தேடும் கண் பார்வை தவிக்க-51

 


அத்தியாயம்-51

றுநாள் மாலை நான்கு  மணி அளவில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள் தமயந்தி..

நேற்று இரவு மன உளைச்சலால் இரவு வெகு நேரம் ஆகியே கண் அயர்ந்தாள்.. காலையில் எழுந்திருக்க முடியவில்லை..

அவளை எழுப்ப வேண்டாம் என்று சொல்லிவிட்டு ரிஷி மட்டும் அலுவலகம் கிளம்பி சென்றிருந்தான்..  

அவள் மதியம் வரைக்கும் எழுந்திருக்காமல் தூங்க ரிஷிதான் கண்ணம்மா வை அழைத்து  அவளுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுக்க சொல்ல அவரும் அவளை கெஞ்சி கொஞ்சி கொஞ்சமாக வயிற்றுக்குள் தள்ளி விட மீண்டும் அப்படியே சுருண்டு படுத்து விட்டாள்..  

நன்றாக உறங்கி  கொண்டிருந்தவள் காதில் அந்தக் குரல் கேட்டது..

“ஹாய் பொண்டாட்டி... “  என்ற குரல்  மிக அருகில் கேட்க திடுக்கிட்டு கண் விழித்தாள் தமயந்தி..

இதுவரை அவள் கண்ணுக்கு தட்டுப்படாமல் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தவன் இன்று அவள் கண் முன்னே வந்திருந்தான்..  

ஆமாம் அவள் மாமா அவளருகில் அமர்ந்திருந்தான்..  

“என்னடி இப்படி பகல்ல தூங்குற?  பகலில் தூங்கினால் உடம்பு போடுமாம்.குண்டு பூசணிக்காய் மாதிரி ஆகிடுவ..!”  என்று கண் சிமிட்டி சிரித்தான்...

அவனை கண்ட சந்தோஷத்தில் துள்ளி குதித்தவள் அவனிடம் எப்பவும் வாயாடும் வழக்கத்தில்

“ஐய அப்பனா நீ டெய்லியும் நல்லா தூங்குடா நல்லி எலும்பு நளன் மாமா..  அப்படியாவது உன் உடம்பு தேறுதானு பார்க்கலாம்.. “  என்று கிளுக்கி சிரித்தாள்..

“அடியே..!  நான் என் உடம்பை இப்படி வைத்திருப்பது உனக்காகத்தான்.. நீ இப்படி கொடி மாதிரி ஒல்லியா இருக்க உனக்கு பொருத்தமாக நானும் ஒல்லியா  தான் இருக்கணும்..

அப்பதான் மேட் பார் ஈச் அதர் னு சொல்லுவாங்க.. அதற்குத்தான்  பாடியை இப்படியே மெயின்டெய்ன் பண்றேன்...” என்று அவள் தலை முட்டி சிரிக்க அவளும் இணைந்து சிரித்தவள்

“சரி சரி நம்பிட்டேன்..”  என்று அவனுடன் இணைந்து நகைத்தவள் அப்பொழுது தான் ஞாபகம் வந்தது அவளுக்கு..  

உடனே அவள் முகம் வாட

“டேய் மாமா.. என்னை ஏன்டா தனியா விட்டுட்டு போன?  நீ இல்லாமல் எவ்வளவு கஷ்டமா இருக்குது தெரியுமா? உன்னை நான் எங்கெல்லாம் தேடிப் பார்க்கிறேன்..  நீ அப்பப்ப பாடுவியே தேடும் கண் பார்வை தவிக்க னு..  

அப்படிதான் என்னை நீ தவிக்க விட்டுட்டு போயிட்ட..  ஏன் டா இப்படி பண்ணின? “ என்று அவன் சட்டையை பிடித்து உலுக்கினாள் பெண்ணவள்..  

அவனோ அதுவரை குறும்பு மின்ன சிரித்து கொண்டு இருந்தவன் அவளை மெல்ல அணைத்துக் கொண்டு

“நான் உன்னை விட்டு எங்கேயும் போகல டி.. உன் கூடவே தான் இருக்கேன்..  உன்னையே தான் சுத்தி சுத்தி வருகிறேன்.. ஆனால் உனக்குத்தான் அது தெரிய மாட்டேங்குது..

அப்பயும் என் காதலை நீ புரிஞ்சுக்கல.. இப்பயும் நான் உன் மேல் கொட்டற காதலையும் உன்னால புரிஞ்சுக்க முடியல.. சரியான தத்தி டி நீ.. “என்று அவள் தலையை பிடித்து செல்லமாக ஆட்டி சிரித்தான்..

அதைக்கேட்டு அதிர்ந்து போனவள்

“என்னடா மாமா சொல்ற?  உன் காதலை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையா?  உன் காதல் இப்போ எனக்கு புரிஞ்சிடுச்சு.. நான் உன்னை காதலிக்கிறேன்..  ஐ லவ் யூ டா மாமா.. நீ என்னை விட்டு போய்டாதா... " என்றாள் அவன் தோளில் சாய்ந்தவாறு..

“ஏய் லூசு பொண்டாட்டி.. உன்னை விட்டுட்டு நான் எங்க போக போறேன்..  இங்கேதான் இருக்கேன்.. “ என்று சிரிக்க

“ம்ம்ம் சரி உன் காதலை எப்படி நான் புரிஞ்சுக்கலைனு சொல்ற? “ என்றாள் குழப்பத்துடன்..

“என் காதலை மீண்டும் ஒரு முறை ரிஷி மூலமாக உனக்கு உணர்த்த முயன்று வருகிறேன் தயா... ரிஷி வேற யாரும் இல்லை நான்தான்..” என்றான் புன்னகையுடன்..

அதை கேட்டு திடுக்கிட்டவள்

“என்ன மாமா சொல்ற? ரிஷிதான் நீயா ? இல்லையே.. ரிஷி உருவம் வேற மாதிரி இல்ல இருக்கு.. நீ அப்படி இருக்க மாட்டியே.. “ என்றாள் மீண்டும் ஒருமுறை தன் அருகில் இருந்தவனை அவசரமாக ஆராய்ந்தவாறு..

அவள் தலைய வாஞ்சையுடன் வருடியவன்

“ரிஷிதான் நான் டா...அவனிடத்தில் நான் தான் இருக்கிறேன்..என்னால உன்னை தனியாக தவிக்க விட்டுட்டு போக முடியல டீ..அதான் அவன்  மூலமாக உன்னையே சுத்தி வந்து கொண்டிருக்கிறேன்..

ரிஷி மூலமா உன்னை என் கண்ணுக்குள் வைத்து பார்த்து கொள்கிறேன் டா..அப்பொழுது புரியாத என் காதலையும்  உனக்கு புரிய வைத்துக் கொண்டிருக்கிறேன்...

உனக்கு நளதமயந்தி கதை தெரியுமா? அதை வைத்துத்தான் அத்தை எனக்கும்  உனக்கும் நளன் தமயந்தினு பேர் வச்சாங்க..

அதுல வர்ற தமயந்தி புத்திசாலி..அன்னப்பறவை மூலமா நளனை பற்றி கேள்வி பட்டு அவனை பார்க்காமலயே அவன் மீது காதல் கொண்டவள்.. அவ சுயம்வரத்துல அவளை மணக்கவேண்டும் என்று இந்திரனும் தேவர்களும் அவள் மனம் விரும்பும் நளன் உருவத்திலயே சுயம்வரத்திற்கு வந்திருப்பர்..

அதை கண்டு திகைத்த தமயந்தி தன் புத்தி கூர்மையால் உருவத்தில் ஒன்றாக இருந்தாலும் தன்னவனை சரியாக கண்டு கொண்டு மாலை இட்டு அவனையே மணாளனாக மணந்திருப்பாள்..

அதே போல நளன் நாட்டை இழந்து தன் அழகிய தோற்றத்தை இழந்து வாகுகன் என்ற பெயரில் தேரோட்டியாய் சமையல் காரனாய் அவள் முன்னே வந்த பொழுதும் அவள் கொண்ட காதலால் வேற உருவத்தில் இருந்த தன் கணவனையும் அடையாளம் கண்டு கொள்வாள்..

அப்படி நளன் ஒரே உருவமாக இருந்தாலும் வேற உருவத்தில் இருந்தாலும் தன் காதலால் தன்னவனை கண்டு கொண்டாள் அந்த தமயந்தி..  

ஆனால் ரிஷி மூலமாக எத்தனையோ முறை என்னை உனக்கு வெளிபடுத்தினேன் டி.. அவன் அழைத்த தயா என்ற அழைப்பே உனக்கு சொல்லவில்லை அது நான்தான் என்று? “ என்றான் சிறு வேதனையுடன்..

அப்பொழுதுதான் அன்று முதன் முறையாக ரிஷி அவளை தயா என்றதும் உயிர்வரை சென்று தீண்டியதே அந்த அழைப்பு.. ஆனால் அப்பொழுது இருந்த மனநிலையில் அதை ஆழ்ந்து யோசிக்க முடியவில்லை அவளால்..

“அதற்கு பிறகும் என் அம்மாவை கண்டு கொண்டு நளனாக நெருங்க, அம்மா கண்டுகொண்டார்கள் நான்தான் ரிஷியாக வந்திருக்கிறேன் என்று... ஆனால் நீ தான் சரியான தத்தி..  இன்னுமே என்னை கண்டுக்கலை.. என்னை இன்னும் தள்ளி வைத்துதான் பார்க்கிற... “ என்றான் வேதனையுடன்..

அதைக் கேட்ட தமயந்தி அதிர்ந்து போய்

“மாமா...  அப்ப ரிஷி தான் நீயா?  கோவில் ல எனக்கு  தாலி கட்டினது நீ தானா? “ என்றாள் தவிப்புடன் அவன் முகம் பார்த்து...

“:ஹ்ம்ம் ஆமாம் டி...நம்ம கல்யாணம் அவசர அவசரமா நடந்ததால் நம்ம கல்யாணத்தப்ப நீ என்னை நிமிர்ந்து கூட பார்க்கலை... மனதில் வெறுமையுடன் தான் என் தாலியை வாங்கிகிட்ட..அது என் மனதை உறுத்தி கொண்டே இருந்தது..

எனக்கு உன் மேல் இருக்கும் காதலை போலவே நீயும் என் மீது காதல் கொண்டு, உன்  கண்ணில் காதல் வழிய வழிய அதை ரசித்தவாறு இன்னொரு முறை உன்னை கல்யாணம் பண்ணிக்கணும் போல ஏக்கமாக  இருந்தது..

முதல் தரம் தான் நம் திருமணம் அவசர அவசரமாக நடந்து விட, அன்று உன் முகத்தை கூட என்னால் பார்க்க முடிய வில்லை..

நீ வெட்கப்பட்டு தலையை குனிந்தபடியே இருக்க, நான் பெருமிதத்துடன் உன்னை திகட்ட திகட்ட ரசித்து பார்த்துக்கொண்டே மீண்டும் ஒரு முறை கல்யாணம் பண்ணிக்கணும் னு ஆசை..  

அதுதான் என் ஆசையை ரிஷிமூலம் நிறைவேற்றிக் கொண்டேன்..

அன்று உன் கரம் பிடித்து அக்னி வலம் வந்ததும் உன் கண்ணில் வழிந்த காதலை ரசித்து கொண்டே உன் காலுக்கு மெட்டி இட்டதும் உன் கரம் பற்றி நம்ம வீட்டுக்குள் மனம் பூரிக்க காலடி எடுத்து வைத்ததும் நான்தான்...

எனக்கு அப்படி ஒரு சந்தோஷம் அன்று... என் ஆசையெல்லாம் நிறைவேறி விட்டது.. இப்பொழுது நான் உன்னுடன் வாழ நினைத்த வாழ்க்கை எல்லாம் வாழ்ந்துவிட்டேன்...  

லண்டனில் உன் நடனத்தையும் பார்த்துவிட்டேன்.. நீ பட்டம் வாங்குவதையும் பார்த்து ரசித்து நான் சொன்ன மாதிரி விசில் கூட அடித்து விட்டேன்..  

இப்பொழுது எனக்கு முழு திருப்தி தயா..  ஒரே ஒரு ஆசை மட்டும் இன்னும் நிறைவேறாமல் இருக்கு..” என்றான் அவளை பார்த்தவாறு..

“என்னது அது மாமா...?  சொல்.. நான் உடனே அதை நிறைவேற்றி வைக்கிறேன்.. ப்ராமிஸ்... சொல்லுடா? “ என்றாள் தவிப்புடன்...

“ஹ்ம்ம்ம் அது உனக்கு நான் ஆசையாக ஒரே ஒரு முத்தம் கொடுக்க வேண்டும்.. அப்புறம் உனக்கு குழந்தையாக நானே வந்து பொறக்கணும்.. உன்னை திகட்ட திகட்ட அருகிலேயே இருந்து பார்த்து ரசிக்கணும்..

உன் காலம் முழுவதும் உன் கூடவே உன் மகனாக இருந்து உன்னை நான் ரசித்து பார்க்கணும்.. நீ குடுகுடு கிழவியா ஆனபிறகும் உன் மகனாய் நான் உன்னை தாங்கவேண்டும்..

இது எல்லாம் நிறைவேறணும் னா, நீ ரிஷியை ஏற்றுக்கொள்ளணும்..என் மீது இருக்கும் பாசத்தில் அவனை தள்ளி வைக்காதே... நான் வேறு அவன்  வேறு இல்லை...

என்னை இன்னமும் தள்ளி வைக்காதே.. என்னை உன்னுள் கலக்க விடு.. நான் உனக்கு குழந்தையாக வருவேன்..என்னை ஏற்று கொள்வாயா? ரிஷியாக இருக்கும் என்னை ஏற்று கொள்வாயா? “  என்று தவிப்புடன் கேட்க அதை கேட்டு உருகி போனவள்

“கண்டிப்பா மாமா.... உன் ஆசையை நிறைவேற்றி வைப்பேன்.. நீயே எனக்கு குழந்தையாக  பிறக்க வேண்டும்.. இதுவரை உன் ஏக்கத்தை புரிந்து கொள்ளாமலேயே விட்டுவிட்டேன்.. இப்ப புரியுது..

எத்தனையோ முறை ரிஷியின் மூலமாக நீ என்னை நெருங்க பார்த்திருக்கிறாய்...நீ சொன்ன மாதிரி நான் ஒரு தத்தி தான்.. பக்கத்துலயே நீ இருக்க, உன்னை எங்கெங்கோ தேடி கண் பார்வை தவித்திருக்கிறேனே..! 

பக்கத்துலயே இருந்த உன்னை புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டேன்..இப்பொழுது புரிந்துவிட்டது.. இனிமேல் உன்னை தள்ளி வைக்க மாட்டேன்.. ஐ லவ் யூ மாமா.. “  என்று தழுதழுத்தாள்...

“ஹ்ம்ம் என் பொண்டாட்டி எப்பவும் புத்திசாலிதான்.. ஆனால் அப்பப்ப அவளுக்கு மூளை ப்யூஸ் ஆகிடும்..” என்று அவள் மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டியவன்

“லவ் யூ டி பொண்டாட்டி... நீ எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும்.. என் அம்மாவையும் நன்றாக பார்த்துக் கொள்.. சீக்கிரம் உன் குழந்தையாக உன்னிடம் வந்துவிடுவேன்.. டேக் கேர்.. ஐ லவ் யூ.. “  என்று தழுதழுத்தவன் அவளை இறுக்கி அணைத்து நெற்றியில் அழுந்த முத்தமிட்டு மறைந்து போனான் அவள் மாமன்...

“மாமா.. மாமா... போகாத மாமா... “ என்று கத்தியவாறு வேகமாக படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தாள் தமயந்தி..

மீண்டும் கண்களை கசக்கி கொண்டு அந்த அறை முழுவதும் தேட அவன் இல்லை அங்கு..

வேகமாக சென்று விட்டிருந்தான் அந்த தேரோட்டி..மாயமாக மறைந்திருந்தான் அந்த மாயவன்..   

திடுக்கிட்டு விழித்து எழுந்து அமர்ந்திருந்தவளோ இதுவரை கண்டதெல்லாம் கனவா? என்று தன் தலையை தட்டி யோசித்தாள்..

“இல்லையே அப்படியே அவன் நேரில் வந்த மாதிரி இருந்ததே.. இதோ அவன் என் நெற்றியில் கொடுத்த முத்தம் கூட இன்னும் சிலிர்க்கிறதே.. அந்த எச்சில் இன்னுமே இருக்கிறதே..  

அப்படி என்றால் ?? என் மாமா என்னை பார்க்க வந்தான்..  என்னிடம் பேசினான்..  இதுதான் சத்தியம்.. என் மாமா இங்கயேதான் இருக்கிறான்...”  

என்று தனக்குள்ளே சொல்லி கொண்டவள் அவசரமாக எழுந்து குளியலறைக்குள் சென்று குளித்து முடித்து ஒரு ஆடையை அணிந்து கொண்டு வெளிவர,  சற்று முன் அவள் மாமா சொல்லிச் சென்றது நினைவு வந்தது...  

“அவன் எனக்கு குழந்தையாக வருவேன் என்று சொல்லிச் சென்றானே..!  அப்படி என்றால் எனக்கு உடனே குழந்தை வேண்டும் ! “  என்றவள் அவசரமாக அருகிலிருந்த அலைபேசியை எடுத்து பட்டனை தட்டினாள்..

ஒரு முக்கியமான மீட்டிங்கில் பிஸியாகி இருந்த ரிஷியின் பெர்ஷனல் அலைபேசி ஒலிக்க, அப்பொழுதுதான் அதை  ஆப் பண்ணாமல் வைத்து இருந்தது ரிஷிக்கு நினைவு வந்தது..

உடனே அதை எடுத்து அணைக்க முயல திரையில் ஒளிர்ந்த மான்குட்டி என்ற பெயரை கண்டதும் திகைத்தவன் அங்கிருந்தவர்களிடம் எக்ஸ்யூஸ் கேட்டு கொண்டு அறையை விட்டு வெளியில் வந்தான்..

அவன் இதுமாதிரி  எந்த ஒரு மீட்டிங் லும்  நடந்து கொண்டதில்லை.. எந்த ஒரு சந்திப்பிலும் அவனுடைய அலைபேசி எல்லாம் அணைத்துவிட்டு முழு ஈடுபாட்டுடன் இருப்பான்..

ஆனால் இன்று அவன் உயிரான அவன் மான்குட்டி அழைத்து இருக்க அவளை விட இந்த மீட்டிங்,  இதன் மூலம் கிடைக்க இருக்கும் பெரிய ஒப்பந்தம் எதுவும் முக்கியமில்லை என பட, அறையை விட்டு வேகமாக வெளிவந்தவன் ஏற்றிருந்தான் அவள் அழைப்பை

“சொல்லுடா...? எதுவும் ப்ராப்ளம் இல்லையே ?  இந்த நேரத்துல கூப்பிட்டு இருக்கிற?” என்றான் பதட்டத்துடன்..

“ரிஷி..... நீ இப்பயே வீட்டுக்கு வா... “ என்றாள் அடம்பிடிக்கும் குரலில்..

“என்னாச்சு மா? ஒரு மீட்டிங் ல இருக்கேன்.. முடிச்சிட்டு வர்றேன்.. என்ன விசயம்னு சொல்லுடா.. “ என்றான் கனிவாக..

“டேய்... உனக்கு நான் முக்கியமா?  உன் பொல்லாத  மீட்டிங் முக்கியமா”? “ என்று கத்த

“நீதான் டா முக்கியம்.. “ என்றான் யோசிக்காமல்...

“அப்ப உடனே கிளம்பி வா...”  

“சரி வர்றேன்.. என்னாச்சுனு சொல்லுடா..எனக்கு டென்ஷன் ஆகுது... அம்மா,  அப்பத்தாவுக்கு எதுவும் உடம்பு சரியில்லையா? “ என்றான் அவசரமாக...

“எல்லாம் நல்லாதான் இருக்காங்க...” என்றாள் முனகலுடன்..  

“தேங் காட்... அப்புறம் என்னாச்சுடா? என்னன்னு சொல். நான் உடனே கிளம்பி வர்றேன்.. “ என்றான் பொறுமையாக... அவளும் சில நொடிகள் தயங்கியவள்

“ஹ்ம்ம்ம் எனக்கு குழந்தை வேணும்.. அதுவும் உடனே வேணும்.. அதுக்குத்தான்... நீ சீக்கிரம் கிளம்பி வா.. “ என்றாள் அதே அடம்பிடிக்கும் குரலில்..

“வாட்? “ என்று  அதிர்ந்து போனான் ரிஷி..

“த... தயா... நீ என்ன சொன்ன? “ என்றான் அவன் கேட்டது சரிதானா என்று மீண்டும் தெளிவு படுத்திக்கொள்ள..

“ஹ்ம்ம்ம்ம் எனக்கு குழந்தை வேணும்... உன் மூலமா குழந்தை வேணும்.. சீக்கிரம் வா.. ட்யூப் லைட்.. இது கூட புரிஞ்சுக்க முடியாத தத்தியா இருக்கியே.. நீயெல்லாம் என்ன பிசினஸ்மேன்? “ என்று  ஏகத்துக்கு பொரிந்து தள்ளினாள்...

அதை கேட்டு அதிர்ந்து திகைத்து போன ரிஷி  

“அடியேய்... தண்ணி கிண்ணி அடிச்சிருக்கியா? இப்படி மப்புல உளர்ற மாதிரி உளறிகிட்டிருக்க? “ என்றான் சிரித்தவாறு..

“ஓ.. அப்படி வேற இருக்கா..?  அப்ப வர்றப்ப அதையும் வாங்கிட்டு வந்திடு.. வளவளனு பேசாம சீக்கிரம் வந்து சேர்...இன்னும் அரை மணி நேரத்தில் இங்க இருக்கணும்.. ஐம் வெயிட்டிங்.. யுவர் கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ் நௌ...டோன்ட் வேஸ்ட் யுவர் டைம்...பை டா ரிஷி... “ என்று அழைப்பை அணைத்திருந்தாள்..

தன் அழைப்பையும் அணைத்த ரிஷியோ தலையை பிய்த்து கொண்டான்..

“என்னாச்சு இவளுக்கு திடீர்னு? என்று யோசித்தவன் அதற்கு மேல் அந்த மீட்டிங் ஐ தொடர முடியாது என முடிவு செய்தவன் விஷ்ணுவை அழைத்து தன் இடத்தில் இருந்து அந்த மீட்டிங் ஐ தொடர சொல்ல,

“ஐயயோ பாஸ்.. இது பல கோடி ப்ராஜெட் பாஸ்.. உட்கார்ந்து இருக்கிறது எல்லாம் பெரிய மண்டைங்க.. நீங்க இல்லைனா அவங்க ஒத்துக்க மாட்டாங்க..என்னால அவங்களை சமாளிக்க முடியாது.. ப்ளீஸ் பாஸ்.. இதை முடிச்சிட்டு போய்டுங்களேன்...  “ என்றான் தயக்கத்துடன்..

“டேய் விஷ்ணு..! நீ லவ் பண்ணி இருக்கியா? அப்படி எதுவும் இதுவரை இல்லனா அத மட்டும் பண்ணிடாத.. லவ் பண்ணா இந்த மாதிரி பல கோடி ப்ராஜெக்ட் எல்லாம் ஒன்னுமில்லைனு தான் தோணும்...

எனக்கு என் பொண்டாட்டி முக்கியம் டா.. இத விட பல பல கோடி சம்பாதிப்பான் இந்த ரிஷி.. இவனுங்க ஏதாவது சொன்னா பேக்  பண்ணி அனுப்பிச்சிடு..டீலை க்லோஸ் பண்ணிடு..  

என் பொண்டாட்டி அடுத்த கால் பண்ணும் முன்னே நான் அங்க இருக்கணும்.. “ என்று சிரித்தவாறு அவசரமாக கிளம்பி சென்றான் அந்த தொழில் சாம்ராஜ்ஜியத்தின்  சக்கரவர்த்தி ரிஷி வர்மா... 

அத்தியாயம்-50 அத்தியாயம்-52

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!