தேடும் கண் பார்வை தவிக்க-21

 


அத்தியாயம்-21

வள் கல்லூரி சேர்ந்த அடுத்த மாதத்தில் நளன் வெளிநாடு செல்லும் நாள் வந்தது..

அவனுக்கு தமயந்தியை,  தன் குடும்பத்தை விட்டு செல்ல மனமே இல்லை.. “ஆனாலும் அவனுடைய வளமான எதிர்காலத்துக்கு இந்த மாதிரியான சிறு சிறு கஷ்டங்களை தாங்கித்தான் ஆகணும்.. “ என்று தன்னைத்தானே தேற்றி கொண்டான்..

அவன் வீட்டில் அவன் அப்பத்தா பாப்பாத்தி, கண்ணம்மா, தங்கம் என்று எல்லாரும் கட்டி அணைத்து கண்ணீருடன் அவனுக்கு பிரியா விடை கொடுத்தனர்.. தங்கராசுவுக்கும் கண் கலங்கி விட்டது..

விமான நிலையத்தில் இரண்டு குடும்பமும் வந்திருக்க, விமான நிலையத்தின் உள்ளே போகும் முன்னே அனைவருடன் பேசி கொண்டிருந்தான் நளன்..

ஆனால் அவன் கண்கள் என்னவோ தமயந்தியிடமே சென்று  நின்றது..

அவளோ எங்கே எல்லார் முன்னாடியும் அழுது விடுவோமோ என்று அஞ்சி நளன் முகத்தை பார்க்காமல் உர் ரென்று முகத்தை தூக்கி வைத்து கொண்டிருந்தாள்...

மற்றவர்களிடம் பேசி முடித்து  அவளிடம் சென்றவன்

“ஹோய் குட்ட வாத்து... இப்ப எதுக்கு மூஞ்ச தூக்கி வச்சுகிட்டு இருக்கு.. என் பொண்டாட்டி சிரிச்ச முகமா என்னை வழி அனுப்பி வச்சாதான நானும் சந்தோஷமா போக முடியும்... 

இப்படி அழுகாச்சி மூஞ்ச நினைப்பு வச்சுகிட்டே இருக்க முடியாது டீ.. எங்க சிரி பார்க்கலாம்.. “ என்று  அவள் தாடையை பிடித்து செல்லமாக  ஆட்ட அவன் கையை தட்டி விட்டவள்

“போடா மாமா... எனக்கு எல்லாம் நீதான்,.. இப்ப நீயும் என்னை விட்டுட்டு போனா எப்படி? எனக்கு போர் அடிக்கும்.. எனக்கு ஏதாவது ஒன்னுன்னா நான் யாரை கூப்பிடுவேன்..?  “ என்றாள் கண்களில் நீர் திரள..

“ஹே லூசு பொண்டாட்டி.. நான் என்ன அமெரிக்காவுக்கா போறேன்..?  இங்க பக்கத்துல இருக்கிற லண்டனுக்குத்தான் போறேன்... உனக்கு ஒன்னுனா ப்ளைட் புடிச்சேனா பத்தே மணி நேரத்துல இங்க வந்திட போறேன்..

நம்ம ஊரில் இருந்து சென்னை வர்ற நேரத்தை விட ஒரு இரண்டு மணி நேரம் அதிகம் அவ்வளவு தான்..

அதோட இந்தியாவுக்கும் லண்டனுக்கும் நாலரை மணி நேரம்தான் வித்தியாசம்..உனக்கு காலையில் 9  மணி னா அங்க காலையில் 4.30 மணி.. நீ எப்ப வேணா என்னை வாட்ஸ்அப் ல கூப்பிடு..

இந்த மாமா எப்பவும் உன்னை நினைச்சுகிட்டேதான் இருப்பேன் தயா பொண்ணு.. “ என்று சிரித்தவாறு அவள் ஜடையை பிடித்து செல்லமாக இழுத்தான்..

அவள் ஜடையை இழுத்தால் அவளுக்கு கோபம் வரும் என்று தெரியும்.. அவன் எதிர்பார்த்த மாதிரியே உடனே அவளும் அவனை முறைத்தவள்

“உனக்கு இந்த ஜடையை விட்டா வேற எதுவுமே கிடைக்காதா? “ என்று அழுதவாறு முறைக்க,

“ஹா ஹா ஹா இப்ப அழுத புள்ள சிரிக்கும் பார்.. “  என்றவன் தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்த பைவ் ஸ்டார் சாக்லெட் ஐ எடுத்து அவள் முன்னே நீட்ட, அடுத்த நொடி முப்பத்திரண்டு பல்லும் தெரிய இரு கோட்டுக்கும் இழுத்து சிரித்தாள் தமயந்தி..

உடனே எட்டி அதை வாங்க முயல, அவனோ அவள் கைக்கு கிடைக்காமல் தன் கையை மேல தூக்கி கொள்ள அவளோ எட்டி எட்டி குதித்து அதை புடுங்க முயன்றாள்..

“உன்னால முடியாது டி குட்ட வாத்து.. அதுக்கு நீ இன்னும் வளரணும்.. ஒன்னும் செய். இப்ப குதிக்கிற மாதிரியே தினைக்கும் ஒரு நூறு முறை குதி.. அப்பயாவது என் தோளுக்காவது வளர்வியானு பார்க்கலாம்.. “ என்று சிரித்தான்..

“ஐய... எல்லாம் இந்த உயரமே போதும்.. இந்த உயரத்திலயே உன் சாக்லெட் ஐ எப்படி எடுக்கறேனு பார்.. “ என்றவள் கை தூக்கி நின்ற அவன் இடுப்பில் கிச் கிச் மூட்ட அவனோ நெளிந்தவாறு கையை இறக்க எட்டி அவன் கையில் இருந்த பைவ் ஸ்டார் ஐ பிடுங்கி கொண்டவள்

“இப்ப பார்த்தியா ? எப்படி புடுங்கிட்டேன்.. “ என்று  தலையில் இரண்டு கையையும் கொம்பு போல வைத்தும் நாக்கை துருத்தி ஒலுங்கு காட்டி கட்டை விரலை கீழாக அசைத்து காட்டி சிரித்தாள்..

பெரியவர்களும் அவர்கள் விளையாட்டை பார்த்து ரசித்து சிரித்தனர்..

பின் நேரம் ஆவதை உணர்ந்து நளன் மீண்டும் அனைவரிடமும் விடை பெற்று செல்ல, சற்று தூரம் முன்னால் நகர்ந்தவனை

“மாமா...  ஒரு நிமிசம்..”  என்று அவன் அருகில் ஓடியவள்

“கீழ குனியேன்... “  என்றாள் ரகசியமாக..

அவள் எதற்கு கேட்கிறாள்  என்று  புரிய மெல்ல குனிய எட்டி அவன் மீசையில் இருந்த முடியை பிய்த்து கொண்டு கைதட்டி ஆரவரித்தவள்

“ஹேப்பி ஜர்னி டா மாமா.. ஐ மிஸ் யூ... சீக்கிரம் வந்திடு... “ என்று கை ஆட்டி சிரித்தவாறு அவனை அனுப்பி வைத்தாள்...

அவனும் அவளுடைய சிரித்த  முகத்தை கண் நிறைய நிறைத்து கொண்டு மனமே இல்லாமல் கிளம்பி சென்றான்...

டுத்து ஒரு வருடம் கழித்துத் தான் திரும்பி வந்தான் நளன்.. .

ஆனால் அவன் சொல்லியபடியே தினமும் தமயந்தியை அழைத்து பேசி விடுவான்.. அவளும் முதல் ஒரு வாரம் அவனை நேரில் பார்க்காமல் கஷ்ட பட்டாலும் தினமும் இரவில் வீடியோ காலில் அழைத்து பேச, அவனை பிரிந்ததை போன்ற உணர்வே இல்லாமல் அவனும் பார்த்து கொள்ள, வழக்கமான உற்சாகத்துடன் மான்குட்டியாக துள்ளியபடி வளைய வந்தாள் தமயந்தி..

கூடவே கல்லூரி பாடங்களும் பிடித்து விட, அதில் கவனத்தை செலுத்த நாட்கள் சுவாரஸியமாக நகர்ந்து சென்றது அவளுக்கும்...

முதல் ஆண்டு விடுமுறைக்கு வந்த நளனை அந்த ஊரே கொண்டாடினர்...

லண்டன் க்ளைமேட்டிற்கு இன்னும் கலர் கூடி இருக்க, கொஞ்சம் சதை போட்டு சாக்லெட் பாய் போல கண்ணில் கூலருடன் ஸ்டைலாக வந்து நின்றவனை கண்டு எல்லாரும் வாயில் விரலை வைத்து பார்த்து அதிசயித்தனர்....

கன்னியம்மாவே ஒரு நொடி அசந்து போனார்...

லண்டனில் இருந்து வந்ததும் தன் அத்தையை பார்க்க கிளம்பி அவள் வீட்டிற்கு வந்திருந்தவன் கன்னியம்மாவை பார்த்ததும் வழக்கம் போல நழுவாமல் அவரிடம் சென்றவன்

"என்ன அப்பத்தா நல்லா இருக்கீங்களா? உங்களுக்காக நான் லண்டன் ல இருந்து என்னெல்லாம் வாங்கி வந்திருக்கேனு பாருங்க.. " என்று சிரித்தவாறு அவருக்கு வாங்கி வந்திருந்த பொருட்களை கடை பரப்பினான்..

கால் வலிக்கு தைலம், ஊன்றி  நடக்க ஸ்டைலான தடி.. என்று  அவரிடம் கொடுக்க, அவரோ ஒரு நொடி திகைத்து போனார்..

“இந்த பயல  நாம் அத்தன விரட்டு விரட்டினோம்.. அதை மனசுல வச்சுக்காம இப்ப அவனா வந்து பேசறானே..என்ன விசயமா இருக்கும்?  "என்று யோசித்தவர் அவன் கொடுத்த பொருட்களை எல்லாம் வாங்காமல்  முகத்தை திருப்பி கொண்டு உள்ளே எழுந்து சென்று விட்டார்...

அவரின் இயல்பு தெரிந்ததால் அதை கண்டு கொள்ளாமல் தன் அத்தையிடம் கதை அடிக்க ஆரம்பித்தான். ஆனால் கண்களோ தன்னவளை தேடியது..

தமயந்தியும் கல்லூரி விடுமுறைக்காக வந்திருந்தாள்..

காலையில் எழுந்ததும் தங்கம் கொடுத்த காபியை குடித்து விட்டு தன் தோழிகளுடன் ஆட்டம் போட சென்றிருந்தவள் அப்பொழுதுதான் வீட்டிற்கு  வந்திருக்க, நளனை கண்டதும்

"டேய் நல்லி எலும்பு நள மாமா..எப்படா வந்த? " என்று கூச்சலிட்டவாறு பாய்ந்து வந்து அவனை இறுக்கி கட்டி கொண்டாள்...

அவனும்  ஒரு வருடம்  கழித்து அவளை நேரில் பார்க்க அவளாகவே வந்து அவனை கட்டி கொண்டது அத்தனை இன்பமாய் இருந்தது அவனுக்கு..

உள்ளுக்குள் சிலிர்த்து போனது... இவளின் இந்த அணைப்புக்காகவே அடிக்கடி வரவேண்டும் போல இருந்தது..

அவனை கட்டி அணைத்து பின் விட்டவள்

"டேய் மாமா... எனக்கு நான் சொன்ன ஃபாரின் சாக்லெட்  எல்லாம் வாங்கி வந்தியா? எதையும் மிஸ் பண்ணலையே.. " என்று  குழந்தையாக ஆர்பரிக்க அவனோ உள்ளுக்குள் தலையில் அடித்து கொண்டான்..

“இவ இன்னும் வளரவே இல்லை.. காலேஜ் சென்று  ஒரு வருடம் ஆன பிறகு கூட தன் மீது ஒரு இன்ட்ரெஸ்ட் வரக் காணோமே.. எப்பவும் போலவே வாயடிக்கிறாளே.. " என்று  உள்ளுக்குள் புலம்பி கொண்டே அவன் வாங்கி வந்திருந்த சாக்லெட் டப்பாக்களை எல்லாம் எடுத்து கொடுக்க அதை கண்டவளின் கண்கள் பெரிதாக விரிந்தன...

"வாவ்... இவ்ளோ சாக்லெட் ஆ ? சூப்பர் டா மாமா.. நீதான் பெஸ்ட் மாமா.. " என்று  எக்கி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்..

அதை கண்டு தங்கமும் சிரித்து கொள்ள , நளனும் வெட்க பட்டு சிரித்தவாறு மற்ற பொருட்களை எல்லாம் எடுத்து கொடுத்தான்..

டுத்த நாள் அவன் லண்டனில் இருந்த பொழுதே புக் பண்ணி இருந்த காரை கோயம்புத்தூர் சென்று டெலிவரி எடுத்து கொண்டு தன் ஊருக்கு ஓட்டி வந்தான்..

அவன் காரில் வந்து இறந்கியதை கண்டதும் தமயந்தி கை தட்டி ஆரவரித்தவாறு அவனுடன் காரில் ஏறி கொண்டு அந்த ஊரையே சுத்தி வர சொன்னாள்..

அடுத்த நாள் இரு குடும்பத்தையும் அழைத்து கொண்டு ஊட்டி வரை சென்று வந்தான்..கன்னியம்மா  மட்டும் வர மறுத்து விட்டார்..அந்த விடுமுறையில் அனைவரும் சந்தொஷத்துடன் கழித்தனர்..

டுத்து இரண்டாவது வருடமும் முடிந்திருக்க, அந்த முறை விடுமுறைக்காக உற்சாகத்துடன் தன் ஊருக்கு வந்திருந்தான் நளன்..   

தமயந்திக்கு ஏதோ ப்ராஜெக்ட் இருப்பதாக சொல்லி இரண்டு நாள் கழித்து வருவதாக இருந்தாள் ஆனால் அந்த விதி அவளை அடுத்த நாளே வரவைத்து விட்டது...

பேரன் வந்த சந்தோஷத்தில் அன்று இரவு சாப்பிட்டு படுத்த பாப்பாத்தி அன்று  இரவு பாத்ரூம் செல்வதற்காக எழுந்து வெளியில் சென்றவர் எப்படியோ கால் இடறி கீழ விழ, நிலை வாயில் படியில் அவர் தலை பலமாக மோதி விட்டது..

அவரின் அலறல் கேட்டு ஓடி வந்த நளன் தன் அப்பத்தாவின் நிலை கண்டு பதறி போனான்.. உடனெ அவன் பெற்றோர்களை அழைத்து கொண்டு அவன் காரிலயே பொள்ளாச்சி கொண்டு வந்தனர்..

அங்கு முடியாது என்று சொல்லி கோயம்புத்தூர் கொண்டு செல்ல சொல்லி விட்டனர்..

அவசரமாக அங்கு சென்று அட்மிட் பண்ண தலையில் பலமாக அடிபட்டு விட்டதால் கூடவே வயதாகி விட்டதால் தலையில் ஆப்ரேஷன் பண்ணுவது ரொம்ப கஷ்டம்... எப்படி செய்தாலும் அவரை காப்பாற்றுவது கஷ்டம் என்று சொல்லி கையை விரித்து விட்டனர்..

“வலி குறைய மருந்து கொடுக்கறோம்.. ஒன்றோ இரண்டோ நாட்கள் தாங்குவார்.. அவர் ஆசை என்னவோ அதை நிறைவேற்றி வைத்து விடுங்கள்.. “என்று சொல்லி கையை விரித்து விட்டனர்...

அதை கேட்டு அந்த குடும்பம் இடிந்து போனது... அவர் ஆசை என்னவென்று  கேட்க, பேத்தியை பார்க்கணும்.. என்று  ஜாடை காட்டினார்...

தங்கமும் அழுது கொண்டே தன் மகளை அழைத்து உடனே கிளம்பி வரும் படி சொல்ல, அவளும் அடிச்சு புடிச்சு ஓடி வந்து விட்டாள்..

தன் பேத்தியை கண்டதும் கண்களில் நீர் மல்க, அவள் கன்னம் வருடியவர் அடுத்து தன் மகனை அருகில் அழைத்து தன் பேரன் பேத்தி கல்யாணத்தை இப்பயே பார்க்கணும் என்று  சொல்ல, அவர்களோ திடுக்கிட்டனர்...

“திடீர்னு எப்படி ஆத்தா... “ என்று தங்கராசு யோசிக்க,

“நாம முன்னாடியே பேசி வச்சது தான ராசு... என் பேரனுக்குத்தான் என்ற  பேத்தினு.. பேத்தி படிக்கிறதனால அவ படிப்பு முடிஞ்சு  இரண்டு வருசம் கழிச்சு பண்றதா இருந்த கல்யாணத்தை இப்பயே பண்ணிடலாமே.. அதுக்கப்புறம் எனக்கு என்ன இருக்கு.. நிம்மதியா கண்ண மூடிடுவேன்..

என் பேரன் பேத்தி கல்யாணத்த நான் கண்ணுல பார்க்கோணும்.. “ என்று திக்கி தினறி சொல்லி அடம்பிடித்தார்..

அதை கேட்டு என்ன சொல்ல என்று  எல்லாரும் முழிக்க, தமயந்திக்கோ அது அதிர்ச்சியாக இருந்தது...

“முன்பே பேசி வைத்தது என்றால்?  அப்ப அம்மா அன்னைக்கு நளன் மாமாவுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கத்தான் அப்பத்தாகிட்ட சண்டை போட்டாரா? என்கிட்ட யாரும் சொல்லலையே..”  என்று நளனை பார்க்க அவனோ எங்கேயோ பார்த்து கொண்டு நின்று கொண்டிருந்தான்..

தன்னைப் போல அவன் முகத்தில் அதிர்ச்சி எதுவும் இல்லாமல் சாதாரணமாக நின்று கொண்டிருக்க, அப்ப அவனுக்கு விசயம் தெரிந்திருக்கிறது...

“ஆனால் நான் அவனை அப்படி நினைத்து பழக வில்லையே....இப்ப திடீர்னு கல்யாணம் பண்ணிக்க சொன்னா எப்படி?? “ என்று  யோசித்து கொண்டிருக்கையிலயே தங்கம் பேச ஆரம்பித்தாள்..

“ஆமாம் ணா.. ஆத்தா சொல்றதும் கரெக்ட் தான்.. எப்படியும் ரெண்டு வருசம் கழிச்சு பண்றது தான.. ஆத்தா ஆசையை நிறை வேற்ற நளன்,  தமா கழுத்துல தாலி மட்டும் கட்டிடட்டும்..  ஆத்தாவுக்கும் மனசு நிறைஞ்சு போய்டும்..அவளும் படிப்ப தொடரட்டும்..

படிப்பு முடிஞ்ச பிறகு வந்து அவளை கூட்டிகிட்டு வெளிநாட்டுக்கே போய்டட்டும்.. அவ படிப்பும் நின்னு போகப் போறதில்ல.. ஆத்தாவுக்கும் அது மனக்குறை தீர்ந்து போய்டும்... என்னண்ணா சொல்ற? “ என்றாள் தங்கராசுவை ஆர்வமாக பார்த்தவாறு..

அவனோ சற்று நேரம் யோசித்தவன்

“இது நீயும் நானும் மட்டும் எடுக்கற முடிவு இல்ல அம்மணி.. உன் வீட்டு பெரியவங்களும் ஒத்துக்கோணும்...அவுகள தள்ளி வச்சு போட்டு நாம பண்ண முடியாது... “என்றவன் அங்கே நின்று கொண்டிருந்த சிங்காரத்தை பார்த்தவன்

“நீங்க என்ன மாப்பிள்ளை சொல்றீக? உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் னா  உங்க ஆத்தாகிட்டயும் கேட்டுகிடுங்க... எல்லாருக்கும் சம்மதம் னா அடுத்து நடக்க வேண்டியத பார்க்கலாம்..” என்றான்...

“எனக்கும் அதுதான் யோசனையா இருக்கு மச்சான்.. ஆத்தா அவ்வளவு சீக்கிரம் இதுக்கு சம்மதிக்காது.. “ என்று இழுக்க

“இப்பவும் உங்களுக்கு உன்ற ஆத்தா தான் முக்கியம்.. சாவ கிடக்கிற என்ற  ஆத்தா வ பத்தி உங்களுக்கு கவலை இல்ல அப்படித்தான... நாங்க என்ன வேல வெட்டி இல்லாத வெட்டி பயலுக்கா உன்ற ஆத்தா பேத்திய கட்டி கொடுக்க சொல்றோம்..

என்ற அண்ணன் மவன் கை நிறைய சம்பாதிக்கிறான்.. இவன விடவா உன்ற ஆத்தா சீமையில் இல்லாத மாப்பிள்ளைய தேடி புடிச்சிட போறாக...

எல்லாம் நீங்க சரியில்ல மாமா.. உன்ற ஆத்தா சொல்றதுக்கெல்லாம் தலையாட்டிகிட்டு இருக்கறீங்க இல்ல.. அதான் அந்த கிழவி இன்னும் ஏறி மிதிக்குது... “ என்று மூக்கை உறிஞ்ச

“தங்கம்.. என்ன இது? பெரியவங்களுக்கு மரியாதை கொடுத்து பேசோணும்... எப்ப இருந்து இப்படி எல்லாம் பேச கத்துகிட்ட.. இதுதான் நம்ம வூட்டு பழக்கமா? “ என்று  தங்கராசு தன் தங்கையை கண்டிக்க

“இல்லண்ணா.. நானும் எத்தன நாளுக்குத்தான் பொறுத்து பொறுத்து போவறது...” என்று  இன்னும் புலம்ப ஆரம்பிக்க

“பார்.. அம்மணி.. பொறுத்தாத்தான் பூமி ஆள முடியும்.. என்னைக்கும் பெரியவங்க கிட்ட விட்டு கொடுத்து போவோணும்.. விட்டு கொடுத்தவங்க என்னைக்கும் கெட்டு போக மாட்டாங்க..

நான் ஒரு தடவ என் பொறுமை இழந்து பெரியவர் மேல கையை வைக்க போய்தான் அது ஆறாத ரணமா உன்ற மாமியார் மனசுல பதிஞ்சு போச்சு...

அதனால தான் என்னை கண்டாலே உன்ற வீட்டு பெரியவங்களுக்கு ஆக மாட்டேங்குது.. அன்னைக்கு இன்னும் கொஞ்சம் நிதானத்தை கடைபுடுச்சிருந்தேனா இவ்வளவு தூரம் வந்திருக்காது..

சரி கழுத.. அத விடு.. மாப்பிள்ள..  உன்ற ஆத்தாகிட்ட கேட்டு பாருங்க.. அவங்க சம்மதிச்சா மேல பார்க்கலாம்.. “ என்று  அனுப்பி வைத்தான்...

தங்கம் தமயந்தியையும் கூட அழைத்து சென்றாள்...

வீட்டை அடைந்ததும் தமயந்தியை தன் அறைக்கு கூட்டி சென்றவள்

“தமா கண்ணு.. உனக்கு இந்த ஆத்தா மேல பாசம் இருக்குது இல்ல.. அப்படி இருந்தா என்ற அண்ணன் மவன கட்டிக்கடா.. உனக்கும் நளன் மாமானா புடிக்கும் தான... இப்ப அப்பத்தா உன்னை கூப்டு விசாரிச்சா நீ நளன் மாமனைத்தான் கட்டிக்குவேன் னு  சொல்லோணும்.

இந்த ஆத்தா உசுர கையில புடிச்சுகிட்டு இருக்கறதே உன்னை நளன் கையில புடிச்சு கொடுக்கத்தான்..  நீ அந்த வூட்டுக்கு மருமவளா போகறத  பார்க்கறதுக்குத்தான்...

அதுக்கான நேரம் வந்திருச்சு டா .. உன் படிப்பு எதுவும் கெடாம நான் பார்த்துக்கறேன்.. உன் மாமாவும் அத்தையும் உன்னை கண்ணுக்குள்ள வச்சு பார்த்துகிடுவாக... ப்ளீஸ் டா...

அந்த கிழவி முன்னாடி என்ன விட்டு கொடுத்துடாத... “ என்று  இன்னும் ஏதேதோ சொல்லி எமோசனல்  ப்ளாக்மெயில் பண்ணி முடிக்க, வெளியில் சென்றிருந்த கன்னியம்மா அப்பொழுதுதான் உள்ளே வந்தார்...

உடனே அவசரமாக கண்ணை துடைத்து கொண்ட தங்கம்   தன் மகளை அழைத்து கொண்டு கூடத்துக்கு வந்தாள்..

அங்கு ஏற்கனவே சிங்காரம் இந்த பேச்சை ஆரம்பித்திருக்க அதை கேட்டு பொங்கி எழுந்தார் கன்னியம்மா...

“என்ற பேத்திக்கு எப்ப யாருக்கு கட்டி கொடுக்கறதுனு நாம முடிவு பண்ணோணும்.. அந்த கிழவி கீழ வுழுந்துட்டா அவ கேட்கறானு உடனே கண்ணாலத்தை பண்ணிப்போட முடியுமா? எனக்கு இருக்கறது ஒரே ஒரு பேத்தி.. அவ கல்யாணத்தை எப்படி சீரும் சிறப்புமா பண்ணோனும்னு  நான் கெனா கண்டுகிட்டிருக்கேன்..

அந்த சிறுக்கி அடங்கி இருக்காம இருட்டுல போய் வுழுந்துபோட்டு இப்ப உடனே கண்ணாலத்தை பண்ணுனா அதெல்லாம் முடியாது டா... என்ற பேத்தி படிப்பு முடிஞ்சதுக்கு பொறவு பெரிய இடத்து மாப்பிள்ளையா ஆர அமற தேடி பார்த்துத் தான் கட்டி கொடுக்கோணும்...

இதெல்லாம் உன்ற மாமியாரோட நடிப்பா கூட இருக்கலாம்.. சும்மா தலயில அடிபட்ட மாதிரி கட்டிகிட்டு அத சாக்கா வச்சுகிட்டு என்ற பேத்திய வளச்சு போடலாம்னு நினைச்சுபுட்டாங்களாக்கும்..

என்ற  பேத்தி இருக்கிற அழவுக்கு ராஜதுரையாட்டம் மாப்பிள்ளைங்க வந்து க்யூவுல நிக்கோணும்.. உன் மாமியார் நடிப்ப எல்லாம் பார்த்து நம்ப, நான் ஒன்னும் கேன சிறுக்கி இல்ல..

அவளுக்கு  நடிக்கவா தெரியாது..!!  அவ மவ அதான் உன் பொண்டாட்டி அப்படி நடிச்சு நடிச்சு தான உன்னை மயக்கி முந்தானியில முடிஞ்சுகிட்டா... இப்ப ஆத்தாக்காரியும் வேசம் கட்டறாளாக்கும்...  “ என்று  முடிக்குமுன்னே தன் மகளை கை பிடித்து இழுத்துகொண்டு அவர் முன்னே சென்று நின்றாள் தங்கம்..

“இங்க பாருங்க... பெரியவங்களா இருக்கீங்கனு இம்புட்டு நேரம் சும்மன இருக்கேன்... இன்னொரு தரம் என்ற ஆத்தாவை பத்தி தப்பா பேசுனீக, நடக்கறதே வேற..

என்ற அண்ணன் மவனுக்கு என்ன குறைச்சல்?  அவனும் கை நிறைய சம்பாதிக்கிறான்... தமாவ கட்டிகிட்டு வெளிநாட்டுக்கு கூட்டிகிட்டு போயிடுவான்... என்ற அண்ணனும் அண்ணியும் தமாவை கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்கிடுவாங்க..  

இதை விட பெரிய இடம் கிடைச்சிட போகுதாக்கும்.. “ என்று கழுத்தை நொடித்தாள்..  

அவளுக்கு கன்னியம்மாவும் பதிலடி கொடுக்க இரண்டு பேருக்கும் வாக்கு வாதம் நீண்டு கொண்டே போனது..  இறுதியாக

“இங்கே பாருங்க... உன்ற பேத்தி அவளையே கூப்பிட்டு கேளுங்க.. அவ நளன் மாமனத்தான் கட்டிக்கிறேன்னு சொல்லுவா..அவளுக்கும் நளனை புடிச்சு இருக்க, எதுக்கு வெளில தேடணும்... “ என்று இழுக்க, அதை கேட்ட கன்னியம்மா இன்னும் கோபமானவர்

“அடியேய்... என்ற பேத்தி ஒருநாளும் அப்படி சொல்ல மாட்டா... நான் அவளை அப்படி வளர்க்கல...நீதான் வூட்டுக்கு அடங்காம உன் பொறந்தவன் சொன்னதையும் கேட்காம என் மவன இழுத்துகிட்டு போய் தாலி கட்டிகிட்ட.. என்ற பேத்தி ஒரு நாளும் அப்படி பண்ணமாட்டா...  

தாயி...  நீயே  உன் ஆத்தாக்கு புத்தியில உறைக்கிற மாதிரி சொல்லு... உன்ற மாமன கட்டிக்க முடியாதுனு.. " என்று தன் பேத்தியை பார்க்க தங்கமும் கண்ணால் ஜாடை சொல்லி புடிச்சிருக்குனு சொல்லு என்று கெஞ்சினாள்..

இருவரையும் மாறி  மாறி பார்த்த தமயந்தி யார் பக்கம் சொல்வது என்று புரியாமல் திருதிருவென்று முழித்தாள்.. அதை கண்டு தங்கம் அதிர்ந்து போய் அடுத்த ஆயுதத்தை எடுத்தாள்..  தன் கணவனை பார்த்தவள்  

"மாமா...  இப்ப இந்த கல்யாணம் மட்டும் நடக்கலனா நான் இப்பயே சுருக்கு மாட்டிகிட்டு தொங்கிடுவேன்.. என்ற ஆத்தா கூடயே  நானும் போய் சேர்ந்துடுவேன்..  நீங்க தாராளமா உன்ற ராஜகுமாரிய  யாருக்கு வேணும்னாலும் கட்டி கொடுங்க.. " என்று  மூக்கை உறிஞ்சினாள்.. கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது..

“டேய் சிங்காரம்...  அவ பேச்சை கேட்காத.. சும்மா உன்னை  மிரட்டறா.. இவள பத்தி எனக்கு தெரியாதாக்கும்.. " என்று முடிக்குமுன்னே அழுது கொண்டே வேகமாக அருகில் இருந்த அறைக்கு சென்று தாழிட்டு கொண்டாள் தங்கம்... 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!