தேடும் கண் பார்வை தவிக்க-16
அத்தியாயம்-16
அன்றிரவு
படுக்கையில் படுத்தவாறு கண்ணை மூடியவனுக்கு அவன் கண்ணுக்குள் வந்து சிரித்தாள்
தமயந்தி...
அழகான தாவணி
பாவாடை அணிந்து, கன்னங்களில் மஞ்சள் பூசி இருக்க கன்னம்
குழிய சிரித்தபடி அவளின் அழகு முகம் அவன் கண்முன்னே வந்து நின்றது...
அடுத்து அவன்
அவளை மணந்து கொள்வது போலவும் அவள் வெட்கப்பட்டு சிரித்தபடி அவன் தாலியை வாங்கிக்
கொள்வது போலவும் கனவு விரிய அதில் அப்படியே சிலிர்த்துப் போனான்...
அவளின் அந்த
வெட்க பட்டு சிரித்த முகமே திரும்ப திரும்ப வந்து அவனை இம்சித்தது...நீண்ட நேரம்
உறக்கமில்லாமல் புரண்டு புரண்டு படுத்தவன் விடிகாலையில் உறங்கி போனான்..
மறுநாள் காலை
கண் விழித்தவன் தன் தந்தைக்கு வயலில் சென்று சிறிது நேரம் உதவி விட்டு வீட்டிற்கு
வந்தான்..
ஏனோ நேற்று
கனவில் வந்து வெட்கபட்டு சிரித்த தமயந்தியை உடனே பார்க்க வேண்டும் போல இருந்தது...
ஆனால் என்ன
காரணத்தை சொல்லி விட்டு அங்கு செல்வது என்று யோசித்தான்..
அதற்குள் அவனுக்கு ஒரு ஐடியா கிடைத்து விட, உடனே அதை செயல்படுத்தி பைக்கை எடுத்துக் கொண்டு பறந்து விட்டான் தன்
அத்தை மகளை காண...
தங்கத்தின்
வீட்டில் சிங்காரத்தின் வழி உறவுக்காரர்கள் அன்று தமயந்திக்கு விருந்து சமைத்துக்
கொண்டு இருக்க, வீடே உறவினர்களால் நிறைந்து
இருந்தது...
வந்திருப்பவர்கள்
தன் வீட்டு சொந்தக்காரர்கள் என்பதால் கன்னியம்மா வும் அவர்கள் முன்னால் தன்
மருமகளை விரட்டாமல் தன் சொந்த பந்தங்களுடன் அதிசயமாக சிரித்து பேசி கொண்டிருந்தார்..
தன் அத்தை
வீட்டை அடைந்ததும் பைக்கை நிறுத்திவிட்டு இறங்கியவன் அங்கு இருந்த கூட்டத்தை கண்டதும் மிரண்டு போனான்..
“இதில் எப்படி என்
அத்தையை சந்திப்பது? தயாவுடன் பேசுவது? அவளை பார்ப்பது? “ என்று யோசித்தவாறு வெளியிலயே நின்றிருக்க
அப்பொழுது வாயிலுக்கு வந்து தங்கம் நளன் வெளியில் நின்று கொண்டிருப்பதை கண்டு முகம் மலர வேகமாக அவன் அருகில் வந்தாள்...
“வாடா கண்ணா... எப்ப வந்த?
ஏன் அங்கனயே நின்னுகிட்ட.. உள்ள வா..” என்று சிரித்தபடி உள்ளே அழைத்தார்
“இருக்கட்டும் அத்த...
உள்ள எல்லாம் பொம்பளைங்களா இருக்காங்க.. “ என்று நெளிந்தான்..
அதைக்கண்டு
தங்கம் சிரித்தவாறு
“சரி... என்ன விஷயம்?
இந்த நேரத்துல வந்திருக்க? “ என்று நேரடியாக கேட்டார்..
அவனோ அவன் வந்த
காரணம் நினைவு வர, கூடவே அதுக்கு என்ன காரணத்தை
சொல்லுவது என்றதும் நினைவு வர, தன் பைக் கவரின் உள்ளே சுற்றி வைத்திருந்த ஒரு கோழி முட்டையை எடுத்துக்
காட்டி
“அத்த... இது நாட்டுக் கோழி முட்டை.. தயாவுக்கு கொடுங்க..
எங்க பக்கத்து வீட்ல இருக்கிற அந்த கருவாச்சி இது மாதிரி பெரிய மனுஷி ஆனப்ப இந்த
முட்டையதான் டெய்லியும் கொடுத்தாங்க..
“தயாவுக்கு
இதெல்லாம் கொடுத்தீங்களா இல்லையானு தெரியல... அதுக்காக தான் இத கொண்டு வந்தேன்.. “
என்று நெளிந்தவாறு அசடு வழிய சிரித்தான்..
அதைக் கண்டு
உருகிப் போன தங்கம் அதை வாங்கிக் கொண்டவள்
“பாரேன்.. நானும்
மறந்தே போயிட்டேன்.. இந்த நேரத்துல நாட்டுக்கோழி முட்டை கொடுத்தா கர்ப்பப்பை நல்லா ஆரோக்கியமா இருக்கும் னு
சொல்லுவாங்க..
அதை மறந்தே
போயிட்டேன்.. பரவாயில்லையே நீ ரொம்ப
அக்கறையா கொண்டு வந்து கொடுத்திருக்க..
ஆமா மருமவனே.. நம்ம வூட்ல தான் கோழியே இல்லையே! அப்படி இருக்க எப்படி இந்த முட்டை வந்தது..? .” என்று குறும்பாக கண்சிமிட்டி சிரித்தாள் தங்கம்..
அவனும் ஒரு
அசட்டு சிரிப்பை சிரித்தவன்
“பக்கத்து வீட்டு
கோழி நம்ம வீட்டுல வந்து முட்டை போட்டுச்சு அத்த.. பக்கத்து வீட்டு கோழினாலும் நம்ம வீட்ல வந்து முட்டை
போட்டுச்சுனா அது நம்மளுதான..அதான் அப்படியே சுட்டுட்டு வந்திட்டேன்.. “ என்று தலையை சொரிந்து அசடு வழிந்து சிரித்தான் நளன்..
அதை கண்டு
தங்கமும் சிரித்தவாறு
“மருமவனே... நீ பெரிய ஆள்தான்...பொழச்சுக்குவ டா.. ” என்று சிரிக்க, தன் அத்தையுடன் இணைந்து சிரித்தவன்
“அத்த....நான் தயாவ
பார்க்கலாமா? “ என்று தயங்கியவாறு கேட்டான்...
“ஹ்ம்ம்ம் எங்க வூட்டு
பெருசுக்கு தெரிஞ்சா ஏதாவது ஏழரைய கூட்டும்... நீ அதுக்கு தெரியாமல் பின் பக்கமாக
போய் பார்த்துட்டு போயிடு.. “ என்று
ரகசியமாக தன் மருமகனுக்கு ஆலோசனை சொன்னாள்
தங்கம்
அவனும் முகம்
மலர்ந்து சரி என்று தலையசைத்தவன் பின்பக்கமாக சுற்றி கொண்டு அந்த குடிசு அருகில்
வந்தான்..அந்த குடிசின் முன்னால் கதவு மூடி இருக்க, அதன்
அருகே வந்து நின்றவன் அவளை எப்படி அழைப்பது என்று தெரியாமல் தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தான்..
அவன் தயங்கி நின்ற
நேரம் குடிசில் இருந்த தென்னங்கீற்றில் இருந்த சிறு துவாரத்தின் வழியாக தன் சிறு
கையை விட்டு அவன் அணிந்திருந்த டீசர்ட் ன்
கீழ்நுனியை பிடித்து இழுத்தாள் தமயந்தி...
அவனும்
திடுக்கிட்டு திரும்பி பார்க்க, அவளோ கதவை லேசாக திறந்து கொண்டு தலையை
கொஞ்சமாக வெளியில் நீட்டி அவனை அந்த குடிசுக்கு
பின்னால் வரச்சொல்லி ஜாடை காட்டினாள்:...
அவனும்
சிரித்தவாறு வேகமாக பின்னால் வர, பின் பக்கம் இருந்த ஒற்றை கீற்றில் பெரிய
ஓட்டையாக பண்ணி வைத்து இருந்தாள் தமயந்தி..
அதன் வழியாக
தலையை வெளியில் விட்டு அவனை பார்த்து சிரித்தவள்
“டேய் மாமா...
நீ ஏன் காலையிலயே வரலை... உள்ள தனியா உட்கார்ந்து இருக்கறது போரடிக்குது.. “ என்று
பாவமாக முகத்தை வைத்து கொண்டு
சிணுங்கினாள்...
அவளின் அந்த
செல்ல சிணுங்களை கண்டு திகைத்து போனான் நளன்..
நேற்று இரவு கனவில்
வந்ததை போல, கூடவே திரைப்படங்களில் வருவதை போல பெரிய மனுஷி
ஆன பிறகு தன்னை பார்ப்பதற்கு வெட்கப்பட்டு தலையை குனிந்து கொள்வாள்..
தன்னை பார்க்க
தயங்குவாள்.. என்று எண்ணி இருந்தவன் அவள் வெட்கப் பட்டு குனிந்து நிற்கும் அழகை காணவேண்டும்
என்று கற்பனை செய்து கொண்டு வந்தவன் ஏமாந்து போனான்..
தமயந்தி நாணி
கோணாமல், வெட்க பட்டு தலையை குனியாமல் எப்பொழுதும் போல
அவனிடம் வம்பு இழுத்துக் கொண்டிருந்தாள்..
அவள் முகத்தில்
எப்பொழுதும் இருக்கும் அதே குழந்தைத்தனமும் குறும்பு சிரிப்பு பரவிக் கிடந்தது...
“அப்படி என்றால்
இவள் இன்னும் பெரிய மனுஷி ஆகவில்லையா ?? இன்னும் அப்படியே தானே இருக்கிறா..! ” என்று
யோசித்தவாறு நின்று கொண்டிருந்தான்...
அவனை அந்த
ஓட்டையின் பக்கமாக அமர சொன்னவள் அவளும் தரையில் அமர்ந்து கொண்டு அந்த ஓட்டையின்
வழியாக அவனுடன் கதை அடிக்க ஆரம்பித்தாள்..
“டேய் மாமா.. எனக்கு
சாக்லேட் கொண்டு வந்தியா? “ என்று கண்கள் விரிய கேட்க அப்பொழுது தான்
வழக்கம் போல அவன் எடுத்து வைத்த சாக்லேட் நினைவு வர உடனே தன் பேன்ட் பாக்கெட்டில்
இருந்த சாக்லேட்டை எடுத்து நீட்டினான்..
அவளும் கண்கள்
விரிய அதை வாங்கிக்கொண்டு அவன் அருகில் நெருங்கி வந்து ரகசியமாக
“டேய் மாமா...ரொம்ப
படுத்தறாங்க டா..! இந்த குடிச விட்டு
வெளில போகக்கூடாதாம்.. இருபத்திநாலு மணி நேரமும் இதுக்குள்ளயே இருக்க சொல்றாங்க..
நான் கதவை திறந்து கிட்டு வேளில எட்டி பார்த்தா உடனே என் அப்பத்தா உள்ள இருந்து கிட்டே சத்தம்
போடுது...
அது கண்ண
இங்கனயே வச்சிருக்கும் போல..பத்தாததுக்கு எப்ப பாரு ஏதாவது பலகாரத்தை செஞ்சு கொண்டுவந்து
கொடுத்து சாப்பிட சொல்லி இம்சை பண்றாங்க...
முன்னெல்லாம் என்
ஆத்தா எப்பயாவது திருநாளா ஏதாவது ஒரு நாளைக்கு பலகாரம் செஞ்சு தரும்.. அப்பல்லாம் எவ்வளவு
ஆசையா இருக்கும் அதை சாப்பிட..
இப்ப எனக்கு இவ்வளவு
வெரைட்டீஸ் பார்த்தாளே திகட்டுது.. வேண்டாம்னாலும் விட மாட்டேங்கிறாங்க..இதுல
இருந்து தப்பிக்க ஏதாவது வழி சொல்லேன்.. “ என்று சலித்துக்கொண்டாள்...
அதை கேட்டு சிரித்தவன்
“இந்த நேரத்துல
நீ நல்லா ரெஸ்ட் எடுக்கணும் னு தான் டீ இப்படி உன்னை தனியா இருக்க வச்சிருக்காங்க..கூடவே
விதவிதமா வெரைட்டி வெரைட்டியா உனக்கு புடிச்சதெலலம் செஞ்சு தர்றாங்க இல்ல..
இந்த மாதிரி
சந்தர்ப்பம் மறுபடியும் கிடைக்காது.. இந்த
சந்தர்ப்பத்தை யூஸ் பண்ணிக்கிட்டு நல்லா மூக்கு முட்ட சாப்பிடு.. “ என்று சிரித்தான்...
“அட போடா... எவ்வளவு
தான் ஒரு நாளைக்கு சாப்பிட முடியும்..சரி எனக்கு ரொம்ப போர் அடிக்குது.. பல்லாங்குழி
விளையாடலாமா? “ என்றாள் ஆர்வமாக...
அதை கேட்டு
திடுக்கிட்டவன்
“ஹே...அதெல்லாம்
பொம்பள புள்ளைங்க விளையாடுற விளையாட்டு டீ.. நான் பெரிய ஆம்பளையாக்கும்..
அதெல்லாம் விளையாட மாட்டேன்.. “ என்று முறைத்தவன்
அவள் முகம் வாடிப்போக, அதை காண தாங்காமல்
“வேணும்னா உன்
கூட்டாளி கருவாச்சி அந்த குட்டச்சி எல்லாம் இருக்காளுங்க இல்ல..அவளுங்களை எல்லாம்
கூப்பிட்டு வச்சு விளையாடு..” என்று நழுவ பார்த்தான்..
“ஹ்ம்ம்ம் நேத்து
ஃபுல்லா நான் அவங்க கூட தான் விளையாண்டேன் மாமா..
நான் அவங்களை தொட்டுட்டா
தீட்டாம்... வீட்டுக்கு போயிட்டு தலைக்கு தண்ணி ஊத்திக்கணுமாம்.. ..நேத்து அவங்களை
எல்லாம் தலைக்கு தண்ணி ஊத்திக்காம வீட்டுக்குள்ள அவங்க ஆத்தா விடலையாம்..
அதனால அதுக்கு
பயந்து கிட்டு இன்னைக்கு யாரும் என்கூட விளையாட வரமாட்டேனுட்டாளுங்க டா...
வந்தாலும் தள்ளி நின்னு பேசிட்டு ஓடிட்டாளுங்க...” என்று பாவமாக பார்த்தாள்
தமயந்தி..
“ஓ.. அப்ப
நான்தான் இன்னைக்கு உனக்கு பலி ஆடா ? “ என்று
சிரித்தான் நளன்..
“ஹா ஹா ஹா பலி
ஆடு எல்லாம் இல்ல டா மாமா... எனக்கு மாட்டின அடிமை நீ.. நீ இன்னைக்கு ஃபுல்லா என்
கூடத்தான் இருக்கணும்.. ஒழுங்கா இப்ப பல்லாங்குழி ஆடு... “
என்று
மிரட்டியவள் அந்த குடிசுக்கு உள்ளே இருந்த பல்லாங்குழி கட்டையை எடுத்து வெளியே
வைத்தவள் அவனுடன் விளையாட ஆரம்பித்தாள்..
அவனும் நொந்தபடி
அவளுடன் பல்லாங்குழி விளையாட, சிறிது நேரத்திலயே அவனுக்கு அது
போரடிக்க,
“ஹே தயா...
எனக்கு வயல்ல வேலை இருக்கு டீ.. நான் போய்ட்டு சாயந்தரமா வரட்டுமா? “ என்று எழுந்திருக்க முயல எட்டி அவன் டீசர்ட்டை பிடித்து கொண்டவள்
“அதெல்லாம்
முடியாது..... எவ்வளவு வேலை இருந்தாலும் எல்லாம் என் பெரிய மாமாவும் அத்தையும்
பார்த்துக்குவாங்க... நீ என் கூடவே இருடா மாமா... “ என்று அவனை பிடித்து வைத்துக் கொண்டாள்
தமயந்தி...
“ஆஹா...தெரியாத்தனமா
இவ வெக்கப் பட்டு சிரிக்கிற அழக
பார்க்கலாம் னு ஓடோடி வந்தா இப்படி இவகூட
உட்கார்ந்து பல்லாங்குழி ஆட வச்சுட்டாளே..!! “
என்று உள்ளுக்குள்
புலம்பியபடி சிறிது நேரம் விளையாண்டவன் அதற்கு மேல் முடியாமல் போக,
“ஹே தயா.. அட்லீஸ்ட் கார்ட்ஸ் ஆவது விளையாடலாம் டீ.. இது
சுத்த போர்..” என்று முறைத்தான்..
“என்கிட்ட கார்ட்ஸ்
இல்லையே... “ என்று பாவமாக கையை விரித்தாள் தமயந்தி..
“அவ்வளவுதான...என்
பிரண்டு பக்கத்து தெருவுல இருக்கான்.. நான் போய் அவன் கிட்ட கேட்டு வாங்கி வர்றேன்..
“
என்றவன் அடுத்த
நொடி அந்த பக்கத்து வீட்டு சுவரை அப்படியே தாண்டி குதித்து பக்கத்து வீட்டுக்கு சென்று அதன் வழியாக
புகுந்து அடுத்த தெருவுக்கு சென்றவன் அடுத்த ஐந்து நிமிடத்தில் கார்ட்ஸ் உடன் வந்து
சேர்ந்தான்..
பின் இருவரும்
சிறிது நேரம் ரம்மி விளையாடிக் கொண்டிருக்க அவளோ அவனை ஏமாற்றி அவனை ஜெயித்தபடி அவன்
ஒவ்வொரு முறையும் தோற்கும் பொழுதும் அவனுக்கு நாக்கை துருத்தி ஒலுங்கு காட்டி சிரித்து
அவனை சீண்டிய படி விளையாடி கொண்டிருந்தாள்..
நளனும் அவள்
குறும்பை எல்லாம் ரசித்தபடி மனதுக்குள் பத்திரமாக பதிய வைத்த படி அவளுடன் சிரித்து
விளையாண்டு கொண்டிருந்தான்..
ஒரு மணி நேரம்
விளையாண்டு முடிச்சதும் இருவருக்குமே போரடிக்க
“சரி டீ.. அப்ப
நான் கிளம்பறேன்... “ என்று நழுவ முயன்றான்...
“டேய் மாமா....ஒரு
நிமிஷம் கிட்ட வாயேன்.. “ என்று அழைக்க, அவனும் அவன்
முகத்தை அவள் அருகே கொண்டு வர அவளோ வழக்கம் போல அவன் மீசையிலிருந்து ஒரு முடியை
பிடுங்கி கொண்டு கைதட்டி சிரித்தாள்...
அவனும் அவளை முறைத்தபடி
உள்ளுக்குள் சிரித்தான்...
“டேய் மாமா...
அப்புறம் வீட்டுக்கு போனதும் மறக்காமல் தலைக்கு தண்ணி ஊத்திக்க... இல்லைனா பூரான்
தேள் எல்லாம் கடிக்குமாம்.. பக்கத்து வீட்டு அக்கா சொன்னாங்க.. ஞாபகம் வச்சுக்கோ...
“ என்று சிரிக்க
“ஹ்ம்ம்ம் உன்
கிட்ட மாட்டிகிட்டதுக்கு அதுங்க கிட்டயே நான் கடி வாங்கிக்கிறேன்...போடி... “
என்று
சிரித்தபடி மீண்டும் அந்த சுவர் ஏறி குதித்து சென்று தன் பைக்கை எடுத்துக் கொண்டு மனம்
எல்லாம் உற்சாகம் பொங்கி வழிய, ஒரு கையில் பைக் ஐ பிடித்து கொண்டு
மறுகையில் தன் முன்னால் இருந்த முடியை ஸ்டைலாக கைகளால் ஒதுக்கியபடி, உள்ளுக்குள் சிலிர்த்தவாறு உதட்டில் வெட்க புன்னகையுடன் அந்த பைக்
ல் பறந்தான்.....
அதன் பிறகு
தினமுமே அந்த சுவர் ஏறி குதித்து வந்து அவளுடன் ஒரு இரண்டு மணி நேரம் சிரித்துப்
பேசி விளையாண்டு விட்டு செல்வது வழக்கமானது...
அவளுக்கு
பிடித்த சிறுவர் மலர் அம்புலி மாமா, காமிக்ஸ் புத்தகங்களை
எல்லாம் யாருக்கும் தெரியாமல் கொண்டு வந்து கொடுத்து விட்டு சென்று விடுவான்..
எப்படியோ ஐந்து நாட்களை
அந்தக் குடிசுக்குள் ஓட்டினாள் தமயந்தி...
ஐந்தாவது நாள்
மாலை அவளுக்கு மஞ்சள் நீராட்டு விழா ஏற்பாடு செய்தனர்..ஒரே மகள் என்பதால்
சிங்காரம் படு விமர்சையாக விழாவை ஏற்பாடு
செய்திருந்தான்...
தங்கராசு
பூரிப்புடன் தன் சொந்தங்களை எல்லாம் அழைத்துக்கொண்டு மாமன் சீரோடு வந்திருந்தான்..
கன்னியம்மா அடிக்கடி தன் தங்கையை பொறந்த விட்டுல இருந்து சீர் சரியா செய்யலை என்று குத்தி காட்டுவது
அவன் காதுக்கும் வந்து சேர்ந்தது..
அதனாலயே தன்
தங்கையின் மாமியார் வாயை அடைப்பதற்காக பத்து பவுனில் தன் மருமகளுக்காக பெரிய ஆரம், விலை உயர்ந்த பட்டு புடவை, மற்றும் சீர்
கூடையில் வைக்க மற்ற பொருட்கள் என சபை நிறக்க பல தட்டுக்கள் கொண்டு
வந்திருந்தான்...
அதை எல்லாம்
கண்ட தங்கத்துக்கு கண்ணில் நீர் வழிந்தது ஆனந்தத்தில்..
இதெல்லாம்
கொஞ்சம் தன் அண்ணன் கை மீறிய அளவுதான் என்றாலும் தனக்காக, தன் மாமியார் வாயை அடைப்பதற்காகத்தான் தன்
அண்ணன் இவ்வளவு பெருசா செய்யுது என புரிய, தனியாக கிடைத்த
தன் அண்ணனை கட்டி கொண்டு அவன் மார்பில் சாய்ந்து கொண்டு குலுங்கினாள் தங்கம்மா..
“எதுக்கு ணா...
இம்புட்டு செய்யற? இன்னும் நளன் படிப்பு இருக்கு..
அதுக்கு வேற நிறைய செலவு ஆகும்... அவன் படிப்புக்கு பாக்கறத விட்டுபோட்டு இந்த
கிழவி ஜாடை சொல்லுதுனு பார்த்து இவ்வளவு செய்யணுமா? “
என்று செல்லமாக கண்டித்தாள்..
“என்ன அம்மணி...
அப்படி சொல்லிபுட்ட... நான் உன்ற வீட்டு பெரியவங்களுக்கு பயந்து கிட்டு ஒன்னும்
இதெல்லாம் செய்யல... எல்லாம் என் மருமவளுக்காக...
எனக்கு வேற
பொட்ட புள்ளையா இருக்கு... தமா குட்டிதான் எனக்கு மவளும் என் மருமவளும்.. அவளுக்கு
செய்யாம வேற யாருக்கு செய்ய போறேன்.. இந்த நல்ல நாள் ல கண்ண கசக்காத.. சந்தோஷமா
சிரிச்சுகிட்டே இருக்கோணும்...” என்று அவள் தலையில் கை வைத்து இரு பக்கமும் ஆட்டி
சிரித்தான் அவள் அண்ணன்..
அதை கேட்டு
தங்கத்திற்கு மனம் நிறைந்து விட்டது... அவள் அண்ணன் தன் மகளை மருமகளாக்கி
கொள்வதில் இருந்து மாறவில்லை என தெரிய, அவள் அண்ணனை இன்னுமாய்
கட்டி கொண்டாள்..
வழக்கம் போல கன்னியம்மாள்
மட்டும் தங்கராசை கண்டதும் முகத்தை திருப்பி கொண்டு அவன் கொண்டு வந்த சீரை
பார்த்து அதுலயும் குறையை கண்டுபிடித்து ஏதேதோ
ஜாடை சொல்லி திட்டி கொண்டிருக்க அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் முன்னால் நின்று மாமன்
சடங்கை செய்தான் தங்கராசு...
அவன் அன்னை
பாப்பாத்திக்கு தன் பேத்தியை அப்படி பார்க்க தன் மகளையே பார்ப்பதை போல இருக்க, மனம் நிறைந்த பூரிப்புடன் பேத்தியை ரசித்து பார்த்து
கொண்டிருந்தார்..
கண்ணம்மாவுக்கு
சொல்லவே வேண்டாம்...
ஏற்கனவே தமயந்தி
மேல உயிராக இருப்பவள், தன் செல்ல மருமகள் இப்படி வளர்ந்து
புத்தம் புது பூவாக மலர்ந்து நிற்பதை கண்டதும் மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் முன்
நின்று அத்தையாய் சடங்கு செய்ய உதவி செய்து கொண்டிருந்தாள்..
தன் மாமன்
வாங்கி வந்திருந்த பட்டுபுடவையை கட்டி
கொண்டு கழுத்து நிறைய தங்க நகைகளை அணிந்து, காதிலும் பெரிய
ஜிமிக்கியை அணிந்திருக்க, நீண்ட ஜடை பின்னி அந்த ஜடைக்கு பூ
சுத்தி கூடவே இடுப்பில் ஒட்டியாணத்தை
கட்டி கொண்டு முகத்தில் பூரிப்புடன் வந்து சடங்கு செய்வதற்காக போட்டிருந்த
நாற்காலியில் அமர்ந்தவளை கண்டதும் நளன் இதயமோ எகிறி குதித்தது....
நேற்று வரை
பாவாடை சட்டையில் சிறுபெண்ணாக நொண்டி அடித்து கொண்டு இருந்தவள் ஒரே நாளில் இவ்வளவு
பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டாளா என்று ஆச்சர்யமாக இருந்தது...
நளனுக்கு அவளை
பட்டுபுடவையில் பார்க்க இன்னும் தலை சுத்தி போனது...
சிறுபெண்ணாக
இருந்தவள் மாமன் வாங்கிகொடுத்த பட்டு புடவையில் கழுத்து நிறைய நகை அணிந்து தலையை
குனிந்த படியே வந்து நாற்காலியில் அமர, அவனால் இன்னுமே நம்பவே முடியவில்லை..
நேற்று தன்னிடம்
வம்பு பேசி சிரித்து பேசி அவனை சீண்டி
விளையாண்ட அந்த சின்ன பெண்ணா இவள் என்று சந்தேகமாக இருந்தது..
ஒருவேளை
இதெல்லாம் கனவா என்று தன்னையே கிள்ளி பார்த்து கொள்ள சுருக் என்று வலித்தது..
“அப்ப இது
கனவல்ல. நிஜம்தான்..ஒரே நாள் ல இவ்வளவு அடக்க ஒடுக்கமா மாறிட்டாளே !! “ என்று உள்ளுக்குள் அசட்டு சிரிப்பை சிரித்து
கொண்டான்...
அவளோ தலையை
குனிந்து கொண்டிருந்தாலும் முன்னால் நின்று அவளை புகைப்படம் எடுத்து கொண்டிருந்த
நளனை ஓரக்கண்ணால் பார்த்து அதே வெகுளியாக கண்ணடித்து குறும்பாக சிரித்தாள் தமயந்தி...
அதை கண்டு
திகைத்து திடுக்கிட்டு போனான் நளன்...
அப்ப அவ
உண்மையிலயே வெட்கபட்டு தலையை குனிந்து கொண்டிருக்கவில்லை.. எல்லாம் அந்த
கன்னியம்மாவுக்கு பயந்து கிட்டோ ஊர்க் காரங்களுக்காகவோ இப்படி குனிந்து கொண்டு
இருக்கிறாள் என புரிந்தது...
“அடிப்பாவி...
இப்பதான் உன்னை லட்சணமா அடக்க ஒடுக்கமா இருக்கானு நெனச்சேன்...அதுக்குள்ள
அதெல்லாம் பொய்யுனு காட்டிட்டியே... இப்படி தலைய குனிஞ்சுகிட்டு இருக்கறது எல்லாம்
வெறும் ஆக்டிங் ஆ?
நீ என்னமோ பெரிய
மனுஷி ஆய்ட்டனு அத்த சொல்லுச்சு.. ஊரை எல்லாம் கூட்டி என் மவ பெரிய மனுஷி
ஆய்ட்டானு விருந்து வேற வைக்குது...
ஆனா நீ அப்படியேதான்
டீ இருக்க !! கொஞ்சம் கூட மாறவே இல்லை !! அதே சிறுபிள்ளை
தனமும் குழந்தை முகமும் தான் இருக்கு...
ஹ்ம்ம் இவ எப்ப
பெரிய மனுஷி ஆகி இவ மனசுல எப்ப என் மேல இவளுக்கு காதல் வர்றது?
எனக்கு, என மனசுல பூத்த மாதிரியே
அவ மனசுலயும் காதல் பூ தானா பூக்கணும்..
என்னை பார்த்து காதலுடன் ஐ லவ் யூ னு சொல்லணும்.. அதுவரைக்கும் என் மனசையும் இவ கிட்ட
காட்டக் கூடாது.. “ என்று முடிவு செய்து கொண்டவன்
சந்தனத்தில் மிளிர்ந்த கன்னங்களுடன் கன்னம் குழிய சிரித்து கொண்டிருந்தவளை, அந்த சடங்கின் பொழுது அவளின் ஒவ்வொரு அசைவையும் அவன் வைத்திருந்த அந்த டிஜிட்டல் கேமராவிலும் தன் மனக்கேமராவிலும் அழியாமல் அழகாக பதிந்து கொண்டான் நளன்...
Comments
Post a Comment