தேடும் கண் பார்வை தவிக்க-4
அத்தியாயம்-4
பொள்ளாச்சியின் பக்கத்தில் இருந்த அந்த கிராமத்தில் விவசாயமே பிரதானமான
தொழில்..எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று நெல் வயல்கள் பரந்து
விரிந்திருக்கும்.. அப்படிபட்ட அந்த ஊரில் அருகருகே இரண்டு குடும்பத்தாரை சேர்ந்த
நெல் வயல்கள் இருந்தன..
ஒரு குடும்பத்தின் தலைவர் நல்லியண்ணன்... அவருக்கு துணைவியாய்
அவருடைய இன்ப துன்பங்களில் பங்கெடுத்து கொள்ளும் அவரின் துணைவி பாப்பாத்தி..
அவர்களுக்கு ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக இரண்டு
பிள்ளைகள்.. நல்லியண்ணன் தம்பதியர்கள் தங்கள் குழந்தைகள் இரண்டு பேருமே குணத்தில்
தங்கமாக இருக்கவேண்டும் என்று சொல்லி ஆணுக்கு தங்கராசு என்றும் பெண்ணிற்கு தங்கம்மா
என்றும் பெயரிட்டனர்...
தங்கராசு, தங்கம்மா இரண்டு பேருமே பெயருக்கு ஏற்ற மாதிரி
அவர்களும் குணத்தில் தங்கமாகத்தான் இருந்து வந்தனர்..
தங்கராசு பெற்றோர்கள் கடின உழைப்பாளி.. தங்கராசு பிறந்ததற்கு பிறகு பத்து
வருடம் கழித்து பிறந்தவள் தான் தங்கம்மா..பிறக்கும்பொழுதே வெள்ளை
வெளேரென்றும் கொழுகொழுவென்று தன் குட்டி
கண்களை உருட்டியபடி பிறந்த தன் தங்கையை
கண்டதும் பூரித்து போனான் தங்கராசு...
அவள் பிறந்த நொடியில் இருந்தே இங்கும் அங்கும்
அசையாமல் அவளை விட்டு நொடியும் பிரியாமல் அவளுடனேயே தங்கிவிட்டான் அவன்..
தங்கம்மா பிறந்த ஏழு மாதத்திலயே வயலில் வேலை
இருந்ததால் அவளை வயலுக்கு தூக்கி கொண்டு வந்து வயல் அருகில் இருந்த மரத்தில்
தொட்டில் கட்டி போட்டு விட்டு வயலில் இறங்கிவிட்டார் பாப்பாத்தி..
அப்பொழுது தங்கராசு பள்ளிக்கு சென்று
கொண்டிருந்தான்.. ஏனோ தன் தங்கையை விட்டு பள்ளி செல்ல அவனுக்கு மனமே இல்லை..
ஆனாலும் பெற்றோர்களின் கட்டாயத்தின் பேரில்
மனமே இல்லாமல் சென்று வருவான்..
பள்ளிகூடத்து மணி அடித்ததும் முதல் ஆளாக வயலுக்கு ஓடி வந்து தன் தங்கையை தூக்கி
வைத்து கொள்வான்..
தங்கம் வளர்ந்து நடக்க ஆரம்பித்ததும் தங்கராசுவே அவளுக்கு
வேண்டியதை எல்லாம் கவனித்துக் கொண்டான்..அவன்
தங்கை மீது இருந்த பாசத்தை கண்டு அந்த பெற்றோர்களுக்கு மனம் பூரித்து போனது..
இப்படி மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்த அந்த
குடும்பத்துக்கு யார் கண்ணு பட்டதோ?
தங்கம்மாவுக்கு ஐந்து வயது இருக்கும் பொழுது அவள்
தந்தை நல்லியண்ணன் இரவில் வயலுக்கு நீர் பாய்ச்ச சென்ற பொழுது வரப்பில் இருந்த
பாம்பு கடித்து சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்..
அப்பொழுது பதினைந்தே வயதாகி இருந்த தங்கராசு
தன் தந்தையின் மறைவுக்கு வருந்தி கலங்கி இடிஞ்சு போய் மூலையில் உட்காராமல் அந்த
குடும்பத்தை காக்கும் பொறுப்பை தன் கையில் எடுத்து கொண்டான்..
அந்த சிறு வயதிலயே கொஞ்சமும் தயங்காமல் வயலில் இறங்கி
வேலை செய்ய ஆரம்பித்தான்.. ஓரளவுக்கு
விவரம் தெரிந்த நாளிலிருந்தே தந்தையுடன் வயலில் சுற்றிக் கொண்டிருப்பதால்
விவசாயத்தின் நெழிவு சுளிவு ஓரளவுக்கு அவனுக்கு அத்துபடி..
கூடவே தன் அன்னையையும் தேற்றி அவரையும் தன்னுடன்
சேர்த்துகொண்டு வயலில் இறங்கிவிட்டான்..அவரும்
கொஞ்சம் கொஞ்சமாக மனதை தேற்றி கொண்டு தன் பிள்ளைகளுக்காக தன் துயரத்தை உள்ளே
போட்டு கொண்டு வளைய வந்தார்..
அதே போல அவர்கள் வயலை ஒட்டி இருந்த அடுத்த வயல் மற்றொரு குடும்பத்தை
சேர்ந்தது...அந்த குடும்பத்தின் தலைவர் அருணாச்சலம் தலைவி கன்னியம்மாள்..அவர்களின்
ஒரே மகன் சிங்காரம்..
அருணாச்சலம், கன்னியம்மாவும் ஜாடிக்கு ஏத்த மூடி மாதிரி குணத்தில் ஒத்து
இருந்தனர்.. தங்களை விட யாராவது முன்னேறி விட்டால் இருவருமே மனதுக்குள் புகைந்து
கொண்டிருப்பர்.. ஊரில் பாதிக்குமேல் அவர்களுக்கு பகையாளிகள் தான்..
அருணாச்சலமும் நல்லியண்ணனும் தூரத்து உறவு
முறையில் மாமன் மச்சான் என்றாலும் இருவருக்குமே அடிக்கடி வரப்பு தகராறு வாய்க்கால்
தகராறு என்று ஏதாவது சண்டை வந்து
கொண்டேதான் இருக்கும்..
நல்லியண்ணன் இருக்கும் வரை வீண் வம்புக்கு
போகாமல் கொஞ்சம் தாழ்ந்துதான் போவார்.. ஆனாலும் அருணாச்சலமும் கன்னியம்மாவும்
அவரிடம் வீண் வம்பை இழுப்பர்.. அவர் மறைவுக்கு பிறகு தங்கராசு தலை எடுக்க, அவர்களுக்கு இன்னும் கொண்டாட்டமாக
இருந்தது..
எப்படியாவது அவனுக்கும் குடைச்சல் கொடுத்து
அவன் நிலத்தையும் அபகரித்து கொள்ள திட்டம் தீட்டி அவனுக்கும் தொல்லை கொடுத்து
வந்தனர்..
தங்கராசு எவ்வளவோ அனுசரித்து போனாலும்
சிங்காரத்தின் அம்மா கன்னியம்மா எப்பொழுதும் அவனிடம் வம்பு சண்டைக்கு வந்து
கொண்டிருப்பார்.. அருணாச்சலமும் தன் மனைவியுடன் சேர்ந்து ஒத்து ஊத, அவனுக்கு பெரும் தலைவலியாக
இருந்தது...
இவர்கள் இருவரின் குணத்துக்கு பொருத்தமே
இல்லாமல் பிறந்து வளர்ந்தவன் சிங்காரம்...
அவன் மட்டும் தங்கராசுவை பார்த்தால் நட்புடன்
புன்னகைப்பான்.. சிறுவயதில் இருந்தே ஒரே பள்ளியில் படித்ததால் அந்த நட்பில்
பெரியவர்களின் சண்டையை தள்ளி வைத்து நட்புடன்தான் பழகி வந்தனர்..
ஆனால் தங்கராசு வயல் பொறுப்பை ஏற்று கொள்ளவும் கன்னியம்மாள்
தங்கராசுவை கரிச்சு கொட்டி கொண்டே இருக்க,
தன் மகன் சிங்காரத்தையும் தங்கராசு உடன் பேசக்கூடாது என்று கண்டிசன் போட்டு தன்
பக்கம் இழுத்து கொண்டார்...
அப்பப்ப தங்கராசுவை காட்டி அவனைப்போல தன் மகன்
சிங்காரம் பொறுப்பா இல்லையே என்று நீட்டி முழக்கவும் தவறவில்லை..
இப்படியே ஆண்டுகள் பல ஓடி விட, பிள்ளைகளும் வளர்ந்து விட்டனர்..
இப்படி இரு குடும்பமும் எதிரும் புதிருமாக
முட்டி கொண்டு நிக்க, அதை அறியாத பருவ மங்கையாக மலர்ந்து நின்ற தங்கம்மா எதிராளியின் மகனின் காதல் வலையில்
விழுந்தாள்..
வயலில் வேலை செய்யும் தன் அண்ணனிற்கு தினமும் சாப்பாடு எடுத்துச் செல்வாள் தங்கம்மா..
அதே நேரம் அப்பப்ப சிங்காரமும் வந்து தன்
பெற்றோருக்கு வயலில் உதவிக் கொண்டிருப்பான்..
பாவாடை சட்டையில் சிறு பெண்ணாக சுற்றி
கொண்டிருந்தவள் பருவம் அடைந்ததும் முதன் முறையாக ஒரு நாள் தாவணி பாவாடை அணிந்து
தலை நிறைய பூவை வைத்து கொண்டு தன் நீண்ட ஜடையை முன்னால் தொங்க விட்டு அதன்
குஞ்சத்தை ஒரு கையால் பிடித்து ஆட்டி கொண்டே ஏதோ ஒரு பாட்டை முனுமுனுத்தவாறு தன்
அண்ணனுக்கு சாப்பாடு கொண்டு வந்தாள்..
அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த
சிங்காரம் தங்கம்மாவை தாவணி பாவாடையில் வனப்பாக மலர்ந்து நின்றவளை கண்டதும்
அதிசயித்து கண்களை அகல விரித்தான்..
உள்ளுக்குள் ஏதோ புரள, அவன் கண்கள் ஆர்வமாக தங்கம்மாவையே பின்
தொடர்ந்தது.. எப்படியோ அவளை பருவ மங்கையாக பார்த்த அந்த கணமே அவளிடம் மயங்கி போய்
விட்டான்..
அதன்பிறகு தங்கம்மாவை பார்க்க என்றே அடிக்கடி
வயலுக்குச் செல்ல ஆரம்பித்தான் சிங்காரம்.. என்றும் இல்லாத அதிசயமாக தங்கள் மகள்
வயலுக்கு வந்து வேலை செய்வதை கண்டதும்
அவன் பெற்றோருக்கு பெரும் நிம்மதியாக இருந்தது..
எப்படியோ இதுவரை வயல் பக்கமே எட்டி
பார்க்காதவன் இப்பயாவது வந்தானே.. என்று பெருமை பட்டு கொண்டனர்..
இந்த நிலையில் தங்கராசுக்கு திருமண வயது வந்துவிட, அவன் அன்னை வற்புறுத்தி பக்கத்து
ஊரைச் சேர்ந்த ஒரு ஏழைப் பெண்ணான கண்ணம்மாவை மணமுடித்து வைத்தார் பாப்பாத்தி..
மருமகள் கண்ணம்மாவும் நல்ல குணவதி..
அவள் புகுந்த வீட்டுக்கு வந்த சில நாட்களிலேயே
புகுந்த வீட்டு ஆட்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு பொருத்தமாக பழகிக் கொண்டாள்..தங்கம்மாவையும்
தன் தோழியாக பாவித்து பழக, தங்கம்மாவுக்கும் தன் அண்ணி மீது
பிரியம் கூடியது..
அடுத்த வருடத்திலேயே அவர்களின் அன்புக்கும்
ஆசைக்கும் வாரிசாக செல்ல மகன் பிறந்து விட்டான்.
அப்பொழுது அந்த கிராமத்தில் அம்மன்
திருவிழாவுக்காக நளதமயந்தி தெருக்கூத்து நடந்தது.. அதை பார்த்த தங்கம்மா உடனே தன்
அண்ணன் மகனுக்கு பெயரை தேர்ந்தெடுத்து விட்டாள்..
தன் அண்ணன் மகன் குணத்திலும் தர்மத்திலும்
பெரிய மஹாராஜாவாக வர வேண்டுமென்று எண்ணி அப்படிபட்ட குணத்தை உடைய அந்த
பாண்டவர்களில் மூத்தவன் தர்மனுக்கு முன்னாலே பிறந்த நிடத நாட்டு மன்னன் நள மஹாராஜா பெயரை வைக்க வேண்டும் என்று சொல்லி நளன்
என்று பெயரிட்டாள்..
தங்கம்மாக்கு தன் மருமகன் நளன் என்றால் கொள்ளை பிரியம்.. அவன் அம்மாவிடம் இருந்ததை விட அத்தையிடம் தான் அதிகம்
இருந்தான்..
இந்த நிலையில்தான் ஒரு நாள் வயலில் வேலை செய்து
கொண்டிருந்த தங்கராசுவிடம் மீண்டும் வம்பு இழுத்தனர் கன்னியம்மாவும் அவர்
கணவனும்..
எப்படியோ வரப்பு தகராறு வாய்த்தகராறு ஆகி
விட்டது.. எப்பொழுதும் பொறுமையாக இருக்கும் தங்கராசு அன்று தன் பொறுமையை இழந்து
அடிதடியில் இறங்கிவிட்டான்..
கோபத்தில் எல்லை மீறி கன்னியம்மாவின் கணவன்
அருணாச்சலத்தை அடித்து விட, அவர்கள் கோபம் கொண்டு நேராக சென்று போலிஸில்
புகார் கொடுத்தனர்.. போலிஸ் விசாரணை என்று தங்கராசுவை ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்று விட்டனர்..
தங்கராசுவை பற்றி தெரிந்து இருந்ததால் பேருக்கு
விசாரித்து விட்டு பிறகு அவனை விட்டு விட்டனர்..
அதில் இருந்து இரு குடும்பமும் இன்னும் மோசமாக எதிரும்
புதிருமாக திருப்பிக் கொண்டு இருந்தனர்..
இப்படி பெரியவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்க, இளையவர்களான சிங்காரமும் தங்கம்மாவும்
அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வெறும் பார்வை
என ஆரம்பித்து அதுவே வளர்ந்து கண்களால்
பேசி தங்களுக்குள் நேசத்தை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தனர்..
தங்கம்மா வயலுக்கு வரும் நேரத்தில் எல்லாம் ஆஜர்
ஆகி விடுவான் சிங்காரம்.. தங்கம்மாவிடம் கண்களால்
தூது விட்டும் ஏதாவது கிண்டலாக பார்த்தும் குறும்பு புன்னகை சிந்தியும் வழியில்
தனியாக மாட்டினால் அவளிடம் குறும்பாக பேசி வம்பு இழுத்தும் தன் காதலை
தங்கம்மாவுக்கு தெரிவித்துக் கொண்டிருந்தான்..
முதலில் அவனை முறைத்து விட்டு ஒதுங்கி போனவள்
அவனும் விடாமல் தொடர்ந்து தங்கம்மாவை நெருங்க, எப்படியோ
அவனுடைய சில்மிஷங்கள் சேட்டைகள் அவளுக்கு பிடித்துப் போக கூடவே வயது கோளாறும் சேர்ந்து
கொள்ள, சிங்காரம் வலைத்த காதல் வலையில்
விழுந்தாள் அந்த பேதைப்பெண்..
கொஞ்சம் கொஞ்சமாக அவனை விரும்ப ஆரம்பித்தாள்.. ஆனாலும்
பெரியவர்களின் தகறாரால் மனம் விட்டு
இருவரும் பேசிக் கொள்ளவில்லை..
அப்படியே கொஞ்ச நாட்கள் ஓடிப்போக நளன் க்கு மூன்று வயது இருக்கும் பொழுது தங்கம்மாவுக்கு
மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர்.. அதை கேட்டு அதிர்ந்து போனாள் தங்கம்மா...
தன் மனதில் சிங்காரம் முழுவதும் நுழைந்து விட, இப்ப எப்படி வேற ஒருத்தனை திருமணம்
செய்து கொள்வது என்று இடிந்து போனாள்..
அவள் மனதில் இருப்பதை வெளியிலும் சொல்ல முடியாமல் தவித்து வந்தாள்.. இந்த
நிலையில் அவளை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையை பார்க்க அழைக்க, அவளோ எனக்கு திருமணத்தில் விருப்பம்
இல்லை..
என்னால் யார் முன்னாடியும் வந்து நிக்க முடியாது என்று தகராறு பண்ணி
வந்திருந்தவர்களை திருப்பி அனுப்பினாள்..
அதை கண்டு அனைவரும் குழம்பிப் போயினர்.. இந்த
பொண்ணுக்கு என்னாச்சு என்று யோசிக்க,
அவள் அண்ணி கண்ணம்மா மட்டும் தங்கம்மாவை தனியாக அழைத்து விசாரிக்க தங்கம்மாளும் அதற்குமேல்
மறைக்காமல் சிங்காரத்தை விரும்பும் உண்மையை ஒத்துக் கொண்டாள்..
கண்ணம்மாவும் அதிர்ந்து போய் தங்கம்மாவுக்கு
புத்தி சொல்ல, அவளோ அதையெல்லாம் காதில் வாங்காமல்
கட்டினா சிங்காரத்தைதான் கட்டுவேன் என்று சொல்லி பிடிவாதமாக சொல்லி விட்டாள்..
கண்ணம்மாவும் வேற வழி இல்லாமல் தன் கணவனிடம்
சொல்ல, தன் மனைவி சொன்னதைக் கேட்டு அதிர்ந்து
போனான் தங்கராசு...
உடனே மற்ற அண்ணன்களை போல அருவாளை எடுத்து
கொண்டு அவளை வெட்ட போகாமல் தங்கம்மாவை தனியாக அழைத்து அவளை தன்னொடு சேர்த்து அணைத்து
கொண்டு எவ்வளவோ புத்திமதி சொன்னான்...
சிங்காரம் நல்லவன் என்றாலும் வீட்டு
பெரியவர்கள் அவ்வளவு நல்ல குணம் கிடையாது.. அந்த வீட்டில் தன் தங்கை வாழப் போனால்
அவளால் நிம்மதியாக வாழ முடியாது..
அவளுக்கு பெரிய இடத்தில் பட்டணத்தில் வேலை
செய்யும் மாப்பிள்ளை நிறைய பேர் கேட்கிறார்கள்.. அவர்களை கட்டி கொண்டால் அவள்
வாழ்க்கை நல்லா இருக்கும் என்று எவ்வளவோ
எடுத்து சொன்னான் தன் தங்கை மனதை மாற்ற எண்ணி..
ஆனால் இளங்கன்று பயம் அறியாது என்பது
போல அப்ப எதிர்கால வாழ்க்கை பற்றி எல்லாம் யோசிக்கவில்லை தங்கம்மா..காதல்
மயக்கத்தில் அவள் கண் முன்னே சிங்காரம் மட்டும்தான் தெரிந்தான்..
உடனே தன் அண்ணன் சொல்லியதை எல்லாம் ஏற்காமல், கட்டினால் சிங்காரத்தைதான் கட்டுவேன்
என்று மீண்டும் பிடிவாதமாக சொல்லிவிட்டாள்..
தன் தங்கையின் பிடிவாதத்தை உணர்ந்தவன் அதற்கு மேல்
தாமதிக்காமல் சிங்காரத்தின் வீட்டிற்கு சென்றவன் கல்யாண பேச்சை ஆரம்பித்தான்..
முதலில் அவனை வீட்டிற்கு உள்ளே விடாமல் தடுத்த கன்னியம்மா
பின் சிங்காரத்தின் வற்புறுத்தலால் உள்ளே அனுமதித்தார்..
தங்கராசுவும் அன்று அவன் நடந்து கொண்டதுக்கு அனைவரிடமும்
மன்னிப்பு கேட்டுக் கொண்டு இனிமேல் இரண்டு பக்கமும் பகையாளியா இல்லாமல் உறவாளியா
இருக்கலாம்.. நடந்த போன மனகஷ்டத்தை மறைக்க, இது ஒரு நல்ல விஷயமாக இருக்கட்டும் என்று சொல்லி
ஆரம்பித்தான்..
கன்னியம்மாவும் அவர் கணவரும் ஒன்றும் புரியாமல்
ஒருவரை ஒருவர் பாத்து கண்ணால் ஜாடை சொல்லி என்ன என்று பேசி கொள்ள, தங்கராசு மெல்ல தயக்கத்துடன்
சிங்காரமும் தங்கம்மாவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புவதாக சொல்லி அவர்கள்
திருமணத்தை நடத்தி வைக்க வேண்டினான்..
அதை கேட்டு எரிமலையானார் கன்னியம்மா..
“என்ற புருஷன் மீது கை வைத்தவன் வூட்ல
நான் சம்பந்தம் பண்ணனுமா? அது இந்த ஜென்மத்தில நடக்காது.. அந்த மேனா மினுக்கி அடிக்கடி
வயலுக்கு வந்தது என் மவனை மயக்கத்தானா?
இப்பத்தான எல்லாம் புரியுது..வரப்புல
ஆடி அசஞ்சு வர்றப்பயே நான் கொஞ்சம் சுதாரிச்சு என்ற மவனை பூட்டி வச்சிருக்கோனும்.. எப்படியோ கோட்டை
விட்டுபுட்டேன்.. அந்த சிறுக்கியும் என் மவனை வளச்சு போட்டுகிட்டாளாக்கும்..
அவ என்னதான் மாய மந்திரம் போட்டு என்ற
மவனை மயக்கினாலும் அவன் நான் சொல்லற பேச்சை தட்ட மாட்டான்... அதனால் இன்னொரு தரம்
இந்த கல்யாண பேச்சை எடுக்க என்ற வீட்டு படி ஏறி வந்த மானம் மருவாதி இருக்காது
சொல்லிபுட்டேன்..
முதல்ல எழுந்து வெளில போடா...
வந்துட்டான்... அவன் ஆசை தொங்கச்சியை என்ற
வூட்டுக்கு தள்ளி விட்டுபோட்டு அப்படியே
என்ற சொத்தையும் அவன் பேருக்கு
எழுதிக்கலாம்னு திட்டம் போட்டு வந்திருக்கான்.. அது இந்த ஜென்மத்துல
நடக்காது..நினைப்புல வச்சுக்க..
டேய் சிங்காரம்.. இனிமேல் அந்த
சிறுக்கியை பார்க்கறதோ பேசறதோ வச்சுகிட்ட, அப்புறம் இந்த ஆத்தாவை உசுரோடவே பாக்க மாட்ட.. ஆமாம் சொல்லிபுட்டேன்..
“ என்று மூக்கை உறிஞ்சியவர் முந்தானையால் முகத்தை
துடைத்து கொண்டு தன் மகனை ஓரக் கண்ணால் பார்த்தார்...
சிங்காரமும் தன் அன்னை உயிரை
விட்டுவிடுவேன் என்று சொன்னதை கேட்டு கொஞ்சம் ஆடிப் போனான்.. தங்கராசுக்கு என்ன
பதில் சொல்வது என்று புரியாமல் தலையை குனிந்து கொண்டான்..
தங்கராசும் அதற்கு மேல் எதுவும் பேச
முடியாமல் வருத்தத்துடன் எழுந்து சென்று விட்டான்..
சிங்காரமும் தன் அன்னையிடம் எவ்வளவோ
எடுத்து சொல்லி மன்றாடி பார்த்தான்.. அவர் ஒத்து கொள்ளாமல் ஒரே பிடிவாதமாக மறுத்து
விட, வேற வழியில்லாமல் ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் பொள்ளாச்சியில் இருந்த முருகன் கோவிலுக்கு தங்கம்மாவை அழைத்துச் சென்று அவள்
கழுத்தில் தாலியை கட்டி விட்டான்..
முதலில் தங்கம்மாவும் தன் அண்ணனுக்கு
தெரியாமல் ஓடிப்போய் கல்யாணம்
பண்ணிக்கலாம் என்று சிங்காரம் சொல்ல, அதற்கு ஒத்து கொள்ளவில்லை..
பின் கொஞ்சம் கொஞ்சமாக அவள் மனதை
மாற்றி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து தன் நண்பர்கள் சிலருடன் அவளை அழைத்து சென்று தாலியை கட்டி விட்டான்
சிங்காரம்..
திருமணத்தை முடித்துக் கொண்டு மாலையும் கழுத்துமாக கன்னியம்மா வீட்டு வாசலில் வந்து
நின்றனர் இருவரும்..
அதைக் கண்டு அதிர்ந்து போன கன்னியம்மா
அவர்களை வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி திட்டி வீட்டிற்குள்ளேயே விட
மறுத்துவிட்டார்.. சிங்காரம் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை..
கண்ணில் நீருடன் தங்கம்மாவும் சிங்காரமும்
தங்கம்மா வீட்டிற்கு செல்ல, அதை கண்டு அதிர்ந்து போன தங்கராசு தன் தங்கை முகத்திலயே முழிக்க
மாட்டேன் என்று சொல்லி முகத்தை திருப்பி கொண்டு சென்று விட்டான்..
தான் இவ்வளவு தூரம் எடுத்து சொல்லியும்
அதை கேட்காமல் அவள் இப்படி செய்து விட்டாளே என்று தங்கராசு மனம் இறுகி போனான்...
கண்ணம்மா தான் தன் கணவனுக்கு எடுத்துச்
சொல்லி பார்த்தாள்..
“ஏனுங்க.. ஏதோ சின்ன சிறுசுங்க..
அவசரத்துல தெரியாம இப்படி பண்ணிபுட்டாங்க... என்னதான் இருந்தாலும் தங்கம் உன்ற
தங்கச்சி இல்லேனு ஆகிபோய்டுமா? நம்ம மாப்பிள்ளை வூட்டில ஏத்துக்காம அவுகளை வெளியில்
அனுப்பிட்டாங்க..
நாமளும் அவுகளை ஏத்துக்காம துரத்திபுட்டா அவுக எங்கன போவாக...கொஞ்சம் கோபத்தை விட்டு தாழ்ந்து
வாங்க.... “ என்று இன்னும் ஏதேதோ எடுத்து
சொல்லி தன் கணவன் கோபத்தை தணிக்க முயன்றார்...
“ம்ம்ம்ம் என்ற பேச்சை கேட்காம
ஓடிப்போன அந்த ஓடுகாளி என்ற தங்கச்சியே இல்ல... இனிமேல் நான் அவ மூஞ்சியில முழிக்க
மாட்டேன்..கூட பொறந்த பொறப்புக்காக நீ வேணா
பாத்து அவுகளுக்கு என்ன செய்யணுமோ செஞ்சுக்க...” என்று சொல்லி துண்டை எடுத்து உதறி
தோளில் போட்டு கொண்டு வெளியில் சென்று விட்டான்...
கண்ணம்மாவும் தன் கணவன் குணம் அறிந்து
இருந்ததால் அதற்குமேல் அவனை வற்புறுத்தாமல் மணமக்கள் இருவரையும் வீட்டிற்கு உள்ளே
அழைத்து பாலும் பழமும் கொடுத்தார்..
தங்கம்மா தாய் பாப்பாத்தியும் தன் மகள்
செஞ்சு வச்ச காரியத்தை கண்டு மனம் தாங்காமல் அவர்களை பார்க்க விரும்பாமல் உள் அறையிலயே இருந்து விட்டார்.. பெத்து ஆசையாக
செல்லமாக வளர்த்த மகளை கூட பார்க்க வராமல் மறுத்து விட்டார்...
கண்ணம்மா தான் அந்த நிலையில் அவர்கள்
பக்கம் நின்றது..
அந்த ஊரிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு
பிடித்து அதில் மணமக்கள் இருவரையும் குடி வைத்தார்.. அவர்கள் குடும்பம் நடத்த ஒரு
மாதத்திற்கான மளிகை சாமான்கள், அரிசி , பருப்பு என்று எல்லாம் வாங்கி கொடுத்து இருவரையும் வாழ்த்தி விட்டு
சென்றார்..
புகுந்த வீட்டில் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும்
பிறந்த வீட்டிலும் தன் அண்ணனும் தாயும் முறைத்து கொண்டு நிக்க, தன் அண்ணியாவது இந்த அளவுக்கு உதவ
முன் வந்தாளே என்று கண்ணம்மா மீது மிகுந்த அன்பும் நன்றி உணர்ச்சியும்
தங்கம்மாவுக்கு...
சிங்காரமும் அந்த கிராமத்திலயே மற்றவர்கள்
வயலில் கூலிக்கு வேலைக்கு போக, அதை கண்டு தங்கராசுக்கு மனம் பதைத்தது..
சிங்காரத்துக்கு பல ஏக்கர் நிலம்
இருக்க, அவன் பத்து பேருக்கு வேலை
கொடுக்கும் நிலையில் இருக்க, இப்படி தன் தங்கைக்காக அவன் பெற்றோர்களை எதிர்த்து தன் தங்கையை
மணந்ததால் இப்படி அடுத்தவங்க வயலுக்கு
கூலிக்கு போறானே என்று வருத்தமாக இருந்தது..
கன்னியம்மாவுக்கும் தன் மகனை அடுத்த
வயலில் வேலை செய்து பார்க்க உயிரே போனது..அவனை அழைத்து வந்து தன்னுடன் வைத்து
கொள்ள துடித்தாலும் அடுத்த நொடி அவன் பொண்டாட்டி தங்கம்மாவும் அவள் அண்ணன்
தங்கராசுவும் கண் முன்னே வர, உடனே இறுகி விடுவார்...
மேலும் தன் மகனை தன்னிடம் இருந்து
பிரித்த தங்கம்மா மீது இன்னும் வெறுப்பை வளர்த்து கொண்டார்..
சிங்காரமோ தான் அடுத்த வயலில் கூலி
வேலை செய்யறோமே என்றெல்லாம் யோசிக்காமல் தன் மனைவிக்காக அதை பொறுத்து கொண்டு அவளை
நல்ல படியாகவே பார்த்து கொண்டான்..
தங்கம்மாவுக்கும் இப்படி இரண்டு
பக்கமும் ஏற்று கொள்ளாமல் தள்ளி வைத்து விட்டார்களே என்று வருத்தமாக
இருந்தது..அதுவும் தன் அண்ணன் அவளிடம் பாராமுகமாக இருப்பதுதான் அவள் மனதை கூறு
போட்டது..
எத்தனையோ முறை தன் அண்ணனிடம் பேச
முயன்றாள்.. ஆனால் தன் தங்கையை கண்டாலே உடலை விறைத்து கொண்டு முகத்தில் இறுக்கத்துடன் மூஞ்சியை
திருப்பி கொண்டு நகர்ந்து சென்று விடுவான் தங்கராசு...
அதனால் இன்னும் ஒடிந்து போனாள்
தங்கம்மா.. அவளுக்கு ஒரே ஆறுதல் அவள் கணவனின் அன்பும் காதலும் தான்..
வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து
விட்டால் தன் மனைவியை விட்டு பிரியாமல் அவளுடனே சுத்தி கொண்டிருப்பான் சிங்காரம்..
தன் காதலையும் அன்பையும் எல்லாம் தன் மனைவியிடம் கொட்டி அவளை
உள்ளங்கையில் வைத்து தாங்கினான்.. அதில் கொஞ்சம் தன் வேதனைகளை மறந்து போவாள்
தங்கம்..
இந்த நிலையில் தங்கம்மா கருவுற்றிருக்க, அதை கேட்டு கண்ணம்மாவுக்கு ரொம்ப
மகிழ்ச்சி.. ஆனால் பெரியவர்கள் இன்னும் இறங்கி வராமல் அதே பிடிவாதத்துடன் இருந்து
விட, கண்ணம்மா தான் தன் நாத்தனாருக்கு எல்லாம் பார்த்து பார்த்து
செய்தாள்..
முதல் மூன்று மாதம் மசக்கையில் படுத்து
விட, கண்ணம்மாதான் அவள் வாய்க்கு பிடித்ததை எல்லாம் செஞ்சு கொடுத்தாள்..அதை கண்டு தங்கம்மாவும் உருகி விட்டாள்..
“ரத்த சம்பந்தமே இல்லாத அண்ணி தனக்காக
இவ்வளவும் செய்யறாளே.. ஆனால் என்னை பெத்த ஆத்தாவும் அண்ணனும் அவர்கள் வீராப்புதான்
பெருசுனு முறுக்கி கிட்டு இருக்கறாங்களே.. “ என்று வேதனையாக இருந்தது
அவள் முகத்தில் இருந்த ஏக்கத்தை கண்டு
கொண்ட கண்ணம்மா
“எல்லாம் என் மருமவ வந்துபுட்டா மாறி
போய்டும் தங்கம்.. நீ எதுவும் மனசை போட்டு குழப்பிக்காம தங்க விக்கிரகம் மாதிரி எனக்கு ஒரு மருமவளை பெத்து கொடு..
அந்த குட்டி தங்கத்தை பார்த்ததும் எல்லாரும்
எப்படி ஓடி வர போறாங்க னு பாரு... அதுக்காகவாது நல்லா சாப்பிடு.. “ என்று தன் நாத்தனாரின் கன்னம்
வருடி சிரித்து அவள் கவலையை மாற்ற ஆரம்பித்தாள் கண்ணம்மா ..
அதிலிருந்து தங்கம்மாவும் தனக்கு
பொண்ணுதான் பிறக்கணும்.. என்று உருப்போட ஆரம்பித்தாள்.. எல்லா தெய்வத்தையும் வேண்ட
ஆரம்பித்தாள்..
அவள் வேண்டுதல் கேட்டதாலோ இல்ல அந்த
காலத்தின் தீர்ப்போ பத்து மாதத்தில் கண்ணம்மா சொன்ன மாதிரியே தங்க விக்கிரகம்
மாதிரியே செக்க செவேல் என்று தன் மகளை ஈன்றெடுத்தாள் தங்கம்மா..
பிறந்தது பெண் என்றதும் தங்கம் அடைந்த
மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..
காதலித்தவனையே கரம் பிடித்தபொழுது
கூட இல்லாத மகிழ்ச்சி தனக்கு பொண்ணு
பிறந்திட்டானு தெரிஞ்சதும் உள்ளுக்குள் துள்ளி குதித்தாள் தங்கம்..
கண்ணம்மாவும் மகிழ்ந்து போய் ஒரு தாயாக
தங்கம்மாவை பார்த்து கொண்டார்..
பக்கத்தில் இருந்த டவுன்
ஆஸ்பத்திரியில் தங்கம்மாவை பிரசவத்துக்காக சேர்த்து இருக்க, கண்ணம்மா தங்கம்மாவை பார்த்து கொண்டு
அங்கயே தங்கி விட்டார்..
என்னதான் தன் தங்கைமீது கோபமாக
இருந்தாலும் இல்லை கோபமாக இருப்பதாக காட்டி கொண்டாலும் தன் மனைவி தன் தங்கைக்கு
உதவுவதை தடுக்கவில்லை தங்கராசு..
தன் மனைவி மூலமாக தன் தங்கைக்கு
மறைமுகமாக உதவிதான் வந்தான் அவனை அறியாமலயே..
தங்கத்திற்கு பிரசவம் ஆன இரண்டாவது நாள் தன் அன்னையை கேட்டு நான்கு
வயது சிறுவன் நளன் அடம் பிடிக்க, வேற வழியில்லாமல் தங்கராசு அவனை அழைத்து கொண்டு தங்கம் இருந்த அந்த
மருத்துவமனைக்கு வந்தான்..
அவனுக்குமே தன் தங்கைக்கு மகள்
பிறந்திருக்கிறாள் என்று கேட்டதில் இருந்தே உள்ளுக்குள் பரவசமாக
இருந்தது...அதுவும் கண்ணம்மா அந்த குட்டியை பற்றி பெருமையாக சொல்ல சொல்ல
அவனுக்கும் தன் தங்கை மகளை தன் மருமகளை
பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருந்தது..
ஆனால் தன் ஈகோவை விட்டு இறங்கி வர
முடியாமல் முறுக்கி கொண்டு இருந்தான்..
மருத்துவமனைக்கு வந்ததும் தங்கம்மா
தங்கி இருந்த அறையை விசாரித்து செல்ல, அருகில் சென்றதும் தன் மருமகளின் அழுகுரல் கேட்க, அதை கேட்டதும் அதுவரை இழுத்து
பிடித்திருந்த வைராக்கியம் வீராப்பு எல்லாம் காற்றில் பறக்க, வேகமாக அறைக்கு உள்ளே சென்றான்
தங்கராசு....
திடீரென்று தன் முன்னே வந்து நின்ற தன்
அண்ணனை காண திகைத்து போனாள் தங்கம்மா.. அவள் கண்ணில் ஆனந்த கண்ணிர் வழிய, உடனே பதறியவன் அவள் அருகில் சென்று
“ஹே பைத்தியம்.. எதுக்கு இப்போ அழுவற..
பச்ச உடம்புக்காரி உணர்ச்சி வசப்படக்கூடாது..உடம்புக்கு ஒத்துக்காது.. கண்ணைத்
தொட.. “ என்று செல்லமாக அதட்டி அவள் கண்ணில் விழுந்த நீரை துடைத்து விட, அவளோ தன் அண்ணனின் கையை பற்றி கொண்டு
கண்களில் ஒற்றி கொண்டாள்..
“என்னை மன்னிச்சிடு ணா... “ என்றாள்
குரல் வராமல்..
அவனும் வாஞ்சையுடன் தலையை வருடி
கொடுத்து
“ஹ்ம்ம்ம் பழசை எல்லாம் பேச வேண்டாம்..
நீயும் மாப்பிள்ளையும் என்னை மன்னிச்சிடுங்க..உன் மாமியார் வூட்ல ஏத்துக்காதப்ப, நானாவது உங்கள
ஏத்துகிட்டிருக்கோனும்.. இப்படி ரெண்டு பேரையும் கஷ்டபட விட்டிருக்க கூடாது.. “
என்று கண் கலங்கினான்..
அதை கண்டு பதறிய தங்கம்,
“ஐயோ.. கஷ்டம் எல்லாம் இல்ல ணா.. அவர்
என்னை நல்லாதான் பார்த்து கிட்டார்..கூடவே தான்
அண்ணியும் இருந்து என்னை பார்த்துகிட்டாங்களே...“
என்று சொல்லி தன் அண்ணனுக்கு சமாதானம் சொன்னாள்..
தங்கராசுவும் தன் கண்ணை துடைத்து
கொண்டு தன் மருமகளை காண அவளோ கையை காலை ஆட்டி அவனை பார்த்து சிரிப்பதை போல
இருந்தது..
சின்ன வயதில் தங்கம்மாவை பார்த்த
பொழுது எப்படி இருந்தாளோ அதே மாதிரியே அவள் மகளும் இருக்க, அதை கண்டு சிலிர்த்து போய் அவளை
அப்படியே அள்ளி எடுத்து தன் மார்போடு அணைத்து கொண்டான் தங்கராசு...
அதை கண்டு தங்கம்மாவுக்கு மனம்
நிறைந்து போனது..அவள் கண்ணிலும் ஆனந்த கண்ணீர் வழிய, மெல்ல துடைத்து கொண்டாள்..
அதுவரை அங்கு நடந்ததை பார்த்து கொண்டிருந்த
அந்த குட்டி பையன் நளன் மெதுவாக தன் அத்தையிடம் சென்று
“அத்த.. யார் இந்த குட்டி பாப்பா..? “ என்றான் ரகசியமாக...
அதை கேட்டு சிரித்த தங்கம் அருகில்
நின்றிருந்தவன் கன்னம் வருடி
“அவதான் உன் பொண்டாட்டி டா..
மருமவனே... “ என்று சிரித்தாள்...
“பொண்டாட்டி னா? “
என்று தன் கன்னத்தில் தன் பிஞ்சு விரலை வைத்து யோசித்தவன்
“ஓ.. என் அப்பாவுக்கு ஆத்தா இருக்கிற
மாதிரி மாமாவுக்கு நீ இருக்கிற மாதிரி எனக்கு துணைக்கு இனிமேல் இவதான் இருக்க
போறாளா? “ என்றான் கண்கள் விரிய...
அதை கேட்டு அங்கிருந்த பெரியவர்கள்
ஆச்சர்யமாக பார்க்க, தங்கத்துக்கோ பூரிப்பாக இருந்தது...
“ஆமாண் டா...என் செல்ல மருமவனே..! இவதான் உன் பொண்டாட்டி.. இனிமேல் இவளை நீ
பத்திரமா பார்த்துக்கோனும்..உனக்கு எல்லாம் அவ தான்..” என்று அந்த பிஞ்சின் மனதில்
பதிய வைத்தாள் தங்கம்மா..
அவனும் அதையே பிடித்து கொண்டு என்
பொண்டாட்டி என்றே அழைத்து ஆசையுடன் தன் தந்தை கையில் இருந்த அந்த பட்டு
ரோஜாவுக்கு கன்னத்தில் முத்தமிட்டான்..
அந்த குட்டியும் மகிழ்ச்சியில் கையை
காலை ஆட்ட அதை கண்டவனுக்கு இன்னும் பரவசமானது... அவளையே ஆசையாக பார்த்து
கொண்டிருந்தவன் தன் தந்தை கிளம்பும் பொழுது அந்த குட்டியை விட்டு பிரிய மனம்
இல்லாமல் அடம்பிடித்து தன் தந்தையுடன் வீட்டுக்கு போகாமல் தன் தாயுடன் அங்கேயே
தங்கி விட்டான்..
இங்கும் அங்கும் நகராமல் அன்று
முழுவதுமே அந்த குட்டி பக்கத்திலயே அமர்ந்து கொண்டு அவளையே பரவசத்துடன் பார்த்து
கொண்டிருந்தான் நளன்..
மூன்றாம் நாள் தங்கம் டிஸ்சார்ஜ் ஆகி வர, கண்ணம்மா தங்கள் வீட்டிற்கே அழைத்து
சென்று விட்டாள்..
சிங்காரத்துக்கும் ரொம்ப மகிழ்ச்சியாக
இருந்தது.. அதுவும் தங்கராசு வே சிங்காரத்திடம் மன்னிப்பு கேட்க அவனும் பதறி
“நான் தான் உங்க தங்கையை கட்டாய படுத்தி அழைத்து போனேன்
மச்சான்.. நீங்க தான் என்னை மன்னிக்கோனும்...”
. என்று மனதார மன்னிப்பு கேட்டான்...
தங்கம்மா அன்னை பாப்பாத்தியும் மனம்
இறங்கி தன் மகளை ஏற்று கொள்ள அதன் பின் தங்கம் பொறந்த வீட்டில் ராஜ மரியாதைதான்
தங்கம்மாவுக்கு..ஏழு மாதம் வரைக்குமே அவளை அனுப்பாமல் தன் வீட்டிலயே வைத்து
பார்த்து கொண்டான் தங்கராசு..
தன் அத்தை தன்னுடனே தங்கள் வீட்டில்
தங்கி விட, நளனுக்கு இன்னும் கொண்டாட்டமக இருந்தது..எப்பொழுதும் தன் அத்தை
மகளையே சுற்றி சுற்றி வந்தான்..
அந்த குட்டிக்கு ஏழு மாதம் முடிய, தாய் மாமன் சீர் செய்து அவளை
முறைப்படி அவள் குடி இருந்த வாடகை வீட்டுக்கு அனுப்பி வைத்தான் தங்கராசு..
இங்கயே இருக்க சொல்ல, தங்கம்மா மறுத்து விட்டாள்.. என்னதான்
பொறந்த வீட்டில் தாங்கினாலும் ஒரு கட்டத்துக்கு மேல் தன் வீட்டில் இருப்பதுதான்
முறை என்று சொல்லி கிளம்பி விட்டாள்..
எல்லாம் நல்ல படியாக செல்ல, அவள் புகுந்த வீட்டில் மட்டும் யாரும்
வந்து தங்கள் வாரிசை பார்க்கவில்லை என்று வருத்தமாக இருந்தது தங்கம்மாவுக்கு..
சிங்காரத்துக்கும் அந்த கவலை இருக்க,
எப்படியோ தன் மாமியார் வீட்டிலயாவது
ஏத்து கொண்டார்களே என்று கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.. சிங்காரமும் தன் மனைவி
மீதும் மகள் மீதும் பாசமாகத்தான்
இருந்தான்..
தங்கம்மா மனதில் மட்டும் ஒரு சிறு
உறுத்தல் இருந்து கொண்டேதான் இருந்தது....
என்னதான் தன் அண்ணன் இப்பொழுது
தன்னிடம் சிரித்து பேசினாலும் ஒரு காலத்தில் தான் பண்ணிய முட்டாள் தனத்தால் தான்
தன் அண்ணனுக்கும் பொறந்த வீட்டுக்கும் எவ்வளவு கெட்ட பெயர் என்று எண்ணி அதற்கு கைமாறாக
தன் மகளையே அந்த வீட்டுக்கு மருமகளாக்க வேண்டும் என்று உறுதி செய்து கொண்டாள்..
தன் பொறந்த வீட்டில் இருந்து கிளம்பும்
பொழுது தன் அண்ணனிடம் தன் மகளை அவர் வீட்டு மருமகளாக ஏற்க வேண்டும் என்று சொல்ல, தங்கராசுவும் சிரித்து கொண்டே
“அப்படியே பண்ணலாம்.. “ என்று தன் தங்கையின்
கை பிடித்து வாக்கு கொடுத்தான்..
அதில் உள்ளம் குளிர்ந்து விட, தன் மகளுக்கு ஆசையாக தமயந்தி
என்று பெயரிட்டாள் தங்கம்..
அன்று பார்த்த தெருகூத்தில் தமயந்தி
தன் கணவன் மீது எவ்வளவு பிரியமாக இருப்பாள் என்றதை கண்டதில் இருந்தே அந்த நள
தமயந்தி போல தன் அண்ணன் மகனும் தன் மகளும் இருக்க வேண்டும் என்று தமயந்தி என்று
பெயரிட்டாள்..
அன்று அந்த கூத்தை முழுவதுமாக பார்த்து
இருக்கவில்லை தங்கம்மா..ஆரம்பத்தில் கணவன் மனைவியாக மகிழ்ச்சியாக வாழ்ந்த நளன்
தமயந்தி இருவரும் அதற்கு பிறகு சனிபகவானின் சோதனையால் நளன் நாடு வீடு எல்லாம்
இழந்து தன் மனைவி இரு மகள்களை பிரிந்து மறைந்து வாழ்ந்தான்..
தமயந்தியும் தன் கணவனை பிரிந்து அடையாத
துன்பம் இல்லை.. அது அறிந்திருந்தால் ஒரு வேளை தன் மகளுக்கு அந்த பெயரை
வைத்திருக்க மாட்டாளா இருக்கும்..
அவள் அந்த பெயரை வைத்ததாலோ இல்லை அவள்
மகளின் விதியோ அந்த தமயந்தியை போலவே அவளும் வலியும் வேதனையும் அனுபவிக்க
போகிறாள் என்று அறிந்திருக்கவில்லை
தங்கம்மா அன்று...
தமயந்தி பிறந்த கொஞ்ச நாளில் சிங்காரத்தின்
அப்பாவும் ஒரு விபத்தில் இறந்து விட சாவுக்கு வந்திருந்த ஊர்க் காரர்கள் எல்லாம்
கூடிப்பேசி சிங்காரத்தின் அம்மாவை தனியாக இருக்க வேண்டாம் என்று சொல்லி
சிங்காரத்தை அவன் வீட்டிற்கே திரும்ப
வரசொல்லினர்....
கன்னியம்மாவும் முதலில் வேண்டா வெறுப்பாக தன்
மகனையும் மருமகளையும் ஏற்று கொண்டாலும் தன் பேத்தியை கண்டதும் தான் ஆடாவிட்டாலும் தன் தசை
ஆடும் என்பதற்கு ஏற்ப, அந்த குட்டியை அவர் குல வாரிசை
கண்டதும் அவர் மனம் இலகி விட்டது..
கூடவே இன்னும் எத்தனை நாளைக்கு தனியாக இருப்பது
என்று எண்ணி தன் மகனை வீட்டிற்குள் சேர்த்துக்
கொண்டார் கன்னியம்மா...
தங்கமும் மனம் நிறைந்த பூரிப்புடன் தன் புகுந்த
வீட்டில் அடி எடுத்து வைத்து சென்றாள்.. ஆனால் அங்கு சென்ற பிறகுதான் ஏன் அங்க வந்தோம் என்றாகி விட்டது..
தன் மகனையும் பேத்தியையும் ஏற்று கொண்ட
கன்னியம்மாவுக்கு தன் மருமகளை ஏற்று கொள்ள மனம் வரவில்லை..
அவளை பார்க்கும் பொழுதெல்லாம் அவள் அண்ணன் தங்கராசு
தன் புருஷனை அடித்ததே கண் முன்னே வர,
அதில் வெகுண்டவர் தங்கத்தின் மீது
வெறுப்பை உமிழ்ந்தார்..
வார்த்தைக்கு வார்த்தை பேச்சுக்கு பேச்சு தங்கம்மா
பிறந்த வீட்டை குறை சொல்லி குத்தி காட்டிப் பேசினார்..
அதைக் கேட்டு ஆரம்பத்தில் தங்கம்மாவும் அமைதியாகச்
சென்று விட்டாலும் நாளாக நாளாக அவர் பேசும் பேச்சுக்களை காது கொடுத்து கேட்க
முடிவதில்லை..
அதனாலேயே அதை பொறுக்க முடியாத நாட்களில் பொங்கி எழுந்து தன்
மாமியாருக்கு நிகராக சண்டையிட
ஆரம்பித்தாள்.. கூடவே தன் மாமியார் அவளை வீட்டை விட்டு ஓடி வந்தவள் என்றெல்லாம்
குத்தி காட்டி பேசும்பொழுதெல்லாம் மனம் வலிக்கும்..
அப்பொழுது தான் அவள் செய்த தவறும் புரியும்..
இந்த குடும்பத்தை பற்றி தெரிந்ததால்தான் தன்
அண்ணன் சிங்காரத்தை கட்ட வேண்டாமென்று
மறுத்தது.. ஆனால் அவள்தான் புத்தி கெட்டு போய் தலை சுத்தி அந்த சிங்காரத்தின்
பின்னாடி போய் விட்டாள் என்று இருந்தது..
அவள் மாமியார் அவள் பொறந்த வீட்டை பற்றி
கேவலமாக பேசும் பொழுதெல்லாம் அவளுக்குள்
வைராக்கியம் கூடியது..
“நான் கண்டிப்பா என் மகளை என் அண்ணன் வூட்டுக்குத்தான்
மருமகளா அனுப்புவேன்..“ என்று உறுதியாக எண்ணி அதையே உருப்போட ஆரம்பித்தாள்
தங்கம்..
தன் அண்ணன் வீட்டுக்குச் செல்லும்பொழுதெல்லாம்
அவள் தாயிடமும் தன் எண்ணத்தை, ஆசையை சொல்ல
அவரும் தன் பேரனிடம் அவன் பெரியவன் ஆனதும் அவன் அத்த மவளைத்தான் கட்ட
வேண்டும் என்று சொல்லி சொல்லி அவன் மனதிலும்
பதிய வைத்தார் ...
தங்கம்மாவும் நளதமயந்தி கதையை தன் மகளுக்கு
எடுத்துச் சொல்லி அவர்களை போல அவளும் அவள் மாமன்
மகன் நளனை கட்டிக் கொண்டு சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அந்த புரியாத
வயதில் அந்த சிறுமியின் மனதில் பதிய வைக்க முயன்றாள்....
தங்கத்துக்கு எதிராக கன்னியம்மா தங்கராசு
குடும்பத்தையும் அவன் மகன் நளன் ஐ பற்றியும் தன் பேத்தியின் மனதில் தவறாக பதிய
முயன்றார்...
இப்படி ஆளாளுக்கு மாற்றி மாற்றி சொல்ல, தமயந்தி குட்டி குழம்பி போனாள்...
ஆனாலும் இரு பக்கமும் அவர்கள் எதையாவது சொல்லும்பொழுது இருவருக்கும் தலையை
ஆட்டிவிட்டு விட்டால் போதும் என்று துள்ளி குதித்து ஓடி விடுவாள் தமயந்தி.....
பட்டாம்பூச்சியாக சிறகடித்து பறக்கும் அந்த
தமயந்தி குட்டி , தன் அத்தை மகளை மணப்பது ஒன்றே தன்
வாழ்க்கையின் லட்சியமாக வளரும் நளன் இருவரும்
இணைவார்களா? நளன் தமயந்தியை போல இவர்களும்
பிரிந்து கஷ்டபட போகிறார்களா? தொடர்ந்து படியுங்கள்!!
Comments
Post a Comment