தாழம்பூவே வாசம் வீசு-1

 


அத்தியாயம்-1

விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து நின்றிருந்தது அந்த மருத்துவமனை.. எங்கு பார்த்தாலும் பளிச் சென்று துடைத்து வைத்ததை போல மின்னியது.. அதன் தரையும் சுவர்களும் முகம் பார்க்கும் கண்ணாடியை போல பளபளவென்று மின்னியது..

மருத்துவமனைக்கு உள்ளேயும் பல விதமான அலங்காரங்கள் கண்ணை குளிர வைப்பதாகவும் மனதுக்கு மகிழ்ச்சியூட்டுவதாகவும் இருந்தது..

மருத்துவமனைக்கே உரித்தான மருந்தின் நெடியும் டெட்டால் வாசமும் இல்லாமல் சுத்தமாக இருந்தது..

முதலில் பார்ப்பவர்களுக்கு அது ஒரு ஸ்டார் ஹோட்டலை போன்று தோன்றியிருக்கும்.. அந்த அளவுக்கு அதனை பராமரித்து வந்தனர் அந்த நிர்வாகத்தினர்..

அதன் தோற்றத்தில் இருந்து அது ஒரு விஐபி களுக்கான மருத்துவமனை என பார்ப்பவர்கள் அடித்து சொல்வர்..

ஆனால் அங்கு நடமாடும் மக்களை உற்று கவனித்தால் யாரும் மேல்தட்டு மக்களை போல இல்லை.. எல்லாருமே நடுத்தர வர்க்கத்துக்கும் கீழ் நிலையில் உள்ளவர்கள் போன்று தோன்றினர்..

அப்படி என்றால் இது நடுத்தர வர்க்கத்துக்கும் கீழ் நிலையில் உள்ள ஏழை மக்களுக்கான மருத்துவமனையோ ? ஏழை மக்களுக்கென இப்படி கூட ஒரு மருத்துவமனை இருக்குமா ? ..

அப்படி  என்ன,  யாருடைய  மருத்துவமனை இது என கழுத்தை நிமிர்த்தி அதன் பெயர் பலகையை  பார்க்கும் பொழுது  “RJS Multi Specialty Hospitalஎன்ற பொன்னிற  எழுத்துக்கள் மின்னின..

(ஆம் பிரண்ட்ஸ்.. இது நம்ம மற்ற கதைகளான மடியில் பூத்த மலரே, தவமின்றி கிடைத்த வரமே கதைகளின்    நாயகன்கள் ஆதி மற்றும்  வசீகரன்  இணைந்து நடத்தும்  RJS  மருத்துவமனைதான்.. )

ஆதித்யா குரூப் ஆப் கம்பெனிஸ் ன் உரிமையாளர் ஆதித்யா  மற்றும் அவனுடைய நண்பன் ஃபேமஸ் கார்டியாலஜிஸ்ட் டாக்டர் வசீகரன் இருவரும் இணைந்து ஆரம்பித்த மருத்துவமைனை இன்று கிடுகிடுவென்று வளர்ந்து நின்றது..

முதலில் இதயத்துக்கான இலவச சிகிச்சைக்காக ஆரம்பித்த அந்த மருத்துவமனை மக்களின் வேண்டுகோள்க்கிணங்க மற்ற துறையையும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த மருத்துவமனையில்  சேர்த்து வருகின்றனர்...

மக்களுக்கு எது ஆபத்தை விளைவிக்குமோ எது  மக்களின் உயிரை , வாழ்க்கையை பெரும் அளவில் பறித்து கொள்கிறதோ  அந்த நோய்களுக்கு முதலில் இலவசமாக மருத்துவம் செய்யலாம்  என ஆரம்பித்தது..

தற்போதைக்கு இதயம் மற்றும் பெண்களின் பிரசவம் மட்டும் அந்த மருத்துவமனையில் இலவசமாக பார்த்து வருகின்றனர்.. அடுத்ததாக ந்யூரோ மற்றும்  கேன்சர் க்கான துறைகளையும் ஆரம்பிக்க முயன்று வருகின்றனர்.

அந்த மருத்துவமனையின் தரமான சிகிச்சையாலும் எந்த ஒரு செலவுக்கும் பணம் வாங்காமல் சிகிச்சை அளித்து மக்களுக்கு உதவி வருவதால் மக்கள் இடையில் மிகவும் பிரபலமாகி வந்தது அந்த மருத்துவமனை..

ப்படி பட்ட புகழ்பெற்ற அந்த மருத்துவமனையின் லேபர் வார்டின் முன்னே கைகளை மார்புக்கு குறுக்காக கட்டி கொண்டு முன்னும் பின்னும் நடை பயின்று கொண்டிருந்தான் அந்த நெடியவன்...

பார்க்க கருகருவென்று இருந்தான்..எண்ணெய் என்றால் என்னவென்று அறியாத கேசமும், சிரிப்பு என்றால் எப்படி இருக்கும் என மறந்திருந்த உதடுகளும் இடுங்கிய கண்களுமாக தோற்றமளித்தான்..

முதலில் அவனை பார்ப்பவர்களுக்கு முகத்தை சுளிக்க கூடிய முகமாக இறுகி போய் இருந்தது..

ஆனால் பரந்து விரிந்த மார்பும்  உருண்டு திரண்டிருந்த அவன் புஜங்களும், நடக்கும் பொழுது கொஞ்சமும் அலுக்காத அவன் நீண்ட கால்களும் பார்ப்பவர்களுக்கு அவன் ஒரு அடியாள் மாதிரி தோன்றும்...

நடக்கும் பொழுது அவன் தோரணை அவன் கிராமத்தை சேர்ந்தவன் என்று வெளிச்சம் போட்டு காட்டியது....

சமீபத்தில் தான் பட்டணத்திற்கு வந்திருக்கவேண்டும்.. இன்னும் பட்டணத்து  ஸ்டைலுக்கு முற்றிலும் மாறியிருக்க வில்லை..அவன் நடை, உடை, பாவணையில் இன்னும் கிராமத்து வாடை வீசியது..

அந்த லேபர் வார்ட் முன்னால் நீண்ட நேரமாக நடந்து கொண்டிருக்கிறான் போல. வெளிறிய முகமும் கலங்கிய கண்களும்  உள்ளே இருப்பவளுக்கு எதுவும் ஆகி விடக் கூடாது என்ற பயமும் அக்கறையும் கலந்து தெரிந்தது அவன் முகத்தில்.

ஒரு வித அச்சத்துடனே,  மூடி இருந்த அந்த லேபர் வார்ட் கதவையே பார்த்து கொண்டிருந்தான்..

உள்ளிருந்து ஒரு பெண்ணின் கதறல் கேட்டது.. அது பிரசவ வலியால் ஒரு பெண் படும் வேதனை என புரிந்தது அவனுக்கு..

அப்பொழுது தான் அவன் தாயின் நினைவு வந்தது அவனுக்கு..

“என் தாயும் இப்படித்தானே கஷ்ட பட்டு பத்து மாசம் என்னை சுமந்து இப்படி பெரும் வலி வேதனையை  தாங்கி என்னை ஈன்றெடுத்து இருப்பாள்.. ஆனால் அவளுக்கு நான் என்ன கைமாறு செய்தேன்? ..

அவளுக்கு அவன் திருப்பி கொடுத்தது மீண்டும் பெரும் வலியும்  வேதனையும் தான்.

“உன்னை ஏன்டா  பெற்றேன்? “  என்ற முக சுளிப்பும் அருவெறுப்பும் தான் அவன் கைமாறாக அவன் அன்னைக்கு கொடுத்தது..

இப்பொழுது அதை எண்ணும் பொழுது அவன் உடல் கூசியது..

அவனை மேலும் சிந்தித்து வருந்த  விடாமல் அந்த லேபர் வார்டின் அறை கதவு திறக்க, அந்த அறையையே பயத்துடன் பார்த்தான்..அதன் உள்ளே இருந்து வெளியில் வந்த வெள்ளை சீருடை அணிந்திருந்த  நர்ஸ்,

“இந்தாப்பா.. இந்த மருந்தெல்லாம் கீழ இருக்கிற  பார்மஸி ல இருந்து சீக்கிரம் வாங்கிட்டு  வா.. அர்ஜென்ட்.. ஜல்தி.. “ என்று கூறி ஒரு மருந்து சீட்டை அவன் கையில் திணிக்க, அதை வாங்கியவன் வேகமாக லிப்ட்  இருக்கும் இடத்திற்கு ஓடி சென்றான்..

சில நொடிகள் காத்திருந்தவன் லிப்ட் வர தாமதமாகும் போல இருக்க அதற்கு காத்திருக்காமல் படிகள் வழியாக இரண்டு இரண்டு படிகளாக தாவி  வேகமாக கீழிறங்கியவன் பார்மஸி எங்கே என்று விசாரித்து வேகமாக ஓடி சென்றான்..

மருந்து சீட்டை அந்த கவுண்டர் வழியாக உள்ளே திணித்தவன்

“அண்ணே... கொஞ்சம் சீக்கிரம் இந்த மருந்தெல்லாம் கொடுங்க.. கொஞ்சம் அர்ஜென்ட்..” என்றான் பதற்றத்துடன்..

அந்த பார்மஸியில் இருந்தவரும்  அவன் பதற்றத்தை கண்டு அந்த மருந்தை எல்லாம்  வேகமாக எடுத்து ஒரு கவரில் போட்டு அவனிடம்  கொடுக்க, தன் பர்சை எடுத்தான் அந்த நெடியவன்.. அது கிழிந்து போய் காட்சி அளித்தது..

அதில் உள்ளே துழாவியவன் சில பத்து ரூபாய் நோட்டுக்களாக  இருந்தது.. மீண்டும் கண்ணை இடுக்கி தேடி  எப்படியோ கண்டுபிடித்து பர்சில் இருந்த ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டை கண்டுபிடித்து அதை அவசரமாக எடுத்து அந்த கவுண்டரில் வைக்க,

“வேண்டாம் தம்பி.. இந்த ஹாஸ்பிட்டல்  முற்றிலும் இலவச மருத்துவமனை.. இங்கு எதுக்கும் காசு வாங்க மாட்டாங்க.. அப்படி யாராவது உன்கிட்ட காசு கேட்டாலும் கொடுத்திராத.

உன்னை ஏமாத்த ஏதாவது  சொல்லுவாங்க. அப்படி யாராவது கேட்டால் உள்ள சுசிலா மேடம் இல்லைனா பாரதி மேடம் இருக்காங்க..

அவங்க கிட்ட கம்ப்ளெய்ன்ட் பண்ணினா போதும்.. அவங்கள வேலையை விட்டே தூக்கிடுவாங்க.. சரிப்பா.. நீ போ.. ஏதோ அர்ஜென்ட் னு  சொன்னியே.. “ என்று  அவனை அனுப்பி வைத்து அடுத்து  நின்றவரை கவனித்தார்..

அந்த நெடியவனும் அவருக்கும் நன்றி சொல்லி அந்த மருந்துகள்  இருந்த கவரை எடுத்து கொண்டு மீண்டும் வேகமாக உள்ளே செல்ல, அப்பொழுது தான் அவனை கண்டான்..

ந்த மருத்துவமனையின் பக்கவாட்டில் ஒரு கார்டன் மாதிரி அமைத்து அதில் முழுவதும் பல வண்ண பூச்செடிகள் பூத்து குலுங்கின.. அதில் செயற்கை  நீர் ஊற்றும் பல அழகு செடிகளும் வைத்து பார்ப்பவர்களுக்கு ஒரு இதத்தை மன  நிம்மதியை தருவதாக இருந்தது..

அந்த சிறு பூங்காவின் நடுவில் இரண்டு சிறிய கோயில் போன்ற கோபுரங்கள் இருந்தன.. அதை உற்று பார்க்க ஒன்று கணேசனும் மற்றொன்று அவன் தம்பி முருகனுமாக அண்ணன் தம்பி இருவரும் அமர்ந்து கொண்டு அங்கு வருவோர் போவோர்களையெல்லாம் அளவெடுத்து கொண்டிருந்தனர் சிறு புன்னகையுடன்..

அந்த நெடியவனுக்கு அங்கிருந்த தம்பி வேலன் கண்ணில் படவில்லை.. அருகில் இருந்த கணேசனை கண்டதும் வேகமாக நடந்து கொண்டிருந்த அவன் கால்கள் தானாக பிரேக் இட்டு நின்றன..

அவன் பார்வை அந்த குட்டி கணேசனிடம் குத்தி நின்றது..

எத்தனை நாட்கள் இல்லை வருடங்கள் ஆகி விட்டன இவனை பார்த்து..

ஒரு காலத்தில் தன் சாப்பாட்டை கூட மறந்திருந்தான் ஆனால் அவன் நண்பன் கணேசனை பார்க்க அவனுடன் பேச மறந்ததில்லை அவன்..

சிறு வயதில் இருந்தே ஆற்றங்கரைக்கு குளிக்க சென்றால் முதலில் அந்த ஆற்றங்கரை ஓரமாக அமர்ந்திருக்கும்  அவன் நண்பன் கணேசனுக்கு  ஒரு சிறிய குடத்தில் நீர் எடுத்து வந்து நூற்றி ஒரு முறை ஊற்றி அவனை குளிக்க வைத்த பின்னரே அவன் ஆற்றில் ஆட போவான்..

அதே போல அவனுக்கு கிடைக்கும் சாப்பாட்டையும் தன் நண்பனுக்கு பகிர்ந்து கொள்வதாக எண்ணி அவன் முன்னே சிறிது வைத்து விட்டுத்தான் அவன் உண்பான்..

அவன் நண்பர்கள் எல்லாம் அவனை கிண்டல் அடித்து சிரித்தாலும்  அதை  காதில் வாங்க மாட்டான்..

அப்படி ஓருயிர்  ஈருடலாக இருந்த தன் நண்பனை திட்டி அவனிடம் கோவித்து கொண்டு

“இனிமேல் உன் மூஞ்சியிலயே முழிக்க மாட்டேன்.. “ என்று கல்லை எடுத்து அவனை அடித்து விட்டு திரும்பி பார்க்காமல் நடந்தது  நினைவு வர, அப்படியே நின்று விட்டான்..

அவனுடைய பழைய பகை கண் முன்னே வந்தது... ஆனால் அதே நேரம் சற்றுமுன் லேபர் வார்டில் இருந்து கேட்ட கதறல் சத்தம் காதில் ஒலிக்க, அவனையும் அறியாமல் அவன் கரங்கள் தானாக குவிந்தன அந்த கணேசனை நோக்கி..

“அப்பா கணேசா... நான் செய்தது தப்புதான்.. என்னை மன்னிச்சிடு.. நம்ம பிரச்சனையை இன்னொரு நாள் பேசி தீர்த்துக்கலாம்.. இன்னிக்கு என் உள்ளே இருக்கும் கவலையை போக்கி விடு..

நான் கொண்டு வந்து சேர்த்தவளுக்கு நல்ல படியா  பிரசவம் ஆகிடணும்...தாயும் சேயும் நலமா இருக்கணும்.. இத்தனை நாளா எனக்குனு கேட்ட எந்த உதவியையும் நீ செய்யலை.. இப்ப கடைசியா இந்த உதவியை கெஞ்சி இல்லை உன் காலை பிடித்து கேட்கறேன்..

இதையாவது எனக்கு நிறை வேற்றி கொடுத்துடு.. “ என்று  அவசரமாக தன் வேண்டுதலை  அந்த கணேசன் காதில் போட்டு விட்டு வேகமாக படி வழியாக மாடி ஏறி முதல் தளத்தை  அடைந்தான்..

அங்கு இவனுக்காகவே காத்து கொண்டிருந்த அந்த செவிலி

“என்னப்பா இதை வாங்கி வர இவ்வளவு நேரமா? மேடம் என்னை திட்டறாங்க..எப்பவும் நாங்களே  இந்த மருந்தெல்லாம்  ஸ்டாக் வைத்திருப்போம்.. நீ அவசரமா கொண்டு வந்து சேர்த்ததால் இந்த மருந்தெல்லாம் ரெடி பண்ணி வைக்கவில்லை..

அதான் உன்னை போய் வாங்கி வர சொன்னால்  நீ ஆடி அசஞ்சு வர்ர.. சீக்கிரம் கொடு.. “   என்று அவன் கையில் இருந்த கவரை பிடுங்கி கொண்டு உள்ளே செல்ல முயல இவனோ

“நர்ஸ்..உயிர்க்கு ஒன்னுக்கு ஆபத்து இல்லையே.. “என்றான் பதட்டமாக

“ஹ்ம்ம் அதெல்லாம் இப்ப சொல்ல முடியாது.. அப்படி அக்கறை இருக்கறவன் பொண்டாட்டிய பக்கத்துலயே இருந்து பார்த்துகிட்டு இருந்திருக்கணும்..வலி எடுக்கறதுக்கு  முன்னாடியே கொண்டு வந்து சேர்த்திருக்கணும்..

பனிக்குடம் உடைந்து சிக்கலான நிலையில் கொண்டு வந்து சேர்த்திருக்க.. ரொம்பவும் சிக்கலான கேஸ் தான்..

உன் அதிர்ஷ்டம் பெரிய டாக்டர் சுசிலா மேடமே வந்து பிரசவம் பார்த்துகிட்டிருக்காங்க.. அவங்க கை வச்சா எல்லாம் சுகமா தான் இருக்கும்.. எதுக்கும் உன் குல தெய்வத்தை வேண்டிக்க.. “ என்றவள்  வேகமாக உள்ளே சென்று விட்டாள்..

அவனோ குல தெய்வத்துடனும் சண்டை போட்டு விட்டு  வந்ததால் மீண்டும் அந்த தெய்வத்தின் முன்னே போய் நிக்க தன்மானம் தடுத்தது.. ஆனாலும் உள்ளே கேட்கும் அழுகுரல் அவன்  தன்மானத்தை எல்லாம் உடைத்தெறிந்தது....

அவன் சண்டையை தற்காலிகமாக தள்ளி வைத்து தன் மான ரோஷத்தை எல்லாம்  விட்டு கொடுத்து கை கூப்பி தன் குல தெய்வத்தை கண் முன்னே நிறுத்தி வேண்ட ஆரம்பித்தான்..

“இரண்டு உசிரையும்  காப்பாத்திடு..சாமி....  “ என்று  உருப்போட ஆரம்பித்தான்..

உள்ளே சென்ற செவிலி அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் மீண்டும் வேகமாக  வெளிவர

“நர்ஸ்.. குழந்தை பிறந்திருச்சா??. இரண்டு பேரும் நல்லா இருக்காங்களா? “ என்றான் பரபரப்பாக..

“ஹ்ம்ம்ம் இன்னும் இல்லப்பா.. அதுக்குத்தான் போராடி கிட்டிருக்கோம்.. இப்ப சுக பிரசவம் சாத்தியமில்லை..சிசேரியன் தான் பண்ணனும்னு மேடம் சொல்லிட்டாங்க..

சுசிலா மேடம் ஏற்கனவே ஆபரேசஷனை  ஸ்டார்ட்  பண்ணிட்டாங்க.. ஆனால் பார்மாலிடிக்காக இந்த பேப்பர் ல கையெழுத்து போடு.. “ என்று ஒரு படிவத்தை நீட்டினாள் அந்த செவிலி..

அதை வாங்கியவன் கை நடுங்கியது.. அதில் இருந்த எழுத்துக்கள் எல்லாம் டான்ஸ் ஆடி அவனை பார்த்து கை கொட்டி சிரிப்பதை போல இருந்தது..

அதையே உற்று பார்க்க,

“ஓ.. உனக்கு இங்கிலீஸ் படிக்க  வராதா ?.. தமிழ் பார்ம் தீர்ந்து போச்சு..நான் போய் ஆபிஸ் ல இருந்து வாங்கிட்டு வரணும்.. சரி வா..இந்த  பார்மை  நானே பில் பண்ணிக்கறேன்..

நீ இங்க கையெழுத்து போடு.. “ என்றவள்  அந்த படிவத்தின் இறுதியில் இருந்த ஹஸ்பன்ட்/கார்டியன் என்றதில் கார்டியன் என்றதை அடித்துவிட்டு ஹஸ்பன்ட் என்றதை டிக் பண்ணி அவனை அங்கு கையெழுத்து இட சொன்னாள்..

அவனும் தன் நடுங்கும் கையால் அந்த பேனாவை வாங்கி  அந்த செவிலி  காட்டிய இடத்தில் பார்த்திபன் என்று தமிழில் பெயரை எழுதினான்..

“என்னப்பா..?  கையெழுத்து போட சொன்னால் உன் பெயரை எழுதற?

ஓ.. மழைக்காக கூட  பள்ளிக் கூடம் ஒதுங்காத  கேசா..?  பெயரையாவது எழுத கத்து வச்சிருக்கியே.. சீக்கிரம் நல்லா  கையெழுத்து போட கத்துக்க.

இப்படி பெயரை எழுதினா உன் பெயரை யார் வேணாலும் ஈசியா எழுதி உன் சொத்தையெலலம் புடுங்கிக்க போறாங்க.. “ என்று கிண்டல் அடித்தவாறு அந்த படிவத்தை  எடுத்து கொண்டு உள்ளே சென்றாள்..

அவள் விளையாட்டுக்கு சொன்னாலும்  அது அவனுக்கு வேதனையை கொடுக்க வில்லை.. இது மாதிரி எத்தனையோ ஏச்சு,  பேச்சு, கிண்டல்,  கேலி என எல்லாம் பார்த்து கேட்டு  சலித்து விட்டான்..

அதனால் இப்பொழுது எல்லாம்  பழகிவிட்டது.. அவன் அதற்காக வருந்தவில்லை.. ஆனால் அவள் பின்னால் சொன்ன உன் சொத்தையெல்லாம் புடுங்கிக்க போறாங்க என்றதில் தான் அவனுக்கு உள்ளே சுருக்கென்றது..

“சொத்தா? அப்படீனா? அடுத்த  நேரம் சாப்பாட்டுக்கே வழி இல்லையாம்.. இதுல எங்கிருந்து சொத்து வருமாம்..? ” என்று  ஒரு விரக்தி சிரிப்பை சிரித்து கொண்டான்..

ஆனால் அடுத்த நொடியே அவன் பார்வை லேபர் வார்ட் பக்கம் செல்ல இப்பொழுது உள்ளிருந்து அழுகுரல் எதுவும் கேட்க வில்லை...

“மயக்க மருந்து கொடுத்து ஆபரேஷனை ஆரம்பிச்சிருப்பாங்களா இருக்கும்..சாமி, அப்பா கணேசா.. எப்படியாவது இரண்டு பேரையும் காப்பாத்திடு...  “ என்று உருப்போட்டு மீண்டும் தன் நடையை தொடர்ந்தான் டென்ஷனோடு..

கிட்ட தட்ட ஒரு அரை மணி நேரம் கழித்து அந்த லேபர் வார்டின் கதவு திறக்க, வைகுண்ட ஏகாதசியின் பொழுது திறக்கும் சொர்க்க வாசலை மக்கள் ஆவலோடும் பய பக்தியோடும்  பார்ப்பதை போல ஆவலோடும் பயத்தோடும் அந்த வாயிலை நோக்கினான்..

அந்த செவிலி சிரித்த முகமாக வெளிவந்தாள்.. அவள்  சிரித்த முகத்தை கண்டதும் தான் அவனுக்கு  உயிரே திரும்பி வந்தது..

வேகமாக அவள்  அருகில் ஓடினான்..அவனை கண்டதும் மலர்ந்த சிரிப்புடன்

“கன்கிராட்ஸ்.. “ என்று ஆரம்பித்தவள்  அவன் கையெழுத்து  இட்ட லட்சணம் நினைவு வர, ஆங்கிலத்தில் சொல்ல வந்ததை நிறுத்தி கொண்டு

“வாழ்த்துக்கள் பா...உனக்கு பொண்ணு பிறந்திருக்கா..அதுவும் குட்டி இளவரசி மாதிரி அழாம பிறந்திருக்கா.. இனிமேல் உனக்கு இருந்த கஷ்ட காலம் எல்லாம் தொலைந்து இனிமேல் உனக்கு நல்ல காலம் தான்...

உன் வாழ்க்கை இனிமேல் வசந்தமாக மாறப் போகுது.. மாற்றப் போறா உன் மக..தாயும் சேயும் நலம்..  “ என்று ஆருடம் சொன்னாள்....

அதை கேட்டவனுக்கு அப்பொழுது தான் நிம்மதியாக இருந்தது..உடனே தன் குல தெய்வத்துக்கும் அந்த கணேசனுக்கும் மனதார ஆயிரம் முறை நன்றி சொன்னான்..

“இந்தாப்பா.. பிடி உன் மகளை...” என சொல்லியவாறு ஒரு டவலில் சுற்றி வைத்திருந்த அந்த பச்சிளம் சிசுவை அவன் கையில் கொடுக்க வந்தார்...

அவனோ  திகைத்து போய் ஆர்வமுடன் தன் கையை  முன்னால் நீட்ட, உடனே நீண்ட தன் கையை பின்னே இழுத்து கொண்டான்..

அதை கண்ட அந்த செவிலி திகைத்து

“என்னப்பா..?  இந்த குழந்தையை பார்க்கத்தானே இத்தனை நேரமா உட்கார கூட இல்லாம தவம் இருந்த.. இப்ப குழந்தையை வாங்காம கையை பின்னாடி  இழுத்துக்கற? “ என்றார் சற்று கோபமாக

அவனோ தயக்கத்துடன்

“நர்ஸ் அம்மா .. எனக்கு பயமா இருக்கு... இதுவரைக்கும் இப்படி குழந்தையெல்லாம் நான் தூக்கினது இல்லை.. நான் பக்கத்துல வச்சு கூட பார்த்ததில்லை.. “ என்றான் சிறு அச்சத்துடன்..

“ஹா ஹா ஹா.. அதான் உன் பிரச்சனையா? அதெல்லாம் தூக்க தூக்க தானா வந்திடும்.. இந்தா சீக்கிரம் பிடி.. எனக்கு உள்ள வேலை இருக்கு.. குழந்தையை இப்படி பிடிக்கணும்.. “  என்று அவனுக்கு விளக்கியவள் அவன் தயங்க தயங்க அவன் கையில் அந்த குழந்தையை திணித்து விட்டு உள்ளே ஓடினாள்...

அவன் முரட்டு கை பட்டு அந்த குழந்தைக்கு வலிக்குமோ என்ற பயத்தில் அவன் கையை அழுந்தி பிடிக்காமல் மெதுவாக அந்த குழந்தையை பிடித்தவன் அதன் முகத்தை உற்று பார்த்தான்...

அவனின் கருகரு நிறத்துக்கு நேர் எதிர் நிறமாக வெள்ளை வெளேர் என்று வெளுத்து இருந்தாள்.. அதன் குட்டி பாதங்கள் இளஞ்சிவப்பாக, கண்கள் குட்டி திராட்சை போல திரண்டிருக்க கருகருவென்ற அடர்ந்த கேசத்துடன் கண்ணை மூடி உறங்கி கொண்டிருந்தாள் அந்த குட்டி இளவரசி..

அதை  பார்க்க பார்க்க அவனுக்குள் பரவசம் ஆகியது.. உடல் எல்லாம் புது சக்தி பரவுவதை  போல இருந்தது...

தன் தாயின் வயிற்றில் பத்து மாதமாக நிம்மதியாக உறங்கிய அந்த சிசு இந்த உலகத்தில் அடி எடுத்து வைத்தும் இன்னும் இந்த உலகத்தை பார்க்க பிடிக்காமல் கண்ணை இறுக்க மூடி கொண்டிருந்தாள்..

அந்த குட்டி உறங்கும்  அழகையே இமைக்க மறந்து ரசித்திருக்க, வெளியில் கேட்ட சத்தத்தால் மெல்ல தன் இமைகளை  சுருக்கி உடலை வளைத்து மெல்ல இமைகளை திறந்தாள் அந்த குட்டி இளவரசி..

அழகாக ஒரு மொட்டு மலர்வதை  போல இருந்தது அந்த குட்டி தேவதை தன் இமைகளை பிரித்தது... அவளின் அசைவுகளையே இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தான்..

மெல்ல தன் கண்ணை திறந்தவள் முதல் முதலாக எதிரில் இருந்த அந்த நெடியவனை கண்ணை சுருக்கி  பார்த்தாள்..

அப்பொழுது தான் அவனுக்கு நினைவு  வந்தது..அவனின் கருகரு முகம்.. ஊரில் சாப்பிட உண்ண மறுக்கும் குழந்தைகளுக்கு அவனை காட்டி

“பூச்சாண்டி வர்ரான்.. சாப்பிடலைனா அந்த பூச்சாண்டி கிட்ட புடிச்சு கொடுத்திடுவேன்.. “  என்று மிரட்டி தன் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் அக்காக்கள் நினைவு வர

“ஐயோ... இந்த குட்டி  பாப்பாவும் இப்ப என்னை,  என் மூஞ்சிய  பார்த்து அலற போறா.. சே.. நான் போய் ஏன் இந்த தேவதையை வாங்கினேன்..?

என்று அவசரமாக தன்னையே திட்டி கொண்டவன் தன் முகத்தை மறைத்து கொள்ள முயன்று வழியை தேட, அதுக்கு அவசியமில்லை என்ற வகையில் அவனை பார்த்து அழகாக தன் செப்பு வாயை திறந்து சிரித்தாள் அந்த குட்டி தேவதை..

அதை கண்டதும் அவனாலயே நம்ப முடியவில்லை..

எப்பொழுதாவது அவன்  எதாவது குழந்தையை ஆசையாக தூக்க சென்றால் இவன் முகத்தை பார்த்தே பயந்து ஓடி விடுவர் அவன் வீட்டு தெருவில் விளையாடும் சிறுவர்கள்..

ஆனால் இந்து குட்டி தேவதை தன்னை பார்த்து அழாமல் இருக்கவும் அதோடு லேசாக சிரிக்கவும் செய்யவும் அவனுக்கு இந்த உலகத்தையே வென்று  விட்டதை போல இருந்தது..

அவளையே ஆசையாக பார்த்து கொண்டிருக்க, அந்த குட்டியும் அவனையே ஆர்வத்துடன் பார்ப்பதை  போல இருந்தது...

அதன் உருண்ட விழிகளை உருட்டி முழிக்க, அதோடு அதன் செப்பு வாயில் நாக்கை சுழற்ற அதை காண காண அத்தனை பரவசமாக இருந்தது அவனுக்கு..

அப்பொழுதுதான்  அதன் குட்டி கையையும் காலையும் பார்த்தான்..

மெல்ல துணிந்து ஒரு கையால் அந்த குட்டியை பிடித்து கொண்டு மறு கையால் அதன் பிஞ்சு கைகளை தொட, அப்படியே ஒரு இலவம் பஞ்சை தொட்டதை போல இருந்தது..

மெத் மெத்தென்று மென்மையாக இருக்க, அதன் கைகளை பிடித்தும் கால்களை மெல்ல தொட்டு பார்க்க அவனுள் மீண்டு அதே பரவசம் பரவியது..

அந்த குட்டியை உற்று பார்த்தவன் அவள் ஒரு  குட்டி தேவதையை  போல இருக்க, ஒரு மாதம் முன்பு ஒரு சாமியார் அவனை பார்த்து சொன்னது இப்பொழுது நினைவு வந்தது..

“உன் நிலையை நினைத்து கவலைப் படாத மகனே... உன் க்ஷ்டத்தை   எல்லாம் போக்கி பாலைவனமாக வறண்டு இருக்கும் உன் வாழ்வை வசந்தமாக்க ஒரு தேவதை வரப் போகிறாள்...

அவள் வரும் பொழுது அவளை விட்டு விடாமல் அவளையே கெட்டியாக பற்றி கொள். உன் வாழ்வை அவள் வசந்தமாக்குவாள்.. நீயும் மற்றவர்களை போல சந்தோஷமாக வாழ்வாய்.. “ என்று சொன்னது நினைவு வர

“அப்ப என் வாழ்க்கையை வசந்தமாக்கும் அந்த தேவதை இவள் தானோ? நானும் சந்தோஷமாக இந்த உலகில் வாழப் போகிறேனா ? " என்றவன் சந்தேகமாக அந்த குட்டி  தேவதையை பார்க்க, அவளோ "ஆமாம்." என்று சிரித்தவாறு தலையை  ஆட்டி சொன்னதை போல இருந்தது அவன் கண்களுக்கு....

"ஆமாம். தேவதை..என் தேவதை... என் வாழ்க்கையை மீட்டு கொடுக்க போகும் என் குலசாமி இந்த தேவதை..”  என பூரித்தவன் அந்த குட்டி இளவரசியை அவளுக்கு வலித்து விடாமல் தன் மார்போடு சேர்த்து  மெல்ல அணைத்து கொண்டான் அவன்-  பார்த்திபன்...!

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!