தேடும் கண் பார்வை தவிக்க-39
அத்தியாயம்-39
அதுவரை தன் மாமனையே பார்த்து கொண்டு சிரித்து கொண்டிருந்தவள் அவன் தலை
மறைந்ததும் அடுத்த நொடி அருகில் நின்றிருந்த கண்ணம்மாவை கட்டி கொண்டு ஓ வென்று
வெடித்து கதறினாள் தமயந்தி..
கண்ணம்மாவோ திடுக்கிட்டு போனார்..
இதுவரை சிரிச்சுகிட்டு ஜாலியா இருந்த பொண்ணு இப்படி கதறவும் பதறியவர்
“என்னடா ஆச்சு தமா குட்டி.. எதுக்கு
இப்படி அழுவற? உன் மாமன் போனதுக்கா இம்புட்டு
கலங்கற? அவன
இன்னும் ரெண்டு நாள் இருந்துபோட்டு போயிருக்க சொல்லி இருக்கலாம் இல்ல.. “
என்று சமாதான படுத்த அவளோ இன்னும் தன்
அத்தையை கட்டி கொண்டு அழுதாள்..
அதற்குள் சற்று தள்ளி நின்றிருந்த தங்கம்
சிங்காரம் தங்கராசு எல்லாரும் ஓடி வந்து என்னடா ஆச்சு என்று பதற்றத்துடன் கேட்க
அவளோ பதில் சொல்லாமல் இன்னும் வேகமாக தேம்பினாள்..
தன் மகளின் கலங்கிய முகத்தை கண்ட சிங்காரம்
கண்கள் கலங்கி விட,
“தமா குட்டி.. நீ இப்படி அழுவறனா நான்
இப்பயே மாப்பிள்ளைய திரும்ப வர சொல்லிடறேன்.. இன்னும் ப்ளைட் கிளம்பி இருக்காது...இந்த
வேலை போனா போவட்டும்...
இத விட பெருசா சம்பாரிச்சிக்கலாம்..நீ
அழுவாத தாயி.. ” என்று அவசரமாக தன் அலைபேசியை எடுத்து நளன் எண்ணை அழுத்த உடனே தலையை
நிமிர்த்தியவள்
“வேணாம் பா... நான் அழுவல.. மாமாக்கு
போன் பண்ண வேண்டாம்.. “ என்று அவசரமாக அலைபேசியை பிடுங்க முயன்றாள்..
அதற்குள் அழைப்பு சென்றிருக்க, இமிக்ரேஷன் முடிச்சு செக்யூரிட்டி செக்கிங் ல் நின்று கொண்டிருந்தவன்
உடனே அழைப்பை எற்று விட்டான்..
“சொல்லுங்க மாமா... என்னாச்சு? “ என்றான்
பதட்டத்துடன்..
தயா எதுவும் சொல்ல வேண்டாம் என்று தந்தையை முறைக்க, அவரும்
சமாளித்து கொண்டு
“ஒன்னும் இல்ல மாப்பிள்ள.. சும்மாதான் கூப்டேன்
. ப்ளைட் ஏறிட்டியானு கேட்க.. “ என்று சமாளித்தார்..
ஆனால் நளன் கண்டு கொண்டான் எதுவோ
சரியில்லை என்று..
“மாமா.. மறைக்காம சொல்லுங்க.. என்ன ஆச்சு?” என்றான் இன்னும்
பதற்றத்துடன்..
அவர் ஏதேதோ சொல்லி சமாளிக்க
“மாமா.. சின்ன வயசுல இருந்து உங்கள
பத்தி எனக்கு தெரியும்.. என்கிட்ட ஏமாத்த முடியாது.. நானே சொல்றேன்.. என்ன என்
பொண்டாட்டி அவ மாமியாரை கட்டி புடிச்சிகிட்டு அழுவறாளா? “
என்று கேட்க நேரில் இருந்து பார்த்த
மாதிரியே அவன் சொல்ல திடுக்கிட்டு சுற்றிலும் தேடி பார்த்தார் சிங்காரம்..
“ஹா ஹா ஹா சுத்திலும் தேடாதிங்க
மாமா... நான் ஏர்போர்ட் உள்ளதான் இருக்கேன்.. போன என் பொண்டாட்டி கிட்ட கொடுங்க..
“ என்று சிரிக்க அடுத்த நொடி
“ஹ.... ஹ... ஹலோ.... “ என்று
தயக்கத்துடன் இழுத்தாள் தமயந்தி..
“ஹோய் பொண்டாட்டி... இதுதான் நீ
தைர்யமா இருக்கற லட்சணமா? என்னமோ அப்படி டயலாக் விட்ட? இப்ப எதுக்கு இப்படி கண்ண கசக்குற? “
என்றான் சிரித்தவாறு..
“நான் ஒன்னும் கண்ண கசக்குல.. சென்னை
வெய்யிலுக்கு கண்ணு வேர்க்குது... “ என்றாள் சிணுங்களுடன்
“ஹா ஹா ஹா நம்பிட்டேன் டி பொண்டாட்டி..
இந்த நைட்ல உனக்கு வேர்க்குதாக்கும்... சரி சரி அழாம சமத்தா இரு.. நீ அழுதால்
எல்லாருக்கும் கஷ்டமா இருக்கும் இல்ல...
இல்லனா உன்னை பிரிஞ்சு என்னால இருக்க
முடியல.. இப்படியே வந்திடு மாமா னு சொல்லு. நான் இப்படியே ப்ளைட் ஐ கேன்சல்
பண்ணிட்டு வந்திடறேன்.. என்ன வரட்டுமா? “ என்றான்
குறும்பாக..
அவன் அப்படி கேட்டதுக்கு அப்பயே
திரும்ப அவனை வர சொல்லி இருந்திருக்கலாமோ?
என்று பல முறை எண்ணி எண்ணி வேதனை பட்டுவிட்டாள் அதற்கு பிறகு வந்த நாட்களில்..
அவன் கிண்டலாக பேச ஆரம்பிக்க, அதற்குள் ஓரளவுக்கு சமாளித்து கொண்டவள்
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. நீ
லண்டன் போகாம இப்படியே திரும்பி வந்திட்டா அப்புறம் எனக்கு பாரின் சாக்லெட் யார்
வாங்கி வருவா.. நீ போய்ட்டு சீக்கிரம் வந்திடுடா மாமா... “ என்று மூக்கை
உரிஞ்சியவாறு கன்னம் குழிய சிரித்தாள்..
“ஹ்ம்ம் தட்ஸ் குட்.. இதுதான் என்
பொண்டாட்டி.. இப்படியே எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கணும்... “ என்று சமாதானம்
செய்தவன் அதற்கு பிறகு விமானத்தின் உள்ளே செல்லும் வரைக்குமே அவளிடம் பேசி கொண்டிருந்தான்..
விமானத்தின் உள்ளே செல்லும் பொழுது
மீண்டும் அனைவரையும் அழைத்து ஒரு முறை சொல்லி விட்டு விடை பெற்று சென்றான்..
சிறிது நேரம் அங்கயே இருந்தவர்கள்
விமானம் மேல பறந்து சென்றதும் அங்கிருந்து கிளம்பினர்..
இந்த முறை தங்கராசு காரை ஓட்ட, தமயந்தியை அவள்
ஹாஸ்டலில் விட்டு விட்டு அவளுக்கு தைர்யம் சொல்லி விட்டு கார் பொள்ளாச்சியை நோக்கி
நகர்ந்தது..
ஆறு மணி நேரத்துக்கு பிறகு கார்
கோயம்புத்தூரை அடைய இருக்க, காரில் இருந்த அனைவருமே உறங்கி இருக்க
தங்கராசு மட்டும் காரை ஓட்டி கொண்டிருந்தார்..
அப்பொழுது அவர் அலைபேசி ஒலிக்க, காரை ஓரமாக நிறுத்திவிட்டு அழைப்பை ஏற்று பேசியவர் அடுத்த நொடி
நளா..... என்று கத்தினார்...
அவர் கத்தலில் உறக்கத்தில் இருந்தவர்கள்
எல்லாம் விழித்து கொண்டு என்னவென்று பதற்றத்துடன் கேட்க,
அவரோ அதிர்ச்சியில் வாய் பேச முடியாமல் அலைபேசியை
ஜாடை காட்டினார்...
நளன் நண்பன் ஒருத்தன் தான்
அழைத்திருந்தான்..
சிங்காரம் அவசரமாக அலைபேசியை வாங்கி பேச
அதில் சொன்ன செய்தியை கேட்டு தலையில் இடி விழுந்ததை போல அதிர்ந்து போனார்..
அவரை கண்டு பெண்கள் இருவரும் கலங்கி
போக என்ன ஆச்சு என்று விடாமல் கேட்க அவரும் வாய் பேச முடியாமல் அலைபேசியை
அவர்களிடம் கொடுக்க அதில் சொன்ன செய்திய கேட்டு அவர்களும் கதற ஆரம்பித்தனர்..
நளன் சென்ற விமானம் பறக்க ஆரம்பித்த
இரண்டு மணி நேரத்திலயே என்ஜினில் கோளாறாகி கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி
விட்டது என்று செய்தியில் வந்ததை கண்டு நளன் நண்பன் தங்கராசுவை அழைத்திருந்தான்..
இன்னும் விமானத்தை கண்டு பிடிக்க
முடியாமல் தேடி வருகின்றனர். விமானத்தில் இருந்தவர்களை பற்றி இன்னும் எந்த தகவலும்
கிடைக்க வில்லை என்று தகவல் சொல்ல, அனைவரும் பேச்சிழந்து அதிர்ந்து போயினர்...
ஆறு மணி நேரத்துக்கு முன்னால்
தங்களுடன் பேசி சிரித்து கொண்டிருந்த ஒருத்தன் இப்பொழுது இந்த உலகில் இல்லை என்று
அவர்களால் நம்ப முடியவில்லை...
அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை.. யாரை பார்ப்பது எப்படி விவரம்
கேட்பது என்று ஒன்றும் புரியாமல் முழித்தனர்..சிங்காரம் அந்த நண்பனையே அழைத்து விவரம்
கேட்க, அவனுக்கும் சரியாக தெரியவில்லை..
அப்பொழுது தான் அனைவருக்கும் தமயந்தியின் நினைவு வந்தது..
“ஐயோ.. இந்த செய்தியை என்ற மவ கேட்டா
தாங்க மாட்டாளே..! இதுக்கா நான் இவ்வளவு
ஆசை ஆசையா கண்ணாலத்தை பண்ணி வச்சேன்.. என்ற மவள இப்படி தவிக்க விட்டுபோட்டு
போய்ட்டானே என்ற மருமவன்.. “ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டாள் தங்கம்...
கண்ணம்மாவோ சிலை போல அமர்ந்து இருக்க, அடுத்து என்ன செய்வது என்று அவர்களுக்கு புரியாமல் மீண்டும் சென்னைக்கே
போய்டலாம்.. தமாவை போய் முதலில் பார்க்கவேண்டும் என்று தங்க அழுவ, தங்கராசு மனசை கொஞ்சம் திடபடுத்தி கொண்டு காரை மீண்டும் சென்னைக்கு
திருப்பினார்...
அப்பொழுது தான் சென்னையில் இருந்து அவ்வளவு
தூரம் பயணம் செய்தவர் அடுத்து இப்படி ஒரு இடி போல செய்தி வந்திருக்க, கொஞ்சம் தாமதித்து காரை ஓட்டாமல் அதே வேகத்தில் காரை சென்னைக்கு
விரட்டினார்..
சற்று நேரத்தில் ஹைவேயில் சென்று
கொண்டிருந்த கார் திடீரென்று தங்கராசுக்கு கண்ணை இருட்டி கொண்டு வர, கார் கன்ட்ரோலை விட்டு விட, ஹைவேயில்
இருந்த டிவைடர் ஐ தாண்டி கார் மறுபக்கம் சென்று விட, எதிரில் வேகமாக
வந்து கொண்டிருந்த சரக்கு லாரியில் கார் நேருக்கு நேர் மோதி அந்த லாரியின் உள்ளேயே
சென்று விட்டது கார்...
அந்த கார் திரும்பிய வேகத்தில் சன்னல்
ஓரம் அமர்ந்து இருந்த கண்ணம்மா கார் கதவு தாழ் திறந்து கொள்ள அவர் மட்டும் தூக்கி வெளியில்
விசிற பட்டிருந்தார்..
மற்றவர்கள் காரிலயே நின்றுவிட, லாரியின் அடியில் மாட்டிய அந்த காரில் இருந்து வெறும் அவர்கள்
உடலின் பாகங்களை வெட்டிதான் எடுக்க முடிந்தது.......
அந்த விபத்தில் நான் மட்டும் எப்படியோ பொழச்சுகிட்டேன் தம்பி..
கண்ணாலம் கட்டி என்ற மருமவ ஒரு நாளும்
அவ புருஷன் கூட சேர்ந்து வாழல.. நாலு நாள் ல புருசனையும் பறி கொடுத்து
பெத்தவங்களையும் தொலச்சிட்டா...
எங்களுக்கு கொள்ளி வைக்கனு பெத்த என்ற
மவனுக்கு பதிலா என்ற மருமவ தான் என் வூட்டுகாரருக்கும் அவள பெத்தவங்களுக்கும்
கொள்ளி வச்சா.. ஒரே நாள் ல எங்க மொத்த குடும்பமும் தொலஞ்சு போச்சு...
என்னைய மட்டும் ஏன் விட்டு வச்சானு
தெரியல.. என்ற மவன் போறதுக்கு முன்னால் என்கிட்டதான் சொல்லிட்டு போனான் அவன் பொண்டாட்டிய
பத்திரமா பாத்துக்க சொல்லி...
அதுக்காக என்னைய மட்டும் இந்த உசுர வச்சுகிட்டு என்ற மருமவளுக்கு
துணையா இருக்க சொல்லி விட்டுபோட்டு போய்ட்டான் என்ற மவராசன்.. “ என்று சொல்லி முடித்தவர் முகத்தில் கையை பொத்திகொண்டு கதறி அழுதார்
கண்ணம்மா...
அதை கண்டு துடித்து போன ரிஷி அடுத்த
நொடி வேகமாக எழுந்து அவர் அருகில் சோபாவில் நெருங்கி அமர்ந்தவன் அவரை கட்டி கொண்டு
“மா...மா.... ப்ளீஸ் அழுவாத..... “ என்று கண் கலங்கினான்...
அதை கேட்டு அவன் குரலை கேட்டு
விலுக்கென்று தலையை நிமிர்த்தினார் கண்ணம்மா...
“ந... நளா................................
“ என்று சுற்றிலும் தேடினார் அவசரமாக.
“என்னாச்சு மா?
யாரை தேடற.? “ என்றான் ரிஷி பதட்டத்துடன்...
“ந... நள நளன்... என்ற மவன்..... அவன்
குரல் கேட்டதே இப்போ... “ என்று அவசரமாக தேட
“மா... ப்ளீஸ் அழுவாத.... “ என்று ரிஷி
அவரை இறுக்கி அணைத்து கொள்ள இப்பொழுது அதே குரலை கேட்டு அதே குரல் ரிஷியிடம்
இருந்து வருவதை கண்டவர் உடனே அவன் முகத்தை கையில் ஏந்தி
“நளா... வந்திட்டியா? இந்த அம்மாவை பார்க்க வந்திட்டியா?... நீ
இன்னும் உசுரோடதான இருக்க.. உனக்கு ஒன்னும் ஆகலதான.... சொல்லுப்பா... நீ என்ற மவன்
நளன்தான... “
என்று ரிஷியின் கன்னம் வருடி தவிப்புடன் அவன் முகத்தை
ஆராய்ந்தார் கண்ணம்மா ...
அவனோ எதுவும் பேசாமல் சிறிது நேரம்
அமைதியாக அவரை கட்டி கொண்டு அவர் முதுகை ஆதரவுடன் தடவி கொடுத்தான்..
அவரோ அவன் மார்பில் புதைந்து கொண்டு
இன்னும் தேம்ப ஆரம்பிக்க அவரை தன் மார்போடு அணைத்து கொண்டு மெல்ல வருடி கொடுக்க
கொஞ்சம் கொஞ்சமாக கண்ணம்மாவின் விசும்பல் நின்றது...
பின் சுதாரித்து கொண்டு அவனிடமிருந்து
விலகியவர் முந்தானையால் கண்ணை துடைத்து கொண்டவர் நிதானத்திற்கு வந்திருக்க
“மன்னிச்சுக்கங்க தம்பி.. உங்க குரல
கேட்டதும் என்ற மவன் மாதிரியே இருந்தது.. ஒரு நிமிசம் அவனே தான் வந்திட்டானோ னு
நினைச்சுபுட்டேன்.. “ என்று வேதனையில் முகத்தை சுருக்கினார்...
“ஹ்ம்ம்ம் பரவாயில்ல மா... “ என்றான்
ரிஷியும் தன் கண்களை துடைத்து கொண்டே.. அதை கேட்டு மீண்டும் திடுக்கிட்டவர்
“இப்ப என்னப்பா சொன்ன? “ என்றார் திகைப்புடன்.. அவனும் யோசித்து
“உங்கள அம்மா னு கூப்பிட்டேன்.. நான் உங்களை
அம்மானு கூப்பிடலாம் இல்ல.. “ என்றான் ஏக்கத்துடன் அவரை பார்த்தவாறு...
“ஹ்ம்ம்ம் தாராளமா கூப்பிடுப்பா...
ஏன்ப்பா உனக்கு அம்மா இல்லையா? “ என்றார் அவனை பரிவுடன்
பார்த்தவாறு...
“ப்ச்... இல்ல மா... உங்கள மாதிரியே
என் மேல பாசமா உசிரையே வச்சிருந்தாங்க என் அப்பாவும் அம்மாவும்.. அதுவும்
அம்மாதான் எனக்கு எல்லாமும்... ஆனால்..... ஆனால்.... “ என்று இழுத்தவன் ஏதோ நினைவு
வர திடுக்கிட்டவன் கண்ணம்மாவை அவசரமாக பார்த்து
“மா... உங்க பையன் ப்ளைட் ஆக்சிடெண்ட்
ஆனது எப்ப? எந்த தேதி? “
என்றான் பரபரப்பாக...
கண்ணம்மா அந்த நாளை வேதனையுடன் சொல்ல
“ஓ.. மை.. காட்.... “ என்று கத்தினான் ரிஷி..
அதை கேட்டு அதுவரை அமைதியாக அமர்ந்து
இருந்த விவேக் எழுந்து வேகமாக வந்து ரிஷியின் அருகில் நின்றவன்
“என்னாச்சு பாஸ்? “ என்றான்
பதட்டமாக...
“வி... விவா..... என் பேரண்ட்ஸ் போன
ப்ளைட் ம் அதேதான்... “ என்றான் வேதனையுடன்..
“என்னப்பா சொல்ற? “ என்றார் கண்ணம்மா அதிர்ச்சியாக..
“என்ன பாஸ் சொல்றீங்க? “ என்று விவேக் ம் அதிர்ச்சியுடன் கேட்க
“யெஸ்... விவா...என் அப்பா அம்மாவுக்கு
அடுத்த நாள் முப்பதாவது வெட்டிங் அனிவர்சரி.. அவங்க வெட்டிங் அனிவர்சரி யை லண்டன்
வீட்ல செலபரேட் பண்ண சொல்லி நான்தான் அவங்களை லண்டன் அனுப்பி வைத்தேன்.. நான்
அடுத்த நாள் செல்வதாக இருந்தது..
எங்க அம்மாவுக்கும் என்னை தனியா விட்டு
செல்ல மனமே இல்லை.. இங்கயே இருந்துடலாம்.. இங்கயே கொண்டாடலாம்னு எவ்வளவோ மறுத்தாங்க..
நான் தான் முட்டாள்தனமா அவங்க பேச்சை கேட்காம அவங்களை கட்டாயபடுத்தி அந்த ப்ளைட்ல
அனுப்பி வைத்தேன்...
ஆனால் அது மேல பறந்து இரண்டு மணி நேரத்திலயே ஆக்சிடென்ட் ஆய்டுச்சு..
அதில் போனவங்களை பத்தி இதுவரைக்குமே எந்த தகவலும் இல்லை..
நானும் பெரிய பெரிய ஆளுங்களை எல்லாம் புடிச்சு
தேடி பார்த்துட்டேன்..
ப்ச்... அவங்க பாடியை கூட கண்டு
பிடிக்க முடியல...அதுல ரொம்பவுமே இடிஞ்சு போய்ட்டேன்.. அதுக்கு பிறகு நான் லண்டன்
போகவே இல்லை.. லண்டன் னாவே எனக்கு என் அம்மா அப்பா மறைவுதான் நினைவு வரும்..
கிட்டதட்ட இரண்டு வருடம் கழித்து அன்று
தான் அவசர வேலையா நான் லண்டன் போக வேண்டி இருந்தது..அப்பதான் தயாவை
பார்த்தேன்.......... “ என்றான் வேதனையுடன்..
அதை கேட்டு அதிசயித்த விவேக்
“வாட் எ கோஇன்சிடென்ட் பாஸ்...இரண்டு
பேர் இழப்புமே ரொம்ப பெரிது.. அதுவும் தயா சிஸ்டர் ரொம்ப பாவம்... அவங்களுக்கு
இப்படி ஒரு நிலைமை வந்திருக்க வேண்டாம்.. “ என்று பரிதாப பட்டான் விவேக்...
“ஹ்ம்ம்ம் ஆமா தம்பி... என்ற மவனுக்கும்
அன்னிக்கு லண்டன் போக மனசே வரலை...என்ற மருமவளை
திரும்பி திரும்பி பார்த்து கொண்டேதான் ஏர்போர்ட் உள்ள போனான்...
பேசாம லண்டனுக்கு போக வேண்டாம் னு
திரும்ப வர சொல்லி இருந்திருக்கலாம்...இப்படி ஆகும்னு தெரியாம போய்டுச்சே.... ”
என்று பெருமூச்சு விட்டார்...
அதை கேட்டதும் ரிஷிக்கு எதுவோ ஸ்ட்ரைக்
ஆக, அவசரமாக தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த தன்
வாலட் ஐ எடுத்தவன் அதில் இருந்த ஒரு போட்டோவை கண்ணம்மாவிடம் எடுத்து காட்டி
“மா... இது ? “
என்று கேள்வியுடன் பார்த்தான்..
அதை வாங்கி பார்த்த கண்ணம்மா கண்கள்
விரிய,
“இது.. என்ற மருமவ தமாதான் தம்பி.. அவ ஆளான அப்ப சடங்கு
செய்தப்ப எடுத்த போட்டோ.. இது எப்படி உங்க கிட்ட ? “ என்றார்
படபடப்புடன்..
“ஓ.... அப்ப நான் உங்க பையன
பாத்திருக்கேன் மா.... “ என்றான் வேதனையுடன்...
அதை கேட்டு அதிர்ந்த கண்ணம்மா
“என்ன தம்பி சொல்றிங்க? என்ற மவனை தெரியுமா? எப்படி ?
எங்க பாத்திங்க? “ என்றார் ஆர்வத்துடன்...
“அவங்க லண்டன் போன அன்னைக்கு என் அப்பா
அம்மாவை சென்ட் ஆப் பண்றதுக்காக நான் ஏர்போர்ட் வந்திருந்தேன் மா..
அவங்களை உள்ள அனுப்பி வச்சுட்டு வெளில
வரும் பொழுது ஒருத்தர் பின்னால் திரும்பி திரும்பி பார்த்து கொண்டே ட்ராலியை தள்ளி
கொண்டு வர, நான் ஒதுங்க ஒதுங்க என் மேல் இடித்து விட்டார்..
..
இருவரும் மோதி கொண்டதில் அவர் கையில் வைத்திருந்த
வாலட் நழுவி கீழ விழுந்தது... அதில் இருந்த திங்க்ஸ் எல்லாம் வெளில வந்து விழுந்தது...
“ஓ.. சாரி ப்ரோ... ரியலி சாரி..கொஞ்சம் அர்ஜென்ட் ஆ
உள்ள போகவேண்டி இருந்ததால் உங்களை பார்க்கல... ரியலி சாரி.. “ என்று கண்ணால் கெஞ்சி என் கையை பிடித்து குலுக்கினார்..
அவர் இடித்ததில் முதலில் எனக்கு கோபம்
வந்தது.. ஆனால் அவர் முகத்தில் தெரிந்த ஏதோ ஒன்று என்னை அப்படியே கட்டி போட்டது..
அவர் கண்களும் கலங்கி இருந்ததை போல, என்னை இடித்து விட்டதில் உண்மையான வருத்தம் அதையும் தாண்டி ஏதோ
சம்திங்...
கூடவே என்னை ப்ரோ என்று அழைத்து நட்பாக
புன்னகைக்க, கொஞ்சம் திகைத்து போய் அப்படியே நின்று
கொண்டிருந்தேன்..
அவரும் கீழ விழுந்த பொருட்களை எல்லாம்
எடுத்து கொண்டு மீண்டும் ஒரு முறை எனக்கு சாரி சொல்லி விட்டு ட்ராலியை தள்ளி
கொண்டு சென்றார்..
ஆனாலும் திரும்பி திரும்பி பார்த்து
யாருக்கோ கை அசைத்து கொண்டேதான் சென்றார்.. நான் அவரையே பார்த்து கொண்டு நின்று
விட்டேன்..
அவர் உள்ளே சென்றதும் நான் காரை நோக்கி
போக அடி எடுத்து வைக்க அப்பொழுதுதான் இந்த போட்டோ கீழ விழுந்திருந்தது..
அது அவர் வாலட்டில் இருந்து வந்து
விழுந்தது தான் என நன்றாக தெரிந்தது..
அதை எடுத்து பார்த்து விட்டு மீண்டும்
எப்பயவது பார்த்தால் அவரிடம் கொடுத்து விடலாம் என்று என் வாலட்டில் வைத்து
விட்டேன்..
அதற்கு பிறகு அதை பற்றி மறந்தே
போனேன்.. இப்ப நீங்க சொல்லவும் தான் ஞாபகம் வருது...
சச் அ நைஸ் கை... ஓ.. அப்ப அவர்
கண்கலங்கி சென்றது தயாவை பிரிய முடியாமல் தானா...?? .
“ என்றான் வேதனையுடன்...
“ஆமாம் தம்பி....... “ என்றார்
கண்ணம்மாவும் வேதனையுடன்..
“தமா பொண்ணு மேல உசுரையே
வச்சிருந்தான்..சின்ன வயசுல இருந்தே அவளை கட்டிகிடணும் னு ரொம்ப ஆசைப்பட்டான்..
என்ற மறுமவ அப்பத்தா வாயை
அடைக்கிறதுக்காகவே பெரிய பெரிய படிப்பு எல்லாம் படிச்சு வெளிநாட்டுக்கு வேலைக்கு
போனான்..ஆனால் அவன் ஆசை பட்ட மாதிரி தாலி மட்டும்தான் கட்ட முடிந்தது... அவளோட
கடைசி வரைக்கும் வாழ முடியாம போய்டுச்சு..
இப்ப என்ற மருமவ பட்ட மரமா நிக்கறா... அவன் பாட்டுக்கு அவள தவிக்க
விட்டுபோட்டு போய்ட்டான்... ஆனால் எத்தன நாளைக்கு என்ற மருமவளை இப்படி நான் பார்க்க முடியும்...
அவளுக்குனு ஒரு வாழ்க்கை வேணாமா? எனக்கும் இத்தன நாளா இது தோணவே இல்ல தம்பி... நீங்க வந்து போன பொறவுதான்
தோணுச்சு
நல்ல வேளையா இப்பயாவது என் புத்தில
உறைச்சதே...
தம்பி.. கேட்கறேன் னு தப்பா எடுத்துக்கிடாதிங்க..
உங்களுக்கு தமா வை புடிச்சிருக்கா? " என்றார் தயக்கத்துடன் மீண்டும்
உறுதி படுத்திக்க வேண்டி ...
அதை கேட்டு ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து
விட்டு கொண்ட ரிஷி
“புடிச்சிருக்கா இல்ல மா... அவ என்
உயிர் மா. அவளை முதன் முதலா பார்த்த உடனேயே எனக்குள் வந்துவிட்டாள்... அவளை காணாம
நான் இத்தனை நாளா தவிச்ச தவிப்பு எனக்குத்தான் தெரியும்.. நரக வேதனை அது... "
என்றான் முகம் இறுக...
அதை கேட்டு மகிழ்ந்து போன கண்ணம்மா
"அப்பனா தமா பொண்ணை கல்யாணம்
பண்ணிக்கறீங்களா? அவளை ஏத்துக்குவிங்களா? " என்றார் எதிர்பார்ப்புடன்..
ரிஷியோ சற்று நேரம் யோசித்தவன்
"கண்டிப்பா மா... தயா இதுக்கு
சம்மதிச்சா அவளை நான் மேரேஜ் பண்ணிக்கறேன்.. ஆனால் அவ இதுக்கு மனதார சம்மதிக்கணும்..
அவளை எதுவும் கட்டாயபடுத்த கூடாது.. " என்று நிபந்தனை இட்டான்...
"ஹ்ம்ம்ம் அவ மனசை மாத்தறது
கொஞ்சம் இல்ல ரொம்பவுமே கஷ்டம்தான் தம்பி... மாத்த பாக்கறேன்..." என்றார்
பெருமூச்சுடன்...
"மா... அப்புறம் ஒரு சின்ன
ரிக்வெஸ்ட்...ஐ மீன் சின்ன வேண்டுதல்... " என்றான் ரிஷி
“சொல்லுப்பா... " என்றார்
கண்ணம்மாவும் தயக்கமின்றி...
“என்னை ஒரே ஒரு தரம் ரிஷி கண்ணானு
கூப்பிடுங்களேன்..என் அம்மா எப்பவும் என்னை அப்படித்தான் கூப்பிடுவாங்க.. உங்களை
பார்த்தால் அப்படியே என் அம்மா ஞாபகம் வருது..
அவங்களை நான் ரொம்பவும் மிஸ்
பண்றேன்... ப்ளீஸ் ஒரே ஒரு தரம் ரிஷி கண்ணானு கூப்பிடுங்களேன்.. “ என்றான் ரிஷி தழுதழுத்தவாறு..
அவன் கண்ணோரம் கரித்து விழி நீர் கீழ
விழ தயாராக இருக்க, அதில் நெகிழ்ந்து போன கண்ணம்மா
“ரி... ரிஷி... ரிஷி கண்ணா... என்னப்பா
இது? சின்ன பையனாட்டம் அழுவலாமா? ராஜா மாதிரி கம்பீரமா இருக்க வேணாமா? "
என்றார் அவன் முன்னுச்சி முடியை கழைத்து செல்லமாக அதட்டியவாறு..
அதை கண்டு திகைத்து திடுக்கிட்டு போனான்
ரிஷி..
அதே அவன் அன்னையின் ஸ்பரிசம் அவர்
செய்யும் அதே மேனரிஷம்...அவர் சொல்லும் அதே வார்த்தைகள்.
விலுக்கென்று நிமிர்ந்து பார்க்க
அவனுக்கு அவன் அன்னை கஸ்தூரியை போலவே தெரிந்தார் கண்ணம்மா...
அம்மா.... என் அம்மா சாகலை.. என்னை
விட்டு போகலை.. என்னை பார்க்க இதோ வந்துட்டாங்க... இதோ இங்க இருக்காங்க என் அம்மா..
" என்று கதறியவன் கண்ணம்மாவை இறுக்க கட்டி கொண்டான் ரிஷி..
அதுவரை அவர்களை வேடிக்கை பார்த்து
கொண்டிருந்த விவேக் ன் கண்களும் கலங்கி இருந்தன...
ரிஷியின் ஏக்கத்தை கண்டு சிலிர்த்து
போனான்.. அவனும் சிறு வயதில் பெற்றோர்களை இழந்தவன் தான்..அந்த வலி எப்படி இருக்கும்
என்று அவனுக்கும் தெரியும்..
அதனால் ரிஷியின் வலி புரிந்ததால் அவனுக்கு
எப்படியாவது நல்லது நடக்கணும்.. அவன் பெற்றோர்கள் தான் அவனுக்கு கிடைக்காமல் போய்
விட்டனர்...
அட்லீஸ்ட் அவன் விரும்பியவளாவது
அவனுக்கு கிடைக்க வேண்டும்.. என்று
எண்ணியவன் அவசரமாக அந்த கணேசனிடம் ஒரு அப்ளிகேசனை போட்டான் விவேக்...
"அப்பா கணேசா... எப்படியாவது இந்த
நெட்டை ஓட காதலை சேர்த்து வச்சுடு.. உன் தம்பி முருகனுக்கு காதல் கை கூட உதவி
செய்ததை போல இந்த நெட்டைக்கும் உதவி செய்து எப்படியாவது அவன் காதலை சேர்த்து வச்சுடு..
என் கேஸ் ம் சுபமா முடிஞ்சிடும். இந்த
நெட்டைக்கும் மனம் நிறைந்து போய்டும்.. ப்ளீஸ் கணேஷ்... " என்று கெஞ்ச அந்த
கணேசனோ நமட்டு சிரிப்பை சிரித்து கொண்டான்....
பிள்ளையை தொலைத்து விட்டு தேடி அலைந்த
ஒரு தாய்க்கும், தாயை தொலைத்து விட்டு தேடி அலைந்த மற்றொரு
பிள்ளைக்கும் இடையில் ஒரு பிணைப்பை, பந்தத்தை, புது உறவை உருவாக்கி தன் ஆட்டத்தின் க்ளைமேக்ஸ்
பகுதியை வெற்றிகரமாக ஆரம்பித்து வைத்தான் அந்த தும்பிக்கையோன்......!
Comments
Post a Comment