தாழம்பூவே வாசம் வீசு-5
வராமல் வந்த தேவதை தொடர் இப்பொழுது புதிய தளத்தில் வெளியாகி உள்ளது..! என்னுடைய புதிய தளத்தை விசிட் பண்ணி பாருங்க ப்ரெண்ட்ஸ்..!
அத்தியாயம்-5
அடுத்த நாள் காலை
எழும் பொழுதே உற்சாகமாக உணர்ந்தான்
பார்த்திபன்..அதற்கு காரணம் அவன் அறிந்ததே..
காலையில்
எழுந்தவன் உற்சாகமாக சிறிது நேரம் அந்த மொட்டை மாடியில் தண்டால் எடுத்து விட்டு அந்த குளியலறையில் வரிசையில் நின்று குளித்து விட்டு கண்ணாடி
முன்னே நின்றான்..
அந்த
ரசம் போன கண்ணாடியில் அவன் முகத்தை பார்க்க, அவனுக்கே கொஞ்சம் பயமாக இருந்தது..
முறுக்கி
விட்ட முரட்டு மீசையும் கருகருவென்று
இருந்த அவன் நிறமும் பார்க்கவே அவன் ஊர் கருப்பண்ணசாமி நினைவுக்கு
வந்தார்..தன் முகத்தையே மீண்டும் உற்று பார்த்தவன்
“ஓ..
இதனால் தான் எல்லா சின்ன புள்ளைங்களும் என்ன பார்த்து பயந்துக்குதுங்களோ ?..
ஆனால்
அந்த குட்டி பாப்பா என்னை பார்த்து பயப்படாமல், முகத்தை சுளிக்காமல் அப்படி சிரிச்ச மாதிரி இருந்ததே..!!
அப்ப
என் மூஞ்சியும் கொஞ்சம் பார்க்கிற மாதிரிதான் இருக்கும் போல.. மத்தவங்களுக்கு
தெரியாத என் அழகு என் குட்டி தேவதைக்கு தெரிஞ்சிருக்கு...
என்
செல்ல குட்டி பாப்பா.. “ என்றவன் தன் மீசையை மாரி ஸ்டைலில் நீவி விட்டு கொண்டு
புன்னகைத்தான்..
அவனுக்கே
ஆச்சர்யமாக இருந்தது அவனை நினைத்து..
இதுவரை
ஒரு நாளும் அந்த கண்ணாடியை பார்த்ததில்லை அவன்..தன் முகத்தை பார்க்கவே
அருவெறுப்பாக இருக்கும் அவனுக்கு.. அதனாலயே அதை
பார்ப்பதை தவிர்த்து விடுவான்..
ஆனால்
இன்றைக்கு அந்த கண்ணாடியை எடுத்து
பார்த்ததும் பார்த்ததோடு மட்டும் அல்லாமல் தன்னையே ரசித்தும் அதையும் தாண்டி அவன்
முகத்தில் புன்னகை பூக்கவும் ஆச்சர்யமாக இருந்தது அவனுக்கு..
“ஹ்ம்ம்ம்
எல்லாம் என் தேவதை வந்த நேரம்.. “
என்று சொல்லி சிரித்து கொண்டான்..
அந்த
கண்ணாடியின் பக்கத்தில் எப்பவோ கொண்டு வந்து போட்ட சிறு விபூதி பொட்டலம் இருக்க, அதை பிரித்து அதில் இருந்த விபூதியை
கொஞ்சமாக எடுத்து நெற்றியில் வைத்து கொண்டான்..
அதே
உற்சாகத்தோடு தன் காக்கி சட்டையை எடுத்து மாட்டிகிட்டு அந்த அறை கதவை மூடி விட்டு துள்ளலுடன் இரண்டு
இரண்டு படியாக தாவி கீழ இறங்கி வந்தான்..
அந்த
வீட்டின் கிரவுண்ட் ஃப்ளோரில் தான் வீராச்சாமி குடி இருக்கிறார்...அதற்கு மேல்
இருந்த மூன்று தளங்களிலும் இரண்டு இரண்டு வீடாக கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார்.
கீழ
சென்றவன் நேராக வீராச்சாமி வீட்டிற்கு உள்ளே சென்றான்.. அவர் அப்பொழுது தான்
பூஜையை முடித்து நெற்றியில் பட்டையை போட்டு கொண்டே வெளி வர, வீட்டிற்கு உள்ளே நின்றிருந்த
பார்த்திபனை கண்டதும் ஆச்சர்யமாக பார்த்தார்..
“என்ன? அதுக்குள்ள நேரம் ஆய்டுச்சா? ஒரு வேளை நாமதான் தூங்கிட்டமோ? “ என்று யோசித்தவாறு அங்கு மாட்டி
இருந்த கடிகாரத்தில் நேரத்தை பார்க்க அது சரியான நேரத்தைத்தான் காட்டியது..
எப்பவும்
காலையில் 8 மணி ஆனாலும் குறட்டை விட்டு அசந்து தூங்குவான் பார்த்திபன்..
வீராச்சாமி போய் அவனை தட்டி எழுப்பி அவனை சவாரிக்கு பிடித்து தள்ள வேண்டும்..
எழுந்ததும்
பல்லை மட்டும் துலக்கி விட்டு குளிக்காமல் கூட சட்டையை மாட்டி கொண்டு அவரை முறைத்த
படியே சவாரிக்கு செல்வான்..
ஆனால்
இன்று அவனே எழுந்து அதுவும் குளித்து
விட்டு நெற்றியில் லேசாக விபூதியும் வைத்திருக்க, அதை கண்டவர்க்கு மயக்கம் வராத குறைதான்..
தன்னையே
கிள்ளி பார்த்து கொண்டவர்
“எலே
பார்த்திபா.. என்னலே இது அதிசயம் ?
... உனக்கு காத்து, கருப்பு கிறுப்பு எதுவும்
அடிச்சிருச்சா ? .. இப்படி ஆளே மாறி போய்ட்ட
ல... சோக்கா இருக்க.. என்ன ல விசேஷம்? .. “என்று தன் காவி பல்லை காட்டி
சிரித்தார் வீராச்சாமி..
அவனும்
ஒரு அசட்டு சிரிப்பை சிரித்தவன்
“அதெல்லாம்
ஒன்னும் இல்ல ணே... சும்மா தான்.. சரி ஆட்டோ சாவியை கொடுங்க.. நான் சவாரிக்கு கிளம்பறேன்.. “ என்றான் பரபரப்பாக..
அது
அடுத்த அதிர்ச்சி + ஆச்சர்யத்தை கொடுத்தது
வீராச்சாமிக்கு...
எப்பவும்
அவனை எழுப்பி சவாரிக்கு செல்ல சொன்னால்
அவரை திட்டி கொண்டே முறைத்து கொண்டே
தான் செல்வான்.. இன்று அவனே ஆர்வமா கேட்கறானே.. என்று சந்தேகத்துடன்
அவனை மேலிருந்து கீழாக ஏற இறங்க உற்று
பார்த்தார் வீராச்சாமி..
அதை
கண்டு அவனும் நெளிந்தவாறு
“என்ன
அண்ணே அப்படி பார்க்கற.. அதெல்லாம் அதே பார்த்திபன் தான்.. சாவியை கொடுங்க ணே
முதல்ல.. “ என்று சிரித்தான்..
அவரும்
இன்னும் யோசனையுடன் உள்ளே சென்று ஆட்டோ
சாவியை எடுத்து வந்து கொடுத்து
“டேய்..
பார்த்து பத்திரமா ஓட்டு ல.. நேத்து
மாதிரியே இன்னைக்கும் கலெக்ஷன் நல்லா
ஆகணும்.. பொறுப்பா பார்த்துக்க ல..“ என்று அவனுக்கு ஒரு முறை
எல்லாம் நியாபக படுத்தி சாவியை கையில்
கொடுத்தார்..
அவனும்
சரி யென்று தலை அசைத்து
உற்சாகத்துடன் அந்த சாவியை வாங்கி சுழற்றியபடி வெளியில்
குதித்த படி துள்ளலுடன் சென்றான்...
ஆட்டோவை
அடைந்தவன் அதில் சாவியை பொருத்தி
உற்சாகத்துடன் அதை ஸ்டார்ட் பண்ணினான்..
மறக்காமல்
ஸ்டார்ட் பண்ணும் முன்னே அந்த குட்டி தேவதையை நினைத்து கொண்டான்.. அவளின் சிரித்த முகம் கண் முன்னே வர, மீண்டும் உடல் எல்லாம் உற்சாகம்
பரவியது..
அதே
உற்சாகத்தில் ஆட்டோவை ஸ்டார்ட் பண்ணி ஓட்ட ஆரம்பித்தான்...
அன்று வழக்கம்
போல சில சவாரிகளை நகரத்துக்குள்ளயே ஓட்டி கொண்டிருந்தான்..
மதியம்
ஆக ஆக அந்த குட்டியை பார்க்க வேண்டும் என்ற ஆவல் கூடியது அவனுக்கு.. அவள் பிஞ்சு
கையை தொட்டு பார்க்க வேண்டும் என்ற
ஆசையும் ஏக்கமும் கூடியது..
ஏதாவது
சவாரி வராதா. அதை சாக்காக வைத்து கொண்டு அந்த மருத்துவமனைக்கு சென்று வரலாம் என
ஆர்வத்துடன் தேடி பார்க்க, யாரும் அந்த பகுதிக்கு கேட்கவில்லை..
சிறிது
நேரம் அங்கும் இங்கும் சுற்றியவன் ஏதோ
கொஞ்சம் வயிற்றுக்கு தள்ளியவன் அதற்கு
மேல் பொறுக்க முடியாமல் ஆட்டோவை அந்த மருத்துவமனையை நோக்கி விரட்ட ஆரம்பித்தான்...
“வீராச்சாமிக்கு
மட்டும் தெரிந்தது அவ்வளவுதான்...திட்டியே ஆளை
கொன்னுடுவார்.. நேற்று ஒருத்தரை
அந்த பக்கம் சவாரிக்கு
கூட்டிகிட்டு போனதுக்கே அந்த குதி குதிச்சார்..
ஆனால்
இன்று சவாரியே இல்லாமல் அவன் சொந்த வேலைக்காக அவ்வளவு தூரம் ஆட்டோவில் போவது தெரிந்தது அவ்வளவு
தான்... முழு சம்பளத்தையும் புடுங்கிக்குவார்.. “ என சிரித்து கொண்டே ஆட்டோவை
ஓட்டி கொண்டிருந்தான்..
கிட்ட தட்ட ஒன்றரை மணி நேரம் பயணத்திற்கு பிறகு அந்த
மருத்துவமனையை அடைந்தான் பார்த்திபன்..
இன்று ஆட்டோவை நிறுத்துவதற்கான பார்க்கிங் ஏரியாவில்
தன் ஆட்டோவை நிறுத்தியவன் சாவியை எடுத்து கொண்டு துள்ளலுடன் மருத்துவமனைக்கு உள்ளே
சென்றான்...
அது
விசிட்டிங் நேரம் இல்லை என்பதால் நோயாளிகள் இருக்கும் பகுதிக்கு உள்ளே அவனை அனுப்ப
மறுத்து விட்டார் அந்த பகுதியின் நுழை வாயிலில் நின்றிருந்த காவலர்..
அதை
கண்ட பார்த்திபன் கடுப்பானாலும் அதை மறைத்து கொண்டு
“நான்
ரொம்ப தூரத்தில இருந்து வந்திருக்கேன் ணே.. கொஞ்சம் தயவு பண்ணி அனுப்புங்க.. நான்
அவசரமா உள்ளே போய் பார்க்கணும்..” என்றான்
பாவமான முகத்துடன் அந்த காவலரிடம்..
“ஹ்ம்ம்ம்
நீ உள்ளே போகணும்னா உள்ளே பேசன்ட் உடன்
இருக்கும் அட்டென்டரை வெளியில் வர சொல்லுப்பா. அவங்களுடைய அட்டென்டர் பாஸ் ஐ
உன்கிட்ட தந்தால் நீ உள்ள போகலாம்..
அது
இல்லாமல் நீ உள்ள போக முடியாது..அதனால் உள்ளே இருப்பவரை வெளியில் வர
சொல்லுப்பா..பிறகு நீ போகலாம்.. “ என்று சொல்லி தடுத்து விட்டார்..
பார்த்திபனுக்கோ எப்படி உள்ளே இருப்பவரை கூப்பிடுவது என
தெரியாமல் முழித்து கொண்டு நிக்க, அதை கண்டவர்
“தம்பி...
இங்க பக்கத்துலயே பார்வையாளர்கள் அமர வசதி இருக்கு.. அங்கு போய் காத்திருந்து
விட்டு நான்கு மணிக்கு உள்ள போய் பார்.. இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்கு
மணி நாலு ஆக.. அதனால் அடம் பிடிக்காமல் அங்க போய் உட்கார்...” என்று சொல்லி விரட்டினார் ..
அவனும்
வேற வழியில்லாமல் அருகில் இருந்த பார்வையாளர் பகுதியில் சென்று அமர்ந்தான்..
பின்
மணி நான்கை தொட்டதும் பார்வையாளர் பகுதியில்
அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் எழுந்து
உள்ளே செல்ல அவனும் அவசரமாக எழுந்து
துள்ளலுடன் முதல் தளத்திற்கு சென்று அறை
எண் 108 ஐ அடைந்தான்..
ஒரு
வித படபடப்பும் உற்சாகமும் கூட, துள்ளலுடன் வேகமாக நடந்தவன்
அந்த அறையை அடைந்தான்..
அந்த
அறையின் அருகில் சென்றதும் உள்ளே இருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்டது...
“அக்கா
.. பாப்பா அப்படியே மாமா மாதிரியே இருக்கா இல்லை..?
மாமா மாதிரியே கண், மாமா மாதிரியே மூக்கு...
காது கூட அவரை மாதிரியே தான் இருக்கு..
எனக்கு
என்னவோ கலர் மட்டும் தான் உன் கலர் ஆய்ட்டா போல.. மத்தபடி அப்படியே மாமாவை உரிச்சு
வச்சு பிறந்திருக்கா... என் பட்டு குட்டி... “ என்று கொஞ்சி கொண்டிருந்தது
கேட்டது..
அதை
கேட்டதும் வெளியிலயே கொஞ்ச நேரம் தயங்கி நின்றான் பார்த்திபன் ..
“பேசாமல்
இப்படியே திரும்பி விடலாமா? எதற்காக இன்னைக்கு வந்தேன்
என்று கேட்டால் என்ன சொல்வது? நேற்றே என்னை ஒரு மாதிரி
பார்த்துச்சு அந்த அம்மா.. இன்னைக்கு எப்படி மறுபடியும் போய் நிக்கறது? “ என்று யோசித்தவாறு தயங்கி
நின்றான்...
ஆனால்
கால்கள் பின்னோக்கி செல்ல மறுத்தன.. அதுவும் உள்ளே இருந்த அந்த பெண் அந்த குட்டியை வர்ணித்ததை
வைத்து அந்த குட்டி தேவதையை உடனே
பார்க்க வேண்டும் என்ற ஆவல் மேலும் கூடியது அவனுக்கு..
கால்கள்
அவன் கட்டளையையும் மீறி முன்னேற, கைகள் தானாக கதவை திறக்க
அடுத்த நொடி எதுவும் யோசிக்காமல் உள்ளே
சென்றிருந்தான் பார்த்திபன்..
அங்கு
படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து இருந்தாள் அந்த குட்டியின்
அன்னை..படுப்பதற்கு இலகுவாக நைட்டி அணிந்திருந்தாள்..
அவன்
பார்வை அந்த குட்டியை தேடி சுழல, அந்த படுக்கையின் அருகே ஒரு
நாற்காலியில் 19 அல்லது 20 வயது இருக்கும்
ஒரு சிறு பெண் அமர்ந்து கொண்டு கையில் அந்த குட்டியை வைத்து குனிந்த படி கொஞ்சி கொண்டிருந்தாள்..
அவள்
குரல் தான் வெளியில் கேட்டிருக்க வேண்டும்..
திடீரென்று
உள்ளே வந்தவனை கண்டதும் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்திருந்தவள் திகைத்து பின் அவசரமாக
அருகில் இருந்த டவலை எடுத்து தன் மீது போட்டு கொண்டாள்...
அப்பொழுதுதான்
கதவை தட்டாமல் உள்ளே சென்ற தன் மடத்தனம் உரைத்தது
அவனுக்கு...
ஆனாலும்
சமாளித்து கொண்டு அவளை பார்த்து சிநேகமாக புன்னகைத்தான் பார்த்திபன்..
அவளும்
அவனை அடையாளம் கண்டு கொண்டு புன்னகைத்தவாறு வாங்க என்று அவனை வரவேற்றாள்..
திடீரென்று
கேட்ட குரலால் அதுவரை குனிந்து இருந்த மற்றொரு
பெண் நிமிர்ந்து வாயில் புறம் பார்க்க அங்கு
நின்றிருந்தவனை கண்டதும் ஷாக் ஆகி போனாள்..
அவனுமே
நிமிர்ந்த அந்த பெண்ணின் முகத்தை
பார்த்ததும் அதிர்ந்து போனான்..
அந்த
பெண்ணின் முகத்தில்
“ஐயோ
இவனா ?? “ என்ற பாவணையும் அவன்
முகத்தில் “ஐயோ கணேசா இவளா? “ என்ற அதிர்ச்சியும் இருவர் முகத்திலும் ஒரே நேரத்தில் தோன்றியது...
உள்ளே
வந்தவன் அப்படியே நின்றிருக்க அவனை கண்ட அந்த குட்டியின் தாய்
“உள்ள
வாங்க... “என்று மீண்டும் சிநேகமாக
புன்னகைத்து அவனை வரவேற்றாள்..
தன்னை
கண்டதும் இப்படி வந்து நிக்கறானே என்ற அருவெறுப்பும் கோபம் எதுவும் இல்லாமல்
சிநேகமாக அவள் புன்னகைத்தது அவனுக்கு இதமாக நிம்மதியாக இருந்தது...
இந்த
பெண் தான் நேற்று வலியில் அப்படி துடித்தாள் என்றால் யாரும் நம்பி இருக்க முடியாது.. அவள் முகத்தில் அப்படி
ஒரு வலி வேதனை நேற்று..
இன்றோ
அதெல்லாம் மறைந்து அந்த குட்டி தேவதையை பெற்றெடுத்த பெருமிதமும் பூரிப்பும்
முகத்தில் தெரிய, சிரித்த முகமாக அவனை
வரவேற்றது பெரும் ஆறுதலாக நிம்மதியாக
இருந்தது பார்த்திபனுக்கு..
இதே
அவன் சரியான நேரத்தில அந்த பெண்ணை கொண்டு வந்து சேர்த்திரா விட்டால் இந்த புன்னகை
அவள் முகத்தில் உறைந்து இருக்குமா?
என்ற கேள்வி வர,
“வாழ்க்கையில்
முதல் முறையா உருப்படியா ஒரு நல்ல காரியம் பண்ணி இருக்க பார்த்தா.!! “ என்று தட்டி கொடுத்தது அவன் மனச்சாட்சி..
அந்த
பெண் வரவேற்றதும் அவனும் தயங்கியவாறு மெல்ல முன்னேறி உள்ளே சென்றான்..
இவனை
கண்டதும் அதிர்ந்து போயிருந்த அந்த
மற்றொரு பெண்ணும் மெல்ல அந்த
குட்டியை கையில் தூக்கி கொண்டு
எழுந்து நின்றாள்..
அவனுமே
அந்த பெண்ணை கண்டதும் தான் அதிர்ந்ததை வெளி காட்டி கொள்ளாமல் தன்னை இயல்பாக்கி
கொண்டு படுக்கையின் அருகில் சென்றவன்
“மன்னிச்சுக்கங்க...
இங்க ஒரு சவாரிக்காக வந்தேன்.. அப்படியே பாப்பாவை பார்த்துட்டு போகலாம்னு
வந்தேன்.. பாப்பா நல்லா இருக்காளா?
உங்க உடம்புக்கு சுகமா இருக்கா? “என்றான் படுக்கையில்
அமர்ந்து இருந்தவளை பார்த்து..
ஆனாலும்
அவன் கண்கள் அந்த குட்டியிடமே சென்றது..
அவளும்
புன்னகைத்து
“ஹ்ம்ம்ம்
இப்ப பரவாயில்லை சார்.. நல்லா இருக்கேன்.. எல்லாம் உங்க உதவியால தான்.. நீங்க
மட்டும் சரியான நேரத்துல நேற்று என்னை இங்க கொண்டு வந்து அட்மிட் பண்ணாம
இருந்திருந்தா இந்நேரம் என் கதி என்னவாகி இருக்குமோ..? " என்று மீண்டும் கண் கலங்கி
தழுதழுத்தாள்..
"ஐயோ..
நீங்க விசனபடாதிங்க.. பச்ச உடம்பு நீங்க..இந்த நிலையில எதுவும் விசன படக்கூடாது னு
என் ஆத்தா சொல்லும்.. எல்லாம் அந்த கணேசன் இருக்கான் பார்த்துக்க..அவன்தான் என்னை
அங்க கொண்டு வந்து சேர்த்திருக்கணும்.. " என்று அவளை சமதானபடுத்தினான்..
அருகில்
இருந்த அந்த மற்றொரு பெண்ணோ ஒன்றும் புரியாமல் இருவரையும் பார்த்து திருதிருவென்று
விழித்து கொண்டு இருந்தாள்..
அதை கண்ட பெரியவள்
"சுபி..
இவர்தான் நேற்று என்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றியவர்.. நான் வீட்ல திடீர்னு கால்
இடறி கிழ விழுந்திட்டேன் இல்லை.. அப்பனு பார்த்து அம்மாவும் அங்க இல்லை.. உதவிக்கு
சத்தம் போட்டும் யாரும் வரல..
நல்ல
வேளை.. இவர் தான் ஓடி வந்து என்னை இங்க கொண்டு வந்து சேர்த்தார்.. அப்புறம்
அம்மாவுக்கும் இவர்தான் தகவல் சொன்னார்... " என்று புன்னகைத்தவள்
"சாரி
சார் ... எங்களை பற்றி சொல்லவே இல்லையே..
என் பெயர் சுமித்ரா.. எல்லாரும் என்னை சுமினு கூப்பிடுவாங்க.. இவ என் தங்கை
சுபத்ரா.. நாங்க சுபினு கூப்பிடுவோம்.. அப்புறம் நேற்று பார்த்திங்களே. அவங்க எங்க அம்மா துளசி..
சுபி வந்ததனால அம்மா வீட்டுக்கு போய்ருக்காங்க..
நீங்க உட்காருங்க..சுபி.. அந்த சேர் ஐ அவர்கிட்ட போடு.. " என்றாள்
புன்னகையுடன்..
அதை
கண்ட சுபத்ரா அவனை ஒரு எரித்துவிடும் பார்வை பார்க்க அவனோ சுமியிடம் திரும்பி
"அதெல்லாம்
இருக்கட்டும் ங்க.. நான் உட்கார வரலை.. பாப்பாவை பார்த்திட்டு போலாம்னு வந்தேன்..
நான் செத்த நேரம் பாப்பாவை தூக்கிக்கவா?
" என்றான் ஆசையாக
"ஓ..
தாராளமா... நீங்கதான் அவ உயிரையும் காப்பாத்திருக்கீங்க.. தாராளமா பாருங்க..
சுபி.. பாப்பாவை சார் கிட்ட கொடுடா.. " என்றாள்
“அக்கா....
“ என்று தயங்கியவாறு ஏதோ சொல்ல வர, அதற்குள் சுமித்ரா தன் தங்கையிடம்
கொடு என்று கண்ணால் ஜாடை காட்ட, மீண்டும் அவனை முறைத்தவாறே அந்த
குட்டியை பார்த்திபனிடம் கொடுத்தாள் சுபத்ரா...
அவள்
முறைப்பது தெரிந்தும் அதை கண்டு கொள்ளாமல்
அந்த குட்டியை ஆசையாக வாங்கியவன் அவள் முகம் பார்க்க, இவன் கை தொடுதலை கண்டு கொண்டவள்
உடனே உடலை வளைத்து தன் செப்பு வாயை ஆ வென்று திறந்து தன் சந்தோஷத்தை வெளிபடுத்தினாள்..
அதை
கண்டதும் அந்த குட்டியை கையில் ஏந்தியதும் அவன் உள்ளே அப்படி ஒரு பரவசம்
மீண்டும்...
அவளையே
இமைக்க மறந்து பார்த்தான்.. அந்த குட்டியும் இவனையே பார்த்திருந்தாள்..
பின்
மெதுவாக அந்த குட்டியின் கைகளை தொடப் போக
"ஹலோ..
ஹலோ.. அவளை தொடாதிங்க.. இன்பெக்ஷன் ஆகும்.. நீங்க ஆட்டோல எல்லாம் சுத்திட்டு
வந்திருப்பிங்க. கையை கூட கழுவாம அவளை தொடாதிங்க.. " என்று அவசரமாக தடுத்தாள் சுபத்ரா அவனை முறைத்தவாறு..
அதை கேட்டு அவன் முகம் தொங்கிவிட்டது..
அவன்
முகத்தையே ஆர்வமக பார்த்து கொண்டிருந்த அந்த குட்டியின் பட்டு கரங்களை தொட நீண்ட
தன் கரங்களை இழுத்து கொண்டான் பார்த்திபன் சிறு ஏமாற்றத்துடன்..
அவன்
வாடிய முகத்தை கண்ட சுமித்ரா
"சுபி..
அதெல்லாம் ஒன்னும் ஆகாது டா.. நேற்று கூட பிரசவத்திற்கு பிறகு இவர்தான்
முதல்ல பாப்பாவை வாங்கினார்.. "
என்று அவனுக்காக பரிந்து வந்தாள் சுமித்ரா..
"நீ
சும்மா இருக்கா. உனக்கு இதெல்லாம் தெரியாது..
ஒரு பிறந்த பச்சிளம் குழந்தையை எப்படி
ஹைஜீனிக்காக பார்த்துக்கணும்னு படிச்சிட்டுத்தான் வந்திருக்கேன்...
இப்படி
எல்லாம் கண்டவங்களும் தொடக் கூடாது.. இன்பேக்ட் இப்படி கண்ட இடத்திலயும் சுத்திட்டு வந்து கையை கூட
லழுவாமல் முதல்ல குழந்தையை தூக்கவே கூடாது.. " என்று மீண்டும் அவனை
முறைத்தாள்..
அவனும்
அதை கேட்டு அமைதியாக சிறிது நேரம் அந்த குட்டியையே தொடாமல் தள்ளி வைத்து பார்த்து கொண்டிருந்தவன் அதற்கு மேல்
அங்கு இருக்க முடியாது என தோன்ற மீண்டும் அந்த குட்டியை ஒரு முறை ஆசை
தீர பார்த்து விட்டு மனமே இல்லாமல்
சுபத்ராவிடம் கொடுக்க வந்தான்..
அவளும்
வேகமாக கையை நீட்டி வாங்க அவன் கை தெரியாமல் அவள் கை மீது உரசியது..
உடனேயே
தீச்சுட்டார் போல அவள் கையை வெடுக்கென்று இழுத்து கொண்டவள் அவனை பார்த்து மீண்டும்
ஒரு கார பார்வை பார்த்தாள்..
ஆனால்
அவனோ அவளை கண்டு கொள்ளாமல் அந்த குட்டியை அவள் கைகளில் கொடுத்தவன் அவளையே ஏக்கமாக பார்த்து
கொண்டிருதான்..
"ஹலோ..
மிஸ்டர்.. அதான் பார்த்தாச்சு இல்ல.. இன்னும் என்ன லுக்? ..கிளம்புங்க.. " என்று பொரிந்தாள் சுபத்ரா..
அதை
கேட்டவன் இந்த முறை திரும்பி அவளை
முறைத்து விட்டு சுமித்ரா பக்கம்
திரும்பியவன்
"பாப்பாவை
நல்லா பார்த்துக்கங்க.. ஏதாவது உதவி வேணும்னா கேளுங்க.. "என்று முடிக்கும்
முன்னே
“அதெல்லாம்
உங்க உதவி ஒன்னும் எங்களுக்கு வேண்டாம்.. எல்லாம் நாங்க பார்த்துக்கறோம்.. நீங்க
இவளை இங்க கொண்டு வந்து சேர்த்ததற்கு ரொம்ப நன்றி.. " என்று வெடுக்கென்று
கூறினாள் சுபத்ரா...
அதற்கு
மேல் அவனுக்கும் பேச ஒன்றும் இல்லாததால் சுபத்ரா கையில் இருந்த அந்த குட்டியை
மீண்டும் ஒரு முறை ஆசை தீர பார்க்க அந்த குட்டியோ அவனை பார்த்து சிரிப்பதை போல
இருந்தது..
அதை
அப்படியே மனதில் பதிய வைத்து கொண்டவன் அவளை பிரிய மனமே இல்லாமல் மெல்ல வாயிலை
நோக்கி நடந்தான்...வாயிலை கடக்கையிலும் நின்று திரும்பி அந்த குட்டியை மீண்டும் ஒரு முறை
பார்த்துவிட்டு வெளியேறி சென்றான்..
பார்த்திபன்
வெளியில் சென்றதும், தன் தங்கையின் பக்கம் பார்த்த
சுமித்ரா
"ஏன்
டி அவரை அப்படி விரட்டின?.. பார்க்க பாவமா
இருக்கார்.. பாப்பாவை பார்க்கத்தானே வந்தார்.. பார்த்துட்டு போகட்டுமே.. அதுக்கு எதுக்கு இப்படி அவரை விரட்டி விட்ட ? "என்று தன் தங்கையை முறைத்தாள் சுமித்ரா..
"உனக்கு
இந்த உலகமே தெரியாது கா.. வெளி ஆளுங்க, முன்ன பின்ன தெரியாத யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்பி விடக்
கூடாது..
இப்ப
புள்ள புடிக்கிறவங்க நிறைய பேர் சென்னையில சுத்தறாங்களாம்..
பாப்பா
வேற அழகா இருக்க இல்லை. இவன் பாட்டுக்கு வந்து யாரும் இல்லாத நேரம் இவளை
தூக்கிகிட்டு போய் யார் கிட்டயாவது வித்துட்டா ? .. அவன் ஆளும் மூஞ்சியும்
மொகறையும்.. பார்த்தாலே புள்ள புடிக்கிறவன் மாதிரிதான் இருக்கான..
அவனை
எல்லாம் அடிக்கடி இப்படி வந்து பாப்பாவை
பார்க்க அலவ் பண்ணாத.. ஒரு நாள்
இருக்க ஒரு நாள் பாப்பாவை தூக்கிட்டு போய்ட்டா? " என்று பயம் காட்டினாள் தன்
அக்காவுக்கு
"ஐயோ..
அப்படி எல்லாம் கூட பண்ணுவாங்களா? "என்றாள் சுமி
ஆச்சர்யமாக நம்பாமல்
"ஆமாம்
சுமி.. அதுக்குத்தான் நாம் எப்பவும் விழிப்புடன் இருக்கணும்.. ஏதோ ஆபத்துல உன்னை
கொண்டு வந்து சேர்த்தானா? அதோட விட்டுடணும் இல்ல..
இன்னைக்கு எதுக்கு திரும்பியும் வர்ரான்?..
வேணா பார் நாளைக்கும் பாப்பாவை
பார்க்கறேன் னு வந்து நிப்...... "
என்று சொல்லி முடிக்குமுன்னே அந்த அறையில்
நுழைந்திருந்தான் பார்த்திபன்..
“மன்னிச்சுக்கங்க..
ஆட்டோ சாவியை இங்கயே விட்டுட்டு
போய்ட்டேன்... " என்றவாறு படுக்கையின் அருகில் வந்தவன் அவன் நின்று
கொண்டிருந்த இடத்தில் படுக்கையின் ஓரமாக வைத்திருந்த சாவியை எடுத்து கொண்டு
சுபத்ராவை பார்த்து ஒரு முறை முறைத்து விட்டு சென்றான்...
அவளோ
தன் தோளை குலுக்கி கொண்டு தன் அக்காவை பார்க்க அவளுக்கோ தர்ம சங்கடமாக இருந்தது..
பார்த்திபன்
வெளியேறி சென்றதும்
"ஹே
சுபி.. உனக்கு வாய் கொஞ்சம் ஜாஸ்தி டி. இப்படியா பேசுவ?.. பாவம் அவர்.. நீ பேசினதையெல்லாம்
கேட்டிருப்பார்... அவர் மனசுக்கு கஷ்டமாக இருக்கும் இல்ல.. " என்றாள்
சுமித்ரா அவனுக்காக வருந்தி..
“கேட்கட்டுமே..
எனக்கு என்ன வந்தது? .. நாட்டுல நடக்கறத
சொன்னேன்.. அவன் நல்லவனா இருந்தால் அவனுக்கு எதுக்கு உரைக்கணும்.. " என்று
தோளை குலுக்கியவள் பின் அந்த குட்டியை கொஞ்ச ஆரம்பித்தாள்...
வெளியில்
வந்த பார்த்திபனுக்கு மனம் எல்லாம் கசந்து வழிந்தது...
அந்த
பெண் அவனை பற்றி சொன்னது எல்லாம் மீண்டும் அவன் காதில் ஒலிக்க, கால்கள் தானாக தன் நண்பன் கணேசனை
தேடி சென்றது..
Comments
Post a Comment