தேடும் கண் பார்வை தவிக்க-9



 அத்தியாயம்-9

ன்றும் அதே போல காலையில் இருந்தே படு உற்சாகமாக சுத்தி வருகிறாள் அந்த குட்டி..

ஒயர் கூடையில் இருந்து அனைத்தையும் எடுத்து கொடுத்தவள் அடுத்து இருந்த சாக்லெட் டப்பாவை எடுத்து

“அத்த... சாக்லேட் எடுத்துக்கோங்க..”  என்று சாக்லேட் வைத்திருந்த டப்பாவை கண்ணம்மா முன்னே நீட்டினாள்..

அதற்குள்  வயலுக்கு  சென்றிருந்த தங்கராசும்  வந்துவிட, தன் மருமகளை கண்டதும்  அவசரமாக கை கால்களை கழுவிக் கொண்டு ஓடி  வந்தான்..  

தன் மருமகனை தூக்கி சுற்றியவன்

“தமா குட்டி... ஷோக்கா இருக்கடா... அப்படியே உன் ஆத்தாவை பார்க்கற மாதிரியே இருக்கு...” என்று தழுதழுத்தவாறு அவள் கன்னத்தில் முத்தமிட்டான்....

அந்த குட்டியும் உரிமையுடன் கிளுக்கி சிரித்தவாறு தன் மாமனின் கழுத்தை கட்டி கொண்டு அவனுக்கு முத்த மிட, அதில் இன்னும் உருகி போனான் தங்கராசு...

அதற்குள்  அவள் ஆயா பாப்பாத்தியும் அறையில் இருந்து  பேத்தியை காண வர, ஓடி சென்று தன் ஆயாவைவும் கட்டி கொண்டாள் தமயந்தி..

ஒரே ஊரில் இருந்தாலும் தமயந்தி தன் மாமன் வீட்டிற்கு அடிக்கடி வரமாட்டாள்..

கன்னியம்மா தன் பேத்தி இங்கு வந்து சென்றது தெரிந்தால் அன்னைக்கு முழுவதுமே தங்கத்தை வார்த்தையால் கொட்டி கொண்டே இருப்பாள்.. அதனாலயே தங்கம் தன் மகளை அடிக்கடி இங்கு அனுப்புவதில்லை...

ஏதேனும் விசேஷம் என்றால் அனுப்பி வைப்பாள்.. அதுவும் தன் மாமியாருக்கு தெரியாமல் அனுப்பி வைத்து விட்டு அவருக்கு தெரியாமலயே அழைத்து கொள்வாள்...

தன் மகள் வயிற்று பேத்தியை கண்டதும் அதுவும் இன்று தரை கூட்ட பட்டு பாவாடையில் பெரியவளாக தெரிய, அந்த பெரியவளுக்கு கண் குளிர்ந்து போனது...

தன் பேத்தியை கட்டி கொண்டு வாஞ்சையுடன் அவள் கன்னம் வருடி “எம்புட்டு வளர்ந்துட்டா என்ற பேத்தி.... இதே மாதிரி சீக்கிரம் பெருசாகி இந்த வீட்டுக்கே மருமகளா வந்திடணும் தாயி... “

என்று சிரிக்க, அதன் அர்த்தம் புரியா விட்டாலும் தமயந்தியும் சிரித்தவாறு மீண்டும் ஓடி வந்து சாக்லெட் டப்பாவை எடுத்து அவள் ஆயாவுக்கும் மாமனுக்கும் சாக்லெட் ஐ அள்ளி கொடுத்தாள்...

பின் தன் ஆயாவின் காலில் விழுந்து வணங்க, பாப்பாத்தி உடனே தூக்கி  சுருக்கு பையிலிருந்து நூறு ரூபாய் நோட்டை எடுத்து அவளிடம் கொடுத்து  அவள் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார்..

பின் தன் அத்தை மாமா காலிலும் விழ, அவர்களும் அவளை தூக்கி ஆசிர்வதித்து பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லினர்...

பின் கண்ணம்மாவும் உள்ளே சென்று அவள் வாங்கி வைத்திருந்த பட்டுப்பாவாடை சட்டை யை கொண்டு வந்து அவளிடம் கொடுக்க, அதை பார்த்ததும் கண்களை பெரிதாக விரித்தவள்

“ஐ... சூப்பரா இருக்கு அத்தை... ஐ அப்ப இந்த பொறந்த நாளுக்கு எனக்கு இரண்டு புது பாவாடை சட்டை... “  என்று துள்ளி குதித்தாள்... அவளின் அந்த உற்சாக கலகலவென்ற சிரிப்பை கண்டதும் அந்த பெரியவர்கள் மூவருக்கும் மனம் நிறைந்து போனது...

“உனக்காக தான் டி மருமகளே..  கடை கடையாய் ஏறி இறங்கி தேடிப்புடிச்சு இதை வாங்கியாந்தேன்... உனக்கு புடிச்சிருக்கா. ? “ என்று வாஞ்சையுடன் அவள் கன்னத்தை வருடினார் கண்ணம்மா...

“ஓ....  சூப்பரா இருக்கு அத்தை... நீதான் என் செல்ல அத்த... “  என்று கண்ணம்மாவை கட்டி கொள்ள

“அம்மணி.. இத வாங்க நான்தான காசு கொடுத்தேன்... அப்ப நானு? “ என்று தங்கராசு பாவமாக முகத்தை வைத்து கொள்ள, உடனே தன் அத்தையை விடுத்து மாமன் காலை கட்டி கொண்டவள்

“நீங்களும் தான் மாமா.. நீங்கதான் என் செல்ல மாமா... “ என்று கன்னம் குழிய சிரித்தாள்...

அடுத்து அவள் பார்வை யாரையோ தேடி சுழன்றது.. அதைக் கண்டு கொண்ட கண்ணம்மாவும்

“என்னடி மருமகளே!!  யாரை தேடற? “ என்று குறும்பாக சிரித்தாள்...

“ஹீ ஹீ ஹீ  நான் யாயாயாயாயாரையும் தேதேதேதேதேடலையே !!  சும்மாதான் வூட்டை எல்லாம் நல்லா வச்சிருக்கீங்களா னு சுத்தி  பார்த்தேன்... “ என்று ராகமாக இழுத்து தோள்களை குலுக்கி சிரித்தாள்...

“அத்த... அங்க பாரு ஒட்டட தொங்குது... மூணு  வேளையும் சாப்டுட்டு வூட்ல தான இருக்கீங்க.... அதை எல்லாம் அடிக்க மாட்டிங்களா ?  மாமா சரியில்லை...உன் மாமியாரும் சரியில்லை... உங்களுக்கு ரொம்ப செல்லம் கொடுக்கிறாங்க....” என்று தன் இடுப்பில் கை வைத்து  கொண்டு பெரிய மனுஷி போல தன் அத்தையை மிரட்ட

“அடிங்க....என்ற மாமியார் கூட என்னை மிரட்டினதில்லை டீ.. நீ என்ற வூட்டுக்கு மருமகளா வர்றதுக்கு முன்னாடியே இந்த மிரட்டு மிரட்டறயா... உன்ன.....  “  

என்று கண்ணம்மா அவளை துரத்த, தன் அத்தையின் கைக்கு சிக்காமல் அந்த முற்றத்தில் இருந்த தூண்களை ஒவ்வொன்றாக பிடித்து ஓடியபடி சிரித்தவாறே அந்த முற்றத்தை சுற்றி வந்தாள்...  

அவளின் கலகலவென்று சிரித்த சிரிப்பு ஒலியும் காலில் அணிந்திருந்த கொழுசு சத்தமும் அந்த வீடு முழுவதும் நிறைந்திருந்தது.. அனைவர் முகத்திலும் பெரும் மகிழ்ச்சி சூழ்ந்திருந்தது..

அவள்  அன்னை தங்கம் இந்த வீட்டில் இருந்த வரைக்கும்  இப்படித்தான் எப்பொழுதும் கலகலவென்று சிரித்துக் கொண்டே இருப்பாள்..

ஒரு இடத்தில் செத்த நேரம் உட்கார்ந்து இருக்க மாட்டாள்.. மான் குட்டியை போல எப்பொழுதும் நடந்து செல்லாமல் துள்ளி குதித்து டான்ஸ் ஆடிக் கொண்டேதான் நடப்பாள்..

வீட்டுக்குள்ளயே ஒரு நாளைக்கு ஒரு ஆயிரம் முறையாவது  நடந்து விடுவாள்.. அப்படி எப்பவும் கலகலனு இருந்த வீடு அவள் போன பிறகு ரொம்பவும் அமைதியாகி போனது...

அதுவும் அவள் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கவும் தங்கராசு இன்னுமே இடிந்து போய் விட அந்த வீட்டில் சிரிப்பு சத்தமே குறைந்து போனது...

இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வந்தாலும் மனசுக்குள் அந்த வலி அப்படியே தான் இருந்தது தங்கராசுக்கு..

ஊரை கூட்டி பெருசா பந்தல் போட்டு ஜாம் ஜாமுனு கல்யாணம் பண்ணி தன் தங்கச்சியை புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைக்க கனவு கண்டவனுக்கு அவள் தனக்கே தெரியாமல் ஓடிப்போய் கல்யாணத்தை பண்ணிக்கவும் அவன் பட்ட அந்த வலி வேதனை அப்படியேதான் உள்ளுக்குள் இருந்தது...

ஆனால் இப்படி தன் மருமகளின் கலகலவென்ற சிரிப்பும் ஓடியாடும் அவளின் குறும்பும் அவளின் மழலை பேச்சையும் கேட்கும்பொழுது அவனை அறியாமலயே அவன் தங்கையின் சிறு வயது ஞாபகம் வந்து விடும்..

அந்த குட்டி எப்பயாவது இங்கு வந்து போகும் அந்த கொஞ்ச நேரம்தான் அந்த      வீட்டில் இந்த மாதிரி கலகலவென்று இருக்கும்..

அந்த குட்டியின் மலர்ந்த சிரிப்பை ரசித்த பெரியவர்கள்

சீக்கிரம் அவளுக்கு 18 வயசு ஆகணும்..  அவளை,  இந்த குட்டியை தன் வூட்டுக்கு மருமகளாக  கொண்டு வந்திடணும்..  அப்பதான் இந்த வூட்டுக்கு ஒரு களை வரும்... “  என்று மூவரும் ஒரே நேரத்தில் எண்ணி கொண்டு பெருமூச்சை விட்டனர்..

சிறிது நேரம் பெரியவர்களுடன் ஓடியாடி விளையாண்டவள், பின் தன் ஆயாவுடன் கதை அடித்துவிட்டு நேரமாவதை உணர்ந்து

“அத்த...  வூட்டுக்கு போறேன்.. “ என்று நெளிந்தாள்..

“ஏன் டி தங்கம்...அதுக்குள்ள போறென்ற? இன்னும் செத்த நேரம் இருக்கலாமில்ல.. “ என்றாள் கண்ணம்மா வருத்தமாக..

“ஹ்ம்ம் எனக்கும் ஆசைதான் அத்த.. ஆனா அப்பத்தா வந்துடுச்சுனா என்ன திட்டும்... அதான் அது வர்றதுக்குள்ள என்னை திரும்பி வந்திட சொல்லுச்சு அம்மா....” என்று பாவமாக சொல்ல, அதில் உருகி விட்டனர் அங்கிருந்தவர்கள்..

இன்னும் கன்னியம்மா தன் கோபத்தை விட்டு வெளி வராமல் பழசையே நினைத்து கொண்டு பகையை வளர்த்து கொண்டிருப்பத்தை கண்டதும் மற்றவர்களுக்கு வருத்தமாக இருந்தது..

அவர்களும் தங்கள் வீட்டு பொண்ணுக்காக எவ்வளவோ கீழிறங்கி வந்தாலும் கன்னியம்மா இன்னுமே அவர்களை ஒரு வித ஏளனத்துடன் தான் நடத்தி வருகிறார்..

அதுவும் தங்கராசை கண்டால் முகத்தை திருப்பி கொண்டு போய்விடுவார்.... அவர்களுக்கும்  கஷ்டமாகத்தான் இருந்தது... ஆனால் அதற்காக அந்த வீட்டு உறவை முறித்து கொள்ள முடியாதே !!

தங்கள் வீட்டு பொண்ணுக்காகவும் அந்த பொண்ணு பெத்த  இந்த தங்க  குட்டிக்காக கன்னியம்மாவின் பேச்சு ஏச்சுகளை கண்டு கொள்ளாமல் அமைதியாகவே சென்றனர்...

ஆனால் அந்த பெரியவள் தன் பேத்தியை கூட அவள் மாமன் வீட்டிற்கு அனுப்பி வைக்காமல் நிறுத்தி கொண்டது தான் இன்னும் வேதனையாக இருந்தது..

“ஹ்ம்ம் எல்லாம் சீக்கிரம் மாறோனும்.. “ என்று பெருமூச்சு விட்டு கொண்டனர்...

“இருடி  செல்லம் வர்றேன்.. உனக்காக அத்த ஒன்னு செஞ்சு வச்சிருக்கேன்.. நான் ஒரு மடச்சி.. புள்ள வந்ததும் அத கொடுக்காம அவ வந்த சந்தோஷத்தில் வாய பாத்துகிட்டு நின்னுபுட்டேன்.. “ என்று சிரித்தவாறு வேகமாக சமையல் அறை உள்ளே சென்று அவளுக்காக செய்து வைத்திருந்த அல்வாவை கொண்டுவந்து தமயந்தியிடம் கொடுத்தாள் கண்ணம்மா...

அதைக் கண்டதும் அந்த குட்டியின் கண்கள் பெரிதாக விரிந்தது...

“ஐ அல்வா... “ என்று ஆசையாக வாங்கி கொண்டு அதை சாப்பிட ஆரம்பித்தாள்...   

அவளுக்கு அவள் அத்தை  கண்ணம்மா செய்யும் இந்த கோதுமை அல்வா ரொம்பவும் பிடிக்கும்.. இதே மாதிரி செய்ய சொல்லி தன் அன்னையிடம் கேட்டிருக்கிறாள்.

தங்கமும் செய்து கொடுத்தாள் தான்.. ஆனால் அதை வாயில் போட்டதும் வாயைத் திறக்க முடியாமல் போய்விட்டது.. அதிலிருந்து அவள் அன்னை  செய்யும் அல்வா என்றால் எட்டு மைல் தூரம் ஓடிச்சென்ற பிறகுதான்  திரும்பி பார்ப்பாள்..

அதிலிருந்து  தங்கமும் இந்த அல்வா கிண்டும் ரிஸ்க் ஆன வேலையை விட்டு விட்டாள்..  அவளுக்கு கேசரி மட்டும் நன்றாக செய்ய வரும் அதனால் எந்த விசேஷம் என்றாலும் உடனே கேசரியை செய்து  வைத்து விடுவாள்..

தன் அத்தை கொடுத்த அல்வாவை ரசித்து சாப்பிட்டவள்

“சூப்பரா இருக்கு அத்த... இன்னும் நிறைய போடுங்க... “ என்று கேட்டு வாங்கி சாப்பிட்டாள்..

கண்ணம்மாவும் ஆசையாக இன்னும் கொண்டு வந்து கொடுத்தவள் அவள்  கொண்டு வந்த பாத்திரத்திலேயே தன் நாத்தனாருக்கும் சேர்த்து செய்திருந்த அல்வாவை போட்டு  இன்னும் கொஞ்சம் தங்கத்திற்காக செய்து வைத்திருந்த தின்பண்டங்களையும் எல்லாம் ஒயர் கூடையில் போட்டு எடுத்து வைத்தாள்...

அல்வாவை ஆசையாக சாப்பிட்டு முடித்ததும் தமயந்தி பெரியவர்களுக்கு டாட்டா சொல்லி விடைபெற,  அந்த ஒயர் கூடையை எடுத்து கொடுத்த கண்ணம்மா

“மருமகளே... பத்திரமா போய்ட்டு வா.. வழியில் எங்கேயும் நிக்காத.. உன் அப்பத்தா  பார்த்தா திட்டுவாங்க... சீக்கிரம் வூட்டுக்கு போய்டு.. “ என்று அனுப்பி வைத்தனர்...  

யர் கூடையை  தூக்கிக்கொண்டு வெளியில் வந்தவள் சுற்றிலும் கண்களை சுழற்றி பார்த்து விட்டு அந்த நடை பாதையில் இருந்து சற்று தள்ளியிருந்த அந்த புத்தம் புது ரோஜா செடியிடம் சென்றாள்..

பட்டு பாவாடையை  அழகாக சுருட்டிக்கொண்டு மற்ற செடியில் இருக்கும் முள்ளில் மாட்டிவிடாமல் சுருட்டி பிடித்து கொண்டு மெதுவாக அடியெடுத்து வைத்து அந்த ரோஜா செடியிடம் சென்றாள்..

வெள்ளையும் இளம் சிவப்பும் கலந்த ரோஜா அன்று தான் முதல் பூ பூத்திருந்தது...

அழகாக விரிந்து மலர்ந்து சிரித்த அந்த ரோஜாவையே ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தாள் தமயந்தி... பின் மீண்டும் ஒரு முறை சுற்றி பார்த்துவிட்டு சிரித்தவாறு குனிந்து அதை மெல்ல முத்தமிட்டாள்...

பின் அதை பறிக்க ஆசையுடன் கையை நீட்ட உடனே பின்னால் இருந்து அவள் ஜடையை பிடித்து யாரோ இழுக்க

“ஆ... “ என்று அலறியவாறு அவள் ஜடையை ஒரு கையால் பிடித்துக் கொண்டு பின்பக்கம் திரும்பாமலேயே

“ஐயோ !! வலிக்குது மாமா.... விடுடா.... “ என்று அலறினாள் தமயந்தி...

“ஹே திருடி !!  என் வீட்டிலேயே வந்து திருட்டுத்தனமா நான் வளர்த்து வச்சிருக்க ரோஜா வ திருடறியா !!  உனக்கு எவ்வளவு தைரியம் ??? “  என்று அவள் காதை பிடித்து செல்லமாக திருகினான் நளன்...

அவன் கையில் இருந்து தன் ஜடையை பிடுங்கி கொண்டவள் அவன்  பக்கமாக பார்த்து நின்று கொண்டு

“ஐய.. நான் ஒன்னும் திருடல.. இது ஒன்னும் உன் வீடு கிடையாது.. என்  தங்கராசு மாமாவும் அத்தையும் கட்டிய வீடாக்கும்... இந்த வீட்டில் எனக்கும் உரிமை இருக்கு.. “  என்று இடுப்பில் கை வைத்து அவனை  பார்த்து முறைத்தாள்.....  

“ஹா ஹா ஹா பாருடா இந்த அரைப்படி எல்லாம் என் வீட்ல பங்கு கேட்டு வர்றதை...!  என்ன?  எல்லாம் உன் அப்பத்தா ட்ரெய்னிங் ஆ? “ என்று சிரித்தான் நளன்...

“அது சரி பொண்டாட்டி...  எல்லாருக்கும்  பொறந்த நாளுக்கு சாக்லேட் கொடுத்தியே.. முக்கியமனா ஆள் !  உன் புருஷன் எனக்கு கொடுக்கலையே !! இது நியாயமா பொண்டாட்டி? “ என்று அவள் கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளினான் நளன்..

அவன் கையை பட்டென்று தட்டிவிட்டு மீண்டும் இடுப்பில்  கைவைத்து முறைத்தவள்

“போடா டுபுக்கு மாமா... நீ மட்டும் எனக்கு பொறந்த நாள் பரிசு கொடுத்தியாக்கும்?  அதனால உனக்கு சாக்லேட் கிடையாது..போடா.. “ என்று  முறைத்தாள்..

“அடியே என் அருமை பொண்டாட்டி..!   இந்த நளன் மாமா உனக்காக ஒரு சூப்பர் கிப்ட் வாங்கி வச்சிருக்கேன்...

நீ எனக்கு சாக்லேட் கொடுக்க வர்றப்ப கொடுக்கலாம்னு வச்சிருந்தேன்..  ஆனால் நீதான் எனக்கு எதுவும் கொடுக்கலையே.. அதனால உனக்கு அந்த கிப்ட் இல்ல... “ என்று உதட்டை பிதுக்கி கையை விரித்தான்..

அதைக் கண்டவள் உடனே முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு

“டேய் மாமா !! நீ என் செல்ல மாமா...தங்க மாமா.. பட்டு மாமா... தங்கமயிலு..” என்று அவன் தாடையை பிடித்து செல்லமாக ஆட்டியவள்

“நான் அத்தைகிட்ட கேட்டேன் டா..  அத்த தான் நீ எங்கேயோ ஊர் சுத்த போய்ட்டேன் னு  சொல்லுச்சு.. அதனால்தான் உனக்காக வெயிட் பண்ணாம கிளம்பிட்டேன்... இரு இப்ப சாக்லேட் தர்றேன்... “  என்று அசட்டு சிரிப்பை சிரித்தவாறு சாக்லேட் டப்பாவை எடுத்து அவனிடம் நீட்டினாள் 

“ஹா ஹா ஹா ... அப்படியே பிளேட்டை திருப்பிட்டியே டீ.. நீ பொழச்சுக்குவ.. கேடி.. “ என்று சிரித்தவாறு அவள் நீட்டிய டப்பாவிலிருந்து கை நிறைய சாக்லேட்டை அள்ளி அவன் சட்டை பாக்கெட்டில் போட்டு கொண்டும் ஒன்றை எடுத்து பேப்பரை பிரித்து அவள் வாயில் வைத்தவன்

“ஹேப்பி பர்த்டே என் செல்ல பொண்டாட்டி..நீ எப்பவும் இப்படியே சிரிச்சுகிட்டே இருக்கணும்... “  என்று அவள் தலையை பிடித்து இருபக்கமும் செல்லமாக ஆட்டினான்...

அவளும் கன்னம்  குழிய கிளுக்கி சிரித்தாள்...

“அதெல்லாம் சரி டா மாமா... எங்க என் கிப்ட்? “ என்று அவன் முன்னே கையை நீட்டி புருவத்தை உயர்த்தினாள் தமயந்தி..

அவனும் சிரித்தவாறு தன் அரைக்கால் ட்ராயரில் இருந்த பாக்கெட்டில் இருந்து  ஒரு பொட்டணத்தை எடுத்துக் கொடுத்தான்.. அதை வாங்கி ஆர்வமாக பிரிக்க அதனுள்ளே அவளுக்கு பிடித்த கண்ணாடி வளையல்கள் குலுங்கின..

கூடவே இரண்டு பைவ் ஸ்டார் சாக்லேட் ஐயும் வைத்திருந்தான்..

அதைக் கண்டதும் தமயந்தி முகம் செந்தாமரையாக மலர

"ஐ.. சூப்பரா இருக்குடா மாமா....தேங்க்ஸ்.. "  என்று எதிர்பாராத விதமாக அவன் கன்னத்தில்  எக்கி முத்தமிட்டாள்...

அவனோ  அதில் திகைத்து நிற்க அவனை சுற்றிக்கொண்டு நடைபாதைக்கு ஓடி வந்தவள்

“பை டா என் டுபுக்கு மாமா.. எனக்கு நேரமாச்சு.. வீட்டுக்கு போவோனும்..  நாளைக்கு ஸ்கூல் ல பார்க்கலாம்... டாட்டா... “ என்று சிரித்தபடி ஓடி மறைந்தாள்..

அவள் சென்று வெகு நேரம் ஆகியும் அவள் கொலுசின் ஒலியும் கலகலவென்று ஒலித்த அவள் சிரிப்பொலியும் அவள் சூடியிருந்த மல்லிகை வாசமும் அங்கேயே சுற்றிக் கொண்டே இருந்தது.......

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!