தாழம்பூவே வாசம் வீசு-6

 


தாழம்பூவே வாசம் வீசு - இப்பொழுது ஆடியோ நாவலாக வெளிவந்துள்ளது. கேட்டு பாருங்க ப்ரெண்ட்ஸ்..!  

அத்தியாயம்-6

ந்த சிறிய  மண்டபத்தின்  உள்ளே அமரும்படி இருந்த சிறு இடத்தில் சென்று  தூணுடன் சாய்ந்து அமர்ந்து கொண்டான்..

எதிரில் இவனை பார்த்து குறும்புடன் சிரித்து கொண்டிருந்த தன் நண்பனை கண்டவன் கடுப்பாகி

"டேய் கணேசா.. நான் உனக்கு என்ன பாவம் பண்ணினேன்?.. நேற்று ஒரு நாள் நான் சந்தோஷமா இருந்தது உனக்கு பொறுக்கலையா? அதுக்குள்ள என் சந்தோஷத்தை பறிச்சுக்க னு கங்கணம் கட்டிகிட்டு வந்திட்ட?

நேற்று அந்த குட்டி தேவதையை பார்த்து  எவ்வளவு சந்தோஷமா இருந்தேன்.. இன்னைக்கும் பார்க்கலாம்னு வந்தா அந்த பொண்ணு இல்லை இல்லை பிசாசு என்னை என்னா விரட்டு விரட்டறா?

பழைய பகையை இன்னும் மனசுல வச்சிருக்கா போல இருக்கு.. அப்ப இனிமேல் நான் அந்த குட்டிய பார்க்க முடியாதா? அவளை பார்க்க எனக்கு துடிக்குதே... நான் எப்படி பார்க்காமல் இருப்பேன்..? " என்று ஏதேதோ சொல்லி புலம்பி கொண்டிருந்தான்..

அவன் புலம்பலை கேட்டு காதில் ரத்தம் வர ஆரம்பிக்க அதற்கு மேல் தாங்க முடியாமல் அந்த கணேசன்  வீராச்சாமியின் மண்டையில் ஓங்கி ஒரு குட்டு வைக்க,  அதில் விழித்து கொண்ட வீராச்சாமி அடுத்த நொடி பார்த்திபனை அழைத்தார்..

திடிரென்று ஒலித்த கைபேசியை கண்டவன் அவசரமாக அதை தன் பாக்கெட்டில் இருந்து  எடுத்து காதில் வைக்க, வீராச்சாமிதான் அழைத்திருந்தார்.. 

அதே வழக்கமாக பாடும் பாட்டுத்தான்.. இவனும் அவர் திட்டியதை  எல்லாம் இந்த காதில் வாங்கி  அந்த காதில் விட்டு கொண்டு அவருக்கு வெறுமனே  ம்ம் சொல்லி கொண்டிருந்தான்.

ஒரு வழியாக தன் டயலாக் எல்லாத்தையும் சொல்லி முடித்தவர்

"என்ன ல பார்த்திபா ? .. சொன்னது எல்லாம் மண்டைல ஏறுச்சா ல.. இல்ல இந்த காதுல வாங்கி  அந்த காதில விட்டுட்டியா? “ என்றார் முறைத்தவாறு

“ஆஹா... எப்படி கரெக்ட் ஆ கண்டுபுடிச்சிட்டாரே...! ” என்று அவசரமாக திடுக்கிட்டவன்

“ஹீ ஹீ ஹீ அதெல்லாம் சரியா கேட்டுகிட்டேன் ணே... “ என்று அசட்டு சிரிப்பை சிரித்தான்...

“ஹ்ம்ம்ம்  இன்னைக்கும் நல்லா கலெக்ஷன் ஆகணும் ல... ஏதாவது சொதப்பி  சரியா கலெக்ஷன்  ஆகல, உன் சம்பளத்துல இருந்து தான் புடிப்பேன்..பொறுப்பா நடந்துக்க... " என்று  மிரட்டி அலைபேசியை அணைத்தார்..

பார்த்திபனும் கடுப்பாகி தன் கைபேசியை அணைத்து அதை தன் பாக்கெட்டில் போட்டவன்

"ஆமாம்.. பொல்லாத சம்பளம்.. என்னமோ லட்சம் ரூபா  சம்பளமா கொடுக்கிற மாதிரி ஆனா ஊனா என் சம்பளத்துல புடிக்கறேனு சொல்றான் இந்த பக்கி...

புடிச்சா  புடிச்சுக்குயா... " என்று  மூஞ்சிலயே சொல்லிட்டு அந்த ஆட்டோ சாவியை  தலைய சுத்தி அவன் மூஞ்சியில விட்டெறிந்து விட்டு போகணும் போல உள்ளே கொதித்தது பார்த்திபனுக்கு..

“ஆனால் அடுத்த  நேரம் சாப்பாட்டுக்கு துட்டு வேணுமே.. ஏதோ இந்த வீராச்சாமி திட்டினாலும் அன்றாட வயிற்றை கழுவ கொஞ்சம்  துட்டும்,  ராத்திரி படுத்துக்க ஏதோ ஒரு ஓட்ட  கூரையாவது  கொடுத்திருக்கான்..

அதையும் கெடுத்துக்க வேணாம்.. " என அவசரமாக யோசித்தவன் தன் கோபத்தை குறைக்க முயன்றான்..

ஆனாலும் குறையாமல் உள்ளே கொதித்து கொண்டிருக்க, உடனே அந்த  குட்டி தேவதையின் முகத்தை  நினைவுக்கு கொண்டு வர, அடுத்த நொடி  உதட்டில் தானாக புன்னகை மலர்ந்தது...

உடனே அவன் கோபம் ஆத்திரம் எல்லாம் வடிந்து விட, மனதில் உற்சாகம் பரவ, எழுந்தவன்

"இப்ப மனசு லேசாய்டுச்சு நண்பா... அப்பப்ப இப்படி வந்து கொஞ்சம்  என்னை மலை இறக்கி விடு... வரட்டா.. " என்று கையை நெற்றியின் பக்கவாட்டில்   வைத்து ஸ்டைலாக வணக்கம் சொல்லியவன் சிரித்தவாறே அந்த மருத்துவமனையின்  வாயிலை நோக்கி துள்ளலுடன் நடந்தான் பார்த்திபன்...

கூடவே

எனக்கும் ஒரு காலம் வரும்..  காலம் வந்தால் வாழ்வு வரும்

வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்பேனே...

 

என உல்லாசமாக விசில் அடித்து பாடலை தனக்கு பிடித்த மாதிரி மாற்றி  பாடிய படி தன் தலையை பின்னால் தடவியவாறே உற்சாகத்துடன் தன் ஆட்டோவை நோக்கி சென்றான் பார்த்திபன்...

அவன் இருந்த உற்சாகத்தில் அவன் நண்பன் கணேசன் அவனுக்கு போட்டு வைத்திருக்கும் கட்டத்தை அறியாமல் துள்ளலுடன் சென்றான்...

அதை கண்ட கணேசனும் தன் நண்பனுக்கு வைத்திருக்கும் ஆப்பை நினைத்து  குறும்பு சிரிப்பை சிரித்து கொண்டான்... 

மேலும் மூன்று நாட்கள் நகர்ந்து இருந்தது..

இந்த மூன்று நாட்களில் பார்த்திபன் மிகவும் உற்சாகமாக இருந்தான்..

தினமும் காலையில் எழும்பொழுதே அந்த குட்டியின் முகத்தை தான் நினைத்து கொள்வான்.. அவளின் அந்த சிரித்த முகம் கண் முன்னே வந்தாலே அவனுள் ஒரு உற்சாகம்,  பரவசம் வந்துவிடும்...

அதே உற்சாகத்தோடு தன் தண்டால் பயிற்சியை செய்து குளித்து முடித்து நெற்றியில் விபூதியை வைத்து கொண்டு துள்ளலுடன் வீராச்சாமியிடம்  ஆட்டோ சாவியை வாங்கி கொண்டு  தன் ஆட்டோவை ஸ்டார்ட் பண்ணுவான்...

அதே சென்னை.. முன்பு பார்த்த அதே இடம் தான்.. அதே மனிதர்கள் தான்.. ஆனால் முன்பெல்லாம் சவாரிக்கு வருபவர்களிடம் எரிஞ்சு விழுவான்..அவன் முகத்தை பார்த்தாலே ரவுடியை போல இருக்க, பயந்து கொண்டு யாரும் இவன் ஆட்டோவில் ஏற மாட்டார்கள்..

அவசரமாக போக வேண்டும்  என்பவர்கள் மட்டுமே இவன் முகத்தை  சகித்து கொண்டு இவன் ஆட்டோவிற்கு  வருவர்..

ஆனால் இப்பொழுது அவன் நெற்றியில் இருந்த விபூதியும் அவன் உதட்டில் அப்பப்ப தோன்றி மறையும் புன்னகையும் அவனை கொஞ்சம் இலகுவாக்கி இருக்க, பாறை போன்று  இறுகி இருந்த அவன் முகம் கொஞ்சம் கொஞ்சமாக இலக ஆரம்பித்து  இருந்தது..

அதனாலயே என்னவோ மக்களும் அவனை கண்டு முகம் சுளிக்காமல் அவன் ஆட்டோவிற்கு வந்தனர்...

மதியம் வரை உற்சாகத்துடன் சவாரி செய்பவன் மூன்று  மணிக்கு மேல் தன்னை கட்டுபடுத்த  முடியாது..

இருக்கிற சவாரியை முடித்து கொண்டு அந்த மருத்துவமனையை நோக்கி ஆட்டோவை முறுக்கி விடுவான்..

ந்த குட்டி பிறந்த நாளைக்கு அடுத்த நாளும் அவளை பார்க்க சென்றிருக்க, அன்று  சுபத்ரா அவனை திட்டியதில் கொஞ்சம் வருந்தினாலும் அந்த குட்டியின் முகம் அவனை அடுத்த நாளும் அங்கே  இழுத்து சென்றது...

அடுத்த நாள் அங்கு செல்ல கூடாது என தன்னை உறுதியாக்கி கொண்டவன் தன் வேலையை பார்க்க, மதியம் வரை ஓரளவுக்கு தாக்கு பிடித்தான்..

ஆனால் மணி மதியம் இரண்டை தாண்டியதும் அவன் உள்ளே அரிக்க ஆரம்பித்தது..

அந்த குட்டியை  பார்க்க கண்கள் தவிக்கவும் அவளை தூக்கி அணைக்க கைகள் துடிக்கவும் அதற்கு மேல் அவனால் தாக்கு பிடிக்க முடியாமல் தன் ஆட்டோவை முறுக்கினான் அந்த மருத்துவமனையை நோக்கி..  

கிட்டதட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலயே இருக்கும்.. நகரத்தில் இருந்து அந்த மருத்தவமனைக்கு செல்ல. ஆனாலும் சலிக்காமல் சென்று விடுவான்..

அடுத்த நாள் பார்வையாளர் நேரத்தில் அந்த மருத்துவமனையை அடைந்தவன்  துள்ளலுடன் அந்த அறையை நோக்கி சென்றான்..

இந்த முறை மறக்காமல் கதவை தட்டி விட்டு உள்ளே செல்ல, அன்றும் அந்த பிசாசு சுபத்ரா அங்கு இருந்தாள்..நேற்றை போலவே அன்றும்  அந்த குட்டியை கொஞ்சி கொண்டிருந்தாள்.

அதை கண்டதும் அவள் மீது பொறாமையாக இருந்தது பார்த்திபனுக்கு...

“இப்படி நானும் இந்த  குட்டியை எப்பவும்  பக்கத்தில் இருந்து  கொஞ்ச முடியலையே..”  என்று ஏக்கமாக இருந்தது..

கதவை தட்டிவிட்டு அறைக்கு உள்ளே செல்ல, அவனை கண்டதும் திடுக்கிட்ட சுபத்ரா பின் தன்னை சமாளித்து கொண்டு தன் அக்காவிடம் கண்ணால் ஜாடை காட்டி

“பார்த்தியா..நேற்று நான் சொன்னது சரியா போச்சா..? ” என்று லுக் விட்டாள்..

சுமித்ரா க்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை..

ஏனோ  அவனை பார்த்தால் கெட்டவனாக தெரியவில்லை..

“அப்படி கெட்டவனாக இருந்திருந்தால் நான் அலறியதை  கேட்டு தெரிந்த பக்கத்து வீட்டில் இருந்தே யாரும் உதவிக்கு வராத பொழுது யாருனே தெரியாத  இவர்  ஏன் எனக்கு உதவ வந்தார்?..

இங்கு கொண்டு வந்து சேர்த்ததோடு  நில்லாமல் என் பிரசவம் முடியும் வரைக்குமே இங்கயே இருந்து என் குழந்தையையும் வாங்கி பத்திரமாதானே பார்த்துகிட்டார்.. அப்ப எப்படி கெட்டவன் ஆவான்?  என்று உள்ளுக்குள் தன்னையே கேட்டு கொண்டாள்..

பார்த்திபனை கண்டதும் சுபத்ரா முறைத்து உதட்டை வளைத்து ஏளனமாக சிரித்து பழிப்பு காட்ட, சுமித்ராவோ அவனை பார்த்து சிநேகமாக புன்னகைத்தாள்..

“மன்னிச்சுக்கங்க.. இந்த பக்கமா வந்தேன்.. அப்படியே பாப்பாவை பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்... “ என்றான் தயங்கியவாறு..

“ஹலோ மிஸ்டர்.. நான்தான் நேற்றே சொன்னேன் இல்லை.. இப்படி எல்லாம் அடிக்கடி வந்து நிக்க கூடாது  .. சும்மா சும்மா வராதிங்க..னு  “ என்று வெடுக்கென்று பேசினாள் சுபா..

அதை கண்டு அவன் மனம் வாட அதை தாங்காமல்

“சுபி.. நீ சும்மா இரு... அவர் பாப்பாவை பார்க்காதானே வந்திருக்கிறார்... பார்த்துட்டு போகட்டும்... நீங்க பாருங்க சார்.. சுபி.. பாப்பாவை அவர் கிட்ட கொடு. “ என்று இன்றும் அவனுக்காக சப்போர்ட் பண்ணினாள் பெரியவள்..

“ஐயோ.. நீ வேற சுமி.. அவன்..... அவர்...  கையெல்லாம் பார்..  எப்படி கருகருனு இருக்கு... அந்த கையில் பாப்பாவை தூக்கினா அந்த கருப்பெல்லாம் ,  அழுக்கெல்லாம் இவளுக்கும் ஒட்டிக்கும்..

வேணா தூக்காமல் எட்டி நின்னு பார்த்துட்டு போகட்டும்.. “என்று முகத்தை சுளித்தாள்..

“இந்த சானிடைசரை போட்டுகிட்டா அதெல்லாம் ஒன்னும் ஆகாது..

சார்.. நீங்க இதை கையில கொட்டி தேய்ச்சுகிட்டு பாப்பாவை பாருங்க.. “ என்றாள் சுமி  புன்னகைத்தவாறு..

“இந்த அக்கா ஏன் இப்படி இவனுக்காக பரிந்து வருகிறாள்..?  ஓ நன்றி கடனா? ஆபத்துல காப்பாத்தினா  அதோட விட்டுடணும்.. எதுக்கு இந்த ரவுடி இல்ல  காட்டான்  அடிக்கடி இங்க வர்ரான் ? ..” என்று  யோசித்தவாறு தன் அக்காவை முறைத்தாள் சுபா..

அவளும் தன் தங்கைக்கு கண்ணால் ஜாடை காட்டி அந்த குட்டியை கொடுக்க சொல்ல, அதற்குள் பார்த்திபன் படுக்கையின் அருகில் இருந்த சானிடைசரை தன் கையில்  கொட்டி தேய்த்து கொண்டு ஏக்கத்துடனும்  ஆர்வத்துடனும் சுபத்ராவை பார்த்தான்..

அவளும் அவனை முறைத்து கொண்டே அந்த குட்டியை அவன் கையில் கொடுக்க, இந்த முறை தன் கை அவன் கையில் படாமல் கவனமாக குழந்தையை கொடுத்தாள்...

அந்த குட்டியை வாங்கியவன் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்.. பூரிப்பு..

அவளையே ஆசையாக பார்க்க, அந்த குட்டி தேவதையும் இவனை பார்த்து அழகாக புன்னகைப்பதை போல இருந்தது..

அதில் இன்னும் பரவசமானவன் மீண்டும் தன் முரட்டு கையால் மெல்ல அவளை  பிடித்து கொண்டு மற்றொரு கையால் அந்த  குட்டியின் பிஞ்சு  கையையும் காலையும் தொட்டு பார்த்தான்..

மீண்டும் ஒரு முறை உள்ளுக்குள் சிலிர்த்தது... இந்த மாதிரி ஒரு பரவசத்தை அவன் அனுபவித்தது இல்லை.. இறுகி போயிருந்த அவன் உள்ளே மழைச்சாரலாக அந்த குட்டியின் ஸ்பரிசம் சிலிர்க்க வைத்தது...

அவளையே ஆசையோடு பார்த்து கொண்டிருக்க, மற்ற இரு பெண்களும் அவனையே பார்த்து கொண்டிருந்தனர்....

சுபத்ராவுக்கோ பழைய சம்பவம் மனதில் ஓட,

“அன்னைக்கு காட்டான், ரவுடி மாதிரி நடந்துகிட்டவன் இன்னைக்கு எப்படி இந்த குட்டி கிட்ட இவ்வளவு  கனிவா நடந்துக்கறான்..?

இவன் நல்லவனா ?  கெட்டவனா ?  இவன் ஏன் தினமும் இங்க வர்ரான்? இவன் நோக்கம் தான் என்ன? சீக்கிரம் கண்டுபுடிக்கணும்.. ஒருவேளை உண்மையாலுமே நல்லவன் மாதிரி நடிக்கிறானோ?  எதுக்கும் விழிப்போடு இருக்கணும். “ என்று தனக்குள்ளே சொல்லி கொண்டாள் சுபத்ரா..

தே நேரம் அன்று  பார்த்த அந்த  பெண்மணியும் கையில் ஒரு பையுடன் உள்ளே வந்தார்..

பார்த்திபனை கண்டதும் லேசாக அதிர்ந்து பின் மெல்ல சமாளித்தவர் அவனை பார்த்து இலேசாக புன்னகைத்து

“என்ன தம்பி.. இந்த பக்கம்? “ என்றார் கேள்வியாக

“ஆங்... வந்து... இந்த ஆஸ்பத்திரிக்கு ஒரு சவாரிக்காக வந்தேங்க.. அதான் அப்படியே பாப்பாவை பார்த்துட்டு போலாம் னு.... “ என்று  இழுத்தான்..

“அதெப்படி.. கரெக்ட் ஆ இந்த  நேரம் மட்டும் உனக்கு சவாரி இந்த  பக்கமாவே  கிடைக்குது? “ என்றாள் சுபத்ரா நக்கலாக

அவன் பதில் சொல்லாம்ல் அவளை முறைக்க,

“ஹ்ம்ம் என் பேத்தியை பார்க்க ஆயிரம் கண் வேணுமாக்கும்.. எனக்கே வீட்டுக்கு போனால் எப்படா  இவளை வந்து பார்க்கணும் னு இருக்கு.. அதான் நானும் சாயந்திரம் வரைக்கும் காத்திருக்காமல் இப்பயே ஓடி வந்திட்டேன்..

இந்த தம்பிக்கும் அதே போல பார்க்கணும் போல இருந்திருக்கும்.. அதான் வந்திருக்கிறார்.. நீ பார்த்துட்டு போப்பா.. “ என்று  சிரித்தார் சுபி மற்றும் சுமியின் அன்னை துளசி..

அதை கேட்டு அவனுக்கும் அப்பாடா என்று நிம்மதியாக இருந்தது

“நேற்று மாதிரி இந்த அம்மா விரட்டாம போச்சே.. ஆனால் அம்மாக்கு பதிலா அவர் பெத்த இந்த பிசாசு என்னை விரட்டறாளே.. என்னை சந்தேகமாவே பார்க்கிறாளே.. ராட்சசி.. “

என்று  மனதுக்குள் கருவி கொண்டவன் துளசியை பார்த்து  மெல்ல புன்னகைத்து சிறிது நேரம் அந்த குட்டியை தன் கையிலயே  வைத்திருந்தவன் பின் நேரம் ஆவதை உணர்ந்து அந்த குட்டியை துளசியிடம் கொடுக்க வந்தான்..

அவளோ இவன் பக்கமே பார்த்து கையை காலை ஆட்டினாள்..

இவனை பார்த்து போகவேண்டாம் என சொல்லுவதை போல இருந்தது..

அதை கண்டு அவனுக்கு ஆச்சர்யம்.. அவன் மட்டும் அல்ல அங்கிருந்த மூன்று  பெண்களுக்குமே ஆச்சர்யம்தான்..

வாய் திறந்து சொல்லவில்லை என்றாலும் அந்த குட்டியின் உடல் மொழி புரிந்தது அவர்களுக்கு.

“ஒரு வேளை இவன் தான் அந்த குட்டியை முதலில் வாங்கியது.. அதனால் அவன் முகத்தை நன்றாக பார்த்து கொண்டாளா? அதான் இப்படி அவனை பார்த்தால் மட்டும் இப்படி சந்தோஷமா ரியாக்ஸன் காட்டறாளோ. ?. “ என்று யோசித்து கொண்டிருந்தனர்..

பார்த்திபனும் மனமே இல்லாமல் அவளை துளசியிடம்  கொடுத்து விட்டு அவள்  கையை மீண்டும் ஒரு முறை தொட்டு பார்த்து பின் அவள் கன்னத்தை மெல்ல வருட, அதில் அவளும் மலர்ந்து சிரித்ததை போல இருந்தது..

அதை கண்ணில் நிறைத்து கொண்டு துளசியிடம் திரும்பியவன்

“பாப்பாவை நல்லா  பார்த்துக்கங்க..என்ன உதவினாலும்.... “ என்று சொல்ல வந்தவன் அருகில் நின்றிருந்த சுபத்ராவை கண்டதும் பாதியில் நிறுத்தி கொண்டு

“நான் வர்ரேங்க...   “ என்று  சொல்லி திரும்பி திரும்பி பார்த்தவாறே வெளியேறினான்..

அவன் வெளியேறி  சென்றதும் அவன் திரும்பி வரவில்லை என்று உறுதி செய்து கொண்டவள்  தன் அன்னையிடம் திரும்பிய சுபத்ரா

“என்ன மா ?  அக்காக்கு  தான் அறிவு இல்லைனா நீயும் புத்தி கெட்டு போய் இருக்க?... அந்த ஆளை எதுக்கு பாப்பாவை பார்க்க  அலவ் பண்ணின? .. பார்க்கவே பயங்கரமா இருக்கான்.. இவன்கிட்ட எல்லாம் எப்படி பாப்பாவை கொடுக்க முடியும் .. வர வர உனக்கும் புத்தி கெட்டு போச்சு..” என்று கொதித்தாள்..

“சுபி கண்ணா... அந்த தம்பியை பார்த்தா நல்லவன் மாதிரி தான் டா இருக்கான்... பாப்பாவைத் தான பார்க்க வர்ரேன்றான்.. பார்த்துட்டு போகட்டும்.. நாம தான் கூடவே இருக்கோமே.. நம்மள மீறி அப்படி என்ன செய்துட போறான்...” என்று  சமாதான படுத்தினார் துளசி தன் இளைய மகளை...

“ஹ்ம்ம்ம் என்னமோ போங்க.. உங்க இரண்டு பேருக்கும் பட்டால்தான் தெரியும்.. நான் சொன்னால் மண்டையில் ஏறாது.. “என்று இருவரையும் பார்த்து  முறைத்து கழுத்தை நொடித்தாள்..

தற்கு அடுத்த நாளும் அங்கு சென்று  நின்றான்.. நல்ல வேளையாக அந்த பிசாசு இல்லை.. துளசி மட்டும் தான் இருந்தார்..

அப்பதான் நிம்மதியாக இருந்தது பார்த்திபனுக்கு.. துளசியிடம் சொல்லி விட்டு அந்த குட்டியை தூக்கி கொஞ்சி அவளை தொட்டு தடவி என சொர்க்கமாக இருந்த  ஐந்து  நிமிடங்களை அனுபவித்தவன்  பின் கிளம்பி சென்றான்...

அதை எல்லாம் நினைத்து பார்த்தவன் மனதில் இன்றும் உற்சாகம் பொங்கி வழிந்தது...

கடந்த மூன்று நாட்களை  போலவே இன்றும் அவன் மனம் அங்கயே இழுத்து சென்றது...

சரியாக நான்கு  மணிக்கு அந்த மருத்துவமனைக்கு சென்றவன் வேகமாக படிகளில்  தாவி ஏறி அறை எண் 108 ஐ அடைந்து கதவை தட்டி திறக்க,  அங்கு கண்ட காட்சியை கண்டு அப்படியே அதிர்ந்து உறைந்து நின்றான் பார்த்திபன்...

Comments

  1. Actually it was very good when we read your story than listening g to the audio. Also there is a lot of delay in updating the episodes which is a big disappointment to many of us.

    ReplyDelete

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!