தேடும் கண் பார்வை தவிக்க-22



 அத்தியாயம்-22

டுத்து தன் மனைவி என்ன செய்யப் போகிறாள் என்று புரிந்து கொண்ட சிங்காரம் திடுக்கிட்டு அந்த அறைக்கு ஓடி கதவை தட்ட ஆரம்பித்தான்.

தமயந்தியும் அதிர்ந்து போய் தன் தந்தையுடன் ஓடி கதவை திறக்க சொல்லி தட்டினாள்..

“தங்கம் , நீ சொல்ற மாதிரியே செஞ்சுடலாம்.. கதவை திற டீ... " என்று  கெஞ்சி கேட்க உள்ளிருந்து பதில் எதுவும் வரவில்லை..

அதை கண்டு பயந்து போய் கதவை வேகமாக தள்ள, அது பழைய காலத்து கதவு என்றதால் இரண்டு மூன்று முறை வேகமாக தள்ளவும் கடைசியில் கொன்டி கழன்று வந்து விட்டது..

வேகமாக உள்ளே செல்ல, அந்த அறையில்  விவசாயத்துக்கு பயன்படும் பொருட்களையும் பழைய சாமான்களை எல்லாம் போட்டு வைத்திருந்தனர்..

அங்கு கழுத்தில் மாட்டி கொள்ளுமாறு எதுவும் இல்லாததால் தங்கம்  அவள் கட்டி இருந்த புடவையையே அவுத்து ஒரு முனையை அந்த  அறையில் இருந்த விட்டத்தில் மாட்டி மறுமுனையை தன் கழுத்தில் கட்டி இறுக்கி கொண்டிருந்தாள்..

அதை கண்டு பதறி போன சிங்காரம் நொடியும் தாமதிக்காமல் ஓடி சென்று அவளை தூக்கி கொண்டான்...தமயந்தியோ அதை கண்டு சிலையாக நின்றாள்..

தன் மனைவியை மடியில் போட்டு கொண்டு

“என்ன காரியம் பண்ண இருந்த டீ.. நீ போய்ட்டா உன்னை விட்டுபோட்டு நாங்க மட்டும் உசுரோட இருந்துடுவோமாக்கும். இப்படி அவசரபட்டு முடிவு எடுத்துட்டியே...

நீ ஆசைபட்ட மாதிரியே தமா கல்யாணத்தை நடத்தலாம்.... தமா.. நீயும் வந்து உன் ஆத்தாகிட்ட சொல்லு... இப்படி ஒரு கிறுக்கு புத்தி இனிமே வேணாமுனு சொல்லுடா... “ என்று கதறி அழ, தமயந்தியும் சிலைக்கு உயிர் வந்ததை போல விழித்து கொண்டவள் தன் அன்னையை கட்டி கொண்டு

“நான் மாமாவையே கட்டிக்கறேன் மா... அப்பத்தா பேச்சை கேட்க மாட்டேன்.. நீ ஆசை பட்ட மாதிரி மாமாவையே கட்டிக்கிறேன்.. இப்படி ஒரு காரியத்த பண்ணாத... எனக்கு நீ வேணும் மா.. “ என்று தன் அன்னையை கட்டி கொண்டு கதற ஆரம்பித்தாள்...

தன் கணவன் மார்பில் முகம் புதைத்து குலுங்கி அழுத தங்கம் கொஞ்ச நேரத்தில் தன் கண்ணை துடைத்து கொண்டு

“உன் நல்லதுக்குத்தான் சொல்றேன் டா கண்ணு... இந்த அம்மாவோட ஆசை.. நீ பொறந்த அன்னிக்கே உன்னை நளனுக்குத்தான் கொடுக்கோணும்னு வாக்கு கொடுத்திருக்கேன்..நளன் உன்னை நல்லா பார்த்துக்கிடுவான்.. நீ ஒன்னும் கலங்காத.. “ என்று  தன் மகளை கட்டி கொண்டு அழுதாள் தங்கம்..

பின் சிங்காரம் அவளுக்கு குடிக்க தண்ணிர் கொடுத்து முகம் கழுவ வைத்து மெல்ல அழைத்து சென்று கட்டிலில் அமர வைத்தவன் நேராக தன் அன்னையிடம் சென்றவன்

“ஆத்தா.. பாத்த இல்ல.. கொஞ்ச நேரத்துல என் பொண்டாட்டிய பறிகொடுக்க இருந்தேன்.. நீ பண்றதெல்லாம் எனக்கும் தெரியும்.. ஆனாலும் உன்னை தனியா விட்டுபோட்டு போவக் கூடாதுனு தான் பல்ல கடிச்சுகிட்டு இத்தன நாளா நானும் பொறுத்து கிட்டேன்..

இப்ப அவ ஆசை பட்டு கேட்கறதுல என்ன தப்பு.. உன் மனசுல பழைய பகைய வச்சுகிட்டு என்ற மவ வாழ்க்கையோட விளையாடாத... என்ற மருமவனை பத்தி எனக்கு தெரியும்..

எங்கயோ தெரியாத சீமையில் இருந்து புடிச்சிகிட்டு வர்றவன் நல்லவனா கெட்டவனானு தெரியாது.. அப்படி என்ற  ஒத்த புள்ளைய நான் பெரிய இடத்துல எல்லாம் கொடுத்துபுட்டு வயித்துல நெருப்பை கட்டிகிட்டு இருக்க முடியாது..

என் மருமவனே போதும் என் மவளுக்கு.. அவன் நல்லா பார்த்துக்கிடுவான்.. பெத்த அப்பன் நான் முடிவு பண்ணிட்டேன்.. புடிச்சா நீ கண்ணாலத்துக்கு வா.. இல்லன இங்கயே இரு

அப்படியும் உனக்கு வீராப்பு தான் முக்கியம் னா நான் என் பொண்டாட்டி புள்ளைய கூட்டிகிட்டு பழைய வூட்டுக்கே போய்டறேன்.. கூலி வேலை செஞ்சு பொழச்சாலும் நிம்மதியா சந்தோஷமா இருந்தோம்...

உன்ன தனிய விடக்கூடாதுனு  இங்க வந்தது தான் தப்பா போச்சு.. நீயே கட்டிகிட்டு அழுவு உன்ற  காசு பணத்தையும் வீராப்பையும்... “ என்றவன் தன் மனைவியையும் மகளையும் கூட்டிகிட்டு வேகமாக வெளியேறி மருத்துவமனையை நோக்கி சென்றான்..

அங்கு பாப்பாத்தியோ மூச்சு விடவே சிரமபட்டு கொண்டிருக்க, கண்ணில் ஒரு ஏக்கத்துடன் தன் பேத்தியின் முகத்தையே ஆர்வத்துடன் பார்த்தார்.. அவர் எண்ணத்தை புரிந்து கொண்ட சிங்காரம்

“அத்த.. என் ஆத்தா கண்ணாலத்துக்கு ஒத்துகிடுச்சு.. நாளைக்கு காலையில் நம்ம பொள்ளாச்சி முருகன் கோவில்ல வச்சு சிம்பிளா பண்ணிக்கலாம்.. நீங்க ஒன்னும் விசனப்படாதிந்க்க.. உங்களுக்கு நல்லாயிடும்.. “

என்று  அவர் கையை  பிடித்து கொண்டு ஆறுதல் சொல்ல, தன் பேத்தியே  தன் வீட்டு மருமகளாக வரப்போறானு கேட்டதுமே அவர் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி...

லேசாக புன்னகைத்து கண்ணை மூடி கொண்டார்...

******

தன் பிறகு மடமடவென்று  திட்டமிட்டனர்...

பொள்ளாச்சியிலயே கல்யாணத்தை வைத்து கொள்ளலாம் என்றும் நெருங்கிய சொந்தக்காரங்களுக்கும் தெரிஞ்சவங்களுக்கு  எல்லாம் போனில் அழைத்து சொல்லி விடலாம் என்று திட்டமிட்டனர்...

நளனுக்கோ தமயந்தி இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சாளா என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது... ஆனால் பாப்பாத்தி விழுந்த செய்தி கேட்டு சொந்தக்காரங்க எல்லாம் வந்துவிட, அவள் அந்த  கும்பலில் நடுவில்  இருக்க அவளிடம் சென்று பேச தயக்கமாக இருந்தது..

கூடவே அவள் தனக்கு விருப்பம் இல்லை தன் அன்னைக்காத்தான் சம்மதிச்சேன்  என்று  சொல்லி விட்டால் அதற்கு பிறகு அவள் கழுத்தில் தாலி கட்ட அவனுக்கு மனம் வராது என தவிக்க,

“பேசாமல் பெரியவர்கள் பார்த்து செய்யற மாதிரியே விட்டுடலாம்.. “ என்று முடிவு செய்து அவளிடம் எதுவும் பேசாமல் விட்டு விட்டான்..

பின் தமயந்தியை பாப்பாத்தியின் அருகில் இருக்க வைத்து விட்டு நளனை கூட்டி கொண்டு கடைக்கு சென்றனர் கண்ணம்மாவும் தங்கமும்..

ஆண்கள் இருவரும் முக்கியமான உறவினர்களை நேரில் சென்று அழைக்க சென்று விட்டனர்..

நளனும் திருமணத்திற்கான ஏற்பாடுகளை கவனிக்க தன் நண்பர்களை அழைத்து எல்லா ஏற்பாடுகளையும் பார்த்துக்க சொல்லிவிட்டு  அப்ப அப்ப அழைத்து கேட்டு கொண்டான்..

என்னதான் அவசர கல்யாணம் என்றாலும் இந்த திருமணத்தில் எந்த குறையும் வந்து விடக் கூடாது என்று  எண்ணிய நளன் கோயம்புத்தூரில் பிரபலமான ஜவுளி கடைக்கு அழைத்து சென்றான் அவன் அன்னையையும் அத்தையையும்..

முகூர்த்த புடவை இருக்கும் செக்சனுக்கு சென்றவர்கள் பெண்கள் இருவரும் சேலையை புரட்டி கொண்டிருக்க, சிறிது நேரம் பொறுத்து பார்த்தவன் அவர்கள் எடுப்பது எதுவும் பிடிக்காமல் போவிட்ட, அடுத்து அவனே  களத்தில் குதித்தான்..

அரை மணி நேரத்தில் அந்த செக்சனையே அலசி ஆராய்ந்து தமயந்திக்கு  பொறுத்தமாக விலை உயர்ந்த விலையிலயே தேர்ந்தெடுத்தான்..

அவன் எடுத்தது நன்றாக இருக்க, இரு பெண்களுக்கும் திருப்தியே... அவன் மனதில் இருப்பது இருவருக்கும் தெரிந்ததுதான்..

“சிறு வயதில் இருந்தே தமயந்தியை பொண்டாட்டியாக நினைத்து வளர்ந்தவன்..அவனுக்கு தெரியாதா அவன் பொண்டாட்டிக்கு எந்த கலர் எடுப்பா இருக்கும் னு.. “என்று  இருவரும் ரகசியமாக பேசி கொண்டு அடுத்து மற்ற புடவைகளையும் அவனையே எடுக்க சொல்லி விட்டனர்...

நெருங்கிய உறவினர்களுக்கு வைத்து  கொடுக்க வாங்க வேண்டும்  என்று  இரு பெண்களும்  மற்ற பகுதிக்கு நகர்ந்து சென்றனர்...

இரண்டு மணி நேரத்தில் பர்சேஸ் முடிந்து விட, அருகிலயே மேரேஜ் ப்ளவுஸ் தைக்கும் கடையும் இருந்ததால் முகூர்த்த புடவைக்கான ப்ளவுஸ் ஐ தைக்க கொடுத்து விட்டு நகை கடைக்கு அழைத்து சென்றான்..

அவர்கள் வழக்கபடி தாலியும் அதை மாட்டிக்கொள்ள தாலிக்கொடியும் மெட்டியும்  வாங்கி கொள்ள, நளனோ அவளுக்கு ஒரு மோதிரமும் மற்றும் நெக்லஸ் என்று சில நகைகளையும் வாங்கி கொண்டான்..

அதை எல்லாம் கொண்டு வந்து தங்கம் தன் அன்னையிடம் ஆசையுடன் காட்டினாள்.. அதை பார்த்த பாப்பாத்திக்கு மனசு நிறைந்து போனது...

தமயந்தியோ அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தலையை குனிந்த படியே இருந்தாள்.. நளனின் பார்வை அடிக்கடி அவளிடமே சென்று நின்றது..

தன்னை பார்க்க மாட்டாளா என்று  ஏக்கமாக இருந்தது..

பின் வேற ஒரு உறவினரை பாப்பாத்தியின் அருகில் இருக்க வைத்து விட்டு மற்றவர்கள் திருமண ஏற்பாட்டை கவனிக்க சென்றனர்...

றுநாள் அதிகாலை பொள்ளாச்சியில் இருந்த முருகன் கோவிலில் திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்தன.. மாப்பிள்ளை கோலத்தில் நளன் கம்பீரமாக அமர்ந்து இருந்தான்..

அவன் உள்ளுக்குள் சந்தோஷம் பொங்கி வழிந்து கொண்டிருந்தது... அவன் மனம் விரும்பிய அவன் அத்த மகளே  தனக்கு மனைவியாக வரப் போகிறாள் என்று  உள்ளுக்குள் துள்ளி குதித்தான்..

ஆனால் சூழ்நிலை கருதி தன் மனதில் இருந்த சந்தோஷத்தை வெளியில் காட்டி கொள்ளாமல் கஷ்டபட்டு அடக்கி கொண்டிருந்தான்..

கன்னியம்மாவும் வேற வழி இல்லாமல் தன் பேத்தி கல்யாணத்தை பார்க்க வந்து இருக்க, அவரை ஒரு நாற்காலி போட்டு அமர வைத்தான் தங்கராசு.. பாப்பாத்தியும் பேத்தி கல்யாணத்தை பார்க்க வேண்டும் என்று அடம்பிடிக்க, ஒரு நர்ஸ் உதவியுடன் ஆம்புலன்ஸில் வைத்து அழைத்து வந்திருந்தனர்..

ஆம்புலன்ஸில் உள்ளே இருந்த படுக்கையில் அவர் படுத்தவாறே மணமக்களை பார்க்குமாறு ஏற்பாடு செய்திருந்தான் நளன்..

மாப்பிள்ளைக்கான சடங்கு முடிய அடுத்து தமயதியை அழைத்து வந்தனர்... அவன் பார்த்து பார்த்து தேர்வு செய்திருந்த அந்த புடவையில் தேவதையாக மிளிர்ந்தாள் தமயந்தி.. அவள் தோழிகளே அவளுக்கு மேக்கப் போட்டு விட்டிருக்க, அந்த எளிய அலங்காரத்திலும் தேவதையாக ஜொலித்தாள்..

அவளையே இமைக்க மறந்து ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் முகம் பார்க்க அதிர்ந்து போனான்..

முகம் வெளிறி எதையோ பார்த்து மிரண்டவள் போல வந்து கொண்டிருந்தாள் தமயந்தி..

அப்பொழுதுதான் உறைத்தது அவனுக்கு..  

அவளுக்கு இது திடீர் என்று ஏற்பாடு செய்திருக்கும் கல்யாணம்.. ஆனால் அவன் இந்த திருமணத்திற்காக ஏற்கனவே காத்து கொண்டிருப்பதால் அவனுக்கு இது இந்த திடீர் கல்யாணம் அதிர்ச்சியாக இல்லை..

மாறாக சந்தோஷத்தைத்தான் கொடுத்தது.. ஆனால் பாவம் அவளுக்கு இதெல்லாம் தெரிந்திருக்காது.. அதுதான் ரொம்ப மிரண்டு போய்ட்டா...

“என்னை பற்றி,  நான் அவள் மீது வைத்திருக்கும் காதலை பற்றி எல்லாம் தெளிவாக அவளிடம் சொல்லவேண்டும்.. நான் சொன்னால் புரிந்து கொள்வாள்.. அவளுக்கும் என் மீது காதல் வந்து விடும். " என்று எண்ணி கொண்டான்..

ஆனால் அதற்கான சந்தர்ப்பம் அமையாமல்  போகப் போவதை அறிந்திருக்க வில்லை நளன் அப்பொழுது..

பட்டு புடவை சரசரக்க தன்னவள் தன் அருகில் வந்து அமர்ந்ததும் மனம் கொள்ளா பூரிப்பு அவன் முகத்தில்.. அவன் முகத்தில் மட்டும் அல்ல.. இரு வீட்டு பெற்றோர்களுக்கும் குறிப்பாக பாப்பாத்திக்கு மனம் நிறைந்து விட்டது..

இருவரையும் ஜோடியாக மணக்கோலத்தில் அமர வைத்து பார்க்க,மனம் குளிர்ந்து போனார்..

கன்னியம்மாவும் முதலில் வேண்டா வெறுப்பாக அமர்ந்து இருந்தாலும் நளனின் கம்பீரத்தையும் அவனுடைய ஆளுமையான தோரணையும் கண்டு அவரே தேடி இருந்தால் கூட இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைத்திருக்க மாட்டான் தான் என்று  உள்ளுக்குள் சிலாகித்தார்...

சடங்குகளை சுருக்கி வேகமாக முடித்த ஐயர் மங்கள நாணை நளன் கையில் கொடுத்து மணப்பெண்ணிற்கு அணிவிக்க சொல்ல, நளனோ  மனம் கொள்ளா மகிழ்ச்சியும் பூரிப்புடன் அந்த மாங்கல்யத்தை வாங்கி தன் மனம் கவர்ந்தவளின் சங்கு கழுத்தில் அணிவித்து அவளை,  தன் அத்தை மகளை தன் மனைவியாக்கி கொண்டான்..

அவனுடைய சிறு வயது கனவு நிறைவேறி விட்டதை போல பூரித்து போனான்.. இந்த உலகத்திலயே அதிர்ஷ்டக்காரன் அவன் மட்டும் தான் என்று  கத்த வேண்டும் போல இருந்தது..

ஆனாலும் அதை அடக்கி வாசித்தவன் மற்ற சடங்குகள் முடிய அடுத்து மணமக்கள் நளன் வீட்டிற்கு வந்திருந்தனர்..

வலது காலை எடுத்து வைத்து உள்ளே வந்த தன் மருமகளை கண்டதும் கண்ணம்மாவிற்கும் கண்கள் நிறைந்து போயிற்று.. தங்கத்துக்கு அதை விட மகிழ்ச்சி..

பூஜை அறையில் சென்று விளக்கேற்றி வைத்து,  தன்னை அந்த வீட்டு மருமகளாக நிலை நாட்டியவள் மணமக்கள் இருவரும் பாப்பாத்தியிடம்  வர, மீண்டும் அவள் கன்னம் வருடி அவள் கையை பிடித்து நளன் கையில் கொடுத்து விட்டு நிம்மதியுடன் கண்ணை மூடினாள் அந்த பெரியவள்....

இளையவர்கள் இருவரும் கை கோர்த்தவாறு அப்படியே ஸ்தம்பித்து உறைந்து நின்றனர்.......... 

*************இடைவேளை************

நம் பயணத்தின் முதல் பாகம் இத்தோடு முடிந்தது..நிறைய பேருக்கு சில குழப்பங்கள் இப்பொழுது தெளிவாகி இருக்கும்.. சில பேருக்கு இன்னும் குழப்பங்கள் கூடி இருக்கும்..தொடர்ந்து இரண்டாம் பாகத்தை படியுங்கள்.. உங்கள் குழப்பங்கள் விரைவில் தீர்ந்துவிடும்..

இதுவரை இரண்டு பாதையாக சென்ற இந்த கதை அடுத்த அத்தியாயத்தில் இருந்து ஒரே பகுதியாக வரும்...

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!