நிலவே என்னிடம் நெருங்காதே!!-31

 



அத்தியாயம்-31

“யாழி குட்டி... இந்த வீடியோ வை பாரேன்.. யாரோ ரஞ்சன் னு ஒரு பொறுக்கி..காலேஜ் படிக்கிற பொண்ணுங்களை எல்லாம் காதலிக்கிறேன் னு ஏமாத்தி அவங்களை காதல் வலையில் விழ வைத்து அப்புறம் நெருக்கமா இருக்கற மாதிரி  போட்டோ எடுத்து அதை வச்சு அந்த பொண்ணுங்களை ப்ளாக் மெய்ல் பண்ணி இருக்கான்... “

என்று தன் அலைபேசியில் இருந்த வீடியோவை தன் அருகில் அமர்ந்து இருந்த யாழினியிடம் காட்டி கொண்டிருந்தாள் நிலா.. .

ஆனால் ஓரக்கண்ணால் அமுதினியை கண்காணித்து கொண்டிருந்தாள்..

நேற்று மாலை தாத்தாவிடம் அமுதினியை பற்றி விவரங்களை தெரிந்து கொண்டவள் நேற்று இரவு  முழுவதும் அவளை எப்படி தெளிய வைப்பது என்று  யோசித்து கொண்டிருந்தாள்.

இன்று மாலை வரவேற்பறையில் அமர்ந்து கொண்டு நேற்றை போலவே இன்றும் அமுதினியை வம்பு இழுத்து கொண்டிருந்தனர் இருவரும்... அப்பொழுதுதான் அந்த வீடியோவை யாழினியிடம் காட்டி கொண்டிருந்தாள் நிலா..

அவள் எதிர்பார்த்த மாதிர்யே ரஞ்சன் என்ற பெயரை கேட்டதும் அமுதினியின் முகம் திடுக்கிட்டது.. காதை கூர்மையாக வைத்து கொண்டு எதிரில் அமர்ந்து இருந்த தன் எதிரிகள் பேசுவதை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தாள்..

அந்த வீடியோவை பார்த்த யாழியும் ஆச்சர்யமாக

“அது எப்படி அண்ணி..?  இந்த மாதிரி ஆளுங்க கிட்ட எல்லாம் இந்த பொண்ணுங்களும் மயங்கி போய்டறாங்க? “ என்றாள் ஆர்வமாக...

“ஹ்ம்ம் இதெல்லாம் அந்த ரஞ்சனோட திறமை யாழி.. யாரையும் முதல்ல நேரா போய் புரபோஸ் பண்றது கிடையாது.. அவன் டார்கெட் பண்ற பொண்ணை பாலோ பண்ணி ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவனுடைய ஆளை வைத்தே அந்த பொண்ணுக்கு ஏதாவது ஒரு ஆபத்தை உண்டாக்குவது..

அதாவது அந்த பொண்ணோட பர்ஷை அடிச்சுகிட்டு ஓடறது, எங்கயாவது அந்த பொண்ணு தனியாக இருந்தால் அவன் ஆளை விட்டு இடிக்க வைப்பது.. இப்படி ஏதாவது ஒன்னை அவன் ஆளை விட்டே செய்ய வைத்து அந்த நேரம் அந்த பொண்ணை காப்பாத்தும் ஹீரோ மாதிரி இந்த பொறுக்கி என்ட்ரி ஆகறது..

உடனே இவனுடைய ஹீரோயிசத்தை பார்த்ததும் அந்த பொண்ணுங்களும் தலை சுத்தி போய்டறாங்க.. அப்புறம் பல முறை அந்த பொண்ணுங்க கண்ணுல படற மாதிரி அடிக்கடி வர்றது.. அவனா முன்னாடி போய் வழிஞ்சு நிக்க மாட்டான்.. ஆனால் அவங்க பார்வைக்கு மட்டும் அடிக்கடி வந்து போவான்..

அதை கண்டு அவனை நல்லவன் னு நினைச்சு மனதை பறிகொடுத்திடறாங்க..

கல்லூரிக்கு போகும்  வயதில் அவ்வளவா உலகம் தெரியாது யாழி மா.. நல்லவங்க யாரு கெட்டவங்க யாருனு தரம் பிரித்து பார்க்க தெரியாது.. மின்னுவதெல்லாம் தங்கம் னு நினைச்சுக்க தோணும்..

கூடவே வயசு கோளாறும் சேர்ந்துகொள்ளும்..பத்தாதுக்கு இந்த காலேஜ் ல கூட படிக்கிற  பொண்ணுங்க வேற வெறும் காதல் கதையா பேசுவாங்க.. அதை கேட்டு சில பேருக்கு நாமும் காதலிக்க வேண்டும் என்று ஆசை வரும்..    

அதனால் இந்த பொறுக்கியோட பின்புலத்தை எல்லாம் விசாரிக்காம மனசை பறி கொடுத்துட்டு அதுதான் காதல் னு புடுச்சிக்குறாங்க.. இந்த மாதிரி வருவது காதலே அல்ல.. அது ஒரு க்ரஸ். ஒரு வித ஈர்ப்பு அவ்வளவுதான்..

இவனும் அந்த பொண்ணுங்களோட வீக்னெஸ் ஐ நல்லா பயன்படுத்திகிட்டான்.. அதுக்கு பிறகு இவன் சொல்ற மாதிரி எல்லாம் அந்த பொண்ணுங்களை செய்ய வச்சு அவங்களை ஆட்டி வச்சிருக்கான்..

எப்படியோ ஏதோ ஒரு பாதிக்க பட்ட பொண்ணு போலிஸில் கம்ப்ளெய்ன்ட் பண்ண போலீஸ் அவனை பாலோ பண்ணி இப்ப புடிச்சு அர்ரெஸ்ட் பண்ணிட்டாங்க.. பார் எவ்வளவு தெனாவெட்டா போலிஸ் கூட போறானு...பொறுக்கி ராஸ்கல்.. “ என்று அவனை திட்டி கொண்டிருக்க அதை கேட்ட அமுதினியோ திடுக்கிட்டாள்..

தன் அண்ணி சொன்ன கதை எல்லாம்   அப்படியே அவள் வாழ்விலும் நடந்திருக்க ஒரு வேளை அண்ணி சொல்ற ரஞ்சன் அவன்தானோ என்ற சந்தேகம் வந்தது..

“இல்லை.. அவனாக இருக்க கூடாது.. என் ரஞ்சன் ரொம்ப நல்லவன்.. தாத்தா தான் அவனை என்னிடம் இருந்து பிரித்துவிட்டார்..

இது அவனாக இருக்காது என்று ஒரு மனம் சொன்னாலும் மறு மனமோ ஒரு வேளை இது அவன் தானோ என்று  அடித்து கொள்ள அடுத்த நொடி வேகமாக எழுந்தவள் விடுவிடுவென்று நிலாவின் அருகில் வந்தவள் அவள் கையில் இருந்த அலைபேசியை வெடுக் என்று புடுங்கி அதில் இருந்த வீடியோவை பார்க்க அடுத்த நொடி தரை நழுவுவதை போல இருந்தது..

அந்த வீடியோவில் இருந்தது அவனே தான்.. அவள் மூன்று  வருடம் முன்பு பார்த்து பழகிய அதே ரஞ்சன்தான்.. காவலர்கள் அவனை அர்ரெஸ்ட் பண்ணி இழுத்து செல்ல அவனை சுற்றிலும் பல பெண்கள் அவனை திட்டி கொண்டிருக்க மீடியாக்கள் அதை கவர் பண்ணி கொண்டிருந்தார்கள் ..

அதை கண்டதும் திடுக்கிட்டவள் அடுத்த நொடி அலைபேசியை எறிந்துவிட்டு கண்ணில் வழியும் நீருடன் தன் அறைக்கு ஓடி கதவை தாழிட்டு படுக்கையில் விழுந்து கதற ஆரம்பித்தாள்..

நிலா இதை எதிர்பார்த்தது என்பதால் உள்ளுக்குள் சிரித்து கொண்டிருக்க யாழினியோ அதிர்ச்சியாக அமர்ந்து இருந்தாள்..

அவளை சமாதானம் படுத்தி அவளுக்கும்  பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று விளக்கி சொன்னாள் நிலா..

அடுத்த மாதம் அவளும் கல்லூரி செல்ல இருக்கிறாளே..! ஆரம்பத்தில் இருந்து அவளையும் விழிப்போடு இருக்க சொல்லி தயார் படுத்தினாள்..  அதே கேட்ட யாழியும் தன் அண்ணி சொன்ன விசயங்களை எல்லாம் மனதில் பதிய வைத்து கொண்டாள்..

ன்று இரவு உணவு மேஜையில் அனைவரும் கூடி இருக்க தேவநாதன் தாத்தா தனக்கு ஒரு மாதிரியாக இருப்பதாக சொல்லி மாத்திரையை போட்டு கொண்டு படுத்து விட, மற்றவர்கள் இரவு உணவை உண்டு கொண்டிருந்தார்கள்..

பொன்னி எல்லாருக்கும் பரிமாறி கொண்டிருக்க, அமுதினி அவளுக்கு சாம்பார் ஊற்ற சொல்ல, அதே நேரம் நிலா பொன்னியை பார்த்தவள்

“பொன்னி அக்கா.. எனக்கு முதல்ல ஊத்துங்க.. “ என்றாள் அதிகாரமாக..

அதை கேட்டு சிலிர்த்த அமுதினி

“அக்கா .. நான்தான் முதல்ல கேட்டேன்... எனக்கு முதல்ல ஊத்துங்க.. “ என்றாள் நிலாவை முறைத்தபடி...

ஏற்கனவே தான் காதலித்தவன் பொய்த்து போய்விட்டான் என்ற ஆற்றாமையில் இருந்தவள் இன்னும் அந்த வலியும் வேதனையும் உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்க, அதை எல்லாம் யாரிடமாவது கொட்ட வேண்டும் போல இருந்தது..

அதுக்கு தூபம் இடுவதை போல அவள் அண்ணி சாம்பாரை அவளுக்கு ஊற்ற சொல்ல அதில் இன்னும் கடுப்பானாள் அமுதினி... ஆனால் நிலாவோ அதை கண்டு கொள்ளாமல்

“அக்கா.. நான்தான் இந்த வீட்டோட மருமக.. எனக்குத்தான் முதல் உரிமை.. எனக்கு முதல்ல ஊத்துங்க.. “ என்று அவளும் திருப்பி முறைக்க அதில் இன்னும் கொதித்தவள்

“எங்க அண்ணனை கட்டாயபடுத்தி அவன் விருப்பம் இல்லாமல் தாலி கட்டிகிட்டவங்க எல்லாம் இந்த வீட்டோட மருமக ஆய்ட முடியாது.. “ என்று  கழுத்தை நொடித்தாள் அமுதினி..

“ஹா ஹா ஹா.. உன் அண்ணன் விரும்பி கட்டினாலும் விரும்பாம கட்டினாலும் எனக்கு தாலி கட்டினார் இல்ல.. அப்ப நான்தான் இந்த வீட்டோட மருமக.. அதே மாதிரி நான் ஒன்னும் உன் அண்ணன் அழகுல மயங்கி கட்டினா  உன் அண்ணனைத்தான் கட்டுவேனு அவரை  கட்டாயபடுத்தி கட்டிக்கல..

தாத்தா சொன்னதுக்காகத்தான் நானும் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்.. எனக்கு பாத்திருந்த மாப்பிள்ளை மட்டும் ஓடிப் போகாம இருந்திருந்தா நான் ஏன் இந்த ஜமீன் ன்ற ஜெயிலுக்கு வந்து இப்படி கஷ்ட படணும்..

என் புருஷனோட சந்தோஷமா இருந்திருப்பேன்.. தாத்தா சொன்னதுக்காகத்தான் உன் அருமை அண்ணன் நொண்ணனுக்கு கழுத்தை நீட்டினேன்..

எனக்கும் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை.. ஆனாலும் தாலி ஏறிடுச்சே..!  அதுக்காக இந்த வீட்டு மருமகளா இந்த வீட்ல இருக்கேன்..

மத்தவங்க மாதிரி கல்யாணம் ஆகியும் புடிக்குதோ  புடிக்கலையோ ராமன் இருக்கிற இடம் தான் சீதைக்கு அயோத்தினு புருஷன் இருக்கிற இடத்துல இல்லாம ஆத்தா வூட்ல வந்து உட்கார்ந்துகிட்டு நாட்டாமை பண்ணி கிட்டு இல்ல.. “ என்று கழுத்தை நொடித்தாள் நிலா..

அவள் தன்னைத்தான் குத்தி காட்டுகிறாள் என புரிய இன்னும் கொதிக்க,  அதுவரை  அமைதியாக அவர்கள் சண்டையை பார்த்து  கொண்டிருந்த மனோகரி கோபத்துடன் தன் மருமகளை பார்த்தவள் 

“ஏய்..என் பொண்ணை பத்தி பேச உனக்கு எந்த அருகதையும் இல்ல.. அவ இந்த வீட்டு இளவரசி.. அவ இந்த வீட்லதான் இருப்பா.. அதை கேட்க நீ யாரு.. நேத்து முளைச்ச காளான் எல்லாம் அதிகாரம் பண்ண வந்துடுச்சு. “ என்று முறைத்தாள்

“ஹ்ம்ம் அப்படி சொல்லுங்க மம்மி...ஏய் இது என் வீடு.. நான் இங்கதான் இருப்பேன் அதை கேட்க நீ யார்.. “ என்றாள் அமுதினியும் அதிகாரமாக..

“ஹ்ம்ம் ஐயோ ஐயோ என் நாத்தனாருக்குத் தான் அறிவில்லைனா என் மாமியார் ம்  இன்னும் வளராமல் இருக்கிறாங்களே..! “ என்று நக்கலாக சிரித்தவள் மனோகரியை நேராக பார்த்து 

“அத்த.. ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி கொடுத்துட்டா அவ அடுத்த  வீட்டுக்கு சொந்தமாகிடறா.. பொறந்த  வீட்டுக்கு வெறும் கெஸ்ட் ஆதான் வந்து போக முடியும்.. அந்த வீட்டு மருமகளுக்குத்தான் முழு உரிமையும்..! 

அம்மு செல்லம். நீ இந்த வீட்டு கெஸ்ட் ஆ எவ்வளவு நாள் வேணா இரு.. ஆனால் நானா நியானு வர்றப்ப எனக்குத் தான் முதல் உரிமை.. ஏன் என் மாமியார்க்கு கூட எனக்கு அடுத்துத்தான்...

உன் அதிகாரத்தை எல்லாம் உன் புருஷன் வீட்ல போய் காட்டு.. கல்யாணம் ஆகி மூணு  வருஷம் ஆச்சு.. புருசனோட ஒழுங்கா குடும்பம் நடத்த துப்பில்லை.. என்கிட்ட பேச வந்துட்டா.. பெரிய இவளாட்டம்.... “ என்று முடிக்கும் முன்னே

“ஏய்..............ஷட் அப்... “ என்று கர்ஜித்தது அந்த குரல்...

அனைவரும் திடுக்கிட்டு வாயிலை பார்க்க, அப்பொழுது தான் வீட்டுற்கு உள்ளே வந்து கொண்டிருந்தான் அதிரதன் ..

நிலா அவன் தங்கையை திட்டி கொண்டிருப்பதை கண்டதும் எரிமலையானவன் கண்கள சிவக்க முகம் இறுக உடல் விரைத்து எதிரில் இருப்பவளை துவம்சம்  செய்து விடுபவனை போல கோபத்துடன் நின்றிருந்தான் அதிரதன்..

அவனை கண்டதும் ஒரு நொடி நடுங்கி போனாள் நிலா..

“அச்சோ.. இவன் எப்படி இந்நேரத்துக்கு வந்தான்..?  இது இவன் வர்ற நேரமில்லையே.. இவன் வருவதற்குள் இந்த ஆட்டத்தை முடித்து விடலாம் என்று அல்லவா  திட்டமிட்டிருந்தேன்..

வெண்ணெய் திரண்டு வரும் நேரம் தாழி உடைந்த மாதிரி இப்படி பாதியில் வந்து சொதப்பிட்டானே.. “ என்று உள்ளுக்குள் புலம்பி கொண்டிருக்க அமுதினியோ தன் அண்ணனை கண்டதும் வேகமாக எழுந்தவள்

“அண்ணா... “என்று  கத்தியவாறு பாய்ந்து சென்று  அவனை கட்டி கொண்டு அவன் மார்பில் புதைந்து கொண்டு குலுங்கி அழ ஆராம்பித்தாள்...

அதிரனும் அவளை மெல்ல அணைத்து அவள் தலையை ஆறுதலாக வருடி

“நீ எதுக்கு அழணும் அம்மு..?  அழாத டா...  உன்னை இந்த வீட்டை  விட்டு போக சொல்ல யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை.. இந்த வீட்டு இளவரசி டா நீ. எவ்வளவு நாள் வேணா இங்கயே இரு.. “ என்று வாஞ்சையுடன் அணைத்து கொண்டான்..

“ம்ம்க்கூம் நல்ல அம்மா.. நல்ல அண்ணன்.. “ என்று  உள்ளுக்குள் நொடித்து கொண்டாள்.. நிலா...

தன் தங்கையை அணைத்தவாறே நிலா அருகில் வந்தவன்

“ஏய்... இனி ஒரு தரம் என் தங்கச்சியை பார்த்து  ஏதாவது  சொன்ன?  “ என்று விரல் நீட்டி முறைத்து பேச

அவளும் அவனை நேருக்கு நேராக பார்த்து  

“சொன்னால் ?? சொன்னா என்ன செய்விங்க..?  எத்தன பேர் சொன்னாலும் அவ இந்த வீட்டுக்கு கெஸ்ட்தான்.. அவ வாழ வேண்டியது அவ புருஷன் வீட்ல.  அதை எடுத்து சொல்லி அவ புருஷன் வீட்டுக்கு அனுப்பாம ஆத்தாவும் மவனும் அவளுக்கு சப்போர்ட் பண்றிங்க.. நல்ல குடும்பம் டா சாமி.. “ என்று தலையில் அடித்து கொண்டவள்  

“நீங்க என்னதான் சப்போர்ட் பண்ணினாலும் அவ இந்த வீட்டுக்கு கெஸ்ட் தான் கெஸ்ட் தான் ... நான் தான் இந்த வீட்டோட மருமக.. “ என்று அவள்  முடிக்கும் முன்னே

“ஏய்.. “ என்று ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்திருந்தான் அதிரதன்...

அதில் அனைவருமே அதிர்ந்து போய் பார்க்க ஒரு நொடி காது கொய் என்றது நிலாவுக்கு...தலை சுற்றுவதை போல இருந்தது... ஆனாலும் தன்னை சமாளித்து கொண்டவள் மீண்டும் நிமிர்ந்து அவனை நேர் பார்வை பார்த்து

“நீங்க என்னை அடிங்க உதைங்க.. என் புருஷனா அதுக்கு உங்களுக்கு முழு உரிமையும் இருக்கு.. ஆனால் அதுக்காக நடைமுறையை எடுத்து சொல்லாமல் என்னால் இருக்க முடியாது..

புடிக்குதோ புடிக்கலையோ ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சுனா அவ புகுந்த வீடுதான் அவ வீடு.. பொறந்த வீட்டுக்கும் வெறும் கெஸ்ட் மட்டும்தான்... “ என்று அமுதினியை முறைத்தவள் கெஸ்ட் என்பதை மீண்டும் அழுத்தி சொல்ல, அமுதினியோ தன் அண்ணனிடமிருந்து விலகி அழுதுகொண்டே வேகமாக தன் அறைக்கு ஓடிவிட்டாள்...

அவள் ஓடுவதை வேதனையுடன் பார்த்தவன்

“சே..... “ என்று காலை தரையில் வேகமாக உதைத்தவன் நிலாவை மீண்டும் ஒரு எரிக்கும் பார்வை பார்த்துவிட்டு கை முஷ்டி இறுக விடுவிடுவென்று நடந்து மாடிக்கு சென்றான் அதிரதன்....

“அப்பாடா.... “ என்று நிலா பெருமூச்சு விட்டு கொள்ள, அடுத்து பாரிஜாதம் அவளை பிடித்து கொண்டார்...

இதுவரை வாய்க்கு வாய் பேசியவள் பாரிஜாதம் அவளை திட்ட ஆரம்பித்ததும் அமைதியாக கேட்டு கொண்டிருந்தவள் எதுவும் பேசாமல் தோட்டத்திற்கு சென்று விட்டாள் நிலா.

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!