நிலவே என்னிடம் நெருங்காதே-66


 

அன்பான வாசகர் தோழமைகளே,

நான் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் என்னுயிர் கருவாச்சி வரும் சித்திரைத்திருநாளில், அமேசானில் புத்தகமாக வெளி வர இருக்கிறது. 

அதற்கு முன்னால், இந்த கதையை பற்றிய நிறை, குறைகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

சிறந்த கருத்துக்கள், புத்தகம் வெளிவரும்பொழுது உங்கள் பெயருடன் வெளியிடப்படும். இன்னும் இந்த கதையை படிக்காதவர்கள், படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...நன்றி!! அன்புடன் பத்மினி செல்வராஜ்..! 

https://padminiselvaraj.blogspot.com/2021/12/ennuyir-karuvachi.html


அத்தியாயம்-66

ன்று இரவு தன் வீட்டில் பால்கனியில் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டி கொண்டு நடை பயின்று கொண்டிருந்தான் அதிரதன்..

கால்கள் நடையை தொடர்ந்தாலும் அவன் மனமோ பலவற்றையும்  எண்ணி குழம்பி கொண்டிருந்தது...

தன் வாழ்வில் இதுவரை நடந்தவற்றை எல்லாம் திரும்ப அசை போட்டு பார்த்தான்..

தள்ளி நின்று பார்க்கும்பொழுதுதான் அவன் முட்டாள்தனம் அவனுக்கு புரிந்தது..

அவன் தாத்தாவின் மீது கொண்டிருந்த வெறுப்பு தேவை இல்லாதது...நிலா சொன்னதை போல எல்லாமே தப்பு தப்பாக பார்த்து வைத்திருக்கிறான் என்ற உண்மை விளங்கியது...

அடுத்ததாக அவன் நினைவில் வந்து நின்றாள் நிலா...

தனக்கு மனைவியாய் வந்ததில் இருந்து அவன் வாழ்வில் வந்த மாற்றங்கள் கண் முன்னே வந்தது... அவளிடம் பேசும்பொழுது  எப்பொழுதும் மனதுக்கு இதமாகவும் எந்த வேதனை இருந்தாலும் அதை விரட்டிவிட முடிந்ததும் புரிந்தது..

கூடவே அவள் குடும்பத்தாருக்கு அவள் செய்த உதவி...

தான் கவனிக்க மறந்த பொறுப்புகளை நல்ல மனைவியாய் அந்த ஜமீனின் மருமகளாய் அவன் இடத்தில் இருந்து கவனித்து கொண்ட அவளின் கடமையும் பொறுப்பும் கண் முன்னே நிழல் ஆடியது..

“எனக்கு மனைவியாக வரப்போகிறவள் என்னை மட்டும் நேசித்தால் பத்தாது.. என் குடும்பத்தையும் நேசிக்க வேண்டும்.. “ என்று அன்று அஸ்வின் சொன்னது நினைவு வந்தது.. 

அப்படி பார்த்தால் அவன் மனையாள் அவன் குடும்பத்தை தன் குடும்பமாக அல்லவா நேசிக்கிறாள்... யாருமே கண்டு கொள்ளாத அந்த ஜமீனின் மூத்த இளவரசி அமுதினியின் வாழ்க்கையை நேராக்கி இருக்கிறாள்...

இன்று அம்மு தினமும் இரண்டு முறையாவது தன் அண்ணியை அழைத்து பேசி விடுவாள்.. அவனிடம் கூட அந்த அளவுக்கு க்ளோஸாக இல்லை.. ஆனால் நிலாவிடம் அந்த அளவுக்கு ஒட்டி கொண்டாள்..

அதே போலத்தான் அவனின் இளைய தங்கை யாழினி.. அவளுக்கும் ஒரு தோழியாய் சகோதரியாய் நின்று நிறைய விசயங்களை கற்று கொடுத்தும் அவளுக்கு பிடித்த படிப்பை ஆராய்ந்து பொறுப்பாக அவளை கல்லூரியில் சேர்த்ததும் கண்டு மெச்சி கொண்டான்..

அவன் தாத்தா மற்றும் பெற்றோர்கள் உடல் நிலையில் அக்கறை எடுத்து கொண்டு அவர்களை பொறுப்பாக கவனித்து கொள்வதும் கண் முன்னே வந்தது...   

அவ்வளவு ஏன்.. அவளை எப்பொழுதும் கரித்து கொட்டும் அவன் பாட்டி    பாரிஜாதத்தை கூட இப்பொழுது மாற்றிவிட்டாள்..

அவரும் தான் பெற்ற மகள் அவன் அன்னை மனோகரியை விட மணிக்கொரு தரம் நிலா எங்கே என்று அவளைத்தான் தேடுகிறார்..

இப்படி எல்லாருக்கும் பிடித்தவளாய் எல்லாரையும் புரிந்து கொண்டு அவரவருக்கு பிடித்த மாதிரி நடப்பவளாய் எல்லார் மீதும் அன்பு செலுத்துபவளாய் ஒரு பெண் கிடைப்பது பெரிதும் அரிது என்று புரிந்தது...

அப்படிபட்ட பெண்ணே தனக்கு மனைவியாக வந்திருக்கிறாள் என்றால்?

மனைவி என்றதும் அவள் ஒரு துணைவியாய் தனக்காகவும்  எவ்வளவு பார்த்து இருக்கிறாள் என்பதும் உறைத்தது...

தாலி கட்டிவிட்டான் தனக்கு கணவனாக உடையவனாக ஆகி விட்டான்.. இனி அவனை தன் கைக்குள் போட்டு கொள்ளலாம் என்று குறுக்கு வழியில் அவனை அடைய முயலாமல் அவனை இன்றுவரை அவனாகவே விட்டிருக்கிறாள்..

அவள் நினைத்திருந்தால் அவள் அழகை காட்டி அவனை மயக்க முயற்சி செய்திருக்கலாம்.. ஒரே அறையில் தங்கி இருந்த பொழுதும் ஆபாசமாக உடை அணிந்து அவன் கவனத்தை கவர்ந்து அவனை அடைந்திருக்கலாம்...

இல்லை... அவனே அவளிடம் தலை சுற்றி போய் அவளை அடைய முயலும்போதும் கணவன் தானே என்று அவனுடன் இழையாமல் அவனுடைய  அப்போதைய மயக்கத்துக்கு,  ஆசைக்கு இடம் கொடுக்காமல் முதலில் அவன் மனதில் ஒரு தெளிவு வரவேண்டும்..

அப்படி தெளிவு வந்தபின் ஆரம்பிக்கும் இல்லறம்தான் நல்லறமாக இருக்கும் என்று சொல்லி அவனை தள்ளி வைத்தது கண்டு இப்பொழுது பூரித்தான்..

அடுத்ததாக அவள் சாந்தினிக்காக , அவள் சந்தோசத்துக்காக பார்த்து அவள் ஆசையாக விரும்பும் தன் கணவனையே விட்டு கொடுக்க முன் வந்ததும் அவன் மகிழ்ச்சிக்காக அவனை அவன் விரும்புவளுடனே சேர்த்து வைத்து விலகி செல்வதாக கூறியது இன்னுமே அவனை பாதித்தது...

கடைசியாக் இன்று அவள் காட்டிய பாசம்.. தனக்கு ஒன்று என்ற உடனே துடித்து போன அவள் இதயம்..

சதா என்னையே நினைத்து கொண்டிருப்பாளோ? அதுதான் எனக்கு வரப்போகும் ஆபத்து முன் கூட்டியே தெரிந்து விட்டதோ..” என்று யோசித்தான்..

“ஹலோ பாஸ்... அந்த பொண்ணு  மட்டும் இல்ல.. நீயும்தான் இப்ப எல்லாம் உன் பொண்டாட்டிய பற்றியேதான் யோசித்து கிட்டிருக்க..”  என்று கண் சிமிட்டி சிரித்தது அவன் மனஸ்...

அதை கேட்டு அதிர்ந்து திகைத்தவன் மனஸ் சொல்வது உண்மைதான் என்று உறைத்தது.. இப்பொழுது எல்லாம் நிலாவை பற்றிதான் அதிகம் யோசித்து கொண்டிருக்கிறான்..

அதுவும் அவன் ஆருயிர் நண்பன் அஸ்வின் அவன் மனையாளை ஆர்வமாக பார்ப்பதை கூட அவனால் தாங்கி கொள்ளமுடியவில்லை..    

“அப்படி என்றால் இதுதான் உண்மையான கணவன் மனைவி நேசமா? நான் இந்த நிலாவைத்தான் விரும்புகிறேனா? அப்படி என்றால் சாந்தினி??  அவள்  என் தாத்தாவின் சபதத்தை நிறவேற்றுவதற்காக தேர்ந்தெடுத்த ஆயுதமா? அவளை உண்மையாக நான் காதலிக்கவில்லையா?

ஆனால் அவள்?? சாந்தினி ?? அவள் என் மீது காட்டும் நேசம் உண்மைதானே..! இல்லை ஒருவேளை அவளும் என்னைப்போல என் கம்பீரத்தின் மீதும் என் பண வசதிகளின் மீதும்தான் மோகமா?”   என்று அவசரமாக ஆராய,  அதுதான் உண்மை என்று உரைத்தது...

அவளுடனான எல்லா சந்திப்புக்களையும் அசை போட்டு பார்த்தான்..

அவளுக்கும் அவன் மீது இருப்பது வெறும் கவர்ச்சி மட்டுமே என்று தெளிவாக புரிந்தது..

ஒவ்வொரு முறையும் அவனை தன்னுடனே தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற வேகம் மட்டுமே அவளின் கண்ணில் தெரிந்தது... அதில் துளியும் அவன் மீதான நேசம் தெரியவில்லை..

அந்த வேகம்தான் அவளை கீழ்த்தரமாக நடந்து கொள்ளவும் செய்திருக்கிறது... கண்டிப்பாக அது காதல் இல்லை..”  என்று இப்பொழுது தெளிவாக புரிந்தது அவனுக்கு..

மேலும் இத்தனை நாட்கள் பழகியதில் அவன் குடும்பத்தை பற்றி என்றுமே அவள் அக்கறை பட்டதில்லை.. .அவளுக்கு வேண்டியது அவன் மட்டுமே...

அதுவும் அவன் அவளுடன் அடிக்கடி பார்ட்டிக்கு செல்ல வேண்டும்.. அவனுடன் பெருமையாக கை கோர்த்து நடனம் ஆட வேண்டும்..எல்லாரும் அவளை பார்த்து பொறாமை படணும்.. என்பதிலயே அவள் கவனம் இருந்ததும் இப்பொழுது புரிந்தது...

கூடவே அவள் நேசத்தை பற்றி இன்னும் கொஞ்சம் சந்தேகம் இருக்க தன் அலைபேசியை எடுத்தவன் சாந்தினிக்கு அழைத்தான்..அவன் அழைப்பை பார்த்ததும் துள்ளி குதித்தவள் உடனே அழைப்பை ஏற்று

“ஹாய் பேபி..”  என்று கொஞ்சலுடன் ஆரம்பிக்க அவளை இடை மறித்து நேராக விசயத்தை கேட்டான்..

“சது... இன்று மாலை 6 மணிக்கு நீ என்னை பற்றி எதுவும் நினைத்து கொண்டிருந்தாயா? உனக்கு ஏதாவது தோணுச்சா? “ என்றான் ஒரு சிறு எதிர்பார்ப்புடன்..

“ப்ச்.. உங்களை பற்றியா? அதுக்கெல்லாம் நேரம் இல்லை அத்தூ...எனக்கு முடிக்க வேண்டிய ப்ராஜெக்ட் வொர்க் நிறைய இருந்தது... அதுல பிசியா இருந்தேன்..ஏன் என்னாச்சு? “ என்றாள்  கிளுக்கி சிரித்தவாறு..

“நத்திங்... ஓகே சது.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நான் அப்புறமா கால் பண்றேன்..பை குட் நைட்..டேக் கேர்..  “ என்று அழைப்பை துண்டித்தான்...

சாந்தினியோ பெரிய ஏமாற்றத்துடன் அலைபேசியை வைத்தவள் அவன் செய்கையில் குழம்பி போனாள்.. கண்டிப்பாக அவன் நடத்தையில் பெரிய மாற்றம் இருப்பதாக உறுதியானது..

ஆனால் அது என்னவென்றுதான் அவளால் கண்டு பிடிக்க முடியவில்லை.. அவன் தன்னை விட்டு வெகு தூரம் விலகி சென்றதை போல ஒரு பீல் அவள் உள்ளே... அடுத்து என்ன செய்ய என்று யோசிக்க ஆரம்பித்தாள்

அதிரதனோ தன் அலைபேசியை வைத்தவன் மீண்டும் தன் நடையை தொடர்ந்தான்...

“அது எப்படி நிவிக்கு மட்டும் எனக்கு வரப்போகும் ஆபத்து தெரிந்திருக்கிறது..?  எனக்கே கூட அந்த மாதிரி எந்த ஒரு உள்ளுணர்வும் சொல்ல வில்லையே..” என்று மீண்டுமாய் ஆழ்ந்து யோசித்தான்..  

அந்த ஆராய்ச்சியில் ஒரு உண்மையை கண்டுபிடித்தான்..

அது அவன் மனதிலும் இப்பொழுது அவன் மனையாள் மட்டுமே ஆட்சி செய்கிறாள் என தெள்ள தெளிவாக புரிந்தது..

அவள் கொஞ்சம் வாடினாலும் அதை அவனால் தாங்க முடியாதது நன்றாக உறைத்தது.. ஆனால் அது போன்ற ஒரு பீல் சாந்தினியிடம் இதுவரை தோன்றியதில்லை..

“அப்படி என்றால் சாந்தினியின் மீதான நேசம் வெறும் பழிவாங்குவதற்காக காதல் என்று நானே இழுத்து விட்டு கொண்டதுதான்... என்னால் இனி நிவியை தவிர வேற யாரையும் ஏற்க முடியாது..” என தெளிவாகி விட முகத்தில் பிரகாசம் வந்து ஒட்டி கொண்டது...

உடனே கண்களை மூடி கொண்டவன்

“யெஸ்.. ஐ லவ் மை வைப்... ஐ லவ் மை நிலா.. ஐ லவ் மை மூன்.. ஐ லவ் மை பட்டிக்காடு... “ என்று துள்ளி குதித்தான்..

ஆனால் அடுத்து சில நொடிகளில்  அவன் பிரகாசம் மறைந்து முகத்தில் கவலை வந்து ஒட்டி கொண்டது..

“சது..? அவளும் பாவம்தான்... நான் கொடுத்த நம்பிக்கையால் தான் என்னை நம்பி இருக்கிறாள்... “ என்று சாந்தினி பக்கமாக பார்த்தான் ரதன்.. .

“ஆனால் பாஸ்.. பாவம் பார்த்து வருவது காதல் அல்ல.. இப்பதான் உன் பொண்டாட்டி மீதான காதலை ஒத்து கொண்டாய்.. இனி அவளை மட்டும் பார்... சது பாவம் என்று தாலிகட்டியவளை விட்டுவிட்டு  அவளை ஏற்று கொள்ள முடியாது.. ஏதாவது செய் மேன்... “ என்று அவன் மனஸ் அவனுக்கு ஒரு கொட்டு வைத்து அவனை முறைத்து பார்த்தது....    

கைகளை தன் மார்புக்கு குறுக்காக இறுக்கி கட்டிக் கொண்டவன் மீண்டுமாய் ஏதேதோ யோசித்தவாறு நடை பயின்றான்..

அவனுக்கு சாந்தினியை அப்படியே விட்டுவிட மனமில்லை..

“அவளும் என்னை காதலிப்பதாக எண்ணி கொண்டிருக்கிறாள்.. அவளை எப்படி இதிலிருந்து வெளிக்கொண்டு வருவது?  அவளுக்கு எப்படி ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பது? “  என்று யோசித்துக் கொண்டிருந்தான்..

அவனுக்கு சாந்தினி எப்படியோ போகட்டும்.. அது அவள் தலைவிதி.. “  என்று விட்டுவிட மனமில்லை.. அதனால் அடுத்து என்ன செய்வது என்று மண்டையை உடைத்துக் கொண்டு இருந்தான்..  

அப்போது அவன் அலைபேசி அழைக்க பெயர் தெரியாத நபரிடமிருந்து வந்திருந்தது அந்த அழைப்பு..

யோசனையுடன் அதை ஏற்று காதில் வைத்தவன் சற்றுநேரம் அந்த நபருடன் உரையாடிய பிறகு அவன் முகம் பிரகாசமானது..

அதுவரை இருண்ட அமாவாசையாய்,  சந்திரகிரகணம் சூழ்ந்த நிலவாய் இருந்தவன் முகம் இப்பொழுது அதிகாலை கதிரவனாய் கிரகணம் விலகி வெளிப்படும் பால்நிலா வாய்  பிரகாசித்தது..

அத்தோடு தன் மனதை அரித்து வந்த குழப்பங்களுக்கு எல்லாம் விடை கிடைத்ததை போல துள்ளிக் குதித்தான்.. அதே உற்சாகத்தோடு தன் அறைக்கு திரும்பி வர அங்கே நிலவினி  படுக்கையில் சுருண்டு  படுத்திருந்தாள்..

சிறு குழந்தையை போல காலை சுருட்டிக்கொண்டு மடக்கி வைத்து உறங்கும் அவளையே சிறிது நேரம் நின்று ரசித்திருந்தான்...

பின் அந்த பொசிஷனில் அவள் அப்படி உறங்கினால்  கால் வலிக்கும் என்று அவள் காலை நேராக நீட்டி வைத்து அவள்மீது போர்வையை இழுத்து மூடி அவள் நெற்றியில் மெல்ல இதழ் பதித்தான்..

அவளோ தன் கணவன் தந்த முதல் முத்தத்தின் சிலிர்ப்பில் முகத்தை சுளிக்க அந்த முகச்சுளிப்பையும் கண்டு  ரசித்தவாறு அவள் அருகில் படுத்துக் கொண்டான்..

கண்களை மூடி உறங்க முயல, சற்று நேரத்தில் ரதன் என்று வீறிட்டு எழுந்து அமர்ந்தாள் நிலா..

அவளின் அலறலைக் கேட்டு அவனும் திடுக்கிட்டு எழுந்து அமர தன் அருகில் அவனைக் கண்டதும் பாய்ந்து வந்து அவனை இறுக்கி கட்டிக் கொண்டாள்..

“ரதன்... உங்களுக்கு ஒன்னும் இல்லையே.. ? “ என்று மீண்டும் அவன்    கை கால் என்று அவசரமாக ஆராய்ந்தாள்..  

அவனை இறுக்கி கட்டி இருந்தபொழுது அவள் உடலில் இருந்த சிறு நடுக்கம் அவனால் உணர முடிந்தது.. கூடவே அவள் முகம் எல்லாம் வேர்வை முத்துக்கள் அரும்பி இருந்தன..

பயத்தில் அவள் இதழ்கள் தந்தி அடித்தன.. அவள் ஏதையோ கண்டு பயந்திருக்கிறாள் .. ஒரு வேளை அந்த விபத்தின் தாக்கம் இன்னும் அவளை விட்டு நீங்கவில்லையோ?  என்று புரிய அவளை தன்னோடு சேர்த்து அணைத்தவன்

“என்னாச்சு நிவி? ஏன் அலறின? கனவு எதுவும் கண்டியா? “ என்றான் அவள் முதுவை ஆதரவாக வருடியபடி.

அவளோ அவன் மார்புக்குள் புதைந்து கொண்டவள்

“ஹ்ம்ம்ம்ம் “ என்று தலையை மட்டும் ஆட்டியவள் அந்த கனவின் பாதிப்பு மீண்டும் நினைவு வர, இன்னுமாய் தன் கணவனை இறுக்கி கட்டி கொண்டாள்..

உடனே அதில் உருகி  போனவன்

“எனக்கு  ஒன்னும் இல்ல மா.. ஐம் ஆல்ரைட்... அப்படியே எனக்கு எதாவது வந்தாலும் உன்னை மீறி எனக்கு எதுவும் ஆகிவிடாது.. உன்  கழுத்தில் இருக்கும் மாங்கல்யம் ரொம்ப ஸ்ட்ராங் ஆனது.. உன் புருஷனுக்கு எந்த ஆபத்தும் அவ்வளவு சீக்கிரம் வந்து விடாது.. ரிலாக்ஸ்... நிவி..”

என்று அவளை சமாதான படுத்தியவாறு அவள் இமைகளை நீவிவிட்டு அவள் முதுகை மீண்டுமாய் தடவிவிட்டு அவளை சமண படுத்தியவன்  அவளை தன் மார்பின் மீது சாய்த்தவாறு  அப்படியே உறங்கிப் போனான்...

தன் கணவனை இன்னுமாய் இடையோடு சேர்த்து கட்டி கொண்டு அவன் மஞ்சத்தில் தலை சாய்த்து ஒரு வித நிம்மதியுடன் துயில் கொண்டாள் அவன் நிலா...!

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!