தேடும் கண் பார்வை தவிக்க-33
அத்தியாயம்-33
இரவெல்லாம்
தனக்காக ஏங்கி தவிக்கும் பல காதலர்களுக்கு தரிசனம் கொடுத்து அவர்களிடம் கொஞ்சி விளையாடிய
நிலா பொண்ணை பொறாமையுடன் விரட்டி அடிக்க வேகமாக எழுந்து மேலே வந்து கொண்டிருந்தான்
அந்த ஆதவன்...
அந்த நிலா
பொண்ணும் அந்த ஆதவனுக்கு பழிப்பு காட்டி
“இன்றிரவும் மீண்டும்
வருவேன்.. அப்ப நீ என்ன செய்வாய் பார்க்கலாம் !! “ என்று அவனை பார்த்து கண் சிமிட்டி கிளுக்கி
சிரித்து ஓடி மறைந்து கொண்டிருந்தாள்...
பறவைகள் எல்லாம்
கீச் கீச் என்ற ஓசை எழுப்பி தங்கள் படுக்கையில் இருந்து எழுந்து தங்கள் கடமைகளை செய்ய
கிளம்பி கொண்டிருக்க, அவைகளை போலவே மானிடர்களும் அலாரம் வைத்து
அதிகாலையிலயே எழுந்து அன்றைய நாளை உற்சாகத்துடனும் சிலர் சலிப்புடனும்
ஆரம்பித்தனர்...
அவர்களில்
ஒருவனாய் அதிகாலையிலயே எழுந்து தன் காலை ஓட்டத்தை ஆரம்பித்து தன் தென்றல்
காதலியுடன் கொஞ்சி விளையாடும் ரிஷி வர்மா இன்று மிஸ்ஸிங்...
அதிகாலையிலயே
விழிப்பு வந்து விட்டாலும் படுக்கையில் இருந்து எழ மனம் இல்லாமல் எழுந்து தன் காலை
ஓட்டத்தை தொடங்காமல் சோம்பலுடன், வாழ்க்கையே வெறுத்து விட்ட ஒரு விரக்தியுடன் கண்ணை
இறுக்க மூடி கொண்டு படுக்கையில் படுத்திருந்தான் ரிஷி....
இரண்டு
நாட்களுக்கு முன்பு வரை எவ்வளவு உற்சாகமாய் நடையில் ஒரு துள்ளலுடன் உதட்டில் ஒரு
புன்னகையுடன் வலம் வந்தவன்…
இன்று
அத்தனையும் பறிபோய் வானத்தில் மிதந்து கொண்டிருந்த ஒருவனை பிடித்து அதல
பாதாளத்தில் தள்ளியதை போல, சொர்க்கத்தில் ராஜபோகம் அனுபவித்த
ஒருவனை அவன் சுகத்தையெல்லாம் பிடுங்கி கொண்டு நரகத்தில் பிடித்து தள்ளியதை போல
துவண்டு கிடந்தான்...
இந்த உலகத்தை, இந்த மக்களை பார்க்க பிடிக்காமல் தன் கண்களை இறுக்கி மூடிக் கொண்டாலும் அவன் மனமோ கண்ணை திறந்து வைத்து
கொண்டிருந்தது...
அவன் அதையும்
மூடிக்கொள்ள சொல்லி ஆணையிட, அவன் ஆணைக்கு அடங்காமல் திமிறிய அவன்
மனம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்ததை
திருப்பி பார்த்தது .
இரண்டு நாட்கள்
முன்பு விவா தன்னவளின் முகவரியை கண்டு பிடித்து விட்டான் என்ற செய்தியை கேட்டதும்
எத்தனை எத்தனையாய் மகிழ்ந்து போனான் ரிஷி..
அன்றைய முக்கியமான
அலுவல்கள் அனைத்தையும் கேன்சல் பண்ணிவிட்டு உடனே தன் காரை எடுத்துக் கொண்டு விமான நிலையத்திற்கு பறந்து இருந்தான்..
விமான நிலையத்தில்
விவேக்கை காரில் ஏற்றிக்கொண்டு ஆர்வத்துடன் தன்னவளின் முகவரியை அடைந்து தன்னவளை பார்க்கும்
ஆர்வத்துடன் காத்திருந்தால் கடைசியில்
அவன் தலையில் பெரிய இடிதான் விழுந்தது..
தன் மனம்
கவர்ந்தவள் தன் மனதில் அவன் மனைவியாக சிம்மாசனம் இட்டு அமர்ந்து இருப்பவள் அவன்
தேவதை ஏற்கனவே இன்னொருவனுக்கு சொந்தமானவள் என்று அறிந்ததும் சுக்கு நூறாக உடைந்து
போனான் ரிஷி..
இதை முன்னரே
யோசித்து இருக்கவில்லையே ! அவள் திருமணம் ஆனவளா? இல்லையா? என்றெல்லாம் யோசிக்காமல் தன் மனதில் அவளை பதிய வைத்து
அதற்கு மேல் மனைவி என்ற ஸ்தானத்தில் அமர்த்தி வைத்து அல்லவா பூஜித்து
வந்திருக்கிறான்..
ஆனால் அது எவ்வளவு
பெரிய தப்பு ! முட்டாள்தனம்.. நம் வாழ்க்கை முறையையும் கலாச்சாரத்தையும் பற்றி அவன் அன்னை கஸ்தூரி நன்றாகவே சொல்லிக்
கொடுத்திருந்தார்..
பிறன்மனை
நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ
ஆன்ற ஒழுக்கு
என்ற திருக்குறளையும்
சொல்லிக் கொடுத்து அதற்கான விளக்கத்தையும் அவனுக்கு சொல்லிக் கொடுத்திருந்தார்..
ஒரு பெண்
மணமானவள் என்று தெரிந்தால் அவளை ரசனையாக நோக்குவது கூட தவறு.. அடுத்தவருக்கு
சொந்தமானவளை மனதில் கூட, நினைவில் கூட ரசனையாகவோ எந்த ஒரு தவறான
நோக்குடன் எண்ண கூடாது என்று விளக்கி சொல்லியிருக்கிறார்..
அப்படி இருக்க
வேற ஒருத்தனின் மனைவியை தன் மனைவியாக
எண்ணி உள்ளம் பூரித்து வந்தது எவ்வளவு பெரிய மடத்தனம்.. என்று அவன் அறிவு அவனை
பார்த்து எள்ளி நகையாடியது...
ஆனால் மனதில் இத்தனை
நாட்களாக அவளைத்தான் தன்னவள் என்று
பதித்திருக்க அதை எப்படி அழிப்பது என்று துடித்தது அவன் மனம்...
அன்று அவள் திருமணம்
ஆனவள் என்று தெரிந்ததும் அவன் மனதில் உலகில் உள்ள எல்லா வலியும் வேதனையும் சூழ்ந்து கொள்ள முயன்று தன்னை கட்டுபடுத்தி கொண்டிருந்தான்..
மேலும் எப்படிப்பட்ட
சூழ்நிலையையும் கையாள்வது எப்படி என்று கற்றிருந்ததால் அவன் கற்றிருந்த பாடம்
அப்பொழுது உதவி செய்ய தன்னை, தன் உள்ளம் படும் வேதனையை
வெளிக்காட்டிக் கொள்ளாமல் முயன்று சமாளித்துக் கொண்டிருந்தான் ரிஷி..
அவன் கூடவே
அதிர்ந்து போய் முழித்துக் கொண்டிருந்த விவேக் தொடையின் மீது கை வைத்து
அழுத்தினான் அவனை இயல்பாக்க..
அதை கண்ட விவேக்
இன்னும் வேதனைக்கு உள்ளானான்..
தன்னாலயே இந்த
செய்தியை தாங்கிக் கொள்ள முடியவில்லையே.. இவன் எப்படி தாங்கிக் கொள்கிறான் என்று
பாவமாக ரிஷியை பார்த்தான் விவேக்..
அவனோ ஒரு வெற்று
புன்னகையை செலுத்தி கண்ணால் ஜாடை காட்டி அமைதியாக இருக்க சொன்னான்..
அதே நேரம் அந்த
வீட்டில் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் அவள்..
அவள் முகம்
தெரியும் முன்னே அவளின் வாசம் முன்னே வந்து ரிஷியின் நாசியை தீண்ட உள்ளே வருபவள்
யாரென்று நிமிர்ந்து பார்க்காமலயே தெரிந்து விட,
அவளின் வாசம்
அவன் உடலின் உள்ளே சென்று அவனை சிலிர்க்க வைக்க தன் ஒரு கையுள் மற்றொரு கையை
வைத்து இறுக்கி கொண்டு தலையை குனிந்தவாறு தன் தவிப்பை கட்டுபடுத்தி கொண்டிருந்தான்
ரிஷி..
உள்ளே வந்தவள்
“அத்த... ஸ்நாக்ஸ்
ரெடியா? ரொம்ப
பசிக்குது.. நிறைய சாப்பிடணும் காலையில் நான்
சொன்ன மிளகாய் பஜ்ஜி ரெடியா? “ என்று சிரித்துக் கொண்டே துள்ளலுடன் உள்ளே வந்தவள்
வாயில் பக்கமாக முதுகு காட்டி நின்றிருந்த பெரியவளை இடையோடு கட்டி அணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டாள் அவள்... தமயந்தி..!
அதில்
சிலிர்த்து போன அவள் அத்தை கண்ணம்மா அவளின் கன்னம் வருடி சிரித்தவாறு
“வாடா கண்ணு.. ஏற்கனவே
உனக்காக எல்லாம் செஞ்சி வச்சிருக்கேன்.. இரு எடுத்துகிட்டு வரேன்.. நீ போய் கை
கால் கழுவிட்டு வா.. “ என்று சிரித்தவர் அப்பொழுது தான் ஞாபகம் வந்தவராக
“தமா குட்டி..
சொல்ல மறந்துபுட்டேன்.. உன்ன பாக்க இவங்க ரெண்டு பேரும் வந்திருக்காங்க பார்..
இவங்கள
கூப்பிட்டு உட்கார வச்சுபோட்டு இவங்க
யாருனு இப்பதான் விசாரிச்சுகிட்டிருந்தேன்..அதுக்குள்ள நீயே வந்துட்ட..
இவங்க உனக்கு தெரிஞ்சவங்களா? “
என்று சிரித்தவாறு
வரவேற்பறையில் அமர்ந்து இருந்த ரிஷியை கை காட்ட,
தன் அத்தையை கட்டி கொண்டிருந்தவள் அவரிடமிருந்து விலகி அப்பொழுது தான்
வரவேற்பறையில் அமர்ந்து இருந்தவர்களை நிமிர்ந்து பார்த்தாள் தமயந்தி..
முதலில்
அமர்ந்திருந்த விவேக்கை அடையாளம் தெரியாமல் புருவத்தை நெறித்து யோசித்தவள்…
அடுத்து அமர்ந்திருந்த ரிஷியை
கண்டதும் அவள் கண்கள் பெரிதாக விரிந்தன..
உதட்டிலும் பெரிதாக
புன்னகை மலர
“ஹலோ ரிஷி சார்...
நீங்க எப்படி இங்க? நல்லா இருக்கீங்களா? “ என்று ஆச்சரியத்துடன் கேட்டவாறு சிரித்துக் கொண்டே
ரிஷியின் அருகில் சென்றாள் தமயந்தி...
அவள் கதவை திறக்கும் பொழுதே அவளின் வாசம் முன்னதாக
வந்து அவளின் வருகையை சொல்லி இருக்க அதில் சிலிர்த்தவன் தன்னை கட்டுபடுத்தி கொள்ள, கைகளை இறுக்கி கொண்டு தலையை குனிந்து கொண்டு அமர்ந்திருந்தான்..
ஆனால் அவன்
கண்கள் மட்டும் அவன் பேச்சை கேட்காமல் அவள்
வரும் திசையையே ஓரக்கண்ணால் பார்த்திருந்தது..
சிரித்த முகமாக
துள்ளலுடன் உள்ளே வந்தவளை கண்டதும் அவனையும் மீறி அவன் மனம் துள்ளிக் குதித்தது
இத்தனை நாட்கள்
அவளை காணாத தவிப்பு இன்று அவளை கண்டதும் இன்னும் வீறிட்டு எழுந்தது..
உள்ளே பெரும்
புயல் அடிக்க, அப்படியே ஓடிச்சென்று அவளை இறுக்கி
அணைத்து தன்னுள் புதைத்துக் கொள்ள வேண்டும் போல துடித்தது அவனின் ஒவ்வொரு அணுவும்..
ஆனால் அறிவு
“நீ அதற்கு தகுதியானவன்
இல்லை.. அவள் உனக்கு உரிமையானவள் இல்லை..
“ என்று சம்மட்டியால் தலையில் ஓங்கி
அடித்து அவனை பிடித்து வைத்தது..
அதை உணர்ந்ததும்
கண்ணில் வலியுடன் அவளையே ஓரக்கண்ணால் ஏக்கமாக பார்த்துக் கொண்டிருக்க, அவள் ஓடிவந்து கண்ணம்மாவை இடையோடு கட்டியணைத்து அவர் கன்னத்தில்
முத்தமிட்டதை கண்டதும் அவனுக்கு இன்னுமே பெரும் சோதனையாகி போனது...
குழந்தையைப் போல
தன் அத்தையை கொஞ்சி சிரிக்கும் அவள்
முகத்தை ஆயுள் முழுக்க பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல தவிப்பாக இருந்தது..
அதற்குள் பெரியவள் இவர்களை அறிமுகப்படுத்தி விட இப்பொழுது அவள்
அவனருகில்..
அதே சிரித்த
முகத்துடன் குறும்பு தவழும் சிரிக்கும் கண்களுடன் அவளேதான்.. அவன் ரோஜா பொண்ணு..
அவன் மான் குட்டி இப்பொழுது அவன் பக்கத்தில்..
கோடை காலத்து
உச்சி வெய்யிலில் தாகம் தொண்டையை வாட்டி எடுக்க, தண்ணீருக்காக
எங்கெங்கோ தேடி அலைந்தவன்… அந்த தண்ணீரை கண்டதும் ஆவலுடன் அதை அள்ளி பருக முடியாத
நிலையில் இருப்பவனை போல
இதுவரை தன்னவளை எங்கெங்கோ
தேடி அலைந்து, இன்று கண்டு பிடித்து விட, அவளை
ஆசையுடன் அள்ளி அணைத்துக் கொள்ள துடித்த கரங்களை பெருமுயற்சி கொண்டு அடக்கிக்
கொண்டிருந்தான் ரிஷி..
எப்படியோ அவன்
உதடுகள் தானாக அவளை பார்த்து புன்னகைத்தது..
ஆனால் அது ஒரு வெறித்த வெற்று புன்னகை என்பது அவனுக்கு மட்டுமே புரிந்தது..
ஓரளவுக்கு தன்னை
சமாளித்துக் கொண்டவன் தமயந்தியை பார்த்து புன்னகையுடன்
“ஹாய்..... ரோஜா
பொண்ணு.. “ என்று அழைத்தவன் பாதியில் நிறுத்திக் கொண்டான்..
இப்பொழுது
அவள் பெயர் ரோஜா இல்லையே என்று உறைக்க
என்ன சொல்லி அழைப்பது என்று குழம்பி போய் முழிக்க, அவனின்
ரோஜா பொண்ணு என்ற அழைப்பில் அவளுக்கும் அன்றைய ஞாபகம் வந்தது போல..
ஒரு நொடி அவள்
கண்ணில் வேதனை வந்து போனது.. ஆனால் அடுத்த நிமிடம் சமாளித்துக் கொண்டவள்
"சாரி ரிஷி
சார்.. அன்னைக்கு உங்ககிட்ட என்னுடைய உண்மையான பெயரை சொல்ல முடியவில்லை... உங்களை ஏமாற்றி விட்டேன் என்று எனக்கு இன்னும் கில்ட்டியாக இருக்கும்..
அப்பப்ப உங்களை
நினைச்சுக்குவேன்.. நீங்க அன்னைக்கு எனக்கு பண்ணின உதவிக்கு ரொம்ப நன்றி சார்..
நீங்க மட்டும் எனக்கு ஹெல்ப் பண்ணலைனா நான் ரொம்பவே தடுமாறிப் போய் இருப்பேன்..
எப்படியோ உங்க
உதவியால் தான் பத்திரமாக லண்டன் போய்விட்டேன்.. என்னுடைய நீண்ட நாள் ஆசையும் நிறைவேறிவிட்டது..
தேங்க்யூ சோ மச்.. “ என்று கன்னம் குழிய
சிரித்தாள் தமயந்தி..
அவளின் கன்னத்து
குழியையும் அவள் சிரிக்கும்பொழுது விரிந்த செந்நிற இதழ்களையும் எவ்வளவு முயன்றும்
ரசித்து பார்க்காமல் இருக்க முடியவில்லை ரிஷியால்..
அதற்குள் பெரியவள்
அவர்களுக்கு சிற்றுண்டியும் காபியையும்
கொண்டு வர அதை கண்டவள்
“சார்.. நீங்க சாப்பிடுங்க.. ஒரே நிமிஷம் ரெப்ரெஸ்
ஆகிட்டு வந்திடறேன்.. " என்று இருவரையும் பார்த்து பொதுவாக சொல்லி சிரித்து விட்டு
தன் அறைக்கு ஓடிச் சென்றாள்..
கண்ணம்மா
அவர்கள் இருவருக்கும் சாப்பிட கொடுக்க, அந்த நேரத்தில் சூடாக
ஏதாவது குடித்தால் தான் அதிர்ச்சியிலிருந்து வெளிவர முடியும் என்று தோன்ற இருவரும் மறுக்காமல் காபியை வாங்கி குடிக்க
ஆரம்பித்தனர்..
கண்ணம்மா அங்கே
நின்று கொண்டு ரிஷியை பார்த்தவள்
"நீங்கதான்
ரிஷி தம்பியா ? தமா உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறாள்.. அவள்
லண்டன் போனபொழுது நீங்கதான் அவளுக்கு உதவி செய்ததா சொன்னா....
லண்டனிலிருந்து
திரும்பி வந்ததும் ஒரு ரெண்டு வாரத்துக்கு உங்களைப் பற்றியே தான் சொல்லிக் கொண்டிருந்தாள்..
ரொம்ப நன்றி தம்பி.. என் மருமவளுக்கு உதவி
செய்ததுக்கு.. “ என்று அவரும் தன் நன்றியை
சொல்லி புன்னகைத்தார்..
அதற்குள் தன்னை
சமாளித்துக் கொண்ட ரிஷி அவரைப் பார்த்து
“இருக்கட்டும்
ஆன்ட்டி...இதுல நான் ஒன்னும் பெருசா செஞ்சிடல்ல..ரோஜா பொண்ணு...” என்று சொல்ல வந்தவன் மீண்டும் பாதியில் நிறுத்தி
கொண்டு
“மிஸஸ் தமயந்தி
முதன் முதலா ப்ளைட்ல வந்ததனால கொஞ்சம் பயப்பட்டாங்க..என்னால் முடிஞ்ச சிறு உதவியா
அவங்களை ஹோட்டலில் விட்டேன்... அவ்வளவுதான்.. " என்று அவளை மரியாதையுடன்
அழைத்து சிரிக்க முயன்றான்..
“நீங்க சொல்றது
கரெக்டுதான் தம்பி.. தமா பொண்ணு இந்த மெட்ராஸ் ஐ தாண்டி வெளியில் எங்கனயும் போனதே
இல்லை..
அப்படிப்பட்டவள்
ஏரோபிளேன் ல ஏறி லண்டன் வரைக்கும் தனியா போயிட்டு
வந்துட்டானா எனக்கே ஆச்சரியமா தான் இருக்கு.. “ என்று சிரித்தார்..
அதற்குள் விவேக்
ம் ஓரளவுக்கு சமாளித்துக் கொண்டு
“உங்க சொந்த ஊர்
எது ஆன்ட்டி? “ என்று மறைமுகமாக அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள எண்ணி
தன் விசாரணையை ஆரம்பித்தான்..
“நான் ஒருத்தி..
எங்கள பற்றி சொல்லவே இல்லையே... “ என்று தலையை தட்டி கொண்டவர்
“என் பேரு
கண்ணம்மா...நாங்க பொள்ளாச்சி பக்கம் ஒரு கிராமம்.. எங்களுக்கு விவசாயம் தான் தொழில்
தம்பி..நஞ்ச நிலம் ஏகப்பட்டது கிடக்கு.. அதையெல்லாம் விட்டுப்போட்டு தமா பொண்ணு படிப்புக்காக
இங்க வந்து உட்கார்ந்து இருக்கோம்.. “ என்றார் சிறு வேதனையுடன்..
அவருடைய
கிராமத்தை பிரிந்த ஏக்கம் அவர் கண்ணில் தெரிந்தது சில நொடிகள்.. ஆனாலும்
சமாளித்துக்கொண்டு அவர்களை பார்த்து புன்னகைக்க விவேக் மேலும் துருவினான்..
“உங்க பையன்
என்ன பண்றார் ஆன்ட்டி? இப்ப எங்க இருக்கார் ? “ என்று விசாரித்தான்..
அதைக் கேட்டு
ஒரு நொடி வேதனையில் முகம் சுருங்கிய கண்ணம்மா ஏதோ சொல்ல வந்தவர் ஆரம்பிக்கும் முன்னே
“என் மாமா
லண்டன்ல இருக்கான் சார்.. பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டல் செப் ஆ இருக்கான்...
அவனை பார்க்கத்தான் அவனுக்கு சர்ப்ரைஸ்
கொடுக்கத்தான் அவன்கிட்ட சொல்லாமல் அந்த டான்ஸ் ப்ரோகிராமை பயன்படுத்திகிட்டு
அன்னைக்கு லண்டன் போய்ட்டேன்... " என்று தோளை குலுக்கி சிரித்தவாறு தன் அறையில் இருந்து
வெளிவந்தாள் தமயந்தி...
முகத்தை கழுவி
கொண்டு தலை முடியை லேசாக திறுத்தி கொண்டு எந்த ஒரு அலங்காரமும் இல்லாமல்
பளிச்சென்று சிரித்தவாறு வந்தவளை கண்டதும் ரிஷியின் மனம் மீண்டும் அதன் வேலையை
காட்ட ஆரம்பித்தது...
அவன் கண்கள்
ஆர்வமாக அவள் முகத்தையே மொய்த்தது.
ஆனாலும் அது தவறு என அவன் அறிவு மீண்டும் சம்மட்டியை
கையில் எடுக்க அதில் பார்வையை மாற்றி கொண்டு வேறு பக்கம் பார்த்தான்...
அதற்குள் விவேக்
ஓரளவுக்கு இயல்பாகி விட, அவன் குறும்புத்தனம் எட்டி பார்க்க,
“என்ன மிஸ்
சின்ன ரோஜா... " என்று ஆரம்பித்தவன் உதட்டை கடித்து கொண்டு
"வாவ்..
என்ன ஒரு சாகஸம்... சாதனை செய்திருக்கீங்க
மிஸஸ் தமயந்தி...உங்க மாமாவை பார்க்க ஆள் மாறாட்டம் செய்து இரண்டு கன்ட்ரியின்
இமிக்ரேஷன் ஆபிஸர்சை ஏமாத்திட்டு லண்டன் போய்ட்டு வந்திட்டிங்க...
க்ரேட்..கலக்கிட்டிங்க " என்று நக்கலாக சிரித்தான்...
அதை கேட்டவள்
கண்ணால் தன் அத்தையை ஜாடை காட்டி அதை பற்றி பேச வேண்டாம் என்று சொல்லி பாவமாக
கெஞ்சியவள் தன் அத்தையிடம் திரும்பி
"அத்த..
எனக்கும் ஏதாவது சாப்பிட கொண்டு வாங்களேன்... " என்று பாவமாக பார்க்க
"சே.. நான்
ஒருத்தி.. வயசானாலே எல்லாம் மறந்து போய்டுது.. உன் மாமனார் என்னை திட்டறது
சரிதான்.. களச்சு வந்த புள்ளைக்கு காபி தண்ணி கூட கொடுக்காம வாய பார்த்துகிட்டு
இருக்கேனே.. " என்று தன்னைத்தானே திட்டி கொண்டே சமையல் அறை பக்கம் சென்றார்
கண்ணம்மா...
ரிஷியும் விவேக்
ம் ஒரு சோபாவில் அமர்ந்து இருக்க, அதை அடுத்து பக்கவாட்டில் இருந்த
ஒருவர் அமரும் சோபாவில் வந்து அமர்ந்தவள்
"ப்ளீஸ்
சார்.. அத்தைக்கு நான் பண்ணின தில்லு முல்லு தெரியாது..எனக்கு ஒரு ப்ரெண்ட் வழியா
டிக்கெட் கிடச்சது.. அதனால லண்டன் போய்ட்டு உடனே வந்திடறேன் னு சொல்லிட்டுத்தான்
அன்னைக்கு போனேன்..
அவங்களுக்கு பொய்
, பித்தலாட்டம் இதெல்லாம் பிடிக்காது.. அதனால்
அவங்க முன்னாடி அத பத்தி பேசாதிங்க.. " என்றாள் ரகசியமாக..
அதை கேட்டு
வியந்த விவேக்
"ஏன்
மேடம்... எதுக்காக அப்படி ஒரு பொய்யை சொல்லிட்டு போகணும்? முறைப்படி
விசா அப்ளை பண்ணி விசா வந்ததுக்கப்புறம் நேர் வழியில போய்ருக்கலாம் இல்ல..
உங்க ஹஸ்பண்ட்
லண்டன் ல இருக்கிறப்ப விசாவும் ஈசியா கிடச்சிருக்கும்.. எதுக்கு இந்த குறுக்கு வழி?” என்று யோசனையாக
விசாரித்தான் விவேக்...
"ஹ்ம்ம்ம்
அதெல்லாம் எனக்கு அந்த நேரத்துல தோணலை சார்... எனக்கு அந்த அக்கா லண்டன் போறேன் னு
சொன்னதும் என் மாமனை பார்க்கணும் ன்ற ஆசையில் உடனே போயே ஆகணும் போல இருந்தது...
எனக்கு ரிஸ்க்
எல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரி.. கொஞ்சம் த்ரில் ஆ இருக்கட்டுமேனு உடனே
கிளம்பிட்டேன்...
லண்டன்
இமிக்ரேஷன் லதான் மாட்டியிருப்பேன். நல்ல வேளை ரிஷி சார் என்னை காப்பாத்திட்டார்..
ரொம்ப நன்றி
சார்.. ஆமா என் அட்ரஸ் எப்படி கிடைத்தது? " என்றாள்
புருவத்தை நெரித்து யோசித்தவாறு..
இதை
எதிர்பார்த்திருந்ததால், தன் தொண்டையை கணைத்தவாறு ரிஷி மெல்ல
வார்த்தைகளை தேடி பிடித்து பேச ஆரம்பித்தான்..
“நான் மூன்று
வாரங்கள் முன்பு அண்ணா யுனிவர்சிட்டிக்கு வந்திருந்தேன் ரோ....” ரோஜா என்று
ஆரம்பித்தவன் நிறுத்தி கொண்டு தயா... என்றான்..
அதை கேட்டதும்
அவள் விலுக்கென்று நிமிர்ந்து அவனை பார்த்தாள்..
அப்பொழுது தான்
அவள் பெயரை சுருக்கி தயா என்று அழைத்தது உறைத்தது..
“சாரி... தமயந்தி
னு கூப்பிட நீளமா இருந்தது.. அதான் தயா னு சுருக்கி கூப்பிட்டேன்..தப்பா
சொல்லிட்டனா?" என்றான்
வருத்தமாக..
அவளோ சற்று
யோசித்து இல்லை என்று இரு பக்கமும் தலை ஆட்டினாள்..
"அப்படி
கூப்பிடலாம் இல்ல.." என்றான் பாவமாக அவளை பார்த்து..
ஒரு நொடி அவள் கண்ணில் வலி, வேதனை கூடவே ஆச்சர்யம் அதிர்ச்சி என அனைத்தும் கலந்து வந்து போனதை விவேக் கண்டு கொண்டான்...
Comments
Post a Comment