தாழம்பூவே வாசம் வீசு-3
அத்தியாயம்-3
இன்று மதியம் சென்னையின் முக்கிய பகுதியில் சவாரிக்காக
ஆட்டோவில் சுற்றி கொண்டிருந்தான்
பார்த்திபன்..
மதியம்
மணி ஒன்றை கடந்து இருந்தது . அப்பொழுது தான் பசிக்க ஆரம்பிக்க, ஏதாவது சாப்பிட்டு விட்டு பின் தன் சவாரியை தொடரலாம் என எண்ணி அங்கு ஏதாவது
சிறிய உணவகம் இருக்கிறதா என்று தேடி கொண்டிருந்தான்...
அப்பொழுது
அவன் ஆட்டோவின் அருகில் வந்த ஒரு முதியவர்
“தம்பி..
ஆட்டோ வருமா? “ என்றார் சிறு
பதட்டத்துடன்...
அவனும்
இன்னும் மதிய நேரம் ஆகியிருக்க வில்லை
என்பதால் இந்த சவாரியை முடித்து விட்டு
பிறகு சாப்பிடலாம் என எண்ணியவன்
“ஹ்ம்ம்
வரும் பெரியவரே.. எங்க போகணும்..? “ என்றான்..
அவர்
சொன்ன இடத்தை கேட்டதும் அவன் முகம் இருண்டது..
அது
சென்னையின் புற நகர் பகுதி..
கிட்ட
தட்ட ஒரு மணி நேரம் ஆகும் அந்த இடத்தை
சென்றடைய.. இப்பொழுது ஆரம்பித்தால் எப்படியும் இரண்டரை மணி ஆகிவிடும் அங்கு
சென்று சேர..
அதோடு
அங்கிருந்து திரும்பி வர சவாரி கிடைப்பது
கஷ்டம் என தோன்ற
“இல்ல..
அவ்வளவு தூரம் வராது.. நீங்க வேற ஆட்டோ பாருங்க.. இல்லைனா பஸ் எதுவும் இருக்கானு
பாருங்க.. “ என்றான் அவரை முறைத்தவாறு
“தம்பி...
தம்பி...தம்பி... அப்படி எல்லாம் சொல்லாதிங்க... நானும் அரை மணி நேரமா எல்லா
ஆட்டோவையும் கேட்டுகிட்டிருக்கேன் தம்பி..
அந்த இடத்தை சொன்னால் யாரும் வர மாட்டேங்கிறாங்க.. கொஞ்சம் அவசரமா போகணும்..அந்த
இடத்திற்கு நேர் பஸ் கிடையாது ..
மூனு
பஸ் மாத்தி போகணும்.. இந்த வயதான காலத்துல மூனு பஸ் ஏறி இறங்க முடியாது தம்பி...
பார்க்க
நல்லவனா இருக்க.. கொஞ்சம் பெரிய மனசு பண்ணி
வாப்பா... மீட்டர்க்கு மேல போட்டு தர்ரேன்.. “என்று கெஞ்சினார்..
அவர்
முகத்தை பார்க்க பாவமாக இருக்க, கொஞ்சம் மனம் இளகியவன்
“சரி.. பெரியவரே.. வாங்க போகலாம்.. “
என்று அவர் கையில் இருந்த பைகளை வாங்கி இருக்கைக்கு பின்னே வைத்தான்.. அவர்
ஏறி இருக்கையில் அமர்ந்ததும் தன் ஆட்டோவை ஸ்டார்ட் பண்ணி அவர்
சொன்ன இடத்துக்கு விரட்டினான்..
சென்னை
ட்ராபிக் ல் ஆட்டோ ஊர்ந்து தான் சென்றது..
மணி இரண்டை தொட பசி அவன் வயிற்றை கிள்ளியது ..
வழக்கம்
போல சிகரெட் பாக்கெட் ஐ எடுத்து அதில் இருந்த ஒரு சிகரெட் ஐ எடுத்து பற்ற வைத்து
புகையை உள்ளே இழுத்தான்..
அது கொஞ்சம் பசியை மட்டு மடுத்துவதாக இருந்தது...
அவன்
விட்ட புகை பின்னால் வர, அதை கண்டு முகத்தை சுளித்தார் அந்த
பெரியவர்..
அவன்
அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து அந்த சிகரெட் ஐ இழுத்து கொண்டே தன் பாதையில்
கவனத்தை செலுத்தினான்.. அவன் எதிர்பார்த்ததை விடவே தாமதமாகி இருந்தது அந்த இடத்தை
அடைய..
மெய்ன்
ரோடிலிருந்து கொஞ்சம் உள்ளே தள்ளி இருந்தது அந்த குடியிருப்பு பகுதி... இப்பொழுது
தான் டெவலப் ஆகி வரும் போல இருந்தது..சரியான போக்குவரத்து வசதி இல்லை..
அதனால்தான்
மற்ற ஆட்டோக்கள் அக்கு வர மறுத்திருப்பர் என புரிந்தது..
கிட்டதட்ட
மணி மூன்றை நெருங்கி இருந்தது.. அவர் சொன்ன விலாசத்துக்கு கொண்டு போய் அவரை இறக்கி
விட, அவரும் அவனுக்கு நன்றி
சொல்லி சொன்னதை போல மீடடர்க்கு மேல் கொஞ்சம் பணத்தை கொடுத்துவிட்டு தன் பைகளை எடுத்து கொண்டு உள்ளே சென்றார்...
அப்பொழுது
பசி வயிற்றை கிள்ள
“முதலில்
எதாவது சாப்பிட வேண்டும்..இப்படி பசிக்குதே...பேசாம முன்னரே சாப்பிட்டிருக்கணும்..
எல்லாம் இந்த ஆளால் வந்தது.. “ என சிறு
எரிச்சலுடன் உள்ளுக்குள் அந்த பெரியவரை திட்டி கொண்டே தன் ஆட்டோவில் அமர்ந்து அதை
ஸ்டார்ட் பண்ண போக
“அம்மா.....
“என்ற பெண்ணின் அலறல் கேட்டது.. அதில் திடுக்கிட்டவன் சுற்றிலும் தேடி பார்க்க
யாரும் அங்கு இல்லை....
எங்கிருந்து அப்படி ஒரு குரல் கேட்டது ? என்று சுற்றிலும் தேடி பார்க்க யாரும் இல்லாமல் போக
மீண்டும் ஆட்டோவை ஸ்டார்ட் பண்ண போனான்..
மீண்டும்
அதே குரல்.. கூடாவே “யாராவது இருந்தால் வாங்களேன்.. “என்ற பெண்ணின் அலறல் சத்தம்
கேட்க, குரல் வந்த திசையை கூர்ந்து கவனித்து பார்க்க
அது அவன் இறக்கி விட்டவர் வீட்டின் பக்கத்து வீட்டில் இருந்து தான் வந்தது..
அவசரமாக
ஆட்டோவை விட்டு இறங்கியவன் அந்த
வீட்டிற்கு ஓடினான்..
கதவு
திறந்திருக்க உள்ளே சென்றவன் அங்கு கண்ட காட்சியில் திடுக்கிட்டு நின்றான்..
ஒரு
நிறை மாத கர்ப்பிணி... தன் வயிற்றை பிடித்து கொண்டு கீழ விழுந்து துடித்து
கொண்டிருந்தாள்..
வலியில்
அம்மா என்று அலறியவாறு வலி தாங்காமல் வேதனையில் துடித்து
கொண்டிருந்தாள்..
பார்த்திபனை
கண்டதும் விழிகளை உயர்த்தி பார்த்தவள்
“ப்ளீஸ்..
காப்பாத்துங்க... என்னை பக்கத்துல இருக்கிற ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு
போங்க.. “என்றாள் தீணமான குரலில்..
அதை
கண்டவன் இன்னும் அதிர்ந்து போய் அந்த வீட்டில் சுற்றிலும் தேடி பார்க்க யாரும்
அங்கு இல்லை..
தனியாக
அவன் மட்டும் எப்படி அந்த பெண்ணை அழைத்து
செல்வது என தயங்கியவன் பெண்கள் யாராவது கூட இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணியவன் உடனே பக்கத்து வீட்டிற்கு விரைந்து
சென்றான்..
கதவை
தட்ட, ஒரு நடுத்தர வயது பெண்மணி
கதவை திறந்தார்..
உடனே
பார்த்திபன் பக்கத்து வீட்டு பெண்ணின் நிலைமையை
சொல்லி உதவி கேட்க, அவரோ
“இங்க
பார் தம்பி.. நாங்களே இப்பதான் இங்க
புதுசா குடி வந்திருக்கோம்.. அவங்க யார்னு எல்லாம் எங்களுக்கு தெரியாது..போற
வழியில அந்த பொண்ணுக்கு ஏதாவது ஆகிடுச்சுனா
அப்புறம் நாம தான் பதில் சொல்லணும்..
வீணா
பிரச்சனைதான் வரும்.. நீ ஆளை விடு.. உன் வேலையை பார்த்து கிட்டு போ..” என்று இரக்கமே
இல்லாமல் கதவை அறைந்து மூடினார் ..
அதை
கண்டு திடுக்கிட்டான் பார்த்திபன்..
“சே..
என்ன மனிதர்கள் இவர்கள்?.. ஒரு பொண்ணு பிரசவ வலியில் துடித்து
கொண்டிருக்கிறாள் என்கிறேன்.. கொஞ்சம் கூட கண்டுக்காமல் இந்தம்மா போகுதே..
இதுதான்
பட்டணத்துக்காரங்க புத்தி போல. இதுவே நம்ம
ஊரா இருந்தால் அம்மானு ஒரு குரல்
கொடுத்தால் போதும்.. ஊரே வந்து நிக்கும்..
சே.. “
என்று காலை தரையில் உதைத்தவன் மீண்டும் அந்த பெண்ணின் அலறல் கேட்கவும்
வேகமாக ஓடி வந்தவன் அடுத்த நொடி எதுவும்
யோசிக்காமல் அந்த பெண்ணை கையில் அள்ளி
இருந்தான்..
அந்த
பெண்ணோ இன்னும் வலியில் துடித்து கொண்டிருந்தாள்.. அவனின் பலத்துக்கு அவளை
அசால்ட்டாக தூக்கியவன் ஆட்டோவில் படுக்க வைத்தான்..
பின் அவசரமாக பக்கத்து வீட்டிற்கு சென்று அவர்கள்
அலைபேசி எண்ணை குறித்து கொண்டு பக்கத்து வீட்டில் யாராவது வந்தால் சொல்லி விட
சொல்லி மீண்டும் ஆட்டோக்கு வந்தவன் ஆட்டோவை ஸ்டார்ட் பண்ணி முறுக்க
ஆரம்பித்தான்...
வழியில்
தெரிந்த ஒருவரிடம் பக்கத்தில் ஏதாவது மருத்துவமனை இருக்கா என்று விசாரிக்க, அவரும் இதே ரோட்டில் இன்னும்
கொஞ்சம் உள்ளே தள்ளி போனால் ஒரு
ஹாஸ்பிட்டல் இருக்கும் என்று சொல்லி நகர்ந்தார்...
அவர்
கை காட்டிய திசையில் ஆட்டோவை முறுக்க,
நல்ல வேளையாக அந்த இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அந்த RJS மருத்துவமனை கண்ணில்
பட்டது..
அதன்
கம்பீரத்தையும் வெளித் தோற்றத்தையும் கண்டவன்
"இது
பெரிய ஆஸ்பத்திரியாக இருக்கும் போல..காசு நிறைய ஆகுமே..” என யோசித்தவன் அடுத்த நொடி
“பரவாயில்லை...
காசா பெருசு?.. உசிருதான் பெருசு..
“ என தோன்ற வேகமாக ஆட்டோவை அங்கு
விரட்டினான்.. அதன் கேட் அருகிலயே நிறுத்தி அவசரம் என சொல்ல செக்யூரிட்டியும் உடனே
உள்ளே தகவல் சொல்ல மின்னல் வேகத்தில்
உள்ளே இருந்து ஸ்ட்ரெச்சருடன் ஓடி வந்திருந்தனர் பணி ஆட்கள்..
பார்த்திபனே
அந்த பெண்ணை அலாக்காக தூக்கி
ஸ்ட்ரெச்சரில் வைக்க அவர்களும் நேராக லேபர் வார்ட்க்கு கொண்டு சென்றனர்.. ஆட்டோவை
அப்படியே விட்டு விட்டு அவனும் வேகமாக அவர்களை பின் தொடர்ந்து ஓடினான்..
எப்படியோ
லேபர் அறைக்கு வந்து விட, இன்னுமே அந்த பெண் கதறி
கொண்டு தான் இருந்தாள்.. உள்ளே சென்றதும் அந்த அறைக் கதவு மூடி விட, மற்ற செவிலியர்கள் வேகமாக உள்ளே செல்ல அதற்கு பிறகு யார் யார் உள்ளே சென்றார்கள் வெளியில் வந்தார்கள் என அவன் கண்ணுக்கு
தெரியவில்லை..
கைகளை
மார்புக்கு குறுக்காக கட்டி கொண்டு அந்த லேபர் வார்டின் முன்னே தவம் இருந்தான்..
ஏனோ அந்த பெண்ணின் வேதனை கலந்த முகம் அவன் மனதை பிசைந்தது.. அவளுக்கு
எதுவும் ஆகிவிடக் கூடாது. அவள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எதுவும் ஆகி விடக்
கூடாது என்று உருப் போட்டான்..
ஏன்
அப்படி பதறினான்? ஏன் அந்த பெண்ணை காப்பாற்ற துடித்தான்?
அவனுக்கே தெரியவில்லை.. ஆனால் அந்த பெண்ணையும் அவள் வயிற்றில் இருக்கும்
குழந்தையையும் காப்பாற்றி விட துடித்தது அவன் உள்ளே..
அதற்காக
இத்தனை நாள் முகத்தை திருப்பி கொண்டு சென்ற தன் நண்பன் கணேசனிடம் கூட பேசி விட்டான்...
அவன் வேண்டுதலை போல எப்படியோ அந்த பெண்ணை காப்பாற்றியும் விட்டான்..
அதோடு
பக்கத்து வீட்டு எண்ணிற்கு அழைத்து இந்த மருத்துவமனையின் பெயரை சொல்ல, அந்த பெண்ணை சேர்ந்தவர்களும் வந்து
விட்டார்கள்..
இவன்
கலக்கத்தையும் பதற்றத்தையும் கண்டு அந்த
செவிலி இவனை அந்த பெண்ணின் கணவனாக எண்ணி அவனிடம் பேசியதும்
அந்த குழந்தையை அவன் குழந்தையாக பாவித்து
அவனிடம் கொடுத்ததும் இப்பொழுது நினைவு வந்தது
அவசரத்தில்
அந்த செவிலி சொல்லியதெல்லாம் அவன் மனதில் பதியவில்லை.. அவனை பொறுத்தவரை அந்த
பெண்ணை, அவள் குழந்தையை காப்பாற்ற
வேண்டும் அவ்வளவே.. அதனாலயே அந்த செவிலி நீட்டிய விண்ணப்பத்தில் காட்டிய இடத்தில்
கையெழுத்திட்டான்...
அவள்
அவனை அந்த பெண்ணின் கணவன் என்று அழைத்ததும் அவன் மறுத்து எதுவும்
கூறவில்லை...அந்த குழந்தையை, குட்டி தேவதையை கையில் ஏந்திய பொழுது
உண்மையிலயே தன் மகளாகத்தான் உணர்ந்தான் பார்த்திபன்..
இப்பொழுது
தான் அவனுக்கு உண்மை உரைத்தது.. மாய உலகத்தில் இருந்து நிஜ உலகத்துக்கு
வந்திருந்தான்.. நிஜ உலகில் அவன் யாரென்று புரிய மனதை வலித்தது...
"சில
மணி நேரம் தன் குடும்பமாக பாவித்த எதுவும்
அவன் குடும்பம் இல்லை..அது வேற ஒருவரின் குடும்பம்.. அவன் அவர்களை காக்க வந்த ஒரு
காவலன் அவ்வளவே..
இதோ
அந்த பெண்ணின் சொந்தக்காரர்கள் வந்து விட்டனர் ... இனி அவன் யாரோ .. “என்று எண்ணுகையில் மனதை கசக்கி பிழிந்தது..
அதுவும்
அந்த குட்டியின் சிரித்த முகம் கண் முன்னே வர,
"அவளை
இனி பார்க்க முடியாதா? “ என்ற ஏக்கம் உள்ளே
பிசைந்தது..
“ஹ்ம்ம்ம்
எனக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான்..
நான் தான் இந்த உலகில் அதிர்ஷ்டம்
இல்லாதவன் ஆயிற்றே.. அது எப்படி நான்
சந்தோஷமாக இருந்து விட முடியும்..
கணேசா, நீயும் பார்த்துகிட்டுதான இருக்க..
எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகுது? “ என்று புலம்பி கொண்டிருந்தான் பார்த்திபன்..
அப்பொழுது அவன் பாக்கெட்டில் இருந்த சிறு கைபேசி அலற, தன் நினைவுக்கு வந்தவன் அவசரமாக அதை
பாக்கெட் ல் இருந்து எடுத்து காதில் வைத்தான்....
“எலே.
பார்த்திபா... எங்க போய் தொலஞ்சல.. “ என்று கடுப்புடன் ஒலித்தது மறு முனையில்...
“ஆங்..
இங்கதான் இருக்கேன் அண்ணே...”
“இங்கதான்
னா நான் எங்கேனு நினைக்கிறது.. இடத்தை
சொல்லுல.. “ என்றது அதே குரல் கடுப்புடன்..
அவன்
அந்த இடத்தின் பெயரை சொல்ல,
“அடப்பாவி..
அம்புட்டு தூரம் உன்னை யார்ல போக சொன்னா? .. அது அவுட்டர் ஆச்சே.. அங்க
இருந்து திரும்பி வர சவாரி எதுவும் கிடைக்காதே..
நான்தான்
சொல்லி இருக்கேன் இல்ல.. இந்த மாதிரி தொலைவா எதுவும் சவாரி வந்தால் போகாத ல...
வரும்பொழுது வெறும் வண்டிய உருட்டிகிட்டு வரணும்.. நமக்கு டீசல் காசுதான் செலவு
னு.. அப்புறம் எதுக்குல அங்க போன.. “என்று கோபத்தில் கத்தினார் மறுமுனையில்
இருந்தவர்
“ஹ்ம்ம்ம்
இம்புட்டு தூரம் இருக்கும் னு தெரியலை ணே.. அதுவும் இல்லாம கூப்பிட்டது ஒரு
பெருசு.. அவசரமா அந்த இடத்துக்கு போகணும்னு கெஞ்சுச்சு.
அதான்
மறுக்க மனசு வரலை.. கூட்டிகிட்டு வந்திட்டேன்..”
“ஹ்ம்ம்ம்
நீ அடுத்தவங்களுக்கு இரக்கம் பார்த்து வாரி வழங்கும் தாராள பிரபுவா இருந்துட்டு
போல.. ஆனா நான் அப்படி இல்ல.. நீ ஓட்டறியே அந்த ஆட்டோ ட்யூவுல வாங்கினது..நான்
மாசா மாசம் பேங்க் க்கு வட்டி கட்டணும்.. அதோட உனக்கு சம்பளமும் அளுவணும்...
நீ
நல்லதா நாலு சவாரி தினம் ஓட்டினாதான் என் பொழப்பு ஓடும்...நான் அப்பயே சொன்னேன்..
நீ இந்த வேலைக்கு சரிபட்டு வரமாட்டனு..
அந்த
மாரிதான் என் கையை புடிச்சி கெஞ்சி உன்னை
இந்த வேலைக்கு சேர்த்து விட்டான்..
அவன்
மூஞ்சிக்காக பார்த்து தான் உன்ன சேர்த்துகிட்டேன் ல.. நீ என்னடான்னா சேர்ந்ததில் இருந்தே ஒழுங்கா கலெக்ஷனே
காமிக்கலை.. என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ இன்னைக்கு நான் சொன்ன அந்த கலெக்ஷனுக்கு
நீ வண்டிய ஓட்டி இருக்கணும் ல..
இல்லைனா
உன் கையில இருந்து போட்டுக்க... இப்ப பார்த்து எதுவும் சவாரி கிடைக்குதானு பார்..
ரொம்ப நேரம் அங்கயே சுத்தாத.. சிட்டிக்கு வந்தாலாவது நாலு சவாரி கிடைக்கும்..
கொஞ்ச
நேரம் பார்த்துட்டு எதுவும் கிடைக்கலைனா
வெறும் வண்டியோடவே வந்து சேருல.. ஆனா அந்த டீசல் செலவை உன் சம்பளத்துல
இருந்து புடிச்சுக்குவேன்.. இனிமேலாவது புத்தியோட பொழச்சுக்க....
சீக்கிரம்
கிளம்பு... “ என்று திட்டியவர் அவன் பதிலை கேட்காமலயே அந்த அலைபேசியை அணைத்தார்..
அவனும்
தன் கைபேசியை பாக்கெட்டில் போட்டு கொண்டே எரிச்சலுடன் எழுந்தவன்
“சே..
இதெல்லாம் ஒரு பொழப்பா..? நீயும் பார்த்துகிட்டுதான இருக்க.. எனக்குனு
மட்டும் ஒரு நல்லதும் செஞ்சுராத... நல்லா வருவ... “ என்று தன் நண்பனை பார்த்து முறைத்துவிட்டு அந்த மருத்துவமனையில் இருந்து வெளி வந்தான்
பார்த்திபன்....
அந்த
மருத்துவமனையின் கேட் அருகேயே
இருந்தது அவன் ஆட்டோ.. சில மணி நேரம் முன்பு வந்த
அவசரத்தில் அந்த ஆட்டோவை பார்க்கிங் ல்
விடாமல் கேட் அருகிலயே விட்டு விட்டு
உள்ளே ஓடியது நினைவு வந்தது..
நல்ல
வேளையாக ஆட்டோ அங்கயே இருந்தது... கொஞ்ச நிம்மதியுடன் அங்கு செல்ல
“வாய்யா..
நீதான் இந்த ஆட்டோக்கு சொந்தக்காரனா.. இப்படிதான் கேட்லயே வண்டிய விட்டுட்டு
போவியா? ... எத்தனை பேர்க்கு
இடைஞ்சலா இருக்கு. கொஞ்சம் கூட பொறுப்பு வேணாம்... “ என்று தன் பங்குக்கு அவனை
திட்டி தீர்த்தார் அந்த மருத்துவமனையின் கேட் அருகில் நின்று கொண்டிருந்த செக்யூரிட்டி..
உடனே
கோபம் தலைக்கேறியது பார்த்திபனுக்கு.. ஆனால் அடுத்த நொடி அவன் ஆட்டோவை அவசரமாக விட்டு சென்ற காரணமும்
அந்த குட்டி தேவதையின் சிரித்த முகமும் கண் முன்னே வர, பொங்கிய அவன் கோபம் அப்படியே கரையை
அடைந்த அலை போல அடங்கி போனது..
தவறு
அவன் மீது தான் என உரைக்க,
“மன்னிச்சுக்கங்க
அண்ணே... அவசரத்துல இங்கயே விட்டுட்டு போய்ட்டேன்..” என்றான் பாவமாக
ஏனோ அவர் திட்டிய திட்டுக்கு இப்பொழுது
அவனுக்கு கோபம் வரவில்லை... வந்த கோபமும்
அப்படியே அடங்கிவிட்டது..
முன்பென்றால்
இந்நேரம் அவர் ஒரு வார்த்தை பேச ஆரம்பித்த உடனே அவன் பல வார்த்தை திருப்பி சொல்லி
திட்டி இருப்பான்.. அப்பவும் அடங்கவில்லை என்றால் கையில் கல்லை எடுத்திருப்பான்..
இப்படி
யாரிடமும் இறங்கி பேசியதில்லை இதுவரை.. அதுவும் மன்னிப்பெல்லாம் கேட்டதில்லை..
இல்லவே இல்லை..
“அப்படி
பட்ட நான் இப்ப எப்படி இவ்வளவு அமைதியா
இருக்கேன்?
அதோட
அந்த வீராச்சாமி அண்ணன் அதான் அந்த ஆட்டோ
ஓனர் அவர் திட்டிய பொழுது கூட அமைதியாக
தான இருந்தேன்..”
முன்னாடி
வேலை பார்த்த ஓனர் ஏதோ அதிகமாக ஒரு வார்த்தை சொல்லி விடவும்
"போடா..
நீயும் உன் வேலையும் னு.." சொல்லி
ஆட்டோ சாவியை விட்டெறிந்து விட்டு வந்தது நினைவு வந்தது...
ஆனால்
அந்த அவன் கோபம் அகங்காரம் ஆத்திரம் எல்லாம் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை போல இருந்தது அவனுக்கு..
“எல்லாம்
அந்த குட்டி பாப்பாவாலயா இருக்கும்.. “ என
உதட்டில் லேசாக புன்னகை மலர, தன் ஆட்டோவில் ஏறி
அமர்ந்தவன் அதை ஸ்டார்ட் பண்ணினான்..
கூடவே
ஒரு சிகரெட் ஐ எடுத்து பத்த வைத்து உள்ளே இழுத்தவாறு அங்கயே காத்திருந்தான்..
சிறிது
நேரம் அங்கயே காத்திருக்க எந்த சவாரியும் கிடைக்கவில்லை அவனுக்கு... வேறு சில
ஆட்டோக்கள் வந்து சென்றன. மக்கள்
அந்த ஆட்டோக்களுக்கு தான் சென்றனர்..
இவன்
ஆட்டோவிற்கு யாருமே வரவில்லை..
ஏன்
என் ஆட்டோவுக்கு யாரும் வரவில்லை ?
என யோசித்தவன் மெல்ல விசாரிக்க,
அது
அந்த மருத்துவமனையின் நிர்வாகத்தால்
இலவசமாக ஏற்பாடு செய்ய பட்ட ஆட்டோக்கள் என தெரிய வந்தது...
மக்கள்
மெயின் ரோடில் இருந்து உள்ளே வர வசதியாக அந்த மருத்துவமனையிலயே இலவச ஆட்டோக்களை
ஏற்பாடு செய்திருந்தனர்.. அந்த அட்டோ ஓட்டுனர்களுக்கு மாத சம்பளமும் அவர்களே
வழங்கினர்..
அப்பொழுது
தான் அந்த மருத்துவமனையை மீண்டும் திரும்பி பார்த்தான்..
“இந்த
காலத்துல கூட அதுவும் இந்த பட்டணத்துல போய் இப்படி அடுத்தவங்களுக்கு உதவி செய்ய
இருக்காங்களா? “ என ஆச்சர்யத்துடன் பார்த்தவாறு அதன்
உரிமையாளர்க்கு நன்றி சொல்லி தன் ஆட்டோவை மெய்ன் ரோட் பக்கமாக நகர்த்தினான்...
அங்கும்
அவனுக்கு எளிதாக சவாரி எதுவும் கிடைக்கவில்லை... ஒரு அரை மணி நேரம் அங்கயே
சுற்றி கொண்டிருந்தான்..
மீண்டும்
வீராச்சாமி அவனை அழைத்து எங்க இருக்க
என்று கேட்டு அவனை கடுப்பேத்தினான்...
“சீக்கிரம் சிட்டிக்கு வா ல.. அங்கிருந்தால் சவாரி எதுவும் கிடைக்காது.. இன்னைக்கு நஷ்டத்துக்கு உன் சம்பளத்துல இருந்து தான் புடிப்பேன்.. “ என்று சொல்லி கத்த அவனுக்கு கோபம் தலைக்கேறியது...
Comments
Post a Comment