தேடும் கண் பார்வை தவிக்க-38

 


அத்தியாயம்-38

நேற்று இரவு இருந்த தெளிவும், நிம்மதியும்,  மன அமைதியும் இன்று காலையில் காணாமல் போனது நளனுக்கு..!  

மனம் ஏனோ படபடவென்று அடித்துக் கொண்டது.. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மதிய உணவை முடித்து சென்னைக்கு கிளம்ப தயாரானான் நளன்..

அவனை வழியனுப்ப அவன் குடும்பத்தாரும் சென்னை வருவதாக திட்ட்மிட்டு அவனுடன் கிளம்பினர்.. தமயந்தியும் அப்படியே கல்லூரிக்கு சென்று விடுவதாக ஏற்பாடு செய்திருக்க சிங்காரம் மற்றும் தங்கம் நளன் வீட்டிற்கு வந்திருந்தனர்..

என்றுமே அந்த வீட்டு படி ஏறியிராத கன்னியம்மா, தன் சம்பந்தி பாப்பாத்தி மறைவுக்கு கூட துக்கம் விசாரிக்க வந்திராத கன்னியம்மா ஏதோ அவருக்குள் உந்த, தன் பேத்தி புருஷனை வழியனுப்ப அன்று தங்கராசுவின் வீட்டிற்கு வந்திருந்தார்..

அவரை  கண்ட தங்கராசு மனம் நிறைந்துவிட்டது..

அவரை உரிய மரியாதையுடன் வரவேற்று தன் வீட்டில் அமர வைத்தார்.. ஆனாலும் வீட்டுக்குள் வர மறுத்து வாயிலிலயே அமர்ந்து கொண்டார்..  

அவர்கள் காரிலேயே சென்னைக்கு செல்வதாக ஏற்பாடு செய்திருந்தனர்..  

கிளம்புவதற்கு அரைமணி நேரம் இருக்க மற்றவர்களுடன் நின்று கதை பேசிக் கொண்டிருந்த தமயந்தியை தன் அறையின் உள்ளே இருந்து அழைத்தான் நளன்..

அவன் குரல் கேட்டதும்  

“இதோ வந்துட்டேன் மாமா... “  என்று துள்ளிக் குதித்தவாறு அவன் அறைக்குள் ஓடினாள் தமயந்தி..

அவள் உள்ளே நுழைந்ததும் அடுத்த நொடி அந்த கதவை சாத்தி தாழிட்டவன்  வேகமாக அவளை இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்திருந்தான் நளன்..

அவளை அப்படியே தன்னுள் புதைத்துக் கொள்ளும் வேகம் இருந்தது அந்த அணைப்பில்.. திடீரென்று நளன் அப்படி செய்ய, அதில் திடுக்கிட்டு திகைத்துப் போனாள் தமயந்தி..

ஆனாலும் சுதாரித்து கொண்டு அவன் இறுகிய பிடியிலிருந்து விலக முயல,  அவனோ அவளை இன்னும் இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான்..

அவனின் இதயம் வேகமாக  துடிப்பது அவளுக்கு கேட்டது.. அவன் உள்ளே படபடப்பாக இருப்பது புரிய, அதன்பின் அப்படியே அவன் அணைப்பிலயே அவன் மார்பில் முகம் புதைத்தவாறு நின்றுகொண்டாள்...

சிறிது நேரம் அவளை இறுக்கி அணைத்திருந்தவன் உள்ளே இருந்த படபடப்பு மெல்ல மெல்ல அடங்க, மெது மெதுவாக அவளை விடுவித்தவன்  அவள் முகத்தை அவள் தாடையை பிடித்து நிமிர்த்தி அவள் கண்களுக்குள்  ஊடுருவி பார்த்து எதையோ தேடினான்...  

அவனின் பார்வையை நேராக எதிர் கொண்டாள் தமயந்தி...தன் கணவன் அப்படி காதலுடன் பார்க்கும் பொழுது பொதுவாக பெண்களுக்கு வரும் நாணமோ ஒரு வெக்கமோ நெகிழ்ச்சியோ அவள் பார்வையில் இல்லை..

மாறாக தன் சிறு வயதில் தன்னுடன் விளையாடும் நண்பனை நேராக பார்த்து பேசும் பாவமே அவள் முகத்தில்..அவனையே நேராக உற்று பார்த்தவள்  

“என்னடா மாமா ? என்னாச்சு ?  ஏன் ஒரு மாதிரியா இருக்க? “  என்றாள் யோசனையுடன்

“ஹ்ம்ம் எனக்கு உன்னை விட்டு போக மனசு இல்லடி தயா.. என்னமோ தெரியல.. இந்த முறை லண்டன் போக கால் வரமாட்டேங்குது.. உனக்கு அப்படி எதுவும் தோணலையா? “  என்றான் ஆர்வத்துடன்..

“டேய் லூசு மாமா... நீ என்ன இப்பதான் முதன்முதலா லண்டன் போறியா?  எத்தனை தரம் லண்டன்  போயிட்டு வந்திருக்க.. அப்ப எல்லாம் இப்படி பீல் பண்ணலயே..இப்ப மட்டும் என்னாச்சு?  

எதுக்கு சின்ன குழந்தை மாதிரி இப்படி பீல் பண்ற? “  என்று செல்லமாக கண்டித்தாள் அவன் முன்னால் இருந்த கற்றை முடியை செல்லமாக கழைத்தவாறு...

உடனே அவள்  கையைப் பற்றி தன் கன்னத்தில் வைத்துக்கொண்டவன்

“தெரியல டி.. இந்த முறை என்னவோ போல இருக்கு.. எனக்கு உன்னை விட்டு ரொம்ப தூரம் போற மாதிரி இருக்கு.. பேசாமல் வேலைய விட்டுட்டு இங்கயே உன் பக்கத்திலேயே இருந்திடவா? “  என்றான் தழுதழுத்தவாறு..

அதைக் கேட்டதும் அவளுக்குமே முகம் வாடிப் போனது..

“ஹே மாமா..  இப்ப என்ன ஆச்சு?  இந்த வேலை உன்னுடைய கனவு இல்லையா?  எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த வேலைக்கு போன. திடீர்னு வேலையை விடறேன் னு சொல்ல எப்படி மனசு வந்தது..  

அப்புறம் உன் கனவு லட்சியம் எல்லாம் என்னாவது? ஒரு பத்து மணி நேரம் பயணம்.. அதுக்குப் பிறகு எப்பவும் போல நீ வீடியோ கால் ல பேச போற.. எனக்கு மட்டும் உன்னை விட்டு இருக்க முடியுமா?  

நான் உன் கூட பேசிக்கிட்டே இருப்பேன்.. நீ கவலை இல்லாமல் போயிட்டு வாடா..“ என்று அவன் கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளினாள் சிரித்தவாறு....  

அதுக்குள் ஓரளவுக்கு தெளிந்தவன் கண்ணோரம் துளிர்த்த நீரை அவள் அறியாமல் உள்ளிழுத்து கொள்ள முயல, அதற்குள் அதை கண்டு கொண்டவள்

“ஹா ஹா ஹா நளமஹாராஜனே...என்ன இது சின்ன புள்ளையாட்டம் இப்படி அழுவறீர்..? . என்னமோ என்னைய குதிரையில வந்து தூக்கிட்டு போவனு சொன்ன?

இப்படி சின்ன புள்ளையாட்டம் கண் கலங்கற? “ என்று அவனை சீண்டியவாறு அவன்  கண்ணில் இருந்த நீரை அவள் புடவை முந்தானையால் துடைத்து விட்டாள்..

“சீ.. போடா மாமா.. இப்படி அழு மூஞ்சியா  யாராவது  ஊருக்கு போவாங்களா?  சேம் சேம் பப்பி சேம்.. “  என்று அவன் கன்னத்தை கிள்ளி சிரித்தாள்..  

அதற்குள் தன்னை சமாளித்து கொண்டவன் அவளை பார்த்து செல்லமாக முறைத்தவன்

“ஹ்ம்ம்ம் நீயெல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு ஆயிடுச்சு... எல்லாம் என் நேரம் டீ.. “ என்று பெருமூச்சு விட்டவன்

“ஹே தயா.. நான் லண்டன் போகறதுல உனக்கு வருத்தமே இல்லையா? “ என்றான் அவளை ஊடுருவி பார்த்தவாறு...

ஒருவேளை அவள் உள்ளே வேதனை படுவதை மறைக்கிறாளோ என்று ஆராய்ந்தவாறு... 

“ஹீ ஹீ ஹீ இல்லையே !! “  என்று தன் கையை அழகாக விரித்து காட்டி சிரித்தாள்..

“நீ லண்டன் போனா தான எனக்கு நிறைய சாக்லேட் வாங்கி வருவ..  அதுக்குத் தான் நான் உன்னை லண்டனுக்கு அனுப்பி வைக்கிறேன்... மறக்காம வரும் பொழுது நிறைய சாக்லேட் வாங்கி வரணும்..  ஓகே வா.. “ என்று கண் சிமிட்டி சிரித்தாள்..

அவளின் சிரிப்பை ரசித்தவன்

“அடிப்பாவி ஒரு சாக்லேட் க்காக கட்டின புருஷன லண்டனுக்கு அனுப்பிய முதல் பொண்டாட்டி நீதான் டீ.. “ என்று அவள் தலையை பிடித்து செல்லமாக ஆட்டினான்..

அவளும் கிளுக்கி சிரிக்க அதை அப்படியே தன் மனதில் நிறைத்து கொண்டவன் என்ன தோன்றியதோ திடீரென்று அவளை பார்த்தவன்

“ஓய் பொண்டாட்டி...உன்னை ஒரே ஒரு கிஸ் பண்ணிக்க வா.. “  என்று குறும்பாக கண் சிமிட்டினான்..  

அதை கேட்டு திடுக்கிட்டவள்  அவனை முறைத்து

“ஹோய் மாமா... அதெல்லாம் பண்ணக்கூடாது.. “  என்று விரல் நீட்டி மிரட்டினாள்..

“ப்ளீஸ் டி... ஒரே ஒரு கிஸ் பண்ணிக்கிறேன்.. இன்னும் ஆறு மாசமோ ஒரு வருஷமோ உன்னை பிரிஞ்சிருக்கணும்.. அதுவரைக்கும் தாங்கற மாதிரி ஒரே ஒரு கிஸ் பண்ணிக்கிறேன்...  ப்ளீஸ்.. “  என்று ஏக்கத்துடன் அவளை பார்த்தான் நளன்...

அவனின் பாவமான முகத்தை கண்டவள் கொஞ்சம் இறங்கி வந்து

“அப்பனா எனக்கு காஸ்ட்லி சாக்லெட் வாங்கி வரணும்.. டீலா? “  என்றாள் கண் சிமிட்டி சிரித்துக் கொண்டே..

“ஓ.. ஸ்யூர் டீ.. “ என்று நளன் தலையாட்ட அவளும் தன் கன்னத்தை திருப்பி அவன் பக்கம் காட்டினாள் அவன் முத்தம் இடுவதற்கு ஏதுவாக...

அவளின் செய்கையில் ஒரு மனைவிக்கு இலக்கணமான சிறு வெட்கமோ,  தயக்கமோ எதுவும் இல்லை..

பெரியவர்கள் சிறு குழந்தையிடம் முத்தம் கேட்கும் பொழுது எப்படி சிரித்துக் கொண்டே தன் கன்னத்தை காட்டுமோ அதே போன்று அவளும் சிரித்துக் கொண்டே தன் கன்னத்தை அவனிடம் காட்டிக் கொண்டு நின்றிருந்தாள்..  

அவனும் அவளை இன்னும் சீண்ட எண்ணி

“ஹீ ஹீ ஹீ கன்னத்துல எல்லாம் இல்ல..எனக்கு இங்க   கிஸ் பண்ணனும்..”  என்று அவள் உதட்டை தொட்டு காட்ட, அவளோ அவன் கையை பட்டென்று தட்டி விட்டாள்..

“டேய் மாமா.. இது பேட் டச்.. நீதான எனக்கு குட் டச் பேட் டச் பத்தி சொல்லி கொடுத்த.. இப்ப நீயே இப்படி பேட் டச் பண்ணலாமா? “ என்றாள் முறைத்தவாறு..

அதை கேட்டு மானசீகமாக மீண்டும் தலையில் அடித்து கொண்டான் நளன்...

“ஸ்ஸ் அப்பா.. இவ எல்லாம் என்னத்த காலேஜ் போய் கிழிச்சாளோ? அதுவும் அண்ணா யுனிவர்சிட்டி வேற அங்கெல்லாம் பசங்களும் பொண்ணுங்களும் ஒன்னா சுத்தறத இவ பார்த்ததே இல்லையோ.. இன்னும் வளராமலயே இருக்காளே.. இவள என்ன பண்ண?"  என்று உள்ளுக்குள் புலம்பினான் நளன்..

"ஆமா இன்னும் டோரா புஜ்ஜி,  சோட்டா பீம் பார்த்துகிட்டு இருக்கிற புள்ள கிட்ட நீ எதிர்பார்க்கிற ரொமாண்ஸ் எல்லாம் உடனே வராது பாஸ்..கொஞ்சம் கொஞ்சமாத்தான் முயற்சி பண்ணோனும்.. " என்று கண் சிமிட்டி சிரித்தது மனஸ்...

அவனும் உள்ளுக்குள் சிரித்து கொண்டே 

"ஹீ ஹீ ஹீ ஹே பொண்டாட்டி. நான் சொல்லி கொடுத்தது மத்தவங்க உன்கிட்ட அந்த மாதிரி நடந்துக்க விடக் கூடாதுனு.. ஆனா நான் யார்? உன் புருஷன் டீ.. உன்னை தொட்டு தாலி கட்டி இருக்கிறேன்... அதனால் உன்னை டச் பண்ண எனக்கு எல்லாம் உரிமையும் இருக்கு

இது ஒன்னும் தப்பில்ல... என்ன புரிஞ்சுதா? “ என்று அவள் தலையை பிடித்து செல்லமாக ஆட்டினான்...

“ஹ்ம்ம்ம் நீ சொன்னா சரிதான் மாமா... ஆனா இங்க கிஸ் பண்றதுக்கு ஸ்பெஷலா தி வோர்ல்ட் பெஸ்ட் சாக்லெட் வாங்கி தரணும்.. டீலா? “ என்றாள் மீண்டும் விரல் நீட்டி மிரட்டி சிரித்தவாறு...

“அடியே.. நான் வாங்கற சம்பளம் பூரா உனக்கு சாக்லெட் வாங்கியே அழிஞ்சு போய்டும் போல... ஹ்ம்ம்ம் கட்டின பொண்டாட்டிகிட்டயே டீல் பேசிதான் கிஸ் பண்ண வேண்டி இருக்கு..

டேய் நளா... உன் மேரேஜ் லைப் அமோகமா இருக்க போகுது... என்ஜாய்.. “ என்று தனக்குள்ளே  புலம்பியவன்

“ஹ்ம்ம் சரி டீ.. டீல்... “ என்று நீட்டிய அவள் விரலை பிடித்து கொண்டான்..

"ஹ்ம்ம் அப்பனா சரி... இந்தா கிஸ் பண்ணிக்கோ..." என்று அவள் உதட்டை சுளித்து அவன் பக்கமாக காட்ட அவனோ திகைத்து போனான்...

"அடிப்பாவி.. இப்படி போனால் போவுது இந்தா எடுத்துக்கோ என்ற மாதிரி இப்படி ஒரு ரொமாண்ஸ் ஏ இல்லாம உதட்டை நீட்டறாளே... இவள எதுல அடிக்கலாம்? “ என்று புலம்ப

"டேய் நல்லி எலும்பு...சான்ஸ் ஐ விட்டுடாத... இத பயன்படுத்திகிட்டு நச்சுனு அவ மனசுல ரொமாண்ஸ் வர்ற மாதிரி ஒரு இச் கொடுத்துடு.. அதுக்கப்புறம் உன் பொண்டாட்டி தானா உன் கிட்ட வந்திடுவா.. “

என்று மனஸ் அவசர ஆலோசனை வழங்க,  நளன் தன் முன்னே நின்றிருந்தவளை நோக்கியவன்,  அவள் இதழ் நோக்கி தாபத்துடன் குனிந்தான்..

விளையாட்டு தனமாக அவன் முன்னே நின்றிருந்தவள் விழி உயர்த்தி பார்க்க, அவன் கண்ணில் தெரிந்த ஏதோ ஒன்று அவளுக்கு வித்தியாசமாக தோன்ற, இது அவள் இது நாள் வரை பார்த்திராத அவள் மாமா பையனாக இருக்க, மிரட்சியுடன் கண்ணை இறுக்க மூடி கொண்டாள்..

அவள் மனதில் இன்னும் அவனை தன் கணவனாக எண்ணி இராததால் கணவனுக்கான அந்த செய்கை அவள் மனதில் கிளர்ச்சியை தூண்டுவதற்கு பதில் பயத்தைத்தான் கொடுத்தது..

அதனாலயே இறுக்க கண்ணை மூடி கொண்டாள்.. அவன் அவள் அருகில் நெருங்கி வருவது அவன் மூச்சு காற்றில் இருந்தே தெரிய, இப்பொழுது அவள் உடல் லேசாக நடுங்க ஆரம்பித்தது...

அவள் உடலின் நடுக்கம் அவளை தன்னோடு சேர்த்து அணைத்திருந்ததால் அவன் மேனிக்கு புரிய அதே நேரம் பயத்தில் அவன் சட்டையை இறுக்கமாக பற்றி கொண்டாள்..

அவள் உதடு மட்டும் இன்னும் துடித்தது அவன் ஏதோ செய்து விடுவானோ என்ற பயத்தில்..

அவள் முகத்தில் இருந்த அச்ச ரேகையையும்,  பயத்தையும்,  அவள் மேனியில் இருந்த நடுக்கத்தையும் கண்டு கொண்டவனுக்கு,  அவள் இதழ் அருகில் வந்திருந்தவன்,  தன்னை கட்டுபடுத்திக்   கொண்டு,  இதழை விடுத்து அவள் முன் உச்சி நெற்றியில் மெல்ல முத்தமிட்டான்...

அதில் திடுக்கிட்டு விழித்தவள்

“ஏன் டா கிஸ் பண்ணலை? “ என்றாள் தன் பயத்தை மறைத்து கொண்டு...

“உனக்கு பிடிக்காதது எதுவும் இந்த மாமா செய்ய மாட்டான் டி... எதுக்கு இப்படி பயந்து நடுங்கற? பிடிக்கலைனா பிடிக்கலைனு தைர்யமா சொல்ல வேண்டியது தான? “ என்று அவள் நுனி மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டினான்...

“தெரியல டா.. ஆனால் ஏனோ பயமா இருக்கு... “ என்றவள் அவனை இறுக்க கட்டி கொண்டாள்..

“என் பொண்டாட்டி எதுக்கு பயந்துக்கணும்..? . என்னை மீறி உனக்கு எதுவும் ஆகாது டீ.. நான் இருப்பேன் எப்பவும் உன் கூட.. எந்த சூழ்நிலையிலும் இந்த மாமாவை நினைச்சுக்கோ.. நான் எங்கிருந்தாலும் ஓடி வந்து விடுவேன்.. சரியா... “ என்று அவள் கன்னத்தை செல்லமாக கிள்ளினான்..

“ஹ்ம்ம்ம் “ என்று தலை அசைத்தவள்

“என் மேல கோபமா? “ என்றாள் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு.

“சே... சே.. இல்லடா... “

“அப்ப எனக்கு நீ சொன்ன மாதிரி தி வோர்ல்ட் பெஸ்ட் சாக்லெட் வாங்கி வருவ தான? “ என்று அவனை கட்டிக் கொண்டே,  தலையை நிமிர்த்தி,  அவன் முகம் பார்த்து பாவமாக கேட்க

“அடிங்க.. அப்பவும் உனக்கு சாக்லெட் தான் முக்கியம்... போடி. “ என்று அவளை அடிக்க வர, அவளோ அவனை பின்னுக்கு தள்ளி விட்டு அவனுக்கு பழிப்பு காட்டிவிட்டு வேகமாக அறைக்கதவை திறந்து கொண்டு வெளியில் ஓடி விட்டாள்..

நளனும் சிரித்து கொண்டே தன் சூட்கேஸ்களை எடுத்து கொண்டு வெளியில் வந்தான்..

அவன் முகத்திலும் புன்னகை பூத்து கிடக்க, சிரித்த முகமாக வெளிவந்த இருவரையும் பார்த்து பெரியவர்களுக்கு மனம் நிறைந்து போனது...

அடுத்த அரை மணி நேரத்தில் பெட்டிகளை காரில் வைத்தவன் அங்கு அமர்ந்து இருந்த கன்னியம்மாவின் காலில் விழுந்து ஆசி வாங்க, அவரும் கண் கலங்க என்ன நினைத்தாரோ இடுப்பில் சொருகி இருந்த சுருக்கு பையை திறந்து அதில் முடிந்து வைத்திருந்த அந்த ஊர் அய்யனார் திருநீற்றை எடுத்து அவனுக்கு வைத்து விட்டவர்

“மகராசனா போய்ட்டு வாய்யா... என் பேத்தியை சீக்கிரம் வந்து கூட்டிகிட்டு போ.. அவளை பத்திரமா பாத்துக்க... “ என்று தழுதழுத்தார்..

இதுவரை அவனை கண்டாலே கரிச்சு கொட்டுபவர்... இவ்வளவு தூரம் இறங்கி வந்து அவனை வழி அனுப்ப... அனைவரும் திகைத்து போய் பார்த்துக் கொண்டிருந்தனர்..

நளனும் கடைசியில் அப்பத்தாவிடம் நல்ல பேர் வாங்கி விட்ட திருப்தியில்

“கண்டிப்பா அப்பத்தா... என் பொண்டாட்டியை நான் ராணி மாதிரி வச்சு பார்த்துக்குவேன்.. நீங்க ஒன்னும் கவலை படாதிங்க... உடம்பை பார்த்துக்கங்க..நான் போய்ட்டு வர்றேன்... ”

என்று அவரை கட்டி  அணைத்து,  அவர் கன்னத்தில் முத்தம் ஒன்றை கொடுத்தவன் மனம் நிறைந்த பூரிப்புடன் காரில் ஏறி அமர்ந்தான்..

அவனை வழி அனுப்ப வந்திருந்த நண்பர்களும்,  மற்ற நெருங்கிய உறவினர்களும் அவனுக்கு வாழ்த்து சொல்லி கை அசைத்து வழி அனுப்ப, மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன்  காரை ஸ்டார்ட் பண்ணி கிளம்பி இருந்தான் நளன்..

ஏனோ வெளியில் செல்லும்பொழுது திரும்ப திரும்ப அந்த வீட்டை பார்த்து கொண்டே சென்றான்..

காரின் முன் இருக்கையில் தமயந்தியும் கண்ணம்மாவும் அமர்ந்து கொள்ள பின் இருக்கையில்  தங்கராசு, சிங்காரம் மற்றும் தங்கம் அமர்ந்து கொண்டனர்...

நளன் காரை ஓட்டி கொண்டிருக்க, முன்புறம் தமயந்தியும் கண்ணம்மாவும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நெருங்கி அமர்ந்து இருந்ததால் தமயந்தி நளனை ஒட்டி அமர்ந்து இருந்தாள்.. 

தன் அருகில் உடலோடு ஓட்டியபடி அமர்ந்து இருந்தவளின் கையை தன் கைக்குள் வைத்து கொண்டே காரை ஓட்டி கொண்டிருந்தான் நளன்..

ஏனோ சென்னை நெருங்க நெருங்க ஒரு வித படபடப்பாக இருந்தது நளனுக்கு..

அவள் கையை விட்டுவிடாமல் இறுக்கி பிடித்து கொண்டான்.. அவளோ தன் அத்தையுடன் கதை அடித்து கொண்டு அவளுடைய கல்லூரி கலாட்டாவை எல்லாம் சொல்லி சிரித்து கொண்டே வந்தாள்...

விமான நிலையத்தை அடைந்ததும் காரை பார்க்கிங்ல் நிறுத்தி விட்டு தன் பெட்டிகளை எடுத்து கொண்டு வந்தவன்...  விமான நிலையத்தின் உள்ளே உடனே போகாமல் வெளியிலயே நின்று கொண்டு தன் குடும்பத்துடன் பேசி கொண்டிருந்தான்..

ஏனோ அனைவருக்குமே அவனை அனுப்பி வைக்க மனமே இல்லை..

அதுவரை விளையாட்டுத்தனமாக சிரித்து  பேசிக்கொண்டிருந்த  தமயந்திக்கும்  நேரம் ஆக ஆக மனதை பிசைய ஆரம்பித்தது..

மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாலும் கண்கள் அவள் மாமாவை சுற்றி சுற்றி வந்தது..

அதே போல்தான் இருந்திருக்க வேண்டும் நளனுக்கும்..

அவன் கண்களும் நொடிக்கு  ஒரு தரம் அவளை தரிசித்து சென்றன..  

சற்று தள்ளி சிங்காரம் அருகில் நின்று பேசி கொண்டிருந்த நளன்,  மெதுவாக நகர்ந்து கண்ணம்மா அருகில் நின்று பேசிக் கொண்டிருந்த தமயந்தியின் அருகில் வந்து நின்று கொண்டான்..

யாரும் அறியாமல் அவளின் கையை பிடித்துக் கொண்டான்.. அவன் கை சில்லிட்டு இருந்ததை புரிந்து கொண்டவள் மெல்ல அவன் கையை அழுத்திக் கொடுத்தாள்..!  

சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க,  தமயந்தி தான் நேரம் ஆவதை சொல்லி அவனை கிளம்ப சொன்னாள்..

இன்னும் கொஞ்ச நேரம் உங்களுடன் இருக்கிறேன் தயா.. ஏற்கனவே வெப் செக்கின் பண்ணிட்டேன்...!  

அதனால் கொஞ்சம் லேட்டா போனா ஒன்னும் பிரச்சனை இல்லை.. “ என்று சொன்னவன்,  அவள் கையை விடாமல் பிடித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தான்…!  

எவ்வளவுதான் தள்ளி வைக்க முயன்றாலும்,  கடைசியில் அவன் கிளம்பும் நேரம் வந்துவிட்டது...

இதுவே லேட் அவனுக்கு.. அவன் முகம் இன்னும் தெளியாமல் ஒரு மாதிரி கலக்கத்துடனே இருப்பதை கண்டவள் அவனை இயல்பாக்க எண்ணி அவன் கிளம்பும் பொழுது 

“மாமா... நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல்ல.. நான் சொன்ன சாக்லேட் அப்புறம் நீங்க டீல் பேசிய சாக்லெட் எல்லாம் மறக்காம  வாங்கி வந்திடுங்க..”  என்று கண் சிமிட்டி  சிரித்தாள்...

அவனும் மெல்ல புன்னகைத்தவன்

“ஹ்ம்ம்ம் கண்டிப்பா பொண்டாட்டி.. பத்திரமா இரு.. நல்லா படி..எதுனாலும் போன் பண்ணு.. “

என்று   சொல்லி எல்லாரிடமும் கை அசைத்து விடை பெற்று பெட்டிகள்  இருந்த ட்ராலியை தள்ளி கொண்டு முன்னால் போக முயன்றவன் என்ன நினைத்தானோ திரும்ப ஒரு அடி எடுத்து வைத்து வந்து சொல்லி இருந்தான் அந்த வார்த்தையை...

மற்றவர்கள் அருகில் நின்றிருக்க, அவனுக்கு உயிரான அவன் அத்தை,  தயாவை பெத்தவள் பக்கத்திலயே நின்றிருக்க, அவர்களை எல்லாம் விடுத்து தன் அம்மாவின் அருகில் வந்தவன் அவரிடம் மட்டும் குறிப்பாக சொன்னான் அதை... 

ஒருவேளை பிற்காலத்தை முன்னாலயே தெரிந்து கொண்டானோ ?? 

கண்ணம்மாவின் அருகில் வந்தவன் அவர் கை பிடித்து

“மா... என் பொண்டாட்டியை பத்திரமா பாத்துக்க. உன்னை நம்பிதான் என் உயிரையே விட்டுட்டு போறேன்... கடைசி வரைக்கும் அவளை கூட இருந்து பத்திரமா பாத்துக்க.. “

என்று கண் கலங்க கூறியவன் அருகில் நின்றிருந்த தயாவிடம் திரும்பியவன் என்ன நினைத்தானோ திடீரென்று அவளை இழுத்து தன்னுள் புதைத்து கொண்டான்..

அந்த விமான நிலையத்தில் நின்றிருந்த அத்தனை பேரும் பார்த்திருந்தனர் அந்த காட்சியை...

ஆனால் அதை பற்றி அவனுக்கு கவலை இல்லை அந்த நொடியில்..

அவன் தயா பொண்ணை விட்டு பிரிந்து செல்ல முடியாத தவிப்பு மட்டுமே அந்த அணைப்பில் தெரிந்தது...

கண் கலங்க அவளை இறுக்கி அணைத்திருந்தவன்... கொஞ்சம் அவன் பதட்டம் தீர... மெல்ல அவளை விலக்கியவன் அவள் முகத்தை கையில் ஏந்தி

“நான் போறேன் பொண்டாட்டி... நீ ஜாக்கிரதையா இரு... டேக் கேர்... “ என்று மெல்ல குனிந்து,  அவன் நெற்றியில் மெல்ல இதழ் பதித்தான் கண்கள் கலங்க..

பார்த்திருந்தவர்கள் அனைவருக்குமே கண் கலங்கி போயிற்று..

தமயந்தியின் கழுத்தில் கிடந்த அந்த புது மஞ்சள் சரடு அவர்கள் புதிதாக திருமணம் ஆனவர்கள் என்று பறைசாற்ற, காமம்  இல்லாத அவனின் அணைப்பு  அவன் மனைவியை பிரிந்து செல்ல தவிக்கிறான் என்று புரிய எல்லாருமே இமைக்க மறந்து அந்த ஜோடியை பார்த்து இருந்தனர்..

தயாவுக்கும் கண்கள் கரித்து கொண்டு வர, அவன் முன்னால் அழுது வைக்க கூடாது என்று கஷ்டபட்டு தன்னை கட்டுபடுத்தி கொண்டு இருந்தாள்..

“டேய் மாமா... என்ன இது..?  சின்ன பையனாட்ட்ம் அழுவற... நான் பத்திரமா இருப்பேன் மாமா.. நீ பத்திரமா போய்ட்டு வா... நான்தான் போன்ல பேசுவேன் இல்ல.. என்னை என்னவோ நிரந்தரமா பிரிஞ்சு போற மாதிரி இல்ல இப்படி பீல் பண்ற.

சேம்.. சேம் பப்பி சேம்.. “ என்று கண்ணீருடன் சிரித்தவள்

“இப்ப அழுத பையன் சிரிப்பானாம்.. கழுத பால குடிப்பானாம்.. “ என்றவள் அவன் இடுப்பில் கிச் கிச் மூட்ட, அவனோ தன் வேதனையை உள்ளுக்குள் அழுத்தி கொண்டு அவளின் செய்கையில் மலர்ந்து சிரித்தான்...

அவள் தலையை பிடித்து செல்லமாக ஆட்டி அவள் நெற்றியில் முட்டியவன்

“பை டி பொண்டாட்டி... ஐ மிஸ் யூ... “ என்று சொல்லி கண் சிமிட்டியவன் பின் அனைவரிடமும் மீண்டும் ஒரு முறை விடை பெற்று ட்ராலியை தள்ளி கொண்டு போக, அவன் சற்று தூரம் சென்றதும்

“மாமா... ஒரு நிமிஷம்... “ என்று கத்தினாள் தமயந்தி...

அவளின் குரல் கேட்டு திடுக்கிட்டு நின்று திரும்பி பார்க்க,  வேகமாக அவனிடம் ஓடியவள்

“மாமா கொஞ்சம் குனியேன்.. “ என்று ரகசியமாக சொல்ல, அவனும் அவள் முத்தம் இடப் போகிறாள் என்று ஆவலாக குனிய,  எட்டி அவன் மீசையில் இருந்த முடியை பிடுங்கி கொண்டவள்

“ஹேப்பி ஜர்னி நல்லி எலும்பு நளன்  மாமா.. என்ஜாய்... சீக்கிரம் வந்திடுடா.. வரும் பொழுது நிறைறைறையயய சாக்லெட் மறக்காம வாங்கிட்டு வாடா.. பை...ஐ டூ மிஸ் யூ... “ என்று கண் சிமிட்டி சிரிக்க, அவனும் அவள் கன்னத்தை செல்லமாக கிள்ளி விட்டு

“பை டி பொண்டாட்டி... டேக் கேர்... “ என்று சிரித்தவாறு மனமே இல்லாமல் விமான நிலையத்தை நோக்கி சென்றான்...

ஆனாலும் அந்த நுழைவாயிலை அடையும் முன்னே பலமுறை திரும்பி திரும்பி பார்த்து கை அசைத்து கொண்டே சென்றான்...

உள்ளே சென்றதும் பேக்கேஜ் ட்ராப் பண்ணியதும் உள்ளே செல்ல முயன்றவன் மீண்டும் திரும்பி பார்க்க வெளியில் தமயந்தி கண்ணாடி திரையிட்ட சுவற்றுக்கு அருகில் நின்று கொண்டு அவனை பார்த்து கை அசைத்தாள் சிரித்தவாறு..

அவனும் அவளின் சிரித்த முகத்தை மனம் நிறைய நிறைத்து கொண்டு கை அசைத்து விடை பெற்று அடுத்த சில நொடிகளில் மறைந்து போனான்...!  

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!