தேடும் கண் பார்வை தவிக்க-36

 


அத்தியாயம்-36

இரண்டு வருடங்கள் முன்பு:

தான் ஆசைப்பட்ட மாதிரியே தன் பேத்தியே தன் வீட்டு மருமகளாக வந்து விட்ட சந்தோஷத்தில் அவளை தன் பேரன் கையில் பிடித்து கொடுத்துவிட்டு நிம்மதியாக சந்தோஷத்துடன் மன நிறைவுடன் கண்ணை மூடி இருந்தார் பாப்பாத்தி....

தங்கள் கண் முன்னே அந்த பெரியவளின் புன்னகையும் அதை தொடர்ந்து அவர் உயிர் பிரிந்ததையும் கண்ட அந்த இளையவர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்...

அதற்குள் மற்றவர்கள் அருகில் வந்து விட, பாப்பாத்தியின் நிலையை கண்டு நடந்தது புரிந்து விட, அவர்கள் இருவரையும் அணைத்தவாறு வீட்டிற்குள் அழைத்து சென்றனர் உறவுக்காரர்கள்..

அடுத்து திருமணத்திற்காக வந்திருந்த உறவுக்காரர்கள் எல்லாம் பாப்பாத்தியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளும்படி ஆயிற்று..

வாழ்ந்து முடித்தவர், மன நிறைவுடன் இந்த உலகத்தை விட்டு பிரிந்து சென்றதால் அவரை கொட்டி தட்டி எடுக்க வேண்டும் என்று தங்கராசு ஆசைப்பட, அதற்கான ஏற்பாடுகளை பண்ண ஆரம்பித்தனர்..

திருமணத்திற்கு மிகவும் நெருங்கியவர்களை மட்டுமே அழைத்திருந்ததால் இப்பொழுது மற்றவர்களையும் அழைத்து பாப்பாத்தியின் மறைவை சொல்ல, அடுத்த கொஞ்ச நேரத்தில் இருந்து உறவுக்காரர்கள் தெரிந்தவர்கள் எல்லாம் கூட ஆரம்பித்தனர்...

தங்கத்திற்கோ தான் ஆசைபட்ட மாதிரி தன் மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது என்று சந்தோஷபடுவதா?, இல்லை தன் அன்னை போய் விட்டாரே என்று துக்க படுவதா? என்று குழம்பி போனவர் கூடத்தின் நடுவில் படுக்க வைக்க பட்டிருந்த தன் அன்னையின்  அருகிலயே   அமர்ந்து விட்டாள்..

கண்ணம்மா தான் தன் மருமகளை அழைத்து சென்று,  வேற ஒரு புடைவைக்கு மாற வைத்து,  பின் அழைத்து வந்து தங்கம் பக்கத்தில் அமர வைத்தார்..

தமயந்தியோ இன்னும் அதிர்ச்சியில் இருந்து விலகாதவளாய் முகம் வெளிறி தன் தாயின் அருகில் அமர்ந்து இருந்தாள்...

அவளை சுற்றி என்ன நடக்கிறது என்றே இன்னும் முழுவதுமாக புரிந்து கொள்ள முடியவில்லை... கனவு போல வேற வேற காட்சிகள் வந்து போய் கொண்டிருந்தன..

அவள் கல்லூரி விடுதியில் இருந்த பொழுது வந்த தொலைபேசி அழைப்பு...  தன் ஆயா ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று சொல்லி அவளை உடனே கிளம்பி வரச்சொல்லி அழைத்தது மட்டும் தெளிவாக இருக்கிறது..

அதற்கு பிறகு அவள் அடித்து பிடித்து ஓடி வந்ததும்... மருத்துவமனையில் அவள் ஆயா அவளுக்கு திருமணம் பண்ணி வைக்க சொன்னதும்... அதை தொடர்ந்து அவள் அன்னை தன் அப்பத்தாவிடம் சண்டை பண்ணி கொண்டு தூக்கு மாட்டிக்க சென்றதும்...  இறுதியில் அவளை அலங்கரித்து மணமேடையில் யாரோ அமர வைக்க...  அவள் மாமன் நளன் அவள் கழுத்தில் தாலியை கட்டியதும் என காட்சிகள் வேகமாக நகர்ந்தன...

இறுதியில் அவள் ஆயா அவளை பிடித்து நளனிடம் கொடுத்து விட்டு கண்ணையும் மூடிவிட்டாள்.. 

நடப்பது எல்லாம் கண்ணுக்கு தெரிந்தாலும் மூளைக்கு எட்டவில்லை.. பொம்மை போல மற்றவர்கள் சொன்னதை செய்தாள் தமயந்தி..

தன் ஆயாவின் இறப்பிற்கு அழக்கூட தோணாமல்,  தலையை குனிந்த படி அமர்ந்து இருக்க, அருகில் இருந்த தங்கம் தான் ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்தாள்...

*******

முகம் வெளுத்து அதிர்ச்சியுடன் அமர்ந்து இருந்த,  தன்னவளை காண நளனுக்கு கஷ்டமாக இருந்தது..

அவனுக்கு தெரியும்..!  

இது,  இந்த அவசர கல்யாணம் அவளுக்கு எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும் என்று..

அவள் மனதில் அவனை கணவனாக நினைத்திருக்க மாட்டாள்.. திடீர் என்று நான்தான் கணவன் என்று அவளை மணையில் உட்கார வைத்து விட,  அது அவளுக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சி என புரிந்தது அவனுக்கு..

அவளிடம் சென்று பேச வேண்டும் போல தவித்தது அவனுக்கு... அவன் மனதில் இருப்பதை எல்லாம் சொல்லி விட வேண்டும் என தவித்தது அவன் மனம்..

ஆனால் அதற்குள் பாப்பாத்தியின் இறப்பிற்கு உறவுக்காரர்கள் எல்லாரும் வந்து கொண்டிருக்க, பெண்கள் எல்லாரும் அங்கு சென்று அமர்ந்து கொண்டு தங்கத்துக்கும் தமயந்திக்கும்  ஆறுதல் சொல்லி கொண்டிருக்க, அவர்கள் நடுவில் சென்று  பேச இயலாது என தன் எண்ணத்தை கை விட்டான்..

அவனுக்குமே அதற்கு பிறகு வேலை பிடித்து கொண்டது... தன் தந்தைக்கு உதவுவதற்காக வெளியில் சென்று விட்டான்...

மாலை நான்கு மணி அளவில் எல்லா உறவுகளும் நட்புக்களும் சூழ அந்த பெரியவளை,  மேளம், தாளம் முழங்க, பூந்தேரில் ஏற்றி, வெடி வெடித்து ஆட்டம் பாட்டத்துடன் அனுப்பி வைத்தனர்..!  

******

தற்கு அடுத்து வந்த மூன்று நாட்களும் மற்ற தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் எல்லாரும் துக்கம் விசாரிக்க என வீட்டிற்கு வந்து செல்ல, தமயந்தியும் வருபவர்களை கவனிப்பதிலும்  அவர்களுடன் பேசி கொண்டிருப்பதிலும் பிசியாகி விட்டாள்..

நளனுக்குத்தான் எப்படியாவது அவளுடன் பேசி விடவேண்டும் என்று தவிப்பாக இருந்தது..

ஆனால் அவளோ அவனிடம் தனியாக மாட்டாமல் நழுவி கொண்டிருந்தாள்..

முதல் இரண்டு நாட்கள் வந்தவர்களை கவனிக்க பிசியாக இருக்கிறாள் என்று விட்டு விட்டவன்...  அடுத்த நாளும் அவள் நழுவி செல்ல,  வேண்டும் என்றே அவள் தன்னை தவிர்க்கிறாள் என புரிய,  அவனுக்கு குழப்பமாக இருந்தது..

“ஒருவேளை இந்த திருமணத்தை அவள் விரும்பவில்லையோ? அவளை ஒரு வார்த்தை கேட்டு இருக்க வேண்டுமோ ? “  என்று அவன் மனம் அடித்து கொண்டே இருந்தது..

அதற்கு தகுந்தார் போல இதுவரைக்குமே அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை அவள்..

அவன் இருக்கும் இடத்தில் அவள் இல்லாமல் தவிர்த்து வந்தாள்..

இப்படியே அவளின் கண்ணாம் மூச்சி தொடர, நளனால் அவளை தனியாக அழைத்து பேச முடியவில்லை...

நான்காவது நாள்தான் போனால் போகட்டும் என்று அவனுக்கு கருணை காட்டினாள் அவன் மனையாள்..

உறவினர்கள் வந்து செல்வது குறைந்திருக்க, தங்கம் அவர்களை அவள் வீட்டிற்கு மதிய விருந்திற்கு அழைத்திருந்தாள்..

திருமணம் முடித்து வந்ததும் இங்கயே தங்கி விட்டிருந்தனர் மணமக்கள்.

முறைப்படி பெண் வீட்டிற்கு சென்றிருக்கவில்லை.. அதனால் அவர்கள் இருவரையும் விருந்துக்கு வர சொல்லி விட்டு,  தங்கம் முன்னதாக கிளம்பி அவள் வீட்டிற்கு சென்றிருந்தாள்.

தங்கராசுவும் கண்ணம்மாவும் வயலில் அவசர வேலை இருப்பதாக சொல்லி விட்டு சென்றிருந்தனர்.

நளனையும் தமயந்தியையும் முன்னதாக கிளம்பி தங்கம் வீட்டிற்கு சென்று வர சொல்லி விட்டு,  அவர்கள் பிறகு வந்து விடுவதாக சொல்லி சென்றிருந்தனர்...

அறையில் தமயந்தி ரெடியாகி கொண்டிருந்தாள்..

தலைக்கு குளித்து அவளின் ஈரக் கூந்தலை லேசாக துவட்டியவள்,  அதை அப்படியே விரித்து விட்டிருக்க, அதன் இரு பக்கமும் முடி எடுத்து நடுவில் முடிந்திருந்தாள்..

கண்ணம்மா முன்பே எடுத்து வைத்திருந்த மயில் கழுத்து கலர் மைசூர் சில்க் புடவையை கட்டி இருந்தவள்...  ட்ரெஸ்ஸிங் டேபிலில் அமர்ந்து மெலிதாக அலங்காரம் பண்ணி கொண்டிருந்தாள்..

கண்ணுக்கு மை இட்டு,  முகத்துக்கு லேசாக  பவுடரை போட்டு,  கைகளுக்கு புடவைக்கு மேட்ச் ஆன கண்ணாடி வளையல்களை போட்டு கொண்டு அதை ஒரு முறை குலுக்கி பார்த்தவள் அந்த சத்தத்தில் உதட்டில் புன்னகை மலர முன்பிருந்த கண்ணாடியில் மீண்டும் ஒரு முறை தன்னை பார்க்க தலையை நிமிர்த்தினாள்...

முன்பக்கம் இருந்த கண்ணாடியில் அவள் உருவத்தை பார்க்க லேசாக அதிர்ந்து போனாள்...

அந்த அறை நுழை வாயிலில்,  மார்புக்கு குறுக்காக கைகளை கட்டி கொண்டு ஒரு காலை நேராக ஊன்றி வைத்து கொண்டு மற்றொரு காலை க்ராஸ் ஆக வைத்து கொண்டு நின்றிருந்தான் நளன்..!  

தமயந்தி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்டவன் இன்று  எப்படியும் அவளிடம் மனம் விட்டு பேசிவிட வேண்டும் என்று ஆவலுடன் ஓடி வந்திருந்தான்..

அவனுக்கு வசதியாக அவள் மட்டும் அறையில் இருப்பதை கண்டவன் உள்ளே வர முயல, அங்கு மயில் தோகை விரித்ததை போல விரிந்த கூந்தலும்...

அழகான அதே மயில் கழுத்து கலரிலான  புடவையும் கட்டி கொண்டு கழுத்தில் மூன்று  நாட்கள் முன்பு அவன் அணிவித்த மஞ்சள் தாலி சரடு பளபளக்க,  கைகளுக்கு வளையல் இட்டு அதை குலுக்கி பார்த்து புன்னகைத்தவளை கண்டதும் அப்படியே ப்ரீஸ் ஆகி நின்று விட்டான்...

மூன்று நாட்களாக வெளிறிய முகத்துடன் வளைய வந்தவள்..  இன்று உதட்டில் புன்னகை மலர்ந்திருக்க, அவள் முகமும் இளகி பழைய தயாவாக தெரிய,  அவனுக்கு பெரும் நிம்மதியாக இருந்தது...

தன் அத்தை மகளாக பலமுறை அவன் வீட்டிற்கு வந்து சென்றிருந்தாலும் இன்று அவனவளாய்  இந்த வீட்டு மருமகளாய்...  உரிமையுடன் அந்த அறையில் அமர்ந்து கொண்டு...  தன்னை அலங்கரித்து கொண்டிருந்தவளை கண்டதும் துள்ளி குதித்தது அவன் காதல் மனம்..

இதுக்காகத்தானே அவன் இவ்வளவு நாள் காத்திருந்தது...!

அவளை மனைவியாக்கி கொள்வதையே தன் வாழ்நாள் லட்சியமாக கொண்டிருந்தவனுக்கு... இன்று அவளை அவன் மனைவியாய்... அவனவளாய்... காண தன் லட்சியம் நிறைவேறி விட்டதை போல உள்ளம் பூரித்து போனது...

இந்த பிறவியின் பயனை அடைந்து விட்டதை போல... இந்த உலகத்தையே வென்று விட்டதை போல... ஒரு பெருமை,  திருப்தி அவன் உள்ளே...

மெல்ல ஒரு வெற்றி புன்னகையை தவழவிட்டான்.. 

அழகு மயிலாக தன் முன்னே அமர்ந்து இருந்தவளையே ரசனையுடன் பார்த்து கொண்டிருக்க, அதுவரை அவன் உள்ளே  உறங்கி கொண்டிருந்த அவன் கணவன் மனம் வீறு கொண்டு எழுந்தது...

அவளைதன் மனைவியை அள்ளி அணைத்துகொள்ள கைகள் துடித்தன..

அவளை நோக்கி ஆவலுடன் ஒரு எட்டி அடி எடுத்து வைத்தவன்... ஏதோ ஒன்று  உள்ளுக்குள் தடுக்க அப்படியே நின்று விட்டான்...

“டேய் மடையா !. உனக்குத்தான் அவ உன் பொண்டாட்டி... ஆனால் அவளுக்கு ??

இன்னும் அவள் உன்னை என்னவாக  நினைத்து கொண்டு இருக்கிறாள் என்று  தெரியாமல் ஏதாவது சொதப்பி வச்சிடாத.. “ என்று அவன் மனஸ் அவசரமாக எடுத்து கூற,  அப்படியே ஜெர்க் ஆகி நின்று விட்டான்...

“மனஸ் சொல்வதும் கரெக்ட் தான்...

இப்பொழுது அவள்  என் அத்தை மகளா? என் காதலியா ? இல்லை என் மனைவியா? எப்படி என்னை நினைத்து வைத்திருக்கிறா னு தெரியலையே?

என்று எண்ணி,   அவளை அணுக கொஞ்சம் தயங்கி,  யோசனையுடன் அவளையே ரசனையாக பார்த்து கொண்டு நின்று கொண்டிருந்தான்...

அதே நேரம் கண்ணாடி வழியாக அவன் நிற்பதை கண்டு கொண்டவள் வேகமாக திரும்பி

“ஹே மாமா... வாடா... ஏன் அங்கயே நின்னுகிட்ட? “ என்றாள் அவனை பார்த்து கன்னம் குழிய சிரித்தவாறு..

அவள் அழைப்பிலும்... அவளின் இதழ் திறந்த மலர்ந்த சிரிப்பிலும்... சற்றுமுன் அவன் உள்ளே இருந்த குழப்பம் தீர்ந்து போனது...

அவள்   அத்தைமகளா? காதலியா ? இல்லை என் மனைவியா என்ற குழப்பத்திற்கு அவளே பதில் அளித்து விட்டாள்..

அவள் இன்னும் அவன் உடைய அத்தை மகள்தான்...!  

அவனுடைய மனைவியாக இன்னும் வளர்ந்திருக்கவில்லை என்று புரிய இன்னுமாய் அவளை ரசித்தவாறு அங்கயே நின்று கொண்டிருந்தான்..

தான் அழைத்ததற்கு அவன் வராமல் இன்னும் அங்கயே நின்று கொண்டிருப்பதை கண்டவள் மீண்டும் அவன் புறம் திரும்பி

“ஏன்டா மாமா.. அங்கயே நின்னுகிட்ட.. இங்க கொஞ்சம் வாயேன்... “ என்றாள் கொஞ்சியவாறு...

அவனும் தன்னை சுதாரித்து கொண்டு,  புன்னகையுடன் அவள் அருகில் செல்ல, அவள் அமர்ந்து இருந்த அந்த ட்ரெஸ்ஸிங் டேபில் அருகில் இருந்த  ஸ்டூலில் இருந்து எழுந்து நின்றவள்,  தன் புடவை முந்தானையை விசிறி போல விரித்து, தன்னை ஒரு சுற்று  சுற்றி காண்பித்து

“நான் எப்படி இருக்கேன் ? “ என்று  கண்களை விரித்து அழகு காட்டினாள் தமயந்தி..

அவளின் செய்கையில் அப்படியே கவிழ்ந்து போனவன்... நாக்கு ஒட்டி கொள்ள எதுவும் பேச முடியாமல் தடுமாறினான்..

“என்ன மாமா..?  ஏன் இப்படி முழிக்கிற? நான் என்ன அப்படி கஷ்டமான கேள்வியா கேட்டுட்டேன்...? இந்த முழி முழிக்கிற? அப்பனா நான் நல்லா இல்லையா? “ என்று சிணுங்கியவாறி உதட்டை பிதுக்கினாள் சிறுபிள்ளையாக..

அவனுக்கோ இன்னும் பெரும் சோதனையாக ஆகி போனது..!  

அப்பொழுது தான் குளித்துவிட்டு வந்திருந்தவள்... மேனியில் இருந்து வந்த சோப்பின் வாசமும், அவள் கூந்தலில் போட்டிருந்த சேம்பின் வாசம்... கூடவே அவள் வாசமும் கலந்து அவனை கிறங்கடித்து கொண்டிருக்க,

எரியும்  நெருப்பில் எண்ணெய் ஐ ஊற்றுவது போல அவள் உதட்டை பிதுக்கி காட்டவும் இன்னும் தவிப்பாக இருந்தது அவனுக்கு... 

அவள் முகத்தை தன் புறம் இழுத்து அவள் முகத்தோடு தன் முகத்தை வைத்து அவளின் செவ்விதழை சிறைபிடிக்க துடித்தது அவன் கணவன் மனம்...

ஆனாலும் முயன்று தன்னை கட்டுபடுத்திக்  கொண்டவன்... அவள் இன்னும் அவனையே ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருக்க... அவன் தான்  எப்படி இருக்கிறேன் என்று  சொல்லுவான் என்று... அவன் வாயால் கேட்க காத்து கொண்டிருக்க  மெல்ல கஷ்டபட்டு இதழ் திறந்து பேசினான் நளன்...

“ஹ்ம்ம்ம் சூப்பரா இருக்க டி... “ என்று புன்னகைத்தான்...

“ஐ... நீயே சொல்லிட்ட... நான் நல்லா இருக்கேனு.. அப்ப சூப்பராதான்  இருப்பேன்..

டேய் மாமா...இங்க  பாரேன்...!  என்ற  அத்தை எனக்காக எம்புட்டு மேக்கப் ஐட்டம்ஸ் வாங்கி வச்சிருக்காங்க..

எங்க வீட்ல கூட இவ்வளவு இல்லை...!

இதெல்லாம் வாங்கி தர சொன்னா,  உன் செல்ல தங்கம் அத்தை...  அதெல்லாம் உனக்கு எதுக்குனு திட்டுவாங்க...

ஆனால் என் செல்ல அத்தை... எனக்காக இதெல்லாம் முன்னாடியே வாங்கி வச்சிருக்காங்க... எப்படா இதெல்லாம் வாங்கினாங்க? “ என்றாள் இன்னும் கண்களை அகல விரித்து..

அப்பொழுது தான் அவனுக்கு அது நினைவு வந்தது...

கண்ணம்மாவுக்கு பெண் பிள்ளை இல்லையே என்ற குறை.. பெண் குழந்தை இருந்திருந்தால் விதவிதமாக அலங்கரித்து பார்த்து ரசித்திருக்கலாம் என அடிக்கடி சொல்லுவார்..

தமயந்தி இங்கு வரும்பொழுது  எல்லாம் அவளை இழுத்து வைத்து அவளுக்கு அலங்காரம் செய்து விடுவார் சில நேரம்.. அவளுக்கு அப்படி செய்ய வேண்டும் என்று வாங்கியது சில..

பிறகு அன்று அவசரமாக திருமணம் முடிவான பிறகு புடவை எடுக்க சென்றபொழுது,  பக்கத்தில் இருந்த காஸ்மெடிக்ஸ் கடைக்கு  நளனை இழுத்து சென்று இதை எல்லாம் வாங்கி வந்தது நினைவு வந்தது..

தன் மருமகள் வீட்டுக்கு வரும்பொழுது இதெல்லாம் இருக்க வேண்டும் என்று ஒரு கடையையே காலி பண்ணி கொண்டு வந்திருந்தார்..

அதை எல்லாம் பார்த்துத்தான் அதிசயித்து வாய் பிளந்து நின்றாள் தமயந்தி...

“ஹ்ம்ம்ம் சொல்லுடா மாமா... நீயும் இதெல்லாம் வாங்கும் பொழுது இருந்தியா? எதுக்கு அத்த இவ்வளவு வாங்கி வச்சிருக்காங்க? “ என்றாள் ஆர்வமாய்..

ஓரளவுக்கு தன்னை சுதாரித்து கொண்டவன், அவன் உள்ளே  பழைய நளன் திரும்பி இருக்க

“ஹ்ம்ம்ம் அதை நீ உன் அத்தை கிட்டயே கேட்டுக்க டி..

ஒருவேளை இதையெல்லாம் போட்டால் தான்... அவங்க மருமவ கொஞ்சமாவது பார்க்க லட்சணமா இருப்பானு வாங்கி வச்சிருப்பாங்களோ?

என்று மருமவ என்பதை அழுத்தி சொல்லி, நாசுக்காக அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது. அவள் இந்த வீட்டு மருமகள் என்று  உணர்த்த முயன்றான்...

அவளோ  அதை எல்லாம் கண்டு கொள்ளாமல்

“அப்ப இதெல்லாம் போடலைனா நான் அழகா இல்லையா ? “ என்று  கோபமாக முறைத்தாள்...

“ஹீ ஹீ ஹீ இதெல்லாம் போடலைனாலும் நீ அழகு தான் டி என் கண்ணுக்கு... ஆனால் மத்தவங்களுக்கும்  நீ அழகா தெரியணும் இல்லையா? அதுக்கு இந்த எக்ஸ்ட்ரா எல்லாம் வேணுமாக்கும்.. “ என்று குறும்பாக கண் சிமிட்டி சிரித்தான்..

அவன் சொன்னதன் அர்த்தம் சில விநாடிகள் கழித்து புரிய

“டேய்......நல்லி எழும்பு மாமா... “ என்று  அவன் கையை நறுக்கென்று  கிள்ளி வைத்தாள்..

“ஆ வலிக்குது டி ராட்சசி.. இப்படியா கிள்ளுவ? “ என்று  செல்லமாக முறைக்க,

“ஹ்ம்ம்ம் நான் நல்லா இல்லைனு சொன்னா இப்படித்தான்... “ என்று  விரல் நீட்டி மிரட்டியவள்

“சரி... என் முகத்தில் எல்லாம் சரியா இருக்கானு பார்த்து சொல்.. “ என்று அவள்  முகத்தை அவன் அருகில் நீட்ட,

கொஞ்சம் தயங்கியவன் பின் தைர்யத்தை வரவழைத்து கொண்டு,  அவள் முகத்தை கையில் ஏந்தி...  கொஞ்சம் கோணலாக வைத்திருந்த அவள் ஸ்டிக்கர் பொட்டை எடுத்து நேராக வைத்தவன்... முன்னால் தொங்கி கொண்டிருந்த முடியை ஒதுக்கி அவளின் காதுக்கு பின்னால் விட்டான்..

கண் மை சரியாக வைக்காமல் அங்கங்கே சொட்டையாக இருக்க, அருகில் இருந்த அந்த  கண்  மையை எடுத்து அவளுக்கு அழகாக வைத்து விட்டான்...

அருகில் இருந்த பவுடரையும் எடுத்து இன்னும் கொஞ்சம் அவளுக்கு டச் அப் பண்ணி விட்டவன் 

“ஹ்ம்ம் இப்ப பார் டி... “ என்று அவள் முகத்தை கண்ணாடி முன்னே காட்ட, அவளும் வியந்து போய்

“வாவ்.. சூப்பரா இருக்கு டா மாமா... அப்படியே இதையும் போட்டு விடு “  என்று லிப்ஸ்டிக் ஐ எடுத்து நீட்ட அப்படியே அதிர்ந்து ஒரு அடி பின்னால் நகர்ந்து நின்று  கொண்டான் நளன்..

“ஏன் டா மாமா.. இப்படி பயந்துக்கற.. அப்படி ஒன்னும் பேய் மாதிரி இருக்க மாட்டேன்.. ஓரளவுக்கு பாக்கிற மாதிரிதான் இருப்பேன்.. போட்டு விடு.. “ என்று  தலை சரித்து சிரித்தாள்..

“அடிப்பாவி... இப்படி படுத்தறாளே...ஏற்கனவே என் நிலை புரியாமல்... என்னுள்ளே ஒரு காங்கேயம் காளை கட்டவிழ்ந்து சுத்திகிட்டிருக்கிறது தெரியாமல்...  அதுக்கு இவ வேற கொம்பு சீவி விடுறாளே.. பெரும் சோதனைதான்... “ என்று  உள்ளுக்குள் புலம்பியவன்

“தயா... எனக்கு இதெல்லாம் போட்டுவிட தெரியாது டீ.. நீயே போட்டுக்க? “ என்று சமாளிக்க முயன்றான்..

“அப்ப கண் மை மட்டும் உனக்கு போட்டுவிட தெரியுமாக்கும்? யாருக்கு இத மட்டும் போட்டுவிட்ட? அதெல்லாம் சொல்லி எஸ்கேப் ஆக முடியாது.. ஒலுங்கா இதை எனக்கு போட்டு விடுடா... “

என்று அவனை மடக்க,  வேற வழி இல்லாமல்,  அந்த லிப்ஸ்டிக் ஐ எடுத்து அவளின் திரண்டிருந்த சிவந்த இதழின் மீது மென்மையாக தடவினான்..

அவள் இதழ்களோ மிகவும் மென்மையானதை போல இருக்க, அதுக்கு வலித்து விடாமல் மெது மெதுவாக பட்டும் படாமலும் மெல்ல அந்த லிப்ஸ்டிக் ஐ தடவ, சிறிது நேரம் பார்த்தவள்

“என்னடா மாமா... இப்படி  சொங்கி மாதிரி தடவற.. பாஸ்ட் ஆ போடு.. “  என்று அவன் கைபிடித்து வேகமாக இழுக்க, அதில் அவன் கையில் இருந்த லிப்ஸ்டிக் நழுவி கிழ விழ, அவன் விரல்கள் அவள் இதழ்களில் இப்பொழுது..

அதை தொட்டு பார்க்க ஆசையாக இருக்க, அவன் போட்டிருந்த லிப்ஸ்டிக் ஐ சரி செய்பவன் போல விரல்களால் மெல்ல வருடினான்...

அவளின் மெல்லிய திரண்ட இதழ்களை வருடவும் அவன் உள்ளே மின்சாரம் பாய்ந்ததை போல சிலிர்த்து போனான்..

கண்களில் காதல் மின்ன, அவளை தீண்டும் அந்த ஒவ்வொரு நொடியும் அவனுள் ஒவ்வொரு அணுவிலும் அந்த பரவசம் பரவ, கண் மூடி அந்த சுகத்தை,  பரவசத்தை அனுபவிக்க, அடுத்த நொடி பட்டென்று அவன் கையை தட்டி விட்டாள் அவன் மனையாள் ..

“டேய்.. நீ லண்டன் போனதில் இருந்து ஆளே சரியில்லை.. இப்படி சோம்பேறியா இருக்க... இந்த லிப்ஸ்டிக் ஐ போடறதுக்குள்ள தூங்கிட்ட...

உனக்கெல்லாம் யார் வேலை கொடுத்து செப் ஆ வச்சுகிட்டாங்களாம் ! சமைக்கிறப்பயும் இப்படிதான் தூங்குவியோ ? ” என்று குறும்பாக சிரித்தாள் தயா...!  

“அடிப்பாவி.. தூங்கறனா ? கட்டின பொண்டாட்டி கிட்ட மயங்கி பரவசத்துல இருக்கறவனை போய் தூங்கறானு சொன்ன முதல் பொண்டாட்டி நீதான் டி.. என் கண்ணுல மின்னற காதலை கூட புரிஞ்சுக்க முடியாத முட்டாளா.. தத்தியா இருக்காளே..

இவளுக்கு நான் எப்ப காதல் பாடம் நடத்தி... அதில் அவளை பாஸாக வைத்து...  அடுத்து கணவன் மனைவி பாடத்தை நடத்தறது?

எனக்கு பேர புள்ளைங்க பொறக்குற வயசுல தான் என் புள்ளைங்களே பொறக்கும் போல... “ என்று உள்ளுக்குள் புலம்ப,  அவளோ மீண்டும் கண்ணாடியில் தன்னை பார்த்தவள்

“வாவ்.... நிஜமாலுமே இந்த லிப்ஸ்டிக் ஐ போட்டதுக்கு  பிறகு இன்னும்  சூப்பரா இருக்கு டா மா.. அத்தைக்குத்தான் தேங்க்ஸ் சொல்லோணும்.. எனக்காக பாத்து பாத்து வாங்கி வச்சிருக்காங்க... “ என்று  கிளுக்கி சிரித்தாள்..

அவனும் அவளை ரசித்தவன்,  அப்பொழுதுதான் அவன் பேசவேண்டிய டயலாக் நினைவு வர,

“த யா.. வந்து...  உன்கிட்ட நான் ஒன்னு கேட்பேன்..நீ மறைக்காமல் சொல்லணும்.. “ என்று தயக்கத்துடன் இழுத்தான்...

“ஹ்ம்ம் சொல்லுடா மாமா... என்ன கேட்கணும்.. “ என்றாள் இன்னும் கண்ணாடியை பார்த்து கொண்டு... அவளை இப்படியும் அப்படியும் திருப்பி பார்த்து ரசித்து கொண்டு..

“வந்து...... “ என்று ஆரம்பிக்கும் முன்னே,  கண்ணம்மா வயலில் இருந்து திரும்பி வந்திருந்தார்..

“தமா குட்டி... ரெடி ஆய்ட்டியா? ரெண்டு பேரும் இன்னும் கிளம்பி போகாம என்ன பண்ணிகிட்டிருக்கிங்க? “ என்று கேட்டவாறு வீட்டிற்கு உள்ளே வந்து கொண்டிருந்தார்...

அவர் குரலை கேட்டதும் அவள் அருகில் ஒட்டி நின்றிருந்தவனை ஒரு கையால் தள்ளி நிறுத்தியவள்...  மலர்ந்த சிரிப்புடன் மான் குட்டியாய் துள்ளி குதித்து வெளியில் ஓடினாள்..

“அத்த... நான் எப்படி இருக்கேன் இந்த மேக்கப் ல ? “ என்று  புடவை முந்தானையை விரித்து காட்டி,  அவளை அப்படியும் இப்படியும் திருப்பி காட்ட, நான்கு நாட்களுக்கு பிறகு அவள் முகத்தில் வந்து இருந்த குறும்பையும்,  துடுக்கு தனத்தையும் கண்டு மகிழ்ந்து போனார் கண்ணம்மா...

அவளை மேலிருந்து கீழாக ரசித்து பார்த்தவர்

“என் மருமவ அப்படியே ரதி மாதிரி அம்புட்டு அழகா இருக்கா..!. அம்சமா இருக்கடா தங்கம்..!  என் கண்ணே பட்டுடும் போல இருக்கு..இரு திருஷ்டி சுத்தறேன்.. “ என்று அவளுக்கு திருஷ்டி சுத்தி நெட்டி முறிக்க,

“ஹ்ம்ம்ம் எல்லாம் நீங்க வாங்கி வச்ச மேக்கப் ஐட்டம்ஸ் தான் அத்தை... ரொம்ப தேங்க்ஸ் அத்தை.. நீதான் என்னுடைய பெஸ்ட் அத்தை.. ஐ லவ் யூ... “ என்று கண்ணம்மாவை கட்டிக்கொண்டு, அவர்  கன்னத்தில் முத்தமிட்டாள் தமயந்தி..

அவள் பின்னே வந்த நளன் அதை கண்டு ரசித்தாலும்,  அவன் காதில் புகை வந்தது..

“ஹோய் ப்ராட்... இதெல்லாம் நான்தான போட்டு விட்டேன்... ஆக்சுவலா நீ எனக்குத்தான் தேங்க்ஸ் சொல்லி கிஸ் பண்ணனும்.. அது என்ன உன் அத்தைக்கு மட்டும்... இது செல்லாது... எனக்கும் கிஸ் பண்ணு.. “ என்று  சிரித்தவாறு அங்கு வந்தான் நளன்...

அவன் முகத்தில் இத்தனை நாளாக இருந்த குழப்பம் தீர்ந்து போய் முகம் தெளிவாக இருக்க,  அதை கண்ட கண்ணம்மாவுக்கும் பெரும் நிம்மதியாக இருந்தது..

அவனுக்கு பிடித்தபடியே கண்ணாலத்தை  பண்ணி வைத்திருந்தாலும்... கடந்த நாட்களாக தன் மகன் முகத்தில் ஒரு களை இல்லாமல் இருந்ததை கவனித்து வந்தார் கண்ணம்மா..

ஆனால் இன்று அவனும் பழைய படி கலகலவென்று  பேசி சிரிக்க

“எப்படியோ இருவரும் ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டு... இந்த கண்ணாலத்தை ஏத்துகிட்டா போதும்.. “ என்று உள்ளுக்குள் பெருமூச்சு விட்டவர்

“என் மருமவளுக்கு அப்பயும் ஏதோ ஒன்னு குறையுதே..”  என்று வாய்விட்டு யோசித்தவர் ஞாபகம் வந்தவராக

“இருடா செல்லம் வர்ரேன்.. “ என்று சொல்லியவாறு சமையல் அறைக்கு சென்று,   அங்கு இருந்த பிரிட்ஜ் ஐ திறந்து,  அதில் இருந்த நெருக்கமாக  தொடுத்திருந்த மல்லிகை சரத்தை எடுத்து வந்தார்...

அதை நாலாக மடித்து தன் மருமகளுக்கு வைத்து விட்டவர் அவளை முன்னால் திருப்பி

“இப்ப அப்படியே மஹாலட்சுமி மாதிரி இருக்கா என் மருமவ... இந்த ஊர் கண்ணே இன்னைக்கு உன் மேலதான் இருக்கும் பார் செல்லம்... “ என்றவர் அவள் கண்ணோரத்தில் இருந்த துளி மையை எடுத்து அவள் கன்னத்தில் சின்னதாக திருஷ்டி பொட்டு வைத்து விட்டார்...   

தமயந்தியும் கிளுக்கி சிரிக்க, பின் இருவரையும் தங்கம் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்...

நளன் ஏற்கனவே அவனுடையை பைக்கை தயராக வாசலில் வைத்திருக்க, கண்ணம்மாவிடம் சொல்லி விட்டு இருவரும் ஜோடியாக நடந்து பைக் ஐ அடைந்தனர்....! 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!