நிலவே என்னிடம் நெருங்காதே!!-30

 



நிலவே என்னிடம் நெருங்காதே-ஆடியோ நாவல்

https://www.youtube.com/watch?v=ZUDRoSyppg0&list=PLmbeESYpIv3tfWSCrqU9cLbc1SqtN7Phk


அத்தியாயம்-30

 

ந்த ஐஸ்க்ரீம் சூப்பரா இருக்கு அண்ணி.... இன்னொரு கப் கிடைக்குமா? “ என்றாள் யாழினி பளபளக்கும் விழிகளுடன்.

“ஓ யெஸ் யாழிகுட்டி... உனக்கு இல்லாததா ! தாராளமா சாப்பிடு.. “  என்று கண் சிமிட்டி சிரித்தாள் நிலா..

இருவரும் வரவேற்பறையில் இருந்த சோபாவில் நெருங்கி அமர்ந்துகொண்டு கதை அடித்துக் கொண்டிருந்தார்கள்.. யாழினியும் பெரிய கப்பில் இருந்த  அவள் அண்ணி செய்திருந்த ஐஸ்கிரீமை ருசித்துக் கொண்டிருந்தாள்..

தங்களுக்குள்  பேசி சிரித்துக் கொண்டாலும் அவர்கள் பார்வை மட்டும் எதிரில் அமர்ந்திருந்தவளிடம் அடிக்கடி சென்று வந்தது..

இவர்கள் இருவரின் கொஞ்சல்ஸ் தாங்க முடியாமல் முகத்தை உர் என்று  வைத்துக் கொண்டு தன் அலைபேசியை நோக்கி கொண்டிருந்தாள் அமுதினி... அவள் உள்ளே கொதித்துக் கொண்டிருந்தது..

அதுவும் நிலா மீது செம கடுப்பில் இருந்தாள்..

இத்தனை நாளாக தன்னுடனே சுற்றிக் கொண்டிருந்த தன் குட்டி தங்கை ஒரே நாளில் எதிர்க் கட்சியில் சேர்ந்துவிட அதைக் கண்டு இன்னும் கடுப்பாகி அவள் அண்ணியை நொடிக் கொருதரம் முறைத்துக் கொண்டிருந்தாள்...

நிலாவோ அவளை கண்டுகொள்ளாமல் யாழியிடம் இன்னும்  நெருங்கி அமர்ந்து வளவளக்க ஆரம்பித்தாள்...

யாழினியும் தன் அண்ணிக்கு உதவும் நோக்கில் இன்னும் தூபம் போட்டாள்..  

“அண்ணி...  நாளைக்கு எனக்கு சாக்லேட் ஐஸ்கிரீம் பண்ணி தர்றீங்களா? “  என்று கண் சிமிட்டி கேட்க

“கண்டிப்பா செல்லம்... உனக்கு இன்னும் என்னவெல்லாம் வேணும்னு  சொல்லு..  எல்லாத்தையும் செஞ்சுதர்றேன்.. நீ ஆசை தீர சாப்பிடு... “  என்று சிரித்தாள் அமுதினியை ஓரப் பார்வை பார்த்தவாறு...  

“ஓ.. சூப்பர் அண்ணி.... அப்புறம் அண்ணி..  இன்னைக்கு என்ன மேக்கப் போட  போறீங்க.. “  என்றாள் அவளும் தன் அக்காவை ஓரப்பார்வை பார்த்தவாறு...

நிலாவும் அவள்  செய்யப் போகும் அலங்காரத்தை விவரிக்க அதைக் கேட்டு அமுதினியின் காதில் புகை வந்து கொண்டிருந்தது.. அதை எல்லாம் அவளும் பண்ணிக்கொள்ள ஆவலாக இருந்தது...

ஆனாலும் தன் ஈகோவை விட்டு அவளாக நிமிர்ந்து இருவரிடமும் பேசவில்லை..  அவளை ஓரக் கண்ணால் பார்த்துக்கொண்டிருந்த நிலாவுக்கும் யோசனையாக இருந்தது..

“இவ்வளவு தூரம் இரண்டு பேரும் மாத்தி மாத்தி ஏதேதோ சொல்லி அவளை வெறுப் பேத்தினால் கொஞ்சம் கூட அசராமல் இருக்கிறாளே ! இவள் கொஞ்சம் அவள் அண்ணன் மாதிரி..  ரோஷக்காரி தான் போல..  

இந்த குதிரையை மடக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான்.. இந்த தாத்தா என்னவோ  மேக்கப் ஐ பற்றி பேசினால் உடனே தன் பெரிய பேத்தி  சரண்டர் ஆகிவிடுவாள் என்று  சொன்னார்

நானும் ரெண்டு நாளா என்னென்னவோ ட்ரை பண்ணிட்டேன்.. கொஞ்சம் கூட இறங்கி வரமாட்டேங்குறாளே.. அப்ப நம்ம ரூட்ட மாத்த வேண்டியது தான்..

தாத்தா தந்திரம் இவளுக்கு வேலை செய்யாது போல.. என்ன செய்யலாம்..?  “ என்று யோசனையுடன் எதிரில் இருந்தவளையே ஓரக் கண்ணால் பார்த்து கொண்டிருந்தாள் நிலா..

அப்பொழுது அமுதினியின் அலைபேசிக்கு அழைப்பு வர அந்த திரையில் ஒளிர்ந்த பெயரை கண்டதும் அவள் முகம் வெளுத்து போனது..

அதுவரை  எதிரில் அமர்ந்து இருந்தவர்களை முறைத்து கொண்டு இருந்தவள் முகம் தன்னை அழைத்திருந்த நபரின் பெயரை பார்த்ததும் முகம் சுருங்கிவிட, ஒரு வித வெறுப்பு வந்து ஒட்டி கொண்டது..

அழைப்பை ஏற்று காதில் வைத்தவள் மறுமுனையில் ஏதோ விசாரிக்க

“ம்.... “

“”

“ம்...”

என்று சுரத்தில்லாமல் வேண்டா வெறுப்பாக பதில் சொல்லி கொண்டிருந்தாள்.. இல்லை. பதில் சொல்ல தலையை மட்டும் ஆட்டி கொண்டிருந்தாள்..

அவளை ஓரக்கண்ணால் கண்காணித்து கொண்டிருந்த நிலா யோசனையாக யாழியை பார்த்தவள் அவளை அழைத்து இருப்பது யார் என்று பார்வையால் வினவ, அவளும்

“அவ புருஷனா இருக்கும் அண்ணி... “ என்றாள் ரகசியமாக..

அதை கேட்டு திடுக்கிட்டாள் நிலா..

முதினிக்கு திருமணம் ஆகிவிட்டது அவளும் அறிந்ததே.. தேவநாதன் தாத்தா சொல்லி இருக்கிறார்... ஒரு பெண் தன் கணவன் அழைத்து இருந்தால் எவ்வளவு சந்தோஷத்துடம் பேசுவாள்.. கணவனுக்கேயான அந்த ஸ்பெஷல் ஸ்மைல், இதழில் விரியும் ஒரு புன்னகை என எதையும் காணவில்லை எதிரில் இருந்தவளிடம்..

மாறாக ஏதோ வேண்டா வெறுப்பாக கடமைக்காக பேசுவதை போல இருந்தது.. அவள் முகத்தில் தன் கணவனிடம் பேசும் ஒரு துள்ளலும் உற்சாகம் எதுவும் இல்லை.. அதை கண்டு யோசனையாக அமர்ந்து இருந்தாள் நிலா...

அப்பொழுதுதான் உறைத்தது அது..

“அம்மு அவ புருஷன் வீட்டுக்கு போகாமல் இங்கயே ஏன் இருக்கிறாள்? ஒருவேளை தன் அண்ணன் திருமணத்திற்காக வந்தவள் இங்கயே தங்கிவிட்டாளோ? அப்படி இருந்தால் கூட இவ்வளவு நாள் கழித்தும் ஏன் செல்லவில்லை..

அவள் கணவன் யார்? இதுவரை பார்த்ததில்லையே.. அவர்களது அவசர திருமணம் என்றதால் அவள் திருமணத்திற்கு அவர் வந்திருக்க வாய்ப்பு இல்லாமல் இருந்திருக்கும்..

ஆனால் தங்கள் ரிசப்ஷனுக்கு வந்திருக்க வேண்டுமே... அப்ப வந்திருப்பாரோ?”  என்று தலையை தட்டி யோசிக்க அவளுக்கு எதுவும் ஞாபகம் வரவில்லை...

“ம்ம்ஹும்.. சே.. அன்னைக்கு வந்தவங்களை பத்தி எதுவும் நினைவில் இல்லை.. இந்த நெட்ட கொக்கு பக்கத்தில் நிக்க பயந்துகிட்டே வந்தவர்களை சரியாக கவனிக்காதது எவ்வளவு பெரிய தப்பு..

இதுல இந்த வீட்டு மாப்பிள்ளை யார் என்று எங்கே ஞாபகம் வச்சுக்கிறது... “ என்று  உள்ளுக்குள் புலம்பியவள் மீண்டும் எதிரில் இருந்தவளை நோக்க அவளோ அப்பொழுதுதான் பேசி முடித்து  அலைபேசியை அணைத்திருந்தாள்..

அதை அணைக்கவும் அவள் முகத்தில் அப்படி ஒரு நிம்மதி.. இதுவரை ஏதோ முள்ளின் மீது நின்று கொண்டிருப்பதை போல இருந்தவளுக்கு இப்பொழுது தான் மூச்சு விட முடிந்ததை போல ஒரு முகபாவம் அமுதினியிடம்..

அதை கண்ட நிலாவுக்கு இன்னும் யோசனையாக இருந்தது..

“சரி..  இவளை பத்தி யார் கிட்ட கேட்கலாம்? யாழி சின்ன பெண்.. அவளிடம் அவள் அக்காவை பற்றி விசாரிப்பது முறையாக இருக்காது... அப்படி என்றால் இந்த வீட்டில் எனக்கு துணையாக இருப்பது தாத்தா மட்டும்தான்.. அவரிடமே கேட்க வேண்டியதுதான் .. “ என்று எண்ணி கொண்டவள்

“யாழி.. நீ இங்கயே இரு.. நான் தாத்தாக்கு மாத்திரை கொடுக்கணும்.. கொடுத்துட்டு வர்றேன்.. “ என்று  எழுந்து நகர, எதேச்சையாக பார்வை அமுதினி பக்கம் செல்ல அவளோ கழுத்தை நொடித்து தன் வாயை இரு கோட்டுக்கும் இழுத்து உதட்டை சுளித்து முறைத்தாள்..

நிலாவோ அவள் செய்கையை கண்டு உள்ளுக்குள் சிரித்தவாறு  தேவநாதனை பார்க்க சென்றாள்..

ன் அலுவலக அறையில் அமர்ந்து ஏதோ தடிமனான கணக்கு புத்தகத்தை நோண்டி கொண்டிருந்தார் ஜமீன்தார்.. அவரிடம் சென்றவள்

“தாத்தா.. எதுக்கு இவ்வளவு சிரமம் உங்களுக்கு..?  இதெல்லாம் பார்க்கத்தான் உங்க பேரன் இருக்கார் இல்ல... இதை எல்லாம் அவர் தலையில கட்டிட்டு நீங்க பாட்டுக்கு ஜாலிய கால் ஆட்டிகிட்டு இருக்கறத விட்டு எதுக்கு இப்படி மண்டைய உடைச்சிக்கணும்?”  என்று  உரிமையோடு கண்டித்தவாறு அவர் அருகில் சென்றாள் நிலா..  

“அடடா நிலா பொண்ணு.. வா வா... “ என்று  முகம் மலர சிரித்தவர்

“உடையவன் பார்க்காவிட்டால் ஒரு முழம் கட்டைனு சொல்லுவாங்களே.. அந்த மாதிரி நம்ம தொழிலை நாமதான் பார்த்துக்கணும் அம்மணி..

இந்த டெக்ஸ்டைல் பிசினஸ் ஐ உன் புருஷன பார்த்துக்க வைக்கிறதுக்கே நான் நெஞ்சுவலி வந்த மாதிரி ட்ராமா போட வேண்டியதா போச்சு.. இதுல இந்த விவசாயத்தையும் அவனையே பார்த்துக்க சொன்னா அவ்வளவு தான்..

முறுக்கி கிட்டு அடுத்து நிமிஷம்  சென்னைல போய் தான் நிப்பான்.. உன் மாமனாருக்கு இன்னுமே விவரம் பத்தலை.. எதுக்கு எப்ப இயற்கை உரம் போட்டது அதை எத்தனை நாளில் பதபடுத்தி எடுக்கவேண்டும்? நம்ம தோட்டத்தில் விளையும் காய்கறிகள் எவ்வளவு ஏற்றுமதி ஆனது?  என்பதெல்லாம் அவன் மண்டையில வச்சுக்க மாட்டான்.. நான்தான் எல்லாம் பார்த்து அவன் கிட்ட சொல்லோணும்..

சரி..  அத விடு.. என்ன விசயம் அம்மணி..?  இந்த நேரத்துல இந்த கிழவனை பாக்க வந்திருக்க? இன்னொரு குதிரையையும் மடக்கிட்டியா? “என்றார் நமட்டு சிரிப்புடன்..

“ப்ச்.... அந்த குதிரை கொஞ்சம் சண்டித்தனம் பண்ணுது தாத்தா.. நானும் என்னென்னவோ மந்திரம் போட்டு பார்த்துட்டேன்.. அது மயங்கர மாதிரி தெரியலை... ஆமா தாத்தா அம்மு ஏன் அவ புருஷன் வீட்டுக்கு போகாம இங்க இருக்கா? அவ புருஷன் என்ன பண்றார்? “ என்றாள் யோசனையாக..

அதை கேட்டதும் ஒரு நொடி தேவநாதன் முகத்தில் வேதனை வந்து போனது.. அதற்குள் தன்னை சமாளித்து கொண்டவர்

“அது ஒரு சின்ன கதை அம்மணி.. இப்படி வந்து உட்கார்.. எல்லாம் விவரமா சொல்றேன்.. “ என்று அவளை அருகில் அழைத்து அமரவைத்து கொண்டு அமுதினியின் கதையை சுருக்கமாக கூறினார்..

அதை கேட்டு முகம் சிவந்து போக, ஒரு எரிக்கும் பார்வை பார்த்து தேவநாதனை முறைத்தாள் நிலா...

“அடடா.. அதுக்குள்ள என் பேரன் பொண்டாட்டிக்கு அவன மாதிரியே மூக்கு மேல கோபம் வருதே..!  இதுதான் ஆக்க பொறுத்தவனுக்கு ஆற பொறுக்கலைனு சொல்றது..

இவ்வளவு நேரம் கதை கேட்ட நீ அதை முடிக்கறதுக்கு முன்னே இப்படி முறைச்சா எப்படி அம்மணி..?  “ என்று குறும்பாக சிரித்தவர்

“என்ன ? இந்த முறையும் என்னை காதலுக்கு எதிரி.. காதலை பிரிப்பவன் னு நினைச்சுபோட்டியாக்கும்.. உன்னை சொல்லி தப்பில்லை..

நான் சின்ன வயசுல இருந்தே தூக்கி வளர்ந்த என் பேரனும் பேத்தியுமே என்னை புரிஞ்சுக்கலை.. நேத்து வந்த  பொண்ணு உனக்கு மட்டும் என்னை பத்தி என்ன தெரியும்.. “ என்று  பெருமூச்சை விட்டவர் மீதி கதையையும் சொல்லி முடித்தார்..

“இப்ப சொல்லு நிலா மா.. நான் செஞ்சது தப்பா? “ என்றார் அவளை நேராக  பார்த்தவாறு..

அதை கேட்டு திகைத்தவள்

“ஓ... சாரி தாத்தா...  நீங்க சொன்ன மாதிரி அவசரபட்டு உங்களை தப்பா நினைச்சுட்டேன்.. நீங்க பண்ணினதுதான் சரி தாத்தா.. ஆமா இப்ப அம்மு வீட்டுக்காரர் எங்க இருக்கிறார்..? கல்யாணம் ஆகி கிட்டதட்ட மூணு வருசம் இருக்குமே.. இன்னுமா அம்மு மனசு மாறலை?

“ஹ்ம்ம்ம்.. என் பேத்தி இருக்காளே.. அவ அண்ணன் மாதிரி கொஞ்சம் ரோஷக்காரி.. நான்தான் அவ காதலை பிரிச்சிட்டேன் னு இன்னும் என் மேல கோபமா இருக்கா. என்னை தண்டிக்கறதா நினைச்சு அவ வாழ்க்கையை தொலச்சுகிட்டு இருக்கா.. .

மாப்பிள்ளை தங்கமானவர் அம்மணி..அதான் இவ மனசு மாறுகிற வரைக்கும் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லி விட்டார்.. கூடவே அம்முக்கு கல்யாணம் ஆனப்ப வயது இருபதுதான்.. அதனாலயே இன்னும் கொஞ்சம் அவ வளரட்டும்னு விட்டு பிடிக்கிறார்..

இவ என்னாடான்னா அவருடைய நல்ல மனசை புரிஞ்சுக்காம இன்னும் புருஷன் கூட ஒட்டாம நிக்கறா.. கல்யாணத்தை தான் கட்டாயபடுத்தி பண்ணி வைக்க முடிஞ்சுது... புருஷன் கூட சேர்ந்து குடும்பம் நடத்தறதை எல்லாம் கட்டாயபடுத்த முடியாது அம்மணி.. அதனால நானும் அப்படியே விட்டுட்டேன்..

மாப்பிள்ளை வீட்டிலயும் நான் எடுத்து சொல்லவும் புரிஞ்சுகிட்டாங்க.. அவ மனசு மாறுகிற வரைக்கும் காத்திருக்கிறதா  சொல்லிட்டாங்க..

மாப்பிள்ளை இப்ப சிங்கப்பூர்ல இருக்கார். அங்கயே அவங்க பிசினஸ் ஐ ஸ்டார்ட் பண்ணி அதை அவரே பார்த்துகிட்டு இருக்கார்.. இவளையும் சிங்கப்பூர்க்கு வர சொல்லி அழைத்தார்..

ஆனால் இவ போகமாட்டேன் என்று  ஒரே அழுகை .. அதற்கு மேல் வற்புறுத்த முடியாமல் அவரும் இவளை விட்டுட்டு போய்ட்டார்.. ஆனாலும் தினமும் போன் பண்ணி பேசுவார்.. மாதம் ஒரு முறை வந்து பார்த்து விட்டு போவார்..

நானும் இவ மனசு இப்ப மாறும் அப்ப மாறும் னு பார்த்துகிட்டு இருக்கேன்.. இந்த கழுதை கொஞ்சம்கூட தன்னை மாத்திக்காம நான் புடிச்ச முசலுக்கு மூனே கால் னு அடம்புடிச்சுகிட்டு இருக்கா... “ என்றார் வேதனையுடன்..

“ஹ்ம்ம்ம் கவலையை விடுங்க தாத்தா... சீக்கிரம் எல்லாம் சரியாகும்.. அம்முவை அவ புருஷன் கூட சேர்த்து வைப்பது என் பொறுப்பு.. அப்புறம் அம்மு லவ் பண்ணினவனை பத்தி கொஞ்சம் விவரம் சொல்லுங்க.. “ என்றாள்  மனதுக்குள் ஏதோ கணக்கை போட்டவாறு..

“அவன பத்தி உனக்கு எதுக்கு நிலா மா? “  என்றார் தாத்தா யோசனையாக பார்த்தவாறு..

“நீங்க சும்மா சொல்லுங்க தாத்தா.. ஏன் எதுக்கு என்றெல்லாம் கேள்வி கேட்கபடாது.. “ என்று  சொல்லமாக மிரட்ட அவரோ வாயில் கையை வைத்து பவ்யமாக அவள் கேட்ட விவரம் சொல்ல அதை கேட்டு மலர்ந்து சிரித்தாள் நிலா..

அவளின் சிரிப்பை ரசித்தவர்

“தன் பேத்தியும் இப்படி சிரித்து எவ்வளவு நாள் ஆச்சு.. சீக்கிரம் அவளுக்கு ஒரு நல்ல வழி கிடைக்கணும்.. “என்று  மனதுக்குள் வேண்டி கொண்டார் தேவநாதன்..!

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!