என்னுயிர் கருவாச்சி-20
அத்தியாயம்-20 அ டுத்த ஒரு மணி நேரத்தில் , பேருந்து திருச்சியின் நுழைவாயிலான டோல்கேட்டில் நின்றிருக்க , அங்கயே இறங்கி கொண்டனர் இருவரும். அங்கிருந்து காட்டூர் செல்லும் பேருந்தில் ஏறி அந்த விளையாட்டு போட்டி நடக்கும் உருமு தனலெக்ஷ்மி கல்லூரிக்கு வந்து சேர்ந்திருந்தனர். முதன்முதலாக தன் குடும்பத்தை விட்டு தனியாக வந்திருந்தால் , எங்கே இறங்குவது எப்படி காட்டூர் செல்வது என்று தவித்திருப்பாள் பூங்கொடி. ஆனால் ராசய்யா உடன் வரவும் , அவனே காட்டுர் செல்லும் பேருந்தை நிறுத்தி அந்த பேருந்தில் இவளையும் அழைத்துக்கொண்டு இயல்பாக ஏறி இருக்க , அவளுக்கு கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. “ இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும் ? முன்னரே இங்க வந்திருப்பானோ ? ” என்று யோசிக்க , அவள் மனதை படித்தவனாய் “ஒவ்வொரு இடத்துக்கும் போய் பார்த்து தான் இடம் தெரியணும்னு இல்ல கருவாச்சி. உன் அளவுக்கு படிக்கவில்லை என்றாலும் நானும் கொஞ்சமாச்சும் எழுத படிக்க தெரிஞ்சிருக்கேன். பஸ் நம்பரையும் அது போகும் ஊரையும் படிக்கும் அளவுக்க...