தேடும் கண் பார்வை தவிக்க-17
அத்தியாயம்-17
லண்டன் ஹீத்ரூ விமானநிலையம்..
உலகில் புகழ்பெற்ற விமான நிலையங்களில்
ஒன்று..உலக அளவில் இரண்டாவது பிசியஸ்ட் விமான நிலையமாகும்..
சென்னை விமான நிலையத்தை போலவே
எதிர்பார்த்து வந்தவள் லண்டன் விமான
நிலையத்தின் பிரம்மாண்டத்தை பார்த்து மிரண்டு போனாள் ரோஜா...
அடுத்த விமானத்தை பிடிப்பதற்காக வேகமாக
நடந்து கொண்டிருந்த மனிதர்கள், அவசரமாக தங்கள் வேலையை முடித்து
கொண்டு தாமதமாக விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தவர்கள்
அவர்களின் பெயர்கள் அழைக்கபட்டு
கொண்டிருக்க, அதை கேட்டு வேகமாக தங்களுடைய கேட் ஐ
நோக்கி ஓடி கொண்டிருந்தவர்கள்
தங்கள் உடமைகளை தள்ளுவண்டியில் வைத்து
வேகமாக தள்ளிகொண்டு சீக்கிரம் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று பரபரத்த மனிதர்கள்
என்று எல்லாரும் பரபரப்பாக இருக்க, அவளோ எங்கு செல்வது என்று முழித்து
கொண்டு நின்றாள்...
அவளின் முன்பு இருந்த பல வகையான சைன்
போர்டுகள் அவளை மிரட்டின..
அவள் முன்னே இரு கிளைகளாக பாதைகள்
இருந்தன.. ஒரு பக்கம் ட்ரான்சிட்(Transit) என்று ஏர்ரோ மார்க் மின்னிக் கொண்டிருக்க,
அடுத்த பக்கம் இமிக்ரேஷன், பேக்கேஜ் க்ளைம் என்ற போர்டுகள்
இருக்க அவளுக்கோ எந்த பக்கம் செல்வது என்று குழப்பமானது....
இதுவரை ஒரே நேர் பாதையாக இருந்ததால்
விமானத்தில் இருந்து வெளிவந்த மற்றவர்களை பின்பற்றி அவர்களுடன் வந்து விட்டாள்..
ஆனால் அந்த நேர் பாதை முடிவுற்று இங்கு
இரண்டு பாதைகளாக பிரிந்து சென்றது..அவளுடன் வந்தவர்கள் இரண்டு வழிகளிலும் செல்ல, அவளுக்கோ அவள் எந்த பக்கம் செல்லவேண்டும் என்று குழப்பமாக
இருந்தது...
என்னதான் படித்திருந்தாலும் வழி மாறி
வேற பாதைக்கு சென்றுவிட்டால் என்ன செய்வது
என்று பயமாகவும் இருந்தது...
நம்ம ஊரை போல வேகமாக சென்று
கொண்டிருப்பவர்களை நிறுத்தி போகும் ஊருக்கு வழி கேட்பதை போல வழி கேட்கவும்
சங்கடமாக இருந்தது....
மீண்டும் கண்ணை தேய்த்து கொண்டு அந்த
சைன் போர்டை பார்க்க, அதில் இருந்த ட்ரான்சிட் என்றதை
பார்த்ததும் சில மணி நேரத்துக்கு முன் ரிஷி ட்ரான்சிட் என்றால் என்ன என்று
விளக்கியது நினைவு வர, உடனே அவள் முகம் பிரகாசமானது..
அப்படி என்றால் அடுத்த பாதையில் செல்ல
வேண்டும் என்று புரிந்துவிட, ஆனாலும் உள்ளுக்குள் உதறலாக
இருந்தது...
இந்த நேரத்தில் அவன், அந்த நெட்டை கொக்கு ரிஷி
பக்கத்தில் இருந்தால் பரவாயில்லையா இருக்கும் என்று எண்ணியவள் பின்னால் திரும்பி பார்த்தாள் அவன் எதுவும் வருகிறானா? என்று..
ஆனால் அந்த பாதையில் மற்றவர்கள் வந்து கொண்டிருக்க
அவனை காணவில்லை..
விமானத்திலிருந்து வெளிவந்ததும் சில அடிகள் இருவருமே ஒன்றாக நடந்து வந்தனர்..
அப்போது அவர்கள் பின்னாலிருந்து
“ஹாய் ரிஷி... “ என்று குரல் கேட்க உடனே இருவருமே திரும்பி
பார்த்தனர்
வெள்ளை வெளேரென்று ஒரு வெள்ளைக்காரன் ரிஷியைப் பார்த்து சிரித்தபடி வந்தான்.. ரிஷியும் அவனைப் பார்த்து
"ஹாய் ஜேக், ஹௌ ஆர் யூ டூயிங்?
" என்று புன்னகைக்க அவனும் அவனை கட்டி அணைத்து முதுகை
தட்டி கொடுத்து அவனை விட்டவன்
“ஐம் பைன் மேன்... ஹௌ ஆர் யூ? இட்ஸ் லாங் டைம்... “ என்று
சிரித்தபடி ரிஷியின் வயிற்றில் செல்லமாக குத்தினான்..
ரிஷியும் சிரித்துக் கொண்டே
“ஐம் டூயிங் கிரேட்.. “ என்று பதிலளிக்க,
பின் பேச்சு அவர்களின் தொழிலை பற்றி விசாரித்து
பேச ஆரம்பித்தனர்..
அங்கேயே ஓரமாக நின்றபடி அவன் அருகில் நின்றிருந்த ரோஜாவோ அவர்கள் பேசும்
ஆங்கிலம் புரியாமல் திருதிருவென்று
விழித்தாள்..
கூடவே அந்த வெள்ளைக்காரன் பார்வை
அடிக்கடி அவள் பக்கம் வந்து சென்றது...
ஏனோ அவன் பார்வை அவளுக்கு
பிடித்தமானதாக இல்லை.. அதனால் அவர்களை
ஒட்டி நின்றிருந்தவள் அவர்கள் இடமிருந்து கொஞ்சம் தள்ளி நின்றுகொண்டாள்..
ஏதோ பேசிக்கொண்டிருந்த ஜேக் ரிஷியிடம் ரோஜாவை
கண்ணால் ஜாடை காட்டி
“ஹூ இஸ் ஷி? ஷி
இஸ் லுக்கிங் வெரி பியூட்டிஃபுல் அன்ட் சோ செக்ஸி... " என்று ஒரு மாதிரி
சிரித்தான்...
அவன் சிரிப்பில் இருந்த ஏதோ ஒன்று
ரோஜாவுக்கு எரிச்சலை கொடுக்க, அதற்கு மேல் அங்கு நிற்க பிடிக்காமல்
விறுவிறுவென்று முன்னால் நடந்தாள்..
ரிஷியின் கல்லூரி தோழன் அந்த ஜேக்...கல்லூரியில் படிக்கும் பொழுதே பல
பெண்களுடன் சுற்றி கொண்டிருப்பான்...
இப்பொழுது அவனும் சொந்தமாக தொழில்
தொடங்கி நடத்தி வர, ரிஷியை கண்டதும் ஆர்வமாக பேசிகொண்டிருந்தான்...
ஆனால் அவன் பார்வை ரோஜாவை கண்டு அசந்து நின்றது..
அவன் பார்வையின் அர்த்தத்தை புரிந்து
கொண்ட ரிஷி உள்ளுக்குள் கொதித்தவன்
"சாரி ஜேக்.. ஷி இஸ் மை வைஃப்.
நாட் ஃபார் யுவர் செர்விஸ்... " என்றான் சிரித்தவாறு ஆனால் வார்த்தையில்
கடுமையுடன்...
அதைக்கேட்டு ஒரு வித ஏமாற்றத்துடன்
"ஓ சாரி மேன்.. யூ ஆர் சோ லக்கி..
இந்த மாதிரி ஒரு கேர்ள் தினமும் உன் பெட் ரூமில் இருக்க.." என்று இன்னும்
பச்சையாக பேச அதை கேட்டு ரிஷியின் கை முஷ்டி இறுகியது..
உள்ளுக்குள் பல்லை கடித்தவன் பார்வையோ
தன் முன்னால் சென்று கொண்டிருந்த ரோஜாவின் மீது இருந்தது...
அவளோ வேக வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தாள்.. அவளை தவற விட்டு விடக் கூடாது
என்று அவள் போவதையே பார்த்து கொண்டு ஜேக் உடன் பேசி கொண்டிருந்தவன் ஜேக் ன்
கமெண்ட்ஸ் ஐ கேட்டு உள்ளுக்குள்
கொதித்தாலும் அந்த ஜேக் க்கு இதெல்லாம் பழகின ஒன்று..
எந்த பெண்களை பார்த்தாலும்
இப்படித்தான் கமெண்ட் அடிப்பான்.. கூடவே அங்கு அதெல்லாம் சகஜம் என்பதால் நம்ம
ஊரைப்போல அவன் சட்டையை பிடிக்க முடியாது.. மேனர்ஸ் இல்லை என்று முத்திரை குத்திவிடுவார்கள்..
அதனால் பல்லை கடித்து கொண்டவன் பேச்சை
வேற பக்கம் மாற்றி விட்டு சில நிமிடங்களில் நழுவ பார்க்க ஜேக் விடாமல் அடுத்து அவனுடைய தொழிலை பற்றி புகழ்ந்து
பேசி கொண்டிருந்தான்..
அதில் இன்னும் கடுப்பான ரிஷி ஒரு
கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல்
"சாரி ஜேக்.. ஐ ஹேவ் டு கோ.. மை
வைஃப் அல்ரெடி லெப்ட்.. லெட்ஸ் கேட்ச் அப் சம் அதர் டே... " என்று அவனிடம் கை
குலுக்கி விட்டு அவன் பதிலுக்கு கூட காத்திருக்காமல் ஓட்டமும் நடையுமாக சென்றான்...
நேர் பாதையில் வேகமாக நடந்து வந்தவன்
முன்பு ரோஜா நின்ற அதே இடத்திலயே வந்து நின்று கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவளை
தேடி பார்த்தான்..
அவளோ எங்கும் காணவில்லை... ஒருவேளை
அவளை தவற விட்டு விட்டேனா? என்று எண்ண அவனுக்குள் எதையோ இழந்து
விட்டதை போல தவித்தது..
“சே... எல்லாம் அந்த ஜேக் நாயால்..
வழவழவென்று அறுத்து விட்டான்.. பேசாமல் ஆரம்பத்திலயே அவனை கழட்டி விட்டுட்டு
வந்திருக்கணும்... " என்று உள்ளுக்குள்
புலம்பியவாறு செக்யூரிட்டி செக்கிங் பகுதிக்கு சென்றான்....
கண்களோ அவளை தேடி நாலா பக்கமும்
சுழன்றது...
இடையில் மற்றொரு தெரிந்த நபரும்
அவனிடம் வழவழக்க வர, இந்த முறை நேரடியாகவே அவரிடம் சொல்லிவிட்டு
செக்யூரிட்டி செக்கிங் பகுதியில் முழுவதுமாக தேடி பார்த்தான்...
அவளை மிஸ் பண்ணிவிடக்கூடாது என்று
உள்ளுக்குள் அடித்துக் கொள்ள , மீண்டும் அவசரமாக அந்த பகுதியை
கண்களால் சல்லடை போட்டு துழாவினான் ரோஜாவை...
உள்ளுக்குள் லேசாக ஏமாற்றம் பரவ, அவன் மனம் ஏமாற்றத்தில்
சுருங்க ஆரம்பிக்க,
கடைசி நொடி
"யெஸ்.... தேங்க் காட்.... "
என்று அவன் கையை மடக்கி பின்னால் இழுத்து துள்ளி குதிக்க, இந்த
முறையும் அருகில் இருந்தவர்கள் அவனை ஒரு
மாதிரி பார்த்து வைத்தனர்...
அப்பொழுது தான் அவன் தவறு புரிய ஹீ ஹீ
ஹீ என்று ஒரு அசட்டு சிரிப்பை சிரித்து வைத்தான்..
செக்யூரிட்டி செக்கிங் வரிசையில்
மிரட்சியுடன் நின்று கொண்டிருந்தாள் ரோஜா..
அவளை கண்டதும் தான் அவன் தொலைத்துவிட்ட பொக்கிஷத்தை மீண்டும்
அடைந்ததை போன்ற பெரும் மகிழ்ச்சி அடைந்தான் ரிஷி..அதற்குள் அவள் நின்றிருந்த வரிசை
முன்னேறிச் செல்ல அவனோ ரொம்பவும் பின் தங்கியிருந்தான்..
எப்படி அவளிடம் சென்று சேர்வது என்று
அவசரமாக யோசித்தவன் ஆபத்துக்கு பாவமில்லை
இந்த முறையும் அவளை விட்டு விடக் கூடாது என்று யோசித்தவன் நம்ம மக்கள் வழக்கமாக பின்பற்றும் முறையை கையில்
எடுத்தான்..
அருகில் இருந்தவர்களிடம்
“சார் என் வைஃப் முன்னாடி இருக்காங்க.
அவளுடைய பாஸ்போர்ட் என்கிட்ட இருக்கு. நான் அர்ஜெண்டா கொஞ்சம் முன்னால் போகணும்.. ப்ளீஸ் கொஞ்சம் வழி விடுங்க.. “
என்று ஆங்கிலத்தில் ரிக்வெஸ்ட் பண்ணி
கேட்க, முன்னால் நின்று இருந்தவர்களும் ஒதுங்கி நின்று
அவனுக்கு வழிவிட வேக வேகமாக முன்னால் நகர்ந்து சென்றான்..
ரிஷி கிட்டத்தட்ட செக்யூரிட்டி
ஸ்கேனிங் பகுதியை அடைந்தவன் மீண்டும் பார்வை ரோஜா நின்)றிருந்த இடத்திற்கு சென்றது..
அவள் பெண்கள் வரிசையில் நின்றிருந்தவள்
அவளுடைய பையை அந்த ஸ்கேனிங் மெஷினில் வைத்து விட்டு உடலை ஸ்கேன் பண்ணும் அந்த
அறைக்குள் சென்றாள்..
உடனே ரிஷியும் தனக்கு முன்னால் இரண்டு
நபர்கள் இருக்க அவன் இதயம் அடித்துக்கொண்டது.. அவசர அவசரமாக மற்ற இரண்டு நபர்களையும்
சீக்கிரம் போக சொல்லி தள்ளிவிட்டவன் அவன்
முறை வரவும் ஸ்கேனிங் அறைக்குள் சென்றாலும் பார்வை திரும்பி பெண்கள் பக்கமே
பார்த்துக் கொண்டிருந்தான்...
அவனுக்கு முன்னால் சென்றிருந்த ரோஜாவோ
அவளை ஸ்கேன் பண்ணும்பொழுது அந்த ஸ்கேனிங் கருவியிலிருந்து ஏதோ பீப் பீப் என்று சத்தம்
கேட்க, அந்த
பெண் காவலர் ரோஜாவை தனியாக நிற்க வைத்து ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தார்...
ஏற்கனவே மிரட்சியுடன் வந்து
கொண்டிருந்தவள், அந்த போலிஸ் மற்றவர்களை எல்லாம்
அனுப்பி விட தன்னை மட்டும் அவர்கள் பிடித்து வைத்துக் கொண்டதை கண்டதும் உள்ளுக்குள்
நடுங்க ஆரம்பித்தாள்...
கண்களில் எக்ஸ்ட்ரா மிரட்சியுடன்
திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தாள்..
அந்த காவலர் கேட்பது அவளுக்கு சரியாக
புரியவில்லை.. அவர்களுடைய ஸ்லாங் வேறு மாதிரியாக இருக்க அதைப் புரிந்து கொள்வது
கஷ்டமாக இருந்தது..
அதனால் திருதிருவென்று முழித்தாள்.. ரிஷி
எங்கேயாவது இருக்கிறானா என்று அந்த நிலையிலும் கண்களால் தேடினாள் ரோஜா...
அவள் தன்னைத்தான் தேடுகிறாள் என்று
புரிந்து கொண்டவன் மனமோ உற்சாகத்தில் துள்ளிக் குதித்தது..
அவசர அவசரமாக ஸ்கேன் பண்ணி முடித்திருந்த
அவன் உடைமைகளை எடுத்துக் கொண்டு அவன் அவிழ்த்து வைத்திருந்த பெல்ட் ஐ எடுத்து
அவசரமாக இடுப்பில் சுற்றிக்கொண்டு அதன் முன் பட்டனை அழுத்திக் கொண்டே வேகமாக
பெண்கள் பக்கம் வந்தான்..
அவனைக் கண்டதும் ரோஜாவின் கண்கள்
பெரிதாக விரிந்தன.. அதிலும் அவள் முகத்திலும் அப்படி ஒரு நிம்மதி மற்றும் மகிழ்ச்சி...
இவனைக் கண்டதும் தானாக ஓடிவந்து அவன்
அருகில் நின்று கொண்டாள்.. அந்த காவலரும் விடாமல்
அவளை பின் தொடர ரிஷியும் அவளை தோளோடு சேர்த்து தன்னொடு மெல்ல அணைத்தவாறு
“என்னாச்சு ரோஜா?
எனி ப்ராப்ளம்? “ என்றான் அவளை பார்த்து..
அவளோ பயத்தில் என்ன சொல்வது என்று
புரியாமல் முழித்து கொண்டிருக்க, அதை கண்டவன்
“சரி.. பயந்துக்காத.. எல்லாம் நான்
பார்த்துக்கறேன்.. “ என்றவன் அந்த
காவலரிடம் என்னவென்று விசாரிக்க அவரோ அந்த கருவியை காட்டி அதில் வரும் ஒலியை
சுட்டிக்காட்டி அவளிடம் இருந்து வருகிறது என்று விளக்கினார்..
அவள் தலையில் இருந்த மல்லிகை பூவை
எடுக்க சொல்லித்தான் அந்த காவலர் சொல்லிக்
கொண்டிருந்தார்..அது ரோஜாவுக்கு சரியாக புரியாததால் முழித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள்
என புரிந்தது...
அவர் சொன்னதை கேட்டவன் உடனே அவள்
தலையிலிருந்த மல்லிகை பூவை எடுத்து அருகிலிருந்த டஸ்ட் பின்னில் போட்டான்...
அந்த காவலரும் மீண்டும் அந்த கருவியை
வைத்து ஆராய மீண்டும் அதே ஒலி கேட்டது.. இந்த முறை அந்த காவலர் ரோஜாவை வித்தியாசமாக பார்க்க ரோஜாவுக்கோ கை கால்கள் உதற
ஆரம்பித்தன..
உடனே ரிஷி அவள் கழுத்தில் இருந்த தங்க
செயினை வெளியிலெடுத்து பார்க்க அதில் சில சேஃப்டி பின்களை மாட்டி
வைத்திருந்தாள்..
அதை பின்புறமாக வைத்துக்கொண்டு
மீண்டும் அந்த காவலரை சோதனை பண்ண சொல்ல, இந்த முறை அந்த ஒலி வரவில்லை.. அது அந்த செயினில்
மாட்டி இருந்த மெட்டல் பின்னால் வந்தது என்று புரியவும் அந்த காவலரும்
“சாரி மேடம்... இதை நீங்க முன்னாடியே
வெளியில் எடுத்து காமிச்சு இருக்கலாம் இல்ல.. “ என்று ஆங்கிலத்தில் சொல்லி சிரிக்க ரோஜாவுக்கோ
அவர் சிரிப்பதில் இருந்து என்ன சொல்லியிருப்பார் என்று புரிய, அவளுக்கு வெட்கமாகி விட்டது...
அவளும் ஒரு அசட்டு சிரிப்பை சிரித்து
வைத்தாள்..
இன்னுமே ரிஷி அந்த செயினை பிடித்துக்
கொண்டிருக்க அவன் கை விரல்கள் லேசாக அவள் கழுத்து பகுதியில் உரசிக் கொண்டிருந்தது..
அந்த மெல்லிய ஸ்பரிசத்தில் அவள் நெளிய
ஆரம்பித்தாள்.. உடனே அவனும் புரிந்துகொண்டு அந்த செயினை கையிலிருந்து விடுவித்தான்..
அவள் சோதனை முடிந்து விட்டதாக சொல்லி
அனுப்பி வைக்க அவளும் விட்டால் போதும் என்று ஓடிச்சென்று அவளுடைய பேக்கையும்
கைப்பையையும் எடுத்துக் கொண்டு ரிஷியின் அருகில்
வந்தாள்..
உடனே அவனைப் பார்த்து
"சாரி சார்... அவங்க என்ன கேக்கறாங்கன்னு சரியா புரியல.. அதுதான் முழிச்சிகிட்டு இருந்தேன்.. ரொம்ப
நன்றி சார்.. சரியான நேரத்துல வந்து என்னை காப்பாத்திட்டிங்க.. " என்று கண்களில் பாவத்துடன் நன்றி சொன்னாள்..
அதைக் கேட்டு ரிஷியோ அவளைப் பார்த்து முறைத்தான்..
அவன் முறைப்பதை கண்டு கொண்டவள் அப்பொழுதுதான் அவனை பெயர் சொல்லி அழைக்க சொன்னது
ஞாபகம் வர
“சாரி சார்... “ என்று ஆரம்பித்து சாரி ரிஷி என்று புன்னகைத்தாள்..
அவள் புன்னகையை கண்டவனுக்கு அதற்கு மேல் தன் கோபத்தை இழுத்து
வைக்க முடியாததால் அவனும் புன்னகைத்து
“அதுசரி.. ஏன் என்னை விட்டுட்டு ஓடி வந்துட்ட.. என் கூடவே
வர வேண்டியது தானே.. “ என்று செல்லமாக
முறைத்தான்..
“அது வந்து ரிஷி.... உங்க கூட ஒரு வெள்ள பன்னி நின்னுகிட்டிருந்தானே
!! அவன் பார்வையே சரியில்ல... என்னையவே உத்து உத்து
முறைச்சு முறைச்சு பார்த்துகிட்டிருந்தான்..
அவன் முன்னாடி நிக்க பிடிக்காமல் ஓடி வந்துட்டேன்.. அவன்
பார்வையே சரியில்ல... அவன் கூட எல்லாம்
பிரண்ட்ஷிப் வெச்சுக்காதீங்க ரிஷி.. “ என்று அருவருப்புடன் முகத்தை சுளித்தாள்..
அவள் சொன்ன வெள்ள பன்னி என்றதில்
குழம்பியவன்
“என்னது வெள்ள பன்னி யா? அப்படினா ?? “ என்றான் புரியாமல்..
“வெள்ள பன்னி தெரியாது?? அதுதான் ரிஷி.. பி.ஐ.ஜி பிக்(pig).
வைட் பிக்...
எங்க ஸ்கூல்ல யாராவது வெள்ளை வெளேர்னு
இருந்தா நாங்க வெள்ள பன்னி னு தான் சொல்லுவோம்.. அந்த ஆள பார்த்தா இவ்ளோ வெள்ளையா
இருக்கான்..லண்டன் காரனா? “ என்று மீண்டும் அதே முகச்சுளிப்பு...
அவள் கூறுவதையும் அவள் பேசும்பொழுது
அவள் முகம் சுருங்கி விரிந்ததையும் கண்களில் பல அபிநயங்கள் வந்து போனதையும் கண்டு
அசந்து நின்று மெய்மறந்து ரசித்தவன் அவள் சொல்லியதை கேட்டு வாய்விட்டு சிரித்தான்....
“ஹா ஹா ஹா ஹே ரோஜா பொண்ணு... நீ
அவனுக்கு சரியாதான் பேரு வச்சிருக்க... ஆமா அவன் லண்டன் காரன்தான்... என்னுடைய
காலேஜ் மேட்.. ரெண்டு பேரும் ஒன்னாதான்
இங்க லண்டன் ல படிச்சோம்... “ என்றான்
சிரித்தவாறே..
அதை கேட்டு வியந்து போனவள்
“ஓ.. அப்படீனா நீங்க இங்கே லண்டனில்
படித்தவரா? அதுதான் நான் பேசுகிற சில வார்த்தைகள் உங்களுக்கு புரிய மாட்டேங்குது.. “ என்று
அப்பாவியாக கண்களை ஆச்சர்யத்தில் விரித்தாள்..
அவனும் ஆமாம் என்று கண்களால் கீழே இறக்கி பதில் சொல்ல, பின் இருவரும் பேசிக்கொண்டே
முன்னால் நடந்தனர்...
Comments
Post a Comment