என்னுயிர் கருவாச்சி-5

 


மற்ற அத்தியாயங்களை படிக்க,


 இங்கே கிளிக் பண்ணுங்க..!


அத்தியாயம்-5


து ஒரு வார இறுதி சனிக்கிழமை..!  

வாழைக்காட்டில் வாழை மரங்களுக்கு உரம் வைத்துக் கொண்டிருந்தாள் பூங்கொடி.

கன்னு நட்டு ஆறாவது மாதம் நடந்து கொண்டிருக்க, பருவத்து இளம் கன்னி பெண்களைப் போல வனப்புடன் வளர்ந்து நின்றது வாழை மரங்கள்.  அந்த தோட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு மரமுமே அவளுக்கு தோழியைப்போல... உடன் பிறவா சகோதரியைப்போல

நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு இந்த தோட்டத்திற்கு வந்துவிடுவாள் பூங்கொடி.

ஒவ்வொரு மரத்தையும் தொட்டு தடவி, கட்டி அணைத்து, அதன் வளவளப்பான மட்டையில் தன் கன்னத்தை ஒட்டி வைத்து முத்தமிட்டு, பின் ஒற்றைக்கையில் அந்த மரத்தை பிடித்துக்கொண்டு, மற்றோரு கையை வீசி அந்த மரத்தை சுற்றி சுழன்று வருவாள்.

அந்த மரங்களும் அவளை பார்த்து உற்சாகத்துடன் மலர்ந்து சிரிப்பதை போல இருக்கும் அவளுக்கு. 

எப்பொழுதும் அந்த தோட்டத்திற்கு வந்தால், மனம் கிளர்ந்து போகும் பூங்கொடிக்கு.

அப்படி இருந்தவளுக்கு இன்று எதிர்மறையாக, அவள் முகத்தில்  எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது 

அவ்வபொழுது தன் அன்னையை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள் பூங்கொடி.

கல்லூரி இருக்கும்  ஐந்து நாட்களும் காலையில் சீக்கிரம் எழுந்து வாசல் தெளித்து,  கோலம் போட்டு, ஆடு மாட்டுக்கெல்லாம் தீனி போட்டு, தண்ணி வைத்து, கூடவே தன் அன்னை சிலம்பாயிக்கு சமையலில் உதவி செய்து  பின் அரக்கபரக்க கிளம்பி,  அந்த எட்டரை மணி பஸ்சை  புடிச்சு காலேஜுக்கு ஓட வேண்டும்.

அதன் பிறகு வீடு திரும்ப மாலை மணி ஆறு ஆகிவிடும்.  

வீட்டுக்கு வந்ததும் ரெப்ரெஸ் ஆகிக்கொண்டு, தன் அன்னை போட்டு வைத்திருக்கும் வரக்காபியை(ப்ளாக் காபி) குடித்து விட்டு,  தன் தம்பி  தங்கையுடன் வம்பு இழுத்து விளையாடுவாள்.

அது பொறுக்காமல்,  ஆட்டை பிடித்து கட்டு ,  மாட்டைப் பிடித்துக் கட்டு,  தண்ணி வை, என்று அவளை விரட்டிக் கொண்டே தான் இருப்பார் சிலம்பாயி.

அதற்கு பிறகு தன் தம்பி, தங்கைக்கு பாடம் சொல்லி கொடுக்க, அவள் பாடத்தை படிக்க, இரவு சாப்பிட்டதும் பாத்திரத்தை துலக்கி வைக்க,  என படுக்கைக்கு செல்லும் வரைக்குமே ஏதாவது வேலை இருந்து கொண்டேதான் இருக்கும்

அட்லீஸ்ட் இன்னைக்காவது காலையில் சீக்கிரம் அரக்கபரக்க  எழுந்திருக்காமல், இழுத்துப் போர்த்தி  நன்றாக தூங்கலாம் என்று முதல் நால் இரவு எண்ணியிருக்க,  அதற்கு ஆப்பு வைத்துவிட்டார் அவள் அன்னை சிலம்பா....

அதிகாலை கொட்டும் பனிக்குளிருக்கு நன்றாக இழுத்து போர்த்தி உறங்கி கொண்டிருந்தவளை,  அதிகாலையிலயே எழுப்பி, வழக்கம் போல வீட்டு வேலைகளை செய்ய வைத்து கொடுமை படுத்தினார்  சிலம்பா.

அதோடு நின்று விடாமல், இன்னைக்காவது தன் ஆத்தா ஏதாவது வித்தியாசமாக காலை உணவை செய்து தராதா என்று ஆவலுடன் எதிர்பார்த்தவளுக்கு,  அடுத்த ஆப்பு கிடைத்தது.

நேற்று இரவே கிண்டி, பானையில் போட்டு   ஊற வைத்திருந்த கம்மஞ்சோற்றில், பசும்மோரை ஊற்றி,  கரைச்சி, பிள்ளைகள் மூவரையும் வரிசையாக அமர வைத்து  ஆளுக்கு ரெண்டு டம்ளர் கொடுத்து குடிக்க வைத்து அனைவரையும் வயலுக்கு அழைத்து,  இல்லை இல்லை இழுத்துக் கொண்டு வந்துவிட்டார் சிலம்பாயி.

இன்னைக்கு ஒரு நாளாவது நல்லா தூங்கலாம்...அக்கம் பக்கத்து தோழிகளுடன் அரட்டை அடிக்கலாம்...மதியம் அவர்களோடு சேர்ந்து கண்ணாம்மூச்சியும்,  பல்லாங்குழியும் விளையாடலாம் என்று எண்ணியிருந்தவளுக்கு மீண்டும் ஆப்பு வைத்தார் சிலம்பாயி...

இப்பொழுதெல்லாம் வயலில் வேலை செய்ய ஆள் கிடைக்காததால்,  கிடைக்கும் ஆட்களை வைத்து இரண்டு நாளில் முடிக்க வேண்டிய வேலையை ஒரு வாரம் இழுக்கடிக்க வேண்டியதாக இருந்தது.

அப்படியும் ஆட்கள் இல்லாத பொழுது,  தன் மகளையும் அழைத்துக்கொண்டு சென்று விடுவார் சிலம்பாயி .

பூங்கொடி வீட்டில் இல்லாததால் சின்னதுகளை வீட்டில் விட முடியாமல் அவர்களையும் சேர்த்தே வயலுக்கு இழுத்துக் கொண்டு சென்றுவிடுவார்.

அன்று முழுவதுமே வயலில்தான் கழிக்க வேண்டும்.

சிறியவள் மலர்க்கொடி கூட அவளால் முடிந்த வேலையை செய்து வைப்பாள்.

ன்று வாழை மரங்களுக்கு  உரம் வைக்க வேண்டும்..!  

முடிந்த அளவு ஒரே நாளில் ஒரு ஏக்கருக்கும் வைக்க வேண்டும்...

ஆள் குறைவாக இருக்க, தன் மகளையும் உதவிக்கு என்று இழுத்துக்கொண்டு வந்து விட்டார் சிலம்பாயி.

நெல்லைப் போல நடவு நட்டதும்,  அடுத்த மூன்று மாதத்தில் அறுவடை செய்து விட முடியாது வாழைக்கு.

வாழைக்கன்றை நட்டதில் இருந்து,  பத்து மாதம் வரைக்கும் ஒரு தாய் தன் வயிற்றில் வளரும் பில்ளையை பொத்தி பொத்தி வளர்ப்பதைப் போல பத்திரமாக பார்த்து பார்த்து வளர்க்க வேண்டும்.

ஒவ்வொரு முப்பது நாளைக்கும் தேவையான ஊட்டச்சத்தை உரமாக கொடுக்க வேண்டும். அப்பொழுதெல்லாம் இயற்கை விவசாயம் மறைந்து செயற்கை உரங்களைத்தான் மக்கள் அதிகம் நாடினர்.

ஒவ்வொரு வாழை மரத்தை சுற்றியும், அரை வட்ட வடிவில்  பாத்தியை   அமைத்து,   அதில்   தழைமணிசாம்பல் சத்தை தேவையான விகிதத்தில் கலந்து இட வேண்டும்.  அதன் பின் தோண்டியிருந்த மண்ணை மீண்டும் மூடி, நீர் பாய்ச்ச வெண்டும்.

அதன்படி பூங்கொடி கையில் ஒரு கொத்தை கொடுத்து, பாத்தியை பறிக்கும்  வேலையை  வைத்துவிட்டார் சிலம்பாயி.  

அந்தக் கடுப்பில் தான் தன் அன்னையை முறைத்துக் கொண்டிருந்தாள் பூங்கொடி...!

பூங்கொடியும், அவள் தோழி கோமதியும் ஆளுக்கொரு வரிசையில் பாத்தி பறித்துக்கொண்டு செல்ல, பின்னால் சிலம்பாயி கூடையில் கொட்டி வைத்திருந்த உரத்தை அள்ளி அந்த குழியில் போட, தணிகாசலம் அதை மூடிக்கொண்டே வந்தார்.

பின்னால் தோண்டி இருந்த குழியில் உரத்தை போட்ட சிலம்பாயி, முன்னால் இருந்த தன் மகளின் முறைப்பை கண்டு கொண்டவர்,

“ஏன் டி முறைக்கிற? “ என்று முறைத்தார்.

“பின்ன? காலங்காத்தால இழுத்து போர்த்தி தூங்கற புள்ளையை  நீ பாட்டுக்கு வயக்காட்டுக்கு இழுத்துகிட்டு வந்துட்டா,  முறைக்காம என்ன பண்ணுவாளாம்? இன்னைக்கு ஒரு நாளைக்காவது புள்ளைய தூங்க விட்டிருக்கலாம்  இல்ல... தன் மகளுக்காக பரிந்து வந்தார் தணிகாசலம்.

அப்படி சொல்லுப்பா...நீதான் என் தங்க அப்பா.. என் செல்ல அப்பா... இந்த சிலம்பா பேட் கேர்ள்..” என்று தன் தந்தையை பார்த்து புன்னகைத்து, தன் அன்னையை பார்த்து முறைத்தாள்  பூங்கொடி

“ஹ்ம்ம்ம் ராஜகுமாரி மாதிரி இழுத்து போர்த்தி தூங்கலாம் தான்.. அதுக்கு அந்த ராஜகுமாரிய பெத்த ராசா   சம்பாரிச்சு வச்சிருக்கோணும் இல்ல. இழுத்து போர்த்து தூங்கினால், கொஞ்ச நேரத்துல வயிறு கத்துமே... அதுக்கு சோறு போட வேணாம்...

அதுக்கு இப்படி வேலை செய்தால்தான்  வருமாக்கும்...” என்று கழுத்தை நொடித்தாள் சிலம்பாயி.

“ஆமா...யாருக்கு வேணும் உன் சோறு.. என்னமோ மூனு வேளையும் வாய்க்கு ருசியா விதவிதமா சமைச்சு  விருந்து வைக்கிற மாதிரி இல்ல பீத்திக்கிற. குடிக்கிறது அந்த வீணாப்போன  கம்மங்கூலு.

அதுக்கு இப்படி கை வலிக்க,, காப்பு காச்சு போற அளவுக்கு மாங்கு மாங்குனு வேலை செய்யணுமாக்கும்...” பூங்கொடியும் திருப்பி கொடுத்தாள் தன் அன்னைக்கு.

“ஏன் டி... என்னமோ இப்பதான் முதல் தடவை உன்னை இந்த வேலையை செய்ய சொன்ன மாதிரியில்ல சலிச்சுக்கிற?   நீ பத்து வயசுல இருந்து செஞ்ச வேலைதான?

அதுவும் நான் வேண்டாங்க, வேண்டாங்க நானும்தான் செய்வேன் னு அடம்புடிச்சு செஞ்சவ... இப்ப என்னடானா  இந்த தம்மாதுண்டு பாத்தியை பறிக்க இந்த அலு அலுத்துக்குற?

உன்னைச் சொல்லி குத்தமில்லடி... ஏதோ பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும் படிக்க வச்சமோ? அதுக்கு பொறவு ஒத்தாசைக்கு உன்னை வூட்டோட வச்சுக்காம, நீ ஆசப்படறீயேனு நான் சொல்ல சொல்ல கேட்காம  உன் அப்பன் உன்னை காலேஜ்க்கு அனுப்பி வச்சதுதான் தப்பா போச்சு.

அங்க போய்  நல்லாவே உனக்கு சுகம்  கண்டு போச்சு. அதான் உடம்பு வளைய மாட்டேங்குது.  

உன் வயதுதானே கோமதி புள்ளைக்கும்... அவளைப்பாரு எப்படி  சலிச்சுக்காம வேலை செய்யறா...” என்று பொரிந்து தள்ளி முறைத்தார் சிலம்பாயி.

பதிலுக்கு பூங்கொடியும் முறைக்க,  பூங்கொடியின் முகத்தில் தெரிந்த லேசான வேதனையை கண்டு கொண்ட தணிகாசலம்,  உடனே தன் வேலையை விட்டுவிட்டு, தன் மகளின் அருகில் வந்தார்.

“என்ன தாயி... ரொம்பவும் கஷ்டமா இருக்கா? எங்க கையை காமி...”  என்று தன் மகளை கனிவுடன் பார்த்து,  தன் மகளின் கரத்தை பிடித்து திருப்பி பார்த்தார் தணிகாசலம்.

ணிகாசலத்துக்கு தன் நான்கு பிள்ளைகளில் பூங்கொடி மீது மட்டும் தனி அக்கறை.

அவள் தன்னைப்போலவே இருப்பதாலா? அவள் அக்கா பொற்கொடியை போல அல்லாமல்   அந்த குடும்பத்தின் மீது அக்கறை படுவதாலா? ஏதோ ஒன்று அவளிடம் அவரை கட்டி போட்டிருந்தது.

அதனாலயே சிலம்பாயி அவளை திட்டும்பொழுதெல்லாம் பொறுக்க முடியாமல் தன் மகளுக்கு உதவிக்கு வருவார்..

தன் தந்தையின் கரிசனமான அந்த அக்கறையில்  மனம் நெகிழ்ந்து போனது பூங்கொடிக்கு.

அதே நேரம் அவரை நிமிர்ந்து பார்க்க, சிறுவயதில் இருந்தே வயலில் வேலை செய்து செய்து உரமேறிய தேகம்.

உடலில் எந்த ஒரு ஆடையும் இல்லாமல்,  இடுப்பில் ஒரு கோமனத்தை மட்டும் கட்டிக்கொண்டு இந்த வயதிலும் கொஞ்சமும் அசராமல் கடினமாக உழைக்கும் அவரைக்காண அவளின் மனம் சுட்டது.

அவர் மட்டும் அல்ல. அவள் அன்னை சிலம்பாயி ம் நல்ல உழைப்பாளிதான். இரண்டு ஆள் செய்யும் வேலையை அவள் ஒருத்தியாகவே செய்து முடிப்பாள்.

அவர்கள் இருவரின் கடின உழைப்பால் தான் ஓரளவுக்காவது குடும்பம் நல்ல நிலையில் இருப்பது புரிந்துதான் இருந்தது.

ஆனாலும் இது மாதிரி அடிக்கடி தன் சுகத்தை உடம்பு தேட, அந்த நேரத்தில் அதை எல்லாம் மறந்து எரிந்து விழுவாள் தன் அன்னையிடம்.

அவளின் கையை திருப்பி பார்த்த தணிகாசலம், பூங்கொடி சொன்ன மாதிரி கையில் ஆங்காங்கே திட்டு திட்டாக சிவந்து போய் இருக்க, அதைக்கண்டு பதறியவர்

“அச்சோ.. என்ன பாப்பா... நீ சொன்ன மாதிரி கை இப்படி காப்பு காச்சு இருக்கு? நீ ஒன்னும் வேலை செய்ய வேண்டாம். போய் ஓரமா உட்கார்ந்துக்க...” என்று கடிந்து கொண்டார் தணிகாசலம்.

“ஏன் டி... எத்தனை நாள் வேலை செஞ்சிருக்க..! இப்ப என்ன புதுசா கையில காப்பு காய்க்குதாம்...அப்படி காய்ச்சாதான் என்ன? என் கைல எல்லாம் காய்க்காத காப்பா?  

கொத்தை இறுக்கி பிடிக்காமல் தளர்த்தி பிடி. அதெல்லாம் சீக்கிரம் சரியா போய்டும்...இன்னைக்குள்ள இந்த ஒரு ஏக்கருக்கும் உரம் வச்சாவுணும்...” என்று முறைத்தார் சிலம்பாயி.

“சின்ன புள்ளைய எதுக்கு திட்டற சிலம்பா... விடு... நமக்கு என்னைக்குத்தான் வேலை இல்லாம இருந்திருக்கு. மெதுவா செஞ்சுக்கலாம்...” என்று தன் மனைவியை சமாதானபடுத்த முயல

“யோவ்.. நீ இப்படி செல்லம் கொடுத்து கொடுத்தேதான் அவளை குட்டி சுவராக்கி வச்சிருக்கஇவள் வயதுதான பக்கத்து விட்டு வள்ளிக்கு.

மூணு வருசம் முன்னயே கட்டி கொடுத்து,  இப்ப இடுப்பில ஒண்ணும் வயித்துல ஒண்ணும் சுமந்து கிட்டு இருந்தாலும் புருஷனுக்கு ஒத்தாசையா வயல்ல வந்து வேலை செய்யறா...

இவளுக்கு எல்லாம் இப்படி கொத்தை லேசா புடிச்சு இந்த பாத்திய தோண்ட வலிக்குதா? 

ஏன் டி...இப்படி ஒடம்பு நோகாம இருந்தினா,  உன் அப்பன மாதிரி தோட்டத்துக்காரன  கட்டிகிட்டு என்ன செய்வியாம்?  நீதானே வயலில் இறங்கி வேலை செய்யோணும்...”  பொரிந்து தள்ளி, பின் நக்கலாக சிரித்தார் சிலம்பாயி.

அதுவரை தன் அன்னையின் திட்டையெல்லாம் கேட்டுக்கொண்டு அவரை முறைத்துக்கொண்டே தன் வேலையை தொடர்ந்து கொண்டிருந்த பூங்கொடி, கடைசியாக அவர் சொன்னதைக் கேட்டு வெடுக்கென்று நிமிர்ந்து அவரை பார்த்து முறைத்தவள்,    

“ஐய... நினைப்புத்தான்...நான் எதுக்கு இந்த வேகாத வெய்யில வெந்து மடியிறவனைப் போய்  கட்டிக்கப் போறேனாம். நானெல்லாம் என் அக்கா மாதிரி,  வெய்யில வாடி வதங்காம,  குளு குளு ஏ.சியில  ஆபீஸ்ல உட்கார்ந்து வேலை செய்றவனைத்தான் கட்டிக்க போறேன்.

காலையில எட்டு மணிக்கு கிளம்பி ஆபிஸ்க்கு போனால், சாயங்காலம்  ஆறு மணிக்கெல்லாம் டான் னு வந்துடுவார்...அப்படிப்பட்ட புருஷன்தான் எனக்கு வரப்போறான்...”  என்று கண்களில் தன் எதிர்கால வாழ்க்கையை பற்றிய கனவு மின்ன, முகத்தில் பூரிப்போடு சென்னாள் பூங்கொடி.  

பாவம்...அவள்   கனவு வெறும் பகல் கனவாகப்போகிறது. அவள் அன்னையின் வாக்குத்தான் பலிக்கப்போகிறது என்று அப்பொழுது அறிந்திருக்கவில்லை அந்த பேதைப்பெண்...!

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!