
“அப்படியெல்லாம்
ஒன்றுமில்லை...” என்று பதிலுக்கு முறைத்தாள்..
“ஹா ஹா ஹா உன்
ஆத்தா எப்பவும் உங்க அப்பா பேச்சைக்
கேட்டு தானே நடக்குது.. என் ஆத்தாவும் எப்பவும் என் அப்பா பேச்சைக் கேட்டு நடக்கும்..
அவ்வளவு ஏன்.. பெருசா வாய் அடிக்கற உன்
வீட்ல இருக்கற அந்த கிழவி அது கூட அது புருஷனுக்கு அடங்கி போச்சு தான..
அது மாதிரி
நீயும் என் பொண்டாட்டி டீ...நீ எனக்கு
அடங்கி என் பேச்சை கேட்டுத்தான் நடக்கணும்..”
என்றான் அவள் தலையை பிடித்து செல்லமாக ஆட்டி சிரித்தவாறு..
அதைக் கேட்ட
அந்த ஆறு வயது சிறுமி குழம்பி போனாள்..
“அப்பத்தா
என்னடா என்றால் எனக்கு புருஷனாக ஒருத்தன் பட்டணத்திலிருந்து வருவான்னு சொல்லுது..
இவன் என்னடானா இவன் தான் புருஷன்
ங்கிறான்.. இப்ப யார் பேச்சை கேட்பது? “ என்று கன்னத்தில் கை
வைத்து தலை சரித்து யோசித்துக் கொண்டே
குழப்பத்துடன் நடந்து வர அவள் முகத்தில் தெரிந்த யோசனை ரேகையை கண்டு ரசித்தவன் லேசாக சிரித்துக் கொண்டு,
“ஹோய் பொண்டாட்டி..
அப்படி என்ன யோசனை? அமைதியா வர்ற? “ என்றவாறு அவளுடன் இணைந்து நடந்தான்..
“இல்ல மாமா..என்
அப்பத்தா சொல்லுச்சு நீ ஒன்னும் என் புருஷன் இல்லை னு.. ஆனா நீதான் என் புருஷன் னு நீ சொல்ற.. அதான் குழப்பமா இருக்கு..” என்று தன் மனதில் இருந்ததை வெளியில் சொன்னாள்..
அதை கேட்டு
லேசாக கடுப்பானவன் அந்த கிழவியை மனதுக்குள் கருவி கொண்டவன்
“இங்க பார் தயா
குட்டி.. உனக்கு குழப்பமே இருக்கக் கூடாது.. யார் என்ன சொன்னாலும் நீ தான் எனக்கு பொண்டாட்டி..
நான் தான் உனக்கு புருஷன்..உனக்கு சந்தேகம் னா நேரா போய் என் அத்தை அதான் உன் ஆத்தா கிட்ட கேளு.. அது தெளிவா சொல்லும். நீ அந்த கிழவி பேச்சை கேட்காத..” என்று மீண்டும் அவளை முறைத்தவாறு அழைத்துச்
சென்றான்....
இருவரும் பேசிக்
கொண்டே ஒரு வீட்டை அடைய அதன் முன்னால் இருந்த கேட்டை கையால் தட்டினான் நளன்..
உடனே உள்ளே
இருந்து கதவை திறந்து கொண்டு வேகமாக வெளியில் வந்தாள் தங்கம் என்கிற
தங்கம்மா..அந்த குட்டியின் அன்னை..
வெளியில்
வந்தவள் அங்கு ஜோடியாக நின்றிருந்த இருவரையும் ஒன்றாக காண அவள் மனம் நிறைந்து போனது..
உடனே வாயெல்லாம் பல்லாக முன்னால் வந்தவள்
“வாடா மருமகனே
!! ஏன் வெளியிலேயே நிக்கற.. உள்ள வா.. உனக்கு புடிச்ச பக்கோடா செஞ்சி வச்சிருக்கேன்.. சாப்பிட்டுட்டு
போகலாம்.. “ என்று அழைத்தாள் சிரித்தவாறு..
“இல்லத்த..நான் உள்ள
வந்தா உன் வீட்ல இருக்கிற அந்த பெருசு என்னைய கரிச்சு கொட்டிக் கிட்டே இருக்கும்.. அது இல்லாதப்ப
இன்னொரு நாள் வரேன்.. இப்ப நீ செஞ்சு
வச்சிருக்க பக்கோடா வ மட்டும் பார்சல் பண்ணி கொடு.. “ என்று சொல்லி சிரிக்க, அவளும் சிரித்தவாறு வேகமாக உள்ளே சென்றாள்..
தன் அன்னையை தொடர்ந்து
அந்த சிறுமியும் உள்ளே செல்ல முயல, அவள் ஜடையை பிடித்து இழுத்து
நிறுத்தியவன்
“ஹோய்...நில்லு
டீ.. அத்த வர்ற வரைக்கும் இங்கயே இரு..அதுக்குள்ள என்ன அவசரம்? “ என்று முறைத்தவாறு அவளை தன் பக்கத்திலயே நிறுத்தி வைத்து
கொண்டான்..
உள்ளே சென்ற அந்த
பெண்மணியும் அவள் செய்து வைத்திருந்த
பக்கோடா வை ஒரு பேப்பரில் போட்டு அதை முந்தானையில் மறைத்து எடுத்துக் கொண்டு
வேகமாக வெளியில் வந்தாள்..
அதை அவனிடம்
கொடுத்தவள்
“நளா கண்ணா...
என் அண்ணா அண்ணிய கேட்டேன்னு சொல்லு..” என்று அவன் தலையை வாஞ்சையுடன் தடவினாள்..
“ஹ்ம்ம் சரி
அத்த.. நேரம் ஆச்சு.. நான் கிளம்பறேன்.. ஆத்தா என்னையவே பார்த்து
கிட்டிருக்கும்..” என்றவாறு அவனும் தன் அத்தைக்கு கையசைத்தவன் அருகில் இருந்தவளை பார்த்து
“ஹோய்
பொண்டாட்டி... வரட்டா.. நாளைக்கு காலைல ரெடியா இரு.. நானே வந்து உன்னை
பள்ளிக்கூடத்துக்கு கூட்டிட்டு போறேன். “ என்று சொல்லி அவள் ஜடையை மீண்டும் பிடித்து இழுத்தான்.. அவள் முறைத்தவாறு அவனை அடிக்க வருவதற்கு முன்னே வேகமாக ஓடி
விட்டான் சிரித்துக் கொண்டே..
அதைக் கண்ட தங்கமும்
சிரித்தவாறு உள்ளே வர அங்கு முற்றத்தில் கட்டிலை போட்டு அமர்ந்திருந்தார் ஒரு
வயதான பெண்மணி..
ரவிக்கை
இல்லாமல் உடலை சுற்றி அணிந்திருந்த வெள்ளை புடவை அவர் கணவனை இழந்தவர் என எடுத்து
காட்டியது..
தலை எல்லாம்
நரைத்து தோள் சுருங்கினாலும் முகத்தில் இன்னும்
அந்த பண்ணையார் அம்மாவுக்கான கம்பீரமும் வயலில் வேலை செய்யும் ஆட்களை மிரட்டி
கொண்டிருந்த அந்த தோரணை கொஞ்சமும்
குறையாமல் கெத்தாக இருந்தார்...
சிறுவயதில்
இருந்தே காதில் கனமான பாம்படம் அணிந்திருந்ததால் காது நீண்டு
தொங்க, கணவன் இறந்த பிறகு எல்லா நகைகளையும்
கழட்டிவிட்டாலும் அந்த பாம்படத்தை மட்டும் கழட்டாமல் இருக்க அது நீண்ட காதில் இரு
பக்கமும் ஆடி கொண்டிருக்க,
கையில் இருந்த சிறு உரளில் பாக்கை போட்டு இடித்து கொண்டே வாயிலை நோட்டம்
விட்டு கொண்டு இருந்தார்..
அப்பொழுது
வெளியில் இருந்து வாயெல்லாம் பல்லாக சிரித்து கொண்டே உள்ளே வந்த தன் மருமகளை
கண்டதும்
“அப்படி என்ன
இளிப்பு ஆய்க்கும் மவளுக்கும்.. “ என்று முறைத்தார்..
தன் மாமியாரின்
கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாமல் தங்கம் முன்னால் போக,
அதில் இன்னும் கடுப்பானவர்
“ஏய்..
உன்னத்தான் டி..இங்க ஒருத்தி குத்துக்கல்லாட்டம் உட்கார்ந்து தொண்ட தண்ணி போக
கத்திகிட்டு இருக்கேன்.. நீ பாட்டுக்கு கண்டுக்காம போற.. நில்லுடி.. “ என்று
கத்தினார்..
உடனே தங்கமும் நின்று
திரும்பி அந்த பெரியவளை பார்த்து முறைத்தவாறு
“அதானே.. நான் கொஞ்சம் சிரிச்சாலும் உங்களுக்கு
பொறுக்காதே.. உடனே வந்துடுமே.. சரி என்ன
சொல்லோணும் ? “ என்று முறைத்தாள்...
“ஆமா... யார்
வந்தா? நீ ஏன் முப்பத்திரண்டு பல்லும் தெரிய
இளிச்சுகிட்டே வந்த? “
“யார் வந்தா
உங்களுக்கென்ன? நான் யார் கூட பேசறேன், சிரிக்கறேன் னு உன்றகிட்ட சொல்லிபுட்டுதான் செய்யோணுமாக்கும்.. “
என்று முகத்தை நொடித்தாள்...
“ஆமா.... இந்த
வாய்க்கு ஒன்னும் குறைச்சலில்லை...உன்
பொறந்த வூட்ல எதை சொல்லி கொடுத்தாங்களோ இல்லையோ இப்படி வார்த்தைக்கு வார்த்தை
மல்லு கட்ட மட்டும் நல்லா வக்கணையா சொல்லி கொடுத்து வளத்தி வச்சிருக்காங்க.. “
என்று அவரும் முகத்தை நொடித்தார்..
தன் பிறந்த
வீட்டை பற்றி சொல்லியதும் புசுபுசுவென்று வந்தது கோபம் அந்த பெண்மணிக்கு..முகம்
எல்லாம் சிவந்து போக, எதிரில் அமர்ந்து இருப்பவளை எரித்து
விடும் பார்வை பார்த்தாள்..
அதற்கெல்லாம்
அசராமல் அந்த பெரியவளும் தொடர்ந்தாள்...
“நீ சொல்லாட்டி
போ.. எனக்கு தெரியாதாக்கும்...என்ன? உன் பொறந்தவன் மவன் வந்தானாக்கும்..அவனை
பார்த்த உடனே அப்படியே பாசம் பொங்கிடுச்சாக்கும்..அதான் உன் பாசத்தை எல்லாம்
முந்தானையில் மறச்சு எடுத்துகிட்டு போய் உன் பொறந்தவன் மவனுக்கு
ஊட்டினியாக்கும்... “ என்று முகத்தை நொடித்தார் பெரியவள்..
“இந்த கிழவிக்கு
வயசானாலும் கழுகு கண்ணு... அதுக்கு தெரியாம மறச்சு எடுத்துகிட்டு போனதை கூட
கரெக்ட் ஆ கண்டுபுடுச்சிடுச்சே.. ஆனா கேட்டா எனக்கு கண்ணு சரியா தெரிய
மாட்டேங்குது.. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போடானு மவன் கிட்ட பொலம்பறத மட்டும் பாரு...
“ என்று உள்ளுக்குள் தன் மாமியாரை அர்ச்சணை பண்ணி கொண்டிருந்தாள் தங்கம்..
“என்னடி ? நான் கேட்டதுக்கு அப்படியே வாய் அடச்சு போய்ட்ட? இந்த கிழவிக்கு எப்படி எல்லாம் தெரியும்னா?
வீட்டுக்கு உள்ள உட்கார்ந்து இருந்தாலும் வெளில வீதியில போற வர்றவங்களை கூட
கரெக்டா கண்டு புடுச்சிடுவேணாக்கும்... “ என்று சிரித்து கொண்டவர்
“ஆமா... உன்
பொறந்தவன் மவன் இங்க எதுக்கு வந்தான்? அவன் என்னமோ
என்ற பேத்தியை பொண்டாட்டி பொண்டாட்டி னு கூப்பிடறானாம்.. சொல்லி வை..என் பேத்திக்கு
சீமையிலிருந்து ராஜதுரையாட்டம் மாப்பிள்ளை வரப் போறான்..
அஞ்சாறு பெரிய
பங்களா, ஏலெட்டு கார், பெரிய
பெரிய ஆபீஸ், பங்களாவை சுத்திலும் எப்பவும் சுத்திகிட்டிருக்க
வேலைக்காரங்க, என் பேத்தி கண் பார்வைக்கு ஓடி வந்து
சேவகம் செய்ய ஆளுங்க இப்படி இருக்கிற வூட்டுக்குத்தான் என்ற பேத்தி வாழ்க்க பட்டு போவா...
என்ற பேத்திய
உள்ளங்கையில் வச்சு பார்த்துப்பான் அவ புருஷன்...அத விட்டுபோட்டு உன் பொறந்தவன்
மவன கட்டிகிட்டு உன்ன மாதிரியே இந்த
குண்டு சட்டியில குருத (குதிரை) ஓட்டற
மாதிரி இந்த பட்டிக்காட்டுல ஒன்னும் அவ இருக்க மாட்டா..
அதனால இன்னொரு
தரம் அந்த பொடியன் என் பேத்தியை பொண்டாட்டினு சொன்னான் அடுத்த வார்த்த சொல்ல
அவனுக்கு நாக்கு இருக்காது.. இழுத்து வச்சு
அறுத்து புடுவேனாக்கும்..என்னை பத்தி தெரியும் இல்ல..அதனால் அவன் கிட்ட சொல்லி
வை.. “ என்று முறைத்தார்..
அதை கேட்டு
கடுப்பான அவர் மறுமகளும்
“ஆமா ஆமா சொல்லிக்கிட்டாங்க..
உன்ற வாயையும் மூஞ்சியையும் பார்த்து சீமையிலிருந்து என்ன அந்த அமெரிக்காவில் இருந்தே
வருவான்... நீயும் நாக்க தொங்க போட்டுகிட்டு பார்த்து கிட்டே இரு... “ என்று
கழுத்தை நொடித்தாள்...
“ஏன் டி? எனக்கு என்ன குறைச்சல்? என் அழக பாத்து தான் உன் மாமனார் என் பின்னாடியே வந்து கட்டிக்கிட்டார்..என்ன
பல்லுதான் கொஞ்சம் பெருசா போச்சு.. “ என்று முனகினார்..
“ம்க்கூம்.. பல்லு
மட்டுமா பெரிசு.. வாயும்தான் பெருசு..அது
மட்டும் கோயம்புத்தூருக்கும் பொள்ளாச்சிக்கும் நீளுதே.. “ என்று உள்ளுக்குள் கருவி கொண்டவள்
“ஆமா... என் அண்ணன் மவனுக்கு என்ன குறைச்சல்? பெரியவனா ஆனா ராசா மாதிரி
வரப் போறான்.. எல்லா பொண்ணுங்களும் அவனுக்காக வரிசையில் நிப்பாளுக.. அவனுக்கு உன்ற
வீட்டு பொண்ணை கட்டி கொடுக்க கசக்குதா? நீங்கல்லாம் அவனை
மாப்பிள்ளையாக்கிக்க கொடுத்து வச்சிருக்கணும்... “ என்று பெருமையாக சொல்லி
சிரித்தாள் தங்கம்...
அண்ணன் மகன்
என்றால் கொள்ளை பிரியம் அவளுக்கு... பின்ன பிறந்த உடனே முதன் முதலில் கையில்
ஏந்தியவள் அவள் அல்லவா? பிறந்ததில்
இருந்தே தூக்கி வளர்த்ததால் தன் அண்ணன் மகன் மீது எக்ஸ்ட்ரா பாசம் அவளுக்கு...
தன் மருமகள்
அவள் பொறந்த வீட்டை பற்றி பெருமையாக சொல்லவும் அதில் இன்னும் கொதித்த அந்த
பெரியவள்
“போதும்
நிறுத்துடீ…உன்னையவே விவரம் தெரியாம கட்டிகிட்டு வந்துட்டான் என்ற மவன்.. அப்பயே என்ற
மவன் கிட்ட தலையால அடிச்சுகிட்டேன் இந்த பொண்ணு வேண்டாம்னு..
இந்த பாவி பய உன்ன காதலிச்சிட்டேன் னு சொல்லி ஒத்த கால்ல
நின்னு யாருக்கும் தெரியாம உன்னையவே கட்டிகிட்டு
வந்துபூட்டானே.. சிறுக்கி மவ.. எப்படியோ மினுக்கி என் மவன மயக்கி வச்சிருக்கவும்
அந்த மடையனும் உன்கிட்ட தலைசுத்தி போயிட்டான்..
இந்த ஆத்தா
பேச்ச கூட கேட்காம அவசரமா தாலிய கட்டி இல்ல கூட்டிகிட்டு வந்திட்டான்..
கட்டின தாலியை
கழட்டி எறியவா முடியும்? வேற வழியில்லாம உன்ன வீட்டுக்குள்ள சேர்த்து கிட்டேன்.அந்த
எடுபட்ட பயன் அதான் உன் பொறந்தவன் மூஞ்சியிலயே முழிக்க கூடாதுனு தான் இருந்தேன்..
என் கிரகம், கடைசியில அவனே எனக்கு சம்மந்தியா
வந்து வாச்சிருக்கான்..
எப்படியோ ஒரு
தரம் என்ற மவன் புத்தி கெட்டு போய் உன் வீட்ல கால் வச்சிட்டான்.. இனிமேல் இந்த
ஜென்மத்துல அந்த வீட்டு சகவாசம் வேண்டாம்..அதனால் உன் பொறந்தவன் மவனை
மருமகனாக்கிக்கலாம்னு கோட்டை கட்டறத விட்டுபோட்டு வேற சோலிய பாரு..” என்று நீட்டி
முழக்கினார்..
அதை கேட்டு
பல்லை கடித்தாள் அவர் மறுமகள்..தன் மாமியாருக்கு சரிக்கு சமமாக திருப்பி கொடுக்க
வேண்டும் என்ற வேகத்தில் பொரிய ஆரம்பித்தாள்..
“உன்ற
வீட்டுக்கு எங்கண்ணனும் ஒன்னும் சிரிச்சுகிட்டே பொண்ணை கொடுக்கல.. உன்ன பத்தியும்
உன்ற குடும்பத்தை பத்தியும் நல்லா தெரிஞ்சதனாலதான் இந்த மாப்பிள்ளை வேண்டாம் னு
தலையால அடிச்சுகிச்சு..
நான் தான் புத்தி
கேட்டு போய், உன்ற மவன் என் பின்னாடியே
சுத்தறதையும் காதல் கீதல் னு தத்துபித்து உளறினதையெல்லாம்
உண்மை னு நம்பி என் அண்ணனுக்கு தெரியாம வீட்டை விட்டு போட்டு என் அண்ணன் பேச்சை
மீறி வந்துபுட்டேன்..
இப்படி ஆத்தா
பேச்சைக் கேட்டு, அந்த
ஆத்தா முந்தானைக்குள் புகுந்துக்கற ஆம்பளையா இருப்பான் னு தெரிஞ்சிருந்தா
இந்த பக்கமே தலை வச்சு படுத்திருக்க மாட்டேன்.. எல்லாம் என் கிரகம்..
எங்கேயோ போய் பெரிய
அரண்மனையில் ராணி மாதிரி வாழ்ந்துட்டு
இருக்க வேண்டிய நான் என் அவசர புத்தியால என் தலையில நானே மண்ண அள்ளி போட்டுகிட்டு
உன்ற மவன் பின்னாடி வந்து இப்ப இந்த வீட்ல
தினம் தினம் இடிசோறு திண்ணுகிட்டு இருக்கேன்..
என் அண்ணன்
பேச்ச மீறிப்போன எனக்கு இதுவும் வேணும்... இன்னமும் வேணும்... “ என்று கோபமாக
பொரிய ஆரம்பித்து அழுகையில் முடித்து மூக்கை உறிஞ்சியவாறு தன் முந்தானையை எடுத்து
கண்ணை துடைத்து கொண்டிருந்தாள்..
அப்பொழுது
வீட்டுக்குள்ளே வந்த அந்த பெண்ணின் கணவன் சிங்காரம் முற்றத்தில் நின்று கொண்டே மாமியார் மருமகள் இருவரும் வாய்ச்சண்டை போட்டுக்
கொண்டிருப்பதை சலிப்புடன் பார்த்தவன்
“என்னாச்சு? இன்னைக்கு என்ன பிரச்சனை ஆத்தா? “ என்று தன் அன்னையிடம் வினவினான்..
“வாடா வா.. அதான.. என்ன சண்டைனு உன் பொண்டாட்டிய
ஒரு வார்த்தை கேட்டுட மாட்டியே...என்னமோ என்னாலதான் வூட்ல சண்டைங்கிற மாதிரி
என்கிட்ட கேட்கற..
ஹ்ம்ம்ம் உன்ன சொல்லியும் குத்தமில்லை..அதான்
உன்ன மயக்கி அவ முந்தானையில முடிஞ்சு வச்சிருக்காளே..அந்த சிறுக்கி..நீயும் என்ன
பண்ணுவ? ” என்று நீட்டி முழக்கினார்...
அவனும் ஒரு அசட்டு சிரிப்பை சிரித்து
“அது இருக்கட்டும் ஆத்தா?
என்ன விஷயம்?
எதுக்காக என் பொண்டாட்டி மூக்க
உறிஞ்சிக்கிட்டு இருக்கா? “ என்று தன் மனைவியை பார்த்த படி
தன் அன்னையிடமே வினவினான்...
அவர் சொல்றார்ங்கிறதுக்காக வந்தவுடன் தன்
மனைவியிடம் விசாரித்து இருந்தால் அதற்கும் அவனை பெத்தவள் குற்ற பத்திரிக்கை
வாசித்திருப்பாள் என்று புரிந்து வைத்திருந்தான் சிங்காரம்..
சென்ற முறை அவர் நீட்டி முழக்கியதே மறுபடியும்
கண் முன்னே வந்தது...
இதே மாதிரி ஏதோ
இரண்டு பேரும் வாய்ச்சண்டை போட்டு கொண்டிருக்க, அப்பொழுது உள்ளே வந்தவன் நேராக
தன் மனைவியிடம் என்ன நடந்தது என்று விசாரிக்க, அதற்கு
“ஹ்ம்ம்ம் ஏன்டா சிங்காரம்.. குத்துக்கல்லாட்டம்
பத்து மாசம் சுமந்து பெத்து வளர்த்தி ஆளாக்கி விட்ட ஆத்தா உன் கண்ணுக்கு தெரியல..
நேத்து வந்தவ உனக்கு முக்கியமா போய்ட்டா இல்ல..
அதான் இந்த ஆத்தா கிட்ட விசாரிக்க புடிக்காம உன்
பொண்டாட்டிய மட்டும் கூப்பிட்டு விசாரிக்கற..அவ என்ன கதையை திரிச்சு சொன்னாலும் அத அப்படியே
நம்பிடுவ.. நல்லா இருக்குடா... “ என்று நீட்டி முழக்க அன்றிலிருந்து தன் அன்னை இருக்கும்
நேரங்களில் அவன் தன் மனைவியை எதுவும் கேட்காமல் தன் அன்னையிடமே பேச ஆரம்பித்தான்..
இன்று அதற்கும் அவன் அன்னை நீட்டி முழக்கவும்
ஆயாசமாக இருந்தது... சே என்று வாழ்க்கை சலித்து விட்டது..
“எவ்வளவு ஆசை ஆசையா அத்தனை எதிர்ப்பையும் மீறி
காதலித்தவளையே கட்டிகிட்டேன் னு எவ்வளவு சந்தோஷமா இருந்தேன்.. இப்படி தினம் தினம்
மாமியார் மறுமகள் சண்டையை பார்க்கிறப்போ ஏன்டா இப்படி ஒரு கல்யாணத்தை
பண்ணிகிட்டோம்னு சலிப்பா இருக்கே.. “ என்று உள்ளுக்குள் புலம்பியவன்
யார் பக்கம் குத்தம் என்றும் சொல்ல முடியவில்லை..
யாராவது ஒருத்தர் பக்கம் பேசினால் மற்றவளுக்கு பிடிப்பதில்லை.. தாயா?
தாரமா? என்று முழி பிதுங்கி போனான் சில நேரங்களில்..
“இன்றைய பெரும்பாலான கணவன்களின் பாடு இதுதான்..
தாய்க்கும் தாரத்துக்கும் நடுவுல மாட்டிகிட்டு இரு பக்கமும் அடிவாங்கும் மத்தளத்தை
போல அடி வாங்க வேண்டியதுதான்.. " என்று பெருமூச்சு விட்டவன் மீண்டும் தன்
அன்னையிடமே விசாரிக்க, அதை கேட்ட அவன் அன்னை அதுக்கும் நீட்டி முழக்கினார்..
"ஏன்டா அவ ஏன் மூக்கை உறிஞ்சிறானு அவள ஒரு
அதட்டு அதட்டாம என் கிட்டயே நோண்டி கிட்டிருக்கியே... " என்று நொடித்தவர்
"அது வேற ஒன்னும் இல்ல டா சிங்காரம்...அவ
பொறந்தவன் மவனுக்கு என்ற பேத்தியை கட்டிக் கொடுக்க மாட்டேன்னு சொன்னேன்..அதுக்குத்
தான் எங்கிட்ட எகிறிகிட்டு சண்டைக்கு வரா.." என்று மீண்டும் முறைத்தவாறு
கழுத்தை நொடித்தார்..
"உன் பேத்தியா? யார் அது? ஓ நம்ம தமாவையா
சொல்ற? ஏன் ஆத்தா.. அவளுக்கு அடுத்த வாரம் வந்தா தான் வயசு அஞ்சு முடிஞ்சு
ஆறு ஆரம்பிக்க போகுது. அதுக்குள்ள அவளுக்கு
பரிசம் போடுறத பத்தி ரெண்டு பேரும் சண்டை போட்டுகிட்டு
இருக்கீங்களாக்கும்..
அது கிடக்குது இன்னும் பல வருஷம்.. எல்லாம் அப்ப
பாத்துக்கலாம்.. இன்னாருக்கு இன்னார் னு அந்த ஆண்டவன் எப்பவோ எழுதி
வச்சிருப்பான்.. அது மாதிரி தான் நடக்கும்.. பொழுது சாயற நேரத்துல இப்படி ரெண்டு
பேரும் நின்னுகிட்டு சண்டை போடாதீங்க..
போய் அவங்கவங்க சோலிய பாருங்க.. " என்று இன்ஸ்டன்ட் நாட்டாமையாக மாறி இருவரையும் பொதுவாக பார்த்து சமாதானப் படுத்தி
பஞ்சாயத்தை அப்போதைக்கு தீர்த்து வைத்தான்..
தங்கமும் தன் மாமியாரை பார்த்து ஒரு முறை
முறைத்து விட்டு முகத்தை நொடித்துக் கொண்டு சமையலறைக்குள் சென்றாள் தன் கணவனுக்கு சிற்றுண்டி
எடுத்து வருவதற்கு..
பெரியவர்கள் பேச்சில் கலந்து கொள்ளாமல் அந்த
குட்டி ஏற்கனவே நைசாக நழுவி தன் அறைக்குச் சென்று
வேறு ஆடையை மாற்றிக் கொண்டு சமையலறைக்குள் புகுந்து அவள் ஆத்தா செய்து
வைத்து இருந்த பக்கோடாவை தட்டில் எடுத்து
வைத்து அந்த சமையல் அறை மேடையின் மீது ஏறி அமர்ந்து கொண்டு சத்தம் வராமல்
சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்..
உள்ளே வந்தவள் தன் மகளைப் பார்த்ததும் கடுப்பாகி
“ஏன் டி..எல்லாம் உன்னால தான்.. உன் மாமா அதான் என் அண்ணன் மவன் அத்த மவ னு உன்கிட்ட கேலியா பேசினது
எல்லாம் இங்க வந்து இந்த கிழவிகிட்ட
ஒப்புச்சிட்டியாக்கும்.. அப்படியே அந்த கிழவி மாதிரியே வந்து வாச்சிருக்க பார்..” என்று முறைத்தவாறு அந்த குட்டியின் பட்டு கன்னத்தை
பிடித்து செல்லமாக கிள்ளினாள்..
உடனே
“ஐயோ வலிக்குது..அப்பத்தா......
“ என்று சத்தம் போட உடனே அவசர அவசரமாக
கையை விலக்கிக் கொண்டவள் அவசரமாக அந்த குட்டியின் வாயை தன் கையால் பொத்தி கொண்டாள்
தங்கம்..
அதை கண்டு அந்த
குட்டியும் கண் சிமிட்டி நமட்டு சிரிப்பை சிரித்தவாறு
“ஹ்ம்ம்ம் அது..
அந்த பயம் இருக்கட்டும் தங்கம்... “ என்று
மேடையில் அமர்ந்தவாறு தன் அன்னையின்
கன்னத்தை இரு கையாலும் பிடித்து ஆட்டி செல்லமாக முத்தமிட்டவள் மேடையில் இருந்து
எட்டி குதித்து தாவி மறக்காமல் பக்கோடா
தட்டையும் எடுத்து கொண்டு வெளியில்
ஓடினாள் தமா என்கிற தமயந்தி குட்டி...
“அடிங்க....
“ என்று சொல்லி சிரித்தவாறு தன் மகளை
பிடிக்க முயன்றவள் அவள் சிட்டாக பறந்திருக்க,
“சரியான
வாலு...என் அண்ணி எப்படி இவள வச்சு காலத்துக்கும் சமாளிக்க போகுதோ.. “ என்று
சிரித்தவாறு மற்றொரு தட்டில் பக்கோடாவும் டீயையும் எடுத்துக் கொண்டு தங்கள் அறைக்கு சென்றாள்...
ஏற்கனவே உள்ளே
வந்திருந்த அவள் கணவன் சிங்காரம் சட்டையை கழட்டி மாட்டி விட்டு வெறும் பனியனுடன் கட்டிலில் தலைக்கு
பின்னால் கையை மடித்து வைத்து படுத்து கொண்டு விட்டத்தை பார்த்து எதையோ யோசித்து
கொண்டிருந்தான்..
தன் மனைவி உள்ளே
வரும் அரவம் கேட்டதும் கண்களை மட்டும் திருப்பி பார்த்தவன் அவசரமாக எழுந்து
அமர்ந்தான்..
உள்ளே வந்தவளையே
காதலுடன் நோக்க, தன் கணவனின் அந்த காதல் பார்வையில்
கன்னம் சிவக்க, தங்கம் உதட்டை கடித்து கொண்டு தலையை
தாழ்த்தி கொண்டாள்..
உடனே எட்டி அவள்
கையை பிடித்து சுண்டி இழுக்க, அதை எதிர்பார்த்திராததால் அடுத்த நொடி
தன் கணவன் மஞ்சத்தில் விழுந்திருந்தாள்..
அவளை இறுக்கி
அணைத்தவன்
“ஏன் டீ..
தங்கம்.. எப்படி நீ மட்டும் நான் முதல் நாள் பார்த்த அந்த தாவணி பாவாடை போட்ட
பொண்ணாட்டமே இன்னும் இருக்க? கொஞ்சம் கூட உன் அழகு குறையவே
இல்லடி.. என்ன ரகசியம்? “
என்று தன்
மனைவியின் முகத்தை கைகளால் அளந்து கொண்டே
கிறக்கத்துடன் அவள் காது மடலில் கிசுகிசுக்க,
அதுவரை அவள் மாமியாரின் குத்தல் பேச்சால் அவள் மனதில் இருந்த வலி வேதனை எல்லாம்
பறந்து விட்டது தங்கத்துக்கு..
தன் கணவனின்
இந்த காதல் மொழிக்கு மயங்கிதானே இவன் பின்னால் சுத்தி தன் வீட்டையும் மீறி இவனையே
கட்டி கிட்டது.. இன்னமும் எனக்கு புத்தி வரலை..
இவன் பேச்சுக்கு
மயங்கி இவன் இழுத்த இழுப்புக்கு எல்லாம்
வளைந்து கொடுக்க போய்தான் இப்படி ஆச்சு.. “ என்று பெருமூச்சு விட்டவள் தன் கணவனின்
மஞ்சத்தில் கிடந்தாலும் அவள் நினைவுகள் பின்னோக்கி சென்றன....
Comments
Post a Comment