நிலவே என்னிடம் நெருங்காதே!!-33


 

அத்தியாயம்-33

றுநாள் பொழுது வழக்கம்போல விடிந்திருக்க அந்த அதிகாலையில் பனிமூட்டம் விலகாத காலை நேரத்தில் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தாள் நிலா..

வழக்கமாக சீக்கிரம் எழுந்து விடுபவள் தோட்டத்திற்கு வந்து கொஞ்ச நேரம் நடந்து கொண்டிருப்பாள்..

இன்றும் அங்கு இருந்த  பனியில் மலர்ந்து சிரிக்கும் ரோஜாக்களையும் பல விதமான பூக்களையும்  ரசித்துக் கொண்டே நடந்து கொண்டிருக்க ஒரு நெடியவன் அப்பொழுது அந்த வீட்டை நோக்கி உள்ளே வந்து கொண்டிருந்தான்..

பனி மூட்டத்தில் சரியாக முகம் தெரியாவிட்டாலும் யாரோ ஒரு புதியவன்  என்று புரிந்து விட நடந்து கொண்டிருந்தவள் நடையை திருப்பி வேகமாக அவன் அருகில் சென்றாள்..

அவனை அழைத்து

“யார் சார் நீங்க? “  என்றாள் மிடுக்குடன்..

அவனும் கொஞ்சம் தயங்கி

“நான் ரஞ்சன்...  அமுதினி... “  என்று சொல்ல வருமுன்னெ அடுத்த நொடி எட்டி அவன் சட்டையை பிடித்தவள்

"ஏன்டா பொறுக்கி நாயே..! . எங்க வீட்டு பொண்ணு நல்லா இருக்கிறது புடிக்கலையா? உன்னை பத்தி அவளுக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சு.. இப்ப எதுக்காக இங்க வந்திருக்க? " என்று முறைத்தவாறு சட்டையை இறுக்கி பிடிக்க, அவனோ பதில் சொல்லாமல் திருதிருவென்று  முழிக்க, அப்பொழுது தோட்டத்திற்கு வந்திருந்த தேவநாதன் வேகமாக அங்கு வந்தார்...

“அம்மாடி.. நிலா.. யாரும்மா அது? " என்றவாறு கண்களை சுருக்கி அங்கு நின்று  கொண்டிருந்தவனை காண அடுத்த நொடி முகம் மலர்ந்தது..

“அடடே... மாப்பிள்ளை... வாங்க மாப்பிள்ளை... " என்று  வரவேற்க அப்பொழுது தான் ஷாக் அடித்ததை போல திடுக்கிட்டவள் இன்னுமே அவள் பிடித்திருந்த சட்டையை விட்டுவிட்டாள் நிலா...

“மாப்பிள்ளையா? “  என்று தாத்தாவை யோசனையுடன் பார்க்க,

"நிலா மா.... இவர்தான் நம்ம வீட்டு மாப்பிள்ளை.. ரஞ்சன்...  மனோரஞ்சன்.. அம்முவோட புருஷன்... " என்று சிரித்தவர்

"ஸாரி மாப்பிள்ளை... நிலா யாரோனு... " என்று  தயக்கத்துடன் இழுக்க

"பரவாயில்லை தாத்தா...தெரியாமதான செஞ்சுட்டாங்க.. " என்று தன் சட்டையை நீவி விட்டு கொண்டே நட்புடன் புன்னகைக்க, நிலாவும்  அப்பொழுதுதான் அதிர்ச்சியில் இருந்து வெளிவந்தாள்...

"ஸாரி சார்... நீங்க யாரோனு தெரியாம...!  ஐம் ரியலி சாரி.. " என்றாள் சங்கோஜத்துடன்..

"இருக்கட்டும் சிஸ்டர்... ஆனாலும் பார்க்க ரொம்ப ஒல்லியா வீக்கா இருந்தாலும் ரொம்பவும் ஸ்ட்ரென்த் தான்... அப்புறம் எப்படி போகுது உங்களோட மேரேஜ் லைப்? “ என்று சிரித்தவாறு இயல்பாக பேசி கொண்டே உள்ளே வர, நிலாவும் சிரித்து கொண்டே அவனுடன் அளவளாவியவாறு வீட்டிற்கு உள்ளே அழைத்து வந்தாள்...

வரவேற்பறைக்கு வந்ததும் அவன் கையில் இருந்த பையை வைக்க அடுத்த நொடி

“மனோ ..... “ என்று கத்தியவாறு பாய்ந்து வந்து அவனை இறுக்கி அணைத்து அவன் மார்பில் முகம் புதைத்திருந்தாள் அமுதினி..

அதில் ஒரு நொடி திகைத்தவன் மெல்ல சுதாரித்து கொண்டு அவள் முதுகை வாஞ்சையுடன் தடவியவாறு

“அனி... அனி செல்லம்?  எதுக்குடா அழுவற? என்னாச்சு? “ என்றான் பரிவுடன்...

அவளோ பதில் எதுவும் சொல்லாமல் அவன் மார்பில் இன்னும் ஒன்றிகொண்டு விசும்ப, அதற்குள் மற்றவர்களும் வந்துவிட, அங்கே அமுதினி ரஞ்சனை கட்டி கொண்டு இருப்பதை கண்டு மகிழ்ந்து போயினர்..

இதுவரை புருசனோட ஒட்டாமல் இருந்தவள் இப்படி ஒட்டிகிட்டாளே என்ற ஆச்சர்யமும் திகைப்புமாய் அவர்களையே பார்த்து இருக்க, அவளோ  இன்னுமாய் தன் கணவன் மார்பில் புதைந்து கொள்ள, தன் மனைவியை கொஞ்சி அவளை சமாதானம் படுத்தி கொண்டிருந்தான் மனோரஞ்சன்..

சற்று நேரத்தில் முகம் கொஞ்சம் தெளிந்துவிட  உடனே வெட்கத்துடன் அவன் மார்பில் இருந்து விலகியவள் அருகில் குறும்பு புன்னகையுடன் சிரித்து கொண்டு  நின்றிருந்த நிலாவை கண்டதும் முகம் இறுக கண்களில் கோபம் மின்ன

“மனோ... வாங்க நாம நம்ம வீட்டுக்கு போகலாம்.... “ என்று  நம்ம என்பதை அழுத்தி சொன்னாள்..

அதை கேட்டு ரஞ்சனுக்கு நம்பவே முடியவில்லை.. யாரும் அறியாமல் ஒரு முறை தன்னை கிள்ளி பார்த்து கொண்டான்..

“அனி... நிஜமாதான் சொல்றியா? “ என்றான் இன்னும் நம்ப முடியாமல்..

“நான் இந்த வீட்டை விட்டு வரமாட்டேன்... எனக்கு இங்கதான் புடிச்சிருக்கு.. நான் சந்தோஷமா இருக்கணும்னா என்னை தொந்தரவு செய்யாமல் இந்த வீட்டிலயே இருக்க விடுங்க.. “ என்று முன்பு அவள் கத்தியது நினைவு வந்தது.

இன்று அவளே இந்த வீட்டை விட்டு போகலாம் என்று  சொல்லவும் ஓரக்கண்ணால் நிலாவை பார்க்க அவளோ கண் சிமிட்டி கட்டை விரலை லேசாக உயர்த்தி காட்டி ஏதோ ஜாடை சொன்னாள்..

உடனே அதை புரிந்து கொண்டவன் இதழ்களில் நிறைவாய் ஒரு புன்னகை..!  

“என்னமோ நடந்திருக்கு.. இல்லையென்றால் தாத்தா ஏன் நேற்று இரவு போன் பண்ணி உடனே கிளம்பி வா என்றார்?

அவனும் அடுத்த ப்ளைட் புடிச்சு இங்கு வந்தால் அனி,  அவன் ஆருயிர் மனைவி என்றும் இல்லாத திருநாளா அவனை ஓடி வந்து கட்டி கொண்டதும் கூடவே நம்ம வீட்டுக்கு போகலாம் என்று  சொன்னதும் என்னமோ நடந்திருக்கு என்று புரிந்தது..

எது நடந்திருந்தாலும் அது நன்மைக்கே..” என்று  உள்ளுக்குள் சிரித்து கொண்டவன்

“ஸ்யூர் அனி... நீ போய் உன் திங்க்ஸ் ஐ எல்லாம் எடுத்து வை டா... “ என்க அடுத்த நொடி தன் அறைக்கு விரைந்திருந்தாள் அமுதினி..

அதற்குள் நெடுமாறன் மற்றும்  மனோகரியும் எழுந்து வந்திருக்க, மாப்பிள்ளையை மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்தனர்... 

அதிரதனும் அப்பொழுது ஜாக்கிங் செல்வதற்காக கிளம்பி வந்தவன் ரஞ்சனை வரவேற்று கை குலுக்கி பேருக்காக சிரித்தான்..

ஏனோ அவன் தாத்தா பார்த்த  மாப்பிள்ளை அதுவும் தன் அருமை தங்கை காதலை உடைத்து இவனை அவளுக்கு கணவனாக கொண்டு வரவுல் அதிரதனுக்கு ரஞ்சனை பிடிக்காமல் போய்விட்டது.. அதனால் அதிகமாக பேசமாட்டான் ஒரு பார்மாலிட்டிக்காக சிரித்து வைப்பான்..

ஆனால் ரஞ்சன் அவனுடன் நட்புடன் இருக்க முயல்வான்.. இன்றும் அதே போல மனம் நிறைந்த நட்புடன் நேசகரம் நீட்டி அதிரதனை நலம் விசாரிக்க அதிரதனும் தன் ஈகோவை விட்டு கொஞ்சம் இறங்கி வந்து பேச ஆரம்பித்தான்..

ஏனோ சற்றுமுன் அம்மு ரஞ்சனை கட்டி கொண்டதில் ரஞ்சன் மீது இருந்த ஏதோ ஒரு திரை விலகியதை போல இருந்தது..

கூடவே நேற்று இரவு நிலா விட்ட டோஸில் கொஞ்சம் தெளிந்திருந்தான் ரதன்..

அதனால் இன்று ரஞ்சன் முகம் பார்த்ததும் இவன்தான் தன் தங்கையை கடைசிவரை பார்த்து கொள்ள போகிறவன் என தோன்ற கூடவே தன் தங்கையை அனி என்று  செல்லமாக அழைத்து அவளை அணைத்து கொண்டதும் காண புரியாத சில விசயங்களை அவனுக்கு புரிய வைக்க, அந்த நிமிடமே வந்து சேர்ந்தது அப்படி ஒரு பாச பிணைப்பு ரதனிடம்..

அவனுடைய மாப்பிள்ளை ஆச்சே !! அவன் அருகில் அமர்ந்து கொண்டவன்

“சாரி... மாப்பிள்ளை.... “ என்றான் தயக்கத்துடன்..

அதை கேட்டு ரஞ்சனுக்கு மயக்கமே வந்தது... அதிரதனை பற்றி முன்பே தெரியும் அவனுக்கு... கூடவே தன் மீது அவன் வெறுப்பாக இருப்பதும் தெரிந்தது தான். தன்னை கண்டாலே ஒதுங்கி செல்பவன் இன்று தன்னை மாப்பிள்ளை என்று  அழைத்து சாரி சொல்ல, ஒரு நொடி திகைத்தவன்

“ஒ.. எதுக்கு சாரி மச்சான்.. பழசை எல்லாம் விடுங்க.. “ என்று  நட்புடன் சிரிக்க, அதிரதனும் அவனுடன் சிரித்து பேச ஆரம்பித்தான்...

தாத்தாவும் இணைந்து கொள்ள, சிறிது நேரத்திலயே ஒருவரை ஒருவர் கலாய்த்து கொண்டு சிரித்து பேசும் அளவுக்கு இயல்பாகி விட, அந்த இடம் கலகலப்பாக மாறி இருந்தது..

நிலா எல்லாருக்கும் காபி கொண்டு வந்து கொடுக்க, அவளை லேசாக முறைத்தவாறே அதிரதனும் ஒரு கப் ஐ எடுத்து கொண்டான்....

“அப்புறம் மாப்பிள்ளை...  காலையில் வரவேற்பு எல்லாம் பலமா இருந்தது போல.. “ என்று குறும்பாக சிரித்தான் நிலாவை ஓரக்கண்ணால் பார்த்தவாறு...

அவன் நிலா ரஞ்சனின் சட்டையை  பிடித்ததை மாடியில் இருந்து பார்த்திருந்தான் அதிரதன்..

அவள் சட்டையை பிடித்த வேகத்தை கண்டு  அவனே ஒரு நிமிடம் திகைத்து விட்டான்.. முன்ன பின்ன் தெரியாத ஒருத்தனை எவ்வளவு தைர்யமா சட்டையை பிடிக்கிறாளே என்று..

அதை சொல்லி ரஞ்சனை வார அவனும் அதை புரிந்து கொண்டு

“ஹீ ஹீ ஹீ கல்யாண வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் மச்சான்... கல்யாணம்  ஆய்ட்டாளே இந்த மாதிரி சில பல விபத்துக்களையும் பேஸ் பண்ணித்தான் ஆகணும்.. நல்லவேளை சிஸ்டர் சட்டையை மட்டும்தான் புடிச்சாங்க.. ஓங்கி அடிக்காம விட்டுட்டாங்க.. “ என்று  கண் சிமிட்டி சிரிக்க நிலாவுக்கோ வெட்கமாகி விட்டது..

“சாரி சார்...... “ என்றாள் வருத்தமாக.

“அதெல்லாம் மன்னிக்க முடியாது சிஸ்டர்... இந்த சாரை விட்டு என்னை முதல்ல அண்ணானு கூப்பிடுங்க.. அப்பதான் மன்னிப்பேன்.. “ என்று உரிமையுடன் கண்டிக்க, நிலாவுக்கோ கண் கலங்கி விட்டது..

அவள் பிறந்ததில் இருந்தே அவளுக்கு நெருங்கிய சொந்தம் என்று யாரும் இல்லை அவள் தாத்தாவை தவிர இன்று வந்தவன் தன்னை அண்ணன் என்க, அதில் நெகிழ்ந்து போனாள்..

அவள் கண்கள் கலங்குவதை கண்ட ரஞ்சனுக்கும் அவள் நிலை புரிந்து விட அவளை இயல்பாக்க எண்ணியவன்

“அப்புறம் மச்சான்... வெளில இருந்து வந்த எனக்கே இந்த நிலைனா எப்பவும் அவங்க கூட இருக்கிற நீங்க என்ன பாடு பட போறீங்களோ? சிஸ்டர் கிட்ட எப்பவும் நல்ல பேர் வாங்கிக்கங்க.. ஏதாவது தப்பு செய்து மாட்டிகிட்டிங்க. சட்டை எல்லாம் கிடையாது..  நேரா கன்னம்தான் .. “ என்று கண் சிமிட்டி சிரித்தவன்

“மேரேஜ் லைப் எப்படி போகுது மச்சான்? “ என்றான் ரஞ்சன் புன்னகையுடன்..

அதை கேட்டு அதிரதன் முகம் இறுகி போனது அடுத்த நொடியே அவன் பார்வை நிலாவிடம் செல்ல மீண்டும் ஒரு வெறுப்பான பார்வையை செலுத்தியவன் அதற்குள் தன்னை சமாளித்து கொண்டவன் எதுவும் சொல்லாமல் புன்னகைத்தான்..

அதே நேரம் அமுதினி மாடியில் இருந்து ஒரு பெரிய சூட்கேஸ் ஐ தூக்க முடியாமல் தூக்கி கொண்டு வர அதை கண்ட ரஞ்சன் பதறி மாடிக்கு விரைந்து அதை வாங்கி கொண்டான்..

“எதுக்கு அனி? இவ்வளவு பெரிய சூட்கேஸ்..?  அதுவும் தூக்க முடியாம தூக்கிட்டு வர்ற? என்னை கூப்பிட்டிருக்கலாம் இல்லை.. “ என்றான் கனிவுடன்..

தன் கணவனின் அக்கறையில் நெகிழ்ந்தவள்

“என் எல்லாம் ட்ரெஸ் எடுத்து வச்சுட்டேன்.. அதான் கொஞ்சம் ஹெவியா ஆய்டுச்சு..”

“ஓ.. அனிமா.. எதுக்கு  எல்லாம்? அடுத்த முறை வரும்பொழுது கொஞ்சம் எடுத்துக்கலாம் இல்ல.. “

“இல்ல.. இனிமேல் நான் இந்த  வீட்டு படிய மிதிக்க மாட்டேன்.. எனக்கு உரிமை இல்லாத இடத்துல நான் ஒரு நாளும் இருக்க மாட்டேன்.. வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம்.. “ என்று  நம்ம என்பதை மீண்டும் அழுத்தி சொன்னாள் தன் அண்ணியை முறைத்தவாரே..

நிலாவும் உள்ளுக்குள் சிரித்து கொண்டே நடப்பதை பார்த்து கொண்டிருந்தாள்..

மனோகரி ஓடி வந்து தன் மகளை கட்டி கொள்ள அவளோ தன் அன்னையை தள்ளிவிட்டு தன் அண்ணனிடம் பார்வையால் விடை பெற்று மற்றவர்களிடம் எதுவும் பேசாமல் விடுவிடுவென்று நடந்தாள்..

டிபன் சாப்பிட்டு செல்லாம் என அவள் அப்பா தடுக்க

“எனக்கு உரிமை இல்லாத வீட்டில் நான் பச்ச தண்ணி கூட குடிக்க மாட்டேன் பா... நான் எங்க வீட்ல போய் சாப்டிக்கறேன்... “ என்றவள் நிலாவிடம் வந்து

“என்ன அண்ணியாரே.. இப்ப மனசு குழுகுழுனு இருக்கா? இப்ப சொல்றேன் கேட்டுக்கங்க.. எனக்கு புடிக்கலைனாலும் என் புருஷன் என்னை பிடித்துதான் தாலி கட்டினார்.. எனக்காகவே இந்த மூணு  வருஷமும் காத்துகிட்டிருக்கிறார்.. அப்படி பட்ட அவர் வீட்டையே வேண்டாம்னு இருந்தவ நான்..

ஆனால் என் அண்ணன் வேற ஒரு பொண்ணை விரும்பறானு தெரிந்தும் சட்டமா கழுத்தை நீட்டி தாலிய கட்டிகிட்டு இந்த ஜமீன் மருமக னு நாட்டாமை பண்ணினா மட்டும் பத்தாது...

வெறும் நாட்டாமை பதவியும் இந்த  ஜமீன் மருமகனு பதவி மட்டும் தான் கிடைக்கும்.. என் அண்ணன் மனசு எப்பவும் உங்க பக்கம் வராது..என் அண்ணன் மனசை மாத்தி அவனை மனதார உங்களை மனைவியா ஏத்துக்க வச்சிடுங்க..

அப்ப ஒத்துக்கறேன் நீங்க இந்த  வீட்டு மருமக.. இந்த ஜமீன் மருமக என்று.. ஆல் தி பெஸ்ட் அண்ணியாரே.... “ என்று நக்கலாக சிரித்தவள் தன் கணவன் கையை பிடித்து கொண்டு

“வாங்க போகலாம்... “ என்று இழுக்காத குறையாக சென்றாள் அமுதினி...

“கைய கொடு மருமகளே....! இந்த கிழவன் மூணு வருஷமா சாதிக்க முடியாதத ஒரே நாள்ல சாதிச்சிட்டியே... சபாஷ்.. நீ உண்மையிலயே கெட்டிக்காரிதான்... “ என்று  நிலாவின் கையை பிடித்து குலுக்கி  சந்தோஷமாக சிரித்தார் தேவநாதன்..

தன் பெரிய பேத்தி தன் புருஷனுடன் வாழாமல் இருப்பது அவர் மனதில் பெரும் கவலையாக இருந்தது.. சற்று முன் அவள் வீராப்புடன் தன் கணவனுடன் கிளம்பி சென்றிருக்க தன் அலுவலக அறைக்கு வந்திருந்தார் தேவநாதன்..

நிலாவும் அவருக்கு மாத்திரை கொடுக்க என அங்கு வர, அவளை பாராட்டி கொண்டிருந்தார் தாத்தா...

“எப்படி நிலா பொண்ணே.. இதை சாதிச்ச? “என்றார் இன்னும் ஆச்சர்யத்துடன்.

“ஹீ ஹீ ஹீ எல்லாம் உங்க கிட்ட இருந்து கத்துகிட்டதுதான் தாத்தா.. இதை பாருங்க.. “ என்று நேற்று அவள் பார்த்த அந்த பொறுக்கி ரஞ்சன் வீடியோவை காட்டினாள்..

“இந்த வீடியோவை பார்த்ததுமே அம்முவுக்கு அவள் தவறு புரிந்து விட்டது.. அதுவும் அந்த வயதில் வருவது எல்லாம் ஒரு இன்பேக்சுவேஸன்.. ஒரு விதமான க்ரஷ்.. அது ஒன்றும் காதலே அல்ல.. என்று அவளுக்கு புரியற மாதிரி ஜாடையா சொன்னேன்... அதில் கொஞ்சம் தெளிவாயிட்டா..

அப்பவும் அவளை வெளி கொண்டு வர தார்குச்சி போட்டு தள்ள வேண்டியதா இருந்தது.. அதனால்தான் நேற்று உங்களை சாப்பிட வரவேண்டாம் என்று  சொல்லி விட்டு டைனிங் டேபிலில் ஒரு குட்டி ட்ராமா பண்ணினேன்.. உடனே உங்க அருமை பேத்தியும் ரோஷம் வந்து இன்னைக்கு பொட்டியை தூக்கிட்டு கிளம்பிட்டா..

என் பேச்சை கேட்டு ரஞ்சன் அண்ணாவை இங்க வர சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ் தாத்தா.. அவரை பார்த்தால் அம்மு உடனே வெளிவந்திடுவானு நான் போட்ட கணக்கு தப்பாகலை.. என்னமா ஓடி வந்து கட்டிகிட்டா..

புருஷன் மீது அவ்வளவு பாசத்தை வச்சுகிட்டு சும்மா இல்லாத காதலை இருக்கறதா நினைச்சுகிட்டு மூணு வருஷமா வாழ்க்கையை வீணாக்கிட்டா. " என்றாள் சிரித்தவாறு..

“ஹ்ம்ம் இந்த விசயத்தில் அண்ணனும் தங்கச்சியும் ஒரே குட்டையில் ஊறின மட்டைங்க தான்.. அது கிடக்கட்டும்.. இந்த வீடியோ எப்படி அம்மணி?

இந்த பொறுக்கியைத்தான் நான் மூணு  வருஷம் முன்னாடியே போலிஸ்ல புடிச்சு கொடுத்துட்டனே..நல்ல வேளையா அப்ப என் பேத்தி காதல் எனக்கு தெரிய வர இந்த  பொறுக்கி பயல பத்தி விசாரிக்க அப்பதான் அவனை பத்தின உண்மைகள் தெரிய வந்தது...

என் பேத்தி மாதிரி பல புள்ளைங்கள மயக்கி வச்சிருக்கான் னு.. அடுத்த நாள் என் பேத்திய வரவழைத்து நைசா வெளில கூட்டிகிட்டு போய்  மயக்க மருந்து கொடுத்து அவளை மோசமா போட்டோ எடுப்பதா இருந்திருக்கான்..

எப்படியோ என் ஆளுங்க அதை தெரிஞ்சுகிட்டு அவனை தூக்க போனா ஆள் எஸ் ஆகிட்டான்...

என் பேத்திகிட்டயும் அவனை பத்தி ஜாடை மாடையா சொல்லி அவனை மறந்துட சொன்னா அவள் காதல் தெய்வீக காதல். அவனையேதான் கட்டுவேன் னு ஒத்தக் கால் ல நின்னா..

சரி அதுக்கு மேல நாம கட்டாயபடுத்தினா வீட்டுக்கு தெரியாம ஓடி போய் அவன் கிட்ட மாட்டிகிட்டா என்ன செய்யறதுனு கொஞ்சம் விட்டு புடிக்கிற மாதிரி நடிச்சேன்.. அவளும் அமைதியாகிட்டா...

ஆனால் எந்த நேரமும் அந்த ரஞ்சன் இவளை தொடர்பு கொண்டு உருக பேசினால் இவள் அப்படியே கிளம்பிடுவானு தான் சட்டுபுட்டுனு கல்யாணத்தை பண்ணினேன்..

மாப்பிள்ளை வீட்லயும் மாப்பிள்ளை கிட்டயும் எல்லாம் உண்மையும் சொல்லிட்டேன்.. அவளுக்கு வயது இருபதுதான் அப்ப.. அதனால் கல்யாணத்தை மட்டும் பண்ணிட்டு அவ மனசு மாறுகிற வரைக்கும் காத்திருக்கணும் னு சொல்லி உத்தரவு வாங்கிகிட்டுதான் இந்த கல்யாணத்தை நடத்தி வச்சேன்..

மாப்பிள்ளையும் தங்கமானவர்.. என் பேத்திக்கு பிடிக்கிற மாதிரியே நடந்துகிட்டார்.. கல்யாணம் நடந்த அன்னைக்கே என் பேத்தி போன்க்கு போன் பண்ணி இருக்கிறான்.. அதை வைத்து உடனே என் ஆளுங்க அவனை புடிச்சு போலிஸ்ல கொடுத்துட்டாங்க..

இன்னும் ஜெயில்ல தான் இருக்கான்.. அப்புறம் எப்படி அவன  இப்ப போலிஸ் அர்ரெஸ்ட் பண்ணினாங்க.. " என்றார் யோசனையாக

“ஹீ ஹீ ஹீ.. இல்லாத மாப்பிள்ளைய இந்த தேவநாதன் ஜமீன்தார் ஓட வச்சப்போ அவரோட ஆருயிர் பேரன் பொண்டாட்டி.. இந்த ஜமீன் மருமக  இல்லாத  பொறுக்கியை அர்ரெஸ்ட் பண்ண வைக்க முடியாதா என்ன? “ என்று  தலை சரித்து குறும்பாக சிரிக்க அவரோ புரியாமல் குழப்பத்துடன் பார்க்க

“ஹா ஹா ஹா தாத்தா.. இந்த வீடியோ உண்மை இல்ல. எடிட் பண்ணினது.. வேற ஒருத்தனை அர்ரெஸ்ட் பண்ணின வீடியோவில் அந்த ரௌடிக்கு பதிலா இந்த பொறுக்கியை சேர்த்துட்டேன்..

அதை உங்க பேத்தி பார்த்ததும் பொங்கிட்டா.. அதெல்லாம் உண்மையானதா னு  ஆராய்ந்து பார்க்க அவ உங்கள மாதிரி அதி புத்திசாலி இல்லையே.. “ என்று சொல்லி  கலகலவென்று சிரித்தாள் நிலா..

அதை கேட்டு தேவநாதன் திகைத்து போய் நின்றார் என்றால் அதுவரை அந்த அலுவலக அறை வாயிலில் நின்று கொண்டு அவர்கள் பேசியதை கேட்ட அதிரதனோ அதிர்ந்து போய் நின்றான்..

தன் தாத்தாவிடம் சில பைல்களில் கையெழுத்து வாங்குவதற்காக அவரை தேடி அலுவலக அறைக்கு வந்திருந்தான்.. கூட்டு களவானிகள் இருவரும் உள்ளே பேசி கொண்டிருக்க அவனும் வெளியிலயே நின்று கொண்டு அவர்கள் பேசுவதை கவனித்து கொண்டிருந்தான்..

அவளின் தந்திரத்தை கண்டவனுக்கோ அதிர்ச்சி மற்றும் ஆச்சர்யமாக இருந்தது..

“இந்த ஒல்லிகுச்சி இவ்வளவு வேலை பண்ணி இருக்காளா? “  என்று  ஆச்சர்யமாக இருந்தது...

அதே நேரம் அவன் தாத்தா சொல்லிய விசயங்கள் அவனுக்கு அடுத்த அதிர்ச்சி..

எதுவும் பேசாமல் தன் அறைக்கு திரும்பி வந்தவன் காவல் துறையில் இருக்கும் தன் நண்பன் ஒருவனை அழைத்து அந்த ரஞ்சனை பற்றி விசாரிக்க அவனும் பைலை புரட்டி பார்த்து விட்டு  தாத்தா  சொன்னதையே திருப்பி சொன்னான்..

அதுவும் அவன் தாத்தாவால் தான் பல பொண்ணுங்க வாழ்க்கை காப்பாற்ற பட்டதாக பெருமையாக சொல்ல இன்னுமாய் அதிர்ந்து போனான்..

“அப்படி என்றால்............. ?

தாத்தா நல்லவர் தானோ ? “  என்று முதன் முறையாக சரியான பாதையில் யோசிக்க ஆரம்பித்தான்..

ஆனால் அதே நேரம் சாந்தினியிடம் இருந்து அழைப்பு வர அடுத்த நொடி அவன் முகம் இறுகியது

“அம்மு காதலை பிரித்தது ஓகே.. அவள் தவறானவனை காதலித்தாள்.. அதுக்காக அவளை பிரித்து திருமணம் செய்து வைத்தார்.. ஆனால் நான்? நான் ஒன்னும் தவறானவளை காதலிக்கவில்லையே .

என் மீது உயிராக இருப்பவளைத்தானே காதலிக்கிறேன்.. அப்புறம் ஏன் என் காதலை பற்றி தெரிந்து கொண்டே இந்த சதி வேலையை பண்ணினார்...

எல்லாம் திமிர்.. அவர் சொல்றதைத்தான் எல்லாரும் கேட்கணும்.. அவர் வாக்கு கொடுத்தது தான் முக்கியம்.. அதை நிறைவேற்ற அடுத்தவங்க மனசை சுக்கு நூறா உடைச்சாலும் பரவாயில்லை.. எல்லாம் திமிர்..

அவர் திமிரை அழித்து காட்டுகிறேன்... அவர் செய்தது தவறு என்று அவர் மண்டையில் உறைக்கும்படி செய்கிறேன்.. செய்வான் இந்த அதிரதன்... “

என்று  பல்லை கடித்தவன் அடுத்த நொடி தன் அலைபேசியில் இருந்த அழைத்தவளின் புகைப்படத்தை கண்டவன்  பனியாய் உருகி போக தன் கோபத்தை தள்ளி வைத்து    தன் நிலா பொண்ணின் காதல் மழையில் நனைய ஆரம்பித்தான் அதிரதன்...! 

Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!