தேடும் கண் பார்வை தவிக்க-20
அத்தியாயம்-20
“மாமோய்...
நீ எங்க இருக்க? “ என்று கத்தி கொண்டே வயல் வரப்பில்
லாவகமாக ஓடி வந்தாள் தமயந்தி...
அந்த வரப்பின் இருபக்கமும் பச்சை பசேல்
என்று நெற்கதிர்கள் வளர்ந்து பருவம் அடையும் நிலையில் இருந்தன.. ஒன்றிரன்டில் பூ
வைத்திருக்க அதை பார்த்து ரசித்தவாறு ஒரு கையால் அதை தடவியவாறு வரப்பில் வேகமாக
ஓடி வந்தாள் தமயந்தி..
நெல் வயல்களை தாண்டி அடுத்து இருந்தது
கரும்பு தோட்டம்...
இயற்கை விவசாயத்தின் பலனாகவும்
தங்கராசு தன் வியர்வை சிந்தி எந்நேரமும் அந்த தோட்டத்திலயே கிடந்து தான் பெற்ற
பிள்ளையை போல பார்த்து பார்த்து செய்ததாலும் கரும்புகள் உருண்டு திரண்டு கொலு கொலு
வென்று கம்பீரத்துடன் நின்று கொண்டிருந்தன....
நெல்வயல்களை தாண்டி ஓடி வந்தவள்
அடுத்து இருந்த கரும்பு தோட்டத்தை அடையவும் அங்கு தலைக்கு மேல வளர்ந்திருந்த
கரும்புகளுக்கிடையில் உற்று பார்த்தவள்
“டேய்... மாமோய்... நீ எங்க இருக்க? “ என்று மீண்டும் இன்னும் கொஞ்சம் ஸ்ருதியை கூட்டி கத்தினாள்...
அப்பொழுது அவள் நின்றிருந்த இடத்தை
விட்டு சற்று தள்ளி கரும்பு தோகை சரசரவென்று
வரிசையாக அசைய, அதை கண்டவள் முகம் மலர அந்த பகுதியை
நோக்கி ஓடினாள் தமயந்தி...
தன் தலையில் கட்டியிருந்த மண்டகாட்டு துணியை அவிழ்த்துக் கொண்டே
அந்த கரும்பு தோட்டத்தில் இருந்து வெளிவந்தான்
நளன்...
கரும்பு தோகையில் இருக்கும் மொழங்கு பட்டு விடாமல்
இருக்க, ஒரு
பழைய முழுக்கை சட்டையை அணிந்திருந்தான்.. கீழே ஒரு பழைய லுங்கியை காலை மறைக்குமாறு அணிந்திருந்தான்..
தன் கல்லூரி படிப்பை
முடித்திருந்தாலும் நான் படித்து பட்டம் பெற்றுவிட்டேன்.. இனிமேல் வயலுக்குள்
இறங்க மாட்டேன் சேற்றில் கால் வைக்க மாட்டேன் என்று முகம் சுளிக்காமல் நேரம்
கிடைக்கும் பொழுதெல்லாம் தன் தந்தைக்கு உதவி
வருகிறான் நளன்..
அவனை கண்டதும் வாயில் கை வைத்து கெக்கே பெக்கே என்று
வாய்விட்டு சிரித்தாள் தமயந்தி.. சிரித்து முடித்ததும் தன் சிரிப்பை முயன்று
அடக்கி கொண்டு
“டேய் மாமா... உன்னை இப்படி பார்க்க
தங்கராசு மாமா செஞ்சி வச்சிருக்க சோளக்காட்டு பொம்மை போலவே இருக்கு...
இரண்டுக்கும் என்ன ஒரே ஒரு வித்தியாசம் னா அந்த பொம்மை நல்லா கொழுகொழுன்னு குண்டா
இருக்கு...
ஆனால் நீ இன்னும் நல்லி எலும்பு,
அதே ஒட்டடகுச்சி மாதிரி அப்படியே தான் இருக்க...
ஹ்ம்ம்ம் உன்னை கொண்டு போய்
நிறுத்தினா கண்டிப்பா அந்த காக்கா
குருவிக்கெல்லாம் கொஞ்சம் கூட பயம் வராது..உன்னை ஜோக்கரா பார்த்து அதுகளும்
சிரிக்குங்க... " என்று மீண்டும் கலகலவென்று வாய்விட்டு சிரித்தாள்...
சிறுபிள்ளையாக இருந்தவள் இப்பொழுது வளர்ந்து குமரியாக நின்றிருந்தாள்.. அவளது
மனம் இன்னும் குழந்தையாக சிறுபிள்ளையாக இருந்தாலும் உடலின் எல்லா பாகங்களும் பருவத்திற்கேற்ப வளர்ந்து
வனப்புடன் நிற்கும் நெற்கதிரை போல தளதளவென்று வளர்ந்து நின்றாள் தமயந்தி..
அதுவும் பாவாடை சட்டை அணிந்திருக்க,
வரப்பில் ஓடி வந்தவள் இப்பொழுது நின்று மூச்சு வாங்கி கொண்டிருக்க,
மாராப்பு போடாத அவளின் வளைவு
சுழிவுகள் இன்னும் திமிறி கொண்டிருக்க, எவ்வளவு
முயன்றும் கட்டு கடங்காத காளையாக நளன் பார்வை அவளை அள்ளி பருகியது அவள்
அறியாமல்...
வயலில் இருந்து வெளிவந்தவன் வரப்பில்
மீது ஏறி நின்றிருக்க, வேகமாக வந்தவள் மூச்சு வாங்கி
கொண்டே அவனை கிண்டலடித்து சிரித்து
கொண்டிருந்தாள்...
அவளையே இமைக்க மறந்து ரசித்தவன் சலங்கை
ஒலிபோல சிரித்த அவளின் கலகலவென்ற சிரிப்பை
ரசித்தவன் அவளை செல்லமாக முறைக்க கூட முடியாமல் அப்படியே உருகி போனான்..
தன் அருகில் ஒட்டி நிற்பவளை அப்படியே
இடையோடு சேர்த்து அணைத்து கொள்ள தவித்தது அவன் உள்ளே...
சிரித்து முடித்தவள் நிமிர்ந்து அவன்
முகம் பார்க்க, அவன் பார்வையோ கள்ளுண்டவனை போல தன்னை
மொய்ப்பதை கண்டு கொண்டவள் அதன் அர்த்தம் புரியாமல்
"டேய் மாமா.. என்ன லுக்கு?
எதுக்கு இப்படி பார்க்கற? " என்றாள்
சிரித்தவாறு...
“நான் பார்ப்பதின் அர்த்தத்தையும் என் கண்ணில்
மின்னும் காதலையும் கூட கண்டு கொள்ளாத தத்தியாக இருக்கிறாளே..!! வயசுதான் பதினெட்டு
ஆகப் போகுது.. இன்னும் பத்து வயது சிறுமி போல சுத்திகிட்டு இருக்காளே..!!
இவ எப்ப வளர்ந்து என் காதலை
புரிஞ்சுகிட்டு அந்த கன்னியம்மா கிட்ட தைர்யமா எதிர்த்து நின்னு என் மாமனைத்தான்
கட்டிக்குவேன் னு சொல்லறது..? " என்று உள்ளுக்குள் பெருமூச்சு விட்டவன்
தன்னை உலுக்கி கொண்டு
"ஓய் பொண்டாட்டி.... எதுக்கு
இப்படி அரக்க பறக்க ஓடி வர்ற? வரப்புல பார்த்து வரமாட்டியா? பாம்பு எதுவும் இருக்க போவுது? " என்றான்
அக்கறையாக..
"ஹா ஹா ஹா.. பாம்பெல்லாம் இந்த
தமயந்தி வயலுக்கு வந்திட்டா னு தெரிஞ்சாலே பயந்து ஓடிடுமாக்கும்.. ஏன்னா நான்
கன்னியம்மா பேத்தி... என்னை கண்டால் பாம்பு என்ன அந்த படையே நடுங்கும்.. "
என்று இல்லாத காலரை தூக்கி விட்டு
கொண்டாள்...
“ஹே தமா... அங்க பார் தவளை... "
என்று நளன் கத்த
"ஐயோ.... " என்று கத்தியவாறு பாய்ந்து அருகில் நின்றிருந்த நளனை
இறுக்கி கட்டி கொண்டாள்..
பயத்தில் அவள் உடல் லேசாக நடுங்குவது
அவன் உடலுடன் ஒட்டியிருந்த அவள் உடல் மொழியிலிலயே தெரிந்தது...
ஒரு அடி தள்ளி நின்றிருந்த பொழுதே அவனுக்குள்
பாதிப்பை ஏற்படுத்தியவள் இப்படி அட்டையாக ஒட்டி கொண்டிருக்க, அவன் அனைத்து புலன்களும் விழித்து கொண்டன..
அதுவும் அவளின் முன்புறமாக அவனை கட்டி
அணைத்திருக்க, அவள் முன் பாகங்கள் அவன் பரந்த மார்பில்
மோதி நிற்க, அதில் இன்னும் சூடேறி போனான் அந்த
ஆண்மகன்...
ஆனால் அடுத்த நொடி தன்னை கட்டுக்குள்
கொண்டு வந்தவன்
"ஹா ஹா ஹா.. இதுதான் கன்னியம்மா
பேத்தி லட்சணமாக்கும்...! அதுவும் கரெக்ட்
தான்.. உன் அப்பத்தா வாய்சவடால் விடற மாதிரி நீயும் வாயிலயே சவடால் விட்ட..
பார்த்தா இல்லாத தவளைக்கு பயந்து என்
மேல இப்படி பல்லியா ஒட்டிகிட்டியே டி குள்ள வாத்து... " என்று அவள் கன்னத்தை
பிடித்து கிள்ளி சிரித்தான் நளன்...
“என்னது தவக்களை இல்லையா? அப்ப பொய் சொன்னியா? நீ ரொம்ப மோசம் டா மாமா.. “ என்று
அவனிடமிருந்து விலகியவள் அவனை பார்த்து முறைக்க,
“ஹா ஹா ஹா.. நீதான சொன்ன.. நீ ஒரு
தைர்யமானவ, வீரமானவ,
பாம்புக்கே நடுங்காத வீராத வீரி சூராத சூரி னு.. அதான் டெஸ்ட் பண்ணினேன்..நீ
பெய்ல் டீ.. “ என்று தன் கட்டை விரலை கீழாக ஆட்டி காட்டி சிரித்தான் நளன்...
“ஐய... எனக்கு இந்த தவக்களையை கண்டால்
மட்டும் தான் பயம்..அதை பார்த்தாலே அருவருப்பா இருக்கும். அதுவும் அது எப்ப வேணாலும்
திடீர்னு நம்ம மேல தாவிடும் னு தான் கொஞ்சமா பயம்.. மத்தபடி நான் ப்ரேவ்
கேர்ள்தான்... “ என்று முறைத்தாள்..
“ஹா ஹா ஹா சரி சரி.. நீ புலியை
முறத்தால் அடித்து விரட்டிய வீர தமிழச்சிதான்.. ஒத்துக்கறேன்.. சரி.. இப்ப எதுக்கு
என்னை ஏலம் விட்டுகிட்டே ஓடி வந்த? “ என்றான் சிரித்தவாறு..
அப்பொழுது தான் அவள் வந்த காரணம்
நினைவு வர, உடனே முகம் மலர
“டேய் மாமா... நான் ப்ளஸ் டூ ல
பாஸாகிட்டேன்...நீ சொன்ன
மாதிரியே நல்ல மார்க் ம் வாங்கிட்டேன்... “ என்று வாங்கிய மதிப்பெண்ணை சொல்லி
கன்னம் குழிய சிரித்தாள்..
“வாவ்.. சூப்பர் டீ.. கன்கிராட்ஸ்..”
என்று அவன் அணிந்திருந்த முழுக்கை சட்டையை மடக்கி விட்டு கொண்டு அவள் கை பற்றி
குழுக்கினான் சிரித்தவாறு...
“ஹ்ம்ம் தேங்க்ஸ் டா.. மாமா.. எல்லாம்
உன்னால தான் .. நீ சென்னையில் இருந்தாலும் அங்கிருந்தே என்னை நேரா நேரத்துக்கு
எழுப்பி விட்டு, எந்த நேரம் போன் பண்ணினாலும் என்
டவுட் ஐ எல்லாம் கிளியர் பண்ணி எனக்காக நீதான் ரொம்ப கஷ்டபட்ட...
உண்மைய சொல்லணும்னா நான் உனக்காகத்தான்
படிச்சேன் மாமா.. “என்றாள் பெருமையாக..
“ஹ்ம்ம்ம் வெரி குட்..இந்த நல்ல
செய்தியை முதல்ல சொல்றதில்லையா? சூப்பர் மார்க் டீ.. விழுந்து
விழுந்து படிச்ச என்னால கூட இவ்வளவு மார்க் வாங்க முடியல... விளையாட்டுதனமா படிச்ச
நீ சூப்பரா மார்க் வாங்கிட்ட டீ.. சரி அடுத்து என்ன செய்யலாம்னு இருக்க? “
“ஹ்ம்ம் தெரியலையே.. நீயே சொல்லு..
நான் என்ன எடுத்து படிக்கட்டும்..? ” என்றாள் தாடையில் கை வைத்து
யோசித்தவாறு..
அவனும் சிறிது நேரம் யோசித்தவன்
“தயா... நீ பி.இ கம்யூட்டர் சயின்ஸ்
எடுத்து படி... உன் மார்க்குக்கு அண்ணா யுனிவர்சிட்டியிலயே சீட் கிடைக்கும்..
உனக்கு கம்யூட்டர் ம் ஈசியா வரும்..என்ன ஓகே வா? “
“வாவ்.. சூப்பர் மாமா...நீ சொன்னா
கரெக்ட் ஆ தான் இருக்கும்.. எனக்கு கம்ப்யூட்டர் புடிக்கும் ன்றதே மறந்து போச்சு..
நீ சரியா கண்டுபுடிச்சிட்ட.. அப்ப அதையே எடுத்துக்கறேன்.. சரி அதுக்கு எப்படி
அப்பளை பண்ணனும்.. “
“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் டீ...
நீ கவலை படாத..” என்று சிரிக்க,
“அதான... நீ இருக்க எனக்கென்ன
கவலை..! “ என்று கிளுக்கி சிரித்தவள்
முகம் அடுத்த நொடியில் வாடிப் போனது.. அதை கண்டு கொண்டவன்
“என்னாச்சு டீ.. ஏன் இப்படி டல் ஆய்ட்ட? “ என்றான் அக்கறையுடன்...
“அது வந்து மாமா.... நான் இப்பதான
ப்ளஸ் டூ வே முடிச்சிருக்கிறேன்.. ஆனால் என் ஆத்தா மேல படிக்க விடாம எனக்கு
கல்யாணத்தை பண்ணனும் னு சொல்லுது.. என் அப்பத்தா தான் என் பேத்தி மேல படிக்கணும்
னு எனக்கு சப்போர்ட் ஆ இருக்கு..
எல்லார் வீட்லயும் பெருசுங்க
படிக்கறதுக்கு தடா போடுவாங்க.. ஆத்தா தான் ஹெல்ப் பண்ணுவாங்க.. என் வீட்ல உல்ட்டா
வா இருக்கு.. என் அப்பத்தா படிக்க சொல்லுது.. ஆனால் என் ஆத்தா படிக்க வேண்டாம்
கல்யாணத்த பண்ணிக்கோ னு சொல்லுது...” என்றாள் சோகமாக..
அதை கேட்டவனுக்கு விசயம்
புரிந்துவிட்டது...
அவன் அத்தை தங்கம் தமயந்தி ப்ளஸ் டூ முடித்தவுடனே அவளை தன் அண்ணன்
மகன் கையில் புடித்து கொடுத்து விடவேண்டும் என்று தினமும் உருப் போட்டு
கொண்டிருப்பது அவனுக்கு தெரிந்ததே..
அவருக்கு எங்கே அவள் மாமியார் அவர்
பக்கத்து மாப்பிள்ளைக்கு எதுவும் பேசி முடித்து விடுவாரோ என்ற பயம் இருந்து கொண்டே
இருந்தது...
இப்பொழுது புதியதாக இன்னொரு பயமும்
சேர்ந்து கொண்டது...
நளன் அவனுடைய ஹோட்டல் மேனேஜ்மென்ட்
படிப்பை இப்பொழுது முடித்திருக்க, கேம்பஸ் இன்டர்வ்யூவில் அவனுக்கு
வெளிநாட்டில் இருக்கும் ஒரு ஐந்து நட்சத்திர இந்திய உணவகத்தில் வேலையும் கிடைத்து
விட்டது..
படித்து முடிக்கும் முன்னே வேலை
கிடைத்து விட, அதை விட அவன் ஆசை பட்ட மாதிரியே வெளிநாட்டு
வேலை, கை நிறைய நல்ல சம்பளம் என்றதும் நளன் வீட்டில்
எல்லாரும் மகிழ்ந்து போயினர்..
தங்கமும் அதை கேட்டு மகிழ்ந்தாலும்
அடுத்த நொடி கவலையாகி போனது...
தன் மருமகன் வெளிநாடு போனதும் மனசு மாறி
அங்கேயே எவளாவது வெளிநாட்டுக்காரியை கல்யாணம் பண்ணிக் கொண்டால் என்ன செய்வது என்று கவலையாக இருந்தது..
நளனை பற்றி தெரிந்திருந்தாலும் இந்த காலத்து பசங்க எப்ப எப்படி மாறுவாங்க என்று
தெரியாததால் தங்கத்துக்குள் சிறு கலக்கம் அவளுக்கு..
அதனாலேயே நேற்று மாலை தன் அண்ணனிடம்
வந்து நளன் வெளிநாடு செல்லும் முன்பே கல்யாணத்தை நடத்தி விடலாம்.. அவன் தமயந்தி கழுத்தில்
தாலி கட்டிவிட்டு வெளிநாடு செல்லட்டும்..
அதற்குப் பிறகு அவன் வசதிப்படி வந்து
அவளை கூட அழைத்துச் செல்லட்டும் என்று புலம்பினாள்.. அதை கேட்ட தங்கராசு
“என்ன அம்மணி? என் மவனைப் பற்றி உனக்கு சந்தேகமா இருக்கா? அவன் என் மருமவ மேல உயிரையே வச்சிருக்கான்.. எப்பேர்பட்ட
இடத்துக்கு போனாலும் எத்தன பொண்ணுகள பார்த்தாலும் அவன் மனசு மாற மாட்டான்..
அவன் மனசு எல்லாம் என் மருமவள
சுத்திதான் இருக்கும்.. அதனால் நீ ஒன்னும் விசனப்படாத... " என்று தன்
தங்கைக்கு ஆறுதல் சொன்னான் தங்கராசு..
“அது இல்லண்ணா... என்ன இருந்தாலும் நம்ம கண் முன்னாடியே இருக்கறது
வேற.. நம்மளை எல்லாம் விட்டுபோட்டு அம்புட்டு தூரம் தனியா போய் இருக்கோணும்... அதான் யோசனையா
இருக்கு..” என்று இன்னும் தயக்கத்துடன் இழுக்க
அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை வெளியில் நின்று கேட்டுக் கொண்டிருந்த நளன் அவர்களிடம் வந்தவன்
“அத்த... நான் நீ வளர்த்தவன்.. அப்படி
எல்லாம் மனசு மாறிட மாட்டேன்.. எங்கப்பா சொன்னது கரெக்ட் தான்.. தயாவுக்கு நான்
ஊரறிய தாலி கட்டி இருக்கா விட்டாலும் என் மனதால அவதான் எனக்கு பொண்டாட்டி..
என் பொண்டாட்டிய விட்டு நான் எப்பவும்
போக மாட்டேன்..வேற பொண்ணை ஏறேடுத்தும் பார்க்க மாட்டேன்.. இது சத்தியம்.. “ என்று தன் அத்தையின் கை பிடித்து சத்தியம்
செய்தான் நளன்..
அதை கண்டதும் உள்ளம் குளிர்ந்து போனாள்
தங்கம்.. மனம் நிறைந்து சிரித்தவாறே
வீட்டிற்கு சென்றவள் அதோடு விட்டு விடாமல்
சிங்காரம் மாமாவிடமும் இதை பற்றி பேசி இருக்கிறாள் என புரிந்தது..
அவன் எதிர்பார்த்த மாதிரியே தயாவின்
அப்பத்தா அவள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார் என்று கேட்க வருத்தமாக
இருந்தது..
“நான் அப்படி என்ன தப்பு செய்து விட்டேன்? இந்த கிழவிக்கு மட்டும்
என்னய புடிக்கவே மாட்டேங்குதே.. இருக்கட்டும்.. நான் வேலைக்கு போய் கை நிறைய
சம்பாதிச்சு அந்த கிழவி ஆசை பட்ட மாதிரி பெரிய பங்களா, நாலு
கார் என்று வந்து நின்றால் வாயை பிழந்து கொண்டு அது பேத்திய புடிச்சு கொடுக்கும்..
அதுக்கு எப்படியும் இன்னும் ஒரு நாலு
வருசம் ஆகும்.. அதுக்குள்ள தயாவும் படிக்கட்டும்.. " என்று மனதுக்குள் சொல்லி
கொண்டவன் அவளை சீண்டி பார்க்க எண்ணி
“தயா...உன்னை கட்டிக்க போற அந்த துரதிஷ்டக்கார
மாப்பிள்ளை யாரு னு தெரியுமா? அத்தை யாருக்கு உன்னை கட்டிக் கொடுக்கிறதா
பேசிக்கிட்டாங்க?” என்றான் உள்ளுக்குள் சிரித்தவாறு..
“ஒரு வேளை என்னைத்தான் மாப்பிள்ளை என்று
சொல்லி பேசியிருப்பார்களோ? இவளும் அதை கேட்டு இருப்பாளோ? நான் தான் மாப்பிள்ளை என்று தெரிந்தால் எப்படி ரியாக்ட் பண்ணுவாள்? “ என்று காண ஆர்வமாக இருக்க, அதை பற்றி விசாரித்தான்...
“அதெல்லாம் எனக்கு தெரியாது டா மாமா.. அவங்க மூணு பேரும் பேசிக்கிட்டு இருந்தாங்க.. அப்ப எனக்கு என் கல்யாணம் ன்றது மட்டும்தான் காதுல
விழுந்தது.. உடனே அங்க இருந்து ஓடிப்போய்ட்டேன்.. “ என்று உதட்டைப் பிதுக்கினாள்..
அவள் அன்னை அவளுக்கு திருமணம் செய்யணும்
என்று சொன்னதும் தமயந்திக்கு அவளுக்கு மாப்பிள்ளையாக தன்னை நினைக்க
தோன்றவில்லையே என்று உள்ளுக்குள்
வருத்தமாக இருந்தது.. ஆனாலும் தன்
வருத்தத்தை மறைத்து கொண்டவன்
“ஏன் டி... அத்தை சொல்றதும் நல்லாதான் இருக்கு.. பேசாம
கல்யாணத்த பண்ணிக்கோயேன்.. ..உன் அப்பத்தா தினைக்கும் உன்னை திட்டறதிலிருந்து
தப்பிச்சுக்கலாம்.. ஜாலியா டான்ஸ் ஆடலாம்...விதவிதமா சாப்பிடலாம்.. உனக்கு
தினைக்கும் ஒரு சாக்லெட்
கிடைக்கும்." என்று கண் சிமிட்டி
சிரித்தான்...
சாக்லேட் என்றதும் அவள் விழிகள்
பெரிதாக விரிந்தன.. ஆனால் அடுத்த நொடி
"போடா மாமா. அதெல்லாம் எனக்கு
வேண்டாம்.. என் ப்ரண்ட் அதான் அந்த கருவாச்சிக்கு போன மாசம்தான் கல்யாணம் பண்ணி
வச்சாங்க..
பாவம்.. அவ புருஷன் ரொம்பவும் அவளை
படுத்தறானாம்..நைட் எல்லாம் அவளை தூங்கவே விடறதில்லையாம்..அவ மாமியாரும் எல்லா
வேலையும் அவ தலையில கட்டி இருபத்தி நாலு மணி நேரமும் வேலை வாங்கிகிட்டே
இருக்காங்களாம்..
நேற்று அவ பொறந்த வீட்டுக்கு வந்தப்ப
என்கிட்ட சொல்லி கிட்டு அழுதா...
கூடவே என்னை அந்த மாதிரி மாட்டிக்க
வேண்டாமுனு சொன்னா.. என்னைய நல்லா
படிக்கச் சொன்னா..எனக்கும் உன்னை மாதிரி பெரிய காலேஜ்க்கு போய் படிக்கணும் னு இருந்தது..
அவ கதையை கேட்டதுக்கு அப்புறம் கண்டிப்பா
எனக்கு மேல படிக்கணும்னு ஆர்வம் வந்துடுச்சு.. நீ தான் மாமா ஆத்தா கிட்ட சொல்லி
கன்வின்ஸ் பண்ணனும்.. என்னைய மேல படிக்க வைக்க சொல்லு.. “ என்றாள் பாவமாக..
அதைக் கேட்ட நளனும் உருகி போய்
“தயா பொண்ணு... அந்த கருவாச்சி சொல்ற
கதையெல்லாம் கேட்டு உன் மனச போட்டு குழப்பிக்காத.. எல்லாரும் அவ புருஷன் மாதிரி
இருக்க மாட்டாங்க..உன்னைய கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்கிற மாதிரிதான் மாப்பிள
வருவான்...
ஆனாலும் நீ ஆசைப்பட்ட மாதிரி
இஞ்சினியரிங் படி.. அதுவரைக்கும் உன் கல்யாணத்தை பத்தி பேச வேண்டாம்னு நான்
அத்தைகிட்ட சொல்றேன்.. நீ எதுவும் கவலைப் படாத.. " என்று அவள் தலையை பிடித்து செல்லமாக ஆட்டினான்..
பாவம் அவன் அறியவில்லை.. அவன் கொடுத்த
வாக்கை காப்பாற்ற முடியாமல் போகப் போவதை...
“ரொம்ப தேங்க்ஸ் டா மாமா.. நீதான் என்
பெஸ்ட் மாமா.. “ என்று எக்கி குதித்து
அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்..
திடீரென்று தன் கன்னத்தில் கிடைத்த
அவளின் எச்சில் முத்தத்தில் கிறங்கி போனான் நளன்... அதில் அப்படியே மயங்கி நிக்க
“மாமா.. ஒரு நிமிசம் குனியேன்.. "
என்று சொல்லி கண்களால் சிரிக்க அவனும்
மெல்ல அவள் முன்னே கொஞ்சமாக குனிய எட்டி அவன் மீசையில் இருந்த ஒரு முடியை பிய்த்து
கொண்டவள் கை தட்டி சிரித்து
"பை டா மாமா..." என்று கை
அசைத்து அந்த வரப்பில் திரும்பி ஓட ஆரம்பித்தாள்..
அதில் சிலிர்த்து போனவன்
"ஹே.. பாத்து போடி.. கீழ
விழுந்திடாத.. "என்று அவன் கத்தியது
காற்றோடு போய் இருந்தது.. சிட்டாக பறந்திருந்தாள் தமயந்தி..
அவளின் குறும்பு தனத்தை ரசித்தவாறு சிறு
வெட்கத்துடன் தன் தலையை பின்னால் தடவி கொண்டவன் வயலில் இறங்கி தன் வேலையை
தொடர்ந்தான் தன் மனம் கவர்ந்தவளை எண்ணி கொண்டே...
அடுத்து வந்த நாட்கள் பறந்தோடி சென்றன...
தமயந்தியை கல்லூரியில் சேர்ப்பதற்கும்
அவனுடைய வெளிநாட்டு பயணத்திற்கு தயார் செய்யவும் நேரம் சரியாக இருந்தது
நளனுக்கு....
அவன் எண்ணியபடியே கவுன்சிலிங் ல்
அவளுக்கு அண்ணா யுனிவர்சிட்டியிலயே சீட் கிடைத்து விட,
அடுத்து கல்லூரி ஆரம்பிக்க முதல் நாள் அன்று குடும்பமாக சென்று அவளை கல்லூரியில் விட்டு வந்தனர்..
அதுவரை தன் குடும்பத்தை, தன் ஊரை விட்டு வெளியில் சென்றிராதவள் முதன் முதலாக குடும்பத்தை விட்டு பிரிந்து
ஹாஸ்டலில் தங்கி இருக்க பயமாக இருந்தது தமயந்திக்கு..
மணிக்கொரு தரம் நளனை அழைத்து அழுது
புலம்ப ஆரம்பித்தாள்.. அவளுக்காகவே மற்றவர்களை ஊருக்கு திருப்பி அனுப்பிவிட்டு
அவன் மட்டும் சென்னையிலயே தங்கி விட்டான்..
தினமும் காலை கல்லூரி ஆரம்பிக்கும்
முன் அவள் ஹாஸ்டலுக்கு சென்று அவளை
பார்த்து பேசி ஆறுதல் படுத்தி விட்டு வருவான்..
கூடவே அவன் நண்பனின் தங்கை ஒருத்தியும்
முதலாம் ஆண்டு சேர்ந்திருக்க, அவளை தமயந்திக்கு அறிமுக படுத்தி
தமயந்தியை பத்திரமாக பார்த்துக்க சொல்லி இருந்தான்..
வானதி சென்னையை சேர்ந்தவள்.. இந்த
மாதிரி சூழலில் வளர்ந்தவள் என்பதால் பயம் இன்றி கல்லூரியில் உலா வர, தமயந்தியும் அவளுடன் ஒட்டி கொண்டாள்..
யாராவது ரேக்கிங் என்று அழைத்தால் உடனே தன் அலைபேசியில் நளனை அழைத்து விடுவாள்.. அவனும் அந்த ரேக்கிங்
கேங் ஐ மிரட்டி வைக்க, அதற்கு பிறகு அவளிடம் யாரும்
வாலாட்டாமல் இருந்தனர்..
எப்படியோ அடுத்த ஒரு மாதம் கண்ணீரும்
கம்பலையுமாக கடந்து சென்றது அவள் கல்லூரி வாழ்க்கை..
அவள் கல்லூரி வாழ்க்கை பிடிக்கவில்லை..
நம்ம ஊர்தான் பெஸ்ட் என்று சொல்லி அவனிடம்
புலம்பும் பொழுதெல்லாம்
“தயா பொண்ணு.. உனக்கு காலேஜ்
புடிக்கலைனா சொல்லு.. அடுத்த முகூர்த்தத்திலயே உனக்கு கல்யாணம் பண்ணிடலாம்... நீ
ஒன்னும் இப்படி கஷ்டபட்டு படிக்க வேண்டாம்.. அத்தை ரெடியா இருக்காங்க உனக்கு
கல்யாணத்தை பண்ணி வைக்க.. என்ன டீலா? “ என்று
உள்ளுக்குள் சிரித்தவாறு அவளை சீண்ட
“ஐயயோ... அதுக்கு நான் காலேஜ் லயே
இருந்துக்கறேன்... “ என்று ஜகா வாங்கினாள்.. அதன் பிறகு இதை சொல்லி சொல்லி
மிரட்டியே ஓரளவுக்கு அவளை அந்த சூழலுக்கு பழக்க படுத்தினான்...
Comments
Post a Comment