தேடும் கண் பார்வை தவிக்க-8



 அத்தியாயம்-8

சாப்பிட்டு முடித்ததும் தங்கம் தன் மகளின் கையில் ஒரு தட்டு நிறைய சாக்லெட் ஐ போட்டு கொடுத்து பக்கத்து வீடு,  எதிர்த்த வீடு அப்புறம் இந்த தெருவில் இருப்பவர்கள் என்று தெரிந்தவர்களுக்கு எல்லாருக்கும் சாக்லெட் ஐ கொடுத்து வர சொல்லி அனுப்பினாள்...

அந்த குட்டியும் சந்தோஷத்தில் முகம் மலர, தலையை சரி என்று இருபக்கமும் வேகமாக  ஆட்டியவள் அந்த தட்டை வாங்கி கொண்டு  மான்குட்டியை  போல துள்ளி குதித்தவாறு பக்கத்து வீட்டை நோக்கி சென்றாள்...

கன்னியம்மா முற்றத்தில் சென்று கயிற்று கட்டிலில் அமர்ந்து கொண்டு வெற்றிலை பாக்கு இடிக்க,  தங்கமும் அவள்  செய்த கேசரியை சின்ன சின்ன கப்பில் போட்டு  பக்கத்து விடு மற்றும் எதிர்த்த வீடுகளுக்கு கொண்டு  சென்று கொடுத்து வந்தாள்...

அதை கண்ட கன்னியம்மா  ஏதோ புலம்பிக் கொண்டிருக்க,  அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன் மகளின்  பிறந்தநாளுக்காக செய்த கேசரியை அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தாள் தங்கம்..

சிறிது நேரத்தில் வெளியில் சென்றிருந்த தமயந்தி அவள் தட்டில் இருந்த சாக்லெட் எல்லாம் காலியாகி இருக்க,

“அம்மா... சாக்லெட் தீர்ந்து போச்சு.... இன்னும் வேணும்.. “ என்று டான்ஸ் ஆடி குதித்து கொண்டே உள்ளே ஓடி வந்தாள்..

அவளை கண்டதும் கன்னியம்மா

“ஆத்தா.. இங்கன  செத்த வா... “ என்று தன் பேத்தியை அருகில் அழைத்தார் கன்னியம்மா.. அவளும் குதித்தபடி தன் அப்பத்தா அருகில் செல்ல

“ஏன் ஆத்தா... அம்புட்டு முட்டாய் கொண்டு போனியே !!  அதுக்குள்ளயா எல்லாம் தீர்ந்து போயிடுச்சு..? “ என்றார் சந்தேகமாக

அந்த குட்டியும் தலையை முன்பக்கமாக ஆட்டி

“ஆமா அப்பத்தா !! எல்லாருக்கும் கொடுத்தனா... எல்லா  சாக்லெட் ம்  தீந்து போச்சு.. “ என்று தன் ஒரு பிஞ்சு கையை அழகாக விரித்து காட்டினாள்..  

“அதானே.. இந்த ஊர் பயலுவ எல்லாம் முன்ன பின்ன முட்டாய்.. அது என்ன ஆத்தா சொன்னா ஆங்.. சாக்லெட்டு.. அந்த சாக்லெட்ட பார்த்திருந்தால் தெரியும்..

என்ற பேத்தி அதிசயமா இந்த சாக்லெட்டை காட்டவும் எல்லாம் கை நிறைய அள்ளிகிட்டாங்களாக்கும்..அவுங்களை கை நிறைய அள்ள வுடாம நீயா ஒவ்வொன்னா எடுத்து கொடுக்க வேண்டியது தான தாயி..

உன்  அப்பன் பொழைக்க தெரியாம புத்தி கெட்டு போய் உன் ஆத்தாவ கட்டிகிட்டு வந்த மாதிரியே நீயும் பொழைக்க தெரியாத புள்ளையா இருக்கியே ஆத்தா..

இப்படி யார் கேட்டாலும் இந்த முட்டாயை எடுத்து ஒன்னுமட்டும் தான் கொடுக்கோணும்..அதுவும் நாமதான் எடுத்து கொடுக்கோணும்.. அவுங்களை எடுத்துக்க சொல்லி நீட்ட கூடாது...  என்ன புரிஞ்சுதா? " என்றார் லேசாக அதட்டியவாறு..

"ஹ்ம்ம் சரி அப்பத்தா.... இனிமேல் யார் கேட்டாலும் ஒன்னு மட்டும் கொடுக்கறேன்.. இன்னும் என் ப்ரெண்ட்ஸ் நிறைய பேர் இருக்காங்க.. இன்னும் சாக்லெட் வேணும் " என்று சிரித்தாள்..

"என்ற ராசாத்தி..!  என்ற வூட்டு ரத்தம்..  அதான் உடனே டக்குனு இந்த அப்பத்தா சொன்னத புடுச்சிக்கிட்ட.. ஆனா உன் ஆத்தா இருக்காளே !! எத்தனை தரம் சொன்னாலும் தலைய சிலுப்பிகிட்டுதான் வர்றாளே தவிர, மண்டையில வாங்கிக்கவே மாட்டா... நீதான் என்ற வூட்டு வாரிசு... " என்று நெட்டி முறித்தவர்

"சரி.. நீ பொறந்த நாளைக்கு முட்டாய் கொடுத்தியே.. யாரெல்லாம் என்னென்ன பரிசு கொடுத்தாங்க.. எங்க சொல்லு பார்க்கலாம்.. " என்று மீண்டும் தன் பேத்தியை பிடித்து கொள்ள,

அவளும் கண்கள் விரிய பெருமையுடன் அந்த கட்டிலில் ஏறி அமர்ந்து கொண்டு தன் மற்றொரு கையில் சுருட்டி வைத்திருந்த நோட்டை எல்லாம் விரித்து

"அப்பத்தா... இது பக்கத்து வூட்டு மாமா கொடுத்ததுஇது எதித்த வூட்டு அத்தை ஆசையா கொடுத்தது  " என்று பத்து ரூபாயை எடுத்து காட்டினாள்..

அதை வாங்கி உற்று பார்த்த கன்னியம்மா

"அந்த எடுபட்ட பய பத்து ரூவாதான் கொடுத்தானா...?  அவன் மவன் பொறந்த நாளைக்கு நான் அம்பது ரூபா சுளையா தூக்கி கொடுத்தேனே..!

அத அப்படியே என்ற பேத்தி பொறந்த நாள்க்கு திருப்பி தருவான் னு பார்த்தா வெறும் பத்து ரூவா வ பிச்ச போடற மாதிரி போட்டு இருக்கான்...  எடுபட்ட பய..

ஏன் தாயி. இந்த காசை எதுக்கு வாங்கிபோட்டு வந்த ? அவன் மூஞ்சியிலயே விட்டு எறிஞ்சுபோட்டு வரவேண்டியதுதான... " என்று சிடுசிடுத்தார்..

அதை கண்ட தமயந்தி குட்டியின் முகம் வாடிவிட்டது..

அவள் ஒவ்வொரு வீடாக சென்று தனக்கு பொறந்த நாள் என்று சொல்லி சாக்லெட் கொடுத்ததும் ஒவ்வொருத்தரும் மகிழ்ச்சியுடன் சாக்லெட் ஐ எடுத்து கொண்டு அவளை ஆசிர்வதித்து அவள் கன்னத்தில் முத்தமிட்டு அவளிடம் அவர்களுக்கு முடிந்த அளவில் காசு ,வேற பரிசு பொருட்களை  கொடுத்தனர்..

அவர்கள் கொடுத்த ஐந்து  ரூபாய் நோட்டு கூட அந்த பிஞ்சு மனசில் பெரிய கிப்ட் ஆக தெரிந்தது..

ஆனால் அப்பத்தா அதெல்லாம் பெருசில்லை என்று சொல்லும்பொழுது அவள் உள்ளே பொங்கி கொண்டிருந்த உற்சாகம் வடிந்து அவள் முகம் சூம்பி விட்டது..

இந்த கூத்தை சமையல் அறையில் இருந்து பார்த்த தங்கத்திற்கு பற்றி கொண்டு வந்தது..

“சின்ன புள்ளைகிட்ட போய் நல்ல விசயமா சொல்லி கொடுக்காம  அடுத்தவங்களை பத்தி தப்பு தப்பா சொல்லி கொடுக்குதே இந்த கிழவி..

மொய் கணக்கு வாங்கற மாதிரி பொறந்த நாளைக்கு கொடுத்து வாங்கற  இந்த காசையெல்லாம் கூட  கணக்கு வச்சு வசூலிக்க பார்க்குதே.. ஆனா பேச்சு மட்டும் என்னவோ தாதாதாராராராராள பரம்பரையில் இருந்து வந்த மாதிரி பீத்திக்கும்... “  

என்று உள்ளுக்குள் குமுறியவள் அதுவரை செந்தாமரையாக மலர்ந்திருந்த தன் மகளின் முகம் அனிச்சம் மலராக வாடி விட அதை கண்டு தாங்க முடியாத தங்கம் அந்த கிழவி அதற்குமேல் எதையும் நோண்டுவதற்கு முன்னால்

"தமா குட்டி...  இங்க வா.... " என்று தன் மகளை அழைத்தாள் தங்கம்..

உடனே அவளும் தன் அப்பத்தாவின் முகம் பார்க்க

"உன் ஆத்தாகாரிக்கு நீ செத்த நேரம் என்கூட தனியா உட்கார்ந்து பேசினா பொறுக்காதே.. உடனே மூக்கு வேத்து உன்னை கூப்டுக்குவா...

நீ போ ஆத்தா... என்னானு கேட்டுட்டு வந்து இன்னும் யாரெல்லாம் எவ்வளவு கொடுத்தாங்கனு விவரம் சொல்லோணும்...!! " என்று தன் மருமகளை திட்டியவாறே அனுப்பி வைத்தார்...

அந்த குட்டியும் விட்டால்  போதும் என்று அந்த கட்டிலிலிருந்து எட்டி குதித்து தன்  அன்னையை நோக்கி ஓடினாள்...  

தங்கம் அவளிடம் இன்னும் மீதி இருந்த சாக்லேட்டை எல்லாம் அவள் வைத்திருந்த  தட்டில்  போட்டு விட்டுப்போன மற்றவர்களுக்கும் கொடுக்கச் சொன்னாள்..

பின் மகள் காது அருகில் குனிந்தவள்

“தமா குட்டி... அப்பத்தா யார் யார் எவ்வளவு காசு கொடுத்தானு  கேட்டா  தெரியாது னு சொல்லிடு.. “  என்று ரகசியமாக சொன்னாள்..

இல்லை என்றால் அதை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு அக்கம் பக்கத்து வீடுகளில் சண்டைக்கு சென்று விடுவார் கன்னியம்மா..  அவருக்கு பயந்து கொண்டே யாரும் அந்த வீட்டிற்கு வருவதில்லை...அவ்வளவாக பேசுவதும் இல்லை.. 

அந்த வீட்டு மருமகள் தங்கம்மா குணத்துக்காக பார்த்து ஓரளவுக்கு மற்றவர்கள் வந்து பேசினர்.. அதனால இந்த கிழவி மறுபடியும் சண்டைக்கு போச்சுனா யாரும் இந்த வீட்டை மதிக்க மாட்டாங்க என்று எண்ணி அதை தடுப்பதற்காக தன் மகளிடம் காசு  பற்றி பேசவேண்டாம் என்று ரகசியமாக சொல்லி வைத்தாள்...

அந்த குட்டியும் சரி என்று தலையை உருட்டி விட்டு சிட்டாக வெளியில் ஓடினாள் மீதி சாக்லெட் ஐ கொடுக்க..  

டுத்து ஒரு மணி நேரத்தில் எல்லாருக்கும் சாக்லெட் ஐ கொடுத்து முடித்திருந்தாள் தமயந்தி...  இன்னும் முக்கியமானவங்களுக்கு மட்டும் பாக்கியிருந்தது..

தங்கம் செய்திருந்த கேசரி, வடை மற்றும் பாயசத்தை எல்லாம் வேறு வேறு டப்பாக்களில் போட்டு அதை ஒரு ஒயர் கூடையில் வைத்து தயாராக வைத்திருந்தாள் தங்கம்மா..

ஆனால் பார்வை மட்டும் அடிக்கடி தன் மாமியாரிடம் சென்று வந்தது..

அவர் எப்பொழுதும் எழுந்து வெளியே செல்வார் என்று முற்றத்தையே அடிக்கடி  பார்த்துக் கொண்டிருக்க கன்னியம்மாவும் அசையாமல் அங்கேயே கட்டிலில் காலை நீட்டி அமர்ந்தபடி பாக்கை  இடித்து அதை ஒவ்வொன்றாக எடுத்து வாயில் போட்டு மென்று கொண்டிருந்தார்...

அப்போது அங்கு வந்த சிங்காரத்திடம் சமையல் அறையில் நின்றவாறு ஒயர் கூடையை தூக்கி காண்பித்து பின் கையை ஆட்டி காட்டியும் கண்ணால்  ஜாடை காட்டியும்  அவன் ஆத்தாவை  வெளியில் அழைத்துச் செல்ல சைகை செய்தாள் தங்கம்...

அவள் பார்வையில்,  கண் ஜாடையில் அர்த்தத்தை புரிந்து கொண்டவன்

“ஆத்தா... சரி வா..வயலுக்கு போயிட்டு வரலாம்...  இன்னைக்கு  கூலியாளுங்களுக்கு கூலி கொடுக்கோணும்... நீயும் கூட வாத்தா.. “  என்று தன் அன்னையை வீட்டிலிருந்து கிளப்ப  முயன்றான்..  

ஆனால் என்றும் இல்லா திருநாளா தன் மகன் தானே வந்து வயலுக்கு கூப்பிடவும்  கன்னியம்மாவும் யோசனையாக

“ஏன் டா சிங்காரம்... ஒவ்வொரு வாரமும் நீயே தான கூலி கொடுப்ப..  இன்னைக்கு என்ன புதுசா என்னையும் கூப்பிடுற?  அதிசயமா இருக்கே..உன்ற பொண்டாட்டி எதுவும் சொல்லி கொடுத்தாளா ? ”  என்று தன் மகனை ஆராயும் பார்வை பார்த்தாள் பெரியவள்..

“சே சே.. அதெல்லாம் ஒன்னும் இல்ல ஆத்தா... இன்னைக்கு தமா குட்டியோட பொறந்த நாள்   இல்லையா !! அதனால எல்லாருக்கும் சம்பளத்தோடு பத்து ரூபா சேர்த்து  கொடுக்கலாம் னு இருக்கேன்..

அதை உன்ற கையால கொடுத்தா  நல்லா இருக்கும்... “  என்று தன் அன்னைக்கு ஐஸ் வைத்து அவரை கிளப்ப முயன்றான்...

"என்னது?  பத்து ரூவா சேர்த்து கொடுக்கறியா? என்னடா இது?  பொழைக்க தெரியாதவனா இருக்க.. ஒரு ஆளுக்கு பத்து ரூவா னா  இருபது பேரு  வேலை செய்தால்  எம்புட்டு ஆகும்..!!  

இப்படித்தான் நீ புத்தி இல்லாம வெள்ளாமை வெக்கறீயாக்கும்? " என்று அர்ச்சனை பண்ணினார்...

சமையலறையில் நின்று கொண்டு அவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த தங்கத்திற்கு பற்றி கொண்டு வந்தது...

“ஒத்த புள்ள பொறந்தநாளுக்கு நாலு பேரு மனசு குளிர ஒரு பத்து ரூவா சேர்த்து  கொடுத்தா என்னமோ சொத்தே அழிஞ்சு போயிடற  மாதிரி இந்த குதி குதிக்குதே இந்த கிழவி... “ என்று பொரிந்து தன் மாமியாரை உள்ளுக்குள் திட்டி தீர்த்தாள் தங்கம்..  

சிங்காரம் தன்  அன்னையிடம் ஏதேதோ  சமாதானம் சொல்லி அவரை கிளப்பி கொண்டு வயல் பக்கம் நோக்கி அழைத்துச் சென்றான்...

வெளியில் போகும்போது சமையலறை  பக்கம் பார்த்து தங்கத்திற்கு  கண் ஜாடை காட்டி விட்டு சென்றான்..  

அதைக் கண்ட தங்கத்துக்கு உள்ளம் குளிர்ந்து போனது...

என்னதான் மாமியார் சண்டக்காரி.. அவளை தேளாக கொட்டி நோக பேசிக்  கொண்டிருந்தாலும் அவள்  கணவனாவது அவள் பக்கம் இருக்கிறானே என்று சந்தோஷமாக இருந்தது...

ஒரு சில வீடுகளில் கணவனும் அவன பெத்த ஆத்தா கூட சேர்ந்து கொண்டு ஆத்தா மகன் இரண்டு பேரும் சேர்ந்து வீட்டுக்கு வந்த மருமகளை கொடுமைப்படுத்திய கதையெல்லாம் கேட்டிருக்கிறாள்.. நேரடியாக  பார்த்தும் இருக்கிறாள்..

பக்கத்து  வீட்டில் இருக்கும் திலகா இது மாதிரி எத்தனையோ கொடுமைகளை எல்லாம் தங்கத்திடம் சொல்லி அழுதிருக்கிறாள்..  அப்போது தங்கத்திற்கு தன் கணவன் எவ்வளவோ தேவலை என்ற பெருமைப்பட்டுக் கொள்வாள்...

அவன் ஆத்தாவை எதிர்த்து பேச முடியாமல் அடங்கி போனாலும் அவள் மீது வைத்திருக்கும் அன்பும் காதலும் கொஞ்சம் கூட குறையவில்லை...தன் ஆத்தாவுக்கு  தெரியாமல் தன் கணவன் தன்னையே சுத்தி சுத்தி வருவதை கண்டு பெருமையாக இருக்கும்....

“ஹ்ம்ம்ம் எல்லா வூட்டிலும் வூட்டுக்கு வூடு வாசப்படி.. இக்கரைக்கு அக்கரை பச்சை... “ என்று பெருமூச்சு விட்டு தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்..

ஆனாலும் ஒரு மூலையில் அவள் செய்த தவறு உறுத்திக் கொண்டே தான் இருக்கும்..

“என்ற  அண்ணன் சொன்ன மாதிரி அப்ப அவர்  பேச்சைக் கேட்டிருந்தால் இந்த வூட்ல வந்து வாழ்க்கை பட்டிருக்க தேவையில்லை... “ என்று புலம்புவாள்..

ஆனால் அதெல்லாம் அவள் கணவனை காணும் வரை மட்டுமே...!! 

அவள் கணவனை கண்டாலே அவனின் மையல் கொண்ட பார்வையில் அவன் பேசும் காதல் மொழியில் இந்த உலகத்தையே மறந்து விடுவாள்  தங்கம்..

அதையெல்லாம் இப்ப எண்ணி பார்க்க, அவள் கன்னங்கள் சிவக்க உதட்டில் இளநகை தவழ்ந்தது...

அதற்குள் நினைவுலகத்துக்கு வந்தவள் தன் தலையை தட்டிக்கொண்டு

“சீ... எந்த நேரத்தில் எதை எல்லாம் யோசிச்சுக்கிட்டு இருக்கேன்..நான் ஒரு மடச்சி.. “ என்று தன்னைத்தானே கொட்டிக் கொண்டு தமயந்தியை அழைத்தாள்..

வெளியில் தன் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த அவளும் தன் அன்னையின் குரல் கேட்டு அதே துள்ளலுடன் என்னம்மா என்று கேட்டவாறு சமையல் அறைக்குள் குதித்தபடி வந்தாள்...

ஏற்கனவே தயாராக வைத்திருந்த அந்த ஒயர் கூடையை எடுத்து அவளிடம் கொடுத்தவர்

“தமா குட்டி... நீ நேரா தங்கராசு மாமா வீட்டுக்கு போயிட்டு.... “  என்று அவள்  ஆரம்பிக்க

“அம்மா.... இரு இரு மீதிய நானே சொல்றேன்... “  என்றவள்

“நேரா மாமா வீட்டுக்கு போவோணும்.. மாமா அத்தை கிட்ட இதையெல்லாம் கொடுத்துபுட்டு அவங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கோணும்.. அப்புறம் எல்லாருக்கும் சாக்லேட் கொடுத்துபுட்டு  அவங்க கிட்ட செத்த நேரம் பேசிகிட்டு இருக்கோணும்..

அப்புறம் அந்த டுபுக்கு நல்லி எலும்பு நளன் மாமா இருப்பான்..  அவன் கிட்டயும்  மறக்காமல் கை நிறைய சாக்லெட் ஐ அள்ளி கொடுக்கோணும்...

அப்புறம் அப்பத்தாவுக்கு தெரியாமல் வூட்டிக்கு ஓடி வந்துடணும் அவ்வளவுதானே...!!  “  என்று கிளுக்கி சிரித்தாள்... தங்கமும் சிரித்தவாறு

“போடி வாயாடி..! . ஆமா எப்படி அப்படியே சொல்ற ? “  என்றாள் தங்கம் ஆச்சர்யமாக...

“அடப்போ மா...  இதைத்தானே ஒவ்வொரு பொறந்த நாளுக்கும் என்கிட்ட சொல்லி அனுப்புற !! நீ சொல்லி சொல்லி எனக்கு மனப்பாடமே ஆயிடுச்சு.. “  என்று தன் குட்டி கையை விரித்து குறும்பாக சிரித்தாள் தமயந்தி...

“அடிங்க....உன் அப்பத்தா மாதிரியே எட்டு ஊர் வாய் டி உனக்கு...“ என்று சிரித்தவாறு தன் மகளின் கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளியவள்

“ஹ்ம்ம்ம் வாயாடி உன்னை எப்படித்தான் வாயில்லாத என் அண்ணி வச்சு சமாளிக்க  போறாங்களோ...!!  “ என்று சிரித்தாள் தங்கம்..

"சரிடா மா...  நீ  சீக்கிரம் போயிட்டு இதை எல்லாம் கொடுத்துபுட்டு அப்பத்தா வர்றதுக்குள்ள ஓடி வந்துடு.. "  என்று தன் மகளை  வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தாள்..

மான்குட்டியை போல  துள்ளிகொண்டு ஓடுபவளை கண் நிறைய ரசித்து பார்த்து சிரித்து கொண்டாள் தங்கம்..

ன் மாமன் வீட்டை அடைந்ததும் அங்கே இருந்த கேட்டை  திறந்துகொண்டு துள்ளி குதித்தபடி உள்ளே சென்றாள்  தமயந்தி..

கேட்டில் இருந்து வீடு சற்று தள்ளி இருக்க, வீட்டின் முன்னால் இடம் விட்டு அதில் பல விதமான அழகு செடிகளை வைத்திருந்தனர்...

கேட்டில் இருந்து வீட்டிற்கு செல்ல நடைபாதை போட்டு அதில் மட்டும் காரை போட்டிருந்தனர்...

நடை பாதையின் இருபக்கமும் அழகழகான வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கின....

அதையெல்லாம் பார்த்து ரசித்தவாறு வீட்டை நோக்கி நடந்தாள் தமயந்தி..

அப்போதுதான் நினைவு வந்தது.. முன்பு ஒரு நாள் இதே மாதிரி அவள் அம்மாவும் அவள்  வீட்டில் பூச்செடிகளை நட்டு வைத்திருந்தாள்..

ஆனால் அடுத்த நாளே இந்த வீணாப்போன பூச்செடி எல்லாம் இங்க எதுக்கு என்று அவள் அப்பத்தா அதை எல்லாம் புடுங்கி எறிந்துவிட்டு பாவக்காய் சுரைக்காய் புடலங்காய் என காய் செடியாக நட்டு வைத்த ஞாபகம் வந்தது...

கூடவே அன்று  அவள் அன்னை கண்ணீர் விட்டு அழுததும்  ஞாபகம் வந்தது..  

அந்த சிறுவயதில் அதெல்லாம் அவளுக்கு சரியாக புரியவில்லை என்றாலும் ஏதோ ஒன்று தன் வீட்டில் சரியில்லை என்பது மட்டும் புரிந்தது அவளுக்கு

ஆனாலும் விளையாட்டுப் பிள்ளையாக அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அங்கிருந்த அழகான ரோஜா செடிகளை ரசித்துக் கொண்டே வீட்டை அடைந்தவள் மெல்ல கதவை தட்டினாள்...

உடனே உள்ளிருந்து அவள் ஆயா பாப்பாத்தியின் குரல் கேட்டது

“தங்கராசு..  என்ற பேத்தி ராசாத்தி வந்திருக்கா பாரு..  வெரசா போயி கதவைத் திற.. “  என்று  உள்ளறையில் இருந்து அவள்  ஆயா, அவள் அன்னை  தங்கத்தை பெத்த ஆத்தா சொல்லுவது வெளியே நின்று கொண்டிருந்த தமயந்திக்கு கேட்டது...

உடனே கதவு திறந்து கொள்ள கண்ணம்மா சிரித்தவாறு நின்று கொண்டிருந்தாள்.. தமயந்தியின் அலங்காரத்தை கண்ட கண்ணம்மாவும் அசந்து போய்

“வாடி... என்  செல்ல மருமகளே..!!  இந்த அத்தையை,   எங்களை எல்லாம் பார்க்க இப்பதான் உனக்கு நேரம் கிடைச்சதா?  பொறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டிமா... “ என்று அவளை தூக்கி சுற்றி அவள் கன்னத்தில் முத்தமிட்டு கீழே இறக்கி விட்டாள்..

அவளும் கிளுக்கி சிரித்தவள் தன் அத்தைக்கு கன்னத்தில்   முத்தமிட்டு  கீழே இறங்கியவள் அவள்  கொண்டு வந்திருந்த ஒயர் கூடையை திறந்து  கேசரி டப்பாவை எடுத்தாள்..

கூடவே வடை, பாயாசம் என அனைத்தையும் எடுத்துக் கொடுத்தாள்...

“அத்த...  இதெல்லாம் அம்மா என் பொறந்த நாளுக்காக செஞ்சது..  எல்லாருக்கும் கொடுக்க சொல்லி கொடுத்துச்சு...” என்று பெருமையாக மலர்ந்து சிரித்தாள்..

தமயந்திக்கு தன் பிறந்த நாள் என்றால் படு கொண்டாட்டமாக இருக்கும்..

ஒவ்வொரு பிறந்த நாளைக்கும் புத்தம் புது பாவாடை சட்டை வாங்கி போட்டு நகையெலாம் பூட்டி தன் மகளை அழகு பார்ப்பாள் தங்கம்..

தமயந்திக்கும் இப்படி மேக்கப் பண்ணிகிட்டு ஒவ்வொரு வீடாக சாக்லெட் ஐ கொண்டு போய் கொடுக்க பெருமையாக இருக்கும்...

கூடவே அவள் அன்னை வகைவகையாக சாப்பிடவும்  செய்வாள்..அதுவும் நெய் சொட்ட சொட்ட அந்த கேசரி மறக்காமல் வந்து விடும்.. அதனாலயே தன் பிறந்த நாள் எப்ப வரும் என்று தினமும் கை விட்டு எண்ணி பார்த்து கொண்டே இருப்பாள்..

365 நாளில் ஆரம்பித்து தினமும் ஒவ்வொரு நாளாக குறைத்து எண்ணி கொண்டே வருவாள்..

அதுவும் இன்னும் முப்பது நாட்கள்தான் இருக்கிறது என்று வந்துவிட்டால் தினமும் அதையே சொல்லி சொல்லி பாட்டு பாடுவாள்.. தன் நண்பர்கள் மத்தியில் என் பொறந்த நாளுக்கு அப்படி பண்ணுவேன் இப்படி பண்ணுவேன் என்று பெருமை அடித்து கொள்வாள்...

அப்படி ஒவ்வொரு நாளாக ஆவலுடன் எதிர்பார்த்து வருசத்துக்கு  ஒரு தரம் மட்டுமே வரும் பிறந்த நாள் அவளுக்கு ரொம்பவும் புடிக்கும்...

“அப்பா.. ஏன் இந்த பொறந்த நாள் வருஷத்துக்கு ஒரு தரம் மட்டும் வருது? பேசாம ரெண்டு தரம் வந்தால் இன்னும் ஜாலியா இருக்குமில்ல... ! “ என்று தன் தந்தையிடம் குறை படுவாள்..

அதை கேட்டு சிங்காரமும் வாய் விட்டு சிரித்து கொண்டே தன் மகளை அள்ளி அணைத்து கொள்வான்...  

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!