தாழம்பூவே வாசம் வீசு-4

 



எனது புத்தம் புதிய தொடர்கதை "கனவே கை சேர வா..." புதிய தளத்தில் வெளியாகி உள்ளது. படிச்சு பாருங்க தோழமைகளே..! 

***** 
வராமல் வந்த தேவதை தொடர் இப்பொழுது புதிய தளத்தில் வெளியாகி உள்ளது..! என்னுடைய புதிய தளத்தை விசிட் பண்ணி பாருங்க ப்ரெண்ட்ஸ்..!


அத்தியாயம்-4

வீராச்சாமி பேசி முடித்ததும் போனை அணைத்தவன் அதை தூக்கி எறிய வேண்டும் போல கோபம் கொப்பளித்தது உள்ளுக்குள்...

ஆனால் அதே நேரம் அந்த குட்டியின் சிரித்த முகம் மீண்டும் நினைவு வர, உடனேயே தன் கோபத்தை அடக்கி கொண்டான்...

“ஹ்ம்ம்ம்ம் அந்த  சாமி என்னவோ தேவதை  வரப்போறா னு சொன்னார்.. அதே போல அந்த குட்டி தேவதையும் வந்திட்டா.. ஆனால் என்  நிலைமை ல ஒரு மாற்றமும் இல்லை.. முன்னைக்கு இப்ப  இன்னும் மோசமாதான் போகுது...

இந்த ஓனர் வேற இப்படி படுத்தறானே.. இவன் கிட்ட ரொம்ப நாளைக்கு குப்ப கொட்ட முடியாது போல இருக்கே...எல்லாம் என் தலையெழுத்து...  “ என்று புலம்பியவன்  தலையில் கை வைத்து அமர, அடுத்த நொடி

“தம்பி.. சிட்டிக்கு போகணும்.. ஆட்டோ வருமா? “ என்ற பெண்ணின் குரல் கேட்க விலுக்கென்று திரும்பினான்..

ஏதோ அவசர வேலை போல இருக்கு.. பதட்டத்துடன் நின்றிருந்தாள் அந்த பெண்மணி...

அதை கண்டவன் வாயெல்லாம் பல்லாகியது..

“ஹ்ம்ம் வாங்க அக்கா.. எங்க போவணும்? போலாம்.. “ என்று  சொல்ல அந்த பெண்ணின் மகம் பூவாக மலர்ந்தது...

அவளும் ஆட்டோவின் உள்ளே ஏறி அமர்ந்து தான் போக வேண்டிய இடத்தை சொல்ல அது ஒரு நீண்ட தூரம் செல்ல வேண்டிய பயணம்.. உடனே அவன் முகத்தில் 1000 வாட்ஸ் பல்ப் எரிந்தது..

“இந்த ஒரு சவாரி போதும்.. இதுல வர்ர கலெக்ஷனை வச்சு அந்த  வீராச்சாமி வாயை அடைச்சிரலாம்.. “ என்று  உள்ளுக்குள் துள்ளி குதித்தான்..

உடனேயே  அந்த  குட்டியின் முகம் மீண்டும் நினைவு வந்தது..

"உண்மையிலயே அந்த குட்டி என் தேவதை இல்ல இல்ல  என் குலசாமி தான்..அந்த வீராச்சாமி நச்சுல இருந்து என்னை காப்பாற்றி விட்டாளே.. அப்ப இனிமேல் எனக்கு நல்ல காலம் தான் 

என்று  தன் சட்டையின் காலரை தூக்கிவிட்டு கொண்டவன் உற்சாகமாக தன் ஆட்டோவை ஸ்டார்ட் பண்ணி முறுக்கினான்..

அதற்கு பிறகு அடுத்தடுத்து சவாரி கிடைக்க அன்று என்றுமில்லாத அளவுக்கு கலெக்ஷன் ஆனது பார்த்திபனுக்கு..

கிட்டதட்ட  ஒரு வருடமாக இந்த சென்னையில்  இந்த ஆட்டோ வை ஓட்டுகிறான்.. ஒரு நாளும் இந்த அளவுக்கு கலெக்ஷன் ஆனதில்லை..

அதை கண்டவன் படு உற்சாகத்துடன் இரவு 10 மணிக்கு தன் சவாரியை முடித்து  ஆட்டோவை வீட்டிற்கு ஓட்டி வந்தான் பார்த்திபன் ..

வரும் வழியில் இருந்த மதுரை மட்டன் பிரியாணி கடையில் மட்டன் பிரியாணியை ஆர்டர் பண்ணி அதை மூக்கு முட்ட சாப்பிட்டான்..

வழக்கமாக சாப்பிடும் பிரியாணிதான் என்றாலும் இன்று என்னவோ புது சுவையுடன் விளங்கியது... ஒவ்வொரு பீஸையும் ரசித்து சாப்பிட்டு கொண்டிருந்தான்...

அதை  கண்ட கடைக்காரர்

“என்ன மதுரைக் கார தம்பி.. மூஞ்சியில பல்ப் எரியுது? என்ன விஷேசம்? கல்யாணத்துக்கு பொண்ணு கிண்ணு பார்த்துட்டியா? “ என்றார் நக்கலாக சிரித்தவாறு...

“ஹா ஹா ஹா.. ஆமாம் அண்ணே... பொண்ணுதான்.. குட்டி பொண்ணு.. என் குட்டி தேவதை.. “ என்று சொல்லி சிரித்தவாறு பணத்தை  கட்டியவன் அந்த கடைக்காரர் கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளி  சிரித்தவாறு துள்ளலுடன் வெளியில் குதித்தபடி சென்றான்...

“சரியான போக்கிரி பய.. “ என்று சிரித்து கொண்டார் அந்த கடைக்காரர்...

தன் ஆட்டோவிற்கு வந்தவன் மீண்டும் அதே உற்சாகத்துடன் அதை  ஸ்டார்ட் பண்ணி ஓட்டினான்... ஆட்டோ நேராக அதன் உரிமையாளர் வீராச்சாமி வீட்டை அடைந்தது...

அங்கு  இருந்த  ஆட்டோ நிறுத்துவதற்காக இருந்த  இடத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு துள்ளலுடன் வீராச்சாமி வீட்டிற்கு உள்ளே வந்தான் பார்த்திபன்..

அவன் முகத்தில் இருந்த உற்சாகத்தை  கண்ட வீராச்சாமி தன்  புருவத்தை உயர்த்தி கேள்வியாக என்ன என்று பார்த்தார்....

அவனும் சிரித்து கொண்டே தன் பாக்கெட்டில் இருந்த அன்றைய கலெக்ஷனை  எடுத்து  கொடுத்தான் ..

அதை கண்டவர் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது...உடனே வாயெல்லாம் பல்லாக

“எலே.. பார்த்திபா...மெய்யாலுமே இன்னைக்கு இவ்வளவு கலெக்ஷ்னா ..? ” என்றார் சிரித்தவாறு..

“ஆமாண்ணே..இன்னைக்கு என் நல்ல நேரம்.. இவ்வளவு கலெக்ஷன முதல் முறையில் பார்த்திருக்கேன்.. வாழ்க்கையில் முதல் முறையா மனசு நிறஞ்சு இருக்கு...” என்றான் தழுதழுக்க

“ஹ்ம்ம் சரி ல.. இதே மாதிரி தினமும் ஓட்டு.. சீக்கிரம் என் ட்யூ கட்டி முடிச்சிருவேன்..” என்று காவி பற்கள் தெரிய சிரித்தவர் அன்றைய கலெக்ஷனில் அவனுக்கு சேர வேண்டியதை  கொடுத்தார்...

அதிலும் அந்த கணக்கு இந்த கணக்கு என்று சொல்லி  பாதியை  பிடித்து கொண்டே  மீதியை பார்த்திபனிடம் கொடுத்தார்..

அவர் ஏதேதோ கணக்கை சொல்லி பணத்தை பிடித்து கொள்வதை கண்டவன் அவரை பார்த்து முறைத்தான் பார்த்திபன்..

“இவருக்கெல்லாம் பேசாம நான் கொஞ்சம் காசை எடுத்து வச்சுகிட்டு கொடுத்திருந்தால் என்ன பண்ணுவாராம்...? 

சேர்ந்த காசை நியாயமா அப்படியே கொண்டு வந்து கொடுத்தால் மனுசன் அதிலயும் ஏதேதோ கணக்கை சொல்லி பாதிய புடிச்சிகிட்டானே.. நல்லதுக்கு காலம் இல்லை... “ என்று உள்ளுக்குள்ளே புலம்பியவாறு அவரை முறைத்தான்

ஹ்ம்ம்ம் முன்ன இருந்த பார்த்திபனா இருந்தால் அப்படி செய்திருப்பான்..

ஏனோ அவன் உள்ளே புது மாற்றம் வந்ததை போல இருந்தது.. அதனாலயே அன்றைய கலெக்ஷனை அப்படியே கொடுத்திருந்தான்..

ஆனால் அதையும் அவன் பங்கை அப்படியே கொடுக்காமல் அதிலும் கொஞ்சம் இல்ல நிறையவே பிடித்து கொண்டே கொடுக்க, அதை கண்டு கடுப்பானாலும்  அன்றைய சந்தோஷ மனநிலையை கலைக்க மனம் இல்லாமல் அவரை மறந்து விட்டு அவர் கொடுத்த காசை வாங்கி எண்ணி கூட பார்க்காமல் அப்படியே   பாக்கெட்டில் போட்டு கொண்டு அந்த வீட்டில் பக்கவாட்டில் இருந்த மாடிப்படி வழியாக  ஏறி மொட்டை  மாடிக்கு சென்றான்...

வீராச்சாமி திருநெல்வேலி பக்கம்  ஒரு கிராமத்தை சேர்ந்தவர்..

கிட்டதட்ட 15  வருடம் முன்பு சென்னைக்கு பிழைக்க வந்தார்..

ஏதேதோ கிடைத்த வேலையை செய்து  கையை ஊன்றி கரணம் போட்டு எப்படியோ ஒரு வீட்டை கட்டி அதை வாடகைக்கு விட்டிருந்தார்..

கூடவே அந்த பகுதியில் சிறு மளிகை கடை ஒன்றையும் ஆரம்பித்து அதை அவரே பார்த்து கொண்டு வருகிறார்...

ஆட்டோ வாங்கி விட்டால் நல்லா சம்பாதிக்கலாம் என கேள்வி பட்டு இப்பொழுது தான் ஆட்டோ ஒன்றையும்  வாங்கி அதை வாடகைக்கு விட்டிருக்கிறார்..

அவருக்கு கடையை பார்க்க வேண்டி இருப்பதால் ஆட்டோ ஓட்ட முடியவில்லை.. அதனால் ஆட்டோ ஓட்டுவதற்காக தனியாக ஆளை தேடி கொண்டிருந்தார்..

முதலில் சேர்ந்த ஒருத்தன் பாதி காசை கையாடல் செய்து மீதியை மட்டுமே அவரிடம் கொடுத்து வர  அதை கண்டு கொண்டவர் உடனே அவனை வேலையை விட்டு நிறுத்திவிட்டார்..

ஆட்டோ ஓட்ட வேற ஒரு ஆளை தேடி கொண்டிருக்க, அப்பொழுதுதான் பார்த்திபன் வீராச்சாமிக்கு தெரிந்த நண்பன் மாரி  மூலமாக வேலை கேட்டு  வந்திருந்தான்...

அவன் தோற்றத்தை கண்டதும் ரௌடி போல இருக்க, முதலில் மறுத்துவிட்டார்.. பார்த்திபனை அழைத்து வந்த மாரி அவரிடம் எடுத்து சொல்லி கெஞ்சி கேட்க

"சரி.. முதல் ஒரு வாரம் எப்படி வேலை செய்யறானு பார்த்துட்டு அதுக்கப்புறம் தான் அவனை நிரந்தரமா வச்சுக்கறதா இல்லையானு சொல்வேன்... " என கன்டிசன் போட்டு பார்த்திபனை சேர்த்து கொண்டார்..

முதலில்  அவன்  மீது நம்பிக்கை இல்லை..முதல் இரண்டு நாட்கள் அவனை கண்காணித்து வந்தார்... அவனுடைய பழக்கத்தில் இருந்து பார்க்க முரடனாக இருந்தாலும்  வாழ்க்கையில்  அடிபட்டவன்.. எதிர்த்து எதுவும் பேச மாட்டான்...

பார்க்க கொஞ்சம் நியாயமானவன்.. கூடவே படிக்காதவன்.. எந்த கணக்கை சொன்னாலும் கேட்டு கொள்கிறான்.. சரியான ஏமாளி.."  என தோன்ற

"இப்படிபட்ட இ.வா தான் எனக்கு வேண்டும்.. " என்று சந்தோஷபட்டு அவனையே நிரந்தரமாக வேலைக்கு அமர்த்தி கொண்டார்..

பத்தாதற்கு அவர் வீட்டின் மொட்டை மாடியில் ஒத்த அறை ஒன்று பழைய சாமான்களை எல்லாம் போட்டு வைத்திருந்த  அந்த அறை காலியாக  இருந்தது..

அதை கொஞ்சமாக கிளீன் பண்ணி அவர் பொருட்களையும் அதில் வைத்து கொண்டு மீதி இடத்தை   அவனுக்கு வாடகைக்கு கொடுத்து  மாதம் மாதம் 1000 ரூபாய் ம் அவன் சம்பளத்தில் இருந்து  பிடித்து கொண்டார்..

பார்த்திபனும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை...மூனு வேளையும் வயிற்றுக்கு சாப்பாடும் இரவு படுக்க கொஞ்ச இடம் இருந்தால் போதும் என்று எண்ணி விட அதுவே அவனுக்கு பெரிதாக இருந்தது..

அதனாலயே அவனும் அதை ஏற்று கொண்டான்... ஆனால் தினமும் இப்படி அவனை விரட்டி கொண்டு இருப்பது தான் அவனுக்கு எரிச்சலாக இருந்தது.. ஆனாலும் தன் நிலைமையை எண்ணி பல்லை கடித்து சகித்து கொள்வான்

வீராச்சாமியிடம் இருந்து விடை பெற்றவன் துள்ளலுடன் மாடி ஏறி தன் அறைக்கு வந்தான் பார்த்திபன்..

10 க்கு 10 என்ற அளவு கூட இல்லாமல்  ஒரே ஒரு சிறிய அறை மட்டுமே மொட்டை மாடியில் இருந்தது.. அதிலும்  வீராச்சாமியின் பொருட்களே பெரும் இடத்தை அடைத்து கொண்டிருந்தது..மீதி இருந்த இடத்தில் ஒரு நாடா கட்டில் மட்டும் போட்டு வைத்திருந்தான் அவன் படுத்துக் கொள்வதற்காக... 

குளிக்க ஒரு காமன் பாத்ரூம் வெளியில் இருந்தது..கீழ் போர்சனில்  குடியிருப்பவர்களுக்கும் அதே குளியலறைதான் ..

உள்ளே வந்தவன் தன் சட்டையை கழட்டி கதவின் பின்னால் இருந்த ஒரு ஹேங்கரில் மாட்டி விட்டு அங்கு தொங்கி கொண்டிருந்த ஒரு லுங்கியை எடுத்து கொண்டு குளியலறைக்கு சென்றான்..

நன்றாக குளிர்ந்த நீரில் குளிக்க மனதுக்கு இன்னும் உற்சாகமாக இருந்தது..

வெற்று உடலில் வெறும் லுங்கியை மட்டும் கட்டி கொண்டு திரும்பி வந்தவன் ஏற்கனவே விரித்து வைத்திருந்த அந்த  நாடா கட்டிலில் தூசியை தட்டி அதன் மீது எந்த விரிப்பும் இல்லாமல் வெறும் கட்டிலில் அப்படியே படுத்தான்..

மனம் எல்லாம் ஒருவித உற்சாகமும் நிம்மதியும் பரவி கிடந்தது..

பின் கையை மடித்து பின்னுக்கு தலையணையாக  வைத்து கொண்டு கால் மீது கால் போட்டு கொண்டு கண் மூட மீண்டும் அந்த குட்டி தேவதையின் சிரித்த முகம் கண் முன்னே வந்தது...

அன்றைய நாள் நடந்தவற்றை எல்லாம் நினைத்து பார்க்க பெரும் ஆச்சர்யமாக இருந்தது..

இந்த குட்டி வந்ததில் இருந்தே அவனுள் பெரும் மாற்றம் ஆனதை  போல இருந்தது...

“அப்ப அந்த சாமி  சொன்ன தேவதை இவள்தான்... என் மனதில் இவ்வளவு உற்சாகமும் சந்தோஷமும் இதுவரை  ஆனதில்லையே.. இன்று ஏன் காரணமே இல்லாமல்   இவ்வளவு சந்தோஷமாக  இருக்கேன்.

அப்ப அதுக்கெல்லாம் காரணம் அந்த குட்டி தேவதைதான் ... " என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டவன் உடனே விசில் அடித்த படி

தேவதையை கண்டேன் பாசத்தில்  விழுந்தேன்

என் உயிருடன் கலந்து விட்டாள்

நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்

என் முகவரி மாற்றி வைத்தாள்

ஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழிதேடி வந்தது

அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது

 

தீக்குள்ளே விரல் வைப்பேன்

தனி தீவில் கடை வைப்பேன்

மணல் வீடு கட்டி வைப்பேன்

 

தேவதையை கண்டேன் பாசத்தில்  விழுந்தேன்

என் உயிருடன் கலந்து விட்டாள்

 

தேவதை தேவதை  அவள் ஒரு தேவதை

தேவதை தேவதை  அவள் ஒரு குட்டி  தேவதை...  

 

என பாடலை மாற்றி பாடி உல்லாசமாக விசில் அடித்தவாறே அருகில் இருந்த ஒரு பழைய கிழிந்த தலையணையை எடுத்து இறுக்க அணைத்து கொண்டான்..

பின் நீண்ட நாட்களுக்கு பிறகு நிம்மதியாக உறங்கினான் பார்த்திபன்...

அவனுள் வந்த இந்த மாற்றம், நிம்மதி, சந்தோஷம் நீடித்து நிலைக்குமா?  கணேசன்  என்ன கட்டத்தை போட்டு வைத்திருக்கிறான்? வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்...


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!