தேடும் கண் பார்வை தவிக்க-45
அத்தியாயம்-45
பொள்ளாச்சி
முருகன் கோவில்:
தனக்காக
காத்திருக்கும் தன் காதலிகளுக்கு தரிசனம் கொடுக்க ஆவலுடன் படுக்கையில் இருந்து
எழுந்து வேக நடையுடன் அந்த ஆதவன் நடக்க ஆரம்பித்து இருந்த அதிகாலை பொழுது அது..
பொள்ளாச்சி முருகன் கோவிலில் சந்நிதானத்திற்கு முன்னால் இருந்த
மண்டபத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது அக்னி..
அதன் பக்கவாட்டில் அமர்ந்து இருந்த
ஐயர் திருமணத்திற்கான மந்திரத்தை சொல்லி கொண்டிருந்தார்.. அந்த அக்னியை
பார்த்தவண்ணம் அமர்ந்து இருந்த மணமக்கள் பயபக்தியுடன் ஐயர் சொல்லும் மந்திரத்தை
திரும்ப சொல்லி கொண்டிருந்தனர்..
அவர் செய்ய சொல்லி சைகை செய்த சில முறைகளை அவர்களும் செய்து
கொண்டிருந்தனர்...
அதுவரை தலை கவிழ்ந்து மணப்பெண் கோலத்தில் அமர்ந்து இருந்த தமயந்தி
மெல்ல விழி நிமிர்த்தி ஓரக்கண்ணால் தன் அருகில் நெருங்கி அமர்ந்திருந்தவனை காண அவள்
உள்ளே மகிழ்ச்சி ஊற்றெடுத்தது..
மயில் கழுத்து கலரில் அடர்ந்த ஜரிகை வைத்த பட்டு புடவையிலும் மெலிதான
அலங்காரத்திலும் தேவதையாக ஜொலித்தாள்...
அவளுக்கு இணையாக அருகில் அமர்ந்து இருந்தவனும் பட்டு வேஷ்டி சட்டையில்
கம்பீரமாக அமர்ந்து இருக்க, மீண்டும் ஒரு முறை பார்க்க சொல்லி தவித்த அவள் கண்களை
அடக்க முடியாமல் பார்வை மீண்டும் அவள் அருகில் அமர்ந்து இருந்தவனை தஞ்சம் அடைந்தது..
அப்பொழுது இவள் பார்ப்பாள் என்று தெரிந்தே இவள் பார்வைக்காக தவம்
இருந்தவன் இவளின் ஓரப்பார்வை தன்னை நோக்கி வருவதை உணர்ந்தவன் அவள் பார்வையை நேரடியாக
சந்தித்தவன் உதடுகள் புன்னகையில் விரிய, அடுத்த நொடி குறும்பாக கண் சிமிட்டினான்..
அவனின் குறும்பான மந்தகாச புன்னகையில் பெண்ணவளுக்கு வெட்கம் வந்து
அப்பி கொள்ள, கன்னங்கள் செவ்வானமாக சிவந்து போக
“சீ.. போடா... மாமா...” என்று பார்வையால் அவனை செல்லமாக மிரட்ட,
மலர்ந்து சிரித்தான் அவளின் மாமன் மகன்..
அவளுக்காகவே சிறு வயதில் இருந்து தவம் இருந்து அவளை கை பிடிப்பது
ஒன்றே தன் வாழ்க்கையின் லட்சியமாக கொண்டு இதோ அவளை கரம் பிடிக்க அவள் அருகில்
நெருங்கி அமர்ந்து அவளை விழுங்கி விடுபவன் போல இமைக்க மறந்து ரசித்து
கொண்டிருக்கிறான்.. அவள் மாமன்....
நளன்...
அவன் கண்களில் அத்தனை காதல் பொங்கி பெருகுவது அவன் சொல்லாமலயே
பெண்ணவளுக்கு புரிகிறது... அவனின் காதல் ததும்பும் முகத்திலும் தன் மனம்
விரும்பியவளையே கை பிடிக்க போகும் பூரிப்பிலும் இன்னும் அவன் முகம் விகாசிக்க,
அதை திகட்ட திகட்ட பார்த்து ரசித்தாள் பெண்ணவளும்...
கிட்ட தட்ட ஐயர் எல்லா மந்திரங்களும் சொல்லி முடித்திருக்க,
மாங்கல்யத்தை எல்லாரிடமும் ஆசி வாங்கு கொண்டு வந்து அந்த ஐயரிடம் கொடுத்து இருக்க,
மணமக்கள் இருவரும் அதை தொட்டு வணங்கி அதுக்கு பூஜை செய்து பின் ஐயர் அதை
அங்கு அமர்ந்திருந்தவனிடம் கொடுக்க, அதற்காகவே காத்திருந்தவனும் மகிழ்ச்சியோடு வாங்கி
கொண்டு தன்னவளை பார்க்க, அவளோ வெட்கத்தில் முகம் சிவந்து
போனாள்..
மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் பூரிப்புடன் அருகில் இருந்தவனின்
தாலிக்காக தன் கழுத்தை நீட்ட அவள் கண்ணுக்குள் பார்த்து அவளின் சம்மதத்திற்காக அவன்
காத்திருக்க,
அவளோ மெல்ல விழி நிமிர்த்தி மீண்டும் ஒரு முறை தன் மாமனின் காதலை,
காதல் கண்களை, காதல்+ பெருமை ததும்பும்
முகத்தினை… அந்த முகத்தினில் பூத்திருக்கும்
மந்தகாச புன்னகையை கண்களில் நிரப்பி கொண்டவள்…
வெட்கத்துடன் இமை தாழ்த்தி சம்மதம் சொல்ல,
அவனும் அடுத்த நொடி மனம் கொள்ளா பூரிப்புடன் அந்த பொன் தாலி கயிற்றை அவளின் சங்கு
கழுத்தில் அணிவித்தான்..
சுற்றி இருந்தவர்கள் எல்லாரும் மனம் நிறைந்து அட்சதையை தூவி
இருவரையும் ஆசிர்வதிக்க, இருவர் உள்ளமும் நிறைவாய் நிறைந்து இருந்தது..
அதற்கு பிறகு வந்த சடங்குகள் ஒவ்வொன்றிலும் தன் மாமனின் காதலை
உணர்ந்தாள் தமயந்தி..
இதுவரை அவளிடம் சொல்லியிராத காதல் எல்லாத்தையும் இந்த சில நிமிடங்களில்
கொட்டிவிட துடித்தவனை போல, அவனின் ஒவ்வொரு
அசைவிலும் ஒவ்வொரு நொடியிலும் தன் காதலை உணர்த்தி கொண்டிருந்தான்..
மென்மையாக அவள் பாதம் பற்றி அதில் மெட்டியை அணிவித்தவன் யாரும்
அறியாமல் அவள் பாதத்தை மெல்ல அழுத்தி கொடுக்க, அதில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்
தோன்றின பெண்ணவளுக்கு..
அவளும் பூரித்து அவனுடன் இணைந்து மற்ற சடங்குகளில் அவளை நொடிக்கொரு
தரம் ரசிக்கும் தன்னவனை ரசித்தவாறு மனம் நிறைந்த பூரிப்புடன் ஈடுபட்டாள்..
எல்லா சடங்குகளும் முடிந்திருக்க, அடுத்து பெரியவர்களின் காலில்
விழுந்து ஆசிர்வாதம் வாங்க சொன்னார் ஐயர்..
மணமேடையில் இருந்து எழுந்தவர்கள் அருகில் நின்றிருந்தவர்களை காண
முதலாவதாக நின்றிருந்த கண்ணம்மா கண்ணில் பட்டார்..
இருவரும் அவரை நோக்கி நடக்க, நொடியில் எப்படி வந்ததோ அந்த தைர்யம். அவளாகவே தன் மாமனின் கைக்குள் அவள் கையை விட்டு
அவன் கைகளை பற்றி கொண்டாள்..
அதில் திகைத்தவன் திரும்பி அவள் முகம் பார்க்க, அவளோ இன்னும் நாணத்தால் சிவந்து
கன்னம் குழிய சிரித்தாள்..
அவளின் அந்த மலர்ந்த சிரிப்பை தன் கண்ணுக்குள் நிரப்பி கொண்டவன் இருவரும்
கண்ணம்மா அருகில் சென்றிருந்தனர்..
அவர் கண்களில் ஆனந்த கண்ணீர்.. மணமக்கள் இருவரையும் இப்படி மாலையும்
கழுத்துமாக பார்க்க அவன் நெஞ்சம் விம்மியது ஆனந்தத்தில்..
அருகில் இருந்த தன் மருமகளின் கன்னம் வருடி
“ரொம்ப சந்தோஷம் டா செல்லம்... எப்பவும் நீ இப்படியே சிரிச்சுகிட்டே
இருக்கோணும்.. “ என்று அவளை கட்டி அணைத்து உச்சி முகர்ந்தார்..
தமயந்தியின் கண்களோ அவசரமாக தன் தங்கராசு மாமாவை தேடியது..
இருவரையும் ஒன்றாக நிக்க வைத்துதான் அவர்கள் காலில் விழுந்து
ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்று அவள் பார்வை பரபரப்பாக சுழல அவரை காணவில்லை...
அதற்குள் அருகில் நின்றிருந்தவன் அவள் கையையும் இழுத்து கொண்டு
கண்ணம்மா காலில் விழுந்திருந்தான்..
“இந்த மாமாவுக்கு அதுக்குள்ள என்ன அவசரம்?
பெரிய மாமா வராமல் அத்தை கால் ல மட்டும்
விழுந்திட்டானே.. “ என்று திட்டி கொண்டே
அவளும் விழுந்து எழ, இருவரையும் தூக்கி ஆசிர்வதித்தார்
கண்ணம்மா...
“அத்தை.. மாமா எங்க? “ என்று
கேட்க ஆரம்பிக்கும் முன்னே அவள் கையை இழுத்து சென்றிருந்தான் அடுத்தவரிடம்..
அவள் அப்பத்தா கன்னியம்மா ஒரு நாற்காலியில் அமர்ந்து இருக்க,
அவளை அழைத்து சென்றவன் அவர் காலை தொட்டு வணங்க, தமயந்தியும்
அவர் காலில் விழுந்தாள்..
அவரும் நெகிழ்ந்து போய் தன் பேத்தியின் கன்னம் வருடி
“இனிமேல் நீ சந்தோஷமா இருக்கோணும் தாயி.. இனி இந்த அப்பத்தா நிம்மதியா
போய் சேர்ந்துடுவேன்.. “என்று தழுதழுக்க
“அப்படி எல்லாம் சொல்லாதிங்க அப்பத்தா... நீங்க இன்னும் பல வருஷம்
வாழனும்.. எங்க புள்ளைகளை பார்த்துவிட்டுதான் உங்களை அனுப்பி வைப்போம்.. “ என்று
அவளவன் உரிமையுடன் கண்டிக்க, பெண்ணவளுக்கோ பெருமையாக இருந்தது..
“இந்த அப்பத்தா இந்த மாமனை எவ்வளவு கேவலமா பேசி இருக்கு.. அதை எல்லாம்
மனசுல வச்சுக்காம அப்பத்தாகிட்டயே நல்ல விதமா பேசறானே... கெட்டிக்காரன்தான்.. “
என உள்ளுக்குள் மெச்சி கொண்டவள் கண்கள் அடுத்து அவள் அம்மா தங்கத்தைம்,
அப்பா சிங்காரத்தையும் தேடியது..
ஆனால் அவர்களை அங்கு எங்கும் காணவில்லை..
“எங்க போய்ட்டாங்க..? என் கல்யாணத்தை
பக்கத்தில் இருந்து பார்க்காமல் அதுக்குள்ள எங்க போய்ட்டாங்க.? “ என்று மீண்டும் பரபரப்பாக தேட அவர்களை
காணவில்லை..
“என்னாச்சு ? தங்கராசு மாமாவும் இல்லை.. என் அம்மா அப்பாவும்
இல்லை... ஆயா... என் ஆயா அதுக்கு என்னாச்சு? அதையும்
காணலையே.. “
என்று மூளையை தட்டி அவசரமாக யோசிக்க, அவள் ஆயா அவள் கையை பிடித்து தன்
மாமனிடம் கொடுத்துவிட்டு உயிர் பிரிந்தது அறிவுக்கு உறைத்தது..
அதை கண்டதும் திடுக்கிட்டாள் தமயந்தி....
“எனக்குத்தான் ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டதே..! அப்பயும் என் மாமாதான தாலி கட்டினான்.. எங்க
கல்யாணத்தை பார்த்துவிட்டுத்தானே ஆயா செத்து போச்சு..
அப்ப இப்ப எதுக்கு இன்னொரு தரம் கல்யாணம்? இன்னொரு
தரம் எதுக்கு சற்று முன் இந்த மாமா தாலி கட்டினான்..? என்
அப்பா அம்மா எங்கே..? “
என்று மேலும் தன் ஆயா இறந்ததில் இருந்து நடந்தவைகளை அவசரமாக நினைவு
படுத்த முயன்றாள்..
இதுவரை ஸ்லோ மோசனிில் வேலை செய்து கொண்டிருந்த அவள் அறிவு இப்பொழுது
ராக்கெட் வேகத்தில் சுற்ற பல நிகழ்ச்சிகள் நினைவு வந்தன..
தன் ஆயா இறந்த பிறகு அவள் மாமன் நளன் லண்டன் கிளம்பி சென்றது நினைவு
வந்தது..
“ஓ அப்ப லண்டன் போய்ட்டு திரும்பி வந்திட்டானா?
“ என்று மீண்டும் யோசிக்க எல்லா
நிகழ்ச்சிகளும் திரும்ப நினைவு வந்தது..
கோர்வையாக நளன் லண்டன் சென்ற தினமும்... அவளை பிரிந்து செல்ல முடியாத அவன் தவிப்பும்... வேற
வழி இல்லாமல் அவளை கட்டி அணைத்து தவிப்புடனே அவளை விட்டு பிரிந்து சென்றதும்
மனக்கண்ணில் வந்து கொண்டிருந்தது..
கடைசியாக அவன் லண்டன் சென்ற ப்ளைட்
ஆக்சிடென்ட் என்று அவள் டிவியில் பார்த்த செய்தியும் அதற்கு பிறகு அவள்
தவித்த தவிப்பும் நினைவு வர, தூக்கி வாரி போட்டது அவளுக்கு....
“என் மாமன்.... நளன்... அவன்தான் இறந்து விட்டானே...! அப்ப இங்க
இருப்பது யார்? என் கழுத்தில் இப்பொழுது தாலி கட்டியது யார்? “
என்று திடுக்கிட்டு அருகில் நின்றிருந்தவனை கொஞ்சம் பயத்துடன் நிமிர்ந்து
பார்க்க, அவள் அருகில் ஒட்டி நின்றிருந்தவன்...
இவளின் திடீர் நேர் பார்வையை எதிர் நோக்கியவன் அவளை பார்த்து நிறைவாய்
புன்னகைத்தான்...
அவன்... அவளை பிறந்ததில் இருந்தே காதலித்த அவள் மாமன் நளன் அல்ல.....அவளை கண்டதும் காதல்
கொண்டு அவளை கண்ணுக்குள் வைத்து பார்த்துக்க துடிக்கும் ரிஷி வர்மா…
இதுவரை தன் அருகில் இருப்பவன் தன் மாமன் என்று எண்ணி சிலாகித்து
இருந்தவள் தன் அருகில் ரிஷியை காணவும் அவள் உடல் தூக்கி வாரி போட்டது..
உள்ளுக்குள் பெரிதாக அதிர்ந்து போனாள்..
“அப்படி என்றால் ரிஷியா என் கழுத்தில் தாலி கட்டினான்..?
இவனா என்னை பார்த்து அப்படி குறும்பாக கண்
சிமிட்டினான்..? இவனா என் பாதம் பற்றி மெட்டி போட்டு எனக்கு
குறுகுறுப்பு மூட்டினான்...
இல்லை.... இவன் இல்லை அவன்.. அவன் என் மாமன் நளன்தான்.. அவனைத்தான்
நான் பார்த்தேன்.. அவன்தான் என் அருகில் அமர்ந்து இருந்தான்.. என் மாமா தான் என்னை
சிவக்க வைத்தான்.. என் மாமாதான் எனக்கு தாலி கட்டினான்..
மாமாதான் திகட்ட திகட்ட அவன் காதலை இந்த திருமண மேடையில் கொட்டி
கொண்டிருந்தான். அவன் இந்த ரிஷி இல்லை.. எனக்கு தாலி கட்டியது.. என்
மாமன்தான்............ “
என்று உள்ளுக்குள் சத்தமாக கத்தினாள்.. அவள் உள்ளுக்குள் அரற்றி
கொண்டிருக்க, அது அவளின் உடலிலும் தெரிந்தது...நடந்த நிகழ்ச்சியை கிரகிக்க
முடியாமல் அவள் உடல் லேசாக நடுங்க ஆரம்பித்தது...
அவள் உடலில் தெரிந்த நடுக்கத்தை உணர்ந்து கொண்டவனோ மெல்ல அவள் தோள்
பற்றி தன்னோடு சேர்த்து மெல்ல அணைத்து கொண்டு
“என்னாச்சுடா ? ஏதாவது பண்ணுதா? “ என்றான் ரிஷி
அக்கறையாக...
அவளுக்கோ தலை சுற்ற கண்ணை கரித்து கொண்டு வந்தது.. .
“என்ன நடக்கிறது இங்கே? என்னை சுற்றி என்ன நடக்கிறது ?”
என்று குழப்பத்துடன் தடுமாற அவளை இன்னும்
தன்னோடு சேர்த்து கொண்டான் ரிஷி..
அதே நேரம் எப்படித்தான் மீடியாக்கள் மோப்பம் பிடித்தனவோ.. அவ்வளவு
பெரிய தொழில் அதிபன் ரிஷியின் திருமணம் மிகவும் எளிமையாக பொள்ளாச்சியில் இருக்கும்
சிறு கோவிலில் நடப்பதை கேள்வி பட்டு அங்கு விரைந்து வந்திருந்தனர்..
தம்பதி சகிதமாக மாலையும் கழுத்துமாக நெருக்கமாக நின்றிருந்த ரிஷியையும்
தமயந்தியையும் பல கோணங்களில் கிளுக்கி கொண்டனர்..
அடுத்து ரிஷியை நோக்கி மைக் ஐ நீட்டியவர்கள்
“ஸார்.. எதுக்கு இப்படி ஒரு அவசர கல்யாணம்..?
ஏன் இந்த திடீர் கல்யாணம்..? ஏன் இந்த சின்ன கோவிலில்
வைத்துவிட்டீர்கள்? “ என்று கேள்விகளை அடுக்க,
இங்கு தமயந்தியோ இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருந்தவள் அவள் முன்னால் நின்றிருந்த
மீடியாவை பார்த்து மிரண்டு அவனோடு இன்னும் ஒன்றி கொண்டாள்..
தமயந்தியின் மிரண்ட பாவத்தை கண்ட ஒரு பெண் பத்திரிக்கையாளர்
“ரிஷி சார்... இது லவ் மேரேஜ் ஆ? “ என்றாள் சிரித்த்வாறு..
ரிஷியும் சிறு வெட்கத்துடன் புன்னகைத்தவன்
“யெஸ்.. ஆனால் இது ஒன் சைட் லவ்.. என் பொண்டாட்டியை பார்த்த உடனே
பிடித்துவிட்டது.. எப்படியோ போராடி அவளை சம்மதிக்க வைத்து இப்பொழுது திருமணமும் முடிந்துவிட்டது..”
என்றான் மனம் நிறைந்த பூரிப்புடன்...
“சார்.. மேடம் ஐ எப்ப பார்த்திங்க? எங்க பார்த்திங்க? உங்க லவ் ஸ்டோரிய சுருக்கமா சொல்லுங்களேன்..! “ என்று கெஞ்ச
“ஸாரி கைஸ்... இப்ப எல்லாம் விளக்கமா சொல்ல நேரம் இல்ல.. சென்னையில்
கிராண்ட் ஆ ரிசப்ஷன் இருக்கும்.. அதுக்கு எல்லாருக்கும் அழைப்பும் வரும்.. மறக்காமல்
வந்துடுங்க.. அங்க நிறைய பேசலாம்..”
என்று புன்னகைத்தவன் தன்
பார்வையை தமயந்தி பக்கம் செலுத்தியவன்
“ஷி இஸ் டையர்ட் நௌ.. வி ஹேவ் டு டேக் ரெஸ்ட்.. டாக் டு யூ ஆல் இன்
சென்னை...தேங்க்யூ பார் கமிங் டு மை மேரேஜ்..எல்லாரும் சாப்பிட்டுவிட்டு போங்க.. “
என்று புன்னகை மாறாமல் தமயந்தியை அணைத்தவாறு கை குவித்து வணங்க அதன்
பிறகு பத்திரிக்கையாளர்கள் கலைந்து சென்றனர்..
அதுவரை ஓரமாக நின்றிருந்த விவேக் ம் ரோஜாவும் கூட்டம் கலைந்ததும் மணமக்கள்
அருகில் வந்து
“விஷ் யூ கேப்பி மேரிட் லைப் பாஸ்.. ஹேப்பி மேரிட் லைப் சிஸ்டர்.. “
என்று விவேக் கை குலுக்கி அவன் பரிசினை கொடுக்க, அடுத்து ரோஜாவும் அவர்களை வாழ்த்தி பின் தமயந்தியை
கட்டி கொண்டாள்..
இப்பொழுது ஓரளவுக்கு தெளிந்திருந்தாள் தமயந்தி. அவர்கள் இருவரையும்
கண்டு கொண்டவள் தனக்குள் இருக்கும் அதிர்வுகளை மறைத்து கொண்டு மெல்ல
புன்னகைத்தாள்..
விவேக் சும்மா இல்லாமல்
“என்ன சிஸ்டர்...? மணமேடையில் மட்டும்
அப்படி காதல் பொங்க இருவரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துகிட்டிங்க.. தாலி ஏறியதும்
இவ்வளவு டல் ஆகிட்டிங்களே.. மேடையில் தெரிந்த அந்த ஒரு லவ் பீலிங் இப்ப காணோமே..? “ என்றான் குறும்பாக
சிரித்தவாறு..
ரிஷிக்கும் அதே கேள்விதான் மனதுக்குள் அரித்து கொண்டிருந்தது..
சற்றுமுன் வரை அவனை பார்த்து சிவந்து போனவள் பெரியவர்களிடம்
ஆசிர்வாதம் வாங்கிய பிறகு ஏன் டல்லாகி போனாள்..?
அவன் தாலி கட்டும்பொழுது அவள் கண்ணில் மின்னிய அந்த காதல் இப்பொழுது காணாமல்
போய்விட்டதே என்று குழம்பி
கொண்டிருந்தான்..
அதையே விவேக் ஆர்வமாக கேட்க ரிஷியும் அவள் என்ன சொல்ல போகிறாளோ என்று
கேட்க ஆர்வமானான்..
ஆனால் தமயந்திக்கோ என்ன சொல்லுவது என்று தெரியாமல் முழிக்க அவள்
கண்ணில் வந்து போன வலியையும் வேதனையையும் கண்டு கொண்டவன் நொடியில் கிரகித்து
கொண்டான்..
அவள் மேடையில் கண்டது தான் இல்லை.. அவள் மாமன் நளனை.. அதனால்தான்
அப்படி மலர்ந்து சிரித்தாள் என்று புரிந்து விட, ஒரு ஓரத்தில் லேசாக வலித்தது..
ஆனாலும் சமாளித்து கொண்டவன் தன் மனைவியை காப்பாற்றும் விதமாக
“டேய் டிடெக்டிவ்..! இங்கயும்
உன் டிடெக்டிவ் மூளை சும்மா இருக்காதா? என் பொண்டாட்டி ரொம்ப டையர்ட் ஆ இருக்கா.. அதான்
டல்லா ஆய்ட்டா.. அப்புறம் பார் எப்படி ப்ரைட் ஆவானு.. “ என்று அவளை
காப்பாற்றினான்..
தமயந்தியும் கண்களால் ரிஷிக்கு நன்றி சொல்லி ஒரு அசட்டு சிரிப்பை
சிரிக்க, அதற்கு அடுத்து மற்றவர்கள் வந்து வாழ்த்தி முடிக்க,
மணமக்களை கண்ணம்மா தன் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார்...
Comments
Post a Comment