தேடும் கண் பார்வை தவிக்க-49

 


அத்தியாயம்-49

யா ரெடியா?  என்றும் அழைத்தவரே அவர்கள் அறைக்குள் நுழைந்தான் ரிஷி..

லைட் ப்ளூ கலர் ரேமண்ட் ஷர்ட்  அதற்கு பொருத்தமான பார்மல் பேன்ட் அணிந்து ஷர்ட்டை இன் பண்ணி இருந்தவன் அதன் கையில் இருந்த கடைசி பட்டனை போட்டவாறு அறைக்கு உள்ளே நுழைந்தான்..  

எதேச்சையாக பார்வை அறைக்குள் துலாவ,  அங்கு அமர்ந்து இருந்தவளை கண்டதும் அப்படியே ஸ்டன் ஆகி நின்றுவிட்டான்..  

டிரஸ்ஸிங் டேபிள் முன்னால் அமர்ந்து அலங்காரம் செய்து கொண்டிருந்தாள் தமயந்தி..

தலைக்கு குளித்து அவளின் ஈரக் கூந்தலை லேசாக துவட்டி இருந்தவள் அதை அப்படியே விரித்து விட்டிருக்க, அதன் இரு பக்கமும் முடி எடுத்து நடுவில் முடிந்திருந்தாள்..

அவள் மாமன் நளன்  பேவரைட் ஆன மயில் கழுத்து கலர் மைசூர் சில்க் புடவையை கட்டி இருந்தவள் கண்ணுக்கு மை இட்டு முகத்துக்கு லேசாக  பவுடரை போட்டு கைகளுக்கு புடவைக்கு மேட்ச் ஆன கண்ணாடி வளையல்களை போட்டு கொண்டு

அதை ஒரு முறை குலுக்கி பார்த்தவள் அந்த சத்தத்தில் உதட்டில் புன்னகை மலர முன்பிருந்த கண்ணாடியில் மீண்டும் ஒரு முறை தன்னை பார்க்க தலையை நிமிர்த்தினாள்...

முன்பக்கம் இருந்த கண்ணாடியில் அவள் உருவத்தை பார்க்க,  அந்த அறை நுழை வாயிலில் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டி கொண்டு ஒரு காலை நேராக ஊன்றி வைத்து கொண்டு மற்றொரு காலை க்ராஸ் ஆக வைத்து கொண்டு நின்றிருந்தான் ரிஷி..

அவளை அழைத்தவாறே வந்தவன் அவளின் இந்த தோற்றத்தை கண்டு உள்ளுக்குள் சிலிர்த்தவன் அப்படியே கதவில் சாய்ந்த படி நின்றுவிட்டான் அவளை ரசித்தவாறு

அதே நேரம் கண்ணாடி வழியாக அவன் நிற்பதை கண்டு கொண்டவள் வேகமாக திரும்பி

“ஹே ரிஷி... இங்க வாயேன்... ஏன் அங்கயே நின்னுகிட்ட? “ என்றாள் அவனை பார்த்து கன்னம் குழிய சிரித்தவாறு..

அவள் அழைப்பிலும் அவளின் இதழ் திறந்த மலர்ந்த சிரிப்பிலும் இன்னுமாய் சொக்கி போனவன்  தன்னை சுதாரித்து கொண்டு புன்னகையுடன் அவள் அருகில் செல்ல,

அவள் அமர்ந்து இருந்த அந்த ட்ரெஸ்ஸிங் டேபில் அருகில் இருந்த  ஸ்டூலில் இருந்து எழுந்து நின்றவள் தன் புடவை முந்தானையை விரித்து ஒரு சுற்று  சுற்றி காண்பித்து

“நான் எப்படி இருக்கேன் ? “ என்று  கண்களை விரித்து அழகு காட்டினாள் தமயந்தி..

அவளின் செய்கையில் அப்படியே கவிழ்ந்து போனவன் நாக்கு ஒட்டி கொள்ள எதுவும் பேச முடியாமல் தடுமாறினான்..

“என்ன ரிஷி..?  ஏன் இப்படி முழிக்கிற? நான் என்ன அப்படி கஷ்டமான கேள்வியா கேட்டுட்டேன்...? இந்த முழி முழிக்கிற? அப்பனா நான் நல்லா இல்லையா? “ என்று உதட்டை பிதுக்கினாள் சிறுபிள்ளையாக..

அவனுக்கோ இன்னும் பெரும் சோதனையாக ஆகி போனது..

அப்பொழுது தான் குளித்துவிட்டு வந்திருந்த அவள் மேனியில் இருந்து வந்த சோப்பின் வாசமும், அவள் கூந்தலில் போட்டிருந்த சேம்பின் வாசம் கூடவே அவள் வாசமும் கலந்து அவனை கிறங்கடித்து கொண்டிருக்க,

எரியும்  நெருப்பில் எண்ணெய் ஐ ஊற்றுவது போல அவள் உதட்டை பிதுக்கி காட்டவும் இன்னும் தவிப்பாக இருந்தது அவனுக்கு... 

அவள் முகத்தை தன் புறம் இழுத்து அவள் முகத்தோடு தன் முகத்தை வைத்து அவளின் செவ்விதழை சிறைபிடிக்க துடித்தது அவன் கணவன் மனம்...

ஆனாலும் முயன்று கட்டுபடுத்தி கொண்டவன் அவள் இன்னும் அவனையே ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருக்க அவன் தான்  எப்படி இருக்கிறேன் என்று  சொல்லுவான் என்று அவன் வாயால் கேட்க காத்து கொண்டிருக்க, மெல்ல கஷ்டபட்டு இதழ் திறந்து பேசினான் ரிஷி...

“ஹ்ம்ம்ம் சூப்பரா இருக்க தயா... “ என்று புன்னகைத்தான்...

“சரி... என் முகத்தில் எல்லாம் சரியா இருக்கானு பார்த்து சொல்.. “ என்று அவள்  முகத்தை அவன் அருகில் நீட்ட, கொஞ்சம் தயங்கியவன் பின் தைர்யத்தை வரவழைத்து கொண்டு அவள் முகத்தை கையில் ஏந்தி கொஞ்சம் கோணலாக வைத்திருந்த அவள் ஸ்டிக்கர் பொட்டை எடுத்து நேராக வைத்தான்..  

முன்னால் தொங்கி அவள் கன்னத்தில் கொஞ்சி விளையாண்டு கொண்டிருந்த கற்றை முடியை பொறாமையுடன் முறைத்தவன் அதை ஒதுக்கி அவளின் காதுக்கு பின்னால் விட்டான்..

கண் மை சரியாக வைக்காமல் அங்கங்கே சொட்டையாக இருக்க, அருகில் இருந்த அந்த  கண்  மையை எடுத்து அவளுக்கு அழகாக வைத்து விட்டான்...

அருகில் இருந்த பவுடரையும் எடுத்து இன்னும் கொஞ்சம் அவளுக்கு டச் அப் பண்ணி விட்டவன் அருகில் இருந்த லிப்ஸ்டிக் ஐயும் எடுத்து அவளுக்கு அழகாக போட்டுவிட்டான்..

இதெல்லாம் எப்படி செய்தான் என்று அவனுக்கே தெரியவில்லை..அவனுடன் பிறந்த அக்கா தங்கை என்று யாரும் இல்லை.. அவன் அன்னைக்கு கூட இப்படியெல்லாம் செய்ததாக ஞாபகம் இல்லை..

பின் எப்படி தெரிந்ததாம் இந்த பெண்கள் அலங்காரம் எல்லாம்? யோசித்து எல்லாம் இருக்கவில்லை அவன்.. அவள் தலை சரித்து கன்னம் குழிய சிரித்து அவனை கேட்க, செய்திருந்தான் அப்படி ஒரு மெல்லிய ஒப்பனையை தன்னவளுக்கு..

கை தானாக அதன் வேலையை செய்ய கண்கள் தானாக அவளை அள்ளி பருகும் வேலையை செய்தது... எல்லாம் முடித்தவன்  

“ஹ்ம்ம் இப்ப பார் தயா... “ என்று அவள் முகத்தை கண்ணாடி முன்னே காட்ட, அவளும் வியந்து போய்

“வாவ்.. சூப்பரா இருக்கு ரிஷி... அப்படியே என் மாமா எனக்கு மேக்கப் போட்டுவிட்ட மாதிரியே இருக்கு.. “ என்று சிரிக்க, அதுவரை உள்ளே இருந்த ஏகாந்தம், ஜாதிமல்லியின் சுகந்தம், பனிச்சாரல் எல்லாம் சட்டென்று மறைந்து போனது.. நெஞ்சினில் சுருக்கென்று ஒரு வலி அவன் உள்ளே...

திருமணம் முடிந்து அவள் அவனவளாக அவன் அருகில் வந்து கிட்டத்தட்ட ஆறுமாதம் ஓடிவிட்டது...

ஆனால் அவளிடத்தில் இன்றுவரை எந்த மாற்றமும் இல்லை.. அவள் அவனை ஒரு நண்பனாக மட்டுமே பார்த்து வருகிறாள்..  அவள் மாமன் நளனைத்தான் இன்னமுமே காதலிக்கிறாள்..  

தானாக மாறுவாள்.. தன் அன்பை புரிந்து கொள்வாள் என்று ரிஷி அவளுக்காக காத்துக் கொண்டிருக்க அவளோ தன் மாமா என்ற கூட்டைவிட்டு வெளியில் வராமல் அதுக்குள்ளேயே சுருண்டு கிடந்தாள்...

அவளை வெளிக்கொண்டு வருவதற்கான வழிதான் தெரியவில்லை.. அவள் மனதில் ஆறாத  புண்ணாக இருக்கும் அவளின் வலியையும் வேதனையயும் போக்கும் மருந்தை மட்டும் அந்த கோடிஸ்வரன் நம்பர் ஒன் பிசினஸ் மேன் ஆல் கண்டுபிடிக்க முடியவில்லை..

ஆனாலும் முயற்சியை விடாமல் அவனும் முயன்று கொண்டுதான் இருக்கிறான்...

அவளை தனியாக இருக்க விடாமல் தன்னுடனே அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுவிடுவான்.. அவளுக்கு  விருப்பமான மென்பொருள் துறையில் ஒரு வேலையை ஏற்படுத்திக் கொடுத்தான்..  

அவளும் உற்சாகமாக அந்த வேலையை செய்து வந்தாள்..  அவள் வேலை செய்யும் மென்பொருள் அலுவலகத்தின் கிளை அவன் தலைமை அலுவலகத்திலயே ஒரு தளத்தில் இருக்க, காலையில் இருவரும் ஒன்றாக கிளம்பி சென்று விடுவர்..

மாலை அவன் கிளம்ப நேரம் ஆகும் என்பதால் அவளை மட்டும் அழைத்துச் செல்ல தனியாக கார் ஏற்பாடு செய்திருந்தான்.. இரவு அவன் வீடு திரும்பி  வந்ததும் மூவரும் உணவு மேஜையில் அமர்ந்து அன்றைய கதைகளை எல்லாம் பேசி கொண்டிருப்பர்..

அதுவும் தமயந்தி தன் அலுவலகத்தில் நடக்கும் கதைகள், அவள் யாரென்று தெரியாமல் அவள் காதுபட பல பெண்கள் ரிஷியை சைட் அடித்து ஜொல்லுவிட்டு பேசும் கதைகள், அவள் பார்த்து ரசித்த காட்சிகள் என அனைத்தையும் கையை ஆட்டி ஆக்சனுடன் சொல்லி சொல்லி சிரிப்பாள்..

அவள் முகத்தில் துள்ளி விளையாடும் சிரிப்பை பார்க்க கண்ணம்மா மற்றும் ரிஷிக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்... ஆனால் அவனை இன்னுமே தன் நண்பனாகத்தான் நிறுத்தி வைத்திருந்தாள்..

தன்னை சுற்றி பின்னிகொண்ட கூட்டை விட்டு வெளிவராமல் நட்புக்கும் காதலுக்கும் இடையே இருந்த அந்த மெல்லிய நூலிழையை இன்னும்  கடினமாக்கி கொண்டிருந்தாள்..

இப்பொழுதும் அவள் தன் மாமன் நினைவாக இருக்க,  ஒரு நொடி கஷ்டமாக இருந்தது ரிஷிக்கு.. ஆனாலும் தன் காதலும் ஒரு நாள் ஜெயிக்கும் என்று தன்னை தேற்றி சமாளித்துக் கொண்டவன்

“சரி டா...  போகலாம் வா... “  என்று அவளை அழைத்துச் சென்றான்..

காரை அடைந்தவர்கள் தமயந்தி முன்னால் அமர்ந்து கொள்ள ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவன் காரை கிளப்பி சென்றான்..

அன்று  தமயந்தி பட்டம் வாங்கும் நாள்.. கான்வகேசன் டே..

ஏனோ காலையிலிருந்தே அவளுக்கு ஒரு மாதிரி படபடப்பாக இருந்தது..

“நான் இந்த டிகிரியை  வாங்கும்பொழுது  மாமா எவ்வளவு பெருமையாக ரசித்துப் பார்ப்பான்... ஆனால் இன்று அவன் இல்லையே..!”   என்று வேதனையாகவும் அவன் வந்துவிட மாட்டானா என ஏக்கமாகவும்  இருந்தது

நேற்று இரவு முழுவதும் ரிஷியிடம் புலம்பி தீர்த்தாள்..

அவள் நன்றாக படித்து பட்டம் மற்றும் கோல்ட் மெடல் வாங்குவதை  அவள் மாமா முன்னாலிருந்து பார்ப்பதாக சொல்லியிருந்தான்.. ஆனால் இப்ப அவன் வரவில்லையே..  என்று தன் கணவன் மார்பில் புதைந்து அழுது தீர்க்க அவனோ தன் வேதனையை மறைத்து கொண்டு

“ஹே தயா பொண்ணு..... உனக்கு நளன் வந்து உன் கான்வகேசனை பார்க்கணும் அவ்வளவுதான..? கவலையை விடு..  நாளைக்கு நளன் வருவான்..  

நீ பட்டம் வாங்குவதை பார்ப்பான்..டோன்ட் வொர்ரி. பி ஹேப்பி ஆல்வேஸ்.. “ என்று அவள் கன்னம் தட்டி  அவளை சியர்அப்  பண்ணி அவளை சிரிக்க வைத்து அவளை தூங்க வைத்தான்...

இதோ அதுக்காகத்தான் கிளம்பி விட்டனர் இருவரும்.. கண்ணம்மா தமயந்தியின் அப்பத்தா வை பார்த்துவிட்டு கூடவே நாளைக்கு ஒரு முக்கியமான நாள் என்பதால் அவரையும் சென்னைக்கு  அழைத்து வர ஊருக்கு சென்றிருந்தார்..

அதனால் இருவர் மட்டும் கிளம்பி இருந்தனர்..

காரை லாவகமாக ஓட்டி கொண்டிருந்தவன் ஓரகண்ணால் தன்னவளை ரசித்து  பார்த்து கொண்டிருக்க அவள் முகமோ ஏதோ குழப்பத்தில் யோசனையில் இருப்பதாக தோன்றியது...

எப்பொழுதும் காரில் அமர்ந்ததும் அவனிடம் வாயடித்து கொண்டு வருபவள் இன்று அமைதியாக வர, அதை கலைக்கும் வகையில் காரில் இருந்த ம்யூசிக்  ப்ளேயரை ஆன் பண்ணினான்..

அது ஒரு ஆங்கில ரொமான்டிக் சாங்.. எப்பொழுதும் அவனுக்கு ஆங்கில பாடல்களை கேட்டுத்தான்  பழக்கம்... இருவரும் காரில் செல்லும் பொழுது ம்யூசிக்  ப்ளேயரை ஆன் பண்ண மாட்டான்..

அவள்  காதில் இருக்கும் ஜிமிக்கிகள் அசைந்தாட, கையை அசைத்து அசைத்து தமயந்தி பேசுவதையே ஆர்வமாக ரசித்து கொண்டு வருவதால் அவன் மனம் இசையை நாடாது...

இன்று ஏனோ அவள் அமைதியாக வரவும் அந்த அமைதியை கலைக்க ம்யூசிக்  ப்ளேயரை ஆன் பண்ணினான்..  ஒரு சில நிமிடங்கள் அந்த பாடலை ரசித்திருக்க, தமயந்தி பட்டென அதை நிறுத்திவிட்டு தமிழ் எஃப் எம் க்கு மாற்றினாள் அவனை முறைத்தவாறே..

அவனும் மெல்ல புன்னகைத்தவன் அப்பொழுது ஒலித்த தமிழ் பாடலையும்  ரசித்தான்..மனதை வருடும் இளைய ராஜாவின் மெல்லிசையில் சில பாடல்கள் இனிமையாக ஒலிக்க இருவருமே அதை மெய் மறந்து கேட்டிருந்தனர்...

அப்பொழுது இளைய ராஜா இசை மாறி ஜி.வி பிரகாஷின் இசையில் ஒலித்தது அந்த பாடல்...

உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் !
உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம் !
நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ…
உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் …
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்…

 

என்ற பாடல் வரிகள் இருவரின் உயிர்வரை சென்று தீண்டியது...

இருவருமே அந்த பாடலை மெய்மறந்து ரசித்துக் கொண்டிருந்தனர்..

அதன் ஒவ்வொரு வரிக்கும் ரிஷியின் பார்வை அவனையும் மீறி அவள் பக்கம் சென்று வந்தது..

அவன் கண்களில் அத்தனை ஏக்கமும் ஆசையும் காதலும் விரவி கிடந்ததை அவள் தான் கண்டு கொள்ளவில்லை...

அவள் எண்ணம் முழுவதும் அவள் மாமனையே சுற்றி கொண்டிருக்க, என்ன தோன்றியதோ ரிஷியின் பக்கம் பார்த்தவள்

“ரிஷி....  உங்களுக்கு தமிழ் பாட்டு பாட தெரியுமா? “   என்றாள் ஆர்வமாக..  

“ஹீ ஹீ ஹீ எனக்கு இங்கிலீஷ் சாங்ஸ் தான் பாட தெரியும் தயா.. தமிழ் பாட்டெல்லாம் கேட்பதில்லை..  பாடவும் தெரியாது.. “  என்று புன்னகைக்க,

“ஆமாம்.. நீங்க லண்டனிலேயே பொறந்து லண்டனிலயே வளர்ந்து அங்கயே படிச்சவங்க இல்ல... தமிழ் பாட்டு எப்படி பிடிக்கும்? “ என்று அவனை முறைத்து கழுத்தை நொடித்தாள்..

“ஹா ஹா ஹா.. உனக்கு பிடிக்கும் னா சொல்லுடா.. உடனே பாட்டு க்ளாஸ்க்கு ஏற்பாடு பண்ணிடறேன்.. சீக்கிரம் கத்துகிட்டு உனக்கு எந்த சாங் வேணுமோ அதை பாடி காட்டறேன்... டீலா? “ என்று கண் சிமிட்டி சிரிக்க, அவளும் மலர்ந்து சிரித்தாள்..

அதே நேரம் அடுத்து வந்தது அந்த பாடல்..

வந்திருக்க வேண்டாம்தான் அந்த பாடல்.. ஆனால் இன்று அவளை கொஞ்சம் சீண்டி பார்க்க அவள் மாமன் முடிவு செய்திருந்ததால் ஒலித்தது அந்த பாடல்.. ஒலிக்க வைத்தான் அந்த பாடலை..

பார்த்த முதல் நாளே

உன்னை பார்த்த முதல் நாளே...

காட்சி பிழை போலே

உணர்ந்தேன் காட்சி பிழை போல..

 

ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்

கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்

என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையாதே!

 

என அந்த பாடல் ஒலிக்க ஆரம்பித்தது...

அதை கேட்டதும் விலுக்கென்று  தலையை நிமிர்த்தியவள் ரிஷியை நேராக பார்த்து அவன் கண்களுக்குள் எதையோ தேடினாள்..

“என்னாச்சுடா? “ என்றான் அவள் பக்கமாக பார்த்தவன்...

“ரி.....ரிஷி.... இந்த பாட்டு உங்களுக்கு ஞாபகம் இருக்கா? “ என்றாள் தவிப்புடன்...

அவனுக்கோ அப்பொழுதுதான் முதல்முறையாக கேட்டிருந்தான் அந்த பாடலை..

“ப்ச்... இல்ல டா.. நான்தான் சொன்னேனே... தமிழ் பாட்டெல்லாம் கேட்டதில்லை என்று.. “ என்று உதட்டை பிதுக்கினான்..

அவள் முகம் வாடிப்போக, அதே நேரம் அந்த பாட்டில் வரும் பெண் குரல் முடிந்திருக்க, அடுத்து  ஆண் குரல் வரவேண்டும்..

திடீரென்று அடுத்த நொடி ஆண் குரலுடன் இன்னொரு குரலும் இணைந்து ஒலித்தது... விலுக்கென்று திரும்பி குரல் வந்த திசையை பார்க்க, அங்கே ரிஷி அழகாக பாடி கொண்டிருந்தான்...

 

காட்டிக் கொடுக்கிறதே..  கண்ணே காட்டிக் கொடுக்கிறதே !

காதல் வழிகிறதே

கண்ணில் காதல் வழிகிறதே !

 

உன் விழியில் வழியும் பிரியங்களை

பார்த்தேன் கடந்தேன் பகல் இரவாய் !

 

உன் அலாதி அன்பினில் நனைந்த பின் நனைந்த பின் நானும் மழையானேன் !

 

என்று உருகி ரசித்து காதலுடன் அவளை திரும்பி பார்த்து ரசித்தவாறு அனுபவித்து பாடினான்...  

ஸ்ருதி மாறாமல் ஒரு வார்த்தையும் பிறழாமல் அழகாக அந்த வரிகளை ரசித்து அனுபவித்து பாட தமயந்தியோ அதிர்ச்சியாகி போனாள்..

தமிழ் பாட்டு பாடத் தெரியாதவன் எப்படி இந்த பாடலை இவ்வளவு அழகாக பாடினான் என்று அவசரமாக யோசிக்க அப்பொழுதுதான் நினைவு வந்தது..

இந்த பாடல் மட்டும் அல்ல... சற்று முன் அவள் அறையில் நடந்த நிகழ்ச்சி எல்லாமே மூன்று வருடம் முன்பு நடந்ததை நினைவு படுத்தியது அவளுக்கு..

சட்டென அலைபேசியில் தேதியை பார்க்க திடுக்கிட்டு  போனாள்.. பின் அவசரமாக குனிந்து அவள் அணிந்திருந்த சேலையை பார்க்க அதுவும் மூன்று வருடம் முன்பு நடந்த கதையை அப்படியே சொல்லியது..

நளன் லண்டன் செல்வதற்கு முதல் நாள் இருவரும் கிளம்பி தமயந்தி வீட்டிற்கு விருந்திற்கு சென்ற நாள் இன்று...

எப்படி அமைந்தது இது?  மூன்று வருடம் முன்பு நடந்த அனைத்தும் அப்படியே  திரும்பவும் இப்பொழுது ரிப்பீட் ஆவதை போல இருந்தது..

அதே புடவை... அதே வளையல்... அதே ஹேர் ஸ்டைல்... ஏன் ரிஷி வந்து அறையின் வாயிலில்  நின்றது கூட அன்று அவன் மாமன் வந்து வாயிலின் அருகே நின்றது போல அச்சு பிசகாமல்...

அடுத்து அவன் அவளுக்கு முகத்தில் பொட்டை சரிபண்ணி பவுடரை போட்டு லிப்ஸ்டிக் போட்டு விட்டது கூட எல்லாமே அவன் மாமா அப்படியே செய்தது இப்பொழுது நினைவு வந்தது..

அப்பொழுது அந்த பாட்டு முடிந்து இருக்க அவசரமாக ரிஷியை  பார்த்தாள் தமயந்தி...

அதே நேரம் அவள் புறம் திரும்பி அவளை பார்த்து குறும்பாக கண் சிமிட்டி சிரித்து கொண்டிருந்தான் அவள் மாமன் நளன்...

அடுத்த நொடி அவனிடம் பாய்ந்தவள் அவனை இறுக்கி அணைத்து கொண்டு அவன் முகத்தை கையில் ஏந்தி அவன் முகம் எங்கும் முத்த மழை பொழிந்தாள்...

சாலையில் நேராக பார்த்து காரை செலுத்திக் கொண்டிருந்தவன் அவளின் இந்த திடீர் தாக்குதலில் கை ஸ்டியரிங் ஐ விட்டுவிட கால் ப்ரேக் அழுத்த மறந்து விட, அடுத்த நொடி கட்டுபாட்டை இழந்து கார் சாலையில் தாறுமாறாக ஓடியது..

அதற்குள் விழித்து கொண்டவன் நொடியில் சமாளித்து மீண்டும் அதை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவன் அவசரமாக காரை சாலையின் ஓரமாக நிறுத்தினான்..

இதுவரை கன்னத்தில் வெறித்தனமாக முத்தமிட்டவள் இப்பொழுது அவன் கழுத்தை அவள் பக்கமாக வளைத்து அவனின் இறுக்கமான உதட்டில் அழுந்த முத்தமிட்டாள்...

அவனோ இன்னும் திக்குமுக்காடி  போனான்.. கார் கண்ணாடிகள் சுற்றிலும் ஏறி இருக்க,  வெளியிலிருந்து பார்த்தால் உள்ளே நடப்பது தெரியாது என ஒரு நிம்மதி அந்த நிலையிலும்...

அவளை மெல்ல அணைத்தவாறே அவள் தந்து கொண்டிருந்த முத்தத்தில் கரைந்து கொண்டிருந்தான்..

அவளோ இன்னும் இன்னும் ஆழமாய் அவன் இதழில் கலந்து கொண்டிருந்தாள்..

தன்னுள்ளே பொங்கி வந்த காதலை எல்லாம் அந்த இதழ் ஒற்றுதலில் அவன் உள்ளே செலுத்தி விட தவித்தாள்...

இருவருமே ஒருவித மோனநிலையில் ஒருவருக்கொருவர்  கரைந்து கொண்டிருக்க இன்பமாய் தித்தித்தது அந்த நொடிகள்...

எவ்வளவு நேரம் ஆனதோ ! திடீரென்று அலைபேசி ஒலிக்க அதில்  தன்னிலை அடைந்தவள் அவனை விட்டு அவசரமாக விலகி வெட்கத்துடனும் ஆவலுடனும்  தன் மாமன் முகத்தை நிமிர்ந்து பார்க்க அங்கே மந்தகாச புன்னகையுடன் குறும்பாக சிரித்துக் கொண்டிருந்தான் ரிஷி வர்மா.. 

அவன் முகத்தை கண்டதும் தூக்கிவாரிப் போட்டது பெண்ணவளுக்கு...  

“அச்சோ ! இவன் எப்படி இங்கே வந்தான்?  என் மாமா எங்கே போனான். ?”  என்றவள் அவசரமாக வந்த கார் முழுவதும் பார்வையால் தேடினாள்..

அவள் பார்வை தவித்தது தான் மிச்சம்.. காணவில்லை அவன் மாமனை..  அவள் கண்களிலிருந்த தேடலை கண்டுகொண்டவன்

“என்னாச்சுடா தயா...? என்ன தேடுற ? “  என்று தயக்கத்துடன் கேட்டான் ரிஷி...

“என் மாமா...  என் மாமா நளன் எங்கே?  இப்பதான் இங்கே இருந்தான்..  அதற்குள் எங்கே போய் விட்டான்? “  என்று அவசரமாக அவனை தேட ரிஷிக்கோ இதயத்தை யாரோ கத்தியால் திருகுவதை போல வேதனையாக இருந்தது..

சற்றுமுன் அவனை முரட்டுதனமாக முத்தமிட்டவள் அதன் தித்திப்பு மறையும் முன்னே  இப்பொழுது அவனை யாரோ போல பார்க்க, புரிந்து போனது அவனுக்கு...

அவள் அணைத்தது அவள் மாமனை... அவள் முத்தமிட்டது அவள் மாமன் மகனை..அவளின் காதலை கொட்டியது, இந்த உலகத்தை விட்டு பிரிந்து சென்றிருந்தாலும் அந்த பேதை பெண்ணின் மனதில் பசுமரத்தாணியாய்  பதிந்துவிட்ட அந்த நளன் இடம்..என்ற உண்மை உறைக்க, ரொம்பவும் அடிபட்டு போனான் ரிஷி... 

ஆனாலும் தன் முன்னே தன்னவள் படும் வேதனையை கண்டவன் அடுத்த நொடி அவள் வேதனையை போக்க எண்ணி, தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன் மெல்ல அவளை அணைத்து அவள் முதுகை வருடி  கொடுத்தவன்

“ரிலாக்ஸ் டா... ரிலாக்ஸ்.... ரொம்ப குழப்பிக்காத....நான் இருக்கேன் உனக்கு... ரிலாக்ஸ்... “ என்று திரும்ப திரும்ப சொல்லி அவளை சமநிலைக்கு கொண்டு வந்தான்...  

அவன் மார்பில் புதைந்து விம்மி கொண்டிருந்தவள் ஓரளவுக்கு தன்னிலை அடைய, தன்னை  கட்டுப்படுத்திக் கொண்டவள் அவன் முகத்தை பார்த்து

“ரிஷி... அந்த  பாட்டை இன்னொரு தரம் பாடேன்... “  என்றாள் ஆவலுடன்..

“எந்த பாட்டு டா? “  என்றான் யோசனையாக..

“ஹ்ம்ம் கொஞ்ச நேரம் முன்னாடி பாடினியே.. பார்த்த நாள் முதலா.. அந்த பாட்டு.. ப்ளீஸ்.. இன்னொரு தரம் பாடேன்... “ என்றாள் கெஞ்சலாக...

“ஹே தயா... நான்தான் சொன்னேனே...எனக்கு தமிழ் பாட்டெல்லாம் பாடத் தெரியாது.. அதோட லிரிக்ஸ் கொஞ்ச நேரம் முன்னாடிதான் முதன் முதலா கேட்டேன்.. நல்ல அழகான லிரிக்ஸ்..ஐ லைக் தட் சாங்..  “ என்று புன்னகைத்தான்...   

அதைக் கேட்டு ஷாக்காகியவள்  

“அப்படி என்றால் சற்று முன்னால் மட்டும்  எப்படி அவ்வளவு அழகா பாடுனீங்களாம் ? “  என்றாள் அவனை செல்லமாக முறைத்தவாறு...

“ஹா ஹா ஹா நான் பாடினேனா? அதுவும் இந்த பாட்டை ?  என்ன கனவு ஏதும் கண்டியா தயா?

ஹ்ம்ம்ம் இப்ப புரிஞ்சிடுச்சு.. கனவு கண்டுட்டு தான் என்னை அப்படி அதிரடியா முத்தம் கொடுத்திருக்க..ஆனாலும் என்ன  வேகம் ?? சான்சே இல்லடி பொண்டாட்டி... “  

என்று அவளை சீண்டுவதற்காகவே அவன் கிண்டலாய் சொல்லி  குறும்பாக கண் சிமிட்டி சிரிக்க அவளுக்கோ பெறும் தவிப்பாகி போனது...

“அப்படி என்றால் அது கனவா?  இல்லையே.. நேரில் பார்த்த மாதிரியே இருந்ததே.. பாட்டை கேட்டேனே.. என் மாமன்தான் பாடினான்.. அவன் குரல் அவன் ஸ்டைல்...

அதனால்தானே என்னை மறந்து அவனுக்கு முத்தமிட்டேன்.. அப்ப எல்லாம் கனவா? “  என்று மூளையை கசக்கி யோசித்தாள்..

அவளின் முகத்தில் இருந்த குழப்பத்தையும் அப்பப்ப வந்து போகும் வேதனையையும் கண்டவன்

“ஹே தயா பொண்ணு... எதுவும் ரொம்ப யோசிச்சு குழப்பிக்காத...ரிலாக்ஸ்.. இன்னைக்கு உனக்கு முக்கியமான நாள்.. என்ஜாய் திஸ் டே...”   என்று அவள் தலையில்  கைவைத்து செல்லமாக ஆட்டியவன் காரை ஸ்டார்ட் பண்ணி கிளம்பிச் சென்றான்..  

கை ஸ்டியரிங்கை சுத்தினாலும் கால் ப்ரேக் ஐ விட்டு விட்டு அழுத்தி கொண்டிருந்தாலும் அவன் மனம் எல்லாம் அவள் கொடுத்த முதல் முத்தத்தில் சிக்கி  தவித்தது..

“தன்னை நளன் என்று எண்ணிதான் அந்த முத்தத்தை கொடுத்திருந்தாலும் அதை அனுபவித்தவன் ரிஷி ஆயிற்றே.. அவனுக்கும் உணர்வுகள் உண்டு என்பதை மட்டும் புரிந்து கொள்ள மறுக்கிறாளே..

என் அன்பை காதலை புரிந்து கொள்ள மாட்டேங்கிறாளே.. “  என்று வேதனையாக இருந்தாலும் அதை பின்னுக்கு தள்ளி அவள் கொடுத்த முத்தத்தை மட்டும் ரசித்தவாறு காரை செலுத்தினான்..!  

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!