தேடும் கண் பார்வை தவிக்க-7

 


அத்தியாயம்-7

ரையை கூட்டும் நீண்ட அழகிய பட்டு பாவாடை...மெரூன் கலரும் பிங் கலரும் கலந்த அழகிய மனதை கவரும் வண்ணத்தில் இருந்தது அந்த பட்டு பாவாடை..

பாவாடையின் கீழ அழகிய சந்தன நிற பார்டர்  வைத்து தைத்திருக்க பாவாடைக்கு மேல அந்த பட்டு பாவாடைக்கு பொருத்தமான பட்டு சட்டையும் கையிலும் கழுத்திலும் ஜிமுக்கிகள்  வைத்து வேலைப்பாடு செய்திருக்க, ஏற்கனவே வெள்ளை வெளேரென்று குட்டி தேவதையாக ஜொலிக்கும் தமயந்தி குட்டி அந்த பட்டு பாவாடை சட்டையில் இன்னும் அழகிய தேவதையாக மிளிர்ந்தாள்....

அந்த பட்டு பாவாடைக்கு தகுந்த மாதிரி அவளுடைய நீண்ட கூந்தலை பின்னி ஜடை போட்டு நுனியில் குஞ்சம் வைத்து கட்டி விட்டிருந்தாள் அவள் அன்னை தங்கம்..

அந்த ஜடையின் ஆரம்பத்தில்,  பின்னி இருந்த ஜடையை  சுற்றி மலரும் முன்னே பறித்து கட்டி வைத்திருந்த குண்டு மல்லியை பந்தாக வட்டமாக சுருட்டி வைத்திருந்தாள்...

இடுப்பில் மெல்லிய தங்க ஒட்டியாணமும் காதில் அழகிய ஜிமிக்கியும்,  கழுத்தில் அந்த பாவாடைக்கு பொருத்தமான டாலர் செயினும் அதன் உள்ளே கல் வைத்த நெக்லசும் அணிந்திருந்தாள்..

அந்த நெக்லஸ் மட்டும் தனியாக எடுப்பாக தெரியற மாதிரி வெளியில் எடுத்து விட்டிருந்தாள் தங்கம்.. அத்தனை நகைகளை தன் மகளுக்கு  பூட்டி விட்டிருந்தாலும் அந்த நெக்லஸை போடும்பொழுது மட்டும் தங்கத்துக்கு உள்ளே பூரித்து போகும்..

அதை பார்க்கும்பொழுதெல்லாம் அவள் மனதில் பெருமையும் இளநகையும் கூடும்.

கைகளில்  தங்க வளையல்கள் குலுங்க அலங்கார தேவதை போல நின்றிருந்த தன் மகளையே இமைக்க மறந்து பார்த்தாள் தங்கம்...

தன் அன்னையின் கனிவான பார்வையை கண்ட அந்த குட்டி புன்னகை தவழ

“என்ன மா... அப்படி பார்க்கற? “ என்றாள் சிரித்தவாறு...

“என் ராசாத்தி... அம்சமா இருக்க டீ... என் கண்ணே பட்டுடும் போல இருக்கு.... “என்று நெட்டி முறித்தவள் அடுத்து பூஜைக்கான ஏற்பாடுகளை பண்ண ஆரம்பித்தாள்....

அங்கிருந்த சிங்கார வேலனுக்கு பெரிய மாலையை போட்டு அருகில் இருந்த மற்ற தெய்வ படங்களுக்கும் பூவை வெட்டி வைத்தவள் பூஜை செய்வதற்கான மற்ற பொருட்களையும் எடுத்து வைத்து கொண்டிருந்தாள்...

ன்று அவள் மகள் தமயந்திக்கு பிறந்த நாள்..

அதிகாலையிலயே எழுந்து குளித்து முடித்து தன் மகளுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை எல்லாம் செய்து வைத்தாள்.. பின் அசந்து தூங்கும் தன் மகளை எழுப்பி அவளுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி அவள் ப்ரஸ் பண்ணி முடித்ததும் அவளுக்கு பூஸ்ட் ஐ கலந்து கொடுத்தாள்..

பின் அவளிடம் கெஞ்சி கொஞ்சி அவளுக்கு தலைக்கு குளிக்க வைத்து பின் அவளுக்கு அலங்காரத்தை முடித்து அவளையும் அழைத்து கொண்டு பூஜை அறைக்கு வந்து விட்டாள் தங்கம்..

தன் மகளை பூஜை அறையில் நிக்க வைத்து விட்டு பூஜைக்கான ஏற்பாடுகளை பண்ணி கொண்டிருந்தாள்..

அந்த அறையில் ஓரமாக நின்றிருந்த தமயந்தி தன் அன்னை செய்வதையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்..  

ஆனால் அவள்  பார்வையெல்லாம் அந்த வேலன் முன்னால் வைத்திருந்த கேசரி மேலேயே இருந்தது...

நெய் சொட்ட சொட்ட உலர் திராட்சையும் முந்திரி  பருப்பையும் நெய்யில் வறுத்து அதன் மீது கொட்டி அதை பூஜைக்காக அந்த வேலன் முன்னால் வைத்திருக்க அதை கண்டவள்  நாக்கில் எச்சில் ஊறியது...

தங்கம் பூஜைக்கான ஏற்பாட்டில் பிஸியாக இருக்க,  ஓரக்கண்ணால் தன் அன்னையை பார்த்தவள் தன் அன்னை கவனிக்காத நேரம் கீழே குனிந்து அந்த கேசரியில் ஒரு துளி எடுத்து வாயில் போட்டுக்கொள்ள திட்டமிட்டு கையை அதன் அருகில் கொண்டு வந்தாள்..

உடனே தங்கம் பட்டென்று அவள்  கையை தட்டிவிட்டு

“ஏன் டி கழுத..!  இன்னும் செத்த நேரம் பொறுக்க முடியாதாக்கும்..!! . பூஜைய  முடிச்சுபோட்டு இம்புட்டும் உனக்குதான... அதுக்கு முன்னாடி உனக்கு என்ன அவசரம்? என்று முறைத்தாள் தங்கம்..

“போமா... நீ ரொம்ப மோசம்...போன வருஷம் சாமிக்கு படைக்கிறதுக்கு முன்னாடி நான் எடுத்து சாப்பிட்டேன்.. அப்ப  எதுவும் சொல்லல.. இப்ப மட்டும் என்னவாம் ? என்று அவள் அன்னைக்கு நிகராக தமயந்தியும் தன் அன்னையை முறைத்தாள்...

“அடி செல்லம்...  அப்ப உனக்கு பல் வுழுவுல..நீ சின்ன புள்ளையா இருந்த..  இப்பதான் உனக்கு பல் வுழுந்திடுச்சே..கூடவே அஞ்சு முடிஞ்சி ஆறு  வயசு ஆரம்பிச்சிருச்சு..

இனிமேல் நீ சின்ன புள்ள இல்ல.. அதனால இந்த மாதிரி சாமிக்கு படைக்கிறதுக்கு முன்னாடியே எடுத்து சாப்பிடக்கூடாது..  புரிஞ்சுதா? என்று செல்லமாக மிரட்டினாள் தங்கம்..  

தன் அன்னை சொல்லியதை கேட்ட அந்த குட்டி சிறிது நேரம் எதையோ யோசித்தவள்

“அம்மா... அப்பனா நான் ஒன்னும் பெருசா வளர வேண்டாம்...! சின்ன புள்ளையாவே இருந்துகிடறேன்... என்னை நீ தான தினைக்கும் நிறைய சாப்பாடு போட்டு சீக்கிரம் பெருசாகுனு சாப்பாட்டை துணிச்ச..

அதனால்தான் நானும் பெருசா வளர்ந்துட்டேன்... பார் இம்புட்டு உசரமா வந்திட்டேன்..” என்று அவள் தலையில் கை வைத்து அவள் வளர்ந்து நிக்கும்  உயரத்தை காண்பித்தாள் அந்த குட்டி...

“அதனால இனிமேல் நீ எனக்கு அதிகமா துணிக்காத...!  நானும் வளராமல் சின்ன புள்ளையாவே இருந்துக்கறேன்.. அப்பதான் எனக்கு புடிச்சதை எல்லாம் எப்ப வேணா எடுத்து சாப்பிடலாம்...“ என்று செல்லமாக சிணுங்கினாள்..

அதைக் கேட்டதும் குலுங்கி சிரித்த தங்கம்

“வாயாடி...வாய் மட்டும் அப்படியே உன் அப்பத்தா மாதிரி இருக்கு.. “  என்று அவள் கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளியவள் அவள் எதற்கு தன் மகளை சீக்கிரம் பெரிய ஆளாக வரவேண்டும் என்று சொன்னது  நினைவு வந்தது...

தமயந்தி சீக்கிரம் வளர்ந்து பெரியவள்  ஆனால்தான் அவளை தன் அண்ணன் வீட்டுக்கு மருமகளாக அனுப்ப முடியும்.. இப்பதான் அவளுக்கு ஆறு வயது ஆரம்பித்து இருக்கிறது..

கல்யாணம் பண்ணனுமுனா  குறைந்தது 18 வயது ஆகியிருக்கனும்..  

“ஹ்ம்ம்ம் இன்னும் பன்னிரண்டு வருஷம் காத்திருக்கோணும்.. “  என்று எண்ணி பெருமூச்சு விட்டாள்...

“என்ன?  என் பொண்டாட்டி எதுக்கு இப்படி பெருமூச்சு விடறா? அப்படி என்னடி ஆச்சு தங்கம்? “ என்று சிரித்தவாறு உள்ளே வந்தான் சிங்காரம்..

தன் கணவனின் குரலைக் கேட்டதும் தாமரையாக மலர்ந்தது தங்கத்தின் முகம்..  

தன் மனைவியின் அந்த செந்தாமரை முகத்தை ரசித்தபடி பூஜை அறைக்குள் வந்தான்..

அவனும் தலைக்கு குளித்துவிட்டு வேஷ்டியையும் மேலே ஒரு முன்டாசு பனியனையும் அணிந்து கொண்டு பூஜை செய்வதற்காக உள்ளே வந்தான்...  

ஒரு நொடி தன் மனைவியை ரசித்துப் பார்த்தவன் அடுத்த நொடி அருகில் நின்று கொண்டிருந்த மகளிடம் சென்றது அவன் பார்வை..  

புத்தம் புது பட்டுப் பாவாடை சட்டையில் அலங்காரம் எல்லாம் தூக்கலாக இருக்க தன் மகளை கண்டவன் அப்படியே அசந்து நின்றான்...

“அடடா...  தமா குட்டி இன்னிக்கு சூப்பரா இருக்காளே...!!  என்று  அவளை தூக்கி சுத்தி அவளின் பட்டு கன்னத்தில் முத்தமிட்டான்..

“பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமாக்குட்டி.. “  என்று சிரித்து அவள் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தான்..

அவளும் கிளுக்கி சிரித்து தன் தந்தையின் கழுத்தை கட்டி கொண்டு அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்...

அதை கண்டதும் தங்கத்துக்கு மனம் நிறைந்து போனது...

தன் மகளை கீழ இறக்கி விட்டவன்

“தங்கம்... பூஜைக்கு எல்லாம் ரெடியா? ஆமா... ஆத்தா எங்க? “ என்று தன் மனைவியை பார்க்க அதுவரை இலகிய நிலையில் சிரித்த முகமாக இருந்தவள் தன் மாமியாரை பற்றி கேட்டதும் சிரிப்பு மறைந்து எட்டிக்காயாக அவள் முகம் மாறியது...

“அதான... செத்த நேரம் உன்ற ஆத்தாவை மறந்து இருக்க முடியாதே !!.. “ என்று தன் கழுத்தை நொடித்தவள் தனக்கு தெரியாது என்று தோளை குலுக்கினாள்..

சிங்காரம் அசட்டு சிரிப்பை சிரித்தவன் தன் மகளை பார்த்து  

“தமா.. நீ போய் அப்பத்தாவ கூட்டிகிட்டு வாடா... “  என்று தன் மகளை அனுப்ப முயன்றான்..

உடனே வெளியில் செல்ல முயன்ற தன் மகளின் கையை எட்டிப் பிடித்து நிறுத்திய தங்கம்

“நீ இரு தமா குட்டி.. நீ போக வேண்டாம்.. காலங்காத்தாலேயே அந்த பெருசு வாயில நல்லது எதுவும் வராது..  உன் பொறந்த நாள் அன்னைக்காவது அதுகிட்ட போய் வாங்கி கட்டிக்கிட வேண்டாம்..

உங்க அப்பத்தாவ அவர் பெத்த புள்ளையே போய் பல்லாக்குல வச்சு தூக்கிட்டு வரட்டும்..நீ இங்கனயே நில்லு.. “ என்று தன் கணவனை முறைத்தவாறு தன் மகளை நிறுத்திக் கொண்டாள்..  

உடனே சிங்காரமும்  தன் மனைவியை பார்த்து லேசாக முறைத்துவிட்டு பூஜை அறையில் இருந்து வெளியே சென்றான்...  

அவன் வெளியில் சென்றதும் தன் மகள் கழுத்தில் அணிவித்திருந்த நெக்லஸை அவசரமாக அவள் சட்டைக்குள்  எடுத்துவிட்டு இருபக்கமும் இருந்த சட்டையை இழுத்து மூடி அந்த நெக்லஸ் வெளியில் தெரியாதவாறு மறைத்தாள்..

பின் கீழே குனிந்து தன் மகளின் காதில்

“தமா குட்டி...  இந்த நெக்லஸ் மட்டும் உன் அப்பத்தா கண்ணுல பட்டுட போகுது... “ என்று ரகசியம் பேசினாள்..  அதைக்கேட்ட தமயந்தியும் கிசுகிசு குரலில்

“ஏன் ஆத்தா தெரியக் கூடாது...?   என்று ரகசியமாக  கேட்டாள்..

“அது வந்து... இந்த நெக்லஸ் உன் மாமா வூட்ல இருந்து வாங்கி கொடுத்தது...இது உன் அப்பத்தா கண்ணுல பட்டுச்சுனா அவ்வளவுதான்.. உன்னை பிறந்தநாள் னு கூட  பார்க்காமல் கரிச்சு கொட்டி கிட்டே இருக்கும்..

அதனால் தான் அது கண்ணில் படாதவாறு உள்ள மறச்சு வச்சுக்கோ..” என்று ரகசியம் பேச  

“ஆயும் மவளும் அப்படி என்ன ரகசியம் பேசுறீக? என்றவாறு உள்ளே வந்தார் கன்னியம்மா..

“ஷ்ஷ் அப்பா...இந்தக் கிழவி இன்னும் நூறு வருஷத்துக்கு இருந்து என் உயிரை வாங்கும் போல.. இத பத்தி சொன்னா அப்பயே வந்து நிக்குது..ஆயுசு நூறுக்கும் மேல இருந்து உயிரை வாங்க போகுது..”  என்று உள்ளுக்குள் திட்டி கொண்ட தங்கம் எதுவும் பேசாமல் லேசாக முறைத்தவாறு தள்ளி நின்று கொண்டாள்..  

தான் கேட்டதற்கு தன் மருமகளிடமிருந்து எந்த பதிலும் வராமல் போக எதிர்த்து விளையாட ஆளில்லாத மேட்ச் போல  சப்பென்று ஆகிவிட்டது கன்னியம்மாவுக்கு...  

ஆனாலும் தன் கெத்தை  விட்டு விடாமல் அவரும் முகத்தை திருப்பி கொண்டவர் அப்பொழுதுதான் தன் பேத்தியை உத்து பார்த்தவர் அவள் அலங்காரத்தை கண்டு வியந்தவர்

"ராசாத்தி.. அப்படியே நம்ம ஊர் கோயிலு அம்மன் சிலையாட்டம் இருக்க தாயி..என்ற பேத்திய பார்த்து இந்த ஊர் பயலுக எல்லாம் கண்ணு போட போறாங்க..

எலே சிங்காரம்.. உன் பொண்டாட்டி கிட்ட சொல்லி பெருசா திருஷ்டி பொட்டு வைக்க சொல்லு... " என்று தன் பேத்தியின்  முகத்தை தன் இரு கைகளால் சுத்தி நெட்டி முறித்தார்...

“சரி ஆத்தா...பூஜையை ஆரம்பிக்கலாமா? என்று அனுமதி கேட்க அவரும் சரிடா ஆரம்பி.. “ என்று அனுமதி கொடுக்க, சிங்காரமும் தன் தோளில் இருந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டி கொண்டு அந்த வேலனுக்கு பயபக்தியுடன்  பூஜையை முடித்து தீபாராதனை காட்டி விட்டு தன் அன்னையின் முன்னே தட்டை நீட்டினான்...

அதே நேரம் தங்கம் தன் மகளை அப்பத்தா காலில் விழ சொல்ல, அந்த குட்டியும்

"என்னை ஆசிர்வாதம் பண்ணு அப்பத்தா... " என்று காலில் விழுந்தாள்...

அதில் குளிர்ந்து போன கன்னியம்மா உடனே குனிந்து தன் பேத்தியை தூக்கியவர்  

“அந்த வடிவேலன் புண்ணியத்தில தீர்க்காயுசா இரு தாயி.. " என்றவர் அந்த தட்டில் இருந்த விபூதியை எடுத்து அந்த குட்டியின் நெற்றியில் பெரிய பட்டையாக போட்டு விட்டார்..

பின் தன் இடுப்பில் இருந்த சுருக்கு பையை எடுத்து அதை திறந்து அதில் இருந்த நூறு ரூபாய் நோட்டை எடுத்து தன் பேத்தியின் கையில் கொடுத்து

“தமா குட்டி.. உனக்கு புடிச்சத வாங்கிக்கோ.. இந்த அப்பத்தாவோட பொறந்த நாள் பரிசு.. “ என்று அவள் கன்னம் வருடி சிரித்தார்...

அதை கண்ட அந்த குட்டிக்கு குஷியாகி விட்டது... அவளும் சரி அப்பத்தா என்று வேகமாக தலையை உருட்டினாள்..

கன்னியம்மா தன் மகளின் நெற்றியில் பெரிய பட்டையை போடவும் அதைக் கண்ட தங்கம் கடுப்பானாள்..

“காலையிலிருந்து எவ்வளவு மெனக்கெட்டு  என்ற  புள்ளையை அலங்கரிச்சு வச்சா இந்தக் கிழவி நிமிஷத்துல இவ்ளோ பெரிய பட்டையை போட்டு நெத்திய கெடுத்து வச்சிருக்கே.. “  என்று உள்ளுக்குள் பல்லைக் கடித்தாள்..

அதன் பின் தமயந்தி அவள் தந்தையின்  காலில் விழ,  அருகில் நின்றிருந்த தங்கம்

"மாமா...  நீங்களாவது விபூதிய கொஞ்சமா வச்சு விடுங்க..  நெத்தி முழுவதும் அள்ளி பூசாதிக.. அப்புறம் புள்ளைக்கு கோவில் பூசாரி வேசம் போட்ட மாதிரி போயிடும்.. “  என்று தன் மாமியாரை ஓரக்கண்ணால் பார்த்தவாறே தன் கணவனிடம் முன்னெச்சரிக்கையாக சொல்லி வைத்தாள்..

அதைக் கேட்ட கன்னியம்மாவும் சளைக்காமல்

“பொறந்த நாள் அதுவும் புள்ளைக்கு நெத்தி நிறைய திந்நீரு வச்சா அந்த வேலன் மனம் குளிர்ந்து போகும்.. அத விட்டுபோட்டு உன்ற பொண்டாட்டி பொறந்த வூட்டு ஜனங்களோட சின்ன மனசு மாதிரியே திந்நீரையும் சின்னதா வைக்க சொல்றா..!! 

அவளுக்கு எங்க தெரியும் நம்ம வூட்டு பழக்க வழக்கமும் பெரிய மனசும்...!!  “ என்று நக்கலாக சிரித்தார்....

“ஆமாமா... சொல்லிகிட்டாங்க எட்டு பட்டியிலும்..!!  உங்களுக்கு ரொம்ம்ம்ம்பவும் பெரிரிரிரிரிய தாராராராராராள மனசு னு... அந்த பெரிரிரிரிரிய தாராராராராராள மனச இந்த திந்நீரு வெக்கறதுல தான காட்ட முடியும்..

என்ற அண்ணனோட சின்ன மனசு மாதிரி மத்தவங்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்கவா  முடியும் ? “ என்று நீட்டி முழக்கி திருப்பி கொடுத்தாள் தங்கம்..

அதை கேட்ட அவள் மாமியார் இன்னும் எகிற ரெடியாக இருக்க, அதை கண்ட சிங்காரம்

"ஆஹா... காலையிலயே  ரெண்டு பேரும் ஏழரைய கூட்டறாங்களே !!  சிங்காரம் நீ இன்னைக்கு தொலஞ்ச...!!  " என்று உள்ளுக்குள் புலம்பியவன்

“ரெண்டு பேரும் செத்த சும்மா இருக்கீகளா.. !! இருக்கறது ஒத்த புள்ள... அவ பொறந்தநாள் அன்னைக்குமா இப்படி அடிச்சுக்கோனும்... “ என்று சலித்து கொண்டான் சிங்காரம்...

“ஹ்ம்ம்ம் அப்படி சொல்லுடா என் ராசா...உன்ற  பொண்டாட்டி இவ்வளவு வாயடிக்கிறாளே...!  என்ற பேத்திக்கு ஆறு வயசு ஆய்டுச்சு... அடுத்ததா வாரிசுக்கு ஒரு ஆம்பள புள்ளைய பெத்து கொடுக்க துப்பு இல்ல...

அது சரி...!!  அவ பொறந்த வூட்டுலயும் ஒன்னோட இல்ல நிக்குது... அந்த எடுபட்ட பயனும் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு ஒத்த பயல பெத்து வச்சிருக்கான்..

அந்த வூட்ல இருந்து வந்த இவ மட்டும் என்ன மலமலனு பத்து புள்ளையவா பெத்து கொடுத்திற போறா !! ஏதோ நான் கும்பிடற அந்த வடிவேலன் புண்ணியத்துல என்ற பேத்தியாவது வந்து பொறந்தாளே!!

எலே சிங்காரம்... உன்ற பொண்டாட்டிய எதுக்கும் கூட்டி கிட்டு போய் ஆஸ்பத்திரியில காமி... என்ன செய்வீகளோ ஏது செய்வீகளோ ! எனக்கு அடுத்து  ஒரு ஆண் வரிசு வரோணும்..

அப்படி வரல,  நான் உனக்கு வேற ஒரு கல்யாணம் பண்ணி வைக்கவும் தயங்க மாட்டேன்.. ஆமா சொல்லிபுட்டேன்... “ என்று கழுத்தை நொடித்தார் கன்னியம்மா...

அதை கேட்ட தங்கத்துக்கு புசுபுசுவென்று கோபம் வந்தது... முகம் சிவந்து போக, மூக்கு விடைக்க, உதடு துடிக்க ஆரம்பித்தது...

“சே.. இந்த கிழவி எப்படி நாக்குல நரம்பில்லாம இப்படியெல்லாம் பேசுது...? புள்ள உண்டாவறதெல்லாம் நம்ம கையிலயா இருக்கு ? இதுக்கும் என் பொறந்த வூட்டை இழுக்குதே...

அங்க என்ற  அண்ணிக்கும் ஒத்த பையன்தான்.. ஆனா என்ற ஆத்தா இப்படியா குத்தி காமிக்குது? என்ற அண்ணனும் ஆத்தாவும் தான் எவ்வளவு தங்கமா என்ற அண்ணிய வச்சு தாங்கறாங்க...

ஆனால் இந்த கிழவி ஒரு நாளைக்காவது என்னை செத்த சிரிச்சு சந்தோஷமா இருக்க விட்டிருக்கா !! தேள் மாதிரி நிமிசத்துக்கும் என்னை கொட்டிகிட்டே இருக்கே!!

பல்லுல விஷத்தை தடவின பாம்பு மாதிரி இது நாக்கு உடம்பெல்லாம் விஷம்.... இவ்வளவு பேசுதே... இது மட்டும் என்ன பத்து புள்ளைகளவா பெத்து போட்டிருக்கு... இதுவும் கருவப்பிலை கொத்து மாதிரி ஒத்த மவனத்தான பெத்து வச்சிருக்கு...

அத மறந்து போட்டு எப்படிதான் இப்படி வார்த்தைய அள்ளி வுடுதோ.... இதுக்குத்தான் என்ற அண்ணன் அன்னைக்கே தலையால அடிச்சுகிச்சு... இந்த வூட்டு சம்பந்தம் வேண்டாம்னு...

ஹ்ம்ம்ம்ம்ம் திமிர் புடிச்சு போய் இல்ல நானே இந்த பாதாள குழியில கண்ணை தொறந்து வச்சுகிட்டே வந்து வுழுந்துபுட்டேன்.. இனி ஆய்சுக்கும் இந்த குழியிலயே இருந்து மீள முடியாது..

இது மாதிரி ஏச்சும் பேச்சும் கேட்டுகிட்டு கிடக்க வேண்டியதுதான்...எல்லாம் இவரால வந்தது !!  “ என்று தன் கோபத்தை எல்லாம் தன் கணவன் பக்கம் திருப்பி தன் கணவனை பார்த்து ஒரு எரிக்கும் பார்வை பார்த்தாள் தங்கம்...

அதை கண்டு கொண்ட சிங்காரம் அவர்களை மேல பேச விடாமல் தடுக்க எண்ணி

“ஆத்தா... நீ செத்த சும்மா இருக்கியா ? இப்ப எதுக்கு அடுத்த புள்ள கதையெல்லாம் இழுக்கற..! அதெல்லாம் பொறகு பாத்துக்கலாம்... இப்ப நல்ல நாள் அதுவுமா ரெண்டு பேரும் இப்படி சண்டைக்கோழி மாதிரி சிலுத்துகிட்டு காலங்காத்தாலயே சண்ட போடுறத  நிறுத்துங்க !! புள்ள பொக்குனு நம்ம வாய பாத்துகிட்டு நிக்குது பாரு... “  

என்று வீட்டு தலைவனாக இருவரையும் அடக்கியவன் தட்டில் இருந்த திருநீற்றை எடுத்து அவன் தாய் சொன்னதுக்கும் தாரம் கேட்டுகிட்டதுக்கும் பொதுவாக ரொம்பவும் பெரிதாகவும்  இல்லாமல் ரொம்பவும் சிறியதாகவும் இல்லாமல் நடுநாயகமாக  தமயந்தி நெற்றியில் வைத்து விட்டான்...

அடுத்து அந்த குட்டி தங்கத்தின் காலிலும் அந்த குட்டி விழ, அவளை தூக்கி உச்சி முகர்ந்து

“எப்பவும் சிரிச்சுகிட்டே இருடா செல்லம்...!!   என்று ஆசிர்வதித்து திருநீற்றை வைத்து விட்டாள் தங்கம்..

இந்த முறை தங்கத்தின் காலில் விழும்பொழுது உள்ளே மறைத்து வைத்திருந்த அந்த நெக்லஸ் வெளியில் வந்து விழ அதைக்கண்ட தங்கம் அவசரமாக அதை தன் மகளின் சட்டைக்குள் எடுத்து போட்டு மறைக்க முயன்றாள்..

அப்பவும் அது கன்னியம்மாவின் கண்களில் இருந்து தப்ப வில்லை...அதை கண்டு கொண்டவர்  

"தமா குட்டி... அது என்ன கழுத்துல...?  உன் ஆத்தா அவ பொறந்தவன் வூட்ல இருந்து கொண்டு வந்த சீதனத்தை இப்படி மறச்சு மறச்சு போட்டு அழகு பாக்கறாளாக்கும்...!!  

நல்ல பெரிய தாராள  மனசுக்காரங்களா இருந்தா வெளில கௌரவமா போட்டு அழகு பார்க்கிற மாதிரி பத்து பவுன்ல பெருசா செஞ்சு போட்டிருப்பாங்க...

அதுக்கு வக்கு இல்லாம அந்த எடுபட்டவன் அரை பவுனில் தம்மாதுண்டு செயினை வாங்கி வந்து மாமன் சீர் னு இல்ல வச்சுட்டு போனான்..

பின்ன அத இப்படி மறச்சு மறச்சுதான் போட்டுக்க முடியும்.. " என்று மீண்டும் எள்ளி நகையாடினார் கன்னியம்மா..

அதை கேட்ட தங்கத்திற்கு மீண்டும் புசுபுசுவென்று வந்தது கோபம்...

மீண்டும் முகம் எல்லாம் சிவந்து போய் காளியாக மாறி நிக்க, அதை கண்டு கொண்ட சிங்காரம்

"ஆத்தா... அதான் சாமி கும்பிட்டாச்சு இல்ல.. வா நாம போலாம்... இத்துணூன்டு ரூம் க்குள்ள உன்னால ரொம்ப நேரம் நிக்க முடியாது... " என்று அவசரமாக தன் அன்னையை இழுத்து கொண்டு அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சென்றான்...

தங்கமோ இன்னும் உள்ளுக்குள் கொதித்து கொண்டிருந்தாள்..

அவள் கோபத்தை எல்லாம் தன் மகளிடம் திருப்பியவள்

"பாரு டீ .. எல்லாம் உன்னால வந்தது..!!  நான்தான் சொன்னேன் இல்ல.. இந்த நெக்லஸை அந்த கிழவி கண்ணுல படாம வச்சுக்கனு.. பாரு இப்ப என்ன பேச்சு பேசிட்டு போகுது.. இந்த நெக்லஸ் அரை பவுனாம்... இது மூணு பவுனு..

நெக்லஸ் இதுக்கு மேல பெருசா போட்டா சின்ன புள்ளைக்கு கழுத்து வலிக்கும்னு கடைக்காரர் சொன்னதாலதான் என்ற அண்ணன் மூணு பவுனோட நிறுத்திகிச்சு.. அதுக்கும் மீதிய காசா சீர் கூடையில வச்சுது..

ஆனா இந்த கிழவி கண்ணுக்கு அதெல்லாம் தெரியல...இம்மா பெரிய நெக்லஸையும் தம்மாதுண்டு னு சொல்லுதே.. அது கண்ணுல கொள்ளி கட்டையை வைக்க... “

 

என்று தன் ஆத்திரத்தை எல்லாம் தன் மகளிடம் கொட்டி கொண்டிருக்க, அந்த குட்டியோ அந்த கேசரியை எப்படா சாப்பிட விடுவாங்க என்று மீண்டும் நாக்கில் எச்சில் ஊற அதையே ஆசையுடன் பார்த்து கொண்டிருந்தாள்..

ஒரு வழியாக தங்கம் புலம்பி முடிக்கவும் விட்டால் போதும் என்று உணவு மேஜைக்கு ஓடி விட்டாள் தமயந்தி..

அங்கு ஏற்கனவே கன்னியம்மாவும் சிங்காரமும் சாப்பிட அமர்ந்து கொண்டிருக்க,

“அப்பா.... எனக்கு கேசரி..........” என்று  கத்தியவாறு சிட்டாக பறந்திருந்தாள்..

தங்கமும் அவள் பின்னாலயே வந்தவள் முகத்தை தூக்கி வைத்து கொண்டே அனைவருக்கும் பரிமாறினாள்....

தன் மகள் பிறந்த நாளுக்காக கேசரி, வடை, பாயாசம் என செய்து வைத்திருந்தாள்.. அதை எல்லாம் எடுத்து அனைவர் தட்டிலும் வைத்து விட்டு ஓரமாக நின்று கொண்டாள்..

கேசரியில இருந்த நெய்யை உற்று பார்த்த கன்னியம்மா 

“எலே சிங்காரம்.... எதுக்கு கேசரியில இம்புட்டு நெய்யை ஊத்தி வச்சிருக்கா உன்ற பொண்டாட்டி.. அவ பொறந்தவன் மாட்டு பண்ணை வச்சிருக்கானாக்கும்..!! 

அதில் இருந்து வந்த நெய்யை டின் கணக்கா அவன் பொறந்தவ வூட்டுல வந்து இறக்கிட்டு போன மாதிரி இல்ல இம்புட்டு நெய் ய ஊத்தி வச்சிருக்கா...

கொஞ்சம் பாத்து பொழங்க சொல்லு.... “ என்று நீட்டி முழக்க, அதை கேட்டு மீண்டும் தங்கத்துக்கு எகிறியது...

அதற்குள் சிங்காரம் கண்ணால் தமயந்தியை ஜாடை காட்டி அவளுக்காக அவள் பொறந்த நாள் க்காக  பொறுத்து கொள்ள சொல்லி கண்களால் தன் மனைவியிடம் கெஞ்சினான்..

அவளும் அதற்குமேல் தன் மாமியாரிடம் மல்லு கட்ட தெம்பு இல்லாமல் காதை இழுத்து மூடி கொண்டு அனைவருக்கும் பரிமாறினாள்..

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!