தேடும் கண் பார்வை தவிக்க-23

 


அத்தியாயம்-23

விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்து நின்றிருந்த அந்த வணிக கட்டிடத்தின் முன்னே தன் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அதை அண்ணாந்து பார்த்தான் விவேக்...

சென்னையின் முக்கிய தொழில் நகரமான டைடெல் பார்க் ல் நடுநாயகமாக வீற்றிருந்தது அந்த வணிக கட்டிடம்.. அதன் மேலே வர்மா குரூப் ஆப் கம்பெனிஸ் என்ற எழுத்துக்கள் காலை  வெய்யிலில் தகதகத்து மின்னியது..

வர்மா குரூப் ஆப் கம்பெனிஸ் க்கு பல கிளைகள் பல பகுதிகளில் இருந்தாலும் இதுதான் தலைமை அலுவலகம்..

ரிஷி பொறுப்பேற்ற பிறகு அவனாகவே இந்த கட்டிடத்தை வடிவமைத்து அவனுடைய கன்ஸ்ட்ரக்சன் வழியாகவே பார்த்து பார்த்து அனைத்து  நவீன வசதிகளுடன் பார்ப்பவர்களை திரும்பி பார்க்கும் வகையில் கட்டி இருந்தான்..   

அந்த பகுதியில் வருபவர்கள் எல்லாருமே அந்த  கட்டடத்தை ஒரு ஏக்கத்துடன் நிமிர்ந்து பார்த்து  செல்வர்.. சில பேர் இந்த கம்பெனியில் வேலை கிடைப்பதே  வாழ்நாள் லட்சியமாக எண்ணி அதற்காக முயன்று கொண்டிருப்பர்..

அப்படிப் பட்ட அந்த அலுவலகத்தை அண்ணாந்து பார்த்தவன் அவனையும் மீறி “வாவ்” என்று வியந்து தான் போனான் விவேக்..

கூடவே இவ்வளவு பெரிய நிறுவனத்தின் சொந்தக்காரன் நேற்று இரவு அவனிடம் அலைபேசியில் பேசினான் என்று வெளியில் சொன்னால் அவனை  பார்த்து நக்கலாக சிரித்திருப்பர்...

ஆனாலும் அவன் பேசியது உண்மை..கூடவே நேற்று ரிஷியுடன் ஆன பேச்சும் ரிஷி அவனை இன்று இந்த அலுவலகத்திற்கு வரச் சொல்லி இருந்ததும் மீண்டும் நினைவு வர ஒரு வெற்றி  புன்னகையுடன் இரு சக்கர வாகனத்தை அதற்கான பார்க்கிங் இடத்தில் நிறுத்தி விட்டு துள்ளலுடன் அந்த அலுவலகத்துக்குள் நுழைந்தான் விவேக்....

தரை தளத்திலேயே அந்த அலுவலகத்தின்  ரிசப்ஷன் இருக்க தன் கண்ணாடியை கழற்றி ஸ்டைலாக சுழற்றியபடி அந்த ரிசப்ஷனிஸ்ட் இடம் சென்றான்..

அவனைக் கண்டதும் அந்த பெண்ணும் நட்பாக புன்னகைத்து

“குட் மார்னிங் சார்..  ஹௌவ் கேன் ஐ ஹெல்ப் யூ? என்று அழகாக ஆங்கிலத்தில் வரவேற்றாள்...

அவளின் வெள்ளை வெளேரென்று வெளுத்திருந்த அழகிய தோற்றமும்,  வழுவழுவென்றிருந்த இடையை ஆபாசமாக காட்டாமல் நேர்த்தியாக அணிந்திருந்த புடவையும், தலைமுடியை தூக்கி கொண்டையாக்கி இருந்த  நேர்த்தியும் கண்டு வியந்தவன்,

“எப்படித் தான் ரசகுல்லா மாதிரி இவ்வளவு அழகா தழ தழ னு இருக்காளோ?? “ என்று பெருமூச்சு விட்டவன்   

“நான் இன்னும் பெரிதாக வளர்ந்து இதே மாதிரி.... “  என்றவன் தன் தலையை தட்டிக் கொண்டு

“ஹ்ம்ம்ம் இந்த மாதிரி இவ்வளவு பெரிய்ய்யயய கம்பெனி உருவாக்க முடியாது... குட்டியா ஒரு சின்ன ஆபிஸ்.. அதுல இந்த ரசகுல்லா மாதிரி ஒரு ரிசப்ஷனிஸ்ட்...

காலையில் ஆபீஸ்க்கு உள்ளே வரும் பொழுதே கண்ணுக்கு குளிர்ச்சியா இந்த ரசகுல்லாவ  பார்த்தாலே போதும்...  அந்த நாள் சூப்பரா இருக்கும்...!   

டேய் விவா..! இந்த ரிஷியை வைத்தே ஒரு பெரிய ஆபீஸ் ஆரம்பிக்கற.. அதுல இப்படி ஒரு ரசகுல்லா ரிசப்ஷனிஸ்ட் ஐ  அப்பாய்ன்ட் பண்ற.. “  என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.....

அந்த பெண் அவன் முகத்தையே உற்று பார்த்து கொண்டு இருக்க, அப்பொழுது தான் அவன் அவளையே பார்த்துகொண்டு இருப்பது புரிய, தன் தலையை உலுக்கி கொண்டு அசட்டு சிரிப்பை சிரித்தவாறு

“குட் மார்னிங் மிஸ்..... “  என்றவன் அவசரமாக அவள் அணிந்திருந்த பேட்ச் ஐ பார்த்து அவள் பெயரை தெரிந்து கொண்டவன் அவள் பெயரையும் சேர்த்து சொன்னவன்

“ஐ வான்ட் டு மீட் மிஸ்டர் ரிஷி... “ என்று ஸ்டைலாக பேசினான்..

"ஸ்யூர் சார்... டு யூ ஹேவ் ஏன் அப்பாயின்மென்ட்? " என்று அவசரமாக அவள் கணினியை தட்டி ரிஷியின் அன்றைய அப்பாயின்மென்ட்களை பார்வையிட்டாள்..

விவேக் தனியாக எதுவும் அப்பாயின்மென்ட் வாங்கி இருக்காததால்

“நோ மிஸ்....ஆனால் ரிஷி சார் தான் என்னை இங்கே வந்து பார்க்கச் சொன்னார்.. “  என்றான்  இன்னும் அதே ஸ்டைலான குரலில் ஒரு கையில் தன் கண்ணாடியை சுழற்றியபடி..  

அந்த பெண்ணும் அவனுடைய பெயரைக் கேட்டு அதை அன்றைய அப்பாயின்மென்ட்களுடன் பொருத்திப் பார்க்க அவனுடைய பெயர் அதில்  இல்லை..  

உடனே அவனை  பார்த்தவள்

“ஐம் சாரி சார்...உங்க அப்பாயின்மென்ட் பாஸ் ஓட ஷெட்யூல் ல இல்ல..  அதனால நீங்க அவரை இன்று பார்க்க முடியாது.. வேணும்னா நாளைக்கு அப்பாய்ன்ட்மென்ட் ஃபிக்ஸ் பண்ணி நாளைக்கு வாங்க.. “ என்று  கையை விரித்தாள்..

அதைக் கேட்டு திடுக்கிட்டவன்

“ஹலோ... உங்க பாஸ் தான் எனக்கு போன் பண்ணி நேர்ல வந்து பார்க்க சொல்லி இருக்கார்.. அதனால தான் நான் நேர்ல வந்தேன்.. “  என்று அதுவரை அவளை சைட் அடித்து ரசித்துக் கொண்டிருந்தவன்  இப்பொழுது எரிச்சலாக ஆரம்பித்தான்..  

அவனுடைய முகபாவத்தை கண்டு அவனுக்கு நிகராக அந்தப் பெண்ணும் கோபத்தைக் காட்டாமல் அதே சிரித்த முகத்துடனே

“சாரி சார்... பாஸ் அப்படி உங்களுக்கு தனியா அப்பாய்ன்ட்மென்ட் கொடுத்திருந்தால் அது இந்த சிஸ்டம்ல அப்டேட் ஆகியிருக்கனும்..இந்த அப்பாய்ன்ட்மென்ட் ல அப்டேட் ஆகாம  யாரையும் நாங்க அனுப்ப முடியாது..”  என்று தன் தோளை குலுக்கி மீண்டும் அதே நட்புடன் புன்னகைத்தாள்...

“ஹலோ... நான் ஒன்னும் லூஸ் இல்ல... உங்க பாஸ் வர சொன்னதால தான் வந்தேன்...அப்ப இந்த மாதிரி அப்பாய்ன்ட்மென்ட் வாங்கணும் னு எல்லாம் சொல்லவே இல்லை..வேணும்னா நீங்க அவர்கிட்டயே போன் பண்ணி கேளுங்க...

நான் அவர் போன்க்கு அடிச்சேன்.. அவர் எடுக்கல..அதான் இப்படி வந்து உங்ககிட்ட கெஞ்சி கிட்டு இருக்கேன்..அவர் மட்டும் என் அழைப்பை ஏற்றிருந்தால் நேரடியாகவே வந்து என்னை கட்டி அணைத்து மரியாதையோட கூட்டிகிட்டு போய்ருப்பார்..

இப்படி நிக்க வச்சு கேள்வி கேட்டிருக்க மாட்டார்.. “ என்று முறைத்து அவளிடம் ஆர்க்யூ பண்ண அவனிடம் சிரித்த முகமாகவே அவனை அனுப்ப முடியாது என்று மறுத்து சொல்லி கொண்டிருந்தவள் ஒரு கட்டத்தில் தன் பொறுமையை இழந்து

“சார்.... வேணும்னா ஒன்னு செய்ங்க.... பாஸ் உங்களை அப்படி வர சொல்லி இருந்தால் நீங்கள் இங்க வெய்ட் பண்ணுங்க.. பாஸ் இப்ப வர்ற நேரம் தான்... அவரை நேரா பார்த்து பேசுங்க...

எப்பவும் அவர் அலுவலகத்துக்கு வந்த ஒரு 10 நிமிசம் ஃபிரியா இருப்பார்.. அந்த நேரத்தை யூஸ் பண்ணிக்கங்க...என்னால அப்பாய்ன்ட்மென்ட் இல்லாம அனுப்ப முடியாது... சாரி... “ என்றாள் எரிச்சலை உள்ளடக்கிய குரலில்....

அதை கேட்டு கடுப்பான விவேக்

“போடி.. பெரிய இவ... இதுக்குனே நான் என் ஆபிஸ் ஐ  பெருசாக்கி உன்னையவே அதுல ரிசப்னிஸ்ட் ஆ போடல , என் பேர் விவேக் இல்ல... “ என்று உள்ளுக்குள் சொல்லி கொண்டு அவளை முறைத்தவாறு தலையை சிலுப்பி கொண்டான்..

“டேய் விவா.... உனக்கு வேற என்ன பெயர் நல்லா இருக்கும்? “ என்று தாடையில் கை வைத்து யோசித்தது அவன் மனஸ் அவனை பார்த்து நக்கலாக சிரித்தவாறு..

அதை முறைத்தவாறு சற்று தள்ளி சென்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவன் கண்களை சுழற்றி அந்த இடத்தை பார்வையிட்டான்..

ங்கு வருபவர்களை வரவேற்கும் விதமாக இன்முகத்துடன் குறும்பு புன்னகையுடன் வீற்றிருந்தார் ஒரு குட்டி விநாயகர்..

அதற்கு புதிதாக மாலை போட்டு ஊதுபத்தி ஏற்றி வைத்திருக்க, அந்த மணம் அந்த ஹால் முழுவதும் பரவி மனதுக்கு ஒரு வித இதத்தை கொடுத்தது

“பரவாயில்லை !!  இந்த ரிஷி கொஞ்சம் கடவுள் பக்தி உள்ளவன் போல..  நம்ம கணேஷ் இங்கேயும் இருக்கானே.. “  என்று ஆச்சர்யபட்டவன் அந்த கணேசனை பார்த்து புன்னகைத்து

“அப்பா... கணேசா... எப்படியாவது இந்த க்லைன்ட் எனக்கு கிடைத்த விட வேண்டும்.. இந்த கேஸ் எனக்கே வந்துவிட வேண்டும்.. இதை வைத்தே நான் எப்படியாவது முன்னுக்கு வந்து விட வேண்டும்.. நீ தான் துணை.. “

என்று மனதுக்குள் வேண்டி கொண்டே ஒரு விர்ச்சுவல் தேங்காயை அந்த கணேசனுக்கு உடைத்து மானசீகமாக தன் கன்னத்தில் போட்டு கொண்டு வேண்டிக் கொண்டான் விவேக்...  

அதன் பின் சோபாவில் அமர்ந்தவாறு கண்களை சுழற்றி பார்க்க ஒரு பெரியவரின் போட்டோ அங்கே கம்பீரமாக நின்றிருந்தது...  

அதில் வர்மா என்று எழுதி அவருடைய தோற்றம் மற்றும் மறைவு தேதியை எழுதியிருந்தனர்...

அதை பார்த்ததும் அவர்தான் ரிஷியின் தாத்தா என்று பிறர் சொல்லாமலே அறிந்து கொள்ள முடிந்தது... கூடவே நேற்றிரவு ரிஷியை பற்றி இணையத்தில் தேடி கண்டுபிடித்த விவரங்கள் மனதில் வலம் வந்தன...

ர்மா பிறப்பில் வட மாநிலத்தை சேர்ந்தவர்.. பிழைப்புக்காக சென்னைக்கு வந்தவர்.. ஆரம்பத்தில் ஒரு சிறு உணவு விடுதியில் சர்வராக வேலைக்கு சேர்ந்தார்...

முகம் சுளிக்காமல் அடுத்தவர் எச்சில் இலையை எடுத்த பொழுதெல்லாம் தானும் ஒரு நாள் பெரிய ஆளாக வேண்டும்.. இந்த ஹோட்டலில் வந்து சாப்பிடுபவர்களை போல தானும் இப்படி காசு கொடுத்து சாப்பிட்டு  என் இலையையும் மற்றவர்கள் எடுக்க வேண்டும் என்ற பெரிய குறிக்கோளுடன் கடினமாக உழைக்க ஆரம்பித்தார்...

அவருடைய சின்சியாரிட்டியை பார்த்து ஒரு நாள் கடைக்கு வந்த ஒரு பெரியவர் அவரை தன்னுடன் தன் உணவகத்துக்கு வர சொல்லி அழைத்தார்..

சம்பளம் கூட சேர்த்து தருவதாக கூற, அந்த உணவகத்தின் உரிமையாளரிடம் சொல்லி விட்டு  உடனே வர்மா அந்த பெரியவருடன் சென்று விட்டார்

காலையில் அந்த உணவகத்திற்கு செல்லும் முன்னே அந்த பெரியவர் வீட்டிற்கு சென்று அவர் வைத்திருக்கும் அந்த காலத்து காரை துடைத்து வைக்க, அதிலும் கொஞ்சம் சம்பளம் கிடைத்தது...

அந்த காசை எல்லாம் செலவு செய்து விடாமல் சிறுக சிறுக சேர்க்க, பதினெட்டாவது வயதில் தனக்கென்று சொந்தமாக ஒரு நடமாடும் உணவகத்தை ஆரம்பித்தார்..

தள்ளு வண்டியில் அவரே தென் இந்திய உணவுகளை சமைத்து தொழிலாளர்கள் வேலை செய்யும் இடங்களுக்கு நேரிடையாக சென்று விற்பனை செய்ய ஆரம்பித்தார்..

ஆரம்பத்தில் பெரிதாக ஒன்றும் தேறவில்லை.. அவர் வெலைக்கு சென்று  சம்பாதித்த பணத்தை  விடவே குறைவாகத்தான் கிடைத்தது..   

ஆனாலும் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சிக்க கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் அவர் உணவை விரும்பி சாப்பிட ஆரம்பித்தனர்.. அதைக் கண்டு மகிழ்ச்சியாகி  போய்விட உற்சாகத்துடன் அந்த தொழிலை கவனித்தார்..

பின் படிப்படியாக முன்னேறி சில வருடங்களில் ஒரு சிறிய உணவகத்தை  ஆரம்பித்தார்.. அவரின் நல்ல நேரம் அதுவும் நன்றாக அமைந்து விட அதற்கு மேல் படிப்படியாக தன் வளர்ச்சியை பெருக்கி  கொண்டார்...

தனது இருபத்தி எட்டாவது வயதில் தன்னுடைய கடையில் வேலை செய்த ஒருவரின் மகளையே மணந்துகொண்டார்.. அடுத்த ஒரு வருடத்தில் ரிஷியின் தந்தை  ரவி வர்மா பிறந்துவிட்டார்..

தன்னைப் போல இல்லாமல் தன்   மகனை  நன்றாக படிக்க வைக்க வேண்டும்.. இந்த ஹோட்டல் பிசினசை இன்னும் பெரிய அளவில் வளர்க்க வேண்டும் என்று தன் மகனின் மனதில் ஆழ பதிய வைத்தார்...  

ரவிவர்மா சிறு வயதிலிருந்தே தன் தந்தையுடன் ஹோட்டலுக்கு சென்று வருபவன்.. அவருக்குமே அந்த தொழிலில் ஆர்வம் வந்து விட,  பள்ளியில் படிக்கும் பொழுதும் தன் தந்தைக்கு உதவுவான்.. அப்பயே சில ஐடியாக்களையும்  கொடுப்பான்.

கல்லூரியிலும் பி.பி.ஏ எடுத்து தொழில் நிர்வாகத்தை பற்றி கற்று கொண்டான்...

இளங்கலை பட்டம் பெற்றதுமே தன் தந்தையின் தொழிலை விரிவு படுத்துவதில் மும்முரமாக இறங்கி விட்டார்... கூடவே மாலை நேர கல்லூரியில் எம்.பி.ஏ ம் படித்து முடித்தார்...

எம்.பி.ஏ முடித்ததும் ஒரு தொழிலில் மட்டுமே  கவனத்தை செலுத்தாமல் பல தொழில்களில் முதலீடு செய்வது,  தொழிலை பெருக்குவதில் ஒரு உத்தி என்று தன் தந்தையிடம் சொல்லி அடுத்ததாக மளிகை கடையையும் ஆரம்பித்தார்...

சில முக்கிய சந்திப்புக்ளில் சிறிய கடையாக ஆரம்பிக்க அதுவும் நன்றாக பிக்கப் ஆனது.... அதில் இருந்து  வேகமாக உயர ஆரம்பித்தார்...

படிப்படியாக ஒவ்வொரு துறையிலும் நுழைய  ஆரம்பித்தார்..அவருக்கு திருமண வயதில் கஸ்தூரியை மணமுடித்தார்..

கஸ்தூரி பெயருக்கேற்ப அமைதியான குணம் கொண்டவர்.. தன் கணவனுக்கு உறு துனையாக இருக்க, திருமணம் முடிந்து சில வருடங்கள் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர்...

பின் அந்த கடவுளின் அருளால் ரிஷி வர்மா பிறந்தான்...

ரவி வர்மா தன் தந்தையை போலவே அவரும் தன் மகனுக்கு சிறு வயதில் இருந்தே தொழிலை விரிவு படுத்துவது பற்றி பேசுவார்..

கஸ்தூரி தன் கணவன் அலுவலகத்திற்கு சென்ற பின் தன் முழுநேரத்தையும் தன் மகனுடன் செலவிடுவார்.. சிறுவயதில் இருந்தே பல கதைகளை கூறி அவனை பண்புள்ளவனாக வளர்த்தார்..

பத்தாம் வகுப்பு முடிந்ததும்   ரவிவர்மா ரிஷியை மேல் படிப்புக்காக லண்டனுக்கு அனுப்பி வைத்தார்..

முதலில் தன் அன்னையை விட்டு பிரிந்து செல்ல  அடம்பிடித்து லண்டன் செல்ல மறுக்க கஸ்தூரி காந்திஜியின் வாழ்க்கை வரலாற்றை எடுத்து கூறினார்...

பதினெட்டு வயதிலயே திருமணம் முடித்து ஒரு மகனும் பிறந்து விட, தன்  இளம் மனைவியையும்  தன் குழந்தையையும் விட்டு பிரிந்து படிப்பதற்காக காந்திஜி லண்டன் சென்றார்..

அப்படி சென்றதனால் தான் அவரால் பாரிஸ்டர் பட்டம் பெற முடிந்தது.. அதன் பின் ஆஸ்ட்ரேலியாவுக்கும் சென்று பயிற்சி பெற்றார்..

அவர் தன் குடும்பத்தை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்திருந்தால் ஒரு சாதாரண மனிதனாக வாழ்ந்து மடிந்திருப்பார்.. இன்று எல்லோரும் போற்றும் மகாத்மாவாக வாழ்ந்திருக்க முடியாது..

நாம் நல்ல நிலைக்கு வருவதற்கு சில தியாகங்களையும் சில சந்தோசங்களையும் விட்டுக் கொடுத்து தான் ஆக வேண்டும்..

வளமான வாழ்க்கைக்காக  சிறுசிறு சந்தோசத்தை இழப்பது தவறு இல்லை.. “ என்று இன்னும் ஏதேதோ எடுத்துக் கூறி தன் மகனை லண்டனுக்கு அனுப்பி வைத்தார் கஸ்தூரி...  

அதைக் கேட்டு ஓரளவுக்கு சமாதானம் ஆனாலும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டே  தான் லண்டன் சென்றான் ரிஷி..  

அவனை அனுப்பி வைத்து விட்டு தன் மகனை  பிரிந்து இருக்க முடியாமல் அடுத்த மூன்றே மாதத்தில் கஸ்தூரி அங்கு சென்று விட்டார்.. அதன்பிறகு இருவரும் அடிக்கடி இரண்டு பக்கமும் வந்து போக, ரிஷிக்கு அந்த வாழ்க்கை பிடித்துவிட்டது..

அதனால் உற்சாகத்துடனேயே படிக்க ஆரம்பித்தான்.. கூடவே அவன் தந்தை சொல்லி சொல்லி வளர்த்த மந்திரமும் மனதில் பதிந்து விட தானும் ஒரு பெரிய பிசினஸ் மேன் ஆக வர வேண்டும் என்று  லட்சியத்தை வகுத்து கொண்டான்..

அதற்கு அயராமல் பாடுபட, இதோ இன்று  அவன் தந்தை பெறுக்கியதை விட பல மடங்கு தொழிலை பெறுக்கி இருந்தான்...

நம்பர் ஒன் தொழிலதிபர்களில் முதல் பத்து இடத்தில் அவனும் இருந்தான்.. இன்னும் சில வருடங்கள் சென்றால் முதலாவதாக வந்து விடுவான் என்ற செய்தியும் இருந்தது..

அதை எல்லாம் படித்து தெரிந்து கொண்டதும் இப்பொழுது நினைவில் மீண்டும் வர,  விவேக்  மலைத்து போய் அமர்ந்து இருந்தான்..

அப்பொழுது அந்த தளத்தின் நுழைவாயில் கதவு தானாக திறந்து கொள்ள, ஒரு நெடியவன் வேக நடையுடன் உள்ளே வந்தான்...

அவனை கண்டதும் அந்த ரிசப்னிஷ்ட் எழுந்து நின்று அவனை பார்த்து புன்னகைத்து காலை வணக்கத்தை சொல்ல அவனும் சிறு தலை அசைப்புடன் ரிசப்ஷனை கடந்து சென்றான்..

கோட் சூட் அணிந்து கண்ணில் கூலருடன் கையில் ஒரு சிறு ப்ரீப் கேசுடன் வேகமாக அடி எடுத்து வைத்து அவனுக்கு என்று இருந்த பிரத்யேகமான லிப்ட் ஐ நோக்கி நடந்தான்..

நடை முன்னால் நோக்கி இருந்தாலும் ஒரு நொடி பார்வை அந்த வரவேற்பறை முழுவதும்  படர்ந்து அங்கிருந்தவர்களை நோட்ட மிட்டு சென்றது.

அவன் நடக்கும் வேகத்தையும்  அவனுடைய கம்பீரத்தையும் கண்ட விவேக்  தானாக இருக்கையில் இருந்து எழுந்து தனக்கு முன்னால் நடந்து கொண்டிருந்த ரிஷியையே வாயை பிளந்து பார்த்தான்..

அவனுக்கு அவன் ரிஷியை சந்திக்க வந்திருப்பது மறந்து போனது.. ரிஷி  வரும் பொழுது வழியில் மறித்து பேசவேண்டும் என்று எண்ணி இருந்தது எல்லாம் மறந்து விட, அவனுடைய ஆளுமையிலும் கம்பீரத்திலும் மயங்கி போய்  பட்டி காட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி ஆ வென்று  வாயை பிளந்து ரிஷியையே  பார்த்து கொண்டிருந்தான்..

அந்த ரிசப்னிஷ்ட் மங்கையின் பார்வை விவேக் இருந்த பக்கம் வந்தது..

அங்கிருந்தவனோ அவன் வந்த விசயத்தை சொல்லாமல் ரிஷியை பார்த்து கொண்டிருப்பதை கண்டவள்  அவனை பார்த்து வாயில் கையை வைத்து தன் சிரிப்பை அடக்கி கொண்டு சிரித்தாள்..

அவள் உடல் சிரிப்பில் குலுங்குவது அங்கிருந்தபடியே தெரிந்தது விவேக்கிற்கு..

அப்பொழுதுதான் அவன் வாய் பிளந்து நின்று கொண்டிருந்தது உறைக்க, அவசரமாக தன்னை சமாளித்து கொண்டவன் அவளை பார்த்து முறைத்தான்...  

“டேய் விவா.. அந்த ரசகுல்லாவ எதுக்கு முறைக்கிற? இப்படி  ஒரு நல்ல சான்ஸை கோட்டை விட்டுட்டியே...!!  இப்படியா ஒரு ஆம்பளை இன்னொரு ஆம்பளைய பார்த்து சைட் அடிப்பது? கொஞ்சம் கூட விவஸ்தை இல்லடா... “ என்று தலையில் அடித்து கொண்டது அவன் மனஸ்..

அதை  முறைத்தாலும்

“அது சொல்வது உண்மைதானே.. !  நல்ல வாய்ப்பை கை நழுவ விட்டுட்டேனே..இப்ப எப்படி அவரை மறுபடியும் சந்திக்கிறது?  “ என்று  வருந்தி கொண்டு முன்னால் சென்ற ரிஷியை இயலாமையுடன் பார்த்தான் விவேக்..

தன் பிரத்யேக லிப்ட் ஐ அடைந்ததவன் அது  திறந்து கொள்ள, அதன் உள்ளே செல்ல முயன்றவன் ஏதோ ஞாபகம்  வந்தவன் போல உள்ளே செல்லாமல் நின்று  திரும்பி நடந்தான் ரிஷி..

இரண்டே எட்டில் விவேக் இருந்த இடத்தை அடைந்தவன் தன் கூலரை ஸ்டைலாக கழற்றியவன்

“நீங்க ? “ என்று புருவத்தை நெறித்து ஒரு நேனோ செகன்ட் யோசித்தவன்

“நீங்க மிஸ்டர் விவேக் தான? “ என்றான் ரிஷி தன் புருவத்தை  மேலாக உயர்த்தி..

அதை  கேட்டு  திகைத்த விவேக் முகம் மலர, வாயெல்லாம் பல்லாகிட

“யெ.... யெ.... யெஸ் சார்... நான் மிஸ்டர் விவேக்.. விவேக் 007 டிடெக்டிவ் ஏஜென்சி எம்.டி.. யெஸ்டர்டே நைட் பேசினிங்களே... “ என்று திக்கி திணறி சொல்லி முடிக்க

“யெஸ்.. ஐ காட் தட்.. .தட்ஸ் வை ஐ பேக் ஹியர்.. லெட்ஸ் கம் வித் மீ... “ என்று புன்னகைத்து  சரளமாக கை குலுக்கி முன்னால் நடந்தான்..

அவன் வேக நடைக்கு ஈடு கொடுத்து கூட ஓட வேண்டியிருந்தது விவேக் கிற்கு.. அப்படி ஓடும் பொழுது மறக்காமல்  திரும்பி அந்த ரசகுல்லாவை பார்த்து உதட்டை சுளித்து ஒரு பழிப்பு காட்டி விட்டு எப்பூடி என்று காலரை தூக்கி விட்டு கொண்டு ரிஷியுடன் ஓடினான் விவேக்..

அந்த ரிசப்ஷனிஸ்ட் ஆச்சர்யமாக பார்த்து கொண்டிருந்தாள்..

அவள் அங்கு வேலைக்கு சேர்ந்த நாள் முதல் ரிஷி தானாக வந்து அவனுக்காக காத்திருப்பவர்கள்  யாரிடமும் பேசியதில்லை.. பார்வையாளர்களை தன்னுடன் அழைத்து சென்றதும் இல்லை..

“இவனை.. பாஸ் அழைத்து செல்கிறார் என்றால் இவன் அவருக்கு  அவ்வளவு முக்கியமானவனோ? இல்லை அவனால் ஆக வேண்டிய காரியம் அவ்வளவு முக்கியமானதாக இருக்கும்.. “ என்று மனதுக்குள் எண்ணி  கொண்டவள் தன் தலையை உலுக்கி கொண்டு அடுத்து அங்கு வந்தவருக்கு உதவ ஆரம்பித்தாள்..

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!